அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ப.தனஞ்ஜெயன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
இ.ஐ.ஏ என்பது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environment Impact Assessment 2020) ஆகும். இன்று இருக்கும் அசாதாரண நிலையில் இந்தியா சந்தித்து வரும் கடுமையான காலகட்டத்தில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றத் துடிப்பதன் பிண்ணணி என்ன என்கிற கேள்விகள் அனைவரிடத்திலும் எழுகிறது. இன்னும் கொரோனா தொற்றிலிருந்தே எந்த ஒரு மனிதருக்கும் உத்திரவாதம் இல்லாத நிலை, புலம்பெயர்ந்த மனிதர்களின் சீரமைக்கப்படாத வாழ்வாதரம், தினந்தோறும் அதிகரிக்கும் வேலையில்லாத் தீண்டாட்டம், அரசின் மீது அவநம்பிக்கை, பேரிடர் கால நிவாரணத் தேக்கம், குழந்தைகளின் கல்வி குறித்த அக்கறையின்மை மற்றும் அன்றாட உணவுக்கான சூழலே திண்டாட்டமாக இருக்கிறபோது எதற்கு இந்தக் கட்டவிழ்த்துவிடும் நிலை?
இந்த இ.ஐ.ஏ திட்டத்தின் மூலம் நமது நாட்டில் எந்த இடத்திலும், உதாரணமாக காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரையிலும் எங்கு வேண்டுமானாலும் எப்படிப்பட்ட தொழிற்சாலைகளை நிறுவிக் கொள்ளலாம், அதற்கு விதிகளைத் தளர்த்துவதுதான் இவர்களது இலக்கு. இன்றைய சூழலில் எவ்வாறு அத்தகைய திட்டங்களை நிறைவேற்றுவது என யோசித்து தனது சதுரங்க வேட்டையை மத்திய அரசு ஆரம்பித்த்உள்ளது.
நாம் அனைவரும் கொரோனா நோய் தொற்றுக்கான தடுப்பு மருந்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் அல்லவா, இந்த நேரத்தில் மருந்து நிறுவனங்களை அனுமதிப்பது போன்று தன் வியூகத்தை அமைத்து, செயல்படுவதுதான் அரசின் நோக்கம். சில நாட்களுக்கு முன்பு வேடந்தாங்கலில் இப்படித்தான் பறவைகள் சரணாலயத்தை அழிக்கப் புறப்பட்டிருக்கும் மருந்து நிறுவனங்கள் பற்றிய செய்தி பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அவர்கள் இயற்கையைப் பற்றி கவலை கொள்வதே இல்லை.
1984 − ஆம் ஆண்டு போபால் விஷ வாயு சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியையும், இன்றளவும் தொடரும் அதன் துயரங்களையும் யாரும் எளிதில் மறந்து விட முடியாது. தொழிற்சாலை கட்டமைப்புகளின் வரம்பு மீறிய செயலைக் கண்காணிக்க வேண்டும் என்கிற, பெயரளவில் ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கையாகத்தான் 1986-ல் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.
அதன் ஒரு அம்சமாக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்கிற சட்ட நடைமுறை 1994-ம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்டது. சுரங்கம், தொழிற்சாலை, அணை போன்ற வளர்ச்சித் திட்டங்களால் நாட்டின் சுற்றுச்சூழலும் வளங்களும் அழிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் அதன் நோக்கம். ஆனால் அந்த நோக்கத்தின் படிமுறைகள், எந்த ஒரு திட்டத்திலும் இன்று வரை சரியாகவும் துல்லியமாகவும் நடைமுறைப் படுத்தப்படவில்லை.
அண்மையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கோபால்பட்டினத்தில் உள்ள பாலிமர் துறையைச் சார்ந்த ஆலை நிறுத்தி வைக்கப்பட்டு, திடீரென இயக்கும்போது ஏற்பட்ட பேரழிப்பையும், துயரங்களையும் அதற்குள் மறந்துவிட்டோம் அல்லவா? அதனால் தான் அவர்கள் இ.ஐ.ஏ 2020 சட்டத்தைத் துரிதப்படுத்துகிறார்கள்.
தற்போது, சூழலியல் தாக்க மதிப்பீடு - 2006 நடைமுறையில் உள்ளது. அதன் நோக்கமானது, சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து, அதைத் தடுப்பது, குறைப்பது, ஒழுங்குபடுத்துவது என்பதுதான். இது மக்களிடம் கருத்து கேட்பது, வல்லுநர்கள் அறிக்கை, ஆய்வுகள் எனப் பல வழிமுறைகளை உள்ளடக்கியது. இத்தகைய வழிமுறைகள் இருந்ததால் தான் நாம் அண்மையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடி தொழிற்சாலையை நிறுத்தி வைத்துள்ளோம்.
இவ்வளவு கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும் இந்த சூழலில் மத்திய அரசின் சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தால் கடந்த மார்ச் 12-ம் தேதி இ.ஐ.ஏ 2020 வெளியிடப்பட்டது. இந்தச் சட்ட வரையறையின் முக்கிய நோக்கம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு −2006க்கு நேர் எதிரானது. மக்கள் கருத்து கேட்கும் நாட்கள் 60 லிருந்து 40 நாட்களாகக் குறைக்கப்பட்டது, ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்றிருந்த ஆய்வறிக்கையை அரசே ஓராண்டுக்கு ஒரு முறை சமர்பிக்கும் முறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்குதல், உள்நாட்டு நீர்த்தடங்கள், நீர்ப்பாசன நவீனமயமாக்கல், அனைத்துவிதமான கட்டுமானத் திட்டங்கள் போன்றவற்றுக்கு விலக்கு அளிப்பது ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது. இவர்கள் பெரிய அளவில் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு, இயற்கையை அழிக்கும் திட்டங்களைப் பயன்படுத்த அனுமதிப்பது சுற்றுச் சூழலுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
எப்பொழுதுமே அரசு மக்கள் நலனையும், சுற்றுச் சூழல் நலனையும் கருத்தில் கொள்ளமால் சட்டவரையறைகளை நடைமுறைப்படுத்தும், அதை எதிர்த்து நாம் குரல் எழுப்பவதும் கடமையாக உள்ள இந்த தேசத்தில், மீண்டும் இந்தத் திட்ட வரையரையை எதிர்த்து வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அப்படி போராடத் தவறினால், அடுத்த தலைமுறையினர் உடலில் நிரந்தர நோய்ப் பிரச்சனையோடும், இயற்கை நிரந்தர ஊனமாகவும் மாறிவிடும் அளவிட முடியாத அபாயம் உள்ளது.
ஏற்கனவே தொழிற்சாலைக் கழிவுகளால் பெரும்பாலான மாநிலங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதையும், குடிப்பதற்குக் கூட நீர் இல்லாமல் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது தண்ணீர் விற்பனை நடப்பதுபோல், O2 காற்றுப்பைகள் விற்பனையாகும் நிலை வந்துவிடும்.
இந்தச் சட்டவரையறைக்கு எதிராகக் கருத்து கூறும் காலம் வரும் ஆகஸ்டு 11ம் தேதி−2020 வரை உள்ளதால் மக்கள் ஒன்று திரண்ட எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்ய வேண்டுமென்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அறிவியலர், இடது சாரி சிந்தனையாளர்கள் மற்றும் பாமர மனிதர்களின் குரல் ஒலிக்க ஆரம்பித்து விட்டது.
இந்தியாவின் பொருளாதாரம் தொழிற்சாலையால் முன்னேறுவதை விட, நம் வாழ்வாதாரமான வேளாண்விளை பொருட்களால் முன்னேற்றமடையச் செய்யலாம். நம் நாட்டின் சுற்றுச் சூழலை அழித்துதான் பொருளாதாரம் மேம்பட வேண்டுமென்றால், அந்த வளர்ச்சி தேவையே இல்லை. வாழும் காலம்வரை மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து விட்டுச் செல்ல வழி விடுங்கள்.
- ப.தனஞ்ஜெயன்
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: சுற்றுச்சூழல்
அமெரிக்காவில் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்த Dakota Access Pipeline திட்டம் சுற்றுச்சூழல் காரணிகளை கருத்தில் கொள்ளாமல் கட்டி முடிக்கப்பட்டது. 2017ல் இந்த வழித்தடத்தில் எண்ணெய்க் குழாய்கள் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், இன்னும் முப்பது நாட்களுக்குள் திட்டத்தை மூடிவிட வேண்டும் என்றும் (வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதிக்குள்), மேலும், இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆர்மி கார்ப்ஸ் இன்ஜினியர் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் (US District court) உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமெரிக்க பூர்வ குடிமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில் கச்சா எண்ணெய்களை எடுத்துச் செல்வதற்கு மாற்று வழியைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதாவது, ரயில்கள் மூலம் கொண்டு செல்லத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
Dakota Access Pipeline என்று அழைக்கப்படும் எண்ணெய்க் குழாய் திட்டமானது, அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் வடக்கு டகோட்டாவில் (North Dakota) ஆரம்பித்து தெற்கு டகோட்டா (South Dakota), அயோவா (Iowa) மாகாணங்களின் வழியே எண்ணெய்க் குழாய்கள் பதிக்கப்பட்டு கடைசியில் இல்லினாய்ஸ் (Illinois) மாகாணத்தில் முடிவதாக அமைக்கப்பட்டு இருந்தது. இதன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கட்டுமானப் பணிகளை ஆர்மி காப்ஸ் இன்ஜினியர்ஸ் என்ற நிறுவனம் மேற்கொண்டது.
குழாய்கள் பதிக்கும் கட்டுமானப் பணிகள் முடிந்த பின்னர் அதில் எண்ணெய் கொண்டு செல்லும் பணி Energy transfer என்ற நிறுவனம் மூலம் மேற்கொள்ளப் பட்டது. இது வடக்கு டகோட்டாவின் வட மேற்கு பகுதியான டிக்கின்சன் நகரத்தில் இருந்து 100 மைல்கள் தொலைவில் உள்ள 'Bakken oil fields' என்ற எண்ணெய் வயல்களில் ஆரம்பித்து, கிட்டத்தட்ட 1200 மைல்கள் அளவில் அமைக்கப்பட்ட நீண்ட எண்ணெய்க் குழாய் வழித்தடம்.
இந்தத் திட்டத்தை ஆரம்பித்ததிலிருந்தே பூர்வகுடி மக்கள் இதற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்கள். பல தரப்பட்ட போராட்டங்களுக்கு மத்தியில் தான் 'ஆர்மி கார்ப்ஸ் இன்ஜினியர்' என்ற அமைப்பின் உதவியோடு 2017 ஆம் ஆண்டு இந்தத் திட்டம் நிறைவடைந்து, குழாய்களின் வழியாக எண்ணெய் ஓடத் தொடங்கியது. இந்தத் திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு 3.8 பில்லியன் டாலர்கள் ஆகும். ஒரு நாளைக்கு சுமார் 5,70,000 பீப்பாய் (barrel) எண்ணெய் இந்த வழித்தடத்தில் ஓடியது.
அமெரிக்காவில் வசித்து வரும் பூர்வகுடி மக்களின் நிலப்பரப்புகளையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க 'National Historic Preservation Act' போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன. ஆனால், இதில் உள்ள விதிமுறைகள் எதையுமே சரியாகக் கருத்தில் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு ஆர்மி காப்ஸ் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் மீது வைக்கப்பட்டது. ஒரு வகையில் பார்த்தால் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி முழு கட்டுமானப் பணிகளையும் முடித்தது இந்த நிறுவனம்.
இரண்டு டகோட்டா மாகாணங்களில் பரவலாக வசித்து வரும் Rock Sioux Tribes என்ற பழங்குடியினர் 'இந்த எண்ணெய் வழித்தடம் எங்கள் நிலப்பகுதிகளில் கடந்து சென்றால் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவோம்' என்று பல கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். குறிப்பாக எண்ணெய்க் குழாய் கடந்து செல்லும் மிசூரி ஆற்றின் குறுக்கே தண்ணீருக்கு அடியில் செல்வதாலும் பூர்வகுடிகளின் குடிநீர் ஆதாரமே பாழாகி விடுவதாக இருந்தது.
2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அன்றைய ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க அரசாங்கத்தில் அதிபர் ஒபாமா, மிசூரி ஆற்றின் கீழே செல்லும் எண்ணெய்க் குழாய் திட்டத்திற்கு தடை விதித்திருந்தார். எனினும் அதற்குப் பிறகு ஆட்சியும் மாறியது, பின்னர் வந்த குடியரசுக் கட்சியின் அதிபர் டிரம்ப், ஒரு சிறப்பு உத்தரவு மூலம் (Excutive Order) அதே பாதையில் இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடைபெறுமாறு கட்டளையிட்டார். இந்த முடிவைக் கண்டு பூர்வகுடி மக்கள் கொதித்தெழுந்தனர். டிசம்பர் மாதத்தின் கடுங் குளிரிலும், கொட்டும் பனியிலும், குடும்ப உறுப்பினர்களோடு பூர்வ குடிகள் போராடினார்கள். தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து நீதிமன்றத்தின் கதவை நாடினார்கள். எனினும் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் தான் முக்கியம் என்று தீர்மானமாக 2017ல் இந்தத் திட்டம் நிறைவடைந்து, எண்ணெய் இந்தக் குழாய்களின் வழியே பாயத் தொடங்கி விட்டது.
"எங்களது பூர்வகுடி மக்களுக்காகவும் நிறத்திற்காகவும் ஆதரவாக நின்ற பொது மக்களுக்கும், இந்தத் திட்டத்தை ஆரம்பம் முதலே எங்களோடு எதிர்த்து கூடவே வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் இன்றைய தினம் (ஜூலை 6, 2020) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் ஆகும்" என்றார் Rock Sioux Tribe-ன் நிர்வாகத் தலைவர் Mike Faith.
பூர்வகுடி மக்களின் சார்பாக வாதாடிய 'Earth justice' என்ற அமைப்பின் வழக்குரைஞர் Jan Hasselman கூறுகையில், "இந்தத் திட்டம் பூர்வகுடி மக்கள் பகுதியில் எப்போதுமே நிறைவேற்றக் கூடாது. இன்றைய தீர்ப்புக்காக 4 ஆண்டு காலமாக காத்திருந்தோம். கடைசியில் நீதி நாட்டின் பூர்வகுடி மக்களின் பக்கமாகவே நின்றிருக்கிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சி" என்றார்.
கிட்டத்தட்ட நான்கு பில்லியன் டாலர் அளவுக்கு செலவுகள் செய்து, கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருந்த திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற உத்தரவு, இதை நடத்தி கொண்டு வந்த கூட்டு நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எரிசக்தித் துறையில் இருக்கும் நிறுவனங்கள் என்னவிதமான அறிக்கைகளை விடுவார்களோ, அதேபோல் தான் இதிலிருக்கும் முக்கிய நிறுவனம் ஒன்றும் அறிக்கை வெளியிட்டது.
இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த Energy transfer நிறுவனம். "நீதிபதி வழங்கியிருக்கும் இந்தத் தீர்ப்பு சட்டத்திற்குப் புறம்பானது, தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கு மாறாக செயல்பட்டிருக்கிறார் நீதிபதி. திட்டத்தை மூடச் சொல்வதன் மூலம் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வருவாய் இழப்பு ஏற்படும். மத்திய மேற்கு மாகாணங்கள் வழியாக ரயிலில் எண்ணெய் எடுத்துச் செல்வதால் பருவகாலப் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். நாட்டின் எண்ணெய் விற்பனை சங்கிலி மேலாண்மைக்குத் தட்டுப்பாடும், எண்ணெய் பற்றாக்குறைக்கும் இது வழி வகுக்கும். இந்த எண்ணெய்க் குழாய் திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்றவாறு தான் அமைக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தவித சிக்கலும் இல்லாமல் எண்ணெய் ஓடிக் கொண்டிருக்கிறது" என்றது.
பெரும் மூலதனத்தை இறக்கி, அதில் வருவாய் இழப்பதாக இருக்குமாயின் முதலாளிகளுக்கு வருத்தத்தைத் தானே ஏற்படுத்தும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் திட்டத்தை நடைமுறைப் படுத்துகிறோம் அவர்கள் கூறினாலும் நடைமுறையில் அவ்வாறு செயல்படுவது இல்லை. இதற்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு சான்றாக உள்ளது.
கடந்த மே மாதம் உலகளாவிய அளவில் புதைபடிவ எரிபொருள்களின் தேவை குறைந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு பல பெட்ரோலிய நிறுவனங்கள் தங்களது சுத்திகரிப்பு ஆலையில் அதன் உற்பத்தியை குறைத்துக் கொண்டார்கள். அதேவேளையில் எண்ணெய் வயல்களில் இயங்கிக் கொண்டிருந்த கச்சா எண்ணெய் எடுக்கும் இயந்திரங்கள் நிறுத்தப்படவில்லை. மாறாக அவர்கள் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய்யை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு பேரல் கச்சா எண்ணெய் ஒரு டாலருக்கும் குறைவாக சென்றது. கச்சா எண்ணெயின் விற்பனை குறைவாக இருப்பதால் அதன் உற்பத்தியை நிறுத்தி விடலாமே என்ற கேள்வி எழுந்தபோது, எண்ணெய் வயல்களில் இயங்கிக் கொண்டிருக்கும் இயந்திரங்களை ஒரு முறை நிறுத்தி விட்டால் மீண்டும் அதே இடத்தில் கச்சா எண்ணெய் கிடைக்கும் என்பதற்கு சாத்தியக் கூறுகள் குறைவாகவே இருக்கின்றன என்பதால், கச்சா எண்ணெய் கிணறுகள் மூடப்பட வில்லை.
கைவிடப்பட்ட Atlantic Coast Pipeline திட்டம்
டகோட்டா எண்ணெய்க் குழாய் திட்டம் குறித்து தீர்ப்பு வருவதற்கு ஒரு நாள் முன்னர், ஜூலை 5 ஆம் தேதி இன்னொரு சர்ச்சைக்குரிய எண்ணெய்க் குழாய் 'Atlantic Coast Pipeline' திட்டத்தை மேற்கொண்ட நிறுவனங்களே (Dominion energy and Duke Energy) சுற்றுச்சூழலை, மற்றும் சட்டச் சிக்கல்களைக் (legal uncertainty) காரணமாகக் கொண்டு திட்டத்தை நிறுத்தி விடுவதாக அறிவித்திருந்தார்கள்.
இந்த செய்தி உள்ளூர் மக்களுக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் மகிழ்ச்சி அளித்திருக்கிறது. இந்தத் திட்டமானது மேற்கு வர்ஜீனியா, வெர்ஜீனியா, மற்றும் வடக்கு கரோலினா வழியாக சுமார் 600 மைல்கள் தொலைவிற்கு அமைக்கப்படுவதாக இருந்தது. 2014 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்திற்கான முழு வடிவமைப்பு வெளியிடப்பட்டு, அதோடு திட்டமும் ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் தொடர் போராட்டத்தினால் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனினும் 2017 ஆம் ஆண்டு முழுவீச்சில் அதனை நடைமுறைப்படுத்த அந்த நிறுவனம் வேலைகளை ஆரம்பித்து இருந்தது.
இந்த நிறுவனத்தின் சார்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில், "கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தத் திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் திட்டம் குறித்தான பின்னூட்டங்கள்/ விமர்சனங்கள் அளித்த உள்ளூர் மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக நீதி நிறுவனங்கள் போன்றவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், சட்டச் சிக்கல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் இருப்பதால் இந்தத் திட்டத்தை கைவிடுகிறோம். எனினும் நாட்டின் எரிசக்தி தேவை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் இவை சவாலான காரியமாக உள்ளது." என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
Atlantic coast pipeline எண்ணெய்க் குழாய் திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்த அமெரிக்க எரிசக்தித் துறை செயலாளர் Dan Brouilette அவர்கள், "திட்டம் கைவிடப்படுவதற்கு அரசியல் செல்வாக்கு மிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தான் காரணம்" என்றார். மேலும் அவர், "இதனால் முழுக்க முழுக்க பாதிக்கப்படப் போவது கடைசி பயனாளிகளான பொது மக்கள் மட்டுமே. அவர்கள் பயன்படுத்தும் எரிவாயு/ எரிபொருளுக்கு அதிக செலவு செய்து தங்களது தேவையைப் பூர்த்தி செய்யும் நிலை ஏற்படும்" என்றார்.
எண்ணெய் வயல்களில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய், மற்றும் எண்ணெய்க் கொள்முதல் நிலையங்களில் இருக்கும் எண்ணெய்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு, பெரும்பாலும் கடல் மார்க்கமாகவும், உள்நாட்டில் என்றால் இரயில்கள் மூலமாகவும், அல்லது தரை வழியாகவும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்கு மாற்றாக வேகமாக எடுத்துச் சொல்வதற்காகத் தான் எண்ணெய்க் குழாய் போன்ற திட்டங்களை ஏற்படுத்துகிறார்கள். காலங்காலமாக கச்சா எண்ணெய்யை அல்லது இயற்கை எரிவாயுக்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்ல பயன்படுத்தும் போக்குவரத்து முறைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாதா என்ற கேள்விகள் எழும். எல்லாப் போக்குவரத்து முறைகளிலும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படத்தான் செய்கிறது. இருந்தாலும் எண்ணெய்க் குழாய்கள் திட்டத்தை மூடுவதன் மூலம் பெருமளவிற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், நீர் நிலைகளின் பாதுகாப்பிற்கும் வழி ஏற்படும் என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
(நன்றி: https://www.npr.org/tags/492631446/dakota-access-pipeline)
- பாண்டி
- விவரங்கள்
- பரிதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
இந்தியப் பொருளாதாரத்தை 2024-க்குள் ஐந்து லட்சங் கோடி டாலர் மதிப்புள்ளதாக மாற்றுவது தன் குறிக்கோள் என்று இந்தியத் தலைமை அமைச்சர் மோடி 2019 சூலையில் அறிவித்தார்.
இந்தியாவின் பொருளாதாரத்தை 'வளர்க்கும்' நோக்கில் மேலும் பன்னிரண்டு அணு மின் உலைகள், நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல் மின் நிலையங்கள், புதிய அணைகளைப் பயன்படுத்தும் புனல் மின் நிலையங்கள் ஆகியவற்றை நிறுவப் போவதாக 2018 பிப்ரவரியில் நடுவணரசு அறிவித்தது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை 2022-க்குள் 1,75,000 மெகாவாட் அளவுக்கு அதிகரிப்பதும் அரசின் குறிக்கோள்களில் ஒன்று.
1990-களில் தொடங்கி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) அதிகரிப்பதில் அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. அதற்குத் தேவையான பொருளாதார 'வளர்ச்சி'க்கும், சூழல் பாதுகாப்புக்கும் போட்டி இருப்பதைப் போன்ற தவறான கருத்தாக்கம் நீக்கமறப் பரப்பப்பட்டுள்ளது.
இப்போது நடைமுறையில் இருக்கும் பொருளாதார முறைமையில் தொடர்ந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குதல் (அதாவது, 'பொருளாதார வளர்ச்சியைப்' பெருக்குதல்) என்பதில் பின்வரும் கூறுகள் அடங்கும்:
1) பெரும் எண்ணிக்கையில் தொழிற்சாலைகளை நிறுவுதல்;
2) இரும்பு, எஃகு, சிமென்ட், வேதிப் பொருள்கள் போன்றவற்றைப் பெருமளவு நுகர்தல் (பயன்படுத்துதல்);
3) நிலம், நீர், கனிமங்கள், மரம் உள்ளிட்ட கான் விளை பொருள்கள் ஆகியவற்றின் தேவை அளவுமீறி வளர்தல்;
4) விளை நிலங்களையும் காடுகளையும் வேறு நோக்கங்களுக்கு மாற்றித் தருமாறு பெரு நிறுவனங்கள் அரசுக்கு அழுத்தந் தருதல்;
5) பெட்ரோலியம், நிலக்கரி, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆற்றல்களின் தேவை பெருகுதல்;
6) நகர்மயமாதல் வேகம் அதிகரித்தல்;
7) வானூர்தி நிலையங்கள், விடுதிகள், பெரிய தொகுப்புக் கடைகள் (shopping malls), தனியார் ஊர்திகள், விரைவுச் சாலைகள் போன்றவற்றை அதிகரித்தல்.
இவற்றைச் செயல்படுத்தும்போது பசுங்குடில் வளி வெளியீடு, இயற்கை அழிப்பு, இயற்கைச் சூழல் கேடுகள், கழிவுகள் ஆகியவை பெருகும். 2019-இல் அரசு வெளியிட்ட தேசிய வளங்களின் [பயன்பாட்டுச்] செயல்திறன் திட்டக் கொள்கை (National Resource Efficiency Policy) முன்வரைவு பின்வரும் சிக்கல்களைக் குறிப்பிடுகிறது:
1) பல இன்றியமையாத மூலப் பொருள்களுக்கு இறக்குமதியைப் பெருமளவு சார்ந்திருக்கும் நிலை;
2) நிலப் பரப்பில் முப்பது விழுக்காடு தரங்குன்றி இருத்தல்;
3) உலகளவில் வேளாண்மைக்கென நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதில் முதலிடத்தில் இருத்தல்;
4) உலகக் கரியீருயிரகை வெளியீட்டில் 6.9% வெளியிட்டு மூன்றாமிடத்தில் இருத்தல்;
5) மறுசுழற்சியில் மிகக் கீழ் நிலையில் இருத்தல் (வளர்ந்த நாடுகள் 70%, இந்தியா 20-25%);
6) உலகச் சராசரியுடன் ஒப்பிடுகையில் உற்பத்தித் திறன் குறைவாக இருத்தல்;
7) சராசரியாக ஏக்கர் ஒன்றுக்கு 1,580 டன் வளங்களை அகழ்ந்தெடுத்தல் (உலகச் சராசரி 450 டன்கள்).
இயற்கையே நம் வாழ்வாதாரம் என்பது வெளிப்படை. இந்நிலையில், ஒரு சிலருடைய அளவு கடந்த சொத்துப் பெருக்கத்துக்காக இயற்கை வளங்களைப் பெருமளவு பயன்படுத்தி மாசுபடுத்தினால் பெரும்பான்மையினரான ஏழைகளும், 'நடுத்தர' மக்களுமே அதன் தீய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்.
வறுமை ஒழிப்பு, பொருளாதார 'வளர்ச்சி' ஆகியவற்றுக்கு அதிகத் தொடர்பில்லை; அதேபோல, பொருளாதார 'வளர்ச்சி' அதிகரிக்கும் வேகத்தைவிடச் சூழல் கேடுகள் பெருமளவு அதிகரிக்கின்றன. இந்தியா மட்டுமன்றி, பிற நாடுகளின் பட்டாங்கும் இதை உறுதிப்படுத்துகின்றன.
செல்வ வளம் மிக்க சில கோடி மக்களுடைய அளவுகடந்த நுகர்வு அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தையும் சிதைத்து வருகிறது. ஆகவே நாம் - குறிப்பாக பணக்காரர்கள் - நம் குறிக்கோள்களையும் நம் மேம்பாட்டுச் செயலுத்திகளையும் வாழ்க்கை முறைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டிய தருணம் இது.
வறுமையை ஒழிப்பதைப் பொருத்தவரை, வேளாண்மையில் ஒரு விழுக்காடு வளர்ச்சி என்பது பிற துறைகளில் அதே அளவு வளர்ச்சியைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகப் பயனளிப்பதாக சூழல் மாற்றம் தொடர்பான தமிழ்நாட்டுச் செயல்திட்டம் (Tamil Nadu State Action Plan on Climate Change) தெரிவிக்கிறது.
மூலக் கட்டுரை: Shankar Sharma, "A $5 trillion economy for India: At what cost?", 2020 January 14, https://www.ecologise.in/2020/01/14/a-5-trillion-economy-for-india-at-what-cost/
- பரிதி
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருட்கள் உலகமுழுவதும் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் சில பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. மீதமுள்ள பொருட்கள் ஆங்காங்கே அப்படியே பூமியில் புதைக்கப் படுகிறது அல்லது கடலில் கொட்டப்படும் அவலநிலை தான் உள்ளது என்பதை நாம் அறிவோம். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பிளாஸ்டிக் கழிவுகள் சிதைவடைய (decompose) கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் எடுக்கும். தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த ஒரு வகை பூஞ்சைகள் சில மாதங்களில் பிளாஸ்டிக்கை உணவாக உட்கொண்டு சிதைவடையச் செய்கிறது.
அமேசான் வனப்பகுதியில் இருக்கும் 'Pestalotiopsis microspora' என்ற ஒரு வகை பூஞ்சைகள் பிளாஸ்டிக்கை மக்கச் செய்து அதை உண்பதாகத் தெரிவித்துள்ளனர் Yale University -யின் நுண்உயிரியல் ஆராய்ச்சியாளர்கள். ஒரு கட்டுப்படுத்த சோதனைக் கூடத்தில் Polyester Polyurethane (PUR) -ஐ உணவாக உட்கொள்ளும் பூஞ்சைகள் (Fungi) அதிகமாக வளரச் செய்து இந்த சோதனையை நிகழ்த்தி உள்ளனர்.
"இந்த வகை பூஞ்சைகள்/ காளான்கள் இரண்டு மாதத்தில் சிறிய அளவிலான பிளாஸ்டிக்கை மக்கச் செய்து கரிம உரமாக (organic compost) மாற்றுகிறது. எதிர்காலத்தில் இந்த முறையைப் பயன்படுத்தி அதிகளவில் பிளாஸ்டிக் குப்பைகளை சூழலியலுக்கு ஏற்றவாறு மாற்ற முடியும்" என்றார்கள்.
Polyester Polyurethane (PUR) எனும் மூலக்கூறுகள் தான் உலகளவில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுவது ஆகும். (https://loe.org/shows/segments.html?programID=20-P13-00003&segmentID=5)
மற்றொரு ஆய்வு என்னவென்றால், 2015 ஆம் ஆண்டு நெதர்லாந்தின் யுட்ரெச்ட் பல்கலைக் கழக நுண்உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் (Utrecht University in the Netherlands) பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வளர்த்த காளான்களை மனிதர்கள் உண்ணும் உணவாக மாற்றினார்கள். அதற்காக அந்தப் பல்கலைக்கழக பேராசிரியர் Han Wösten பரிசும் பெற்றார். "இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது பிளாஸ்டிக் குப்பைகளும் அடங்கும். அதே வேளையில் இந்த பிளாஸ்டிக் குப்பைகளை வைத்து காளான் வளர்ப்பு என்பது ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சி. சுற்றுச்சூழல் மாசுபடுதல் மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் உணவுத் தேவைகளை இவ்வகையான காளான்கள் ஓரளவுக்குப் பூர்த்தி செய்யும்" என்றார் அவர். (https://www.uu.nl/en/news/prestigious-braunprize-for-converting-plastic-into-food)
ஆனால், சூழலியல் ஆர்வலர்களால் மற்றொரு கேள்வி எழுவது என்னவென்றால், "இவ்வாறு காளான்களை/ பூஞ்சைகளை வளர்ப்பது பிளாஸ்டிக் உற்பத்தியை கட்டுப்படுத்துமா? இல்லை, அவர்கள் தொடர்ந்து பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்துமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
2018 ஆம் ஆண்டு ஜனவரியில் சீனா ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதாவது, "தங்கள் நாட்டில் இறக்குமதி ஆகும் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு இனி தடை விதிக்கப்படும். தங்கள் நாடு இனிமேல் பிளாஸ்டிக் குப்பைகளை வாங்கப் போவதில்லை. பிளாஸ்டிக் குப்பைகளை கையாளுவது சிரமமாக இருப்பதாகவும், மறுசுழற்சி செய்ய அதிக செலவுகள் பிடிக்கிறது. அதற்காகவே இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம்" என்று அறிவித்தார்கள். உலக நாடுகளில் இருந்து தோராயமாக 70% -க்கு மேல் பிளாஸ்டிக் குப்பைகள் சீன நாட்டிற்குத் தான் மறுசுழற்சிக்காகச் செல்கிறது. அதில் அதிகப்படியாக அமெரிக்கா மட்டும் 700,000 டன் பிளாஸ்டிக் குப்பைகளை சீனாவுக்கு ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்துள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சீன நாடு ஆண்டுக்கு சுமார் 7 மில்லியன் டன் குப்பைகளை இறக்குமதி செய்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. சீனாவின் இந்தத் தடைக்கு பிறகு வளர்ந்த நாடுகள் இப்போது பிற ஆசிய நாடுகளைத் தேட ஆரம்பித்துள்ளனர்.
வளர்ந்த நாடுகளில் உருவாகும் பிளாஸ்டிக் குப்பைகள் ஆசியாவின் பிற நாடுகளில் குறிப்பாக மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இறக்குமதி செய்யப்படுகிறது.
"இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 15 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகள் உற்பத்தியாகிறது. இதில் ஒரு சில பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர மீதமுள்ளவை மறுசுழற்சிக்கு உட்படுத்தப் படுவதில்லை" என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டக் குழு (United Nations Development Programme (UNDP) India). இது இந்தியாவின் Waste management system சரியாக செயல்படாததே காரணம் என்பது வருத்தமான செய்தி.
சூழலியலைப் பாதுகாக்க ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள். அதேவேளையில், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து நமது தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதிய வாழ்வியலை நோக்கிப் பயணிக்கும் நிலை வர வேண்டும்.
- பாண்டி
- சுற்றுச்சூழல் - அறிவியல் அறிஞர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
- கனிம எரிபொருள் துறையும், சீரழியும் சுற்றுச்சூழலும்
- பேரழிவினால் நிலை குலைந்திருக்கும் ஆஸ்திரேலியா!
- கிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்
- சூழலியல் - நாய் விற்ற காசு குரைக்குமா?
- புவி வெப்பமடைதல் - ஓர் எச்சரிக்கை
- சூழலியல் பேரழிவுக்குத் தொழில்நுட்பத் தீர்வுகள் போதா!
- காஸாவின் பாதிப்புகளால் சுற்றுச்சூழல் ஆபத்துகளை எதிர்நோக்கும் இஸ்ரேல்!
- பருவநிலை மாற்றமும், பேரழிவு புயல்களும்
- பருவநிலை மாற்றத்தால் உலகிற்கு பேராபத்து
- பிளாஸ்டிக்கை ஒழிப்போம்! உயிரினங்களை காப்போம்!
- ஆற்றுநீர் கடலில் கலப்பது வீணானதா?
- அமெரிக்காவில் நீரியல் விரிசல் முறை ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளும், அறிவியல் வல்லுநர் குழுக்கள் கண்டறிந்த படிப்பினைகளும்!
- நதிகளை ஏன் இணைக்கக்கூடாது?
- இந்திய கிராமப்புறங்களில் திறந்தவெளி மலம் கழித்தலைப் புரிந்து கொள்ளல் - தீண்டாமை, மாசு, மலக்குழிகள்
- சூழல் அகதியா நாம்..?
- காலநிலையும், அரசியலும்
- செம்பரம்பாக்கம் ஏரி வரலாறும், திமுக - அதிமுக கட்சிகள் ஆட்சியும்
- நீலம் பாரித்துக் கிடக்கிறாள் மலைகளின் இளவரசி
- போஸ்கோ வெர்டிகல் மற்றும் சூரியச் சாலை
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.