Tsunamiம். க்கும். க்குக்கு க்கும். வணக்கம். நா கரிச்சான் பேசுறேன்.

பனிக்காலமில்லையா, தொண்டை கொஞ்சம் கரகரப்பா இருக்கு. உலகம் முழுக்க எத்தனையோ சூழல் நிகழ்வுகள் நடக்கின்றன. எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கணும்கிறதுதான் என்னோட ஆசை. ஆனா பாருங்க, அது ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னதான் இணையம், டிவி, ரேடியோ, நாளிதழ்னு வந்தாலும் மனுஷ அக்கறைகளை வெளிப்படுத்தும் சேதிக எல்லாம் எங்கோ மூலையில, பற்றாக்குறை இடத்தை நிரப்புறதுக்குத்தான் போடறாக. அதுக்காக அதையெல்லாம் தெரிஞ்சிக்காம இருக்கலாமா. அதான், கொஞ்சம் விசனப்பட்டு நானே தேடிட்டேன். வாருங்க, மேல படிப்போம்...

2004ம் ஆண்டு இந்தியாவைத் தாக்கிய ஆழிப் பேரலையை (சுனாமி) யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் இது போன்ற பேரழிவுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டு, எதிர்காலத்தில் முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவதே வளர்ச்சிக்கு அடையாளம். இதை சிறப்பாக வெளிப்படுத்துகிறது கேரளாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழிப் பேரலை அருங்காட்சியகம். ஆழிப் பேரலைக்கு இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள முதல் அருங்காட்சியகம் இது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆலப்பாடு கிராமத்தில் ரூ. 10 லட்சம் செலவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 2004 ஆழிப் பேரலையில் அதிக மக்களை பலி கொடுத்தது ஆலப்பாடு கிராமம்தான்.

ஆழிப் பேரலையின் ஆபத்துகளை விளக்கும் இந்த அருங்காட்சியகம், ஆழிப்பேரலை மூன்றாவது நினைவு நாளை ஒட்டி (26 டிசம்பர் 2007) திறக்கப்பட்டது. ஆழிப் பேரலை எச்சரிக்கைகளுக்கு எப்படி எதிர்வினையாற்ற வேண்டும், சமிக்ஞைகள் மூலம் எதிர்வரும் ஆபத்தின் அளவை எப்படி உணர்ந்து கொள்வது என்று இங்கு விளக்கப்பட்டுள்ளது என்று அருங்காட்சியக ஒருங்கிணைப்பாளர் பிரீதா ஜார்ஜ் தெரிவிக்கிறார். கடலோர மண்டலங்கள் பற்றிய விவரம், கிராம வாழக்கை, ஆழிப் பேரலைக்கு முந்தைய ஆலப்பாடு ஊரின் தோற்றம் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. டிசம்பர் 26 நிகழ்வுகளை காட்சிப்படுத்தும் தனிசுவர் பகுதி குழந்தைகளுக்காக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஆழிப் பேரலையில் தப்பிய குழந்தைகளின் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆழிப் பேரலைக்கு முன் கடலில் ஏற்படும் மாற்றங்களை காட்சிப்படுத்தும் தொடுஉணர் திரைகள் அமைக்கப்பட்டுள்ளது, இந்த அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு மிக நெருக்கமானது என்று உணர்த்துகிறது. இது போன்ற முயற்சிகள் சமூகத்துக்கு பெரும் பயனளிக்கும். அருங்காட்சியகம் அமைக்க ரூ. 10 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது என்று சொன்னேன் இல்லையா, எந்தச் செலவும் இல்லாம, சுற்றுச்சூழலில் கலந்துள்ள நச்சைக் கண்டறிய இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புது முறையை கண்டுபிடித்திருக்கிறார்கள். அது என்ன?

ஆபத்தான டி.டி.ற்றி. நச்சு விவசாயத்தில் பயன்படுத்தப்படும் டி.டி.ற்றி. எனும் பூச்சி மருந்து உலகெங்கும் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனால் இந்த டி.டி.ற்றி. நச்சு தாய்ப்பாலிலும் கலந்துவிட்டது. இன்னமும்கூaட உலகின் பல பகுதிகளில் இந்த பூச்சிக்கொல்லி நச்சு உலவி வருகிறது. குறிப்பிட்ட ஒரு பகுதியில் டி.டி.ற்றி. நச்சு கலந்திருக்கிறதா என்பதை அறிய இனிமேல் பெரிய ஆய்வுகள் செய்யத் தேவையில்லை. பறவைகளின் முட்டைகளைக் கண்காணித்தாலே போதும். பறவை முட்டை ஓடுகளில் வெள்ளைக்குப் பதிலாக சிவப்பு-பழுப்பு புள்ளிகள் காணப்பட்டால் அப்பறவைகளின் உணவில் டி.டி.ற்றி. கலந்துள்ளது என்பதை அறியலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ராப்டர் எனப்படும் ஊனுண்ணி கழுகு இன பறவைகளிடம் ஆக்ஸ்போர்ட்-கார்டிப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் இது தெரிய வந்துள்ளது.

டி.டி.ற்றி. மற்றும் கால்சியம் குறைபாடு காரணமாகவே பறவை முட்டை ஓடுகளில் புள்ளிகள் தோன்றுகின்றன. முட்டை ஓடுகள் உருவாகக் காரணமாக இருக்கும் கால்சியத்தை இந்தப் பூச்சிக்கொல்லி தடைசெய்வதால், புள்ளிகள் தோன்றுகின்றன. சுற்றுச்சூழலில் டி.டி.ற்றி. மாசு எவ்வளவு கலந்துள்ளது என்பதை கண்காணிக்க பறவை முட்டை ஓடுகளை ஆராயும் இந்த முறை பாதுகாப்பானது, செலவு மிகக் குறைவு. ராப்டர் பறவைகள் இரையின் எலும்புகளையும் உண்பதால், அவற்றுக்கு கால்சியம் குறைபாடு ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, அவற்றின் உடலில் டி.டி.ற்றி. நச்சு சேர்ந்திருப்பதை இது உறுதிப்படுத்துகிறது.

ஏற்கெனவே, கால்நடைகளின் உடலில் கலந்துள்ள பூச்சி மருந்துகள் காரணமாகவே இந்தியாவில் பிணந்தின்னி கழுகுகள் இனம் அதிவேகமாக அழிந்து வருகிறது. இந்த மருந்துகள் கால்நடைகளின் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க பயன்படுத்தப்பட்டன. இப்போது டி.டி.ற்றி. நச்சு ராப்டர் பறவைகளின் உடலில் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டி.டி.ற்றி. உள்ளிட்ட நச்சு பூச்சிக்கொல்லிகள் நாம் சாப்பிடும் தானியங்களின் மீது கொட்டப்படுகின்றன. அவை எந்த விளைவை ஏற்படுத்தும் என்பதை இந்த ஆராய்ச்சிகள் எடுத்துரைக்கின்றன. பூச்சிக்கொல்லிகள் நச்சு என்றால், நாம் சுவாசிக்கும் காற்றை டீசல் மாசுபடுத்துகிறது. அதன் பயன்பாட்டை குறைக்க என்ன செய்யலாம்?

சுற்றுச்சூழல் வரி

டீசல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் தில்லி மாநில அரசு டீசல் எரிபொருளுக்கு சுற்றுச்சூழல் வரி விதிக்க முடிவெடுத்துள்ளது. இதன்படி ஒரு லிட்டர் டீசலுக்கு 25 பைசா வரி விதிக்கப்படும். இந்த வரி மூலம் திரட்டப்படும் தொகை, தில்லியின் 'தூய்மை காற்று செயல்திட்ட'த்துக்கு நிதியாக பயன்படுத்தப்படும். இந்த வரி மூலம் ரூ. 48 கோடி திரட்ட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தில்லி மாநிலத்தில் டீசல் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தவும், தில்லியின் காற்று தரத்தை டீசல் மாசுகள் பாதிக்கும் போக்கை குறைக்கும் வகையிலும் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.

தனி வரி விதிக்கப்பட்டாலும்கூட, டீசலின் விலை அதிகரிக்கவில்லை. பெட்ரோலைவிட டீசல் விலை 30 சதவிகிதம் குறைவாகத்தான் உள்ளது. வாகனங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குறிப்பிட்ட சாலைகள், பகுதிகளை பயன்படுத்த வரி விதிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் காரில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு குறைவாகச் சென்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. நகரங்களில் பெருகி வரும் வாகன நெரிசல், மாசுபடுத்துதலைக் குறைக்க இது போன்ற கட்டுப்பாடுகள் அவசியம். இந்தியாவில் தில்லியில் முன்மொழியப்பட்டது போன்ற சிறு முயற்சிகள் அவ்வப்போது எடுக்கப்படுகின்றன. இது போதாது, இன்னும் பெருக வேண்டும். அப்படிப்பட்ட பெரும் முயற்சிகளில் ஒன்று மும்பையில் நடந்துள்ளது.

ஒரு மணி நேர மின்நிறுத்தம்

நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிப்பதால் புவி வெப்பமடைதல் அதிகரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையில் ஒரு மணி நேரம் மின்பயன்பாட்டை நிறுத்தும் பிரசாரம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 15ம் தேதி இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை இந்த பிரசார செயல்பாடு நடந்தது. பகல் நேரத்தில் நடந்தால் தெரியாது என்பதால், இரவு நேரம் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தப் பிரசாரம் நடைபெற்றுள்ளது. இந்த பிரசாரத்துக்கு 'பட்டி பந்த்' என்று பெயர் சூட்டப்பட்டது. மும்பையைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் புவி வெப்பமடைதல் விழிப்புணர்வுக்காக இப்பிரசாரத்தை மேற்கொண்டனர்.

இந்த பிரசாரத்தின் முக்கிய அம்சமாக வீட்டு மின்சார பயன்பாட்டை ஒரு மணி நேரம் நிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. நவி மும்பை, கல்பாதேவி பகுதி மக்கள் இந்த பிரசாரத்துக்கு பெரும் ஆதரவு அளித்தனர். இதன்மூலம் சர்ச் சேட், போரிவிலிக்கு இடைப்பட்ட பகுதிகளில் 78 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டது என்கிறார் பிரசாரத்தை ஒருங்கிணைத்த நீல் குரேஷி. கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய துறைமுக நகரான சிட்னியில் 'பூமி நேரம்' என்ற பெயரில் பிரசாரம் நடத்தப்பட்டது. அப்போது சிட்னி நகரில் 20 லட்சம் மக்கள் மின் பயன்பாட்டை நிறுத்தியதன் மூலம், 10 சதவிகித எரிசக்தி பயன்பாடு குறைந்தது. அதனால் ஈர்க்கப்பட்டு அதேபோன்ற பிரசாரத்தை மும்பையில் நடத்த நீல் குரேஷி, கெய்த் மேனன், ருஸ்தம் வார்டன், ஷிலாதித்ய சக்கரவர்த்தி ஆகிய நான்கு இளைஞர்கள் தீர்மானித்தனர்.

''ஒவ்வொரு தனி நபரும் மாற்றத்தை உருவாக்க முடியும்'' என்று வலியுறுத்தி மூன்று மாதங்களுக்குப் பிரசாரம் செய்தனர். மின் ரயில்கள், பேருந்துகள், சாலைகள் என மக்கள் கூடுமிடங்களில் பிரசாரம் நடத்தப்பட்டது. நாங்கள் நான்கு பேரும் தலா 10,000 பேரிடம் பேசியிருப்போம் என்கிறார் நீல் குரேஷி. மின் பயன்பாட்டை குறைப்பது மட்டுமின்றி மனிதச் சங்கிலி, மெழுகுவர்த்தி பேரணிகள் போன்றவற்றையும் அவர்கள் நடத்தினர். இந்த இளைஞர்களின் பிரசாரத்துக்கு ஆதரவு அளிக்குமாறு மும்பை மேயர் சுபா ரால், நகராட்சி ஆணையர், மும்பை காவல்துறை ஆணையர் ஆகியோரும் கோரிக்கை விடுத்து ஆதரித்தனர். அதிகார வர்க்கத்தினர் நடவடிக்கை எடுக்காவிட்டாலும், இதுபோன்ற விஷயங்களை ஆதரிக்கிறார்களே. அந்த வரை பாராட்ட வேண்டியதுதான்.

இப்போ நான் பூச்சி பிடிக்க போவணும். அதுக்குப் பெறவு சேதிகள பிடிச்சுக்கிட்டு அடுத்த மாசம் வாரேன்.

ஆதி

Pin It