உலகில் இதுவரை பதிவு செய்யப்பட்டதில் வெப்பமான ஆண்டாக 2021 இருந்தது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். புவி வெப்ப உயர்விற்குக் காரணமான கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் ஆகிய வாயுக்களின் அளவில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்குக் காரணம் என்று ஐரோப்பிய யூனியனின் கோபர்நிகஸ் காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் மையத்தின் (Copernicus Climate Change Services) ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஏழு ஆண்டுகள் சாதனை அளவு வெப்பம் நிலவிய ஆண்டுகள். 2021ல் சராசரி புவி வெப்பநிலை உயர்வு 1.1-1.2 செல்சியஸ் அதிகரித்தது. காலநிலை மாற்றம் வெள்ளப் பெருக்குகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூற்றை 20% அதிகரித்துள்ளது. இதற்கு முன் 2016, 2020 ஆகிய ஆண்டுகளில் மிக உயர்ந்த வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. 2015 பாரிஸ் உடன்படிக்கையின்படி உலக நாடுகள் புவி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸிற்குள் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன் பலன்கள் 2030ம் ஆண்டிலேயே தெரிய வரும்.climate changeபசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வு காலநிலை மாற்றத்தைத் தீவிரப்படுத்தியதால் உயரும் பூமியின் வெப்பம் வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர். ஐரோப்பா, சீனா ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்குகள் முதல் சைபீரியா, அமெரிக்கா ஆகிய இடங்களில் காட்டுத்தீ வரையுள்ள சம்பவங்கள் கார்பன் உமிழ்வின் அளவை அதிகரிக்கக் காரணமானது.

வரும் ஆண்டுகளில் இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 2021ல் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேனின் அளவு வெகுவாக அதிகரித்தது.

தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளில் மீத்தேன் அளவில் அதிகரிப்பு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விஞ்ஞானிகளால் உறுதியாகக் கூற முடியவில்லை.

கடந்த கோடையில் ஐரோப்பாவில் இதுவரை பதிவு செய்யப்பட்டதில் மிக உயர்ந்த வெப்பநிலை பதிவாகியது. இது பிரான்ஸ், ஹங்கேரி ஆகிய நாடுகளில் பல விளைபொருட்களின் அழிவிற்கும் காரணமானது. ஜூலை ஆகஸ்ட்டில் ஏற்பட்ட வெப்ப அலைத் தாக்குதல் துருக்கி, கிரீஸ் நாடுகளில் வனப்பகுதிகளை தீக்கிரையாக்கியது

ஜூலையில் மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருநூறிற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் வரலாறு காணாத பெருமழை, அதனால் பெரும் வெள்ளப் பெருக்குகள் ஆயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்வை நரகமாக்கியது. இந்தியா, பங்களாதேஷ் நாடுகளில் வீசிய புயல்களால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதே நிலை தொடர்ந்தால் நாளை மனிதன் வாழ பூமி என்றொரு கோள் இருக்குமா என்பது சந்தேகமே.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It