யானை, நீர் நாய், திமிங்கலங்களுக்கு இடையில் என்ன ஒற்றுமை இருக்கிறது? தாங்கள் வாழும் சூழல் மண்டலத்தில் இவை அனைத்தும் கார்பன் சேமிப்பை அதிகரிக்க உதவுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. யானைகள் விதைகளைப் பரப்புகின்றன. குறைவான உயரத்தில் வளரும் தாவரங்களைக் காலில் போட்டு மிதிக்கின்றன. உயரமான மரங்கள் வளர உதவுகின்றன.

கடல் நீர் நாய்கள் கடல் முள் எலிகளை (Sea urchins) உண்கின்றன. இதனால் கடற்பாசிகள் (kelp) செழித்து வளர்கின்றன. திமிங்கலங்கள் ஆழ்கடலில் உணவை உண்டு சுவாசிக்கவும், ஓய்வெடுக்கவும் அவை கடல் மேற்பரப்பிற்கு வரும்போது சத்துகளை வெளிவிடுகின்றன. மிதவை உயிரினங்கள் (phytoplanktons) அதிக அளவில் உருவாக இது தூண்டுதலாக அமைகிறது.

இந்த உயிரினங்கள் மட்டும் அல்ல, பல உயிரினங்கள் அவை வாழும் சூழலில் அதிக அளவில் கார்பனைச் சேகரிக்க உதவுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க இது உதவுகிறது. ஆப்ரிக்கா டன்ஜானியாவில் மாரா (Mara) மற்றும் அருஷா (Arusha) பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ள செரங்கெட்டி (Serengeti) சூழல் மண்டலத்தில் வாழ்ந்த காட்டெருமைகளின் (wildebeest) எண்ணிக்கை நோய்த்தொற்றால் குறைந்தது.whale 397காட்டுத்தீ

புற்கள் கட்டுப்பாடில்லாமல் பெருகி முளைத்தன. அடிக்கடி காட்டுதீ சம்பவங்கள் அதிகமாக இது காரணமானது. திறம்பட்ட நோய் மேலாண்மை மூலம் எருமைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. காட்டுத்தீ சம்பவங்கள் குறைந்தன. ஏற்பட்ட தீ விபத்துகளையும் சுலபமாக கையாள முடிந்தது. கார்பன் உமிழும் இடமாக இருந்த இப்பகுதி இதனால் கார்பனை சேகரிக்கும் இடமாக மாறியது.

இந்த ஆய்வுக்கட்டுரை நேச்சர் (Nature) இதழில் வெளியிடப்பட்டுள்ளது. விலங்குகள் உணவு உண்ணுதல், இடம் பெயர்தல், மிதித்தல், குழி தோண்டுதல், மலம் கழித்தல் மற்றும் வாழிடங்களை அமைத்தல் போன்றவற்றினால் அவை வாழும் சூழல் மண்டலங்கள் திறம்பட கார்பனை சேகரிக்கும் இடங்களாக மாறுகின்றன. 0.3% கார்பனை மட்டுமே உலகின் மொத்த உயிர்ப்பொருளில் (biomass) வனவிலங்குகள் கொண்டுள்ளன என்றாலும் குறிப்பிட்ட சூழல் மண்டலத்தில் இவற்றால் சேகரிக்கப்படும் கார்பனின் அளவு 15% முதல் 200% வரை உள்ளது.

இயற்கையின் வழியில்

காலநிலை மாற்றத்தின் கெடுதிகளை சமாளிக்க இயற்கை வழிகளே உதவும் என்று சமீபகாலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பசுமைக்குடில் வாயுக்கள் உமிழ்வைக் குறைப்பது மட்டும் போதாது. வளிமண்டலத்தில் இருந்து கார்பனை அகற்ற இயற்கையின் அளவில்லாத இந்த ஆற்றலையும் நாம் பயன்படுத்த வேண்டும் என்று லண்டன் விலங்கியல் சங்கத்தின் (Zoological Society of London ZSL) தலைமை செயல் அலுவலர் மாத்யூ குட் (Matthew Gould) கூறுகிறார்.

இந்த ஆய்வுக்கட்டுரை சூழல் சீர்கேடுகளை இயற்கை வழியில் தீர்வு காண்பதை வலியுறுத்துகிறது. மனிதனால் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாத இயற்கை தீர்வை நோக்கி செயல்படுகிறது. கார்பனைக் கைப்பற்றுவதற்கு உதவும் செயல்முறைகளை (Carbon Capture Systems CCS), புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பது முக்கியம் என்றாலும், இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் நிரூபிக்கப்பட்ட பலன் தரும் முறைகளை புறக்கணிக்கக் கூடாது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கு இயற்கையை மதித்து நடக்க நாம் முதலில் கற்க வேண்டும். கார்பன் சேமிப்பிற்கு உதவாத ஒற்றைப்பயிர் முறையைக் கைவிட வேண்டும். வனவிலங்குகளின் வாழிடங்களைத் துண்டாடுவதை நிறுத்த வேண்டும். கார்பன் சேமிப்பிற்கான தீர்வு இயற்கையில் தாவரங்களிடம் உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த கடற்பாசிகள், சதுப்புநிலக் காடுகள், கடற்புற்களை மீட்க வேண்டும்.

பனிக்கண்டத்தில் வனவிலங்குகளின் கூட்டம்

ஆர்க்டிக் பகுதியில் அளவற்ற கார்பன் உறைபனிப் பாறைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு வாழும் விலங்குகளின் கூட்டம் பனி உருவாகாமல் இருக்க, மண் உறைநிலையில் இருக்க உதவுகின்றன. கலைமான், காட்டுக் குதிரைகள், அமெரிக்க துருவப் பகுதியில் வாழும் கஸ்தூரி மணம் உடைய எருது போன்ற விலங்குகள் (musk ox), காட்டெருமைகள் போன்றவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும்.

இயற்கைக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் சூழலைப் பாதுகாக்க அது உதவும். மேம்பட்ட சூழலில் வனவிலங்குகளின் எண்ணிக்கை விரைவாகப் பெருகும். உள்ளூர் மக்கள் ஒத்துழைப்புடன் இதற்கான பணிகள் நடைபெற வேண்டும். இங்கிலாந்தில் செம்பருந்து (red kites), நேபாளம் மற்றும் இந்தியாவில் புலிகள் போன்ற வனவிலங்கு மீட்பின் வெற்றிக்கதைகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த ஆய்வுகள் லண்டன் விலங்கியல் சங்கத்தின் ஆதரவில் நடத்தப்பட்டன. விலங்குகள் இயற்கை வழியில் கார்பனை சேகரிக்க உதவும். மக்களுக்கும் இயற்கைக்கும் இடையில் இருக்கும் உறவைப் புதிப்பிக்க வேண்டும். இதன் மூலம் மனித வனவிலங்கு மோதலை தவிர்க்க முடியும். உள்ளூர் மக்களிடம் இயற்கையுடனான உறவு புதிப்பிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் பலவன் (Palawan) தீவில் மக்களே முன்வந்து எறும்புத்தின்னிகளுக்காக (pangolins) சரணாலயம் ஒண்றை அமைத்து நடத்தி வருகின்றனர்.

வனவிலங்குகள் வாழும் உலகில்

இந்த அணுகுமுறையே இங்கிலாந்து கடலோரப் பகுதியில் அழியும் நிலையில் இருந்த ஏஞ்சல் சுறாக்களை (Angel shark) பாதுகாக்க உதவும் திட்டங்களை செயல்படுத்த மக்களுக்கு உதவியது. வனவிலங்குகள் வாழும் உலகில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க இயற்கை உதவும் என்பதற்கு டன்ஜானியா செரங்கெட்டி சூழல்மண்டலம் சிறந்த எடுத்துக்காட்டு.

மனித குலத்தின் எதிர்காலம் வனவிலங்குகளின் நலவாழ்வுடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் தாவர விலங்குகளே நமக்கு உதவும் இயற்கையின் ஆயுதங்கள். நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள விரும்பினால் இந்த உயிரினங்களை நாம் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/commentisfree/2023/apr/19/elephants-otters-whales-nature-climate-breakdown-carbon-ecosystems?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It