அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
வற்றாத வளம்கொண்ட கடலின் பெருமை அதை நம்பி வாழும் மீனவர்களுக்கு நன்றாகத் தெரியும். ‘கடல் அம்மா’ என்றுதான் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை அழைக்கிறார்கள். கடல் மீனவர்களுக்கு மட்டுமே வாழ்வாதாரம் இல்லை. மனிதகுலத்தின் வாழ்வாதாரமே கடல்தான் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவருகிறது. புவிக்கோளத்தின் முக்கால் பரப்பை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் கடல்தான் நம்முடைய வானிலையைத் தீர்மானிக்கிறது. மனிதர்களின் செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்சைடின் கால்பகுதியை கடல்நீர்தான் உறிஞ்சிக்கொள்கிறது. இதனால் புவி வெப்பமடைவது தடுக்கப்படுகிறது.
ஆனால் மனித வாழ்க்கையில் இப்போது தொழிலகங்கள் பெருகிவிட்டன. கார்பன் டை ஆக்சைடின் அளவு காற்றில் அதிகரித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்த கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கடல்நீரின் CO2 உறிஞ்சு திறன் குறைந்துபோயிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘Nature’ தன்னுடைய நவம்பர் 19 ஆம் தேதியிட்ட இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு 2.3 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடை கடல் உறிஞ்சிக்கொண்டது. ஆனால் 2000ம் ஆண்டில் இருந்த கடல் நீரின் CO2 உறிஞ்சு திறன் 10 சதவீதம் குறைந்துபோயிருப்பதாக ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். இந்தக்கணிப்பு முன்னரே செய்யப்பட்டிருந்தாலும், இதுபற்றிய அளவீடுகளும் புள்ளிவிவரங்களும் இப்போதுதான் சேகரிக்கப்பட்டுள்ளன.
“காற்றில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கும்போது கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. இதனால் கடல் நீரின் கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சு திறன் குறைகிறது” என்கிறார் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானி சாமர் காட்டிவாலா என்பவர். வளிமண்டலத்தில் தொழிலக கார்பனின் அளவை 1765 ஆம் ஆண்டு முதல் 2008 வரை காட்டிவாலா குழுவினர் ஆய்வு செய்தனர். 1950 ஆம் ஆண்டுவரை எல்லாம் சீராக இருந்தன. ஆனால் 2000 ம் ஆண்டில் கடல் நீரின் CO2 உறிஞ்சுதிறன் கணிசமாக குறையத் தொடங்கியிருந்தது. 1990ம் ஆண்டைக் காட்டிலும் இன்று நாம் கடல்நீரின் மீது 150 பில்லியன் டன்கள் கூடுதலான CO2 வை திணிக்கிறோம்.
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/11/091118143211.htm
தகவல்: மு.குருமூர்த்தி (
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
புவிக்கோளம் வெப்பமடைவதைத் தடுத்து நிறுத்தும் ஒரு முயற்சி CCS என்றழைக்கப்படும் CARBON CAPTURE AND STORAGE தொழில்நுட்பம் ஆகும். எண்ணெய், கரி போன்ற படிம எரிபொருட்களை அதிக அளவில் எரிக்கும் தொழிலகங்களில் இருந்து வெளிப்படும் புவியின் வெப்பநிலை உயர்விற்கு காரணமான கார்பன் டை ஆக்சைடு வாயுவை சிறைபிடித்து, புவிக்கு அடியில் சேகரித்து வைக்கப்படும் தொழில் நுட்பமே CCS எனப்படும். உலகின் பல பகுதிகளில் CCS தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தொழிலகங்கள் உள்ளன. CCS முறை முற்றிலும் பாதுகாப்பானது அல்ல. சிறைபிடித்த கார்பன் டை ஆக்சைடை கடல் நீருக்கடியில் சேமித்துவைப்பதால் கடல் நீரின் அமிலத்தன்மை கூடிப்போக வாய்ப்புண்டு.. நிலத்திற்கடியில் சேமித்து வைத்தால் வாயுக்கசிவினால் அது மீண்டும் வளிமண்டலத்தில் கலந்துவிட வாய்ப்பு உண்டு.
நாகரிகவாழ்க்கை என்னும் பெயரில் அளவிற்கு அதிகமான படிம எரிபொருட்களை பயன்படுத்திவரும் மனிதனின் இன்றைய நிலை பரிதாபகரமானது. கடப்பாரையை விழுங்கிய மனிதன் அதனை செரிக்கவைக்க சுக்கு கஷாயம் குடித்த கதைதான் இந்த முயற்சியெல்லாம். இருந்தாலும் அறிவியல் உலகம் சும்மா இருப்பதில்லை. வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு வாயுவை சிறைபிடித்து அடைத்துவைப்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அண்மையில் வெளியாகி உள்ள ஒரு ஆய்வு அறிக்கையில் நுண்ணியிரிகளைக் கொண்டு கார்பன் டை ஆக்சைடு வாயுவை சிறைபிடிக்க இயலும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வகத்தில் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு தற்செயலாக நிகழ்ந்துள்ளது.
இதுபோன்ற சிக்கல்களை தீர்த்துவைக்க எப்போதும்போல் நமக்கு நுண்ணியிரிகளே துணை நிற்கின்றன. மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த J.A. டோஸல் என்னும் விஞ்ஞானியின் அறிக்கை இந்த நல்ல செய்தியை அறிவித்துள்ளது. மரபணு பொறியியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நுண்ணியிரிகளைக் கொண்டு கார்பன் டை ஆக்சைடை கைப்பற்றும் பொருட்களை உருவாக்கமுடியும் என்கிறார் டோஸல்.
இந்த மூலக்கூறின் வடிவத்தை இவர் கணினியின் உதவியால் மாற்றியமைத்து ஆராய்ந்துள்ளார். இவருடைய ஆய்வின் பலனாக இந்த மூலக்கூறுகள் தொழிலகங்களில் கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சிகளாக பயன்படும் நாள் தொலைவில் இல்லை. இந்த ஆய்வின் மூலம் நுண்ணியிரின் செல்சவ்வுகளுக்குள் வளிமண்டல கார்பன் டை ஆக்சைடை சேமிக்கும் வழி கண்டறியப்பட்டுள்ளது.
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/07/090715101441.htm
தகவல்: மு.குருமூர்த்தி (
- விவரங்கள்
- க.மணி
- பிரிவு: சுற்றுச்சூழல்

மில்லியன் கணக்கில் மனிதர்கள் வாழும் நகரங்களில் ஏற்படும் சுற்றுச்சுழல் சீர்கேட்டின் அளவை சொல்லி முடியாது. எத்தனை கார்கள், எவ்வளவு மின்சாரம், எத்தனை கழிவுகள்...?
எல்லாருடைய வீட்டின் கூரைகளையும் பசுமையாக்கினால் ஆண்டுக்கு 55000 டன் கரியமில புகையை காற்றிலிருந்து பிடித்து நீக்கலாம் என்று மிச்சிகன் ஸ்டேட் பல்கலை ஆசிரியர் தெரிவிக்கிறார்.
வீட்டுக் கூரையில் புல்தரை விரிப்பது, செடிகளை வளர்த்தால் அது அழகுக்கு அழகையும், பில்டிங்கை குளிர்ச்சியாகவும் வைக்கும். இதனால் குளிர்சாதனங்களின் மின்சாரம் சேமிப்பாகும். மழை நீர் வீணாகமல் பயன் அடையும். காய்கறிகளை வளர்த்தால் பணம் மிச்சமாகும். மருந்தடிக்காத காய்கறியும் கிடைக்கும். ஒரு வேளை மழை அதிகம் கிடைத்தாலும் கிடைக்கும். செய்தால் என்ன?
- முனைவர் க.மணி
- விவரங்கள்
- மருத்துவர் அ.உமர் பாரூக்
- பிரிவு: சுற்றுச்சூழல்
கனடாவில் சட்பரி, அமெரிக்காவில் சௌடன் சுரங்கம், ஜப்பானில் மி-ஓகா, இத்தாலியில் கரேன் சாஜோ மலை, இந்தியாவில் கோலார் பகுதியைத் தொடர்ந்து நியூட்ரினோ ஆய்வகத்திற்கான தேடுதல் வேட்டை தமிழகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நியூட்ரினோ என்பது சூரியன் மட்டுமல்லாது விண்மீன்களிலிருந்தும் வெளிப்படும் அணுத்துகள்களாகும். கனமற்ற இத்துகள்கள் விண்வெளியிலிருந்து கீழிறங்குகின்றன. பல கோடி நியூட்ரினோக்கள் பாய்ந்த வண்ணம் இருந்தாலும் அவற்றை ஈர்த்து, ஆய்வு செய்வது கடினம். இந்த அணுத்துகளைப் பிடித்து அதனை ஆய்வு செய்தால் சூரியன் குறித்த ரகசியங்களையும், விண்வெளியின் ஆற்றல் பற்றியும் பூமியின் பிறப்பு குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் நியூட்ரினோ ஆய்வு முயற்சி 1930களில் இருந்து தொடங்கியது. நியூட்ரினோ துகள்களை ஒரு கருவி மூலம் ஈர்த்து அவற்றை ஆய்வு செய்வதுதான் நியூட்ரினோ ஆய்வகத் திட்டம்.
இதில் பிரச்சினை என்னவென்றால், இந்த நியூட்ரினோ ஆய்வகத்தை சாதாரண தரைத்தளத்தில் அமைக்கமுடியாது. கருங்கல் (சார்கோநைட்) பாறைப்படிவம் நிறைந்த செங்குத்தான மலைப்பகுதியில், அதுவும் மழைப்பொழிவு அதிகமில்லாத நிலையான புவியியல் அமைப்பைக்கொண்ட பகுதியில் தான் ஆய்வகத்தை அமைக்கமுடியும். 10 மீட்டர் அகலமும், 250 மீட்டர் (2.5 கிலோ மீட்டர்) நீளமும் உள்ள இந்த நியூட்ரினோ ஆய்வகமானது மலையிலிருந்து சுரங்கம் அமைத்து ஆழத்தில் அமைக்கப்படவேண்டும். இந்த அமைப்பு முறையே நியூட்ரினோ ஆய்வுக்கான அடிப்படை வசதியைத் தரும்.
இப்படி ஒரு ஆய்வு மையத்தை இங்கு அமைக்க இமாச்சல பிரதேசம் மணாலி, சிக்கிம் ராமன் நீர் மின் திட்ட பகுதிகள் என ஆய்வு செய்த நியூட்ரினோ ஆய்வுக்குழுவினர் இறுதியாக தமிழகத்தில் நீலகிரி சிங்காரா மலைப்பகுதியைத் தேர்வு செய்தார்கள். கோவை மாவட்ட இயற்கை ஆர்வலர்கள், சூழலியல் சிந்தனையாளர்கள், புலிகள் சரணாலய நலம் விரும்பிகள் என அனைவரும் இத்திட்டத்தை எதிர்க்க, ஒரு வழியாக இந்திய புலிகள் ஆணையத்தலைவர் ராம் கோபால் வர்மாவின் பரிந்துரையின் பேரில் சிங்காரா திட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்த ஆய்வில் தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது.
நியூட்ரினோ ஆய்வு என்பது இயற்கையைப் பற்றிய புரிதலுக்கான அடிப்படை ஆய்வு என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் இத்திட்டம் குறித்த எதிர்மறையான கருத்துக்களோடு இரண்டு தரப்புகள் மோதிக்கொள்கின்றன. ஒன்று - கண்மூடித்தனமான எதிர்ப்பு, இன்னொன்று கண்மூடித்தனமான ஆதரவு. இத்திட்டத்தின் பயன், அதன் நம்பகத்தன்மை, அதனால் ஏற்படும் உடனடி அல்லது நீண்டகால விளைவுகள் போன்றவற்றை கவனமாக பரிசீலிக்க இரண்டு தரப்புமே தயாராக இல்லை.
“நியூட்ரினோ என்பது அணுத்துகள், எனவே ஆய்வில் அணுசக்தி வெளிப்படும்” என்ற பாமரத்தனமான வதந்தி ஒருபுறம். விஞ்ஞானிகள் பக்கமோ “வளர்ச்சிக்கட்டத்தில் ஏற்படும் சூழல் பாதிப்பு என்பது தவிர்க்கமுடியாதது. எனவே பாதிப்புகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்” என்றும் விவாதங்கள் தொடர்கின்றன.
புவி வெப்பமயமாதல், நிலத்தடி நீர் பற்றாக்குறை, பருவகால மாறுதல்கள் என்று பலவித நெருக்கடிக்குள்ளாயிருக்கிற இந்தச் சூழலில் எதிர்மறையான கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரிசீலிப்பது அவசியமானது. நியூட்ரினோ ஆய்வகம் அமைப்புப் பணியில் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள் மற்றும் ஆய்வகம் இயங்கும் நிலையில் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. ஆய்வகம் அமைப்பதற்கான அளவீடுகளின்படி விஞ்ஞானப்பூர்வமான கணக்கின் அடிப்படையில் மலையைக்குடைவதால் கிடைக்கும் சுமார் ஆறு லட்சத்து முப்பதாயிரம் டன் கழிவுகளை நீக்குதல், கட்டுமானத்திற்காக பயன்படுத்த வேண்டிய ஏழு லட்சத்து அறுபதாயிரம் டன் கட்டுமான பொருட்களை கொண்டு சேர்த்தல், 130 கனரக வாகனங்களின் பயன்பாடு போன்றவை அடர் காடுகளில் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
நீலகிரி சிங்காரா திட்டம் ஏன் கைவிடப்பட்டதோ அதே அளவிற்கான முக்கியக் காரணங்களை தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையும் கொண்டுள்ளது. இங்கு அமைந்துள்ள மேகமலை யானைகள் மற்றும் காட்டு எருதுகளுக்கான சரணாலயமாக இப்போதுதான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெரியாறு புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர் மலை அணில் காப்பகத்திற்கான உயிர் பாதுகாப்பு வளையமாக சுருளியாறு காடுகள் அமைந்துள்ளன. ஆய்வகத்தின் கட்டுமான காலத்தில் பயன்படும் வெடிமருந்துகள், கிரஷர்கள், ஒலி மாசுபாடு போன்றவையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும். மேற்கண்ட பிரச்சினைகளுக்கு மாற்று வழி கிடையாது.
அடுத்தது - ஆய்வகத்தின் இயங்கும் காலத்தில் ஏற்படும் பாதிப்புகள். நியூட்ரினோ ஆய்வில் எந்த விதமான ரசாயணப் பொருட்களும் பயன்படுத்தப்படாது, எனவே எந்த விதமான விளைவுகளும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர்.
இத்தாலி கரோன் சாஜோ மலையில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வகத்தில் (The Gran Sasso National Astro physics Laboratory) கடந்த 2002 ஆம் வருடம் ரசாயனக் கசிவு ஏற்பட்டதாகக்கூறி அங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். நியூட்ரினோ திறனறியும் கருவியில் பயன்படுத்தப்பட்ட ரசாயன எண்ணெய் தவறுதலாகக் கையாளப்பட்டதில் 50 லிட்டர் அளவிற்கு வெளியேறியதாகவும், அதில் 1,2,4-trimethylbenzene என்ற ரசாயனம் இருப்பதாகவும் அதனால் பாதிப்பு சிறிய அளவில்தான் இருக்குமென்றும் விஞ்ஞானிகள் தரப்பில் சொல்லப்பட்டது. இறுதியில் இத்தாலிய இயற்பியல் மற்றும் அணுசக்தித்துறை தலைவர் லாரோகி இந்த ரசாயனக்கசிவு கவனக்குறைவால் ஏற்பட்டது என்றும், இதன் விளைவுகள் மக்கள் மீதும், காட்டுயிர்கள் மீதும், நிலத்தடி நீர் மீதும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி, அந்த நியூட்ரினோ ஆய்வகத்தை 2003 ஆம் ஆண்டு தற்காலிகமாக மூட பரிந்துரைத்தார். 2003 ஆம் ஆண்டு ஆய்வகம் மூடப்பட்டது.
பாதிப்புகள் பற்றி பேசும் விஞ்ஞானிகள் தம் ஆய்வின் மீது கொண்ட காதலினால் பாதிப்புகளைக் குறைத்து மதிப்பிடுகின்றனர் அல்லது குறைத்துச் சொல்கின்றனர். ஆய்வகக்கட்டுமானமும், அதன் பின்னான ஆய்வின் போது ஏற்படும் விளைவுகள் பற்றியும் வெளிப்படையாகப் பேசினால் மட்டுமே நியூட்ரினோ ஆய்வக விஷயத்தில் ஒரு தீர்வை எட்ட முடியும். இவ்வளவு சிக்கலான, இயற்கையின் மீதான சில விளைவுகளை ஏற்படுத்தப்போகும் இந்த ஆய்வின் பலன் என்னவாக இருக்கும் என்பதே இதற்கான முடிவாகவும் அமையும்.
உலக அளவில் 1930களில் மிக மெதுவாகத் துவங்கிய நியூட்ரினோ ஆய்வுகள் 1960களில் வேகமடைந்தது. 1965 ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலம் கோலாரில் அமைக்கப்பட்ட இந்திய நியூட்ரினோ ஆய்வகம் இந்த 2010 ஆம் ஆண்டு வரையில் என்னவிதமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறது என்பதும், உலக நியூட்ரினோ ஆய்வுகள் இந்த 70 வருடங்களில் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்பதும் கேள்விக்குள்ளாக்க வேண்டிய விஷயங்களாகும்.
மக்களின் அடிப்படைத்தேவைகளே நிறைவடையாத இந்தியா போன்ற ஒரு தேசத்தில் அத்தியாவசியமான ஆய்வுகளில், உடனடி பலன் மக்களின் மீது பிரதிபலிக்கக்கூடிய விஷயங்களில் கவனம் செலுத்துவதே காலத்தின் தேவையாக இருக்கிறது. செயற்கைக்கோள் அனுப்புகிற பட்ஜெட்டில் உணவுத்தேவையை நிறைவுசெய்ய முடியுமா என்று யோசித்த கடந்த காலமும் நமக்கு உண்டு.
அறிவியல் ஆராயப்படுவதும், நவீன கண்டுபிடிப்புகள் வெளிப்படுவதும் மனித அறிவின் வளர்ச்சிதான். அதன் விளைவுகளுக்கும் , பலன்களுக்கும் உள்ள வேறுபாட்டைப் பொருத்து ஆய்வுகளின் தேவை இறுதி செய்யப்படவேண்டும். பிரபஞ்ச ரகசியங்களை அறியும் அடிப்படை ஆய்வுகளின் மேல் நமக்கு ஆர்வம் இருப்பது உண்மைதான் என்றாலும், பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் அவ்வாய்வுகளை முன்னெடுத்துச்செல்ல வழிவிடலாம்.
இந்திய விஞ்ஞானிகள் - அமெரிக்க விஞ்ஞானிகளின் தொடர்ச்சியாகவோ, உலக விஞ்ஞானிகளின் தொடர்ச்சியாகவோ இருக்க வேண்டும் என்பதில்லை. இந்தியத்தேவைகளைக் கருத்தில் கொண்டு விஞ்ஞானத்தை முன்னெடுத்துச் செல்பவர்களாக இருப்பார்களேயானால் மக்களின் ஆதரவு விஞ்ஞானத்திற்கு என்றும் இருக்கும்.
- மருத்துவர் அ.உமர் பாரூக் (
- பட்டாசு வெடிக்கலாமா?
- சமையல் அறையிலும் சூழலை காக்கலாம்
- அணுக்கூடத்தை எதிர்த்து தேவாரத்தில் போராட்டம்
- அவசரக் கத்திரி - அறிவியல் அநீதி
- அழிவின் விளிம்பில் பவளப் பாறைகள்
- BPA என்னும் நஞ்சு
- பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்
- உண்டி கொடுத்து உயிர் பறிப்போரே!
- ஆல்கா பெட்ரோல்
- வளிமண்டலத்தை தூய்மைப்படுத்தும் மழைக் காடுகள்
- சாகிறதா சாக்கடல்?
- கொள்ளை போகும் தண்ணீர்
- சூழல் சேதிகள்... வாசிப்பது கரிச்சான்
- காலநிலை மாற்ற பேச்சுவார்த்தைகள் - தர்மசங்கடமான உண்மைகள் சமரசங்கள் தீர்வைத் தருமா?
- எலும்புகள்
- இணையத்தை துண்டித்த கேபிள் இணைப்பு
- உடல் பருமனாகிப் போவதற்கு காரணம் என்ன?
- நீரில் இருந்து நிலத்திற்கு.
- வேளாண்மையின் பகைவன்
- டிஜிட்டல் படுதாக்களில் ஜிலுஜிலுக்கும் சீமான்கள்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.