அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஒரு புதிய மடிக்கணினி வாங்கிவிட்டோம். பழைய மேசைக்கணினியை என்ன செய்யலாம்? பிளாஸ்டிக், அலுமினியக் குப்பிகளைப்போல மறுசுழற்சிக்கு தள்ளிவிடலாமா? வீசியெறியப்பட்ட மின்னணு சாதனங்களில் இருக்கும் பிளாஸ்டிக் பாகங்களையும, உலோக பாகங்களையும் ஏன் உருக்கி எடுத்து மீண்டும் பயன்படுத்தக்கூடாது? எலக்ட்ரானிக் சாதனங்களில் மறுசுழற்சி என்பது நாம் நினைப்பதுபோன்று அவ்வளவு எளிதாக இல்லை. வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப்பட்ட கணினி போன்ற மின்சாதனங்கள் பெரும்பாலும் இந்தோனேசியா, சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கே தள்ளிவிடப்படுகின்றன. இங்கெல்லாம் ஆட்கூலி குறைவு; சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கெடுபிடிகள் இல்லை. மறுசுழற்சி செய்யப்பட்ட மின்னணு சாதனங்களுக்கு அதிக தேவை இருப்பதும் இந்த நாடுகளில்தான். இதன்காரணமாக மறுசுழற்சி தொழிலில் கிடைக்கும் இலாபமும் அதிகமாக இருக்கிறது.
மறுசுழற்சி தொழிலில் நன்மை தீமை இரண்டுமே இருக்கின்றன. ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெறுவதும், கட்டுபடியான விலையில் மின்னணு சாதனங்களை வாங்கமுடிவதும் நன்மைகள். அதே சமயம் தொழிலாளர்களின் உடல்நலனுக்கு எந்த பாதுகாப்புமின்றி இயங்கும் போலி தொழிற்சாலைகள் இங்கு இயங்குவதையும் கவனிக்கவேண்டும். மின்சுற்று பலகைகளில் உள்ள விலை உயர்ந்த உலோகங்களை அமிலங்களைக் கொண்டு உருக்கிப் பிரிக்கும்போது டையாக்சின், ஈயம் போன்ற ஆபத்தான வேதிப்பொருட்கள் கையாளப்படுகின்றன. செப்புக்கம்பிகளை பிரித்தெடுப்பதற்காக பிளாஸ்டிக் மேலுறை தீயிட்டு எரிக்கப்படும்போது வெளிப்படும் டாக்சின்கள் புற்றுநோயை ஏற்படுத்த வல்லவை.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற வளர்ந்த நாடுகளில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஈயம், பாதரசம் போன்ற பொருட்களை உருக்கிப் பிரிக்கும் நடைமுறை இந்த நாடுகளில் இல்லை. மாறாக, மின்னணுக்கழிவுகள் பூமிக்குள் இட்டு புதைக்கப்படுகின்றன. விளைவு நிலத்தடிநீர் மாசுபடுகிறது. மின்னணுக் கழிவுகளினால் ஏற்படும் தீங்குகளைத் தவிர்க்க அவற்றின் ஆயுட்காலத்தை அதிகரிப்பது சிறந்த வழி. ஒரு மடிக்கணினி வாங்கியவர் தன்னுடைய மேசைக்கணினியை தேவைப்படுவோருக்கு கொடுக்கலாம். இதன்மூலம் ஒரு புதிய கணினி உற்பத்தியாவதை ஒத்திப்போடலாம். ஒரு கணினியைத் தயாரிக்க அதன் எடையைக் காட்டிலும் 12 மடங்கு எடையுள்ள படிம எரிபொருள் தேவைப்படுகிறது. பள்ளிகளுக்கும், தேவைப்படுவோருக்கும் இவற்றைப் பெற்றுவழங்கும் தன்னார்வ நிறுவனங்களும் இயங்குவது ஆறுதலான செய்தி.
தகவல்: மு.குருமூர்த்தி (
இன்னும் படிக்க: http://news.discovery.com/tech/dont-recycle-your-computer.html
- விவரங்கள்
- பூவுலகின் நண்பர்கள்
- பிரிவு: சுற்றுச்சூழல்
புவி வெப்பமடைந்து வருவதைத் தடுக்க டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் கூட்டப்பட்ட சர்வதேச மாநாட்டில் எந்த உறுதியான முடிவும் எட்டப்படாமல் அரைகுறையாக முடிந்துள்ளது. கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தாத நிலையில் பூமியின் சராசரி வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் உயரும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். அதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் பயங்கரமான விளைவுகள் எப்படியிருக்கும். சில எடுத்துக்காட்டுகள்:
- இந்தியா முழுவதும் 1 செ.மீ. கடல்மட்டம் சராசரியாக உயர்ந்து வருகிறது. கடல்மட்டம் ஒரு மீட்டர் உயர்ந்தால் இந்திய கடற்கரைப் பகுதியில் 1,700 சதுர கி.மீ. மூழ்கிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
-மேற்குவங்கம் சுந்தரவனக் காடு பகுதியில் கடல்மட்ட உயர்வால் ஒரு தீவு முற்றிலும் மூழ்கிவிட்டது. 6000 குடும்பங்கள் வாழ்விழந்துள்ளன, 40 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். கடல்மட்டம் உயரும் நகரங்கள் பட்டியலில் சென்னை, நாகப்பட்டினம் உள்ளன.
- இந்திய விவசாயம் 65 சதவீத பாதிப்பை சந்திக்கலாம். ஏற்கனவே இந்த ஆண்டு பருவமழை பொய்த்தது.
ஒவ்வொரு 0.5 டிகிரி செல்சியஸ் வெப்ப உயர்வுக்கும் 17 முதல் 30 சதவீத அரிசி, கோதுமை விளைச்சல் பாதிக்கப்படும். ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்தால், 40-50 லட்சம் டன் கோதுமை விளைச்சல் குறையும்.
- 50 சதவீத இந்தியக் காடுகள் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், நமது பருவநிலை, காடுகளைச் சார்ந்து வாழும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
- 2035 ஆம் ஆண்டுக்குள் வடக்கில் ஓடும் ஜீவநதிகளின் தாயான இமயமலை பனிச்சிகரங்கள் முற்றிலும் மறைந்துவிட வாய்ப்புள்ளது.
- இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 27 சதவீதம் பாதிக்கப்படலாம்.
- கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு, சிக்குன் குன்யா போன்ற நோய்களின் தாக்குதல் அதிகரிக்கும்.
- இதுவரை 1998ஆம் ஆண்டுதான் மிக வெப்பமான ஆண்டு. உலகின் மிக வெப்பமான 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகள், 1980க்குப் பிறகே வந்துள்ளன. 2009 மிக வெப்பமான ஐந்தாவது ஆண்டு.
- 20ஆம் நூற்றாண்டில் பூமியின் சராசரி வெப்பநிலை 0.6 டிகிரி அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் 2050க்குள் குளிர்கால சராசரி வெப்பநிலை 3.2 டிகிரி வரை, கோடைகாலத்தில் சராசரி வெப்பநிலை 2.2 டிகிரி வரை உயர்ந்துவிடும்.
(பூவுலகு ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)
- விவரங்கள்
- பாரதி பழனிச்சாமி
- பிரிவு: சுற்றுச்சூழல்
பணப்பயிரான புகையிலையை பயிரிடுவதால் 1 கோடி முதல் 2 கோடி மக்களுக்குத் தேவையான உணவுப் பயிர் பயிரிடும் நிலம் அபகரிக்கப்படுகிறது. இந்த உலகில் பணம்தான் எல்லாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் 40 வயதைக் கடந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடல்நலம்தான் நமது மிகப் பெரிய செல்வம் என்பார்கள். அது பாதிக்கப்பட்டால் நாம் அனைத்தையும் இழந்துவிட்டோம் என்பதை அறிவோம். ஆனால் அதைவிட முக்கியமாக வளமான சுற்றுச்சூழலை இழந்துவிட்டால், நமது வாழ்வின் அடிப்படையை இழந்துவிடுவோம். மாசுபட்ட சுற்றுச்சூழல் நம் உடலையும் பாதிக்கும் என்ற உண்மையை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
உலகம் அதிவேகமாக மாறி வரும் சூழ்நிலையில் தொழில்மயமாதல், நகரமயமாதல், வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, மக்கள்தொகை பெருக்கம் போன்ற ஒவ்வொரு காரணமும் தன் பங்குக்கு சுற்றுச்சூழலை சீரழித்து வருகின்றன. காடுகள் அழிக்கப்படுவதை அனைவரும் அறிவோம். இது ஒரு முக்கிய சூழல் பேரழிவு. அதேநேரம் இந்தக் காடுகளை அழித்த பின் நடக்கும் மாற்றமும் சுற்றுச்சூழலை இரண்டு மடங்கு பாதிக்கலாம். இப்படிப்பட்ட ஒன்றுதான் புகையிலை பயிரிடுதல். அந்தப் புகையிலையில் இருந்து உருவாக்கப்படும் பொருட்கள் மூலம் வெளிவரும் நச்சுப் பொருட்கள் காற்றில் கலந்து மூன்று மடங்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எனவே, காடு அழிப்பு என்ற சுற்றுச்சூழல் சீரழிவு அத்துடன் முடிந்து போய்விடுவதில்லை.
1960களில் போதை ஏற்படுத்தும் புகையிலையை மக்களிடையே பழக்கப்படுத்துவதற்காக பன்னாட்டு நிறுவனங்கள்-உலக முதலாளிகள் மேற்கொண்ட தந்திரங்கள் முக்கியமானவை. உலக மக்கள்தொகையை ஒரு பொருளுக்கு அடிமையாக்குவதன் மூலம், எப்படி தங்கள் வருமானத்தை தொடர்ச்சியாகப் பெருக்குவது என்ற தந்திரத்தை அவர்கள் அப்போது கற்றுக் கொண்டார்கள். புகையிலை பரவலாகி பழக்கமாகும் வரை, புகையிலையால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பொய் என்பது போன்ற ஒரு தோற்றத்தை, தங்களுக்குச் சார்பான விஞ்ஞானிகள் குழு மூலம் தொடர்ச்சியாக பிரசாரம் செய்து உருவாக்கினர். இந்தியாவில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ள ஐ.டி.சி. என்ற இந்தியன் டுபாகோ கம்பெனி அடிப்படையில் ஒரு புகையிலை நிறுவனமே.
உலக புகையிலை உற்பத்தியில் சீனா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. புகையிலையை பயன்படுத்துவதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் புகையிலை பயிரிடுவதற்காக இரண்டு லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதில் இந்தியாவில் 42 ஆயிரம் எக்டேர் பரப்பில் புகையிலை பயிரிடப்படுகிறது. புகையிலை பயிரிடுதல், எரிபொருள், புதிய வகை பயிர்கள் பயிரிடுதல், "பேக்" செய்வது ஆகிய காரணங்களுக்காக புகையிலை சார்ந்த காடழிப்பு நடைபெறுகிறது. இதற்காக பெரும்பாலான வளரும் நாடுகளில் காடுகள் அழிக்கப்படுவதால், உலக அளவில் 1.7 சதவீத காடுகளின் பரப்பு இதற்கு மட்டுமே அழிந்து வருகிறது. மொத்த காடுகளின் பரப்பளவில் 4.6 சதவீதம் புகையிலை பயிரிடப்படும் நாடுகளில் மட்டும் அழிக்கப்படுகிறது.
சிகரெட், பீடி, மெல்லும் புகையிலை போன்றவற்றை தயாரிப்பதற்கு புகையிலை பயன்படுத்தப்படுகிறது. உலக பீடி உற்பத்தில் 85 சதவீதம், அதாவது 19 கோடி கிலோ பீடி இந்தியாவில் உற்பத்தியாகிறது. உலக புகையிலை பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 33 சதவீதம் (ஏழை பீடி தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம், குழந்தை உழைப்பு போன்ற வேறு சமூகப் பிரச்சினைகளும் இதில் அடங்கியுள்ளன).
புகையிலை பண்ணைகளில் 20 ஆயிரம் குழந்தைகளும், பீடி-சிகரெட் பாக்கெட் தயாரிப்பு பணியில் 27 ஆயிரம் குழந்தைகளும் ஈடுபட்டுள்ளதாக புதுதில்லியில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலகப் பேரணி தெரிவிக்கிறது.
தமிழகத்தில் மெல்லும் வகை புகையிலை தென்மாவட்டங்களில் அதிகம் பயிரிடப்படுகிறது. தவிர, தஞ்சாவூரிலும் கடற்பாங்கான மண் உள்ள பகுதிகளிலும் இவை பயிரிடப்படுகின்றன. மதுரையின் சில இடங்களில் குறைவான எரியும் தன்மை கொண்ட சுருட்டு தயாரிக்கப் பயன்படும் புகையிலை பயிரிடப்படுகிறது.
காட்டு வளம் பாதிப்பு:
ஒரு டன் புகையிலையை பதப்படுத்துவதற்கு ஒரு எக்டேர் மரங்கள் தேவைப்படுகின்றன. ஒரு கிலோ புகையிலையை பதப்படுத்துவதற்கு 7.8 கிலோ மரக்கட்டை எரிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவன ஆய்வின்படி ஒரு ஏக்கர் புகையிலை பயிரிடுவது 150 மரங்களை அழிப்பதற்குச் சமமாகும். 600 கிலோ புகையிலையை பதப்படுத்த உதவும் எரிபொருளைக் கொண்டு 20 வீடுகளுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யலாம்.
போபாலில் உள்ள இந்திய காட்டு மேலாண்மை நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, 1962 முதல் 2002 வரையிலான 40 ஆண்டு காலத்தில் புகையிலை பதப்படுத்துதல், சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் தயாரிப்புக்காக 680 சதுர கிலோ மீட்டர் காடுகள் அல்லது 86.8 கோடி டன் மரக்கட்டைகள் அல்லது 22 கோடி டன் கட்டுமானத் தரம் வாய்ந்த மரக்கட்டைகள் அல்லது 66.8 கோடி டன் எரிபொருள் சுரண்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அழிக்கப்பட்ட எரிபொருளின் அளவைக் கணக்கிட்டால் அதைக் கொண்டு அனல் மின்நிலையம் ஒன்றை இயக்கி, தலைநகர் தில்லி, நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு ஓர் ஆண்டுக்குத் தேவையான மின்தேவையை முழுமையாக பூர்த்தி செய்திருக்கலாம். இன்னும் எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இந்தியாவில் மட்டும் சிகரெட்டை சுருட்டவும் பேக் செய்யவும் 4 மைல் தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன. 300 சிகரெட்டுகள் தயாரிக்க ஒரு மரம் வெட்டப்படுகிறது.
புகையிலையை பதப்படுத்த எரிபொருள் பற்றாக்குறை நிலவும் இடங்களில் புகையிலை பயிரின் தண்டுகளையே பயன்படுத்துவதால், அது தீவிரமான உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்குகிறது. ஆந்திராவில் கோதாவரி பாசனப் பகுதியில் உள்ள வடிசலேறு கிராமத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இங்கு வாழ்பவர்கள் காசநோய், கண்புரை போன்ற நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புகையிலை பயிரிடப்படாத ஒரு கிராமத்துடன் ஒப்பிட்டால் இது பல மடங்கு அதிகம்.
மண்ணரிப்பு:
புகையிலை பொதுவாக வறண்ட, ஓரளவு வறண்ட நிலங்களில் பயிரிடப்படுகிறது. தனியாகப் பயிரிடப்படுவதால் புகையிலை பயிர் உயரமாக வளர்கிறது. இது மண்ணரிப்புக்குக் காரணமாக இருக்கும் காற்று, மழை இவற்றிலிருந்து வளமான மேல்மண்ணை பிடித்து வைத்துக் கொள்ளும் திறனற்றது. மற்ற பயிர்களோடு ஒப்பிட்டால், மண்ணின் ஊட்டச்சத்துகளை புகையிலை பயிர் பாதிக்கிறது. மண்ணில் உள்ள நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் சத்துகளை இப்பயிர் அதிக அளவில் உறிஞ்சுகிறது. பொட்டாசியத்தை 6 மடங்கு அதிகமாக உறிஞ்சுகிறது. இதனால் அடிக்கடி உரம் இடுவது அவசியமாகிறது. இதனாலும் சுற்றுச்சூழல் சீரழிகிறது.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் வறண்ட நிலத்தில் பயிரிடப்படும் பயிர்களால் ஏற்படும் மண்ணரிப்பின் அளவைக் கணக்கிட்டது. புகையிலை பயிரால் ஒரு ஏக்கருக்கு 45 கிலோ மேல்மண் அரிக்கப்படுகிறது. இதனால் ஊட்டச்சத்து, மண்ணின் நீர்தேக்கும் திறன், நீர் உறிஞ்சும் திறன் போன்றவை குறைவதுடன், மண்ணரிப்பும் அதிகரிக்கிறது.
பல்லுயிரியம் பாதிக்கப்படுதல்:
ஒரு பகுதியில் புகையிலையை மட்டுமே பயிரிடுவதால் அப்பகுதியின் பல்லுயிரியம் பாதிக்கப்படுகிறது. அந்தந்த பகுதிக்கே உரிய தாவர, உயிரினங்கள் கொண்ட தனித்தன்மை வாய்ந்த சூழலில் இது மாற்றத்தை ஏற்படுத்தி தொந்தரவு செய்கிறது. இயற்கை சமநிலையைக் குலைத்து, உணவுச் சங்கிலியையும் பாதிக்கிறது.
ஆந்திராவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், புகையிலை பயிரிடப்படாத இடங்களோடு ஒப்பிடுகையில், பன்னிரெண்டு பூஞ்சை வைரஸ் நோய்கள், 29 பூச்சிகள் தாக்குதல் போன்றவை புகையிலை பயிரிடப்பட்ட இடங்களில் மட்டும் இருப்பது கண்டறியப்பட்டது. இது மற்ற உணவுப் பயிர்களிலும் நோய்களை உண்டாக்குவதற்குக் காரணமாக இருக்கிறது.
பூச்சிக்கொல்லி மற்றும் உரங்கள்:
புகையிலை பயிர் எளிதில் பல நோய்களுக்கு ஆளாகக் கூடியது. அதனால் பயிரிடப்பட்ட முதல் மூன்று மாதங்களில் அதிக அளவில் பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்படுகின்றன. மண் வகையைப் பொருத்து ஓர் ஏக்கருக்கு 80 முதல் 200 கிலோ வரை வேதி உரங்கள் புகையிலை பயிரில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உரங்கள் நிலத்தடி நீர், நில மேற்பரப்பு நீரில் கலந்து குடிக்கும் நீரை நச்சுத்தன்மை கொண்டதாக்கும்.
இப்பயிரில் அடிக்க பயன்படுத்தப்படும் டி.டி.டி, பூச்சிக்கொல்லி மருந்துகள் மலேரியா போன்ற நோய்களை உருவாக்கும் காரணிகளுக்கு ஊக்கமளிக்கின்றன. மேலும் இந்த வேதிப் பொருட்களால் குழந்தைகள், பெண்களை தோல் அரிப்பு, சுவாசக் கோளாறுகள், ஒவ்வாமை, பசியின்மை, தலைவலி போன்ற நோய்கள் தாக்கலாம்.
புகையிலை சுற்றுச்சூழல் பாதிப்புகள்
புகையிலை பொருட்களில் அடங்கியுள்ள 4,000 வகை நச்சுப்பொருட்கள் அதை பயன்படுத்துவோரை மட்டுமின்றி, சுற்றுச்சூழலையும், ஒட்டுமொத்த சமூகத்தையும் மறைமுகமாக பாதிக்கின்றன. அதிலுள்ள முக்கிய வேதிப் பொருளான நிக்கோடின், உலக அளவில் புகையிலை தொழிற்சாலைகளில் இருந்து ஓர் ஆண்டுக்கு 30 கோடி கிலோ கழிவாக வெளியிடப்படுகிறது. இது மனிதனை அடிமைப்படுத்தக் கூடிய போதைப்பொருள்.
புகையிலுள்ள மீதைல் புரோமைடு, மணமற்ற நச்சுத்தன்மை கொண்ட வாயு, பயிர்களில் பூச்சிகளை அழிக்க சாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது. இதை சுவாசித்தால் நரம்பு பிரச்சினைகள், மகப்பேறின்மை பாதிப்பு ஏற்படும். இப்படியாக புகையிலையில் உள்ள ஒவ்வொரு நச்சுப்பொருளும் சமூகத்தை மட்டுமின்றி நாம் ஆரோக்கியமாக உயிர்வாழத் தேவையான சுற்றுச்சூழல் சமநிலையை குலைத்து, உலகை மறைமுகமாக அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கின்றன. இந்த பகாசுரன் நமக்குத் தேவைதானா?
- பாரதி பழனிச்சாமி (புகையிலை தடுப்பு மையத்தில் பணிபுரியும் மானிடவியல் ஆய்வாளர்)
(பூவுலகு ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)
- விவரங்கள்
- பூவுலகின் நண்பர்கள்
- பிரிவு: சுற்றுச்சூழல்
சமீபத்தில் ஸ்வீடனில் இருந்து வந்திருந்த இரண்டு சூழல் இதழாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, "எங்கள் நாட்டில் எல்லாமே பொதுமக்களின் தணிக்கைக்கு உட்பட்டவை. மக்கள் வரிப்பணம் சம்பந்தப்பட்ட எதையும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மறைத்துச் செய்துவிட முடியாது" என்றார்கள். 100 சதவீத ஆபத்து கொண்ட கூடங்குளம் அணுமின் நிலையமும், சூழலை பாதிக்காத காற்றாலைகளும் அருகருகே இருந்த முரணைப் பார்த்து அவர்களுக்குச் சிரிப்பு வந்தது. அவர்களது சிரிப்பில் பரிகாசமில்லை, வேதனையே மிகுந்திருந்தது.
இந்தியாவில் அணுமின் நிலையங்கள், அவை உருவாக்கும் கதிரியக்கக் கழிவு, விபத்துகள், மக்களிடையே கதிரியக்கம் ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து அச்சமும் எதிர்ப்பும் தெரிவித்து வந்துள்ளனர்.
ஆனால் இதை புறங்கையால் தள்ளிவிட்டுவிட்டு மத்திய அரசு தன் வேலையை செவ்வனே செய்து வருகிறது. ஆனால் அணுமின் நிலையங்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. நமது அணுமின்சாரம் எவ்வளவு பாதுகாப்பானது, அதன் உண்மையான லட்சணம் என்ன என்பதும் தெளிவாகியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள கைகா அணுமின் நிலைய ஊழியர்களின் உடலில் நவம்பர் 24ந் தேதி கதிரியக்கம் அதிகரித்தது. கதிரியக்கத்தை வெளியிடக் கூடிய ஹைட்ரஜனின் ஐசோடோப்பான டிரைடியம், 50 ஊழியர்களை பாதித்திருந்தது. கதிரியக்கக் கசிவு நிகழ்ந்தால்தான் இத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்று சுற்றுச்சூழலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஊழியர்கள் தண்ணீர் குடிக்கும் வாட்டர் கூலரில் கதிரியக்கத் தன்மை கொண்ட கனநீர் கலக்கப்பட்டுவிட்டதுதான் காரணம் என்கிறது அணுசக்தித் துறை. "அதிருப்தி அடைந்த ஒரு ஊழியரின் விஷமச் செயல்" என்று இந்த பயங்கரத்தை எளிதாகக் குறுக்கிவிடவும் திசைதிருப்பவும் அணுசக்தித் துறையும் மத்திய அரசும் முயற்சிக்கின்றன.
பாதிக்கப்பட்ட அனைவரும் ஒப்பந்த ஊழியர்கள். நமது அணுமின் நிலையங்களில் கழிவை அகற்றுதல், பராமரிப்புப் பணிகளில் ஒப்பந்த ஊழியர்களே இன்னமும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரைசாண் வயிற்றை நிரப்பிக் கொள்வதற்காக உயிரை மாய்த்துக் கொள்ளும் இந்த வேலையில் ஈடுபட அவர்கள் தயங்குவதில்லை. அவர்களுக்கு எந்த வகையான பாதுகாப்பும் கிடையாது. இறந்தால் உரிய நஷ்டஈடும் கிடைக்காது.
மகாராஷ்டிராவில் உள்ள தாராபூர் மின்நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இதேபோன்ற கதிரியக்கக் கசிவிலும், ஒரு ஊழியர் பலிகடா ஆக்கப்பட்டார். 15 ஆண்டுகளுக்கு முன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து கதிரியக்கத் தன்மை கொண்ட பொருள் நிரம்பிய சிறிய குப்பியை, அங்கு வேலைபார்த்த ஊழியர்கள் கூவத்தில் எறிந்துவிட்டனர். அதைத் தேட கூவத்தையே சல்லடை போட்டுத் தேடியது அரசு.
நமது அணுமின் நிலையங்கள் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்பதில் உள்ள உண்மையைவிட, உள்ளே இருக்கும் பொருட்கள் எவ்வளவு ஆபத்தானவை, அதை கையாளுவதில் காட்டப்படும் அலட்சியத்தை இந்தச் சம்பவம் தெளிவாகவே உணர்த்தும். ஐரோப்பிய நாடுகளுக்கு மாறாக நமது அணுமின் நிலையங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் திட்டமிட்டு மறைக்கப்பட்டே வருகின்றன. நமது வரிப்பணத்தில் அமைக்கப்படும் இந்த அணுஉலைகளில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நமக்கு உரிமை மறுக்கப்படுகிறது. பெரும்பாலான அணுஉலைகளில் கிடைக்கும் செறிவூட்டப்பட்ட அணுசக்தி மூலப்பொருள், அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்ற தகவலில் உண்மையில்லை என்று கூறிவிட முடியாது.
அணுசக்தியைவிட விலை குறைவான, பாதுகாப்பான, வளங்குன்றாத மின் உற்பத்தி முறைகளுக்கு மாறாத வரை, இப்படி கொள்ளிக்கட்டையை வைத்து தலையைச் சொறிந்து கொள்ளும் வேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். கல்பாக்கம், கூடங்குளம் என்று நாட்டிலேயே இரண்டு அணுமின் நிலையங்களை பெற்ற ஒரே மாநிலம் தமிழகம்தான். இவை நமக்குப் பெருமையா?
(பூவுலகு ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)
- மழைக்காடுகளின் மரணம் - அழிவின் வாசலைப் பற்றி ஒரு நேரடி சாட்சியம்
- தமிழகம்-கர்நாடக தண்ணீர் பிரச்சினைக்கு பசுமைப் புரட்சியின் வன்முறைதான் காரணம்
- அவசரக் கத்தரியும் அறிவியல் அநீதியும்
- வற்றிப் போகும் காவிரி
- கடலின் மீது ஒரு சுமை
- கார்பன் டை ஆக்சைடை கைப்பற்ற....
- பச்சை நிழல்
- நியூட்ரினோ ஆய்வகம் - வரமா? சாபமா?
- பட்டாசு வெடிக்கலாமா?
- சமையல் அறையிலும் சூழலை காக்கலாம்
- அணுக்கூடத்தை எதிர்த்து தேவாரத்தில் போராட்டம்
- அவசரக் கத்திரி - அறிவியல் அநீதி
- அழிவின் விளிம்பில் பவளப் பாறைகள்
- BPA என்னும் நஞ்சு
- பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்
- உண்டி கொடுத்து உயிர் பறிப்போரே!
- ஆல்கா பெட்ரோல்
- வளிமண்டலத்தை தூய்மைப்படுத்தும் மழைக் காடுகள்
- சாகிறதா சாக்கடல்?
- கொள்ளை போகும் தண்ணீர்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.