அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
நகரங்களில் தெருவோர மரம் நடுதல், மழைநீர் சேகரிப்புத் தோட்டங்கள் அமைத்தல், நடைபாதைகளில் செடி வளர்ப்பு போன்றவற்றின் மூலம் பசுமைப் போர்வையின் பரப்பை அதிகரிப்பது நகரங்கள் சூடாவதைத் தடுக்க உதவும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன.
நகர விரிவாக்கம் மற்றும் புவி வெப்ப உயர்வு நகரங்களை நாளுக்கு நாள் வெப்பமடையச் செய்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பத்தாண்டிலும் 0.05 சி என்ற அளவில் வெப்பநிலை சராசரியாக அதிகரிக்கிறது. நாஞ்ஜிங் (Nanjing) மற்றும் ஏல் (Yale) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 2000 முதல் 2021 வரை 2000 நகரங்களின் செயற்கைக்கோள் தரவுகளை கிராமப்புற தரை வெப்பநிலை அளவுகளுடன் ஒப்பிட்டு ஓர் ஆய்வை நடத்தினர்.
நகரப் பகுதிகளில் பகல்நேர வெப்பநிலை பத்தாண்டிற்கு சராசரியாக 0.56 டிகிரி, இரவு நேர வெப்பநிலை சராசரியாக 0.43 டிகிரி என்ற அளவில் அதிகரித்துள்ளது இந்த ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. கிராமப் பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது இந்த உயர்வு சராசரியாக பகலில் 0.4 மற்றும் இரவில் 0.37 டிகிரி என்ற அளவில் இருந்தன. நகரங்கள் கிராமப் பகுதிகளை விட 29% வேகமாக சூடாகின்றன என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.
நகரங்களின் அளவும் வெப்ப உயர்வும்
நகரங்களின் அளவு அதன் வெப்பமடைதலுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கிறது. பகல் நேரத்தில் மாநகரங்கள் கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக 0.69 டிகிரி சூடாகியுள்ளன. சிறிய நகரங்கள் 0.41 டிகிரி மட்டுமே வெப்பமடைந்துள்ளன. கண்டங்களைப் பொறுத்தும் நகரங்கள் சூடாவதில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. மாநகரங்கள் அதிகமாக இருக்கும் ஆசியாவில் பகல் மற்றும் இரவு நேர வெப்பம் அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய நகரங்கள் பகலில் குறைவான அளவே வெப்பமடைகின்றன. ஓசியானா பகுதியில் இருக்கும் நகரங்கள் இரவில் குறைவான அளவு வெப்பமடைகின்றன. ஆனால் ஆசிய நகரங்கள் பகல், இரவு என்று வேறுபாடில்லாமல் வெப்பமடைந்து வருகின்றன. ஆராயப்பட்டவற்றில் 90% நகரங்களில் நகர விரிவாக்கம், காலநிலை மாற்றமே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது. இங்கு பத்தாண்டுகளில் சராசரியாக மனித செயல்களால் மட்டும் 0.3 டிகிரி வெப்ப உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் நிலை
இந்தியாவில் கடந்த பத்தாண்டில் விரைவான நகரமயமாக்கம் 0.23 டிகிரி வெப்ப உயர்விற்குக் காரணமாக இருந்துள்ளது. ஆனால் கட்டாந்தரையாக இருக்கும் நிலப்பகுதிகள் மரம் செடிகள் நட்டு வளர்க்கப்படும்போது குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தை விட இரவில் இது அதிகம் நிகழ்கிறது. அப்போது தாவரங்கள் தங்களைச் சுற்றியுள்ள நிலப்பகுதியில் இருந்து வெப்பத்தை உறிஞ்சி குளிரச் செய்கின்றன என்று இந்த ஆய்வு கூறுகிறது.
சிகாகோ மாதிரி
ஐரோப்பாவில் நகரப் பசுமையாக்குதல் மூலம் நகரங்கள் வெப்பமடைவதை சராசரியாக 0.13 டிகிரி சி என்ற அளவில் குறைக்க முடிந்துள்ளது. சிகாகோவில் 1995ல் ஏற்பட்ட வெப்ப அலைத் தாக்குதலிற்குப் பிறகு நடைமுறைப் படுத்தப்பட்ட பசுமையாக்கல் திட்டத்தினால் கடந்த பத்தாண்டில் 0.084 டிகிரி வெப்பம் குறைந்துள்ளது.
நகர வெப்பமயமாவதை மேலும் மோசமாகாமல் தடுக்க நகர விரிவாக்கத் திட்டங்களின்போது அவற்றின் பசுமைப் போர்வையை அதிகரிக்கச் செய்ய முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கொள்கை வகுப்பவர்களை வலியுறுத்தியுள்ளனர்.
இயற்கை வழியில் தாவரங்கள் வளர்ப்பதன் மூலம் மேற்கொள்ளப்படும் பசுமையாக்குதல், நகரங்களில் எல்லா காலநிலைகளுக்கும் பயனளிக்கிறது என்று க்ளாஸ்ட்டர்ஷெர் (Gloucestershire) கவுன்சிலின் காலநிலை மேலாளர் ஜான் பெர்க் (Jon Burke) கூறுகிறார். பசுமைப் பரப்பு அதிகரிப்பதால் நகரங்களில் குற்றச் செயல்கள், மனநலக் கோளாறுகள் குறையும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
40% பசுமைப் போர்வை
வெப்பநிலையைக் குறைக்க நகரப்பரப்பில் 40% பசுமை தேவை. ஆள்பவர்கள் இதற்கு உடனடி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அதிகரித்து வரும் நகர வெப்பம் மற்றும் வெள்ளப் பெருக்குகளை குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். நகர நிர்வாகங்கள் மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்காக செலவிடும் தொகையை விட இதற்குக் குறைவாகவே செலவாகும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
வளர்ச்சி என்ற பெயரில் இருக்கும் மரங்களை வெட்டி, மனிதன் கட்டியெழுப்பும் கான்க்ரீட் காடுகள் நாளை அவனைக் காக்க முன்வராது. கிராமங்களை அழித்து நகரங்களாக்கி அவன் நாகரீகப் போர்வையால் உருவாக்கும் இடங்களே அவனுக்கு கல்லறையாவதற்கு முன், பசுமைப் போர்வையை ஏற்படுத்த முயலவேண்டும்.
மேற்கோள்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
இந்தியாவில் சிறு குறு நில விவசாயிகளில் மிக அதிகம் பாதிக்கப்பட்ட பத்து கோடி ஏழை விவசாயிகளுக்கு உதவி செய்வதே தங்கள் இலட்சியம் என்று கெயிட்டியின் தோற்றுநர்களில் ஒருவரும், நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலருமான கௌசிக் கத்த கண்டுலு கூறினார்.- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- கவிஜி
- பிரிவு: சுற்றுச்சூழல்
மரம் நடுகிறவன் கடவுளுக்கு ஒப்பானவன். அவனே ஆதியை கை நழுவாமல் பற்றி இருக்கிறான். அவன்தான் தீர்க்கதரிசி.
எல்லாமே சுழற்சியின் ஞாபகங்களால் உருவானவை. கோடரி கதை.... விறகு வெட்டி கதைகளை தூரோடு தூக்கி எரியும் காலம் இது. தங்க கோடரி அல்ல... தங்க கோபுரமே கொடுத்தாலும் மரம் வெட்டோம் என்ற சபதமே இந்த பூமியை காப்பாற்றும். தேவைக்கு வெட்டும் போதும் அதற்கு மாற்றாக மரங்களை நட வேண்டும். அது தான் தெய்வ வாக்கு. அல்லது தாக வாக்கு.
மரம் நடுவது ஆர்வத்தில் கூட நடக்கலாம். அதை ஒரு கட்டம் வரை வளர்த்தெடுப்பது தான் ஆழம் நிரம்பியவை. மரங்களே பூமியை தாங்கி பிடித்திருக்கும் பந்த கால்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் அழகு முன்னால் நிற்கும் மரங்கள் தான். சின்ன சின்ன மரங்களின் வழியே சித்திரம் அசைக்கும் வீதி தெருக்கள். வேப்ப மரங்களின் காற்றும் நிழலும் உள்ளம் பூரிப்பவை. வீதிக்குள் நுழையும் போதே ஊரின் உயிர் காத்து நிற்பது போல நிற்கும் புளியமரம்... தினம் தினம் புதிதாக தெரியும். ஊரின் நடுவே ஓங்கு தாங்காக பரந்து விரிந்து கிளை சரிந்திருக்கும் ஆலமரம்... எல்லா நேரமும் மனிதர்களை சந்திக்கும் சிந்தனை திடல். கிணற்றுக்கு போகும் வழியில் இருக்கும் அரச மர அழகு கண்களில் மணி அடிக்க... அரச மர இலைகளில் லட்சம் இதயங்கள் மினு மினுங்கும்.
ஒரு மரம் என்பது இரண்டு தொழிற்சாலைகளுக்கு சமம். ஒன்று ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். இன்னொன்று கார்பன்டை ஆக்ஸைடை உரிந்து கொள்ளும். மரமில்லாத மலை சூரிய வெப்பத்தை இன்னும் அதிகமாக இழுத்து தரும் என்பது சூழலியல் விதி. இங்கே நமது வாகனம் வெளியிடும் புகை... இமயமலைக்கு போகும் என்பது சூழலியல் சூட்சுமம். உலகின் மிகப் பெரிய பம்புகள் மரங்கள்தான் என்பதை அறிந்து விட்டாலே.. மரத்தை நேசிக்க ஆரம்பித்து விடுவோம். அத்தனை வேகத்தில் வேரின் மூலமாக நீரை உரிந்து தனக்கு போக மிச்சத்தை ஆவியாக்கி விடும் மாய மந்திர தந்தை இந்த மரம்.
மரத்தை உற்று நோக்குகிறவன்... கண்டிப்பாக அதை வெட்ட முனைய மாட்டான் என்பது நான் கண்ட போதி.
மரத்தை வெட்டும் போது அது வெட்டுபவனுக்காவும் அழுகிறது. வெட்டுபவனின் வாரிசுகளுக்காகவும் புலம்புகிறது. உயிரின் பதறலை கொண்டு அலை பாய்கிறது. கவலை கொள்கிறது. பின் செத்து போகிறது. காலங்களை சுமந்து கொண்டு வாழ்வின் சாட்சியாய் நம்பிக்கையின் வேராய் நிற்கும் மரத்தை வெட்டி வீழ்த்தும் போது.. கால இடைவெளி பற்றிய ஆவணங்களை அழித்தெறிகிறோம் என்று பொருள்.
காடுகளை அழித்தல் தன் வீட்டுக்கே தீ வைத்தலுக்கு சமம் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். புலி இருக்கும் காடே வளமான காடு. புலிகள் இருக்க புதர்கள் வேண்டும். யானைகள் காட்டின் பேரழகு. காடு அழிய அழிய கோவிலில் பிச்சையெடுக்கும் யானைகளின் எண்ணிக்கை பெரும்பாவமென அரங்கேறத்தான் செய்யும். காட்டின் பிரமாண்டத்தை கையேந்த விடும் இந்த மானுடத்தை... விதிகளின் விழிகள் உற்று நோக்கிக் கொண்டுதான் இருக்கின்றன. தனக்கு தேவை என்பதைத் தாண்டி... பண்டமாற்று முறை கொஞ்சம் சிரமம் என்பதைத் தாண்டி... பணம் புழங்க துவங்கிய பிறகு... எங்கோ எவனுக்கோ ஆரம்பித்த பித்து.. முறுக்கேறி முறுக்கேறி.. மூச்சு முட்டி....கழுத்தை நெரித்து.. இதோ வெறும் பத்து பணக்காரனுக்காக மட்டுமே இந்த உலகம் தினம் தினம் தன் கண்களை மூடிக் கொண்டே குருட்டுப் பூனையாய் கிடைத்த விட்டத்தில் எல்லாம் எட்டிக் குதித்து கொண்டிருக்கின்றன. போகிற போக்கில் பலி ஆகும் யாவும்.... கூட மரமும் ஆகிறது. சிந்திக்கும் மனமோ வேகிறது.
அவிநாசி சாலையில் இருந்த மரங்களை வெட்டிய பாவத்தை இப்போது அனுபவிக்கிறோம். கோவையில் இத்தனை வெயில் எந்த காலத்தில் இருந்தது. இந்தக் காலத்தில் என்று எதிர்காலம் இனி சொல்லும். வெயிலின் வெக்கைகளில் எல்லாம் உயிரோடு சருகான இலைகளின் கோபம் இல்லாமலா போகும்.
சரி தேவைக்கு சில போது மரங்களை அகற்ற வேண்டி தான் இருக்கிறது. அதற்கும் மாற்று விழி இல்லாமல் இல்லை. மரங்களை வேரோடு பிடுங்கி வேறு பக்கம் நடுவது. ஆனாலும் அதிலும் சிக்கல் இல்லாமல் இல்லை. மரங்களை வேரோடு பிடுங்கி வேறு பக்கம் நடுவதில்.... நம் மண்ணின் மரங்கள் மட்டுமே வேர் பிடித்து உயிர் பிடித்து மீண்டும் வளர்கின்றன.... மற்ற மரங்கள் பட்டு போகின்றன என்று அறிய வருகையில்.. மண்ணுக்கும் மரத்திற்குமான உறவை புரிந்து கொள்ள முடியும். மண்ணின் இயல்பை.. அதன் பாரம்பரியத்தை.. அதன் பண்பை உணர்த்த இதை விட நாம் அறிய வேண்டியது ஒன்றும் இல்லை. மரமாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் அதனதன் மண்ணில் இருக்கும் போதுதான் வேர் பிடித்த வாழ்வு சாத்தியமாகிறது. பத்துக்கு பாதியையாவது இந்த வழியில் காப்பாற்ற முடிந்தால் அதை செய்தல் தான் முறை.
என் மலை உச்சியில் மரத்தோடு மரமாக நின்று கத்தி விளையாடிக் கொண்டிருக்கும் என்னை எப்போதாவது நான் காண நேர்கையில் இப்படித்தான் தோன்றும். ஒரு பெரு மழை அசைத்து பார்க்கும் என் உயிர்ப்பின் சுவடுகளை நான் உணரும் தருணம் தான் இயற்கையின் கொடை. யாருக்காவது இறைவனின் கொடை என்றும் தோன்றலாம். இயல்பாகவே காடும் காடு சார்ந்த வாழ்வை விரும்புகிறவன் நான். என்னை போன்றோருக்கு மரம் மனிதனை விடவும் பெரியது. நமக்கு முன்பே இந்த பூமியில் உருவான திரு.. திருமதி அது. அதற்கான வெகுமதி அதை வணங்காவிடினும் வெட்டாமல் இருப்பது தான். அதற்கு உயிர் இருக்கிறது. அது வேலை செய்கிறது. அது நம்மை கண்காணிக்கிறது. அதற்கு மொழி இருக்கிறது. மௌனம் கூட இருக்கிறது. உற்று நோக்குகிறவனுக்கு அது கடவுளாகவும் இருக்கிறது. அதனால் தான். மரத்தைக் கண்டால்... மஞ்சள் துணியை சுற்றி சாமியாக்கி விடுவோரை அவர்களின் மூட நம்பிக்கைகளையும் தாண்டி மனம் விரும்புகிறது. ஒரு மரத்தை காக்க ஒரு கடவுள் தேவைப்பட்டால் இன்னொரு கடவுளையும் உருவாக்கலாம் என்பது மர நீதி. மரம் எல்லாவற்றையும் விட பெரியது. வேர் பிடித்து கிளை பரப்பி இலைகள் விட்டு துளிர்கள் விட்டு... காய்த்து பூத்து.....வெயில் பிடித்து.... மழை குடித்து.. காற்று அசைத்து... பறவை பட்சிகள் புழு பூச்சிகள் வாழ இடம் கொடுத்து...என நிழலும் நிஜமுமாக நிற்கும் மரத்தை ஒப்பிட்டு மனிதனை மர மண்டை என்றால் அது நியாயம் இல்லை தானே.
எப்போதும் மரம் அசையும் காற்றுடன்.....எப்போதும் குடை மறந்த மழையுடன்...எப்போதும் மனம் நிறைந்த குளிர்ச்சியுடன் கழிந்த பால்யத்தை இப்போது நினைத்தாலும் மனமெங்கும் மழை தான். விழியெங்கும் கதை தான். எப்போது திறந்தாலும் ஓடி வரும் ஓடையில் படக்கென்று படுத்து நாயைப் போல வாய் வைத்து நீர் குடித்தவன்..... இன்று பிளாஸ்டிக் போத்தலில் வாங்கி மகானைப் போல குடிக்கிறேன். குலை நடுங்க...... குரல்வளை பிடுங்க... தாகம் மிரளும் தத்துவம் என்னை சூழ்கிறது.
கண் உறுத்தும் வறட்சிக்கு முன் ஓ வென குற்ற உணர்ச்சியோடு நிற்கிறேன். நானும் கூட இதற்கு காரணம்தான். உள் மனம் சத்தமிட்டு கூறுகிறது. நானும் இந்த காற்றை மாசு படுத்தி இருக்கிறேன். மரங்களுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டிருக்கிறேன். பிளாஸ்டிக் கோப்பைகளை மற்ற குப்பைகளோடு சேர்த்துப் போட்டிருக்கிறேன். சாக்லேட் கவர்களை.......கொரியர் கவர்களை......கூச்சமே இல்லாமல் சாலையில் போட்டு போயிருக்கிறேன். கொஞ்ச காலம் முன்பு வரைகூட கறி வாங்க... மீன் வாங்க.. காய்கறி வாங்க... வெறும்கையோடு சென்று.... வாங்கியவைகளை பாலிதீன் கவர்களில் வாங்கி வந்திருக்கிறேன். வெட்கி கவிழ்கிறேன். துக்கித்து உணருகிறேன். உள்ளுக்குள் எழும் அசைவை எந்த மர அசைவால் நிறுத்த.
இயல்பாகவே மண்ணுக்கும் மரத்துக்கும் துரோகம் செய்வது தவறென்று நினைக்கும் மானுடத்தை இழக்க வைத்திருக்கிறது..... இன்றைய நவீனம்.
ஒரு சொட்டு நீருக்காக அண்டை மனிதனின் ரத்தம் குடிக்கும் மரணத்தனம் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அதற்கு முன் விழித்துக் கொள்ள வேண்டும். மரங்களின் கரம் பற்றிய மனிதன் பிழைத்துக் கொள்கிறான்.
சூட மரம்... சவுக்கை மரம்... பூ மரம்... தண்ணிக்கா மரம்... தைல மரம்... முகர வீங்கி மரம்... தேக்கு மரம்...ஈட்டி மரம்... என நினைவுகளில் அசையும் மரங்களின் ஈர காற்றில் இதயம் நிரம்புகிறது. மரங்களில் இதயம் வரைந்தது போதும்.... இளைய சமுதாயமே.... மரத்தை இதயத்தில் வரைவோம்.
எனது கவிதை ஒன்றோடு கட்டுரையை முடிக்கிறேன்.
"மரம் தொலைத்த வேதனை
மனிதனுக்கு இல்லாமல் இருக்கலாம்
கூடு தொலைத்த பறவைக்கு
கூடுதல் கவலை அது..."
- கவிஜி
- விவரங்கள்
- இரா.வெங்கட்ராகவன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
திராவிட முன்னேற்ற கழக அரசு பதவியேற்றதில் இருந்தே தமிழ்நாட்டின் சூழலியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கொண்டு வருவதில் உறுதியாக செயலாற்றி வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் பல்லுயிர் சூழலியலில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டின் மொத்த வனப்பரப்பு 26,419.23 சதுர கிலோ மீட்டர். இது மாநிலத்தின் மொத்த பரப்பில் 20.31 விழுக்காடு. உலகிலுள்ள முக்கியமான 36 உயிர்ப் பன்மை மிக்க தலங்களில் மேற்கு தொடர்ச்சி மலையும் ஒன்றாக விளங்குகிறது. தமிழ்நாட்டின் பல்லுயிர்ப் பெருக்கத்தில் 165 வகையான மீன் இனங்களும், 76 வகையான நீர் நில வாழ்வன, 177 வகையான ஊர்வன, 454 வகையான பறவைகள் மற்றும் 187 பாலூட்டிகள் தமிழகத்தில் காணப்படுகின்றன.
வனம் மற்றும் வன உயிரினங்களை பாதுகாத்து சூழலியல் சமத்துவத்தை பேணுவதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் 5 புலிகள் காப்பகங்கள், 3 உயிர்க்கோளக் காப்பகங்கள், 5 தேசிய பூங்காக்கள், 17 பறவைகள் காப்பகங்கள், 17 காட்டுயிர்க் காப்பகங்கள், 2 வன உயிரின காப்பகங்கள் என தமிழ்நாடு இந்தியாவில் தனித்துவமான சூழலியல் தன்மையை கொண்டுள்ளது.
பசுமை தமிழ்நாடு இயக்கம்
திராவிட முன்னேற்ற கழக அரசு பதவியேற்றதில் இருந்து வனப் பரப்பை அதிகரிப்பதிலும், புதிதாக பறவைகள் மற்றும் வன உயிரினக் காப்பகங்கள் உருவாக்குவதிலும் தனி கவனம் செலுத்தி வருகிறது. 2021-22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் வனப்பரப்பை 23.08 விழுக்காட்டில் இருந்து 33 விழுக்காடாக உயர்த்தும் வகையில் ‘பசுமை தமிழ்நாடு இயக்கம்’ தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் கீழ் அடுத்த பத்தாண்டுகளில் 261 கோடி உள்ளூர் மர வகைகள் நடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஈர நில இயக்கம் – ராம்சார் குறியீடு
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பருவ நிலை மாற்ற இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈர நில இயக்கம் ஆகியவற்றையும் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 100 ஈர நிலங்களை கண்டறிவது இதன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈர நிலங்களின் மேம்பாட்டிற்காக சர்வதேச அளவில் வழங்கப்படும் ராம்சார் அங்கீகாரம் தமிழ்நாட்டில் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசு எடுத்த பெரும் முயற்சிகளால் தமிழ்நாட்டில் பள்ளிக்கரணை, கரிக்கிலி, பிச்சாவரம், வேடந்தாங்கல், கூந்தன்குளம், மன்னார் வளைகுடா, வெள்ளோடு, உதயமார்த்தாண்டபுரம், வேம்பனூர் ஆகியவை ராம்சார் அங்கீகாரம் பெற்றுள்ளன. ஒரே ஆண்டில் 10 இடங்கள் என தமிழ்நாட்டில் இதுவரை 13 இடங்கள் ராம்சார் அங்கீகாரம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் வளைகுடா கடற்பசு காப்பகம்
தமிழ்நாட்டில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடா கடல் பகுதியில் காணப்படும் மிகவும் அரிய வகை கடல்வாழ் பாலூட்டி Dugong எனப்படும் ஆவுளியா ஆகும்.
கடல்மாசு மற்றும் கடற்புல் படுகைகள் அழிக்கப்படுவதால் இந்த ஆவுளியா இனம் அண்மை காலங்களில் பெரும் அழிவை சந்தித்து வருகிறது. இதனை பாதுகாக்கும் பொருட்டு இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடா கடற்பகுதியில் அமைத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தேவாங்கு சரணாலயம்
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் தேவாங்குகளை அருகி வரும் உயிரினமாக பட்டியலிட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய வனப் பகுதியில் தேவாங்குள் வாழ்ந்து வருகின்றன.
வேட்டையாடுதல் மற்றும் காடுகளின் அழிவால் தேவாங்குகள் அழிந்து வரும் சூழலை கருத்தில் கொண்டு அவற்றை பாதுகாக்கும் வகையில் மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள 11,806.56 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக கடவூர் தேவாங்கு சரணாலயத்தை அறிவித்து தமிழ்நாடு அரசு.
அகத்தியர் மலை யானைகள் காப்பகம்
தமிழ்நாட்டில் நீலகிரி, ஆனைமலை, கோயம்புத்தூர் மற்றும் திருவில்லிபுத்தூரில் யானைகள் காப்பகங்கள் அமைந்துள்ளன. ஆசிய யானைகளின் வாழ்விட மேம்பாட்டிற்காக கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களிலுள்ள வன வாழ்விடங்களை உள்ளடக்கி தமிழ்நாட்டின் 5-வது யானைகள் காப்பகமாக அகத்தியர் மலை யானைகள் காப்பகத்தை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது.
பறவைகள் சரணாலயங்கள்
கழுவெளி பறவைகள் சரணாயலம்
பல்வேறு நாடுகளில் இருந்து வரும் வலசைப் பறவைகள் மற்றும் உள்நாட்டுப் பறவைகளுக்கு வசிப்பிடமாக விளங்கும் தமிழ்நாட்டின் ‘மசாய் மரா’ என்று அழைக்கப்படும் கழுவெளி சதுப்பு நிலம் பழவேற்காடு ஏரிக்கு அடுத்து தமிழ்நாட்டின் மிகப் பெரிய ஏரியை உள்ளடக்கியது. விழுப்புரம் மாவட்டத்தின் வானூர் மற்றும் மரக்காணம் தாலுகாக்களில் 5,161.60 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள கழுவெளி சதுப்பு நிலத்தை தமிழ்நாட்டின் 16வது பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பல ஆண்டுகளாக கழுவெளியை பறவைகள்சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்று போராடி வரும் சூழலியலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயம்
திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் சர்க்கார் பெரியபாளையம் என்னும் இடத்தில் சுமார் 440 ஏக்கரில் அமைந்துள்ள நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக அமைக்க வேண்டும் என்று கடந்த 2009 ஆம் ஆண்டு முதலே கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து நஞ்சராயன் குளத்தை உள்ளடக்கிய 125.88 ஹெக்டேர் நிலத்தை உள்ளடக்கிய பகுதியை தமிழ்நாட்டின் 17வது பறவைகள் சரணாலயமாக அறிவித்துள்ளது திமுக அரசு.
வன உயிரின சரணாலயங்கள்
காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம்
கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் 686.405 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கிய காப்புக்காடுகளை தமிழ்நாட்டின் 17-வது சரணாலயமாக ‘‘காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம்’ என்று உருவாக்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் காவிரி வடக்கு வன உயிரின சரணாலயம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் காவிரி வன உயிரின சரணாலயம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. நீலகிரி உயிர்கோளக் காப்பகம் வரை தொடர்ச்சியான பாதுகாக்கப்பட்ட வன உயிரின சூழலை ஏற்படுத்துகிறது.
அரிட்டாப்பட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலம்
சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு, நீர்நிலைகள், பல்லுயிர் தன்மை மிக்க தாவர, விலங்கின சிற்றினங்களின் வாழ்விடங்கள் போன்றவற்றை பாதுகாக்கும் நோக்கில் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள 193.215 ஹெக்டேர் பரப்பிலான பகுதியை அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாகும்.
இவ்வாறு ஆட்சிப் பொறுப்பேற்ற 18 மாதங்களில் தமிழ்நாட்டின் வன உயிரின பாதுகாப்பு மற்றும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக அரசு எடுத்து வருவது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது.
- இரா.வெங்கட்ராகவன்
- மண்வளம் குறைந்தால் மனிதன் அழிவான்
- 2021 ஐந்தாவது வெட்பமான ஆண்டு
- திரைசீலை விழுந்த காலநிலை உச்சி மாநாடு
- புவி வெப்ப உயர்வு: அடைபடும் சாளரங்கள்
- Fukushima அணு உலை விபத்து - பத்தாண்டுகள் கடந்து அங்கு நிலவும் சூழல் என்ன?
- மரண பள்ளத்தாக்கில் பதியப்பட்ட பூமியின் அதிகபட்ச வெப்பமும், கலிபோர்னியாவின் காட்டுத் தீ காலமும்
- கடல் பகுதிகளை அச்சுறுத்தும் கச்சா எண்ணெய் - சுற்றுச்சூழல் பாதிப்பில் மொரிஷியஸ் தீவுகள்
- சுற்றுச் சூழல் தாக்க அறிக்கை 2020 (EIA 2020) ஏன் எதிர்க்கப்பட வேண்டியது?
- இ.ஐ.ஏ 2020 எதிர்ப்புகள் வலுப்பெறுமா?
- சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்
- 5 டிரில்லியன் பொருளாதாரம்: நாம் கொடுக்கப் போகும் விலை என்ன?
- பிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்
- சுற்றுச்சூழல் - அறிவியல் அறிஞர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
- கனிம எரிபொருள் துறையும், சீரழியும் சுற்றுச்சூழலும்
- பேரழிவினால் நிலை குலைந்திருக்கும் ஆஸ்திரேலியா!
- கிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்
- சூழலியல் - நாய் விற்ற காசு குரைக்குமா?
- புவி வெப்பமடைதல் - ஓர் எச்சரிக்கை
- சூழலியல் பேரழிவுக்குத் தொழில்நுட்பத் தீர்வுகள் போதா!
- காஸாவின் பாதிப்புகளால் சுற்றுச்சூழல் ஆபத்துகளை எதிர்நோக்கும் இஸ்ரேல்!
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.