அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: புவி அறிவியல்
ரஷ்யாவில் கோலா தீபகற்பப் பகுதியில் ஆராய்ச்சிக்காக உலகிலேயே மிக ஆழமாக துளையிடப்பட்டுள்ளது. 1970ல் ஆரம்பித்த இந்த துளையிடும் பணி 1995ல் முடிந்தது. துளையின் ஆழம் 12,262 மீட்டர். இதன்மூலம் பூமியின் ஆழத்தில் நிகழும் தட்டுப் பிளவுகள், பூமியின் மையப்பகுதியில் உள்ள வேதியியல் பொருட்கள் பற்றி ஆராயப்பட்டது. இந்த ஆழத்தில் 270 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தத் துளையின் ஆழத்தை மேலும் 10,000 அடிகள் நீட்டிக்க ரஷ்ய விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர்.
இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் ஓக்லஹோமா என்ற இடத்தில் இரண்டாவது பெரிய துளை (31,500 அடிகள்) உள்ளது. பூமியின் மையப்பகுதியில் உருகிய இரும்பு உள்ளது. இதன் வெப்பம் 6,000 செல்சியஸ். இது சூரியனின் வெளிப்புறப் பகுதியின் வெப்பத்துக்கு இணையானது.
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளின் உச்சமாக ரஷ்யாவில் செயல்பட்டுவந்த திமிங்கலச் சிறைச்சாலையை உடைத்தெறிய ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது. உலகெங்கிலும் இருந்து விலங்குநல ஆர்வலர்களின் அறைகூவலை அடுத்து இந்த உத்தரவு வெளிவந்துள்ளது. பல ஆண்டுகள் நீண்ட சிறை வாழ்க்கையிலிருந்து நூற்றிற்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இனி சுதந்திரத்தின் ஆழ்கடலில் துள்ளிக் குதித்து நீந்தி விளையாடி மகிழட்டும்!
முதல் செய்தி
இங்கு குழந்தை நிலையில் உள்ள திமிங்கலங்களும் வயது முதிர்ந்தவையும் வாழ்கின்றன. 2018 நவம்பரில் இந்தச் சிறைச்சாலையைப் பற்றிய படங்களுடன், செய்திகள் முதல்முறையாக வெளியுலகிற்குத் தெரியவந்தன. ரஷ்யாவில் உள்ள சைபீரியப் பிரதேசத்தில் இருக்கும் இச்சிறைச்சாலைகள் குறித்த செய்திகளைப் பிராந்திய தன்னார்வத் தொண்டு நிறுவன ஆர்வலர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து முதல்முதலாக உலகிற்கு அறிவித்தனர்.
செய்திகள் வெளிவந்தவுடன் விசாரணைகள் தொடங்கின. என்றாலும் சிறையின் செயல்பாடுகள் நீண்ட இரண்டு ஆண்டுகள் தொடர்ந்தன. திமிங்கலங்கள் கடலரசன் என்று போற்றப்படும் கடல்வாழ் பாலூட்டிகள்; மிகப் பெரியவை. மிக அதிகமாக இன அழிவை எதிர்கொள்ளும் கடல்வாழ் விலங்குகளும் இவையே. ஆய்வுகளுக்காக ஆண்டிற்கு 13 திமிங்கலங்களை மட்டுமே கடலிலிருந்து பிடிக்க உலக நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வான்வழி ஆய்வுகள்
இந்நிலையில் ரஷ்யாவில் பசிபிக் பெருங்கடலுடன் சேர்ந்துள்ள பகுதியில் நூற்றிற்கும் அதிகமான திமிங்கலங்கள் சிறை வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. ட்ரோன் விமானத்தின் உதவியுடன் பசுமை அமைதி இயக்கம் (Greenpeace), பிரிட்டன் டால்பின் மற்றும் திமிங்கலப் பாதுகாப்பு தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் (Dolphin & Whale Conservation) இணைந்து இந்த உயிரினங்களைக் கண்டுபிடித்தது.
சைபீரியா டைம்ஸ் என்ற இதழ் இது பற்றிய அதிர்ச்சி தரும் செய்திகளை 2018-19-இல் முதல்முதலில் வெளியிட்டது. ஆசியாவில் நஹோட்கா என்ற பகுதிக்கு அருகில் இச்சிறைச்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பல கூண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கலங்களை வான்வழி உற்றுநோக்கலின்போது காணமுடிந்தது. ஆய்வு செய்யப்பட்ட நேரத்தில் நீருக்குள் இருக்க வாய்ப்புள்ளதால் சிறையில் வாடும் இவற்றின் துல்லியமான எண்ணிக்கையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
எதற்காக இந்தச் சிறை?
முற்றிலும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் இந்தச் சிறைகள் செயல்படுகின்றன என்று ரஷ்ய க்ரீன் பீஸ் அமைப்பு கூறுகிறது. கிடைத்த புள்ளிவிவரங்களின்படி 90 பெலுகா திமிங்கலங்கள், 11 ஓர்க்கா திமிங்கலங்கள் இந்தச் கடல் சிறையில் இருந்தன. சீனாவில் இருக்கும் கடல்சார் உல்லாசப் பூங்காவிற்காகவே இவை சிறை பிடிக்கப்படுகின்றன என்று 'நொவாயா கெசட்டா' என்ற பிராந்திய செய்தித்தாள் நடத்திய தொடர் ஆய்வுகள் மூலம் தெரியவந்தது.
ரஷ்யாவிலிருந்து ஆரம்பத்தில் மிகக் குறைந்த விலைக்கே இந்த உயிரினங்களைச் சீனாவில் செயல்படும் பூங்காக்கள் வாங்கின. இந்த உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் சீனாவில் இவற்றைக் காட்சிப்பொருளாக்கும் பூங்காக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஆய்வுகளுக்காக மட்டுமே இவற்றைப் பிடிக்கலாம் என்று சர்வதேசச் சட்டம் கூறுகிறது.
காற்றில் பறக்கவிடப்படும் சட்டங்கள்
குட்டிகளையும் கருவுற்றிருக்கும் திமிங்கலங்களையும் பிடிக்கக்கூடாது என்று சட்டம் கூறுகிறது. கூட்டமாக நூற்றுக்கும் மேற்பட்ட இவற்றைப் பிடித்துவைத்து நடத்தப்படும் ஆய்வுகளுக்கும் சர்வதேசச் சட்டத்தில் தடை உள்ளது. இவ்வாறு ஏராளமான சட்டமீறல்களை இந்தத் திமிங்கலச் சிறைகளை நடத்துபவர்கள் செய்கின்றனர்.
இதெல்லாம் நன்றாகத் தெரிந்திருந்தும் இந்தச் சிறைகளை இழுத்துமூடித் திமிங்கலங்களை ஏன் ரஷ்ய அதிகாரிகள் விடுதலை செய்யவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது. இந்தச் சிறைகளில் ஓர்க்கா அல்லது கொலையாளித் திமிங்கலங்கள் மற்றும் பெலுகா திமிங்கலங்களே அடைக்கப்பட்டுள்ளன.
சீனாவிற்கு ஒரு திமிங்கலம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் கூடுதலாக விற்கப்படுகிறது. இவற்றை வாடகைக்குக் கொடுக்கிறோம் என்ற பெயரில் பல சமயங்களில் ரஷ்யாவிலிருந்து இவை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வாடகைக்கு விலங்குகளைக் கொடுப்பதை அனுமதிக்கும் ரஷ்யச் சட்டத்தில் இருக்கும் சலுகைகளைச் சிறை நடத்தும் நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துகின்றன. 2013-2016 ஆண்டுகளுக்கு இடையில் 13 ஓர்க்கா திமிங்கலங்கள் இவ்வாறு சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
ஆபத்தாகும் அழகு
ஓர்க்கா மற்றும் பெலுகா திமிங்கலங்கள் பார்க்க அழகாக இருக்கும் என்பதால் சீனா இவற்றைக் காட்சிப்படுத்தத் தேர்ந்தெடுக்கிறது. சைபீரியப் பகுதியில் நான்கு நிறுவனங்கள் சிறைச்சாலைகளை நடத்துகின்றன. இவற்றிற்கு எதிராகச் சர்வதேச மற்றும் பிரதேச அளவில் ஏராளமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நீதிமன்றங்களிலும், தொடர்புடைய அரசுத்துறைகளிலும் எண்ணற்ற புகார்களைக் கொடுத்துள்ளன.
நிராகரிக்கப்படும் நீதி
மூன்று நிறுவனங்கள் சட்டத்திற்கு உட்பட்டே தாங்கள் திமிங்கலங்களைப் பிடித்து வைத்துள்ளதாகக் கூறுகின்றன. சட்டப்பூர்வமாகவே திமிங்கலங்கள் தங்களுக்குக் கிடைத்தன என்று அவை வாதிடுகின்றன. ஆனால் திமிங்கலங்களை விற்கவோ, வாங்கவோ, பிடித்துவைக்கவோ அனுமதியில்லை என்று சட்டம் கூறும்போது இவர்களுக்கு எவ்வாறு சட்டப்பூர்வமாகத் திமிங்கலங்கள் கிடைக்கும் என்று தொண்டு நிறுவனங்கள் கேள்வி எழுப்புகின்றன.
பிரபல சூழல் செயல்பாட்டாளரும் கடல் ஆய்வாளருமான ஜீன் மைக்கேல் கூஸ்டோ, ரஷ்ய அதிபரின் கவனத்திற்குத் திமிங்கலச் சிறைச்சாலை பற்றிய செய்தியைக் கொண்டுசென்றார். சிறைபிடிக்கப்பட்டிருக்கும் இந்த உயிரினங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு இடங்களிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளே இவற்றைக்க கூட்டமாகப் பிடித்துக் கூண்டில் அடைக்கக் காரணம்.
விடுதலை! விடுதலை!! திமிங்கலங்களின் விடுதலை!
பல ஆண்டுகளாகத் தொடர்ந்த பல்வேறு விடாமுயற்சிகளின் விளைவாக இப்போது ரஷ்ய அதிகாரிகள் இந்தச் சிறைகளை இழுத்து மூட உத்தரவிட்டுள்ளனர். முதலில் வயது முதிர்ந்த திமிங்கலங்கள் விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குட்டித் திமிங்கலங்களுக்குப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டுப் பின்னர் அவை கடலில் விடப்படும் என்று நம்பப்படுகிறது.
ஆய்வுகள் என்ற பெயரில் உலகின் பல பகுதிகளிலும் எண்ணற்ற விலங்குகள் ஒவ்வொரு நாளும் மனிதனால் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றன. இதற்குத் தீர்வாக இந்தத் திமிங்கலச் சிறைகளின் அழிவு அமையட்டும்! பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து வாழட்டும்!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
விஞ்ஞானிகள் பழ ஈக்களில் ஆண் உயிரினங்கள் இல்லாமலேயே, கன்னி இனப்பெருக்க முறையில் (Parthenogenesis) புதிய உயிரினங்களை உருவாக்கிக் காட்டியுள்ளனர். மரபணு முறையில் கையாளப்பட்ட பெண் ஈக்கள், ஆண் துணையின்றித் தங்கள் வாரிசுகளை உருவாக்கியுள்ளன. ஆண் துணையில்லாமல் குழந்தை பிறப்புப் பற்றிய இந்த ஆய்வு பைபிள் கதை போலத் தோன்றினாலும், ஆண் உயிரினங்கள் இல்லாத சூழ்நிலையில், கன்னிப் பெண் பழ ஈக்கள் தூண்டப்பட்டுப் புதிய வாரிசுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
விஞ்ஞானிகள், ஒரு குறிப்பிட்ட பழ ஈ இனத்தில் ஆண் ஈக்களின் இனப்பெருக்கச் செல்களின் (Sperm cells) துணையில்லாமல் பெண் ஈக்கள் மட்டுமே முட்டையைக் கருவுறச் செய்து குஞ்சுகளை உருவாக்கும் மரபணுவைக் கண்டுபிடித்தனர். வழக்கமாக ஆண்-பெண் பாலினப் பெருக்க முறையில் இனப்பெருக்கம் செய்யும் மற்றொரு ஈ இனத்தில், இந்த மரபணுவைச் செலுத்திப் புதிய தலைமுறையைக் கன்னி முறையில் உருவாக்கினர்.
பின்னர், அந்த மரபணுவை மீண்டும் மாற்றியமைத்து, முன்பு போலவே பாலினப் பெருக்க முறையிலேயே அந்த உயிரினத்தில் இனப்பெருக்கம் நடைபெறவும் செய்துள்ளனர்.
"கன்னி ஈ உருவாக்கிய கரு வளர்ந்து, உரிய பருவம் அடைந்து, மீண்டும் வெற்றிகரமாக இனப்பெருக்கத்தைத் தொடர்ந்தது பரவசமூட்டும் ஒரு கண்டுபிடிப்பு" என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளரும், இந்த ஆய்வுக் கட்டுரையின் முதல் ஆசிரியருமான டாக்டர் அலெக்சிஸ் ஸ்பெர்லிங் (Dr. Alexis Sperling) கூறுகிறார்.
'கரண்ட் பயாலஜி' (Current Biology) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கட்டுரையில், கடந்த ஆறு ஆண்டுகளாக 2,20,00,000 (இரண்டு கோடியே இருபது லட்சம்) ஈக்களில் நடத்தப்பட்ட ஆய்வின் விவரங்கள் விளக்கப்பட்டுள்ளன. 'டிரோசோபிலா மெர்கடோரம்' (Drosophila mercatorum) என்ற ஈ இனத்தின் கன்னி முறை இனப்பெருக்கத் திறன் (Parthenogenesis) பற்றி முதலில் ஆராயப்பட்டது.
இதன் மரபணு வரிசைப்படுத்தப்பட்டு, அதில் கன்னி இனப்பெருக்கத்திற்குக் காரணமாக இருக்கும் மரபணு அடையாளம் காணப்பட்டது. இதற்கு இணையான மரபணுவை, 'டிரோசோபிலா மெலனோகாஸ்டர்' (Drosophila melanogaster) என்ற மற்றொரு பழ ஈ இனத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்து அதனைச் செயல்பட வைத்தனர்.
கன்னி முறை இனப்பெருக்கத்திற்குப் பதிலாக, இவற்றில் பாலினப் பெருக்கம் நடக்கும்போது, மரபணு முறையில் மாற்றப்பட்ட பெண் ஈக்கள் ஆண் ஈக்களுடன் இணை சேர 40 நாட்கள் வரை காத்திருக்கின்றன. கன்னி முறை மூலம் பிறந்து, மரபணு முறையில் மாற்றியமைக்கப்பட்ட புதிய தலைமுறை பெண் ஈக்கள், பிற்காலத்தில் ஆண்களுடன் இணை சேர்ந்தோ அல்லது மீண்டும் கன்னி முறையிலோ புதிய வாரிசுகளை உருவாக்கின.
துணையில்லாமல் தவிக்கும் பெண் உயிரினங்கள்
இணை சேரப் போதுமான ஆண் உயிரினங்கள் இல்லாமல் தவிக்கும் பெண் உயிரினங்கள், தங்கள் இனத்தை நிலைநிறுத்திக் கொள்ள இந்த முறை பெரிதும் பயன்படும். ஆனால், இம்முறையில் பிறக்கும் உயிரினங்களுக்குச் சூழல் அழுத்தங்களைச் சமாளித்து வாழும் திறன் குறைவாகவே இருக்கும். பூச்சிக் கட்டுப்பாட்டிற்காகத் தொடர்ந்து இதே முறையில் அவை இனப்பெருக்கம் செய்யப்பட்டால், நாளடைவில் அவற்றின் இயற்கையான பாலினப் பெருக்க முறை மறைந்து, அந்த இனமே அழிந்துபோகும் ஆபத்தும் உள்ளது.
மேலும், இம்முறையில் பெண் உயிரினங்கள் பெண் உயிரினங்களையே உருவாக்கும் என்பதால், வேளாண்மையில் இது மிகப்பெரிய பிரச்னையாக மாறும். இதனால் பெண் பூச்சிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகப் பெருகும். பழ ஈக்களில் கன்னி முறை பிறப்பை ஏற்படுத்தப் புதிய வழியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் என்றாலும், இதே முறையைப் பாலூட்டிகளில் (Mammals) பயன்படுத்த முடியாது.
கன்னி முறைப் பிறப்பு பல்லி, தேனீக்கள் போன்ற சில வகை உயிரினங்களில் இயற்கையாகக் காணப்படுகிறது என்றாலும், பாலூட்டிகளின் இனப்பெருக்கத்திற்குத் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவழிக் கூட்டு மரபணுக்களும் தேவை. ஆனால், கன்னி முறை இனப்பெருக்கம் நடக்கும் எளிய உயிரினங்களில் தந்தை வழி மரபணுக்கள் இல்லாமலேயே இனப்பெருக்கம் சாத்தியமாகிறது.
பாலூட்டிகள் முற்றிலும் வேறுபட்ட உடலியல் செயல்பாட்டைக் கொண்டவை. பூச்சிகள் போன்ற எளிய உயிரினங்கள், ஆய்வுகளுக்காக நீண்ட காலமாக விஞ்ஞானிகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் இவற்றின் மரபணு வரிசை விஞ்ஞானிகளால் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதுவே இந்த ஆய்வின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
"வாழ்க்கையின் அழகைப் புரிந்துகொள்ளவும், பல்வேறு உயிரினங்களில் காணப்படும் வெவ்வேறு இனப்பெருக்க முறைகளைப் பற்றி அறியவும் இந்த ஆய்வு உதவுகிறது. ஆனால், இம்முறை மனிதர்களில் எக்காரணம் கொண்டும் பயன்படுத்தப்பட முடியாதது" என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானி டாக்டர் ஹன்னா மாட் (Dr. Hannah Maude) கூறுகிறார்.
நம் உயிர்ப் பன்முகத்தன்மையே நம்மைப் பாதுகாக்கிறது. ஒவ்வொரு மனிதரிடமும் காணப்படும் இரண்டு டி.என்.ஏ (DNA) நகல்கள், தீங்கு விளைவிக்கும் டி.என்.ஏ மாறுபாடுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
தாய் மற்றும் தந்தை வழி டி.என்.ஏ-க்களால் திறம்படச் செயல்படும் வகையில் அச்சிடப்பட்டு, பொதிந்து வைக்கப்பட்டுள்ள மரபணுப் பகுதிகளே நமது இனப்பெருக்கத்திற்கு அத்தியாவசியமானவை என்று டாக்டர் ஹன்னா விளக்குகிறார். விலங்குகளின் உலகில் நடைபெறும் இனப்பெருக்க நுட்பங்கள் குறித்து மேலும் பல புதிய தகவல்களை அறிய இந்த ஆய்வுகள் பெரிதும் உதவுகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
காட்டு மரங்கள் வெட்டப்படுவதால் வண்ணத்துப்பூச்சிகள் தங்களின் நிறங்களை இழக்கின்றன. பரவலாக, விரிவான வேறுபட்ட வாழிடங்களில் வாழ்வதால், உயிர்ப் பன்மயத் தன்மையின் (biodiversity) நிலையை அறிய வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய ஆய்வு உதவுகிறது. செழுமையான சூழலில் பரிணாம ரீதியாகத் தோன்றிய மில்லியன் கணக்கான நிறங்கள், அவை காடுகளில் வாழ்வதற்கு உதவுகின்றன. இப்போது அவை செழுமையற்ற நிலப்பரப்புகளில் வாழ்வதற்கு ஏற்ப, தங்கள் நிறங்களைச் சத்தமில்லாமல் மாற்றிக் கொள்கின்றன.
நிறங்கள் அற்பமானவை இல்லை
இதனால் உலகம் நிறமற்றதாகிறது. வண்ணத்துப்பூச்சிகளின் பளிச்சிடும், பிரகாசமான இறக்கைகள் ஒரு காலத்தில் அவை ஆரோக்கியமாக வாழ்வதை எடுத்துக்காட்டின. நிறங்கள் இணையைக்கவரவும், எதிரிகளிடம் இருந்து தப்பவும் அவற்றிற்கு உதவின. ஆனால், மனிதர்கள் வளமான மழைக்காடுகளை ஒற்றைப்பயிர் வளர்ப்பு முறைக்கு (monoculture) மாற்றியதால், மற்ற உயிரினங்களின் நிறம் வெளுத்துப் போகிறது.
“சிறகுகளில் உள்ள அவற்றின் வண்ணங்கள் அற்பமானவை அல்ல; அவை பல மில்லியன் ஆண்டு காலமாக வடிவமைக்கப்பட்டவை” என்று வாழிட இழப்பால் இயற்கை உலகம் நிறமிழப்பது பற்றிப் பிரேசிலில் நடக்கும் ஆய்வுத் திட்டத்தின் அங்கமும், ஆய்வாளரும் புகைப்படக் கலைஞருமான ராபர்ட்டோ கார்சியா-ரோவா (Roberto García-Roa) கூறுகிறார். இயற்கைக் காடுகளை விட ஒற்றைப்பயிர்கள் வளர்க்கப்படும் தோட்டங்களில் வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகள் மங்கலாக உள்ளன.
வளமையான ஒரு மழைக்காடு, தகவல் தொடர்பு கொள்ள, இரை பிடிக்க, இனப்பெருக்கம் செய்யக் கண்கவரும் சிவப்பு, ஆழ்ந்த பசுமை அல்லது வெளிறிய பழுப்பு நிறங்களுடன் உள்ள வண்ணத்துப்பூச்சிகளுக்கு உயிர்ப் பன்மயத் தன்மையுடைய வாழிடத்தை அளிக்கிறது. ஆனால் மனிதர்கள் காடுகளை அழித்து யூகலிப்டஸ் போன்ற பயிர்களை வளர்ப்பதால் உயிரினங்களின் தேவைகள் மாற்றமடைகின்றன. ஒற்றைப்பயிர் வளர்ப்புத் தோட்டத்தின் சூழல் பின்புலம் செயலற்றதாக மாறுகிறது.
“ஒரு மழைக்காட்டிற்குள் செல்லும்போது நீங்கள் உயிரோட்டத்துடன் இருப்பதை உணர்வீர்கள். ஒவ்வொன்றும் வனமயமாக இருக்கும்; எதைப் பார்க்கப்போகிறோம் என்பது தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு யூகலிப்டஸ் காட்டிற்குச் சென்றால் அது விரக்தியளிப்பதாக இருக்கும். இயற்கையான ஒரு சூழல் மண்டலத்தில் நிகழ்வது எதுவும் அங்கு நடைபெறாது. அங்கே விலங்குகள் கிடையாது; ஒலிகள் இல்லாமல் அது மௌனமாக இருக்கும். வளர்ச்சியடைந்த ஒரு காடு ஈரப்பதத்துடன் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் ஒரு தோட்டம் வெப்பமாக, வறட்சியுடன், ஒளி வெள்ளத்துடன் காணப்படும்” என்று ராபர்ட்டோ கூறுகிறார். நிறமிழத்தல் பற்றிய விரிவான ஆய்வின் ஆரம்பகட்ட முடிவுகள் இவை. இந்த ஆய்வு, இயற்கை இழப்பு இயற்கை உலகின் நிறங்களை எவ்வாறு மாற்றமடையச் செய்கிறது என்பதை ஆராய்கிறது. வண்ணத்துப்பூச்சிகளே பூமியில் அதிக வண்ணங்களுடன் வாழும் உயிரினங்கள் என்பதால், சூழலைப் பற்றி அறிய அவற்றை ஆராய்வது மிகச் சிறந்தது.
நிறம் என்பது அழகு மட்டுமல்ல
இவை வாழிடப் பரப்புகளில் பல வண்ணங்களைக் காட்டுகின்றன; சூழல் மாற்றங்களுக்கு விரைவாக எதிர்வினை புரிகின்றன. அதனால் இவற்றைக் கண்காணிப்பது சுலபமானது. நிறம் என்பது வெறும் அழகுணர்ச்சி தருவது மட்டுமல்ல; விரிவான சூழல் மண்டலத்தில் முக்கியப் பரிணாம செயல்பாடுகளையும் அவை பெற்றுள்ளன. ஒருகாலத்தில் சூழல் மண்டலங்களுக்கு ஆதரவாக இருந்த வண்ணங்கள், மனிதர்கள் ஏற்படுத்திய மாசுகளால் இப்போது நிசப்தமாகிவிட்டன. பவளப்பாறைகள் நிறமிழக்கின்றன; கடல்கள் பச்சையாகின்றன. மக்கள் அடர்த்தியாக வாழும், மாசுபட்ட இடங்களில் வானவில் கண்ணுக்குப் புலப்படாமல் போகிறது.
ஆய்வுக்குழுவினர் வண்ணத்துப்பூச்சிகளை வலைகளில் பிடித்து, கவனமாக ஆய்வகத்திற்குச் சுவாசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பூச்சியியல் உறைகளில் (entomological envelopes) பாதுகாப்பாக எடுத்துச் செல்கின்றனர். “யூகலிப்டஸ் தோட்டங்களில் வண்ணத்துப்பூச்சிகள் பழுப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. இயற்கையின் தட்டு, இயற்கைத் தேர்வின் (natural selection) அழுத்தங்களால் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, இருபதாம் நூற்றாண்டில் தொழிற்புரட்சியால் பாதிக்கப்பட்ட 'பிஸ்டன் பெட்டுலேரியா' (Biston betularia) என்ற அறிவியல் பெயருடைய நடுத்தர அளவுள்ள மிளகு அந்துப்பூச்சி (peppered moth) ஆகும். இதன் இறக்கைகளில் மிளகு தூவியது போன்ற கருப்புப் புள்ளிகள் காணப்படுகின்றன. இந்த உயிரினம் மரப்பட்டைகளில் உள்ள லைகன்களுடன் (lichen) இணைந்து மறைந்து வாழ்கிறது. விண்வெளியில் இருந்து பார்த்தால் பூமியின் ஒளி மங்கலாகிறது. இயற்கையில் ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. மனிதக் குறுக்கீடுகள் வருங்காலத்தில் தொடர்ந்தால் பேரழிவு ஏற்படும்; இது கவலைக்குரியது” என்று ரியோ கிராண்ட் டு சல் மத்திய பல்கலைக்கழக (Federal University of Rio Grande do Sul) ஆய்வாளர் ரிகார்டோ ஸ்பானியோல் (Ricardo Spaniol) கூறுகிறார்.
இதுவரை யூகலிப்டஸ் தோட்டங்களில் 21 வண்ணத்துப்பூச்சி இனங்களும், மற்ற இடங்களில் 31 வண்ணத்துப்பூச்சி இனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரியோ டி ஜெனிரோவிற்கு வடக்கில் உள்ள பிரேசில் எஸ்பிரிட்டோ சான்டோ (Espírito Santo) மாநிலத்தில் உள்ள காடுகள் மற்றும் தோட்டங்களில் இந்த ஆய்வு நடந்தது. “யூகலிப்டஸ் தோட்டங்களில் வாழும் வண்ணத்துப்பூச்சி சமூகங்களில் பெரும்பாலானவை பழுப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. இந்தத் தோட்டங்களில் ஒருவித வெறுமை நிலவுகிறது” என்று கோபன்ஹேகன் பல்கலைக்கழக விஞ்ஞானியும், ஆய்வின் முன்னணி ஆசிரியர்களில் ஒருவருமான மேடர் இக்லேசியஸ்-கராஸ்கோ (Maider Iglesias-Carrasco) கூறுகிறார்.
காணாமல் போகும் வண்ணத்துப்பூச்சிகள்
விஞ்ஞானிகள் அமேசான் மழைக்காடுகளில் வண்ணத்துப்பூச்சிகள் நிறம் மாறுவதை 2019இல் முதன்முதலாகக் கண்டுபிடித்தனர். ஸ்பானியோல் மற்றும் அவரது ஆய்வுக்குழுவினர், வாழும் சூழலுக்கேற்ப வண்ணத்துப்பூச்சிகள் மாறுவதையும், அவற்றின் நிறங்கள் உடனடியாக மாறியதையும் கண்டறிந்தனர்.
“உள்ளூர் தாவரங்களின் இழப்பு, இரைபிடி உயிரினங்களின் அதிகரிப்பு போன்றவற்றால் வன அழிவிற்குப் பிறகு அதிக நிறமுள்ள வண்ணத்துப்பூச்சிகள் காடுகளில் இருந்து முதலில் காணாமல் போயின. இதனால் நிறமிழத்தல் தூண்டப்படுகிறது” என்று ஸ்பானியோல் கூறுகிறார். சூரிய ஒளி குறைவாக உள்ள இடங்களில் இறக்கைகளில் புலப்படும் நிறங்கள், கட்புல நிறமாலை வடிகட்டி (visible-spectrum filter) மற்றும் புற ஊதா-நிறமாலை வடிகட்டி (ultraviolet-spectrum filter) கருவிகளைக் கொண்டு புரிந்துகொள்ளப்படுகின்றன.
உயிர்ப் பன்மயத் தன்மையில் ஏற்படும் வாழிட இழப்பின் பாதிப்பை இந்த ஆய்வு கூறுகிறது. காடுகள் தங்களின் நிறங்களை இழப்பது அச்சம் தருவது. சூழல் மாற்றங்களுக்கு உயிரினங்கள் எதிர்வினை புரிகின்றன. நிறங்களின் பன்மயத்தன்மை குறையும்போது சூழல் செயல்முறைகளின் சிதைவு உணரப்படுகிறது. வண்ணத்துப்பூச்சிகள் விரிவான உயிர்ப் பன்மயத் தன்மையின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. அவற்றில் ஏற்படும் மாற்றம் சிக்கலான சூழல் இழப்பைப் பிரதிபலிக்கிறது. இது மற்ற உயிரினங்களையும் பெரிதும் பாதிக்கிறது.
பிரேசிலில் உள்ள சாண்டா லூசியா உயிரியல் சரணாலயம் (Santa Lúcia biological reserve) போன்ற பலதரப்பட்ட நுண் வாழிடங்களால் சூழப்பட்ட இடங்கள், வண்ணத்துப்பூச்சிகள் பல்வேறு சந்ததிகளை உருவாக்க உதவுகின்றன. அமேசான் மழைக்காடுகள் முதல் கலிபோர்னியா, ஸ்பெயின் வரை உள்ள பகுதிகளில் ஒற்றைப்பயிர் வளர்ப்பு முறை அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக மரக்கூழ், மரம் மற்றும் கழிப்பறை காகிதம் (toilet paper) போன்றவற்றை உற்பத்தி செய்ய உதவும் யூகலிப்டஸ் மரங்கள், 22 மில்லியன் ஹெக்டேர் (54 மில்லியன் ஏக்கர்) பரப்பளவில் உலகம் முழுவதும் பயிரிடப்பட்டுள்ளன. இவ்வகைத் தோட்டங்கள் உலகம் முழுவதும் ஒரே மாதிரி பாதிப்பை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை. “காபி மற்றும் வாழைத் தோட்டங்கள் எப்பொழுதும் பசுமையாகக் காட்சி தருபவை. இதனால் மக்கள் பசுமையை இயற்கையுடன் தொடர்புபடுத்திக் காண்கின்றனர். ஆனால் அவை இயற்கையானவை அல்ல” என்று ராபர்ட்டோ கூறுகிறார்.
மீட்பிற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன
“உள்ளூர் வாழிடங்களைப் பாதுகாக்க, மேலும் காடுகள் அழிவதைத் தடுக்க எதுவும் செய்யப்படவில்லையென்றால், ஒரு சிலவற்றைத் தவிர சூழலின் சிறப்புமிக்க உயிரினங்களான பல வண்ணமயமான வண்ணத்துப்பூச்சிகள் காணாமல் போய்விடும். நிறங்கள் இல்லாமல் போவது இயற்கையின் அழகிற்கு மட்டும் ஏற்படும் இழப்பில்லை. மாறாக, சூழலில் வண்ணங்களைச் சமிஞ்ஞைகளாகப் (signals) பயன்படுத்தித் தகவல் தொடர்பு கொள்ளும் வண்ணத்துப்பூச்சிகள் போன்ற உயிரினங்களின் இழப்பையும் இது குறிக்கிறது. இந்தப்பாதிப்பு தவிர்க்க முடியாதது” என்று ஸ்பானியோல் கூறுகிறார்.
என்றாலும், கடந்த முப்பது ஆண்டுகளாக மேய்ச்சலுக்காக அழிக்கப்பட்ட அமேசான் பகுதிகளை மீட்கும் முயற்சிகளை ஆய்வுக்குழுவினர் மேற்கொண்டபோது, அங்குப் பல நிறங்களுடைய வண்ணத்துப்பூச்சிகள் மீண்டும் வர ஆரம்பித்தன. மீட்பிற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். சாண்டா லூசியா உயிரியல் சரணாலயத்தில் உதிர்ந்த ஒரு இலையின் தோற்றம், ஒரு வண்ணத்துப்பூச்சியின் உடைந்துபோன இறகை நினைவுபடுத்துவதாக இருந்தது. ஒருவேளை காணாமல் போய்க்கொண்டிருக்கும் வண்ணத்துப்பூச்சிகளுக்கு அமேசான் மழைக்காடு அமைதியாக அஞ்சலி செலுத்துகிறதோ!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பூமிக்கடியில் வாழும் வேர்ப்பூஞ்சைகள்
- இந்த குரலுக்கு வயது நூறு!
- இயற்கையுடன் உறவு அதிகமுள்ள நாடுகளின் பட்டியல்
- சூழலிற்கு நட்புடைய பூச்சிக்கொல்லி
- புல் தின்னும் புலிகள்!
- நம்மைப் போலவே இவர்களும்… அழியாமல் காப்போம்!
- மியாவ்… மியாவ்… பூனைகள் பாவப்பட்ட உயிரினங்கள் இல்லை
- வன உயிரினங்களின் தியேட்டர்
- மெல்ல வளரும் மரங்கள்
- நிறம் மாறும் பூச்சிகளின் இறக்கைகள்
- என்று மாறும் இவற்றின் தலைவிதி?
- கண்டுபிடிக்கப்படும் முன்பே காணாமல் போய்விடுமா?
- வாட் ஈஸ் திஸ்!? திஸ் ஒரு ஈ!
- இரத்தக் கண்ணீர் வடிக்கும் அதிசய உயிரினம்
- உயிருள்ளவை காகித உறைகளில்... உயிரற்றவை பனிக்கட்டிப் பெட்டியில்...
- இந்த கடல் வாழ் ஜெண்டில்மேன்களை யார் காப்பாற்றுவார்!?
- ஒரு துப்பறியும் கதை போல அழியும் பறவைகளைத் தேடி
- இளம் மரங்களை காக்கும் பனித் துளிகள்
- இரும்புப் பூச்சு பற்களுடன் கமோடோ டிராகன்
- விலங்குகளின் வாழ்க்கையைப் பாதிக்கும் மருந்துப் பொருட்கள் மாசு
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.