அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
அதிதீவிர வெப்ப உயர்வால் உலகில் மூன்றில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். உலகின் பல பகுதிகளிலும் நிலவும் வெப்பநிலை உயர்வு, இளமையான மற்றும் ஆரோக்கியமானவர்களுக்கும் இயல்பான உடலியல் வேலைகளைச் செய்வதைக் கடினமாக்குகிறது. காலநிலை மாற்றம், மக்கள் தங்கள் வாழ்வின் நேரத்தைப் பாதுகாப்பாகச் செலவிட முடியாதபடி சுருக்கி விட்டது என்று புதிய ஆய்வு கூறுகிறது.
உலக மக்களில் மூன்றில் ஒருவர்
உலகில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இன்று உடற்செயல்பாடுகளைத் தீவிரமாகக் கட்டுப்படுத்தும் பகுதிகளில் வாழ்கின்றனர். புதைபடிவ எரிபொருட்கள் தொடர்ந்து எரிக்கப்படுவதால், பல இளமையான மற்றும் ஆரோக்கியமானவர்களுக்கும் கூட வெப்பம் உச்சத்தில் இருக்கும் கோடை காலப் பகல் நேரத்தில் வீட்டு வேலை செய்வது, மாடிப்படியை ஏறுவது போன்ற அடிப்படைச் செயல்களைச் செய்ய முடியாமல் போகிறது.
குறைவாக வியர்வை வெளியேறும் திறன் இருப்பதால், உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் வயது முதிர்ந்தவர்களிடம் இந்தக் கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளன. உடலியல் ரீதியாக வெப்பத்தைச் சமாளிப்பது குறித்த ஆய்வுகளுடன், உலகளாவிய மற்றும் பிராந்திய ரீதியிலான மக்கள்தொகை, வெப்பநிலை மற்றும் மனித வளர்ச்சி தொடர்புடைய எழுபது ஆண்டு காலத் தரவுகளும் ஒப்பிடப்பட்டு ஆராயப்பட்டன. சராசரியாக 65 வயதிற்கும் அதிகமானவர்கள் இப்போது பாதுகாப்பான வெளிப்புறச் செயல்பாடுகளில் ஆண்டிற்கு 900 மணி நேர வெப்ப உயர்வை அனுபவிக்கின்றனர். இது 1950-களில் இருந்த 600 மணி நேரத்துடன் ஒப்பிடப்படும்போது, ஒரு மாதத்திற்கும் அதிகமான பகல் பொழுதிற்குச் சமமாகும்.
அதிக எரிவாயு, எண்ணெய் மற்றும் நிலக்கரியை எரிப்பதால் உமிழப்படும் பசுமைக்குடில் வாயுக்கள், செல்வந்த நாடுகளின் வாழ்க்கைமுறை மாற்றங்களால் அதிகம் வெளிவிடப்படுகின்றன. காலநிலை அவசரநிலை ஏற்பட ஏழை நாடுகளின் மக்கள் குறைவாகவே காரணமாக இருக்கின்றனர்; என்றாலும் அவர்களே இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பிரதேசங்களில், ஆண்டின் கால் பகுதி முதல் மூன்றில் ஒரு பகுதி வரையிலான கால அளவில் முதியோரின் வெளிப்புறச் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. தென்மேற்கு ஆசியாவில் பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக், ஓமன் போன்ற பகுதிகளில் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலாண்மை செய்து செலவிடும் ஆற்றல்
தெற்காசியாவில் பாகிஸ்தான், வங்கதேசம், இந்தியா மற்றும் மோரிட்டேனியா, மாலி, செனகல், புர்கினா பாசோ (Burkina Faso), ஜிபூட்டி (Djibouti), நைஜர் போன்ற சில மேற்காப்பிரிக்க நாடுகளில் மக்கள் மிகத் தீவிரமான சவால்களைச் சந்திக்கின்றனர். இதில் நிலவியல், வருமானம் மற்றும் வேலையின் இயல்பைப் பொறுத்து நாடுகளுக்குள் இருக்கும் பகுதிகளுக்கிடையே பெரிய அளவில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
இந்தியாவில் இந்த வேறுபாடுகள் கங்கைச் சமவெளிப் பகுதிகள் மற்றும் கிழக்குத் தாழ் நிலப் பகுதிகளில் அதிகமாகவும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் இமயமலையின் அடிவாரப் பகுதிகளில் குறைவாகவும் உள்ளன. தென் அமெரிக்காவில் ஆண்டீஸ் தொடரின் உயரமான இடங்களில் உள்ள மக்களை விட, அமேசான் படுகைப் பகுதி மக்கள் வெப்பத்தால் பலவீனமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வளைகுடா நாடுகளில் செல்வந்தர்கள் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தி வெப்பநிலை உயர்வைச் சமாளிக்கின்றனர். ஆனால் இடம்பெயர்ந்து வந்த ஏழைத் தொழிலாளர்கள், கட்டுமான இடங்கள் மற்றும் வெளிப்புற வேலை பார்க்கும் இடங்களில் ஆபத்தான அளவில் சூரியக் கதிர்வீச்சுக்கு ஆளாகின்றனர்.
இந்த ஆய்வு 'நேச்சர் கன்சர்வென்சி' (Nature Conservancy) என்ற அமைப்பின் விஞ்ஞானிகளால் நடத்தப்பட்டது. இது குறித்த ஆய்வுக் கட்டுரை 'என்விரான்மென்டல் ரிசர்ச் ஹெல்த்' (Environmental Research Health) என்ற இதழில் வெளிவந்துள்ளது. முந்தைய ஆய்வுகள் போலன்றி, இந்த ஆய்வு உலகளாவிய வெப்பத்தால் ஏற்படும் ஆபத்துகளுக்கேற்பத் தகவமைத்துக் கொள்வதற்குரிய மக்களின் சமூக மற்றும் உடலியல் திறனை விரிவாக ஆராய்ந்துள்ளது.
வெவ்வேறு வெப்பநிலைகளில் வாழும் திறனை விஞ்ஞானிகள் 'மேலாண்மை செய்து செலவிடும் ஆற்றல்' (METs) என்ற அலகில் மதிப்பிட்டனர். இது, சராசரியாக ஒருவர் ஓய்வாக இருக்கும்போது செலவிடும் ஆற்றலுக்குச் சமமானது. 65 வயதிற்கும் குறைவாக உள்ளவர்கள், 3.3 என்ற அளவிலான ஆற்றலைச் செலவழித்து தரையைப் பெருக்குதல், நடுத்தர வேகத்தில் நடத்தல் போன்ற செயல்களை வெப்ப அழுத்தம் இன்றி ஒரு குறிப்பிட்ட நேரம் வரை செய்ய முடியும். தங்கள் உடல் வெப்பநிலையை அவர்களால் நிதானமாக ஒழுங்குபடுத்திக்கொள்ள முடியும் என்பதே இதன் பொருள்.
வாழத் தகுதியற்ற இடங்கள்
இதற்கு மாறாக, வாழ இயலாத நிலைக்குரிய கட்டுப்பாடுகள் சூடான இடங்களில் உள்ளன. மனிதச் செயல்பாடுகள் 1.5 METs அளவில் இருக்கும்போது, படுத்துக்கொண்டிருத்தல் அல்லது உட்கார்ந்திருத்தல் போன்ற எந்தச் செயலும் செய்யாத நிலையையே இது குறிக்கிறது.
வேறுபட்ட வயதுக் குழுக்களில் இந்நிலையால் ஏற்படும் பலவீனத்தைப் பரிசோதிக்க, விஞ்ஞானிகள் வெவ்வேறு கால அளவுகளில் வெப்பமான அறைகளில் தனிநபர்களின் வியர்வை வெளியேறும் அளவு மற்றும் தோலின் ஈரத்தன்மையை ஆராய்ந்தனர். 1950-1979 மற்றும் 1994-2024 ஆகிய காலக்கட்டங்களில் நிலவிய வாழக்கூடிய திறன் பற்றிய தரவுகளுடன் ஒப்பிட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
உயரும் வெப்பநிலையால் வாழ்வதற்குரிய நிலை மேலும் மோசமாகி வரும் உலகின் பகுதிகள் விரிவடைந்து கொண்டே இருக்கின்றன. இதனால் மக்கள் தொடர்ந்து விரிவடையும் உலகின் வாழத் தகுதியற்ற இடங்களில் பெரும் சவால்களுடன் வாழ்கின்றனர். இது 2024-ல் தீவிரமாக இருந்தது.
எரிவாயு, எண்ணெய் மற்றும் நிலக்கரியை எரிப்பது போன்ற உலக வெப்பமயமாதலின் முதன்மை மூலங்களை விரைவாகக் குறைக்க வேண்டும் என்பதை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. கொள்கை வகுப்பாளர்கள், மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு வளங்களை அளிப்பதன் மூலம் உதவ வேண்டும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
“இதற்குத் தீர்வு காணப்படாவிட்டால், நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் ஆண்டின் மிக வெப்பமான காலத்தில் அன்றாட வாழ்வியல் செயல்களை இனி பாதுகாப்பாக வெளியில் சென்று மேற்கொள்ள முடியாது. வெப்ப உயர்விற்கு மிகக் குறைவாகக் காரணமானவர்களே இதனால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களில் வாழ்கின்றனர். ஒவ்வொரு டிகிரி வெப்பநிலை கூடும்போதும் அதனால் உண்டாகும் பாதிப்புகளும் அதிகமாகின்றன."
ஒவ்வொரு டிகிரி வெப்பம் உயரும்போதும்…
தொழிற்புரட்சிக்குப் பின் 1.5 டிகிரி அளவு வெப்பம் உயர்ந்தால் உலகம் எவ்வாறு இருக்கும் என்ற கசப்பான உண்மையை 2024 நமக்கு எடுத்துக் காட்டியது. 2 டிகிரி அல்லது அதற்கும் அதிகமாக வெப்பம் உயராமல் இருக்க வேண்டுமென்றால் நாம் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டும். மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெப்ப எச்சரிக்கை முன்னறிவிப்புகள் மற்றும் குளிர்ச்சிக்கான வசதியுடன் கூடிய உட்கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
மேலும், முதியவர்கள் மற்றும் வெளிப்புற வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். என்றாலும், இதற்காகச் செய்யப்படும் முதலீடுகள் உலக வெப்பமயமாதலைக் குறைப்பதற்கான மாற்றாக இருக்க முடியாது” என்று ஆய்வின் முன்னணி ஆசிரியர் லூக் பார்சன்ஸ் (Luke Parsons) கூறுகிறார். நாட்கள் செல்லச் செல்ல சூடு அதிகரித்து வரும் இன்றுள்ள சூழலில், உயரும் வெப்பநிலையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு நாம் முன்னோக்கி எடுத்துவைக்கும் ஒவ்வொரு சிறிய நகர்வும் பெரிய பயனைத் தரும் என்பதை உணர்வோம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
மேற்கு இந்தியப் பெருங்கடலில் பவளப்பாறைகள் அடுத்த 50 ஆண்டுகளுக்குள் அழிந்துபோய்விடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. புவி வெப்ப உயர்வு, மிதமிஞ்சிய மீன் பிடித்தல் இதற்குக் காரணம் என்று நீடித்த இயற்கை (Journal Nature Sustainability) இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. செஷல்ஸ் முதல் தென்னாப்பிரிக்கா வரை உள்ள பவளப்பாறைகள் செயலற்று அழியும் (functionally extinct) நிலையில் உள்ளன.
செஷல்ஸ், மொசாம்பிக் நாட்டின் டிலகோவா (Delagoa) மற்றும் தென்னாப்பிரிக்கா வரை உள்ள கடற்பகுதிகளில் இவை காணப்படுகின்றன. இது உயிர்ப் பன்மயத் தன்மைக்குப் பேரிழப்பு. ஆயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதில் மேற்கு இந்தியப் பெருங்கடற்பகுதியில் இருக்கும் 10 நாடுகளின் பவளப்பாறைத் திட்டுகள் ஆராயப்பட்டன.
இங்கு உள்ள 11 துணை மண்டலங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதற்காக சர்வதேச இயற்கை வள சங்கத்தின் ஆய்வு மாதிரிகள் (IUCN framework) பயன்படுத்தப்பட்டன. ஐ.யு.சி.என். அமைப்பின் இந்த ஆய்வுமுறை ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் தாவர, விலங்கின அழிவை அறிய உதவுகிறது. பவளப்பாறைத் திட்டுகளின் அழிவு தீவு நாடுகளின் கடல்களில் அதிகமாக நிகழ்கிறது.
உயரும் புவியின் வெப்பத்தால் ஏற்படும் கடல்நீர் மட்ட உயர்வு இவற்றைப் பாதிக்கிறது. புவி வெப்பம் உயர்வதால் கடல்நீர் வெப்பமும் அதிகரிக்கிறது. இந்த வெப்பம் பவளப்பாறைகளின் செல்களில் வாழும் ஆல்காக்களை வெளியேற்றுகிறது. இதனால் பல வண்ணங்களுடன் காணப்படும் திட்டுகள் நிறமிழந்து வெள்ளை நிறமாகின்றன.
இது ப்ளீச்சிங் எனப்படுகிறது. இதன் மூலம் உயிர்த்தன்மையுள்ள பவளப்பாறைகள் உயிரற்ற எலும்புக்கூடாகின்றன. தெற்கு மடகாஸ்கர், மஸ்கரின், தி கமோரோஸ் (Comoros), மாஸ்கரீன் தீவுகள் (Mascarene) ஆகிய இடங்களில் உள்ள பவளப்பாறைத் திட்டுகள் இதனால் பெரும் அழிவைச் சந்தித்துள்ளன.
வட செஷல்ஸ் மற்றும் கிழக்காப்பிரிக்கக் கடலோரப்பகுதியில் இருக்கும் பவளப்பாறைத் திட்டுகள் அழிவின் விளிம்பில் உள்ளன என்று ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. பெரிய கடல்வாழ் உயிரினங்கள் மிதமிஞ்சிய மீன் பிடித் தொழிலால் அழிகின்றன. இது இத்தகைய உயிரினங்களின் வாழிட மண்டலங்களைப் பெரிதும் பாதிக்கிறது.
சமீபகாலங்களில் உலகளவில் பவளப்பாறைகள் அழிந்துவருவது தெரிந்ததே என்றாலும், ஒரு குறிப்பிட்ட சிறு பகுதியில் இவற்றின் அழிவு பற்றி ஆராயப்படுவது மிகக் குறைவே. ஒரு சிறிய குறிப்பிட்ட கடற்பரப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதால் அப்பகுதியில் பவளப்பாறைகளின் அழிவு, அதன் தீவிரம் பற்றி துல்லியமாக அறிய முடிகிறது என்று ஆய்வுக்குழுவின் தலைவர் மற்றும் ஐ.யு.சி.என். பவளப்பாறைகளை ஆராயும் அமைப்பின் தலைவர் டேவிட் ஓப்யூரா (David Obura) கூறுகிறார்.
இன்றிலிருந்து அடுத்த ஐம்பதாண்டில் உயரும் புவியின் வெப்பநிலை பவளப்பாறைகளின் அழிவில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வருங்காலத்தை நோக்கி நாம் 50 ஆண்டுகள் என்று வரையறை செய்தாலும், அதற்குள் புவி வெப்பம் 1.5 டிகிரி நிலையை அடையும் அபாயம் உள்ளது. புவி வெப்ப உயர்வைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பொறுப்பு மனிதர்களாகிய நம் கையிலேயே இருக்கிறது.
வரும் பத்தாண்டுகளுக்குள்ளாகவே பூமி 1.5 டிகிரி செல்சியஸ் சூடாகலாம். அதனால் வரும் பத்தாண்டுகளில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது முக்கியம். ஒரு பவளப்பாறைத் திட்டின் அழிவு என்பது அப்பகுதி முழுவதும் மரணமடையும் நிலையைக் குறிக்கிறது.
இது அந்தக் கடலோர சூழல் மண்டலத்தின் முழு அழிவையும் குறிக்கிறது. அழிந்த பவளப்பாறைப் பகுதியில் ஒரு சில உயிரினங்கள் வாழலாம். ஆனால் அவற்றால் உயிருள்ள பவளப்பாறைகளை உருவாக்க முடியாது. ஒரு பவளப்பாறைப் பகுதியின் அழிவு என்பது அதில் வாழும் அனைத்து உயிரினங்களும் வழங்கும் இயற்கையின் விலைமதிக்க முடியாத சேவைகளின் அழிவே.
பவளப்பாறைகள் அழிந்தால் அக்கடலோரப் பகுதி கடல்நீர் மட்ட உயர்வினால் பாதுகாப்பிழந்த நிலையை அடையும். கடலோரப் பகுதியில் சுற்றுலா, குறைந்த வருமானம் உள்ள சமூகங்களின் வயிற்றுப்பிழைப்பு, மீன்வளம் போன்றவை கேள்விக்குறியாகும். கடலின் மழைக்காடுகள் என்று அழைக்கப்படும் இந்தப் பவளப்பாறைகளை நம்பியே கிழக்காப்பிரிக்காவின் சுற்றுலா வளர்ச்சி உள்ளது.
1950கள் முதல் உலகம் முழுவதும் உள்ள பவளப்பாறைகளின் போர்வை (coral reef cover) புவி வெப்ப உயர்வு, அளவுக்கு மீறிய மீன் பிடித்தல், மாசுபடுதல், வாழிட இழப்பு போன்றவற்றால் பாதியாகக் குறைந்துள்ளது. இதுபோன்ற முக்கிய உலக சூழல் மண்டலங்களின் அழிவு கடலில் வாழும் இளம் மீன்களின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கிறது. இது புவியின் இயற்கை உலகிற்குப் பெரும் அச்சுறுத்தல்.
இப்பகுதியில் கால் லட்சம் மனிதர்களுக்கு தொழில் ஏற்படுத்தித் தரும் பவளப்பாறைகளின் ஆரோக்கியத்தையும், நீடித்த நிலையான வளர்ச்சியையும், மீன்வளச் செழுமையையும் உறுதிப்படுத்த உள்ளூர் அளவில் மீன்பிடித் தொழிலை ஒழுங்குமுறைப்படுத்தி திறம்பட்ட முறையில் மேலாண்மை செய்ய வேண்டும் என்று ஆய்வின் துணை ஆசிரியரும் கார்டியோ கிழக்காப்பிரிக்கா (Cordio East Africa) அமைப்பின் மூத்த விஞ்ஞானியுமான மிஸ்ஹல் கட்கா (Mishal Gudka) கூறுகிறார்.
பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வைக் குறைப்பதுடன் பவளப்பாறை வளங்களை ஆரோக்கியத்துடன் வாழ வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு உள்ளூர் மக்களிடம் உருவாக வேண்டும். இந்த மதிப்பீடுகள் உயிர்ப் பன்மயத்தன்மைக்கும் காலநிலை மாற்றத்திற்கும் இடையில் நிலவும் நெருக்கமான உறவை மீண்டும் நிரூபிக்கின்றன.
சமீபத்தில் க்ளாஸ்கோவில் முடிவடைந்த காப்26 உச்சிமாநாட்டிலும் சூழல் மண்டலங்கள் காக்கப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இதையே சீனாவில் இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் காப்15 கன்மிங் (Kunming) உலக உயிர்ப் பன்மயத்தன்மை மாநாடும் (CBD Conference on Biodiversity) வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காப்15 மாநாடு உயிர்ப் பன்மயத்தன்மை உள்ள சூழல் மண்டலங்களைக் காப்பதுடன் பூமியில் மிஞ்சியிருக்கும் பவளப்பாறைத் திட்டுகளைக் காப்பாற்ற உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
எதிர்பார்க்கப்பட்டதை விட காடுகள் வெப்ப உயர்வால் ஆபத்தான நிலைக்கு வேகமாக சென்றுகொண்டிருக்கின்றன. அதிதீவிர வெப்பத்தால் வெப்பமண்டலப் பகுதி காடுகளில் மரங்களின் இலைகள் கூட்டமாக மரணமடைகின்றன. இதனால் சில இன மரங்களின் இலைகள் ஒளிச்சேர்க்கை செய்யும் திறனை இழந்து விட்டன. பூமியில் காலநிலை மாற்றம் கணிக்கமுடியாத பாதிப்புகளை உயிர்ப் பன்மயத் தன்மைக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மரங்களின் இலைகளின் ஒளிச்சேர்க்கை செய்யும் செயல்முறை சராசரியாக 46.7 டிகிரி செல்சியர்ஸ் வெப்பநிலையில் மரண நிலையை அடைந்தன என்று நேச்சர் (Nature) ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இது குறித்த ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. தென்னமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள வெப்ப மண்டலக் காடுகள் கணிக்கப்பட்டதைவிட விரைவாக அதிதீவிர வெப்பத்தாக்குதல்களால் அழிகின்றன. கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீரைப் பயன்படுத்தி சூரிய ஒளியின் முன்னிலையில் ஒளிச்சேர்க்கை செய்யும் இலைகள் வெப்ப உயர்வால் இறந்து உதிர்ந்துவிழுகின்றன.
பூமியில் இருந்து 400 கிலோமீட்டர் உயரத்தில் செயல்படும் சர்வதேச வின்வெளி நிலையத்தில் உள்ள நாசாவின் வெப்ப பிம்பமாக்குதல் கருவிகள் (thermal imaging instruments) மற்றும் உலகம் முழுவதும் மழைக்காடுகளில் பொருத்தப்பட்டுள்ள தரைவழி சோதனைக் கருவிகளைப் பயன்படுத்தி ஆராய்ந்தபோது சிறு அளவு 0.01% எல்லா வகை மர இலைகளும் வெப்ப உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன.
வெப்ப உயர்வு 3.9 டிகிரியை விட கூடுதலாகும்போது இலைகள் ஒட்டுமொத்தமாக உயிரிழக்கின்றன.
இதனால் பூமியின் 12% பரப்பில் உள்ள வெப்பமண்டலக் காடுகள் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நிலப்பகுதியில் பாலூட்டிகளில் 62%, பறவைகளில் 72%, ஊர்வனவற்றில் 76% இனங்கள் வெப்ப மண்டலக் காடுகளில் வாழ்கின்றன. இதனால் நிலப்பகுதி வாழ் உயிரினங்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன.
சூடாகும் இலைகள்
இலைகள் சூடாவது இப்போது மிகச்சிறிய அளவில் மட்டுமே உள்ளது என்றாலும் “இருண்ட நிலக்கரி சுரங்கத்தில் வழிகாட்டும் கனரி பறவை (Canary in a a coalmine) போல வனச்சூழல் மண்டலத்தின் ஆபத்தான நிலையை இது அடையாளப்படுத்துகிறது என்று யு எஸ் வட அரிசோனா பல்கலைக்கழக இகாயின் ஃபார்மேட்டிக்ஸ் பிரிவு பேராசிரியர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆய்வாளர் கிறிஸ் டவுட்டி (Chris Doughty) கூறுகிறார். இலைகள் சூடாவது பற்றிய இந்த பரிசோதனைகள் வெப்பநிலை நாளுக்குநாள் அதிகரிப்பதை எடுத்துக்காட்டின.
இரண்டு முதல் நான்கு டிகிரிகள் வரை இலைகள் சூடாக்கப்பட்டபோது அவை உண்மயில் எட்டு டிகிரிகள் சூடாயின. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலைகள் வெப்பமடைவது சீரற்றமுறையில் நிகழ்வதையே இது சுட்டிக் காட்டுகிறது என்று கிறிஸ் கூறுகிறார். இப்பிரச்சனையைத் தீர்க்க நாம் எதையும் செய்யாமல் இருந்தால், வெப்பமண்டலக் காடுகளில் வெப்ப உயர்வு நான்கு டிகிரியைவிட அதிகமாகும்போது இலைகளின் இறப்பு விகித மிக அதிகமாக இருக்கும். பெருமளவில் மரங்கள் மரணமடையும். உயிரினங்கள் வாழ வழி தேடி காடு முழுதும் அலையும்.
மீளமுடியாத அழிவு நிலையை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கிறது என்பதன் ஒரு சிறு அறிகுறியே இலைகள் இறப்பது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கார்பன் உமிழ்வு அதிகமாகும்போது இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும். காடுகள் சவான (savana) எனப்படும் புல்மேடுகளாக மாறும் என்று லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்த தொலை உணரி துறை பேராசிரியர் மேட் டிஸ்னி (Prof Mat Disney) கூறுகிறார்.
உலகளவிலான 50% கார்பன் பரிமாற்றம் காடுகளின் பசுமையான மேற்கவிகை அல்லது விதானம் (canopy) மூலமே நடைபெறுகிறது. இது பூமியின் காலநிலையை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெப்ப உயர்வால் வெப்ப மண்டலக் காடுகளில் மரங்களின் இலைகளில் ஒளிச்சேர்க்கை செயல்முறைக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி நடத்தப்பட்ட உலகளவிலான முதல் ஆய்வு இதுவே என்பதால் இதன் முடிவுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
உமிழ்வு குறைந்தால் காடுகள் உயிர் பிழைக்கும்
உடனடியாக நாம் செயல்படாவிட்டால் அடுத்து வரும் காலத்தில் இப்பகுதி காடுகளுக்கு என்ன நிகழும் எந்பதை இந்த ஆய்வுகள் மூலம் அறிய முடிந்தது. வெப்பநிலையை சீர்படுத்த உமிழ்வைக் குறைப்பதே முதல் படி. வெப்ப உயர்வு குறைந்தால் இலைகள் உயிர் பிழைக்கும் என்று லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் உலகளாவிய மாற்றம் பற்றி ஆராயும் பிரிவின் பேராசிரியர் சைமன் லூயிஸ் (Prof Simon Lewis) கூறுகிறார்.
குறைந்த காலத்திற்கு வெப்ப அலை தாக்குதல்கள் நிகழும்போது கார்பன் உமிழ்வு குறைவாக இருந்தாலும் மரங்கள் மரணமடையும். மரங்கள் நீண்ட காலம் உயிர் வாழ்பவை. இதனால் ஒரு இடத்தில் நிகழும் இவற்றின் கூட்ட மரணம் இந்த வெப்ப மண்டலக் காடுகளில் உள்ள பெரிய மரங்கள் உருவாக்கியுள்ள விதானத்தைச் சார்ந்து வாழும் மற்ற எல்லா தாவர விலங்குகளையும் பெரிய அளவில் பாதிக்கும்.
ஒளிச்சேர்க்கை செய்யமுடியாமல் மரங்கள் அழிந்தால் உணவு உற்பத்தி பாதிக்கப்படும். உற்பத்தி பாதிக்கப்பட்டால் உலகின் உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். ஒளிச்சேர்க்கை மூலம் வெளியேற்றப்படுவது ஆக்சிஜன். இந்நிகழ்வு நடக்காமல் நின்றுபோனால் அது பூமியின் ஆக்சிஜன் சுழற்சியை பாதிக்கும். இது அந்தந்த பிரதேசங்களில் வாழும் உயிரினச் செல்கள் அழியும் நிகழ்விற்கு (necronis) வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மனிதகுலத்தின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி போல இந்த ஆபத்து உள்ள நிலையில் இப்போதும் காலம் கடந்துவிடவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மாதிரிகள் கூறுவது இறுதித்தீர்ப்பு அல்ல. காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் குறைக்க சில வழிமுறைகளை மேற்கொண்டால் வெப்ப மண்டலக் காடுகளைக் காப்பாற்றமுடியும். இந்த காடுகள் அதிகபட்சம் சமாளிக்கக்கூடிய வெப்பநிலை பற்றி மேலும் ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உங்கள் ஓட்டு யாருக்கு?
மக்கள் செயலில் இறங்க வேண்டும். காலநிலை மாற்றத்தைப் பற்றி கவலைப்படும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே மக்கல் ஓட்டு போட வேண்டும். உலகப் பொருளாதாரம் மாற்றத்திற்குள்ளாக வேண்டும். உலகம் குறைவான கார்பன் உமிழ்விற்கு உதவும் பொருளாதாரமுறைக்கு மாற வேண்டும். வெப்ப மண்டலக் காடுகளை நம்பி வாழும் மக்கள் மற்றும் நாடுகளுக்கு பணக்கார நாடுகளும் மக்களும் எல்லா வகையிலும் ஆதரவு காட்டவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும்.
இந்த மாற்றங்கள் நிகழ புதிய பொருளாதார முறைமை ஏற்பட வேண்டும். வெப்ப மண்டலக் காடுகள் அழிந்தால் அப்பகுதியில் அதை நம்பி வாழும் மக்கள் மட்டும் பாதிக்கப்படப் போவதில்லை. இது உலகையே பாதிக்கும் பிரச்சனை. இலைகள் மரணமடைந்தால் காடுகள் அழியும். காடுகள் அழிந்தால் மனிதனும் அழிவான்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
பிலேம் காப்30 காலநிலை மாநாட்டில் புதைபடிவ எரிபொருட்களின் யுகத்தை முடிவிற்குக் கொண்டுவர நடந்த முயற்சிகள் சில அங்குல முன்னேற்றங்களுடன் நிறைவடைந்தது. காலநிலை மாற்றத்தால் அதிகமாக பாதிக்கப்படும் ஏழை நாடுகளுக்கு வழங்கும் நிதியை மும்மடங்கு அதிகரிக்க பணக்கார நாடுகள் ஒப்புக் கொண்டன. ஆனால் இறுதி உடன்படிக்கையில் காடுகளின் அழிவு, முக்கிய தாதுக்களின் சுரண்டல் பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
வளர்வதை நிறுத்தச் சொல்லும் பணக்கார நாடுகள்
காலநிலை கெடுதிகளின் கூர்முனையில் நிற்கும் உலகம் பாதுகாப்பாக கால் பதிக்க ஒரு சிறிய இடத்தை மட்டுமே இம்மாநாடு தந்தது. தொடங்கும்போதே தாமே முன்வந்து புதைபடிவ எரிபொருட்களின் பயனை சிறிது சிறிதாகக் குறைக்க மட்டுமே அரபு நாடுகள் ஒப்புக் கொண்டன. நவம்பர் 21 2025 அன்று முடிய வேண்டிய மாநாடு முழுத்தோல்வி அடையாமல் காக்கப்பட பெரும் போராட்டம் நடந்தது. இரவு முழுவதும் நீண்டு பிறகு விடிய விடிய நடந்த கூட்டத்தின் முடிவில் மிகச் சிறிய முன்னேற்றம் மட்டுமே ஏற்பட்டது.
80 வளரும் நாடுகளுக்கும் சௌதி அரேபியா, அதன் தோழமை நாடுகளுக்கும் இடையில் பெரும் இழுபறி நிலவியது. புதிய ஒப்பந்தத்தின்படி 2035 முதல் காலநிலை தகவமைப்புக்காக செல்வந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு ஆண்டிற்கு 120 பில்லியன் டாலர் நிதி வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டது. மழைக்காடுகளின் சொர்க்கபூமியான பிரேசிலில் அமேசான் நதியின் முகத்துவாரப் பகுதிக்கு சிறிது தூரத்தில் நடந்த இந்த மாநாட்டில் வன அழிவைத் தடுக்க முன்வைக்கப்பட்ட ஒரு திட்டமும் ஏற்கப்படவில்லை.
நிறைவு நேரத்திற்குப் பிறகு 12 மணி நேரம் தாமதமாகவே முடிந்த மாநாட்டுக் கூடத்தில் உயர் அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். “மாநாட்டின் முன்னேற்றம் அர்த்தமுள்ள ஒன்று” என்று முன்னாள் ஜெர்மன் பிரதிநிதி ஜெனிஃபர் மோர்கன் (Jennifer Morgan) கூறினார். “வேறுபட்ட புவி, அரசியல் பின்னணிகளில் இருந்து வந்த பிரதிநிதிகள் பஞ்கேற்ற மாநாட்டின் முடிவுகள் குழந்தை நடையில் சில அடிகளை எடுத்துள்ளது” என்று அதிகார மாற்றத்திற்கான ஆப்பிரிக்க திங்டாங்க் (Power Shift Africa thinktank) அமைப்பின் இயக்குனர் மொஹமது அடோ (Mohamed Adow) கூறினார்.
சூழலைக் காக்கும் பெருந்தலைவர்கள் என்று பேசிக் கொள்ளும் பலரும் தங்கள் நாட்டின் தேசீய அளவிலான தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளுடன் (NDCs) வரவில்லை. “வளர்ந்த நாடுகள் சர்வாதிகார முறையில் நடந்து கொண்டன. இயற்கையின் எல்லா வளங்களையும் கடந்த 200 ஆண்டுகளாக சுரண்டி முழு தொழிற்வளர்ச்சியை அடைந்துவிட்டு இப்போது எங்களை நோக்கி வளர்வதை நிறுத்தச் சொல்கின்றன. வளர்ச்சி என்பது எல்லா நாடுகளுக்குமான அடிப்படை உரிமை” என்று பாகிஸ்தான் பிரதிநிதிக் குழுவின் தலைவர் ஏஷியா ஹ்யூமேரா (Aisha Humaira) கூறினார்.
இனி பேசிப் பயனில்லை
பலவீனமான நாடுகள் நம்பியதை விட வலிமையற்ற விதத்தில் புவி வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் குறைப்பதற்கான முயற்சி பற்றி பெயரளவுக்கு மட்டுமே இறுதி அறிக்கையில் இடம் பெற்றது. அடுத்த ஆண்டு காப் மாநாடு ஆஸ்திரேலியாவால் துருக்கியில் நடத்தப்படும். பிரேசில் அதிபர் உட்பட ஐம்பது நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் தொடக்கத்தில் பங்கேற்றனர். கடந்த வியாழனன்று பிரதிநிதிகளின் அலுவலகங்களுக்கு அருகில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது என்றாலும் இதனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கூடத்தின் மையப் பகுதியில் இருந்து பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்டு சிறிது நேரத்திற்குப் பிறகு முக்கியப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கின. “சூழலிற்கு சேதம் எதுவும் ஏற்படுத்தவில்லை என்றாலும் காலநிலைக் கெடுதிகளை தெற்கு நாடுகள் அனுபவிக்கின்றன. இதை சமாளிக்க பணக்கார நாடுகள் நிதியுதவி செய்யவில்லை என்றால் இனி பொறுப்புகள் எதையும் நாங்கள் ஏற்கப் போவது இல்லை” என்று உலகளாவிய காலநிலைக்கான பன்னாட்டு செயல்பாடுகளுக்குரிய (global lead on climate justice at ActionAid International) அமைப்பின் டெரிசா ஆண்டர்சன் (Teresa Anderson) கூறுகிறார்.
“மாநாட்டின் முடிவுகள் வெறுமையானவை. காலநிலை பிரச்சனைகளுக்கான தீர்வுகள் பேச்சுவார்த்தைகளில் இல்லை என்பதை காப்30 மாநாடு மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தியுள்ளது. நீதியான, சமத்துவமான, புதைபடிவ எரிபொருட்களில் இருந்து விடுதலை பெறப்போராடும் மக்கள் மற்றும் போராளிகளின் போராட்டத்திலேயே உலகின் நலமான எதிர்காலம் உள்ளது” என்று பன்னாட்டு சூழல் சட்ட மையத்தின் (Center for International Environmental Law) நிக்கி ரைஸ்ச் (Nikki Reisch) கூறுகிறார். 2026 காப்31 மாநாட்டிலேனும் நல்ல முடிவுகள் ஏற்படும் என்று நம்புவோம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- "நம்மைக் கொல்ல நாமே காசு கொடுக்கிறோம்!!"
- மனிதனின் வயதை அதிகரிக்கும் அதி தீவிர வெப்பநிலை
- காற்று மாசை காட்டும் காலநிலைக் கோடுகள்
- கலவர பூமியில் இருந்து மீண்டு வந்த ஒரு காட்டின் கதை
- உயிரி பிளாஸ்டிக்குகளும் தீங்கானவையே
- வானில் இருந்து தூவப்பட்ட நூறு மில்லியன் விதைகள்
- காடு காக்கப் போராடும் பெண்கள்
- மருந்துப் பொருள் மாசுகளால் நடத்தை மாறும் மீன்கள்
- இதயத்திற்காக மரங்கள்
- செயற்கை வெளிச்சமும் ஒரு மாசே
- காட்டுத் தீயும் செயற்கை நுண்ணறிவும்
- அல்சைமர்ஸ் நோயை அதிகரிக்கும் ஒளி மாசு
- பத்து டிரில்லியன் டாலர் பயன் தரும் உணவுமுறை மாற்றம்
- கடலுள் மூழ்கும் நிலப்பகுதிகள்: காவிரிப் படுகையின் நிலை என்ன?
- பூநாரையும் லித்தியமும்
- எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய ஓர் உச்சி மாநாடு
- உயிர்ப் பன்மயத் தன்மையைக் காக்க ஓர் உச்சி மாநாடு
- மீத்தேனை உண்ணும் பாக்டீரியாக்கள்
- ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியன் லாரி கடல் மணல்
- பிளாஸ்டிக் கட்டுப்பாட்டை நோக்கி முன்னேறும் உலகம்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.