திசை இசைக்கும் விசையோடு நதி நீந்திக் கொண்டிருக்க... அதன் தொடுதாகத்திலிருந்து சூரிய குட்டி கண்கள் உதிர... கருப்பு வெள்ளை சில் அவுட் - ல்.. இரு பெண்கள் மெல்ல மெல்ல இடுப்பசைத்து நடந்தபடியே திரையில் ஒரு பக்கம் இருந்து மறு பக்கம் செல்கிறார்கள். மதி மயக்கம் இங்கேயே நமக்கு ஆரம்பித்து விடுகிறது.

பளிச்சென வந்த வெளிச்சத்தில் ஒரு சிற்பத்திற்கு உயிர் வந்தது போல ஒருத்தி பாட ஆரம்பிக்கிறாள்.

"கட்டோடு குழலாட ஆட"-
ஆட என்று தொக்கி நிற்கும் சுதிக்கு கொக்கி போட்டு இழுத்து விடுகிறாள் இன்னொருத்தி.

"கண்ணென்ற மீனாட ஆட"-
ஆட என்று ஒருத்தி முடிக்க ஆட என்று ஒருத்தி தொடங்க.. சொல்வன மயக்கத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி கூட்டணி இசையெனும் இன்பம் ஊற்றி இதய சுத்திகரிப்பை மெல்ல மெல்ல செய்தபடியே நகர்கிறார்கள்.kattodu kuzhalaadaஆற்றங்கரையோரம் ஒருத்தி இடுப்பில் குடம் கொண்டு காற்றில் இசைந்தபடி சென்றாலே இளமனது அதிரும். இதில் இருவர் ஒரே மாதிரி பாடிக் கொண்டே சிணுக் நடையில் சித்திரம் தீட்டப்படுவது போல நகர்வது... ஒரு கை தேர்ந்த கலை நுட்ப நேர்த்தி காட்சியாய் திரையில் விரிகிறது. காதலின் உச்சம் பெற்றவன் கற்பனை தான் இந்த காட்சியில் கவிதை வாசிக்கிறது. நின்று சுழன்றபடியே நகர்வதில் கண்ணுக்கு விருந்து படைக்கும் இரு நங்கைகளுமே துரு துரு பகல் நிலாக்கள்.

"கொத்தோடு நகையாட ஆட-ஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு...."

"மயிலே...... நீ ஆ.......டு" என இழுத்து நிறுத்தும் போது...எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொள்ளும் இனம் புரியாத தவிப்பை எங்கனம் சொல்வேன். இன்னொரு முறை இன்னொரு முறை என்று ஒவ்வொரு முறை கேட்கையிலும்... இதயம் கசிவதை மனது உணர்கிறது. ஒரு சேர வளர்ந்து நிற்கும் இரு மரங்களில் இருவரும் சரிந்து ஒரே வித உடல்மொழியில் சாய்ந்தாடி பாடுவது நுட்பமாய் நம்மை கவர்ந்திழுக்க செய்யும் திரை சிற்ப வேலைப்பாடு.

அடுக்கடுக்காய் ஒரு பக்கம் நீர் குதிப்பு மேலெழுந்து சரிந்து ஓடுகையில் அருகே இறங்கும் படிக்கட்டு ஓரங்களில் இருவரும் ஒரே மாதிரி மினுக் மினுக் நடையில் அசைந்து கொண்டே கீழிறங்கும் காட்சியில் பருவம் வந்த பின்னணி இசை பாவாடை தாவணி இரண்டு முறை போட்டிருக்கிறது.

"பாவாடை காற்றோடு ஆட-ஆட
பருவங்கள் பந்தாட ஆட-ஆட
காலோடு கால்பின்னி ஆட-ஆட
கள்ளுண்ட வண்டாக நீ ஆடு!..."

கனத்த கூந்தல் காற்றில் அசைய.... அவள் ஒரு வரி சொல்கிறாள். அதே கூந்தல் வனப்பில் அதே நுனி கொண்டை தினவில்... மறு வரியில் சேர்ந்து கொண்டு இப்போது கள்ளுண்ட வரியை இருவருமே பாடி ஆடுகையில் பருவ நெருப்பில் இருவர் தகிப்பை உணர்கிறோம்.

"முதிராத நெல்லாட ஆட-ஆட
முளைக்காத சொல்லாட ஆட-ஆட
உதிராத மலராட ஆட-ஆட
சதிராடு தமிழே நீ ஆடு!..."

அது அது என்று எல்லாம் ஆடி... தமிழ் சதிராடுகையில்... தவம் கலையத்தான் அங்கிருக்கும் மரமெல்லாம் என்று காற்று சொல்வதாக நம்புகிறோம். கைகளை ஆற்றில் அலைபாய விட்டு.... அதிரூப மென் மயக்கத்தை தாலாட்டும் இருவருமே இள நகை பூத்த இரு வரி ஓவியங்கள். ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் பேரன்பின் மென்மை... வெட்கம் பூத்து தங்களை தாங்களே தாலாட்டிக் கொள்கிறது. காதல் வயப்பட்ட கழுத்துகள் வழியே மின்னி மின்னி பொருள் கூடும் அந்த நதி... கருப்பு வெள்ளை பூக்களை கொப்பளிக்கிறது.

இந்த இடத்தில் இரண்டு மாடுகளை பிடித்துக் கொண்டு "ஓ ஓஹோ....." என தலைவர் என்ட்ரி. சும்மா தெறிக்க விடுகிற கிறுகிறுப்பு திரை முழுக்க சட்டென பூத்து விடுகிறது.

ஹம்மிங்கில் கிங் என அவர் தொடர... உங்களுக்காகத்தான் காத்திருந்தோம் என்பது போல இருவரும் இன்னும் உற்சாகமாக இடுப்பில் கூடை கொண்டு நடையில் குதூகலம் கொண்டு ஹம்மிங் பூக்களை தொடுத்துக் கொண்டே..... அவர் நீருக்குள் நடக்க... இவர்கள் கரையில் பறப்பதாக... அப்பப்பா காட்சி அமைப்பு கவிதை வனப்பு. அவர்கள் சுழலுகையில் எல்லாம் காற்றும் சுழலுவது சுக அனுபவம். கிறக்கம் நெருக்கமாகும் இடத்தில் இசைத்த கருப்பு வெள்ளை... வண்ண மயக்கம்.

இருவரும் அவரை சுற்றி சுற்றி மலர்களாக மிதக்க....அவள்கள் விட்ட இடத்தில் இருந்து அவர் தொடங்குகிறார்.

TMS -ன் சித்து தலைவருக்கு கெத்து.

"தென்னை மரத் தோப்பாக
தேவாரப் பாட்டாக
புன்னை மரம் பூச்சொரிய"

என்று மூத்தவள் கரம் பற்றி அதே நேரம் பின்னால் வரும் இளையவளைப் பார்த்து...

"சின்னவளே நீ ஆடு!..."

என சிரித்துக் கொண்டே கேட்பதில் நமக்கு ஐயயோவென ஆர்வம். அவகிட்ட ஒரு வரியை போட்டுட்டு இவகிட்டயும் இன்னொரு வரியை போடும் தலைவர்... சமன்பாட்டில் சரிகம போட்டு தாலாட்டுகிறார்.

சரியா போச்சு என்று தொடர்கிறோம் நாம். ஆனால் தொன்று தொட்ட காதலின் தோகை நம்மை சூழ்ந்து சுழற்றுகிறது.

"கண்டாங்கி முன்னாட
கன்னி மனம் பின்னாட
கண்டு கண்டு நானாட
செண்டாக நீ ஆடு!" 

"செண்டாக நீ ஆடு..." என்று நீ தான்.. இல்ல நீ தான் நீ நீ நீ தான் என இரண்டு பேரையும் பார்த்து சிரித்து கொண்டே கையை காட்டும் தலைவர்... தகிக்க விடுகிறார். இரு பெண்களுக்கு மத்தியில் ஒரு மெல்லிசை மென்மேலும் தன்னை தாலாட்டிக் கொள்வது போல... பார்க்கவே பரவசம். பார்க்க பார்க்க மெஸ்மரிசம். காட்சி படுத்தலின் வழியே ஒரு முக்கோண கவிதையை அரங்கேற்றி இருக்கிறார்கள்.

இடது கையை தாடையில் வைத்து கொண்டு அவர்களை போலவே தலையை ஆட்டி முகத்தை பாவிக்கும் தலைவர்.. கருப்பு வெள்ளையிலும் தக தக மின்னல் தான். காதலின் லயத்துக்கு கால இசை அவர் உடல்மொழி. பார்த்துக் கொண்டே இருக்கலாம். புன்னகை பூத்து பொன் மனம் நிறைகிறது.

இருவரும் ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து நதியில் விளையாட.. நடுவே... நளினம் சூடி நகைத்த புன்முறுவலோடு அவர் பாடுகிறார்.

"பச்சரிசி பல்லாட
பம்பரத்து நாவாட
மச்சானின் மனமாட
வட்டமிட்டு நீ ஆடு!

வள்ளி மனம் நீராட
தில்லை மனம் போராட
ரெண்டு பக்கம் நானாட
சொந்தமே நீ ஆடு!..."

"சின்னவளை பார்த்து வள்ளி மனம் நீராட" என சொல்லி விட்டு... பெரியவளை பார்த்து... இடது கையில் கொத்து மலரென வெற்றிட நளினத்தை கோர்த்தபடி..." தில்லை மனம் போராட" என்று சொல்லி...சூட்சுமத்தை பூப்பது போல "ரெண்டு பக்கம் நானாட" என இருவர் பக்கமும் நாணம் காட்டி...." சொந்தமே நீ ஆடு..." என்ற முதல் முறையை ஒருத்திக்கும் .... இரண்டாவது "சொந்தமே நீ ஆடு- ஐ " இன்னொருத்திக்கும் தந்து விடும் தலைவர்... சமத்து.

ஹாஹ்.. தேன் தொட்டு தடவும் மயிலிறகு சாந்தம் வரிகளில். கண்ணதாசன் கவிதை ஓசன்.

கண்களில் கனிவு பூத்த... கன்னத்தில் குறும்பு சேர்த்த முக மொழியில்.... மீண்டும் "கட்டோடு குழலாட ஆட- ஆட.... கண்ணென்ற மீனாட ஆட-ஆட... " என மூவருமே பாடுகையில்... மூச்சில் காதல் நிரம்புகிறது நமக்கு. ஒரு தாலாட்டை போல ஒரு தவத்தை போல ஒரு தாகம் கொண்ட நினைவோடை நகர்தல் இந்த பாடல்.

இன்னும் வேறென்ன...சொல்ல...இதோ இன்னொரு முறை கேட்க போகிறேன்.

"வள்ளி மனம் நீராட
தில்லை மனம் போராட
ரெண்டு பக்கம் நானாட
சொந்தமே நீ ஆடு!..."

- கவிஜி

Pin It