துல்லியமான ஆய்வுகள், விளக்கங்கள் மற்றும் சரியான நடைமுறைப்படுத்துதலின் மூலம் இன அழிவில் இருந்து ஒரு வண்ணத்துப் பூச்சியைக் காப்பாற்றிய கதை இது.

நீல வண்ணத்துப் பூச்சிகள்

இவற்றின் ஒரு இனம் நீல வண்ணத்துப் பூச்சிகள் (Large blues) என்று அழைக்கப்படும் லைக்கனிடே (lycaenidae) குடும்பத்தைச் சேர்ந்த வண்ணத்துப் பூச்சிகள். அளவிலும், வடிவத்திலும் இவை மிகச் சிறியவை. இறக்கைகளை விரிக்கும்போது பொதுவாக பளபளப்பான நீல நிறத்தில் காணப்படும்.

இக்குடும்பத்தில் ஐரோப்பாவில் காணப்படும் ஓர் இனம் பெங்காரிஸ் ஏரியோன் (Phengaris Arion) என்ற இந்த இனம். லைக்கனிடே குடும்பத்தில் மிகப் பெரிய வடிவமைப்பை உடைய வண்ணத்துப் பூச்சி இனம் இதுவே. தும்பைப் பூவின் குடும்பத்தைச் சேர்ந்த டைம் (Thyme) என்ற ஒரு செடியில் இவை முட்டையிடுகின்றன. இதனுடன் மியமிர்கா ஸபுலேட்டி (Myrmica Sabuleti) என்ற ஒரு எறும்பினத்தின் உதவியும் இவை வாழ அவசியமாகிறது.Blue Butterflyஜூலையில் முட்டை பொரிந்து வெலியில் வரும் இதன் புழுக்கள் மூன்று வார காலம் டைம் செடியைத் தின்று வளர்கிறது. இதன் பிறகு அந்த செடியில் இருந்து பிடியை விட்டு கீழே விழும் புழுவின் உடலின் வெளிப்பகுதியில் தேன் போல ஒரு திரவம் ஊறி வருகிறது. இதனால் கவரப்பட்ட எறும்பு பக்கத்தில் வரும்போது காற்றை உட்பக்கமாக இழுத்து பெரிதாகும் புழு பிறகு அதை வெளிவிடுகிறது.

அப்போது ஏற்படும் சத்தம் எறும்பின் ராணி ஆபத்தில் இருக்கும்போது உண்டாகும் சப்தம் போல இருக்கிறது. தேன் துளியைக் குடித்து போதையேறிய எறும்பு புழுவைத் தன் ராணி என்று நினைத்து அதைக் காப்பாற்ற நேராக தன் கூட்டிற்குக் கொண்டு செல்கிறது. கூட்டில் இருக்கும் மற்ற எறும்புகளும் அதைத் தங்கள் ராணி என்று கருதி அதற்கு முழு சுதந்திரம் அளிக்கின்ற்ன. அடுத்த ஆறுமாத காலம் இப்புழு எறும்புகளின் லார்வாக்களையும் முட்டைகளையும் தின்று வளர்கிறது.

கூட்டில் வந்தபோது இருந்ததை விட நூறு மடங்கு பெரிதாகும் புழு இதற்குள் அந்த எறும்பு காலனியை முழுவதும் தின்று முடிக்கிறது. தொடர்ந்து ஓராண்டு காலம் ப்யூப்பாவாகத் தொடர்கிறது. பின்னர் விரிந்து நீல வண்ணத்துப் பூச்சியாக வெளிவருகிறது.

மர்மமான முறையில் மறைந்த பூச்சியினம்

1979ல் பிரிட்டனில் இந்த வண்ணத்துப் பூச்சி முற்றிலும் அழிந்தது. 1900 முதல் இவற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க தீவிர ஆய்வுகள் நடந்தன. எறும்புடன் இருக்கும் சொந்தமே இவற்றின் வாழ்வாதாரத்திற்கு மிக முக்கியம் என்று தெரிய வந்தது. மேய்ச்சல் நிலங்கள், பிராந்திய தாவரங்களில் மாற்றங்கள் ஏற்படும்போது அங்கு இந்த எறும்பிற்குப் பதில் மற்ற எறும்புகள் குடியேறத் தொடங்கின. இதனால் இவற்றின் வாழ்வு கேள்விக்குறியானது.

1930-1969 காலத்தில் இந்த உயிரினத்தை அழிவில் இருந்து மீட்க ஒன்பது இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. என்றாலும் இவற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருந்தது. 1972ல் வெறும் 325 ஆக இவற்றின் எண்ணிக்கை சுருங்கியது. தொடர்ந்து வந்த ஏழாண்டுகளில் இவை பிரிட்டனில் இருந்தே முற்றிலும் அழிந்து போயின.

பதினெட்டு காரணங்கள்

இந்த அழிவு தொடங்குவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட ஆய்வுகளில் இவற்றின் எண்ணிக்கை குறைவதற்கு 18 காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முட்டையிடும் இடங்கள், புழுவின் அளவு போன்றவை இதில் அடங்கும். இத்தரவுகளைப் பயன்படுத்தி இவற்றின் எண்ணிக்கை குறைவிற்கான காரணங்களைப் பற்றி அறிய ஒரு கணித மாதிரி உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படையில் எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதில் இருந்து வண்ணத்துப் பூச்சியின் வாழ்விற்கு எறும்புகளின் முக்கியத்துவம் உணரப்பட்டது. எறும்புகளுடன் தொடர்புடைய செயல்கள் மட்டுமே இவற்றின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது என்று கண்டறியப்பட்டது. எறும்புகள் கொண்டு செல்லும் புழுக்கள் பருவமடைந்து வண்ணத்துப்பூச்சிகளாக மாறுவதற்கு உள்ள சாத்தியக்கூறு ஐந்து மடங்கு அதிகரித்தது. டைம் செடிகள் இருக்கும் இடங்களில் இந்த எறும்புகள் வாழ வேண்டியது இன்றியமையாததாக இருந்தது.

செடிகள் இருக்கும் இடங்களில் எறும்புகளும், எறும்புகள் உள்ள இடங்களில் செடிகளும் இல்லாமல் இருந்த காலத்தில் இந்த வண்ணத்துப்பூச்சிகள் பிரிட்டனில் இருந்து காணாமல் போயின. இச்செடிகளைச் சுற்றியுள்ள செடிகளும் எறும்புகளின் வாழ்க்கையைப் பாதித்தது. சுற்றியுள்ள புற்செடிகள் 1.4 சென்டிமீட்டருக்கும் மேல் உயரமாக வளர்ந்தால் பெருக்கமடையும் புற்கள் அதைச் சுற்றி வாழும் எறும்புகளின் புற்றுகள் இருக்கும் நிலப்பகுதியின் வெப்பநிலையைக் குறைக்கிறது.

அப்போது குறைவான வெப்பநிலையில் மட்டுமே வாழும் மற்ற சில எறும்பு இனங்கள் அந்த நிலப்பகுதியைக் கைப்பற்றுகின்றன. இதனால் எறும்புகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைகிறது. 1970களில் இதுவே பிரிட்டனில் நிகழ்ந்தது. இதனுடன் சேர்ந்து 1950களில் எதிர்பாராமல் ஐரோப்பாவில் மைசோமெட்டோசிஸ் என்ற தொற்றுநோய் பரவியது. எறும்புகள் வாழ்ந்து வந்த மலைச்சரிவுகளில் இந்நோய் புற்களை உணவாக உட்கொள்ளும் முயல்களை பெருமளவில் கொன்றது.

முயல்கள் இறந்ததால் சிக்கலான ஒரு தொடர்வினை ஏற்பட்டது. உண்பதற்கு முயல்கள் இல்லாமல் போனதால் புல்வெளிப் பரப்புகள் அதிகமானது. அங்கு இருந்த மண்ணின் வெப்பநிலை குறைந்தது. எறும்புகள் மறைந்தன. வண்ணத்துப் பூச்சிகளின் லார்வாக்கள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டன. காலநிலை மோசமானது. விளைவாக நீல வண்ணத்துப் பூச்சிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. 1974ல் நீண்ட மழைக்காலத்தில் முட்டையிடத் தேவையான நாட்கள் குறைந்தன. 1975ல் ஏற்பட்ட நீண்ட வறட்சி நிலைமையை மேலும் மோசமாக்கியது.

எண்ணிக்கைக் குறைந்து 1979 ஆனபோது பிரிட்டனில் இந்த பெரிய நீல வண்ணத்துப் பூச்சியினமே இல்லாமல் அழிந்து போனது. துல்லியமான கணிப்புகள், கணித மாதிரி மற்றும் சரியான தரவுகளின் ஆய்வு ஆகியவற்றின் உதவியுடன் இது கண்டுபிடிக்கப்பட்டது. பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதற்கு அப்போது பல காரணங்கள் சொல்லப்பட்டன.

வலைகளைப் பயன்படுத்தி பூச்சிகளைச் சேகரிப்பவர்கள் சந்தேகக் கண்களுடன் பார்க்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களைத் தடுக்க மைதானங்களைச் சுற்றிலும் வேலிகள் எழுப்பப்பட்டன. உண்மையில் இது புல் மேய வந்த விலங்குகளை உள்ளே நுழைய விடாமல் தடுத்தது. புற்கள் வளர்ந்து பெருகி பிரச்சனையை மேலும் சிக்கலாக்கியது. தவறான கணிப்புகள் எவ்வாறு பிரச்சனைகளை மேலும் மோசமாக்கும் என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக்காட்டு.

பாதுகாப்புத் திட்டம்

ஆய்வுகளில் இருந்து கிடைக்கப் பெற்ற அறிவு, தரவுகளின் உதவியுடன் நீல வண்ணத்துப் பூச்சி பாதுகாப்புத் திட்டம் (Project Large blue butterfly) தொடங்கப்பட்டது. டைம் செடிகள் வளரும் 52 இடங்கள் முன்பிருந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டன. அங்கு எறும்புகள் வாழ்வதற்குரிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வெகுவிரைவில் எறும்புகள் அவற்றின் வாழிடத்திற்குத் திரும்பி வந்தன. 1973-74ல் எறும்புகளே இல்லாத இடங்களில் ஒரு சில ஆண்டுகளில் அவை சூப்பர் காலனிகளாக பெருக்கமடைந்தன.

பூச்சிகளை திரும்பி கொண்டு வருவதற்குரிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது. இந்த இடங்களுக்கு 1983ல் ஸ்வீடனில் இருந்து எறும்புகள் கொண்டு வரப்பட்டன. 2008ல் முப்பதிற்கும் மேற்பட்ட இடங்கள் வண்ணத்துப் பூச்சிகளால் நிறைந்தது. 2009ல் மிகப் பெரிய காலனிகளில் ஐயாயிரத்திற்கும் கூடுதலான வண்ணத்துப் பூச்சிகள் வாழத் தொடங்கின. இது அதற்கு முன்பு உலகம் முழுவதும் இருந்த இந்த பூச்சிகளின் என்ணிக்கையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகம்.

மற்ற ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனின் பாதையை பின்பற்றத் தொடங்கின. பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. பன்னாட்டு இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) இன அழிவைச் சந்திக்கும் உயிரினங்களின் பட்டியலில் இருந்து இந்த வண்ணத்துப் பூச்சியினம் குறைவான ஆபத்தை சந்திக்கும் உயிரினங்களின் பட்டியலிற்கு மாற்றப்பட்டது. இதே முறையைப் பின்பற்றி இன அழிவைச் சந்திக்கும் மற்ற வண்ணத்துப் பூச்சி இனங்களை அழியும் நிலையில் இருந்து மீட்கும் முயற்சிகள் தொடங்கின.

சரியான தரவுகளின் சேகரிப்பும் விளக்கங்களும் சரியான முறையில் நடைமுறைப் படுத்தப்பட்டால் சூழல் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பதற்கு மீண்டு வந்த இந்த வண்ணத்துப் பூச்சியினம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

மேற்கோள்https://www.mathrubhumi.com/environment/columns/extinction-story-of-large-blue-butterflies-and-their-comeback-eco-story-1.8488024

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It