அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஒவ்வொரு ஆண்டும் மனிதர்கள் 50 பில்லியன் டன் மண்ணையும், கற்களையும் பூமியில் இருந்து சுரண்டுகின்றனர் என்று சமீபத்திய ஐநா ஆய்வு கூறுகிறது. நீரிற்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் சுரண்டப்படும் பொருள் மண்ணே.
மதிப்பில்லாத மண்
ஆனால் நீர் போல அரசுகள் மற்றும் தொழிற்துறை இதை முக்கிய மூலவளமாகக் கருதுவதில்லை. இந்தப் போக்கு விரைவில் மாற வேண்டும். கூடுதல் கண்காணிப்பு, விநியோகச்சங்கிலி, எடுக்கப்படும் மண் மூலம் இழக்கப்படும் தாவர விலங்கினங்களுக்கு சமமான இழப்பீடு, சமத்துவமற்ற மண் சுரண்டலிற்கு எதிரான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ நா அறிக்கை வலியுறுத்துகிறது.
கட்டுமானம் முதல் தகவல் தொடர்பு வரை
தொழிற்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமானம் முதல் தகவல் தொடர்புத்துறை உட்பட பல்வேறு துறைகளின் முன்னேற்றத்திற்கு ஆதாரமாக இருப்பது மண்ணே. இந்நிலையில் மண் குறித்த அடிப்படைப் புரிதலும், அதன் மதிப்பும் உணரப்பட வேண்டும் என்று ஐ நா ஆய்வுக் குழு வலியுறுத்துகிறது.
மனித குலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் மண்ணை நம்பியே இருக்கும்போது அது அனைத்து வகையிலும் முக்கியத்துவம் பெற்ற பொருளாக மதிக்கப்பட வேண்டும் என்று ஐநா சூழல் திட்டத்தின் உலக வள தகவல் தரவு மைய (Global Resource Information Database) இயக்குனரும், ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியருமான பாஸ்கல் பெடுஸி (Pascal Peduzzi) கூறுகிறார்.
மற்ற வளங்கள் போலவே மண்ணும் கட்டுப்பாடு இல்லாமல் சுரண்டப்பட்டால் அது மறைந்து போகும். இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று ஆய்வுக்குழு கூறுகிறது.
மண்ணை மதிக்கத் தெரியாத மனிதன்
மற்ற தாதுப்பொருட்கள் போலவே மண்ணும் கருதப்பட வேண்டும். பூமியில் தாதுக்கள், நீர், எண்ணெய் மற்றும் வாயு போன்றவற்றிற்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பும், முக்கியத்துவமும் மண்ணிற்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நியூ கேஸில் (Newcastle) பல்கலைக்கழக ஆய்வாளர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் மற்றொரு ஆசிரியர் கிறிஸ் ஹாக்னி (Chris Hackney) கூறுகிறார்.
கருந்துளை
ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கினால் மண் வணிகம் குறித்த தகவல்கள் பெரும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. மண் வியாபாரம் தொடர்பான தரவுகளைச் சுற்றிலும் ஒரு கருந்துளை (blackhole) நிலவுகிறது. இது தொடர்பான உலக மதிப்பிடல் தகவல் வலையமைப்பின் (Global Aggregates information network) புள்ளிவிவரங்களின்படி மண்ணை ஆதாரமாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தயாரிப்பு கடந்த ஆண்டு 4.9% உயர்ந்துள்ளது.
2020ல் 42.2 பில்லியன் டன் என்ற அளவில் இருந்து இது 2021ல் 44.3 பில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. உலகளவில் சுரண்டப்படும் மண் குறித்த துல்லியமான விவரங்கள் கிடைக்கவில்லை. அதைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அளவைப் பற்றி மட்டுமே விவரங்கள் கிடைக்கின்றன என்று ஐ நா கூறுகிறது.
மண் சுரண்டினால் சூழல் அழியும்
வரையறை இல்லாமல் தொடரும் மண் சுரண்டலால் உயிர்ப்பன்மயத் தன்மைக்கு இழப்பு ஏற்படுகிறது. புயல்களின்போது இயற்கை அரணாக இருக்கும் மண் குன்றுகள், மேடுகள் அழிவதால் வெள்ளப்பெருக்கு அபாயம் அதிகரிக்கிறது. இது மீனவர் சமுதாயத்தைப் பாதிக்கிறது. எரிபொருள் தகராறுகளுக்கும் வழிவகுக்கிறது. காலநிலைச் சீரழிவிற்கும் முக்கிய காரணமாகிறது. கான்க்ரீட் உற்பத்தி, உலகில் அதிகளவில் கார்பன் உமிழும் தொழிலாக மாறியுள்ளது.
தாவர விலங்கினங்களின் அழிவு
மண் மற்றும் சரளைக்கற்கள் சுரண்டலினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவப்புப் பட்டியல் தாவர விலங்கினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த உயிரினங்களின் எண்ணிக்கை 24,000 இனங்களுக்கும் கூடுதல். என்றாலும் இன்னமும் மண்ணிற்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
மண் என்னும் மகத்தான இயற்கைச் செல்வம் ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கும், சட்டரீதியிலான கட்டமைப்புகளுக்கும் இடையில் உள்ள விரிசல்களுக்கும் பிளவுகளுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறது என்று மண் ஆய்வாளர், மண் சொல்லும் கதைகள் (Sand stories) என்ற அமைப்பின் ஆசிரியர் மற்றும் ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரான கரன் பெரேரா (Kiran Pereira) கூறுகிறார்.
மாற்றுவழிகள்
மண் சுரண்டலைத் தடுக்க மாற்று வழிகள் உள்ளன என்று அறிக்கை கூறுகிறது. கட்டுமானப் பொருட்கள், மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். 2050ம் ஆண்டிற்கு முன் உலக மக்கட்தொகை 10 பில்லியனைத் தாண்டும். அப்போது உலக மக்களில் 70% பேர் நகரங்களிலேயே வாழ்வர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மண் மீதான மனிதனின் மோகம் வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தியாவில்
தர நிர்ணயமும் விதிமுறைகளும் ஒழுங்காகப் பின்பற்றப்படாத இந்தியா போன்ற நாடுகளில் மண்ணிற்கு கிராக்கி அதிகம் உள்ளது. இந்தியாவில் மட்டும் 2020 முதல் மண் சுரண்டல் தொடர்பான வன்முறைகள் மற்றும் விபத்துகளில் அரசு ஊழியர்கள் உட்பட நானூறுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.
கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறையில் இருக்கும் வியட்நாம் மெக்காங் (Mekong) டெல்ட்டாவில் கொரோனா கொள்ளைநோய் காலத்தில் சட்டவிரோத மண் சுரண்டல் அதிகரித்துள்ளது.
மண் எடுத்தல் தொடர்பான சர்வதேச விதிமுறைகள் உருவாக்கப்பட்டால் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அரசுகளால் எளிதில் செயல்படமுடியும் என்று கிறிஸ் ஹாக்னி கூறுகிறார்.
மண் சுரண்டினால் மனிதன் அழிவான்
மிதமிஞ்சிய நிலத்தடி நீரை எடுப்பதால் டெல்லி, பாக்தாத் உட்பட உலகில் பல நகரங்களும் மண்ணிற்கடியில் புதைந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மண் சுரண்டலை இதேபோல் தொடர்ந்தால் நாளை ஆறு, குளம், ஏரி போன்ற இயற்கை நீர்நிலை அமைப்புகளே இல்லாமல் போய்விடும். மண் என்னும் மகத்தான வளத்தின் மதிப்பை உடனடியாக மனிதன் உணராவிட்டால் அவனை அழிக்கும் மாபெரும் பேரிடராக விரைவில் அது மாறும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
உலகில் இதுவரை பதிவு செய்யப்பட்டதில் வெப்பமான ஆண்டாக 2021 இருந்தது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். புவி வெப்ப உயர்விற்குக் காரணமான கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் ஆகிய வாயுக்களின் அளவில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்குக் காரணம் என்று ஐரோப்பிய யூனியனின் கோபர்நிகஸ் காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் மையத்தின் (Copernicus Climate Change Services) ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஏழு ஆண்டுகள் சாதனை அளவு வெப்பம் நிலவிய ஆண்டுகள். 2021ல் சராசரி புவி வெப்பநிலை உயர்வு 1.1-1.2 செல்சியஸ் அதிகரித்தது. காலநிலை மாற்றம் வெள்ளப் பெருக்குகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூற்றை 20% அதிகரித்துள்ளது. இதற்கு முன் 2016, 2020 ஆகிய ஆண்டுகளில் மிக உயர்ந்த வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. 2015 பாரிஸ் உடன்படிக்கையின்படி உலக நாடுகள் புவி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸிற்குள் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன் பலன்கள் 2030ம் ஆண்டிலேயே தெரிய வரும்.
பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வு காலநிலை மாற்றத்தைத் தீவிரப்படுத்தியதால் உயரும் பூமியின் வெப்பம் வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர். ஐரோப்பா, சீனா ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்குகள் முதல் சைபீரியா, அமெரிக்கா ஆகிய இடங்களில் காட்டுத்தீ வரையுள்ள சம்பவங்கள் கார்பன் உமிழ்வின் அளவை அதிகரிக்கக் காரணமானது.
வரும் ஆண்டுகளில் இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 2021ல் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேனின் அளவு வெகுவாக அதிகரித்தது.
தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளில் மீத்தேன் அளவில் அதிகரிப்பு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விஞ்ஞானிகளால் உறுதியாகக் கூற முடியவில்லை.
கடந்த கோடையில் ஐரோப்பாவில் இதுவரை பதிவு செய்யப்பட்டதில் மிக உயர்ந்த வெப்பநிலை பதிவாகியது. இது பிரான்ஸ், ஹங்கேரி ஆகிய நாடுகளில் பல விளைபொருட்களின் அழிவிற்கும் காரணமானது. ஜூலை ஆகஸ்ட்டில் ஏற்பட்ட வெப்ப அலைத் தாக்குதல் துருக்கி, கிரீஸ் நாடுகளில் வனப்பகுதிகளை தீக்கிரையாக்கியது
ஜூலையில் மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருநூறிற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் வரலாறு காணாத பெருமழை, அதனால் பெரும் வெள்ளப் பெருக்குகள் ஆயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்வை நரகமாக்கியது. இந்தியா, பங்களாதேஷ் நாடுகளில் வீசிய புயல்களால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதே நிலை தொடர்ந்தால் நாளை மனிதன் வாழ பூமி என்றொரு கோள் இருக்குமா என்பது சந்தேகமே.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
எகிப்து ஷார்ம் எல்-ஷேக் (Sharm el-Sheikh) நகரில் நவம்பர் 6 முதல் நவம்பர் 18 வரை காப்27 காலநிலை உச்சி மாநாடு நடைபெற்றது. நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் பல உலக நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொள்ள வந்தனர். எகிப்து அரசு 200 நாடுகளின் தலைவர்களுக்கு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தது. மாநாட்டு அரங்கில் தலைவர்கள் தங்கள் நாட்டுப் பிரதிநிதிக் குழுவினருடன் கலந்துரையாடினர். தங்கள் நாடுகள் கூட்டத்தில் எடுக்க வேண்டிய நிலைபாடு பற்றி பேசினர்.
காப்27 என்றால் என்ன?
காலநிலை மாற்றம் என்பது பூமியில் எங்கோ இருக்கும் அலாஸ்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் மட்டும் நிகழ்ந்து கொண்டிருப்பதில்லை. மாற்றத்தின் மோசமான விளைவுகளை இன்று உலக மக்கள் அனைவரும் அனுபவிக்கிறோம். புதைபடிவ எரிபொருட்களின் மிதமிஞ்சிய பயன்பாட்டால் உயரும் புவியின் வெப்பம், சூழல் மீது தொடர்ந்தும் மனித குலம் ஏற்படுத்தி வரும் தாக்குதல் போன்றவற்றால் நிகழும் சீரழிவுகளை சமாளிக்க உலக நாடுகள் ஒன்றுகூடி செயல்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்த உதவும் ஐநாவின் தலைமையிலான மாநாடு இது.
ஆண்டுதோறும் நடைபெறும் இதில் ஐ நா உறுப்பினர்கள் அனைவரும் பங்காளி நாடுகள் (cop). 2021ல் காப்26 யு கே ஸ்காட்லாந்து க்ளாஸ்கோ நகரில் நடந்தது. எகிப்து மாநாடு இருவார காலம் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொள்ள ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், இயக்கவாதிகள் உட்பட 9000 பேர் பதிவு செய்து கொண்டனர். மாநாட்டுக் கூடத்தில் பல நாடுகளின் மக்கள் அமைப்புகள், சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் தங்கள் அரங்குகளை தனித்தனியாக அமைத்தன.
நீல மண்டலம்
ஐ நாவின் கட்டுப்பாட்டில் செயல்படும் உயர் பாதுகாப்பு நீல மண்டலத்தில் (blue zone) முக்கியப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் மையக் கூடம் அமைந்திருந்தது. இதைச் சுற்றி இந்த அமைப்புகள் தங்கள் அரங்குகளை அமைத்தன. இங்கு விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், வணிக நிறுவனத் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் சூழல் செயல்பாட்டாளர்கள் முக்கிய சூழல் பிரச்சனைகள் குறித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். நவம்பர் 8, 2022 முதல் இது தொடங்கும் என்று நம்பப்படுகிறது.
பன்னாட்டு காலநிலைக் கூட்டங்கள்
இங்கிருந்தே பன்னாட்டு சூழல் பாதுகாப்பு குறித்த அமர்வுகள் உண்மையில் வடிவம் பெறுகின்றன என்று நேச்சர் பாசிட்டிவ் (Nature Possitive) சூழல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் லாய்டு (James Lloyd) கூறினார். பன்னாட்டு சூழல் உச்சி மாநாடுகள் அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் வெறும் கூட்டங்கள் அல்ல. உலக மக்கள் தங்கள் குரலை ஓங்கி உயர்த்த ஒரு களம்.
தொடக்க நாட்களில் என்ன நடந்தது?
மாநாட்டின் ஆரம்ப நாட்களில் உள்ளூர் நிர்வாகிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சூழல் இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அனுமதிக்கப் பட்டனர். ஒத்துழைப்பை மேம்படுத்தி சூழலைக் காக்க உதவும் இலக்குகளை அடைய ஆட்சியாளர்களுக்கு இக்கருத்துப் பரிமாற்றங்கள் உதவுகின்றன.
முன்னோக்கி செல்ல
கார்பன் உமிழ்வைக் குறைக்க, முந்தைய மாநாடுகளில் எடுக்கப்பட்ட இயற்கை நட்புடைய தீர்மானங்களின் முன்னேற்றத்தைக் குறித்து ஆராய இந்த அமர்வுகள் துணைசெய்கின்றன. காப்26 க்ளாஸ்கோ மாநாட்டில் அதிபர்கள், பிரதமர்கள், பழங்குடியினத் தலைவர்கள், க்ரெட்டா தன்பெர்க் உட்பட சூழல் போராளிகள், பல உலகப் பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்கள் இந்த அமர்வுகளில் கலந்து கொண்டனர்.
பசுமை மண்டலம்
நீல மண்டலத்தில் நாடுகளின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதிக் குழுக்கள் ஊடகத் துறையினர், நோக்கர்கள் மற்றும் சூழல் தன்னார்வ அமைப்பினருடன் கலந்துரையாடினர். மாநாட்டின் மற்றொரு முக்கியப் பகுதியான பசுமை மண்டலத்தில் (green zone) நிறுவனங்கள் தங்கள் பசுமை கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் இவற்றைப் பார்வையிட்டனர்.
காப் மாநாடுகளில் உலகத் தலைவர்கள் பங்கேற்கும் நீல மண்டலப் பகுதி அரசு நிர்வாகிகள், தலைவர்கள் தவிர மற்றவர்களுக்கு மூடப்படும். என்றாலும் தலைவர்களின் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தங்கள் அரசுகளை காலநிலை சீர்கேடுகளை அகற்ற வலியுறுத்தி சூழல் ஆர்வலர்கள் ஐநா விதிகளுக்கு உட்பட்டு அணிவகுப்புகள், போராட்டங்களை நடத்தினர்.
காப்27
விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்களின் விலையுயர்வு, வளரும் நாடுகள் தங்களுக்குப் பணக்கார நாடுகள் க்ளாஸ்கோ காப் 26 மாநாட்டில் அறிவித்து பின் காற்றில் பறக்கவிட்ட நிதியுதவிக்கான வாக்குறுதிகள் போன்ற பிரச்சனைகள் பற்றி தீவிரமாக விவாதிக்கப்பட்டன.
காலநிலை மாற்றம் என்பது உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்கொண்டு சமாளிக்க வேண்டிய பிரச்சனை. இதற்கு அர்த்தமுள்ள தீர்வு காண உலகம் கை கோர்த்து செயல்பட வேண்டும் எண்று உணவு முறைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஏற்பாட்டாளருமான கேட் குக் (Kate Cooke) கூறுகிறார்.
உலகம் உற்றுநோக்கும் உச்சி மாநாடு
2050ம் ஆண்டிற்குள் உலகில் எல்லாக் குழந்தைகளும் வெப்ப அலைத்தாக்குதலால் பாதிக்கப்படுவர், மீளமுடியாத சீரழிவை நோக்கி பூமி சென்று கொண்டிருக்கிறது, மனித குலத்தையே அச்சுறுத்தும் ஆறாம் இனப்பேரழிவு தொடங்கி விட்டது என்று ஒவ்வொரு நாளும் காலநிலை ஆய்வறிக்கைகள் நம்மை எச்சரிக்கும் நேரத்தில் எகிப்தில் நடைபெற்ற காப்27 ஷெர்ம் எல்-ஷேக் மாநாடு க்ளாஸ்கோ போல் அல்லாமல் சூழலைக் காக்க அதன் மூலம் நம்மை நாமே காத்துக் கொள்ள உருப்படியான முடிவுகளை எடுக்க முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
காலநிலை ஆய்வாளர்களுக்கு இது அச்சுறுத்தும் சமயமாக உள்ளது. பூமியின் எதிர்காலம் மங்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் அவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிரூபிக்கும்போதே அடுத்தடுத்த பேரிடர்கள் எல்லா பகுதிகளிலும் நிகழ்ந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதிதீவிரப் புயல்கள், கடுமையான வறட்சி, பெருவெள்ளப் பெருக்குகள், பனிப்பாறைகளின் வேகமான அழிவு போன்றவை விஞ்ஞானிகளை மேலும் திகிலடையச் செய்கிறது. விஞ்ஞானிகள் விடும் எச்சரிக்கைகளைக் காட்டிலும் மோசமாக அதைவிட பல மடங்கு நாசத்தை ஏற்படுத்தும் வகையில் அடுத்தடுத்த அழிவுகள் தொடர்கின்றன.
எங்கெங்கு இலாதபடி
இங்கிலாந்தில் நிலவிய 40.3 டிகிரி வெப்பநிலை, நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை நீருக்குள் மூழ்கடித்த பாகிஸ்தான் பெருமழை, வெள்ளம், சோமாலியாவில் கடந்த நான்காண்டுகளாக நிலவும் கொடும் வறட்சி, அமெரிக்காவில் வீசிய 2021 ஹரிக்கேன் ஐடா போன்றவை சூழல் நாசத்தின் எதிரொலிகளில் ஒரு சில மட்டுமே. எதிர்பார்த்ததை விட புவி வெப்ப உயர்வு ஏற்படுவது மட்டும் இதற்குக் காரணம் இல்லை. இதன் விளைவாக நிகழ்ந்த அழிவுகள் எதிர்பார்த்ததைவிட பேரழிவுகளாக உள்ளன என்பதே பிரச்சனை.
வெப்ப உயர்வு குறித்த மாதிரி கணிப்புகளின்படியே புவி வெப்ப உயர்வு இருந்தாலும், காலநிலை மாற்றம் அதிவேகத்தில் நிகழ்வதே இன்றுள்ள அச்சம் என்று அமெரிக்க காலநிலை ஆய்வாளரும், பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானியுமான மைக்கேல் இ மேன் (Michael E Mann) கூறுகிறார். கணிப்பதைவிட பேரிடர்கள் அதிதீவிரத்துடன் விரைவாக நிகழ்கின்றன என்று ஜெர்மனியின் பாட்ஸ்டம் (Potsdam) காலநிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் ஜோஹன் ராக்ஸ்ட்ரம் (Johan Rockstrom) கூறுகிறார்.
1.2 டிகிரி சூட்டில் சுழலும் பூமி
தொழிற்புரட்சி காலத்தை விட 1.2 டிகிரி அதிக வெப்பநிலையில் பூமி உள்ளபோது இவை நிகழ்கின்றன. சமீபத்தில் நடந்த பன்னாட்டு காலநிலை (IPCC) கூட்டத்தில் வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த நாடுகள் உறுதியளித்தாலும், 1.5 என்ற அளவு பத்தாண்டுகளுக்குள் எட்டப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விளைவு இப்போதுள்ளதை விட மோசமான வறட்சி, வெப்ப அலைத் தாக்குதல்கள், பெருவெள்ளம், அதிதீவிர நோய்ப்பரவல் உட்பட உலகம் 1.5 டிகிரி வெப்ப உயர்வை எட்டும்போது இயற்கையின் நான்கு அம்சங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என்று ஜோஹன் தலைமையில் அமைந்த ஆய்வுக்குழுவின் அறிக்கை கூறுகிறது. கிரீன்லாந்து மற்றும் மேற்கு அண்டார்டிகா பனிப்பாறைகள் உருகுதலால் கடல்நீர் மட்டம் பல இடங்களில் பல மீட்டர்கள் அளவு உயரும்.
கனடா, ரஷ்யாவில் இருக்கும் உறைபனிப்பகுதிகள் உருக ஆரம்பிக்கும்போது அவற்றில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை விட பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் பசுமைக்குடில் வாயுவான மீத்தேன் பெருமளவில் உமிழப்படும். 1.5 டிகிரி வெப்பநிலையில் எல்லா இடங்களிலும் இருக்கும் பவளப்பாறைகள் அழிய ஆரம்பிக்கும்.
பூமியில் வாழத் தகுதியான இடங்கள் இல்லை
நம் குழந்தைகளுக்கும், வரப் போகும் தலைமுறைகளுக்கும் மனிதன் வாழத் தகுதியான இடங்கள் சுருங்கிவிட்ட பூமியையே நம்மால் ஒப்படைக்க முடியும் என்பதே இதன் பொருள். பேரழிவை ஏற்படுத்தும் விளிம்பை நோக்கி பூமி மெல்ல மெல்ல தள்ளாடி தள்ளாடி நகர்ந்து கொண்டிருக்கிறது.
காப்27 உச்சிமாநாடு
எகிப்து ஷெர்ம் எல்-ஷேக் காப் 27 காலநிலை உச்சிமாநாடு ஐநாவின் “உலகம் பூமி 2.8 டிகிரி சி வெப்ப உயர்வை நோக்கி விரைவாக சென்று கொண்டிருக்கிறது” என்ற எச்சரிக்கையுடனேயே நிகழ்கிறது. 2021 க்ளாஸ்கோ மாநாட்டிற்குப் பிறகு ஒரு ஆண்டை உலக நாடுகள் வீணாக்கி விட்டன என்று கிராண்ட்தம் (Grantham) காலநிலை ஆய்வு மையத்தின் கொள்கை வகுப்புப் பிரிவின் இயக்குனர் பாப் வார்டு (Bob Ward) கூறுகிறார். காலநிலை சீரழிவுகளால் ஏழை நாடுகளில் அதிகரித்து வரும் இழப்பு மற்றும் சேதங்களை மேற்கித்திய நாடுகள் உணர வேண்டும்.
1.5 வரையறை
2050ம் ஆண்டிற்குள் சுழி நிலை கார்பன் உமிழ்வுநிலையை அடைய வேண்டுமென்றால் அதை ஆண்டிற்கு 5 முதல் 7% குறைக்க வேண்டும். இப்போது இந்த அளவு ஆண்டிற்கு 1 முதல் 2% வரை உள்ளது. அதனால் கார்பன் உமிழ்வின் குறைப்பு என்பது காப்27 மாநாட்டின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் ஏழை நாடுகள் இழப்பு, நஷ்டைஈடு கோருவதையே முக்கிய பொருளாக எடுத்துக் கொள்ளும் என்று நம்பப்படுகிறது.
பழி ஒரு இடம் பாவம் ஒரு இடம்
புவி வெப்ப உயர்விற்கு முக்கிய காரணமாக இருக்கும் பணக்கார நாடுகள் தங்கள் பொருளாதார வசதிக்காக கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் நாட்டம் காட்டாதபோது வெப்ப உயர்வின் பாதிப்புகளை ஏழை நாடுகளே அதிகம் அனுபவிக்கின்றன. அதனால் நஷ்டஈடு கோருதலே பேசுபொருட்களில் முக்கிய இடம் பெறும் என்று நோக்கர்கள் கருதுகின்றனர். வளரும் நாடுகளின் இந்த கோரிக்கை நியாயமானது என்று ஜோஹன் உட்பட பல விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதில் பணக்கார நாடுகள் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்று யு கே வானிலை நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்டீபன் பெல்ச்சர் (Stephen Belcher) கூறுகிறார். இனி வெட்டிப் பேச்சுக்கள் பேசி வீணாக்க நேரமில்லை. உடனடியாக செயலில் இறங்க வேண்டும் என்று அவர் புகழ்பெற்ற கார்டியன் நிறுவனத்திற்கு அளித்த நேர்முகத்தில் கூறியுள்ளார்.
அடைபடும் வாய்ப்புகள்
இன்னமும் காலம் இருக்கிறது. ஆனால் தாமதிக்கப்படும் ஒவ்வொரு விநாடியும் பூமியை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டேயிருக்கின்றன. சாளரங்கள் அடைபடுகின்றன என்பதை உணர்ந்து காப்27 உச்சி மாநாட்டில் உலக நாடுகள் செயல்படவேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- Fukushima அணு உலை விபத்து - பத்தாண்டுகள் கடந்து அங்கு நிலவும் சூழல் என்ன?
- மரண பள்ளத்தாக்கில் பதியப்பட்ட பூமியின் அதிகபட்ச வெப்பமும், கலிபோர்னியாவின் காட்டுத் தீ காலமும்
- கடல் பகுதிகளை அச்சுறுத்தும் கச்சா எண்ணெய் - சுற்றுச்சூழல் பாதிப்பில் மொரிஷியஸ் தீவுகள்
- சுற்றுச் சூழல் தாக்க அறிக்கை 2020 (EIA 2020) ஏன் எதிர்க்கப்பட வேண்டியது?
- இ.ஐ.ஏ 2020 எதிர்ப்புகள் வலுப்பெறுமா?
- சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்
- 5 டிரில்லியன் பொருளாதாரம்: நாம் கொடுக்கப் போகும் விலை என்ன?
- பிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்
- சுற்றுச்சூழல் - அறிவியல் அறிஞர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
- கனிம எரிபொருள் துறையும், சீரழியும் சுற்றுச்சூழலும்
- பேரழிவினால் நிலை குலைந்திருக்கும் ஆஸ்திரேலியா!
- கிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்
- சூழலியல் - நாய் விற்ற காசு குரைக்குமா?
- புவி வெப்பமடைதல் - ஓர் எச்சரிக்கை
- சூழலியல் பேரழிவுக்குத் தொழில்நுட்பத் தீர்வுகள் போதா!
- காஸாவின் பாதிப்புகளால் சுற்றுச்சூழல் ஆபத்துகளை எதிர்நோக்கும் இஸ்ரேல்!
- பருவநிலை மாற்றமும், பேரழிவு புயல்களும்
- பருவநிலை மாற்றத்தால் உலகிற்கு பேராபத்து
- பிளாஸ்டிக்கை ஒழிப்போம்! உயிரினங்களை காப்போம்!
- ஆற்றுநீர் கடலில் கலப்பது வீணானதா?
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.