ஃபாலஸ்தீன் காஸாவில் ஏற்பட்டு வரும் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான நெருக்கடியான நிலைமை, இஸ்ரேலில் உடனடியாக சில சீரமைப்புகளை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது. காஸா கிட்டத்தட்ட ஒரு திறந்தவெளி சிறைச்சாலை என்றே அழைக்கப்படுகிறது. இங்கு தினம் தினம் இஸ்ரேல் வீசும் குண்டுகளால் கட்டிடங்கள் இடிந்து விழுகின்றது. முற்றிலும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளது காஸா.

gaza buildings after bombingஇஸ்ரேல் அரசு காஸாவில் மேற்கொண்ட சுற்றுச்சுழல் பாதிப்புகள் அனைத்தும், அதனுடைய தலைநகரான டெல் அவிவில் ஆபத்துக்கான எச்சரிக்கை மணியாக ஒலிக்கத் தொடங்கி விட்டது என்பது தான் தற்போதுள்ள செய்தியாக இருக்கிறது.

ஜுன் 3ம் தேதி இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் பென்குரியோன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அறிஞர்கள் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் “காஸாவில் இடிந்து விழும் கட்டிடங்கள், முறையின்றி வெளியாகும் கழிவுநீர், மின்சார பாதிப்புகள் அனைத்தும் இஸ்ரேலின் நிலத்தடி நீர், கடல்நீர், கடற்கரைப் பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும், உடனடியாக இதற்கு ஒரு தெளிவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றும் கூறியுள்ளனர்.

கடந்த 12 ஆண்டுகளாக இஸ்ரேலிய இராணுவம் ஏற்படுத்திய தொடர்ச்சியான தாக்குதல்கள், முற்றுகையால் காஸா சிதைந்து போயுள்ளது. இதுவரை அதனுடைய பாதிப்புகள் எதையும் இஸ்ரேலிய அரசு வெளியிடுவதை தடுத்தே வந்துள்ளது. இதனால், அந்தப் பகுதி 2020ம் ஆண்டில் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற பகுதியாக இருக்கும் என்று காஸாவைப் பற்றி அறிந்த பலரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இப்படியிருக்கையில், இஸ்ரேலின் வாழ்வு மற்றும் மரணம் காஸாவின் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதிலே இருக்கின்றது என்றும், காஸாவில் சுற்றுச்சூழல் மோசமானதற்கான முழு காரணமும் இஸ்ரேல் தான் என்றும், அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதில் இருந்து, இஸ்ரேலின் அரசு பத்திரிகையான ஹெராட்ஸும் தேசிய பாதுகாப்பு பிரச்சனையாக விவாதத்தைக் கிளப்பி உள்ளது.

இஸ்ரேல் அரசு ஃபாலஸ்தீன் காஸாவில் மேற்கொண்ட ஆக்கிரமிப்புகள், ராக்கெட்டு மற்றும் குண்டுவீச்சுகள், முற்றுகைகள் அனைத்தும் ஃபாலஸ்தீன் மற்றும் ஃபாலஸ்தீனியர்களுக்குத்தான் ஆபத்தாகவும், அச்சுறுத்தலாகவும் இருந்து வந்தது.

இப்போது, அந்த பாதிப்பை இஸ்ரேலிய நாடும், இஸ்ரேலிய மக்களும் அனுபவிக்கத் துவங்கியுள்ளனர். இதுகுறித்து சீக்கிரமாக ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் அரசுக்கு நாட்டு மக்களும், பத்திரிகை ஊடகங்களும் வலியுறுத்தத் தொடங்கி உள்ளனர். இதனால், இஸ்ரேலில் ஓர் அச்சம் உருவாகி உள்ளது என்பது மட்டும் உண்மையாகும்.

- நெல்லை சலீம்

Pin It