சூழல் நட்புடன் ஒரு வான் சாகசம். ஸ்கை டைவிங் (Sky diving). ஸ்கை டைவிங் என்பது வானில் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் பாதுகாப்பான ஒரு குறிப்பிட்ட உயரம் வரை கீழிறங்கி மீண்டும் விமானத்திற்குத் திரும்பிச் செல்லும் ஒரு சாகச விளையாட்டைக் குறிக்கிறது. இந்த விளையாட்டில் பதினோரு முறை கின்னஸ் சாதனை புரிந்தவர், அழியும் அமேசான் மழைக் காடுகளைக் காக்க வானில் இருந்து நூறு மில்லியன் விதைகளைத் தூவி புதிய வரலாறு படைத்துள்ளார்.சூழலுக்காக புரட்சி செய்த லூஜி கனி
சாகசம் புரியும் உணர்வு, அர்ப்பணிப்புடன் சூழலைக் காக்க வேண்டும் என்பதில் பேராவலுடன் அன்பையும் கலந்து அவர் இந்த மகத்தான செயலைச் செய்துள்ளார். அவர்தான் உலகப் புகழ் பெற்ற வான் சாகச வீரர் லூஜி கனி (Luigi Cani). அமேசான் பகுதியில் நூறு மில்லியன் விதைகளைத் தூவினார். அவரது இந்த செயல் அப்பகுதியில் காடுகளின் மீட்பு, தாவர விலங்கினப் பாதுகாப்புக்கு புதிய உத்வேகம் அளித்துள்ளது.
இந்த வான் சாகசத்தில் 22 ஆண்டு தொழில்ரீதியான அனுபவம், உலக சாதனையாளர், பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரான அவர் இன்றும் என்றும் நிரந்தரத் தீர்வாக அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் 2022ன் முதற்பகுதியில் அதுவரை இல்லாத அளவுக்கு அழிந்த பிரேசிலின் அமேசானை மீட்க இப்பயணத்தை மேற்கொண்டார்.
லூஜி கனியும் அவரது குழுவினரும் 27 வகை உள்ளூர் விதைகளை கவனத்துடன் தேர்ந்தெடுத்தனர். இவற்றில் நூறு மில்லியன் விதைகளை அவர்கள் வன அழிவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட அமேசானின் 38 சதுர மைல் பரப்பில் உள்ள பகுதியில் வானில் இருந்து தூவி விதைத்தனர். புதுமையான இத்திட்டத்திற்கு Audi do Brasil என்ற அமைப்பு ஆதரவளித்தது. உலகின் மிகப் பெரிய மழைக்காடுகளை மீட்க இத்திட்டம் உதவும் என்று நம்பப்படுகிறது. இதன் பலன்கள் இரண்டாண்டுகளில் தெரிய வரும்.
“வாழ்வில் மூச்சை அடக்கி நான் செய்த ஒரே சாகசச் செயல் இதுதான். அப்போது என் இதயம் மாரடைப்பு ஏற்படப் போவது போல வேகமாகத் துடித்தது” என்று லூஜி கனி ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
இவர் 1970 டிசம்பர் 4 அன்று பிரேசிலில் பிறந்தார். இவர் வான் சாகச வீரர் மட்டும் இல்லை, சண்டை நிபுணர், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். உலகின் தலை சிறந்த தடகள வீரரான இவர் பல வான் சாகச விளையாட்டில் பல சாதனைகளை முறியடித்துள்ளார்.
உலகெங்கும் உள்ள அறுபதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகளில் இவருடைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன. 13,000க்கும் கூடுதலான பயிற்சி சாகச குதிப்புகளை (jumps) நிகழ்த்தியுள்ளார். உலகின் மிகச் சிறிய, வேகமாகச் செல்லும் பாராசூட்டில் பயணம் செய்து தரையிறங்கியது இவரது பல அரிய சாதனைகளில் ஒன்று. பல உலக விருதுகளைப் பெற்றிருந்தாலும் கனி அவை தந்த உத்வேகத்தை தன் சூழல் பாதுகாப்பு பணிகளுக்கே பயன்படுத்தி வருகிறார்.
விதைகள் முதல் பெட்டிகள் வரை
கனியும் அவருடைய குழுவினரும் அமேசான் சூழல் மண்டலத்தில் ஒரு முக்கியத் தூணான மழைக் காடுகளை மீட்கும் திட்டத்தை ஐந்தாண்டுகள் திட்டமிட்டு உருவாக்கினர். அமேசானின் மோசமான நிலையை உணர்ந்து இப்பிரச்சனையைத் தீர்க்க ஒரு புதிய முறை கண்டறியப்பட்டது. வானில் இருந்து 6,500 அடி உயரத்தில் அமேசானுக்கே சொந்தமான நூறு மில்லியன் விதைகளை விதைப்பதே அந்தத் திட்டம்.
நூறு மில்லியன் விதைகளுடன் ஜனவரி 2023ல் கனி பிரேசிலின் மோசமாக பாதிக்கப்பட்ட மழைக்காடுகளின் வழியாக தன் விமானப் பயணத்தைத் தொடங்கினார். 95% முளைக்கும் திறனுடன் இருந்த இந்த விதைகள் காற்று மற்றும் அதன் அழுத்தத்தைப் பயன்படுத்தி திட்டமிடப்பட்ட பகுதிகளில் சீராகத் தூவப்பட்டன. விதைகள் மரமாகும்போது ஐம்பது மீட்டர் உயரம் வரை வளரும் இயல்புடையவை.
இந்த முயற்சியை செயல்படுத்த அவர் எந்த அவசரமும் காட்டவில்லை. இந்தக் கனவு நனவாக அவர் கடுமையாகப் பாடுபட்டார். பிரேசில் அரசிடம் இருந்து அனுமதி பெறுவது ஏற்பட்ட பல தடைகளில் ஒன்று. பல பயிற்சிகள், பிழைகளுக்குப் பிறகு விதைகளை சீராகத் தூவப் பயன்படும் மக்கக்கூடிய பெட்டிகளை உருவாக்கினார். “இதற்கு உதவும் எல்லாக் கருவிகளையும் எடுத்துச் செல்ல பெரும்பாடு படவேண்டியிருந்தது. விதைகளைத் தூவிய பின் நாங்கள் தரையைத் தொட்டபோது, திட்டமிடப்பட்ட எல்லா விதைகளும் ஒழுங்கான முறையில் தூவப்பட்டிருப்பதை அறிந்தபோது எல்லையில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது” என்று லூஜி கனி கூறுகிறார்.
60,000 தாவர வகை விதைகள் அருகில் உள்ள காட்டுப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டன. ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருந்து தூவப்படுவதால் விதைகளின் முளைக்கும் திறன் முக்கியமானது.
விதைகளை முளைக்க வைக்க இரண்டு மாதங்கள் ஆயின. குழுவினர் படமெடுக்கும் நிபுணர்களை அழைத்துச் சென்றனர். இது தவிர காட்டிற்குள் சுமார் 3.5 டன் எடையுள்ள கருவிகளை எடுத்துச் சென்றனர். இதற்காக பல முறை விதைப் பெட்டிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் மூன்று முயற்சிகள் தோல்வியடைந்தன. “விதைகள் தூவப்பட்ட நாளன்று பெட்டியில் இருந்த ஒரு கசிவை சரிசெய்ய நாங்கள் இரவு முழுவதும் விமானத்தில் இருக்க வேண்டி நேரிட்டது” என்று கனி கூறுகிறார்.விதைகளை சீராகத் தூவ, கனி பெட்டிகளை சரியான நிலையில் பிடித்துக் கொள்ள வேண்டியிருந்தது. “இதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். என் மணிக்கட்டையும் விரலையும் காயப்படுத்திக் கொண்டேன். என்றாலும் தரையில் இருந்து சுமார் 6,000 அடி உயரத்தில் என்னை நான் நிலைப்படுத்திக் கொண்டேன். மனதிற்கு முழுமையான திருப்தி ஏற்படும் வகையில் விதைகள் விரும்பிய இடங்களில் சீராகத் தூவப்பட்டன."
இந்த வெற்றியின் மூலம் கனி ஒரு சாகச வீரரின் உணர்வையும் சூழல் மீது உள்ள அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளார். அமேசானில் 2019ம் ஆண்டின் பெரும்பகுதியிலும் காட்டுத் தீ தொடர்ச்சியாக எரிந்ததைப் பார்த்த பலருக்கும் இந்த சாகசம் வியப்பை ஏற்படுத்தாது. வறட்சியான காலங்களில் காட்டுத் தீ அமேசானில் நிகழ்வது இயல்பானது என்றாலும் இச்சம்பவங்களின் மிதமிஞ்சிய எண்ணிக்கை இம்மழைக்காடுகளைப் பற்றிய கவலையை சர்வதேச அளவில் அதிகரித்தது.
2022ல் இக்காடுகள் மற்றொரு சோதனையைச் சந்தித்தன. அந்த ஆண்டு வன அழிவு முன்பில்லாத வகையில் அதிக அளவில் இருந்தது. அப்போது காட்டின் பல இடங்களில் சுமார் 1,500 சதுர மைல் பரப்பில் இருந்த செழுமையான பகுதிகள் அழிந்தன. இது நியூயார்க் நகரைப் போல ஐந்து மடங்கு. இந்த அழிவு 2016ம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட மிகப் பெரிய அழிவு என்று பிரேசில் விண்வெளி முகமை கூறுகிறது.
ஜூன் 2022ல் காட்டுத் தீயினால் ஏற்பட்ட அழிவு அதற்கு முன்பு இருந்த பதினைந்து ஆண்டுகளை விட மிக அதிகம். ஆகஸ்ட் மாதத்தில் இச்சம்பவங்கள் கவலை ஏற்படுத்தும் விதத்தில் அதிக அளவில் இருந்தன. லூஜி கனி இத்திட்டத்தை தன் சொந்தச் செலவிலேயே மேற்கொண்டார். உயிரைப் பணயம் வைத்து நடு வானில் விதைகள் அடங்கிய பெட்டியைத் திறந்து அவற்றைத் தூவினார்.
அரசின் அனுமதி, உயிரி முறையில் மக்கக் கூடிய பெட்டிகளை உருவாக்குதல், கயிறுகளை வடிவமைத்து எடுத்துச் செல்லுதல், விமானத்தை ஏற்பாடு செய்தல் மற்றும் பிற கருவிகளை எடுத்துச் செல்லுதல், நூறு மில்லியன் விதைகளை சேகரித்து விமானத்தில் பயணித்தல் என்று அவர் தன் முயற்சிகள் ஒவ்வொன்றிலும் ஏராளமான தடைகளைச் சந்தித்தார். இத்திட்டத்திற்கு எவரும் நிதி உதவி செய்யவில்லை. பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களும் இல்லை. இவை எல்லாவற்றையும் அவர் தன் சொந்தப் பணத்தையே மூலதனமாகக் கொண்டு செலவழித்தார்.
அனைத்திற்கும் மேல் தன் விலை மதிப்பில்லாத உயிரைப் பனயம் வைத்தார். அதனால் நீங்கள் காணும் கனவுகளை நடு வழியில் ஏற்படும் ஒரு தடையால் பாதியில் கைவிடலாம் என்று நினைக்காதீர்கள். ஏற்பட்ட அனைத்துத் தடைகளையும் தாண்டி சூழலைப் பாதுகாக்க செயல்படும் லூஜி கனி என்ற இந்த பசுமை மனிதனை அப்போது நினைத்துக் கொள்ளுங்கள்.
&
https://www.thecooldown.com/outdoors/luigi-cani-skydive-trees-amazon-forest/
- சிதம்பரம் இரவிச்சந்திரன்