நாட்டின் பெயரைக் கொண்டுள்ள கானமயில் (Great Indian Bustard) என்ற இந்தப் அரிய வகைப் பறவை இந்தியாவில் இப்போது வெறும் 150 மட்டுமே உள்ளன. 1994ல் சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) இன அழிவை சந்திக்கும் உயிரினங்களின் பட்டியலில் இவை சேர்க்கப்பட்டன. மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முன்பு இவை வாழ்ந்து வந்தன. இன்று இரண்டு மாநிலங்களில் மட்டுமே இவை அதிகம் காணப்படுகின்றன என்று கருதப்படுகிறது.

இவற்றின் எண்ணிக்கை குறைய பல காரணங்கள் உள்ளன. மின்சாரக் கம்பிகளில் மோதி ஏற்படும் மரணங்களே அதிகம் நடந்துள்ளன. வேட்டைக்காரர்களை அடையாளம் காண இவற்றிற்கு பக்கவாட்டில் மட்டுமே அதிக பார்வைத் திறன் உள்ளது. இதனால் வேட்டை விலங்குகளையும், முன்னால் இருக்கும் மின்சாரக் கம்பிகளையும் இவை துல்லியமாகக் காண முடிவதில்லை.

இதுதவிர மற்ற தடைகள் மீது மோதி ஏற்படும் மரணங்களும் நிகழ்கின்றன. இந்திய வன உயிரி அறக்கட்டளை (Wildlife Trust of India WTI) 2017- 2020 காலத்தில் தார் பிரதேசத்தில் இவ்வாறு நடந்த 6 மரணங்களைப் பற்றி செய்தி வெளியிட்டது.Great Indian Bustardபுலிகள் பாதுகாப்பு திட்டம் போல ஒன்று

இவற்றின் பாதுகாப்பிற்காக உச்ச நீதிமன்றத்தின் தலையீடுகள் பல முறை ஏற்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மின்கம்பிகள் மீது மோதுவதால் ஏற்படும் மரணங்களைக் குறைக்க பூமிக்கடியில் கம்பிகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. புலிகள் பாதுகாப்பிற்காக புலி பாதுகாப்புத் திட்டம் (Project tiger) நடைமுறைப்படுத்தப் பட்டது போல இவற்றைப் பாதுகாக்கவும் ஒரு திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்தும் எழுந்தது. இதன் பலனாக 2012ல் கானமயில் பாதுகாப்புத் திட்டம் (Project Bustard) என்ற பெயரில் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது.

இப்போது இவை 1972 வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் இவற்றை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி இவற்றின் வாழிடங்களை தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களாக அறிவிக்கும் திட்டம் உள்ளது. ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் வனத்துறை மற்றும் இந்திய வன உயிரி அறக்கட்டளையின் உதவியுடன் இவற்றிற்காக சிறப்பு இனப்பெருக்க மையங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் மாநிலப் பறவை

இது ராஜஸ்தானின் மாநிலப் பறவை. உலகில் இப்போது உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ள 200 பறவைகளில் 96 சதவிகிதமும் இம்மாநிலத்திலேயே வாழ்கின்றன. நாட்டில் உள்ள 150 கானமயில்களில் 126 பறவைகளின் வாழிடம் இந்த மாநிலமே. 1960களில் 1260 பறவைகள் இருந்தன. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு இடையில் இந்த எண்ணிக்கையில் 75% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. முன்பு இந்தியாவில் 11 மாநிலங்களில் இவை வாழ்ந்து வந்தன.

என்றாலும் இன்று இவை ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் மட்டுமே அதிகம் காணப்படுகின்றன. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இவை சிறிய எண்ணிக்கையில் காணப்படுகின்றன. பறவைகள் இனத்தைச் சேர்ந்தவை என்றாலும் பறப்பதில் இவை நிபுணர்கள் இல்லை. 15 கிலோ வரை வளரும் இயல்புடையவை. உடல் எடை கூடுதலாக உள்ள, அதிகம் பறக்க இயலாத பறவைகளில் முதலிடத்தில் உள்ளன.

ஆணும் பெண்ணும்

பொதுவாக இவற்றின் நீளம் நான்கு அடி. பெண்களை விட ஆண் பறவைகளே அதிக எடையுடையவை. இறக்கைகளின் நிறத்தை வைத்து ஆண், பெண் பறவைகள் அடையாளம் காணப்படுகின்றன. பெண் பறவைகளில் கறுப்பு நிற க்ரீடம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. பிராந்திய மொழியில் இவை கோடாவன் என்று அழைக்கப்படுகின்றன.

1972ல் வேட்டையாடப்படுவது தடை செய்யப்படுவதற்கு முன்பு வரை இவை பெரும் எண்ணிக்கையில் வேட்டையாடியே அழிக்கப்பட்டன. 1980ல் இவற்றின் எண்ணிக்கை 1000. 150 என்ற மோசமான நிலைக்கு இப்போது இவற்றின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. மின்சாரக் கம்பிகள் இடித்து ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 18 பறவைகள் உயிரிழப்பதாக இந்திய வன உயிரி அறக்கட்டளை கூறுகிறது.

உடல் எடை 15 கிலோ என்பதால் மின்சாரக் கம்பிகள் குறுக்கிடும்போது உடனடியாக இவற்றால் தங்கள் வழியை மாற்றிக் கொள்ள இயல்வதில்லை. இது இவற்றின் இறப்பு விகிதம் அதிகரிக்க ஒரு முக்கிய காரணம். முன்னால் உள்ளதைப் பார்க்கும் திறனும் இவற்றிற்குக் குறைவு என்பதால் உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துகள் அதிகரிக்கின்றன. இந்திய அரசின் 2009 மீட்பு மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது.

கூட்டில் அடைத்து வைத்து இனப்பெருக்கம்

ராஜஸ்தானில் ஜைசல்மீரில் கூட்டில் அடைத்து வைத்து இனப்பெருக்கம் செய்யும் திட்டம் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது. இங்கு இதற்காக வனப்பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 25 குஞ்சுகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. வரும் மூன்று ஆண்டுகளில் இவை இனப்பெருக்கம் செய்யும் பருவத்தை அடையும். அப்போது இவை காடுகளில் கொண்டு சென்று சுதந்திரமாக விடப்படும். மறுவாழ்வு வசதிகள் செய்யப்படும்.

என்றாலும் இதனுடன் தொடர்புடைய 50% செயல்பாடுகள் மட்டுமே உரிய முறையில் நடந்தன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இவை அணைத்துண்ணிகள் (omnivores). கிடைப்பதை உண்ணும் இயல்புடையவை. சிறிய பிராணிகள், ஊர்வன, புழுக்கள் போன்றவை இவற்றின் முக்கிய உணவு.

இவற்றின் இனப்பெருக்கம் மழைக்காலத்தில் நடக்கிறது. வித்துகள், நிலக்கடலை போன்றவை குளிர் மற்றும் வறட்சி அதிகமுள்ள காலங்களில் இவற்றின் முக்கிய உணவு. வயது வந்த பறவைகளுக்கு பருந்துகள், எகிப்திய வல்லூறுகள் போன்றவை முக்கிய எதிரிகள். சாம்பல் நிற செந்நாய்கள் இவற்றை வேட்டையாடுவது உண்டு. பசுக்கள் மேயும்போது இவற்றின் முட்டைகள் மிதிபடுவதால் அவை அழிந்து போவதும் உண்டு.

ஆண்டுதோறும் புதிய கூடுகள்

மார்ச் முதல் செப்டம்பர் வரை இனப்பெருக்க காலம். இனப்பெருக்கத்தைப் பற்றிய விவரங்கள் ஆராயப்பட்டுள்ளன என்றாலும் இவை கூடு கட்டுவது மற்றும் இவற்றின் இணை சேரும் சுபாவம் பற்றி இன்னும் அதிகம் ஆராயப்படவில்லை. ஒருமுறை இனப்பெருக்கத்திற்காக கட்டிய கூடுகளை இவை மறுபடியும் பயன்படுத்துவது இல்லை. ஆண்டுதோறும் புதிய கூடுகளைக் கட்டுகின்றன.

முந்தைய ஆண்டுகளில் மற்ற கானமயில்கள் கட்டிய கூடுகளை இவை சில சமயங்களில் பயன்படுத்துவதுண்டு. மண்ணில் சிறிய குழிகளைத் தோண்டி கூடு கட்டுகின்றன. ஆண் மற்றும் பெண் பறவைகள் ஒன்றிற்கு மேற்பட்ட பறவைகளுடன் இணை சேர்கின்றன. ஆண் பறவைகள் மற்ற பெண் பறவைகளுடன் அதிகமாக இணை சேர்கின்றன. பெண் பறவைகள் ஒரு பிரசவத்தில் ஒரு முட்டையை இடுகிறது. ஒரு மாத காலம் அடை காக்கும் பருவம்.

ஆண் பறவைகள் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் இனப்பெருக்க வயதை அடைகின்றன. பெண் பறவைகள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் இனப்பெருக்க பருவத்தை அடைகின்றன. இவற்றின் சராசரி ஆயுட்காலம் 12 முதல் 15 ஆண்டுகள். இறக்கைகளின் அளவு 210 முதல் 215 செண்டிமீட்டர்.

கானமயில் பாதுகாப்புத் திட்டம்

இணை சேரும் காலத்தைத் தவிர மற்ற சமயங்களில் இவை வலசை செல்லும் இயல்புடையவை. எண்ணிக்கையில் பெரும் குறைவு ஏற்பட்டதால் 2011ல் இவை அழியும் ஆபத்தில் இருக்கும் உயிரினமாக அறிவிக்கப்பட்டன. வாழிட அழிவு இவை சந்திக்கும் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சனை. 2012ல் இந்திய அரசு இவற்றின் பாதுகாப்பிற்காக கானமயில் பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தது. என்றாலும் இத்திட்டத்தில் அதிக முன்னேற்றம் ஏற்படவில்லை. இனி வரும் காலத்திலேனும் இந்த உயிரினங்கள் அழிவின் ஆபத்தில் இருந்து காப்பாற்றப்படுமா?

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/features/all-you-need-to-know-about-great-indian-bustards-1.8433984

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It