தமிழன் எதையெதையோ இழந்தான். இழந்து கொண்டுமிருக்கிறான். ஏன் இழந்தான், எதற்காக இழந்தான், என்னென்ன சூழலில் இழப்புகள் ஏற்பட்டன என்பதையெல்லாம் மேடை போட்டு சோடா குடித்து பேசலாம். தமிழனே கைதட்டி விட்டு வேகமாக கலைந்து போய்விடுவான் அடுத்த இழப்பிற்கு தயாராவதற்கு.

இலவசக்கல்வியை இழந்தது, பள்ளிகளில் தமிழை ஓரங்கட்டியது, காவிரியை காணாமற்போகச் செய்தது, நகரங்களை கிராமங்களுக்குள் திணித்தது, கிராமங்களை நகரங்களுக்கு விரட்டியடித்தது, ஆற்று மணலைப் பொன்னாக்கியது, நிலத்து மண்ணைப் பாழாக்கியது, கிராமத்து தொழில்களை நசுக்கியெறிந்தது, இதெல்லாம் அற்பமான இழப்புகள்.

இதற்கு ஈடாக தமிழன் இன்று பெற்றிருப்பது ஏராளம். குடும்பத்தை சிதைக்கும் கதைகள் நம்மூர் தொலைக்காட்சிகளில் செங்கோல் செலுத்துகின்றன. நமது பெண்கள் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளும் இடைவேளைகளில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், மானைப் போலவும் மயிலைப் போலவும்.

“படிக்கிறவனை நீங்களே படிக்க வைத்துக் கொள்ளுங்கள் குடிக்கிறவனை குடிக்கவைக்கிற வேலை எனக்கிருக்கிறது” என்று மார்தட்டும் அரசுகள்.

அரசாங்க ஆஸ்பத்திரியில் உயிரை இழக்க விரும்பாதவனை வாரியணைக்கும் கார்ப்பரேட் மருத்துவமனைகளும் சிண்டிகேட் மருத்துவமனைகளும். .டிஸ்சார்ஜ் ஆகும்போது ஒருஏக்கர் நிலத்தை விற்றால் தான் டவுன் பஸ்ஸுக்கு சில்லரை மீதமிருக்கும் உத்தரவாதம்.

அந்த வரிசையில் ஒரு புரட்சிவரவு “டிஜிட்டல் படுதாக்கள்”. தலைவனையும் தலைவியையும் விளம்பரப்படுத்தும் மோகம். அந்த விளம்பரத்தின் நிழலில் தானும் அறிமுகமாகும் வேகம். இன்றைய டிஜிட்டல் பேனர்கள் தமிழகத்தின் புதியவரவு. மரபு ஓவியர்களின் தொழிலை வேருடன் பிடுங்கி எறிந்த தொழில்நுட்பம் இன்று தமிழ்நாட்டின் நகரங்களிலும் கிராமங்களிலும் கைகால்களைப் பரப்பிக்கொண்டு ஆரவாரம் செய்து கொண்டிருக்கிறது.

நின்றுகொண்டும், நடந்து கொண்டும், கைகூப்பிக் கொண்டும், தலைசாய்த்து தோழருடன் பேசிக்கொண்டும், முற்றிப்போன சினிமா டைரக்டர்களின் கற்பனையில் கூட எட்டியிராத போஸ்களில், தமிழ்நாட்டின் தலைநரைக்காத மூத்தகுடிமக்கள் பளபளப்பான அந்த படுதாக்களில் குடியிருப்பார்கள். கையில் ஒரு துண்டு மடித்து வைத்திருப்பார். அல்லது செல்போன் வைத்திருப்பார். செல்போன் சும்மா இருந்தால் செல்போனுக்கு மரியாதையில்லை என்பதற்காக செல்போனை சொறிந்து கொண்டிருப்பார். நட்ட நடுரோட்டில் சிரித்துக்கொண்டு நிற்பார் அல்லது சிந்தனையில் ஆழ்ந்திருப்பார். படுதாவிற்கு காசுகொடுத்த தோழரின் தலை கால்மாட்டில் வேட்டியோரமாக அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்.

எந்த ஒரு கட்சிப்புள்ளியும் படுத்திருக்கிற கோணத்தில் டிஜிட்டல் படுதா யாரும் இன்னும் வைக்கவில்லை. அப்படியொரு படுதா வைத்தால் பிரமுகர் அரசியலில் படுத்துவிடுவார் என்கிற சென்டிமெண்ட் ஆகக்கூட இருக்கலாம். கட்சியில் முக்கியமான ஒரு புள்ளி தன்னுடைய ஊருக்கு வருகிறார் என்றால் அவரை வரவேற்பது என்ற பெயரில் டிஜிட்டல் படுதாக்களை வைப்பவர் யாராக இருக்கும்? இன்றைக்கு கட்சியில் தனக்கு இருக்கும் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமா? அடுத்த தேர்தலில் தனக்கு சீட்வேண்டும் என்று அச்சாரம் போடவேண்டுமா? கட்சியில் தான் இன்னாருடைய ஆதரவாளர் என்பதை தலைமைக்கு எடுத்துக்கூறவேண்டுமா?

தனக்குப்பின்னால் இவரெல்லாம் அணிவகுத்து நிற்கிறார்கள் ஜாக்கிரதை என்று எச்சரிக்கை விட வேண்டுமா? இது தன்னுடைய ஏரியா என்பதை கட்சிக்கும் அன்றாடம் காய்ச்சிகளுக்கும் அறிவிக்க வேண்டுமா? தனக்குக்கிடைத்த காண்ட்ராக்ட்டுக்கும் சுருட்டிய பெரும்தொகைக்கும் நன்றி கூற வேண்டுமா? அடுத்து வரப் போகிற பெரிய டெண்டர் தனக்கு சாதகமாக இருக்க வேண்டுமா? கத்தியின்றி ரத்தமின்றி காரியம் முடிக்கும் ஆயுதம்தான் டிஜிட்டல் படுதாக்கள்.

இந்த டிஜிட்டல் படுதாக்களில் கட்சிப்புள்ளிகளை எப்படியெல்லாம் அழைக்கிறார்கள் என்பதைப்பார்த்தால் அந்த பிரமுகருக்கே முகம் சிவந்துபோகும் நாணத்தால். “இந்நாட்டு இங்கர்சாலே.....சேகுவாராவே........உலகத்து நாயகனே அல்லது நாயகியே........வீரத்தின் உருவே.....எங்கள் குல விளக்கே.......உலகத்தின் பெரியாரே.....திருக்குறளே.......கண்ணின் மணியே.........மணியின் ஒளியே.....”

இதெல்லாம் “டிஜிட்டல் படுதாக்களில் பேத்தல்கள்” என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைக்கு உதவுகிற தலைப்புகள். கட்சிப்புள்ளிகளை விலங்குகளுக்கு ஒப்பிட்டு வரவேற்கும் டிஜிட்டல் படுதாக்களுக்கும் குறைவில்லை. சிங்கம், புலி, சிறுத்தை, களிறு, காளை, அரிமா, வேழம், கவரிமான், புள்ளிமான், கலைமான் இவற்றோடெல்லாம் ஒப்பிட்டு டிஜிட்டல் படுதாக்கள் வைத்தாயிற்று. என்ன காரணத்தினாலோ நரியோடு யாரும் ஒப்பிடுவது இல்லை.

ஆரம்பகாலத்தில் வைக்கப்பட்ட டிஜிட்டல் படுதாக்கள் காந்தி, நேரு, அம்பேத்கர் படங்களில் வரிசைகட்டம். அப்புறம் கற்பனை தமிழ்நாட்டுக்குள் நுழைந்து விடும். பெரியாரில் தொடங்கி காமராசர், அண்ணா இவர்களின் இதயத்திற்குள் பிரமுகர் சிரித்துக் கொண்டிருப்பார். இப்போதெல்லாம் பழையதலைவர்கள் மக்களின் நினைவில் இறந்துபோய்விட்டதால் அவர்களாகவே இப்போது பரணில் ஏறிக் கொண்டார்கள். இப்போதெல்லாம் பிரமுகரின் படம்தான் பிரதானம்.

பாவ்லோவ் என்ற ரஷ்ய நாட்டு விஞ்ஞானி அவருடைய நாய்க்கு சோறு வைக்கும்போதெல்லாம் ஒரு மணியை அடித்து ஓசைபடுத்தியபிறகு தான் சோறு வைப்பாராம். சில மாதங்கள் கழிந்ததும் மணி மட்டும் அடிப்பாராம். சாப்பாட்டுத்தட்டை வைக்கமாட்டாராம். மணி ஓசை கேட்டவுடனேயே நாய் சோற்றை நினைத்துக்கொண்டு நாக்கை தொங்கப்போடுமாம். நாய், மணிஓசை, சோற்றுத்தட்டு இதெல்லாம் யார்யாரென்று விரித்துரைக்க வேண்டியதில்லை.

டிஜிட்டல் படுதாக்களின் அதிர்வலைகள் பெருநகரங்களின் தொடங்கி, சிறுநகரங்கள், சிற்றூர்கள், கிராமங்கள் என்று அதிர்ச்சி அலைகளாக பரவிவருவதுதான் இன்றைய ரசனைக்குரிய செய்தி. டிஜிட்டல் படுதாக்களைத் தயாரிக்கும் தொழிலகங்கள் சிற்றூர்களில்கூட ஆல்போல்தழைத்து அருகுபோல் வேரூன்றி நிற்கின்றன. வேலை கிடைக்காத படித்த ஏழை இளைஞர் பட்டாளம் நாடி நரம்புகளைத் துளைக்கும் இரசாயனப் பொருள்களின் வாசனைக்கு நடுவே நாள்முழுவதும் பணியாற்றிவருவது கொடுமையிலும் கொடுமை.

இந்த படுதாக்கள் பாலிவினைல் குளேரைடு என்ற இரசாயனப் பொருட்களினால் ஆன பிவிசி வால்பேப்பர்களில் அச்சடிக்கப்படுகின்றன. பல்வேறு இரசாயனங்கள் சேர்க்கப்படாமல் பிவிசியை பயன்படுத்தமுடியாது. காட்மியம், பாதரசம், ஈயம், தாலேட்டுகள், டையாக்ஸின்கள் என்று மேலைநாடுகள் வெறுத்து ஒதுக்கத்தொடங்கியுள்ள இரசாயனங்களை நாம் வாரியணைக்கத் துடிக்கிறோம் இந்த படுதாக்களின் வடிவத்தில். இந்த படுதாக்கள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் புற்றுநோயின் பங்காளிகள். மலட்டுத்தன்மையின் சம்பந்திகள்.

“எங்க மாமாவுக்கு கல்யாணம்......வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.” “அஞ்சாத சிங்கம் அம்மாக்கண்ணு வீட்டுத்திருமணத்திற்கு வருபவர்களை வருக வருக என்று வரவேற்கிறோம்.” என்பது போன்ற டிஜிட்டல் படுதாக்கள் கல்யாண மண்டபங்களின் வீதியின் இருபுறமும் காணப்படுவது இன்றைய சாதாரணம். கல்யாணம், காதுகுத்து, பூப்புநீராட்டு, மொய்விருந்து, பணிஓய்வு, வெளிநாட்டுப்பயணம், வெளிநாட்டிலிருந்து வெற்றிகரமாக திரும்புதல் என்று டிஜிட்டல் படுதாக்களின் பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது.

இந்த படுதாக்களின் வேலை முடிந்தபிறகு அதனுடைய மிச்ச சொச்ச ஆயுள் எப்படி கழிகிறது என்பதுதான் இந்த கட்டுரை எழுதப்பட்டதன் நோக்கமம். புற்றுநோயாலும் மலட்டுத்தன்மையாலும் பாதிக்கப்படும் அபாயம் இந்தத் தொழிலில் இருப்பவர்களுக்கு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனவே டிஜிட்டல் படுதாக்களை தயார்செய்யும் தொழிலில் இருப்பவர்களை ஆபத்தான தொழில் செய்பவர்களாகத்தான் கருத வேண்டும். இந்த படுதாக்கள் நகராட்சியின் தலைவலிக்கு காரணமான பிளாஸ்டிக் குப்பைகளுக்கும், மருத்துவமனைக் கழிவுகளுக்கும் சமமானவை.

ஒரு கிராமத்திற்குள் ஐந்து கிலோமீட்டர் பயணம் செய்து பார்த்தால் பத்து அல்லது இருபது ஓய்வுபெற்ற டிஜிட்டல் படுதாக்கள் வீடுகளின் சுவர்களில் சாய்த்து வைக்கப்பட்டிருப்பதை இன்று பார்க்கலாம். காலம் நீளும்போது நிச்சயமாக இந்த எண்ணிக்கை நீளும். அவற்றை என்ன செய்வது என்பது வீட்டுக்காரர்களுக்கே தெரியவில்லை. காலப்போக்கில் அவை மழைச்சாரலை மறைக்கும் படுதாக்களாக மாறலாம். மாட்டுக் கொட்டகைக்கு கூரையாகலாம். ஏழைக்குடிசைக்கு சுவராகலாம். அரிசியும் பருப்பும் காயவைக்கும் படுதாவாக உருவெடுக்கலாம். டிஜிட்டல் படுதாக்களில் பயன்படுத்தப்படும் இரசாயனப்பொருள்கள் ஆபத்தானவை. முன்னேறிய நாடுகள் அவற்றை துரத்தியடிக்க முயற்சி செய்து கொண்டிக்கின்றன.

வந்தாரையெல்லாம் தமிழகமும் தமிழனும் வாழவைக்கலாம். அதில் தவறில்லை. டிஜிட்டல் படுதாக்கள் போன்ற நச்சுப் பொருட்களை வாழவைப்பது இமாலயத் தவறு. எதிர்கால சந்ததி இல்லாமல் போகும் என்பதுதான் அறிவியல் உலகம் தரும் எச்சரிக்கை. தமிழ்நாடு அரசு பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து டிஜிட்டல் படுதாக்களுக்கென சில கட்டுப்பாடுகளை விதித்திருப்பது ஆறுதலான செய்தி.

தற்போது ஒரு சதுர அடி டிஜிட்டல் படுதா தயாரித்து தருவதற்கு ஒரு சதுர அடிக்கு எட்டு ரூபாய் வாங்குவதாகத் தெரிகிறது. ஒரு பிரமுகரின் ஆளுயர படுதா தயாரிக்க எட்டடிக்கு இரண்டரை அடி என்ற அளவில் நூற்று அறுபது ரூபாய் செலவாகும். ஆள் கூலி எல்லாம் சேர்த்து இருநூறு ரூபாய் என்று கொண்டால்கூட வீதியெங்கும் ஐம்பது படுதா வைக்கும் கட்சிக்காரர் பத்தாயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும். ஏதோ ஒரு காண்ட்ராக்டில் லட்சரூபாய் சம்பாதித்த கட்சிக்காரருக்கு பத்தாயிரம் சாதாரண தொகை. அரசாங்கம் டிஜிட்டல் படுதாக்களின் மீது நூறு சதவீதம் வரிவிதிப்பை ஏற்படுத்தினால் அரசின் பிடி இறுகும்.

இதனால் வருத்தப்படப்போவது டிஜிட்டல் படுதாக்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் அன்றாடம் காய்ச்சியல்ல. ஜில்லென்று சிரித்துக் கொண்டிருக்கும் சீமான்கள்தான்.

- மு.குருமூர்த்தி

Pin It