அழுத்தத்தை அனுபவிக்கும்போது தாவரங்கள் அல்ட்ராசானிக் ஒலிகளை எழுப்புகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தாகத்தால் வாடும் அல்லது பழுதடைந்த செடிகள் இசைக்குழுவில் ஒரு இசைக்குறிப்பு பாடப்பட்டபின் விடப்படும் நிசப்தமான இடைவெளியைப் போல ஒரு மணி நேரத்தில் ஐம்பது பாப் சத்தங்களை எழுப்புகின்றன. இவற்றை அருகில் இருக்கும் உயிரினங்கள் கேட்டு பதில்வினை புரிகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு தாவரத்தின் வாழ்க்கையில் அதன் தலை தாழும் நிலை வரும். இலைகள் பழுப்பு நிறமடையும் கட்டம் ஏற்படுகிறது. அப்போது, சரமாரியாக குமிழ்கள் உருவாகி ஏற்படுத்தும் சத்தத்தைப் போன்ற அல்ட்ரா சானிக் ஓசைகளை அவை எழுப்புகின்றன. அல்ட்ராசானிக் ஒலி என்பது மிக அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அலை வடிவத்தைக் குறிக்கிறது. தோட்டங்களில் வளர்க்கப்படும் செடிகளுக்கு நீர்ப் பற்றாக்குறை அல்லது உடலில் காயம் ஏற்பட்டால் அவை இத்தகைய ஓசைகளை எழுப்புகின்றன.

தாவரங்களின் உலகம் நிசப்தமானது இல்லை

இந்த கண்டுபிடிப்பு பிரமிப்பை ஏற்படுத்துகிறது, சிந்திக்கத் தூண்டுகிறது. நாம் காண்பது போல தாவரங்களின் உலகம் நிசப்தமானது இல்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த சத்தங்கள் அவை வாழும் சூழல் மண்டலத்தை வடிவமைப்பதில் அவற்றுக்கு உதவுகின்றன. தாவரங்கள் நல்ல நிலையில் இருக்கும்போது அவை ஒரு மணி நேரத்தில் ஒரே ஒரு ஓசையை மட்டுமே எழுப்புகின்றன.forest 700ஆனால் அதே தாவரம் அழுத்தத்திற்கு உள்ளாகும்போது ஒரு மணி நேரத்தில் முப்பது முதல் ஐம்பது அல்ட்ராசானிக் ஒலிகளை எழுப்புகிறது என்று டெல் அவிவ் பல்கலைக்கழக பரிணாம உயிரியலாளர் மற்றும் உயிரியல் கோட்பாட்டாளர் பேராசிரியர் லீலாச் ஹேடனி (Prof Lilach Hadany) கூறுகிறார். இந்த ஓசைகளைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் திறனை மற்ற உயிரினங்கள் பெற்றிருக்கலாம் என்பதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன.

உருளைக்கிழங்கு செடியும் புகையிலைச்செடியும்

இந்த ஒலிகளுக்கு எல்லாவகை தாவர விலங்குகளும் பதில்வினை புரிகின்றனவா என்பது பற்றி ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த ஆய்வுகள் பசுமைக்குடிலில் வளர்க்கப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் புகையிலைச் செடிகளில் நடத்தப்பட்டது. நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் தாவரங்கள் க்ளிக் மற்றும் பாப் சத்தங்களை விரைவாக வெளியிடுகின்றன.

ஆனால் அவற்றிற்கு நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டால் அல்லது அவற்றின் தண்டுகள் வெட்டப்பட்டால் இந்த ஒலிகள் மூன்று முதல் ஐந்து மீட்டர் தொலைவில்கூட பதிவு செய்யக்கூடியதாக இருந்தது. இவை 40 முதல் 80 கிலோஹர்ட்ட்ஸ் அளவு அதிர்வெண்ணுடன் வெளியிடப்படுகின்றன. மனிதக் காதுகளால் 20 கிலோஹர்ட்ஸ் அளவு வரை உள்ள ஒலி அலைகளை மட்டுமே கேட்க முடியும். இதனால் தாவரங்கள் எழுப்பும் ஒலியை நம்மால் கேட்க முடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உரத்த குரலில் பேசும் தாவரங்கள்

என்றாலும் விட்டில் பூச்சிகள், சுண்டெலி போன்ற சில உயிரினங்கள் இந்த உயர் அதிர்வெண் ஒலியைக் கேட்கும் ஆற்றல் பெற்றவையாக உள்ளன. இது அவற்றின் நடத்தையில் தாக்கம் செலுத்தலாம் என்று நம்பப்படுகிறது. செல் (Cell) என்ற ஆய்விதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கட்டுரையில் தாவரங்கள் மனிதர்களின் பேச்சைப் போலவே எவ்வாறு உரத்த ஒலியை எழுப்புகின்றன என்பது பற்றி ஆய்வாளர்கள் விவரித்துள்ளனர்.

இரண்டு நாட்கள் நீர் இல்லாமல் போனால் இவை அடிக்கடி ஒலி எழுப்புகின்றன. ஐந்து அல்லது ஆறாவது நாளில் தாவரங்கள் வாடத் தொடங்கும்போது இந்த பாப் சத்தங்கள் மெல்ல மெல்ல குறைந்து விடுகின்றன. ஒலிப்பதிவிற்காக விஞ்ஞானிகள் ஒரு செயற்கை நுண்ணறிவு படிமுறைத்தீர்வுக் கருவியை உருவாக்கினர். இதன் உதவியுடன் தாவரங்கள் எழுப்பும் ஒலியை வைத்து அதன் அழுத்தத்திற்கான காரணத்தை ஆராய்ந்தனர்.

மற்ற உயிரினங்களுக்கு உதவும் பாப் ஒலிகள்

இது 100% துல்லியமானதாக இல்லை என்றாலும் இந்த பாப் ஒலிகளில் அடங்கியிருக்கும் தகவல்கள் அதே சூழல் மண்டலத்தில் வாழும் உயிரினங்களுக்கு உதவுகின்றன. இந்த ஒலிகள் தகவல் பரிமாற்றத்திற்காக எழுப்பப்படுவது பற்றி இன்னும் உறுதியாக எதுவும் தெரியவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது நெருப்பில் எரியும் ஒரு மரக்கட்டை வெளிப்படுத்தும் ஓசைகளைப் போன்றவையே என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

எந்த தாவரத்தை விலங்குகள் உண்கின்றன, எந்த பறவை எந்த தாவரத்தின் இலையில் முட்டையிடுகிறது போன்ற விவரங்களை மற்ற உயிரினங்கள் அறிய இந்த சத்தங்கள் உதவுகின்றன என்று ஹேடனி கூறுகிறார். இந்த ஒலிகள் எழுப்பப்படுவதற்கான சரியான காரணம் பற்றி இன்னும் தெரியவில்லை. ஆனால் நீரிழப்பு ஏற்பட்டு தண்டுகள் செயலிழக்க நேரும் குழிவுறுதல் (cavitation) என்ற நிகழ்வின்போது உருவாகும் காற்றுக்குமிழ்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வுக்குழுவினர் கருதுகின்றனர்.

இந்த சத்தங்களை வேறெந்த உயிரினம் கேட்கிறதோ இல்லையோ இந்த கண்டுபிடிப்பு வேளாண்மை மற்றும் தோட்ட வளர்ச்சியில் மற்ற உணரிகளுடன் மைக்ரோ போன்களைப் பொருத்தி தாவரங்களுக்கு நீர்ப்பற்றாக்குறை எப்போது ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து அதன் மூலம் நீர்ப்பாசனத்தை மேம்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

நீருக்காக குரல் கொடுக்கும் தாவரங்கள்

அழுத்தம் ஏற்படும்போது தாவரங்கள் குரல் கொடுக்கின்றன என்பது மகத்தானது. நினைத்துப் பார்க்க முடியாதது என்று பிரிஸ்ட்டல் (Bristol) பல்கலைக்கழகத்தின் உணரி உயிரியல் துறைப் பேராசிரியர் மார்க் ஹோல்டரிட் (Prof Marc Holderied) கூறுகிறார். இந்த ஒலிகள் தகவல் பரிமாற்றத்திற்காக உருவாக்கப்பட்டவையாக இல்லாமல் தாவரங்களில் ஏற்படும் உடலியக்கச் செயல்களின்போது உருவாகும் ஒலிகளாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

தாவரங்களுக்கும் காதுகள் உண்டா?

இந்த ஒலிகளை மற்ற உயிரினங்கள் கேட்பதை எதுவும் தடுக்க இயலாது. தாவரங்களுக்கு காதுகள் உள்ளன என்று இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அவை இயக்கவியல்ரீதியாக ஏற்படும் பல தூண்டல்களுக்கு பதிலளிக்கின்றன. அதனால் இத்தகையவற்றில் அல்ட்ரா ஒலியைக் கண்டுபிடிக்கும் கருவிகளைப் பொருத்தி இது பற்றி இன்னும் தீவிரமாக ஆராய வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

வறட்சியைத் தாங்கும் திறன்

அதிக சத்தத்தை பல மணி நேரம் ஏற்படுத்தும்போது வறட்சியைத் தாங்கி வளரும் திறனை தாவரங்கள் பெறுகின்றன என்று பார்சலோனா வேளாண் மரபணுவியல் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் கார்லோஸ் விஷன்ட் (Carlos Vicient) 2017ல் நடத்திய ஆய்வின் முடிவில் கண்டுபிடித்தார். ஆனால் அவை இயற்கையில் சத்தம் அதிகமாக இருக்கும் சூழலில் மெதுவாக எழுப்பப்படும் ஓசைகளுக்கு பதில்வினை புரிவதில்லை என்று அறியப்பட்டது. இத்தகைய ஒலிகள் தாவரங்களில் இருக்கும் ஆவியாகும் தன்மையுடைய பொருட்களால் ஏற்படலாம் என்று அவர் கருதுகிறார்.

இந்த ஒலிகள் தங்கள் கூட்டாளிகளுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள உருவாக்கப்படவில்லை என்று நம்பப்படுகிறது. என்றாலும் இது பற்றிய தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்போது இதுவரை நாம் அறியாத தாவர உலகில் நிகழும் பல நிசப்த வாழ்வியல் செயல்களுக்கு நம்மால் விடை காண முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மேற்கோள்கள்:

https://www.washingtonpost.com/nation/2023/04/04/plants-make-noises-sounds-ultrasonic/

&

https://www.wsaz.com/2023/03/30/plants-make-sounds-similar-bubble-wrap-popping-study-says/

&

https://www.nature.com/articles/d41586-023-00890-9

&

https://newatlas.com/science/stressed-plants-noises/

&

https://www.theguardian.com/environment/2023/mar/30/plants-emit-ultrasonic-sounds-in-rapid-bursts-when-stressed-scientists-say?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It