மேற்கு இந்தியப் பெருங்கடலில் பவளப்பாறைகள் அடுத்த 50 ஆண்டுகளுக்குள் அழிந்துபோய்விடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. புவி வெப்ப உயர்வு, மிதமிஞ்சிய மீன் பிடித்தல் இதற்குக் காரணம் என்று நீடித்த இயற்கை (Journal Nature Sustainability) இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. செஷல்ஸ் முதல் தென்னாப்பிரிக்கா வரை உள்ள பவளப்பாறைகள் செயலற்று அழியும் (functionally extinct) நிலையில் உள்ளன.
செஷல்ஸ், மொசாம்பிக் நாட்டின் டிலகோவா (Delagoa) மற்றும் தென்னாப்பிரிக்கா வரை உள்ள கடற்பகுதிகளில் இவை காணப்படுகின்றன. இது உயிர்ப் பன்மயத் தன்மைக்குப் பேரிழப்பு. ஆயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதில் மேற்கு இந்தியப் பெருங்கடற்பகுதியில் இருக்கும் 10 நாடுகளின் பவளப்பாறைத் திட்டுகள் ஆராயப்பட்டன.
இங்கு உள்ள 11 துணை மண்டலங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதற்காக சர்வதேச இயற்கை வள சங்கத்தின் ஆய்வு மாதிரிகள் (IUCN framework) பயன்படுத்தப்பட்டன. ஐ.யு.சி.என். அமைப்பின் இந்த ஆய்வுமுறை ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் தாவர, விலங்கின அழிவை அறிய உதவுகிறது. பவளப்பாறைத் திட்டுகளின் அழிவு தீவு நாடுகளின் கடல்களில் அதிகமாக நிகழ்கிறது.
உயரும் புவியின் வெப்பத்தால் ஏற்படும் கடல்நீர் மட்ட உயர்வு இவற்றைப் பாதிக்கிறது. புவி வெப்பம் உயர்வதால் கடல்நீர் வெப்பமும் அதிகரிக்கிறது. இந்த வெப்பம் பவளப்பாறைகளின் செல்களில் வாழும் ஆல்காக்களை வெளியேற்றுகிறது. இதனால் பல வண்ணங்களுடன் காணப்படும் திட்டுகள் நிறமிழந்து வெள்ளை நிறமாகின்றன.
இது ப்ளீச்சிங் எனப்படுகிறது. இதன் மூலம் உயிர்த்தன்மையுள்ள பவளப்பாறைகள் உயிரற்ற எலும்புக்கூடாகின்றன. தெற்கு மடகாஸ்கர், மஸ்கரின், தி கமோரோஸ் (Comoros), மாஸ்கரீன் தீவுகள் (Mascarene) ஆகிய இடங்களில் உள்ள பவளப்பாறைத் திட்டுகள் இதனால் பெரும் அழிவைச் சந்தித்துள்ளன.
வட செஷல்ஸ் மற்றும் கிழக்காப்பிரிக்கக் கடலோரப்பகுதியில் இருக்கும் பவளப்பாறைத் திட்டுகள் அழிவின் விளிம்பில் உள்ளன என்று ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. பெரிய கடல்வாழ் உயிரினங்கள் மிதமிஞ்சிய மீன் பிடித் தொழிலால் அழிகின்றன. இது இத்தகைய உயிரினங்களின் வாழிட மண்டலங்களைப் பெரிதும் பாதிக்கிறது.
சமீபகாலங்களில் உலகளவில் பவளப்பாறைகள் அழிந்துவருவது தெரிந்ததே என்றாலும், ஒரு குறிப்பிட்ட சிறு பகுதியில் இவற்றின் அழிவு பற்றி ஆராயப்படுவது மிகக் குறைவே. ஒரு சிறிய குறிப்பிட்ட கடற்பரப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதால் அப்பகுதியில் பவளப்பாறைகளின் அழிவு, அதன் தீவிரம் பற்றி துல்லியமாக அறிய முடிகிறது என்று ஆய்வுக்குழுவின் தலைவர் மற்றும் ஐ.யு.சி.என். பவளப்பாறைகளை ஆராயும் அமைப்பின் தலைவர் டேவிட் ஓப்யூரா (David Obura) கூறுகிறார்.
இன்றிலிருந்து அடுத்த ஐம்பதாண்டில் உயரும் புவியின் வெப்பநிலை பவளப்பாறைகளின் அழிவில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வருங்காலத்தை நோக்கி நாம் 50 ஆண்டுகள் என்று வரையறை செய்தாலும், அதற்குள் புவி வெப்பம் 1.5 டிகிரி நிலையை அடையும் அபாயம் உள்ளது. புவி வெப்ப உயர்வைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பொறுப்பு மனிதர்களாகிய நம் கையிலேயே இருக்கிறது.
வரும் பத்தாண்டுகளுக்குள்ளாகவே பூமி 1.5 டிகிரி செல்சியஸ் சூடாகலாம். அதனால் வரும் பத்தாண்டுகளில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது முக்கியம். ஒரு பவளப்பாறைத் திட்டின் அழிவு என்பது அப்பகுதி முழுவதும் மரணமடையும் நிலையைக் குறிக்கிறது.
இது அந்தக் கடலோர சூழல் மண்டலத்தின் முழு அழிவையும் குறிக்கிறது. அழிந்த பவளப்பாறைப் பகுதியில் ஒரு சில உயிரினங்கள் வாழலாம். ஆனால் அவற்றால் உயிருள்ள பவளப்பாறைகளை உருவாக்க முடியாது. ஒரு பவளப்பாறைப் பகுதியின் அழிவு என்பது அதில் வாழும் அனைத்து உயிரினங்களும் வழங்கும் இயற்கையின் விலைமதிக்க முடியாத சேவைகளின் அழிவே.
பவளப்பாறைகள் அழிந்தால் அக்கடலோரப் பகுதி கடல்நீர் மட்ட உயர்வினால் பாதுகாப்பிழந்த நிலையை அடையும். கடலோரப் பகுதியில் சுற்றுலா, குறைந்த வருமானம் உள்ள சமூகங்களின் வயிற்றுப்பிழைப்பு, மீன்வளம் போன்றவை கேள்விக்குறியாகும். கடலின் மழைக்காடுகள் என்று அழைக்கப்படும் இந்தப் பவளப்பாறைகளை நம்பியே கிழக்காப்பிரிக்காவின் சுற்றுலா வளர்ச்சி உள்ளது.
1950கள் முதல் உலகம் முழுவதும் உள்ள பவளப்பாறைகளின் போர்வை (coral reef cover) புவி வெப்ப உயர்வு, அளவுக்கு மீறிய மீன் பிடித்தல், மாசுபடுதல், வாழிட இழப்பு போன்றவற்றால் பாதியாகக் குறைந்துள்ளது. இதுபோன்ற முக்கிய உலக சூழல் மண்டலங்களின் அழிவு கடலில் வாழும் இளம் மீன்களின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கிறது. இது புவியின் இயற்கை உலகிற்குப் பெரும் அச்சுறுத்தல்.
இப்பகுதியில் கால் லட்சம் மனிதர்களுக்கு தொழில் ஏற்படுத்தித் தரும் பவளப்பாறைகளின் ஆரோக்கியத்தையும், நீடித்த நிலையான வளர்ச்சியையும், மீன்வளச் செழுமையையும் உறுதிப்படுத்த உள்ளூர் அளவில் மீன்பிடித் தொழிலை ஒழுங்குமுறைப்படுத்தி திறம்பட்ட முறையில் மேலாண்மை செய்ய வேண்டும் என்று ஆய்வின் துணை ஆசிரியரும் கார்டியோ கிழக்காப்பிரிக்கா (Cordio East Africa) அமைப்பின் மூத்த விஞ்ஞானியுமான மிஸ்ஹல் கட்கா (Mishal Gudka) கூறுகிறார்.
பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வைக் குறைப்பதுடன் பவளப்பாறை வளங்களை ஆரோக்கியத்துடன் வாழ வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு உள்ளூர் மக்களிடம் உருவாக வேண்டும். இந்த மதிப்பீடுகள் உயிர்ப் பன்மயத்தன்மைக்கும் காலநிலை மாற்றத்திற்கும் இடையில் நிலவும் நெருக்கமான உறவை மீண்டும் நிரூபிக்கின்றன.
சமீபத்தில் க்ளாஸ்கோவில் முடிவடைந்த காப்26 உச்சிமாநாட்டிலும் சூழல் மண்டலங்கள் காக்கப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இதையே சீனாவில் இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் காப்15 கன்மிங் (Kunming) உலக உயிர்ப் பன்மயத்தன்மை மாநாடும் (CBD Conference on Biodiversity) வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காப்15 மாநாடு உயிர்ப் பன்மயத்தன்மை உள்ள சூழல் மண்டலங்களைக் காப்பதுடன் பூமியில் மிஞ்சியிருக்கும் பவளப்பாறைத் திட்டுகளைக் காப்பாற்ற உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்