தேனி மாவட்டம் தேவாரம் ஏலமலையில் நியூட்ரினோ அணுத்துகள் ஆய்வகம் என்னும் மனித குல அழிப்பு ஆலை ஒன்றை அமைக்க இந்திய அரசு முனைந்துள்ளது. இதில் ஏற்படும் கதிர்வீச்சால் இலட்சக் கணக்கான மக்களும் மற்ற உயிரினங்களும் அழிந்து போகும் ஆபத்து உள்ளது. இந்த அணுத்துகள் ஆய்வகம் அமைப்பதை எதிர்த்து “தேவாரம் விவசாயிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம்” மக்களைத் திரட்டிப் போராடி வருகிறது.

 இந்த ஆலை அமைப்பதற்கான நிலத்தை ஆய்வு செய்யவந்த அதிகாரிகளைத் திரும்பிப் போகச் சொல்லி 19.12.2009 சனிக்கிழமை மேற்படி சங்கத்தினர் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய தேவாரம் விவசாயிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கச் செயற்குழு உறுப்பினர் திரு.மு. தனராசு அவர்களிடம் இப்போராட்டம் குறித்துக் கேட்டபோது அவர் சொன்னார் : “இந்த அணுத்துகள் ஆய்வகம் மிகமிக ஆபத்தானது. சிறுகசிவு ஏற்பட்டு, கதிர்வீச்சு வெளி வந்தால் இலட்சக் கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள். மற்ற உயிரினங்களும் சாகும்.

“இந்த ஆலையை முதலில் நீலகிரி மலையில் அமைக்கத் திட்டமிட்டனர். அங்கு மக்கள் எதிர்த்ததால் பிறகு கம்பம் சுருளியாற்றுப் பகுதியில் அமைக்கத் திட்டமிட்டனர். அங்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் எதிர்த்தனர். அதன் பிறகு இப்போது தேவாரம் ஏலமலைப்பகுதியில் நியூட்ரினோ ஆலை அமைக்க முடிவு செய்தனர். இத்திட்டத்தை எதிர்த்துத்தான் நாங்கள் போராடுகிறோம்.

“அனைவரையும் உள்ளடக்கிய தேவாரம் விவசாயிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம் அமைத்துள்ளோம். இதன் தலைவர் திரு.ஏ.பி.எம். வெள்ளைச்சாமி. இதன் செயலாளர் திரு. புகழேந்தி. மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள்” என்றார்.

நியூட்ரினோ ஆய்வு என்பது என்ன ஆய்வென்று சொல்லமுடியாத ஒன்று. அணுத்துகள்களின் ஆற்றல் குறித்து அறிவதற்கு நடத்தும் ஆய்வு என்கிறார்கள்.  நியூட்ரினோ பற்றி யாராவது கண்டுபிடித்து அறிவித்தால் அவருக்கு நோபல் பரிசு வழங்கவும் தயாராக இருக்கிறார்கள்.

 கனடா, வடஅமெரிக்கா, இத்தாலி, ஜப்பான், ஆகிய நாடுகளில் நியூட்ரினோ ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. அந்நாடுகளில் கனிமப் பொருட்கள் எடுப்பதற்காக வெட்டப்பட்டு காலியான அல்லது கைவிடப்பட்ட சுரங்கம் போன்றவற்றில் நியூட்ரினோ ஆய்வகங்கள் அமைத்துள்ளனர். நிலத்தடியில் சற்றொப்ப ஒன்றரை கிலோமீட்டர் முதல் இரண்டு கிலோமீட்டர் வரை ஆழமுள்ள சுரங்கங்களின் அடியில் நியூட்ரினோ ஆய்வு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை நியூட்ரினோ செயல்பாடுகள் என்னவென்று கண்டுபிடிக்கப்படவில்லை.

 இந்த நிலையில் நிலத்தடி ஆழ சுரங்கமில்லாத தமிழ்நாட்டில் நியூட்ரினோ ஆய்வுக்காகப் புதிதாக சுரங்கம் தோண்ட உள்ளார்கள். தேவாரம் பகுதியில் ஐந்தாயிரம் முதல் ஏழாயிரம் அடி வரை சுரங்கம் தோண்டப் போகிறார்களாம். இச்சுரங்கத்தின் அகலம் நூறு முதல் இருநூறு அடி வரை இருக்குமாம். இதனால் நிலத்தடி நீரோட்டத்தில் பல்வேறு கேடுகள் வரும். நியூட்ரினோ ஆய்வகத்தைச் சுற்றி ஆயிரம் மீட்டர் சுற்றளவுக்கு பாறைகள் இருக்க வேண்டுமாம். சில ஆயிரம் அடி தோண்டிய பின்னர் அவ்வாறு கரும்பாறை இல்லை என்றால் அதை அப்படியே கைவிட்டு விடுவார்கள்.

 முழுவதுமாக சுரங்கம் தோண்டப்பட்டால் அப்புறப்படுத்த வேண்டிய பாறைத் துகள்கள் ஐந்தரை இலட்சம் டன்கள் இருக்குமென்று கூறுகிறார்கள். இவ்வளவு பெரிய பாறைத் துகள் குவியல்களை எங்குபோய்க் கொட்டுவது?

 இந்தப் புழுதியையும் பாறைத் துகள்களையும் இரண்டரை இலட்சம் கன மீட்டர் உயரத்திற்கு நிறுத்தலாம் என்கிறார்கள்.

 மு. தனராசு சொல்கிறார் : “இவ்வளவு பெரிய சுரங்கம் தோண்டும் அதிர்வினால் நிலத்தடி நீரோட்டங்கள் அனைத்தும் மாறிவிடும். அதனால் நிலத்தடி நீரைக் கொண்டு நடைபெறும் வேளாண் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்படும்.

 “சுரங்கம் தோண்டும் அதிர்வினால் தேவாரம் முதல் கிழக்கே சங்கராபுரம், நாகலாபுரம் வரையிலும் சிலமலை சில்லமரத்துப்பட்டியிலிருந்து தெற்கே கோம்பை வரையுள்ள வீடுகள் எத்தனை எஞ்சி நிற்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.  ஏழு அங்குலம் விட்டமுள்ள ஆழ்துளைக் கிணறு தோண்டவரும் ரிக்குகள் போய் வருவதற்கு நம் ஊர்ச்சாலைகள் போதுமானதாக இல்லை. இருநூறு அடி விட்டமுள்ள சுரங்கம் தோண்ட வரும் பெரும் பெரும் இயந்திர வண்டிகள் வருவதற்குப் புதிய சாலைகள் போட வேண்டி வரும். இதில் எத்தனை ஊர்களும், எத்தனை வீடுகளும் காலி செய்யப்படுமோ?

 இந்தச் சுரங்கத்தை நிலை நிறுத்த ஐம்பத்து மூன்றாயிரம் டன் இரும்பு, நாலாயிரம் டன் உருக்கு, பன்னிரெண்டாயிரம் டன் சிமெண்டு, மூவாயிரத்து ஐநூறு டன் மணல் ஆகியவை தேவை என்கிறார்கள். இந்தப் பொருள்கள் எல்லாம் வந்து சேருவதற்கு அநேகமாக தேனிக்கும் சுரங்கத்திற்கும் இடையில் எந்த ஊருமே இருக்கமுடியாமல் போகலாம்” என்று முடித்தார் தனராசு.

 இவ்வளவு பேரிழப்புகளை ஏற்படுத்திவிட்டு வரும் இந்த நியூட்ரினோ சுரங்கத்தில் அப்பகுதி மக்களுக்கு - பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலை கிடைக்குமா என்றால் அதுவும் கிடைக்காது. உயர் தொழில்நுட்பக் கல்விகற்ற நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே வேலை கிடைக்கும். அவர்களும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

 இத்தனை அழிப்பு வேலைகளையும் முடித்தபின் உருவாகும் அச்சுரங்கத்தில் நடைபெறும் ஆராய்ச்சியினால் உண்டாகக் கூடிய அழிவுகள் கொஞ்சநஞ்சமல்ல. வானத்தில் சூரியனிலிருந்து வரும் நியூட்ரினோ அணுத்துகள்களையும் நிலத்தினடியில் சுரங்கத்தில் பாறைகளை உடைத்து உண்டாக்கிய அணுத்துகள்களையும் மோதவிட்டு மோதவிட்டு அதனால் உண்டாகும் கதிரியக்கத்தைக் கணக்கிடப் போகிறார்களாம்.

 அணுக்கதிர் வீச்சால் உண்டான பாதிப்புகளை உலகம் ஏற்கெனவே கண்டிருக்கிறது. ஜப்பானில் ஹிரோசிமா, நாகசாகி, ரஷ்யாவில் செர்னோபில், வடஅமெரிக்காவில் பிக்கினித் தீவு, தமிழ்நாட்டில் கல்பாக்கம் போன்றவை இதற்கான எடுத்துக்காட்டுகள்.

 பேரழிவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ள அணுஉலைகளை, அணு ஆராய்ச்சிக் கூடங்களை இந்திய அரசு திட்டமிட்டு தமிழ்நாட்டில் நிறுவி வருகிறது. இதற்கான நோக்கத்தைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்பாக்கத்திலுள்ள அணு உலைகள் மின்சாரம் தயாரிக்க மட்டுமல்ல. அணுஆயுத ஆராய்ச்சிக்கானவையும் ஆகும். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் எட்டு அணுமின் உலைகள் ரஷ்ய உதவியுடன் நிறுவப்படுகின்றன. தமிழ்நாட்டின் வடக்கு எல்லை ஓரமாக ஆந்திர மாநிலத்தின் தெற்குப் பகுதியில் ஸ்ரீஅரிகோட்டா விண்கல ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கேயும் அணு ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் தெற்கு எல்லை ஓரத்தில் நாகர்கோயிலை ஒட்டி கேரளப் பகுதியில் தும்பா என்ற இடத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்துள்ளார்கள். இங்கேயும் அணு ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது.

 ஆபத்து இல்லாத அணு ஆற்றல் பயன்பாடு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே அணுக்கதிர் வீச்சுக் கசிவால் அழிவு ஏற்பட்டால் அது தமிழ்நாட்டில் ஏற்படட்டும், வடமாநிலங்களில் ஏற்படக் கூடாது என்ற ‘தொலைநோக்கோடு’தான் இந்தியா தமிழ்நாட்டை அணுக்கிடங்காக மாற்றிக் கொண்டிருக்கிறது.

 எனவே, தேவாரப் பகுதி மக்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் இந்தியா அணு ஆபத்துக்குள் சிக்கவைப்பதைத் தமிழ்மக்கள் இனம்கண்டுகொள்ள வேண்டும். நியூட்ரினோ அணுத்துகள் ஆய்வகத்தை வரவிடாமல் தடுக்கத் தேவாரம் பகுதி மக்கள் நடத்தும் போராட்டத்தைத் தமிழகம் தழுவிய போராட்டமாக மாற்ற வேண்டும்.

- மகிழ்நன்

(இக்கட்டுரை தமிழ்த் தேசத் தமிழர் கண்ணோட்டம் ஜனவரி 2010 இதழில் வெளியானது)

Pin It