அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
புவிக் கோளின் சூழல் மண்டலங்களுக்கு சத்தமில்லாமல் சேவை செய்துவரும் நிலத்தடி பூஞ்சைகள் அரசியல்வாதிகளால் உடனே காப்பாற்றப்பட வேண்டிய நிலையில் உள்ளன. பூமிக்கடியில் வாழும் பூஞ்சை வலையமைப்புகளை பாதுகாக்கும் சங்கத்தை (Society for the Protection of Underground Networks (Spun)) சேர்ந்த விஞ்ஞானிகள் வேர்ப் பூஞ்சைகளின் சூழல் மண்டலங்களின் உயிர்ப் பன்முகத்தன்மை வரைபடத்தை முதல்முறையாக உயர் தொழில்நுட்பத்துடன் உருவாக்கியுள்ளனர்.
இருட்டில் வாழ்ந்தாலும்…
இது பற்றிய ஆய்வுக் கட்டுரை நேச்சர் (Nature) என்ற இதழில் வெளிவந்துள்ளது. வேர்ப் பூஞ்சைகள் (Mycorrhizal fungi) செழுமையாக உள்ள 90% பகுதிகளும் பாதுகாக்கப்படாத இடங்களிலேயே வாழ்கின்றன. இச்சூழல் மண்டலங்களின் இழப்பு கார்பன் ஓட்டம், பயிர் உற்பத்தி மற்றும் அதி தீவிர காலநிலை மாற்றத்தை சமாளித்து வாழும் சூழல் மண்டலங்களின் திறனைக் குறைக்கும்.
“வேர்ப் பூஞ்சைகள் இருட்டில் வாழ்ந்தாலும் நிலப் பகுதியில் நீடித்த வாழ்விற்கு அசாதாரணமான சேவைகளை செய்துவருகின்றன. அவை சத்துக்களின் சுழற்சி மற்றும் கார்பன் சேமிப்புக்கு உதவுகின்றன. தாவரங்களின் ஆரோக்கியத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றன. மண்ணின் மிக முக்கிய சூழல் மண்டலப் பொறியியலாளர்களாக உள்ளன. இவை இல்லாவிட்டால் காடுகளின் மீள் உருவாக்கம் மெதுவாக நடைபெறும். பயிர்கள் விளையாது.
நிலப் பரப்பிற்கு மேல் இருக்கும் உயிர்ப் பன்முகத் தன்மை 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் தாவரங்கள் எதுவும் இல்லை என்ற தகவலைக் கூறுகிறது. ஆனால் இந்த வேர்ப் பூஞ்சைகளின் வலையமைப்புகளால் மட்டுமே தாவரங்கள் புவிக் கோளை காலனித்துவப்படுத்தின. மனித வாழ்விற்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்தன. ஆரோக்கியமான பூஞ்சைகளின் வலையமைப்புகள் இருந்தால் மகத்தான வேளாண் உற்பத்தியையும் பெரிய, அழகழகான மலர்களையும் நாம் பெறலாம். தாவரங்களை நோய்க் கிருமிகளில் இருந்து பாதுகாக்க முடியும்” என்று ஸ்பன் அமைப்பின் செயல் அலுவல் இயக்குனர் டாக்டர் டோபி கியர்ஸ் (Dr Toby Kiers) கூறுகிறார்.
தாவர வேர்களில் காணப்படும் இந்தப் பூஞ்சைகள் பூமியின் காலநிலை மற்றும் சூழல் மண்டலங்களை ஒழுங்குபடுத்த உதவுகின்றன.
இந்த நிலத்தடி வலையமைப்புகள் தாவரங்களுக்கு அவசியமான சத்துக்களை தருகின்றன. ஆண்டுதோறும் 13 பில்லியன் டன்களுக்கும் கூடுதலான கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி மண்ணிற்கு அளிக்கின்றன. இது உலகளவில் புதைபடிவ எரிபொருட்கள் எரிக்கப்படுவதால் ஏற்படும் சுமார் மூன்றில் ஒரு பங்கு உமிழ்விற்கு சமமானது.
ஸ்பன் அமைப்பு வேர்ப் பூஞ்சைகள் பாதுகாப்பு திட்டத்தை உலகளவிலான பூஞ்சை (GlobalFungi), பூஞ்சை அறக்கட்டளை (Fungi Foundation) மற்றும் உலக மண் நுண் உயிர்ம கூட்டமைப்பு (the Global Soil Mycobiome consortium) உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து மிகக் குறைவாக ஆராயப்பட்டுள்ள வேர்ப் பூஞ்சை வலையமைப்புகளின் வரைபடத்தை உருவாக்கும் பணிகளை 2021-ல் தொடங்கியது.
வேர்ப் பூஞ்சைகளின் வரைபடம்
இயந்திரக் கற்றல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 130 நாடுகளின் மாதிரிகளைக் கொண்ட 2.8 பில்லியனுக்கும் மேற்பட்ட பூஞ்சைகளின் வரிசைகள் அடங்கிய தரவுத்தளம் உருவாக்கப்பட்டது. ஒன்றுக்கு இரண்டு (1km2 scale) என்ற விகிதத்தில் அமைந்த அளவுகோலைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் பூமியின் வேர்ப் பூஞ்சைகளின் உயிர்ப் பன்முகத் தன்மையை கணித்துக் கூறுகின்றனர்.
இவற்றின் உயிர்ப் பன்முகத் தன்மை செழுமையாக உள்ள 9.5% இடங்கள் மட்டுமே தற்போது நடைமுறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு மட்டுமே இவை வாழ்கின்றன என்பது இந்த வரைபடத்தின் மூலம் விஞ்ஞானிகளுக்குத் தெரியவந்தது. இவற்றின் பாதுகாப்பில் உள்ள மிகப் பெரிய இடைவெளியை இது எடுத்துக்காட்டுகிறது. கானாவின் கடலோரப் பகுதிகள் உலகளவில் பூஞ்சைகளுக்கான செழுமை மிகுந்த இடமாகக் கருதப்படுகிறது.
ஆனால் இங்கு கடலோரப் பகுதிகளில் மண் அரிப்பு ஆண்டிற்கு 2 மீட்டர் என்ற அளவில் நிகழ்வதால் இந்த முக்கிய உயிர்ப் பன்முகத் தன்மையுள்ள இடம் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுவிடும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். “அறிவியல்பூர்வ செயலியின் பயன்பாட்டுடன் கூடிய பரந்த உலகளவிலான முதல் வரைபட முன்முயற்சியை (global mapping initiative) இந்த ஆய்வு குறிக்கிறது. இது வெறும் அறிவியல் கருவிகளுக்கும் அப்பாற்பட்டது. வருங்கால சூழல் பாதுகாப்பிற்கு இது உதவும்.
சூழல் மண்டல பாதுகாப்பிற்கும் செயல்பாட்டிற்கும் இந்தப் பூஞ்சைகளின் கூட்டு வாழ்க்கை ஏற்படுத்தும் தாக்கத்தை தொடர்ந்து புறக்கணிப்பது பூமியைக் காப்பதில் கை தவறவிட்ட மிகப் பெரிய வாய்ப்பாக அமையும். பூஞ்சைகள் மனிதனால் ஏற்படுத்தப்படும் அழுத்தங்களுக்கு எதிர்மறையாக வினை புரிகின்றன.
இவற்றின் இழப்பை சரிசெய்யாவிட்டால் காலநிலை மாற்றத்தை சமாளிக்க உதவும் உன்னதமான இயற்கைத் தீர்வுகளை நம்மால் உருவாக்க முடியாது” என்று ஆய்வின் முன்னணி ஆசிரியர் டாக்டர் மைக்கேல் வாண் ந்யுலன்ட் (Dr Michael Van Nuland) கூறுகிறார்.
“நிலப் பகுதியின் தவறான பயன்பாடு இவ்வகைப் பூஞ்சைகள் வளமிழப்பதற்கு ஒரு முக்கியக் காரணம். இவற்றின் பாதுகாப்பில் முன்னுரிமை கொடுக்கப்படாமல் இருப்பது விரக்தியை ஏற்படுத்துகிறது.
வேர்ப் பூஞ்சைகளின் நிலத்தடி அட்லஸ்
இவை விவசாய உற்பத்திக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் அவசியமானவை” என்று கியர்ஸ் கூறுகிறார். “இப்பூஞ்சை சூழல் மண்டலங்கள் பெருவாரியாக சட்டத்திலும் கொள்கைகளிலும் புலப்படுவதில்லை. இதனால் காலநிலை மாற்றம், பூமியின் எல்லா நிலத்தடி சூழல் மண்டலங்களிலும் உயிர்ப் பன்முகத் தன்மையின் இழப்பு ஏற்படுகிறது.
இதை சட்டம் மற்றும் கொள்கை ரீதியாக சமாளித்து வலுப்படுத்த இந்த தரவு மிக முக்கியமானது” என்று நியூயார்க் பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் சட்டத் துறைப் பேராசிரியரும் மனித வாழ்விற்கும் மேலான திட்டத்தின் (the More-Than-Human Life (Moth) programme) இயக்குனருமான சேசார் ரோட்ரிக்ஸ் காரா-விடோ (César Rodríguez-Garavito) கூறுகிறார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டிய செழுமையிழந்த இடங்களை பாதுகாப்பு குழுக்கள், ஆய்வாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பவர்கள் அடையாளம் காண உதவும் விவரங்களை ஸ்பன் அமைப்பின் நிலத்தடி அட்லஸ் இடைநிலைக் கருவிகள் மூலம் பெறலாம். ஸ்பன் பன்னாட்டு அமைப்பின் 79 நாடுகளைச் சேர்ந்த நாநூற்றிற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், 96 நிலத்தடி ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து இந்தப் பணிகளில் ஈடுபட்டனர்.
பூமியில் சென்றடைய மிகக் கடினமான, தனித்து விடப்பட்ட மங்கோலியா, பூட்டான், பாகிஸ்தான் மற்றும் உக்ரைன் போன்ற இடங்களில் உள்ள நிலத்தடி சூழல் மண்டலங்களின் மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய ஒத்துழைப்பாளர்களையும் வேர்ப் பூஞ்சைகளின் வரைபடத்தை விரிவாக்க நிதியுதவி அளிக்கும் கொடையாளர்களையும் ஸ்பன் அமைப்பு தேடிவருகிறது. இப்போது உருவாக்கப்பட்டுள்ள வரைபடம் பூமியின் பரப்பில் 0.001% பகுதியை மட்டுமே கொண்டதாக உள்ளது.
“இந்த வரைபடத்தின் விரிவாக்கம் இப்பூஞ்சைகளின் செயல்முறைகளை சிறந்த முறையில் பயன்படுத்த உதவும். இருக்கும் பூஞ்சைகளை அழியாமல் வைத்திருந்து பாதுகாத்தால் உலகின் சில மிகப் பெரிய சவால்களைத் தீர்க்க, உயிர்ப் பன்முகத் தன்மை குறைவை சரிசெய்ய, காலநிலை மாற்றத்தை சமாளிக்க மற்றும் குறையும் உணவு உற்பத்தியை அதிகரிக்க அது உதவும். இது நேரடி பயன்களை மக்களுக்கு தரும்” என்று உலக வன நிதியத்தின் (World Wide Fund for Nature) தலைமை விஞ்ஞானி ரெபெக்கா ஷா (Dr Rebecca Shaw) கூறுகிறார்.
இனி நாம் பூமியில் கால் பதித்து நடக்கும்போது கண்ணுக்குப் புலப்படும் தாவரங்கள், விலங்குகள் போல மண்ணிற்கு அடியிலும் வேர்களில் வாழும் பூஞ்சைகளைப் பற்றி சிறிது சிந்திப்போம்!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உலகப் புகழ்பெற்ற இயற்கை ஆர்வலரும் ஒலிபரப்பாளருமான டேவிட் அட்டன்பரோ (David Attenborough) அவர்களின் நூறாவது பிறந்த நாளான மே 8, 2026 அன்று புதியதொரு ஒட்டுண்ணி வகை குளவி குடும்பத்திற்கும், புதிய குளவி இனத்திற்கும் (Tiny parasitic wasp) அவரது பெயர் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டது. லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தின் (Natural History Museum) சேகரிப்பில் இருந்து இந்த உயிரினத்தின் மாதிரி கண்டுபிடிக்கப்பட்டது.
அட்டன்பரோவின் பெயரில்…
இயற்கை மற்றும் சூழல் பாதுகாப்பிற்காக தன் வாழ்வை அர்ப்பணித்துவரும் அட்டன்பரோவின் பெயர் ஏற்கனவே பல்லிகள், வௌவால்கள், தவளைகள், அந்துப் பூச்சிகள், தட்டைப் புழுக்கள், நத்தைகள், சிலந்திகளின் புதிய இனங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிரான, புரிந்து கொள்ளக் கடினமான ஊசிவால் குளவி வகையைச் சேர்ந்த உயிரினத்தின் நீளம் வெறும் 3.5 மில்லிமீட்டர் மட்டுமே. இதன் பெயரில் உள்ள டவ் (tau) என்ற சொல்லின் பொருள் அதன் வயிற்றுப் பகுதியில் இருக்கும் அடையாளத்தைக் குறிக்கிறது.
இந்த மாதிரி சிலியில் உள்ள வால்டிவியா மாகாணத்தில் (Valdivia province) இருந்து 1983ல் சேகரிக்கப்பட்டது. ஆனால் லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் வகைப்படுத்தப்படாமல் வைக்கப்பட்டிருந்த உயிரினங்களின் சேகரிப்பு இருந்த மேசை டிராயரில் ஆகஸ்ட்டிஜென் டெ கெட்டெலேர் (Augustijn De Ketelaere) என்ற தன்னார்வலரால் இதன் வியப்பூட்டும் குணங்கள் சமீபத்தில் கண்டறியப்பட்டது. அதுவரை இது பற்றி எவருக்கும் தெரியாமல் இருந்தது.
புதிதாக விவரிக்கப்பட்ட இந்தப் பூச்சியைப் பற்றிய ஆய்வை இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தின் பூச்சிகள் பிரிவின் முதன்மை மேற்பார்வையாளர் டாக்டர் கவின் பிராடு (Dr Gavin Broad) தலைமையேற்று நடத்தினார். இதன் உடலமைப்பு அதன் மிக நெருக்கமான உறவினரான பூச்சி இனத்தில் இருந்து தனித்துவமாக வேறுபட்டு காணப்பட்டது. அதனால் முன்பு வகைப்படுத்தப்பட்ட வேறெந்த குடும்பத்திலும் இதைத் தர்க்கரீதியாக சேர்க்க முடியவில்லை.
“சிறு வயதில் வகைப்பாட்டியல் பற்றி நான் டேவிட் அட்டன்பரோவின் பூமியில் வாழ்க்கை (Life on Earth) என்ற தொடரில் இருந்தே அறிந்தேன். எதிர்காலத்தில் நான் ஒரு வகைப்பாட்டியல் விஞ்ஞானியாக வேண்டும் என்ற உள்ளுணர்வை எனக்குள் ஏற்படுத்தியது. வியக்கத்தக்க வகையில் என் இலட்சியம் வெற்றி கண்டது. நான் ஒரு வகைப்பாட்டியல் ஆய்வாளராக ஆனேன். இதற்காக அட்டன்பரோவிற்கு நன்றி சொல்ல வேண்டும்” என்று பிராடு கூறுகிறார்.
தான் இடும் முட்டைகளை மற்றொரு விலங்கின் உடலில் இடுகின்றன என்பது தவிர இந்த புதிய குளவியின் வாழிடம் அல்லது அதன் வாழ்க்கைச் சுழற்சி பற்றி இன்னும் எதுவும் தெரியவில்லை. ஆஸ்திரேலியாவில் வாழும் “இதன் தூரத்து உறவினரான ஒரு உயிரினம் சிலந்தியின் முட்டைகளைத் தாக்குகிறது. இது போன்ற குழுவில் உள்ள இனங்கள் இவ்வாறு செய்வது இயல்பானதே என்று கருதப்படுகிறது. ஆனால் இதுவும் தீவிர ஆய்வுகளுக்குப் பிறகே உறுதி செய்யப்பட முடியும்” என்று பிராடு கூறுகிறார்.
இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உயிரினம்
“வேறு சில அதிசயிக்கத்தக்க, பிரமிப்பூட்டும் மகத்தான உயிரினங்கள் வாழும் சிலியில் இந்தப் பூச்சியினம் இன்னமும் வாழ்கிறது என்று நான் நம்புகிறேன். ஆனால் இந்த சின்னஞ்சிறிய உயிரினத்தை அங்கு கண்டுபிடிப்பது வைக்கோல் போரில் ஒளிந்திருக்கும் ஊசியைத் தேடுவது போல. புதிரான இந்த குளவிகள் பெரும்பாலானவையும் இன்னமும் விவரிக்கப்படாத உயிரினங்களாகவே உள்ளன.
பிரிட்டனில் கூட நாம் புதிய இனங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் விவரிக்கிறோம். அட்டன்பரோ இந்த உயிரினத்திற்கு தன் பெயர் வைக்கப்பட்டது, குறிப்பாக வகைப்பாட்டியல்ரீதியாக ஒரு இனத்தின் துணைக் குடும்பத்திற்கே தன் பெயர் வைக்கப்பட்டது பற்றி மகிழ்வார் என்று நான் நம்புகிறேன்.
என்றாலும் 1961ல் இந்தோனேஷியா பாப்புவாவில் (Papua) இருந்து சேகரிக்கப்பட்ட எட்சினா (echidna) என்ற பல்லில்லாத, குழி தோண்டி மண்ணிற்கடியில் வாழும் முள் எலி போன்ற ஒரே ஒரு உயிருள்ள விலங்கிற்கு தன் பெயரிடப்பட்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சி இப்போது அவருக்கு தோன்றியிருக்காது என்று கருதுகிறோம். அழியும் ஆபத்தில் இருக்கும் இந்த உயிரினத்திற்கு 1998ல் சாக்லாஸஸ் அட்டன்பரோயி (Zaglossus attenboroughi) என்று பெயர் வைக்கப்பட்டது. 2023 வரை இந்த நீண்ட அலகுள்ள உயிரினம் புலப்படவில்லை.
அப்போது உயிருடன் இருந்த இந்த விலங்கின் காணொளி முதல்முறையாக பதிவு செய்யப்பட்டது. அட்டன்பரோவிற்கு மிகப் பிடித்தமான கட்டிடங்களில் ஒன்றாக லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகம் விளங்குகிறது. இந்த புதிய உயிரினக் குடும்பத்தின் கண்டுபிடிப்பு வரலாற்று சேகரிப்புகளில் இது போன்ற தனித்துவமான உயிரினங்கள் இன்னும் கண்டறியப்படாமல் ஒளிந்திருக்கின்றனவா என்று மேலும் ஆராய மற்ற விஞ்ஞானிகள், வகைப்பாட்டியல் ஆய்வாளர்களுக்கு உதவும்.
புதிதாகக் கண்டறியப்படவிருக்கும் உயிரினங்கள் பற்றிய விவரங்களைக் கண்டறிந்து கூறவும் புதிய பெயர்களை வைக்கவும் உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். விஞ்ஞானிகளுக்கு சேகரிப்புகளை மறு பார்வையிட இது உலகளவில் உள்ளுணர்வூட்டும்.
புதிதாகக் கண்டறியப்படும் இத்தகையவை மிகச் சிறிய உயிரினமாக இருந்தாலும் இவற்றின் கண்டுபிடிப்புகள் ஒன்றுபட்ட நம் புரிதலுக்கும் அதன் மூலம் இயற்கை உலகின் எதிர்காலத்திற்கும் பெரும் பங்காற்றும்” என்று இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் அறிவியல் தகவல் தொடர்பு மேலாளர் ஜெனிஃபர் புல்லர் (Jennifer Pullar) கூறுகிறார்.
இது பற்றிய கட்டுரை இயற்கை வரலாறு (Journal of Natural History) என்ற இதழில் வெளிவந்துள்ளது. இயற்கை பாதுகாப்பிற்காக தன்னை அர்ப்பணித்து வாழும் இந்த மகத்தான மனிதரின் பெயர் இந்தப் புதிய குளவிக்கு வைக்கப்பட்டது மிகப் பொருத்தமான அங்கீகாரம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
சமூக பாதுகாப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல், மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியல் போல உலகில் பல்வேறு சமுதாய நிலைகள் பற்றி அவ்வப்போது விஞ்ஞானிகள் ஆராய்ந்து பட்டியல்களை வெளியிடுகின்றனர். இவ்வகையில் இயற்கையுடனான உறவு குறித்த பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
கனடா, இஸ்ரேல், ஜெர்மனி, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் , நேபாளம் உள்ளிட்ட 61 நாடுகளில் மக்கள் இயற்கையுடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளனர் என்பது பற்றிய ஆய்வுகள் நடந்தன. இது குறித்து உலகளவில் நடந்த முதல் ஆய்வு இது. இந்த நாடுகளைச் சேர்ந்த 57,000 பேர் இதில் பங்கேற்றனர். சமூக, பொருளாதார, புவியியல், கலாசார அம்சங்கள் இயற்கையின் மீதான மக்களின் கருத்தை எவ்வாறு உருவாக்குகிறது என்பது ஆராயப்பட்டது.
இந்த ஆய்வில் நேபாளம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இரான், தென்னாப்ப்ரிக்கா, பங்களாதேஷ் மற்றும் நைஜீரியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன என்று ஆம்பியோ (Ambio) என்ற இதழில் இது குறித்து வெளிவந்த ஆய்வு கூறுகிறது. க்ரோஷியா மற்றும் பல்கேரியா ஆகியவை மட்டுமே பட்டியலில் முதல் பத்து இடங்களில் இடம் பெற்ற இரண்டு ஐரோப்பிய நாடுகள். பிரான்ஸ் 19வது இடத்தில் உள்ளது.
பிரிட்டனுக்கு அடுத்த இடங்களில் நெதர்லாந்து, கனடா, ஜெர்மனி, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன. பட்டியலில் ஸ்பெயின் கடைசி இடத்தில் உள்ளது. இயற்கையுடனான உறவு என்பது ஒரு தனிநபர் பிற உயிரினங்களுடன் உளவியல் ரீதியாக மற்ற உயிரினங்களுடன் அவர் எந்த அளவு நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளார் என்பதை குறிக்கிறது.
இயற்கையான சூழலில் வாழும் ஒருவர் அதிகமாக மகிழ்ச்சியுடன் இருப்பதால் அவரின் உடல் மற்றும் மன நலம் மேம்படுகிறது. இதனால் அவர் சூழல் நட்புடைய செயல்களில் அதிகமாக ஈடுபடுகிறார் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இயற்கையுடன் குறைவாகத் தொடர்பு கொண்டுள்ள ஒருவர் உயிர்ப் பன்மய இழப்பு, பொருளாதார சமத்துவமின்மை, பொருளியல் சார்ந்த பயன்களைக் குறைவாகப் பெறுகிறார்.
பிரிட்டன் டார்பி (Derby) பல்கலைக்கழகத்தின் இயற்கைத் தொடர்புகள் குறித்த பிரிவின் பேராசிரியர் மைல்ஸ் ரிச்சர்ஸன் (Miles Richardson) அவர்களின் தலைமையில் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தினர்.
இயற்கையுடன் அதிக தொடர்பு கொண்டுள்ள சமுதாயம் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தில் அதிக நம்பிக்கையுடன் உள்ளது. இயற்கைத் தொடர்பு குறைவாக உள்ள நாடுகளில் வணிக நட்புடைய சூழல் குறைவாக உள்ளதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
பிரிட்டன் உலகில் அதிகமான சூழல் பாதுகாப்பு அமைப்புகளில் உறுப்பினராக இருந்தாலும் இயற்கையுடன் உள்ள மக்கள் தொடர்பில் அது எந்த தாக்கத்தையும் செலுத்தவில்லை. நகர மயமாக்குதல், சராசரி வருமானம் மற்றும் மிதமிஞ்சிய இணைய தள பயன்பாடு போன்றவையும் இதற்குக் காரணம் என்று ஆய்வு கூறுகிறது.
இயற்கைத் தொடர்பு என்பது நாம் எதைச் செய்கிறோம் என்பதைப் பொறுத்ததில்லை. ஆனால் அது இயற்கையைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம், எவ்வாறு உணர்கிறோம், சிந்திக்கிறோம், இயற்கையை நாம் எந்த அளவு மதிக்கிறோம் என்பதிலேயே உள்ளது.
“இன்றுள்ள தொழில்நுட்ப உலகில் இயற்கையைக் குறித்த சிந்தனைகளை நாம் ஒருங்கிணைக்க வேண்டும். கலாசாரத்தை மாற்றுவது கடினம். ஆனால் இயற்கையின் மதிப்பை நம் நலமான வாழ்வுடன் மைய நீரோட்டத்தில் இணைத்துப் பார்க்கப் பழக வேண்டும். மனநல மற்றும் உடல் நல சிகிச்சைகளில் இயற்கை வழி முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும். இயற்கை பற்றிய பொது விதிகளை உருவாக்க வேண்டும். மிதமிஞ்சிய வணிக நோக்கங்கள் சூழல் முடிவுகளைப் பாதிக்கிறது. முடிவுகள் எடுப்பதில் இயற்கைக்கு உரிய இடம் அளிக்கப்பட வேண்டும்.
வெறும் வளமாக மட்டும் கருதாமல் இயற்கையை நம் செயல்களில் பங்காளியாக ஆக்க வேண்டும். நகரப் பகுதிகளில் பூங்காக்கள், பசுமையிடங்களை அதிகப்படுத்தினால் மட்டும் போதாது. அவற்றை புனிதமாகக் கருத வேண்டும்" என்று ரிச்சர்ட்ஸன் கூறுகிறார். அவ்வாறு கருதும் நாடுகளில் வாழும் மக்கள் அதனுடன் அதிகமாகத் தொடர்பு கொண்டுள்ளனர் என்று உலக மதிப்பீடுகள் கணக்கெடுப்பு (World Values Survey) அமைப்பின் ஆய்வு கூறுகிறது.
“இயற்கை உடல், மன நலம், ஆன்ம நலனிற்கு நல்லது. பைபிள் போன்ற பல புனித நூல்கள் பறவைகள், மலர்களுடன் புராண காலத்தில் மக்கள் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்ததைக் கூறுகிறது. பார்ப்பதில் நாம் நேசிப்பதை நாம் விரும்புகிறோம். அதைப் பொக்கிஷமாக நினைக்கிறோம். பாதுகாக்க முயல்கிறோம். வனப் பகுதி சூழலில் உள்ள பள்ளிக்கூடங்கள், தேவாலயங்கள் இதில் பெரும் பங்காற்றுகின்றன” என்று இங்கிலாந்து சர்ச்சுகளுக்கான கூட்டமைப்பு மற்றும் நாரிஜ் (Norwich) தேவாலயத்தின் பிஷப் கிரயெம் அஷர் (Graham Usher) கூறுகிறார். இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை உலக மக்களிடையில் உருவாக்க இந்த ஆய்வு உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கடந்த மூன்று பத்தாண்டுகளில் வேதிப் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு 50% அதிகரித்துள்ளது. இவற்றிற்கு மாற்றாக பசுமை வழியில், சூழலிற்கு நட்புடைய பூச்சிக்கொல்லி ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது ஒட்டும் தன்மை தந்திரத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. வேதிப்பொருட்களைப் பயன்படுத்தாமல் தாவரங்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் பூச்சிகளை அழிக்கிறது.
தெளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள உணவு எண்ணை துளிகள் பூச்சிகளைப் பிடித்து அழிப்பதால் செயற்கைப் பூச்சிக்கொல்லிகள் போல இவை மனிதர்களுக்கும் சூழலிற்கும் தீமை செய்வதில்லை. டி எஸ் (Ts) என்று அழைக்கப்படும் இது வேதிப் பூச்சிக்கொல்லிகளுக்கு ஒரு பசுமை வழி மாற்று என்று புதிய ஆய்வு கூறுகிறது. உணவு எண்ணைகளில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பசை வடிவ பூச்சிக்கொல்லி பனிப் பூண்டு (sundews) என்ற துரோசீரா போன்ற பூச்சி உண்ணும் தாவரங்கள் இரை பிடிக்கும் தந்திரத்த்தின் மூலம் கிடைத்த உள்ளுணர்வால் உருவாக்கப்பட்டது.
நச்சுத்தன்மை உள்ள பூச்சிக்கொல்லிகள் போல இல்லாமல் மிகப் பெரிய உடலமைப்பைப் பெற்றிருக்கவேண்டும் என்பதால் தீங்கிழைக்கும் பூச்சிகள் இயற்கை வழியிலான இந்த பூச்சிக்கொல்லிகளுக்கு எதிராக எதிர்ப்பாற்றலை சுலபமாகப் பெற முடிவதில்லை. நன்மை செய்யும் தேனீக்கள் போன்ற அதிகப் பயன்தரும் பூச்சிகள் இந்தத் துளிகளால் பிடிக்கப்படுவதில்லை என்பது இந்த பசுமை வழி பூச்சிக்கொல்லியின் மிகப் பெரிய பயன்.
மக்கள்தொகைப் பெருக்கத்தால் உணவுக்கான தேவை உலகளவில் அதிகரித்துவருகிறது. ஆனால் பூச்சிகள் பெருமளவிலான உணவுப் பொருட்களை அழிக்கின்றன. இயற்கை மற்றும் வன உயிரினங்களுக்கும் சில சமயங்களில் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இதனால் சில நாடுகள் செயற்கை பூச்சிக்கொல்லிகளை அதிக அளவில் தடை செய்துள்ளன. பூச்சிகளைக் கொல்ல உதவும் வேளாண் நட்புடைய சில பூச்சிகளை விவசாயிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
என்றாலும் இந்த புதிய ஒட்டும் தன்மையுடைய துளிகள் உயிரி வழியில் மக்கக் கூடிய பூச்சிக்கொல்லிகளுக்கு முதல் எடுத்துக்காட்டு. இந்த துளிகள் காய்கறிகள், பழங்கள், அலங்கார செடிகள் உட்பட ஐநூறிற்கும் மேற்பட்ட இனங்களை தாக்கும் மேற்கித்திய மலர் த்ரிப் (western flower thrip) என்ற பூச்சியில் பரிசோதிக்கப்பட்டன. விவசாயத்தை பாதிக்கும் ஒரு முக்கிய பூச்சியான இது வட அமெரிக்கா மற்றும் மேற்கித்திய ஐரோப்பாவில் இருந்து வந்தது.
ஆனால் இது இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. சோதனை நடைபெற்ற இரண்டு நாட்களுக்குள் இந்த பூச்சிக்கொல்லி 60 சதவிகிதத்திற்கும் அதிகமான த்ரிப் பூச்சிகளை அழித்தது. ஆனால் துளிகள் பல வாரங்கள் ஒட்டும் தன்மையுடன் இருந்தன. இந்த பூச்சிக்கொல்லி த்ரிப் பூச்சிகளை அசையவிடாமல் பிடித்துக்கொண்டது. “இந்த பூச்சிக்கொல்லி பற்றி ஆய்வுகள் மேலும் தொடர்ந்து நடைபெறுகின்றன.
தாவர எண்ணையில் இருந்து உருவான பூச்சிக்கொல்லி
“இந்த பூச்சிக்கொல்லி உள்ளூர் சூழலை பேரழிவு ஏற்படுத்தும் வகையில் பாதிப்பதில்லை. மனிதர்களுக்கு தற்செயலான நச்சுத் தன்மையை ஏற்படுத்துவதில்லை” என்று நம்புவதாக” நெதர்லாந்து வேஜன்இன்ஜன் பல்கலைக்கழக மற்றும் ஆராய்ச்சி (Wageningen University & Research) பிரிவின் சுய பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் இது பற்றி ஆராய்யும் டாக்டர் தாமஸ் கோட்ஜெர் (Dr Thomas Kodger) கூறுகிறார். வேதியியல் பூச்சிக்கொல்லிகளின் மிதமிஞ்சிய பயன்பாட்டால் உணவு உற்பத்தி குறைகிறது. பசுமை மாற்று பூச்சிக்கொல்லிகளும் குறைவாகவே உள்லன.
இந்த புதிய பூச்சிக்கொல்லி பற்றிய கண்டுபிடிப்பு தேசீய அகாடமியின் அறிவியல் முன்னேற்றங்கள் (Proceedings of the National Academy of Sciences) என்ற ஆய்ழிதழில் வெளிவந்துள்ளது. விஞ்ஞானிகள் ஒரு தாவர எண்ணையை ஒட்டும் தன்மையுடையதாக்க அதை ஆக்சிஜனேற்றம் அடையச் செய்தனர். அதை ஒரு பசை நாடா போல ஆக்கினர். இந்த செயல்முறை தீவிரமான வறுத்தலுக்கு ஒப்பானது. பிறகு அதை நீர் மற்றும் சிறிதளவு சோப்புடன் கலந்து துளிகள் ஒன்றுசேர்ந்து ஒட்டிக்கொள்ளும் இயல்புடையதாக மாற்றினர்.
இந்தத் துளிகள் பின்னர் செவ்வந்தி தாவரங்களின் இலைகள் மீது தெளிக்கப்பட்டன. நெதர்லாந்தின் மிகப் பெரிய வணிகப்பயிரான இந்த தாவரம் த்ரிப் பூச்சிகளின் முக்கிய உணவு. ஸ்ட்ரா பெர்ரி இலைகளிலும் இந்தத் துளிகள் தெளிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. சோதனைக்கான தெளிப்பு கருவிகள் விவசாயிகள் முன்பு வயல்களில் பயன்படுத்தியவை போலவே வடிவமைக்கப்பட்டவை. ப்ளை பேப்பர் (Fly paper) எனப்படும் காகிதங்கள் இந்த வகை பூச்சிகளை அழிக்க பயன்படுவதில்லை.
பொறிகள் பூச்சிகளைப் பிடிக்க சிறந்த முறையில் உதவுகின்றன. ஆனால் அவை மகரந்த சேர்க்கை செய்யும் உயிரினங்களையும் பிடித்து அழித்துவிடுகின்றன. இந்த மில்லி மீட்டர் அளவே உள்ள துளிகள் மீது அதை விட பெரிய உடலைக் கொண்ட தேனீக்கள் ஒட்டிக்கொள்வதில்லை. இந்தத் துளிகளுடன் நறுமணப் பொருட்களை சேர்ப்பது பற்றி ஆய்வுக் குழுவினர் பரிசீலித்து வருகின்றனர்.
இதனால் சிறிய கடற்கொள்ளையன் பூச்சி எனப்படும் ஓரியஸ் லீவிகாட்டஸ் (Orius laevigatus) போன்றவை திரிப்கள் அல்லது தீங்கிழைக்கும் மற்ற பூச்சிகளை அதிகமாகக் கவர முடியும். சிறிய கடற்கொள்ளையன் பூச்சி வேட்டையாடுவதன் மூலம் பயிர்களை பாதுகாக்க உதவுகிறது. இது டிரிப்ஸ், சிலந்தி பூச்சிகள், வெள்ளை ஈக்கள் போன்ற சிரிய பூச்சிகளையும் அவற்றின் முட்டைகளையும் லார்வாக்களையும் உணவாக உண்கிறது.
நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உதவும் இயற்கை வழி பூச்சிக்கொல்லிகள்
பருத்திப் பூச்சிகள் அல்லது மலர்ப் பூச்சிகள் எனப்படும் பைரட் ஃபக் (pirate bug) திரிப் மற்றும் சிறிய பூச்சிகளைக் கட்டுப்படுத்த முன்பிருந்தே பயன்படுகின்றன. இந்த புதிய பொருளின் மக்கும் தன்மை மற்றும் ஒட்டும் தன்மை நீடிக்கும் காலம் பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்துவருகின்றனர். ஆனால் பல தோட்டப் பயிர்கள் பயிர் செய்யப்படும் பசுமை வீடுகளில் இதன் ஒட்டும் பண்பு நீடிக்கும் காலம் முக்கியப் பிரச்சனையாக இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விலை மலிவான கழிவு எண்ணையில் இருந்தே இந்த சூழல் நட்புடைய பூச்சிக்கொல்லி தயாரிக்கப்படுகிறது. இது பாதுகாக்கப்படவேண்டிய தாவரங்களில் எந்த அளவிற்கு எவ்வளவு கால இடைவேளைகளில் பயன்படுத்தப்படவேண்டும் என்பது பற்றி ஆராயப்பட்டுவருகிறது. இந்தப் பொருளை வணிகரீதியில் உற்பத்தி செய்ய ஆய்வுக் குழுவினர் காப்புரிமை கோரியுள்ளனர். “செயற்கைப் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைக்க இந்த கண்டுபிடிப்பு பெரிதும் உதவும்.
இயற்கை எண்ணைகள் மூலம் நோய் பரப்பும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதால் நீடித்த நிலையான வளர்ச்சி ஏற்படும். இந்த பூச்சிக்கொல்லி சூழல் மீதும் இலக்காகக் கொண்டிராத நச்சுத்தன்மையற்ற பூச்சிகள் மீதும் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி மேலும் ஆராயப்படவேண்டும். இந்தப் புதிய பொருள் நம்பிக்கயளிப்பதாக உள்ளது” என்று யு கே பூச்சிக்கொல்லி செயல்பாடு (Pesticide Action Network UK) அமைப்பின் நிக் மோல் (Nick Mole) கூறுகிறார்.
“நச்சுத் தன்மையுடைய பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றான புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க உதவும் புதிய ஆய்வு அணுகுமுறைகள் வரவேற்கத்தக்கவை. நச்சுப் பூச்சிக்கொல்லிகளால் நம் நாட்டுப் புறங்கள் நீண்ட காலமாக நஞ்சாகிவருகிறது. இவை மகரந்த சேர்க்கை செய்யும் மற்றும் நீர் வாழ் முதுகெலும்பற்ற உயிரினங்களின் அழிவிற்குக் காரணமாகிறது.
இருந்தாலும் புதிய மாற்றுப் பொருட்கள் மற்ற இலக்காகக் கொண்டில்லாத உயிரினங்களும் முறையாக பாதுகாக்கப்படுகின்றனவா என்பதை தீவிரமாக மதிப்பீடு செயல்முறைகளுக்குப் பிறகே பதிலீடு செய்யப்படவேண்டும்” என்று முதுகெலும்பற்ற பூச்சிகளுக்கான அறக்கட்டளையின் கிரேக் மகாடம் (Craig Macadam) கூறுகிறார். “புதிய பொருட்கள் அனைத்தும் அனுமதி வழங்கும் நபர்களால் மறுக்கப்படுகின்றன என்று பயிர் வளர்ப்போர் கருதுகின்றனர். சூழலிற்கு உகந்த இவற்றிற்கு அனுமதி கோரி போராடவேண்டியுள்ளது.
நாம் வாழும் காலத்திலேயே இந்த புதிய கண்டுபிடிப்புகள் உலகை மாற்ற உதவுவது பெருமைக்குரியது” என்று கோட்ஜெர் கூறுகிறார். வருங்காலத்தில் இத்தகைய புதிய மாற்றுப் பொருட்கள் சூழலையும் மனித குலத்திற்கு உணவூட்டும் விவசாயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- புல் தின்னும் புலிகள்!
- நம்மைப் போலவே இவர்களும்… அழியாமல் காப்போம்!
- மியாவ்… மியாவ்… பூனைகள் பாவப்பட்ட உயிரினங்கள் இல்லை
- வன உயிரினங்களின் தியேட்டர்
- மெல்ல வளரும் மரங்கள்
- நிறம் மாறும் பூச்சிகளின் இறக்கைகள்
- என்று மாறும் இவற்றின் தலைவிதி?
- கண்டுபிடிக்கப்படும் முன்பே காணாமல் போய்விடுமா?
- வாட் ஈஸ் திஸ்!? திஸ் ஒரு ஈ!
- இரத்தக் கண்ணீர் வடிக்கும் அதிசய உயிரினம்
- உயிருள்ளவை காகித உறைகளில்... உயிரற்றவை பனிக்கட்டிப் பெட்டியில்...
- இந்த கடல் வாழ் ஜெண்டில்மேன்களை யார் காப்பாற்றுவார்!?
- ஒரு துப்பறியும் கதை போல அழியும் பறவைகளைத் தேடி
- இளம் மரங்களை காக்கும் பனித் துளிகள்
- இரும்புப் பூச்சு பற்களுடன் கமோடோ டிராகன்
- விலங்குகளின் வாழ்க்கையைப் பாதிக்கும் மருந்துப் பொருட்கள் மாசு
- அத்தி மரத்தின் அதிசய மகரந்தச் சேர்க்கை
- உயிர்ப் பன்மயத் தன்மையை அழிக்கும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள்
- மரம் நட்டால் உயிர்ப் பன்மயத் தன்மை அழிந்து போகுமா?
- தாவர, விலங்குகள் போல பூஞ்சைகளுக்கும் உரிய மரியாதை
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.