mauritius videoSixteenByNine768இயற்கை எழில் கொஞ்சும் மொரிஷியஸ் தீவுகள், அதன் அழகிய கடற்கரை, தெளிந்த கடல் நீர் இவையெல்லாம் இப்போது ஹைட்ரோகார்பன் நெடி வீசும் எண்ணெய் கடலில் கலந்து, கடற்கரையைக் கருப்பு நிறத்தில் மாற்றி விட்டது. ஆம், ஜப்பானிய எண்ணெய் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகி கச்சா எண்ணெய் மொரிஷியஸ் கடல் பகுதியில் கலந்து விட்டது. இது அந்த நாட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய பேரிடர் பாதிப்பாகும்.

ஒவ்வொரு ஆண்டும் எண்ணெய்க் கப்பல்கள் ஏதாவது ஒரு கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகி கடல் பகுதியை நாசப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதியே இந்தியப் பெருங்கடலில் உள்ள மொரிஷியஸ் தீவுப் பகுதியில் ஜப்பானிய நாட்டு எண்ணெய்க் கப்பலான 'MV Wakashio' இங்குள்ள பவளப்பாறைகளில் சிக்கிக்கொண்டு பழுதாகி நகர முடியாமல் நின்றது.

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தான், ஆகஸ்ட் 11ஆம் தேதி கப்பலில் இருந்து எண்ணெய் வெளியேற ஆரம்பித்து. ஏறத்தாழ 1200 மெட்ரிக் டன் எண்ணெய் கடலில் கலந்தது.

சென்னைத் துறைமுக கடற்பகுதியில் கொட்டிய எண்ணையை எப்படி பக்கெட் மூலம் எடுத்துக் கையாண்டார்களோ, அதேபோன்ற நிலைதான் மொரிஷியஸ் கடல் பகுதியில் கொட்டிய எண்ணெயை, நூற்பாலை துணிகள் மற்றும் கரும்பு சக்கையை பெரிய குழாய் போல் வடிவமைத்து கடலில் கலந்த எண்ணெய்யை எடுக்க கையாண்டிருக்கிறார்கள் அங்குள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள்.

மொரிஷியஸ் தீவு பகுதிகளில் அமைந்திருக்கும் மாங்குரோவ் காடுகள், பவளப் பாறைகள், அரியவகை கடல்வாழ் உயிரினங்களுக்கு இது நிச்சயம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். தற்போது கப்பல் நிற்கும் காட்சியைப் பார்க்கும் போது கப்பல் இரண்டாக உடைவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அப்படி நிகழும் பட்சத்தில் எண்ணெய்க் கப்பலில் மீதியிருக்கும் 2000 மெட்ரிக் டன் எண்ணெய்யும் கடலில் கலக்கும் ஆபத்து இருக்கிறது.

"ஏற்கனவே சில அரிய வகை உயிரினங்கள் கச்சா எண்ணெயில் சிக்கி உயிரிழந்துள்ளது. பவளப் பாறைகளில் வளர்ந்திருக்கும் செடிகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் இந்த பாதிப்புகளில் இருந்து மீண்டுவர இன்னும் சில காலங்கள் ஆகலாம்" என்றார் மொரிஷியஸ் கடல் பாதுகாப்பு (Mauritius Marine Conservation Society) தலைவர் Jacqueline Sauzier.

மொரிஷியஸ் பிரதமர் Pravind Jugnauth, கடலில் கலந்து இருக்கும் எண்ணையை அப்புறப்படுத்த பிரஞ்சு நாட்டின் மீட்புக் குழுவை அனுப்பி வைக்குமாறு பிரஞ்சு அதிபரிடம் கேட்டுக் கொண்டார். பிரெஞ்சு நாட்டு மீட்புக் குழுவும் உடனடியாக மொரிஷியஸ் கடல் பகுதிக்கு விரைந்தது. மொரீசியஸ் நாடு பிரெஞ்சு நாட்டு காலனிக்கு உட்பட்ட ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய எண்ணெய் கப்பலை இயக்கி வந்த 'Mitsui OSK lines' என்ற நிறுவனம், "இந்த கப்பல் சீனாவில் இருந்து பிரேசில் நாட்டிற்கு எண்ணெய் எடுத்துக் கொண்டு சென்றது. மோசமான வானிலை காரணமாக கப்பல் வேறு திசையில் திரும்பி பவளப் பாறைகளில் சிக்கி விட்டது. விபத்து நிகழ்ந்தது குறித்து நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். அதோடு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்." என்றது.

விபத்தாகிய கப்பலில் மீதமிருக்கும் எண்ணெய்யை அகற்ற வேறு மீட்புக் கப்பல்களை அந்த பகுதிக்கு அனுப்பியது. 1000 மெட்ரிக் டன் எண்ணெயை வேறு கப்பலுக்கு மாற்றி விட்டார்கள்.

கப்பல் பழுதாகி நின்ற நாளிலேயே அவர்கள் முறையான தகவல்களை தெரிவித்து இருந்தால் இந்த பேரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கும். பல அரிய வகை உயிரினங்களும், சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்பட்டிருக்கும். மொரீசியஸ் நாட்டின் முக்கிய வருமானமே அதன் சுற்றுலாத் துறையை சார்ந்து தான் உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்கனவே சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது ஒட்டுமொத்த நாடுமே அவசர நிலைப் பிரகடனம் செய்திருக்கும் நிலையில் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் நாடுகளிலிருந்து உலகின் பிற பகுதிகளுக்கு கச்சா எண்ணெய்யை கடல்வழி மார்க்கமாக எண்ணெய் கப்பல்கள் மூலம் அதிகமாக எடுத்துச் செல்லப்படுகிறது. சமீபகாலமாக எண்ணைக் கப்பல்கள் கடலுக்குள் கவிழ்ந்து கச்சா எண்ணெய் கடலில் கலப்பது குறைந்திருந்தது என்று ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.

எனினும் சில தவிர்க்க முடியாத சம்பவங்கள் நிகழ்கின்றன. அதில் நாம் குறிப்பிடப்படும்படி சொல்ல வேண்டும் என்றால், சென்னை கப்பல் விபத்து சம்பவத்தை குறிப்பிடலாம். கடந்த 2017ல் சென்னை எண்ணூர் துறைமுகம் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்று மற்றொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. கப்பலில் இருந்த எண்ணெய் முழுவதும் கடல் நீரில் மிதந்தது.

ஆம், மறக்க முடியுமா அந்த எண்ணெய் விபத்து சம்பவத்தை! டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஒன் இந்தியா, நியூ இந்தியா இப்படிப் பல்வேறு வகையான இந்தியாக்களை ஒன்றிய அரசு அறிவித்திருந்தாலும். கடைசியில் கடலிலிருந்து எண்ணெய்யை எடுப்பதற்கு என்னவோ bucket India தான் உதவியது. இதற்கு சுற்றுச்சூழல் குறித்த மெத்தனப் போக்கே காரணமாகும்.

கச்சா எண்ணெய் விபத்துச் சம்பவங்களை கண்காணித்து வரும் ITOPF (International Tanker owners Pollution Federation ltd) என்ற நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையில். எந்த ஒரு எண்ணெய்க் கசிவு/சிதறல்கள் 700 மெட்ரிக் டன் அளவுக்கு மேல் இருந்தால் அதனை மிகப்பெரிய எண்ணெய் கசிவு சம்பவமாக அட்டவணைப் படுத்துகிறது.

2019ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு பெரிய எண்ணெய் கசிவு சம்பவங்களை குறிப்பிடுகிறது, முதலில் வட அமெரிக்காவில் உள்ள 'Keystone pipeline - North Dakota' என்ற எண்ணெய்க் குழாய்களில் ஏற்பட்ட விபத்தால் 1500 மெட்ரிக் டன்கள் (4000,0000 gallons of crude oil) எண்ணெய்க் கசிவால் 22,500 சதுர அடி பரப்பளவில் ஈரப்பத நிலத்தை பாதித்தது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உருவாக்கியது.

மற்றொன்று இதே ஆண்டில் அக்டோபர் மாதம் பிரேசில் நாட்டின் கடற்கரையில் 2000 மெட்ரிக் டன்கள் கச்சா எண்ணெய் கரை ஒதுங்கியது. ஏறத்தாழ 2400 கிலோ மீட்டர் அளவில் கடற்கரை பகுதிகளில் எண்ணெய் அலை மோதியது. இதில் பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகள் பாதிப்புக்குள்ளாகியது.

இதில் ஆச்சரியப்படத்தக்க நிகழ்வு என்னவென்றால், கடலில் விபத்துக்குள்ளான கச்சா எண்ணெய் எல்லாம் எங்கிருந்து வந்தது என்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லை. எந்த ஒரு நிறுவனமும் அல்லது நாடோ இதற்கு பொறுப்பேற்கவில்லை என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.

பிரேசில் அரசாங்கம் வெனிசுவேலா நாட்டின் மீது பழி சுமத்தியது. வெனிசுவேலா நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஐரோப்பிய நாடுகளுக்கும் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த வழியாக சென்ற ஏதேனும் ஒரு கப்பல் விபத்துக்குள்ளாகி இருக்கும் ஆனால், எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

மொரீசியஸ் தீவுக்கு அருகில் ஏற்பட்ட கப்பல் விபத்துக்கு ஜப்பானிய நிறுவனம் பொறுப்பேற்று இருக்கிறது. போர்க்கால அடிப்படையில், விரைவில் கடலில் காணப்படும் எண்ணெய்களை அப்புறப்படுத்தினால் சூழலியலுக்கு நல்லது. விபத்துகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் சுற்றுச் சூழலை பாதுகாக்கலாம்.

- பாண்டி

Pin It