வற்றாத வளம்கொண்ட கடலின் பெருமை அதை நம்பி வாழும் மீனவர்களுக்கு நன்றாகத் தெரியும். ‘கடல் அம்மா’ என்றுதான் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை அழைக்கிறார்கள். கடல் மீனவர்களுக்கு மட்டுமே வாழ்வாதாரம் இல்லை. மனிதகுலத்தின் வாழ்வாதாரமே கடல்தான் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவருகிறது. புவிக்கோளத்தின் முக்கால் பரப்பை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் கடல்தான் நம்முடைய வானிலையைத் தீர்மானிக்கிறது. மனிதர்களின் செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்சைடின் கால்பகுதியை கடல்நீர்தான் உறிஞ்சிக்கொள்கிறது. இதனால் புவி வெப்பமடைவது தடுக்கப்படுகிறது.

ஆனால் மனித வாழ்க்கையில் இப்போது தொழிலகங்கள் பெருகிவிட்டன. கார்பன் டை ஆக்சைடின் அளவு காற்றில் அதிகரித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்த கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கடல்நீரின் CO2 உறிஞ்சு திறன் குறைந்துபோயிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘Nature’ தன்னுடைய நவம்பர் 19 ஆம் தேதியிட்ட இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு 2.3 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடை கடல் உறிஞ்சிக்கொண்டது. ஆனால் 2000ம் ஆண்டில் இருந்த கடல் நீரின் CO2 உறிஞ்சு திறன் 10 சதவீதம் குறைந்துபோயிருப்பதாக ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். இந்தக்கணிப்பு முன்னரே செய்யப்பட்டிருந்தாலும், இதுபற்றிய அளவீடுகளும் புள்ளிவிவரங்களும் இப்போதுதான் சேகரிக்கப்பட்டுள்ளன.

“காற்றில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கும்போது கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. இதனால் கடல் நீரின் கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சு திறன் குறைகிறது” என்கிறார் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானி சாமர் காட்டிவாலா என்பவர். வளிமண்டலத்தில் தொழிலக கார்பனின் அளவை 1765 ஆம் ஆண்டு முதல் 2008 வரை காட்டிவாலா குழுவினர் ஆய்வு செய்தனர். 1950 ஆம் ஆண்டுவரை எல்லாம் சீராக இருந்தன. ஆனால் 2000 ம் ஆண்டில் கடல் நீரின் CO2 உறிஞ்சுதிறன் கணிசமாக குறையத் தொடங்கியிருந்தது. 1990ம் ஆண்டைக் காட்டிலும் இன்று நாம் கடல்நீரின் மீது 150 பில்லியன் டன்கள் கூடுதலான CO2 வை திணிக்கிறோம்.

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/11/091118143211.htm

தகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It