நிசப்த கொலையாளி என்று அழைக்கப்படும் காற்று மாசை காட்டும் காலநிலைக் கோடுகள், காற்று மாசு பற்றிய எண்ணத்தை மாற்றும். 1850 முதல் உலகில் இருந்த காற்றின் தரத்தை கண்களால் காண உதவும் இந்த புதிய முறை அரசுகளை மாசை குறைக்க உதவும் நடவடிக்கைகளை விரைவாக எடுக்கத் தூண்டும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். உலகம் முழுவதும் உள்ள காற்று மாசின் அளவில் ஏற்படும் வேறுபாடுகளை கண்களால் பார்த்து தெரிந்து கொள்ள இந்தக் கோடுகள் உதவும்.air quality stripes delhi 740பல நாடுகளிலும் காற்று மாசு நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில் இந்த ஆய்வின் முடிவுகள் உலக நகரங்கள் பலவற்றிலும் காற்று மாசு சமத்துவமற்ற நிலையில் உள்ளதை எடுத்துக் காட்டுகிறது. உரிய செயல்கள் மூலம் சுத்தமான காற்றைப் பராமரிக்க முடியும் என்பதை சில அரசுகளின் நேர்மறை செயல்கள் எடுத்துக் காட்டியுள்ளன.

எட் ஹாஃப்க்கின்ஸ் (Ed Hawkins) அவர்களின் காலநிலைக் கோடுகள் கண்டுபிடிப்பால் உள்ளுணர்வு பெற்று உருவாக்கப்பட்ட இப்புதிய முறை 1850 முதல் இன்று வரை நிலவும் காற்றின் தரத்தை நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாசின் அளவு தனி செங்குத்துக் கோடின் வடிவத்தில் காட்டப்படுகிறது. நுண்துகள்களின் அளவைப் பொறுத்து கோடுகளுக்கு நிறங்கள் வழங்கப்பட்டுள்ளன.

உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவுகள்படி காற்றின் தரம் இருக்கும் இடங்களில் கோடுகள் வானின் நீல நிறத்தில் உள்ளன. மஞ்சள், பழுப்பு மற்றும் கறுப்பு நிறக் கோடுகள் மாசு அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது. உலகம் முழுவதும் புகைமூட்டத்தைப் பிரதிபலிக்கும் 200 படங்களின் அடிப்படையில் இந்த நிறங்களின் பாணி அமைந்துள்ளது.

“கண்ணுக்குத் தெரியாத கொலையாளி என்னும் காற்று மாசை கண்ணுக்குத் தெரியும் வகையில் இந்த கோடுகள் நமக்கு அடையாளப்படுத்துகின்றன. இவற்றின் மூலம் பல பத்தாண்டுகளாக காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றங்களைப் புரிந்து கொள்ளலாம். மாநகரங்களில் உள்ள காற்று மாசுக்கு ஏற்ப கோடுகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். இணைய தளம் ஒன்று இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது” என்று திட்டத்தின் இணை இயக்குனரும் எடின்பரோ பல்கலைக்கழக ஆய்வாளருமான டாக்டர் கர்ஸ்ட்டி ஃப்ரிங்கல் (Dr Kirsty Pringle) கூறுகிறார்.

“இந்தக் கோடுகள் காற்று மாசு பற்றி நமக்கு எளிதில் புரிய வைக்கும். லண்டன் மற்றும் பீஜிங் நகருக்கான கோடுகள் பெருமளவிலான தர முன்னேற்றத்தை காட்டுகின்றன. சரியான நடவடிக்கை எடுத்தால் காற்றின் தரத்தை ஆரோக்கியமாகப் பராமரிக்க முடியும் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது” என்று லீட்ஸ் (Leeds) பல்கலைக்கழக ஆய்வாளரும் திட்டத்தின் மற்றொரு இணை இயக்குனருமான டாக்டர் ஜிம் மக்வேட் (Dr Jim McQuaid) கூறுகிறார். ஒரு நூற்றாண்டிற்கு மேல் லண்டன் நகரம் நிலக்கரி புகையால் பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது வானம் பட்டானியின் கறுப்பு நிற சூப் போல மாறியது.

1952ல் ஒரு வார காலம் நீண்டு நின்ற லண்டன் பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது. 12,000 பேர் உயிரிழந்தனர். இதனால் நடவடிக்கை எடுக்கத் தயங்கிக் கொண்டிருந்த அரசு கடைசியில் காற்று மாசைக் குறைக்க செயலில் இறங்கியது. தொடர்ந்து தூய காற்றுக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. முதலில் வெப்பமூட்ட பயன்படும் எண்ணெய் (heating oil) மற்றும் பிறகு புதைபடிவ எரிபொருள் வாயு பயன்பாட்டின் மூலம் நிலக்கரி பயன்பாடு அகற்றப்பட்டது.

2008 ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு வரை பீஜிங் நகரின் காற்று மாசு கவனிக்கப்படாமலிருந்தது. அதுவரை சீனாவில் காற்று மாசால் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மில்லியன் பேர் உயிரிழந்தனர். ஆனால் அதற்குப் பின் தொழிற்சாலை மற்றும் போக்குவரத்து நெரிசலால் உண்டாகும் காற்று மாசைக் குறைக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டது; பெரும் பயன் ஏற்பட்டது.

காற்று மாசின் அளவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் விரைவான நகர மயமாக்குதல் மற்றும் தொழிற்துறை வளர்ச்சி நடக்கும் ஜகார்த்தா மற்றும் இஸ்லாமாபாத்தில் இப்போதும் காற்று மாசு மோசமான நிலையில் உள்ளது. இந்த இரு இடங்களும் உலகின் இன்றுள்ள வளரும் நாடுகளின் நிலையைப் பிரதிபலிக்கின்றன.

காற்று மாசு பற்றிய செயற்கைக்கோள் உற்றுநோக்கல் தரவு விவரங்கள் முதலில் 1998ல் கிடைத்தன. இதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இங்கிலாந்து வானிலை ஆய்வு நிறுவனத்தின் உலகளாவிய காலநிலை மாதிரிகளில் இருந்து கோடுகளை உருவாக்குவதற்கான இறுதி விவரங்கள் திரட்டப்பட்டன. எரிபொருள் மற்றும் ஆற்றல் பயன்பாடு குறித்த புள்ளி விவரங்களைக் கணித்து 1850களில் நிலவிய காற்று மாசின் அளவு வரையறுக்கப்பட்டது. 2.5 அளவுள்ள நுண் துகள்கள் பற்றிய மிகச் சில வரலாற்று விவரங்கள் மட்டுமே கிடைத்தன.

கி பி 2000ம் ஆண்டிற்கு முந்தைய விவரங்கள் கணினி மாதிரிகள், செயற்கைக்கோள் உற்றுநோக்கல்கள் மூலம் பெறப்பட்டன. 2020-2021 ஆண்டுகளுக்கான மிக சமீபத்திய 2.5 அளவு நுண்துகள் காற்று மாசு பற்றிய விவரங்கள் வான் டாங்கிலாரட் அட் (Van Donkelaar et at (2021, V5 0.1 degree resolution) என்ற தளத்தில் இருந்து பெறப்பட்டன. இவை தரை நிலை மற்றும் செயற்கைக்கோள் உற்றுநோக்கல் விவரங்களை இணைத்து உருவாக்கப்பட்டவை.

உலகளாவிய மாதிரிகளின் ஆய்வு

உலகளாவிய மாதிரிகள் தொடர்ந்து மதிப்பிடப்படுகின்றன; மேம்படுத்தப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நகரத்தின் 2000-2022 ஆண்டுகளுக்கான செயற்கைக்கோள் தரவுகளின் சராசரி மதிப்பிடப்பட்டது. அந்த நகரத்தின் காற்று மாசு அடர்த்தி மாதிரிகளின் சராசரி கணக்கிடப்பட்டது. இவற்றுக்கு இடையிலான விகிதத்தின் அடிப்படையில் மாசின் அளவு மதிப்பிடப்பட்டது.

இந்த கோடுகளில் காற்று மாசின் அளவுகளுக்கான கணிப்புகள் ஒவ்வொரு டிகிரி தீர்க்கரேகை மற்றும் அட்சரேகை துல்லியமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. நகரத்திற்குள் நிலவும் மாசின் அளவை இந்தக் கோடுகள் முழுமையாகக் காட்டாது. என்றாலும் இவை நகரத்தின் குறிப்பிட்ட பகுதியில் மாசில் ஏற்படும் மாற்றங்களை எடுத்துக் காட்டும்.

பூமியில் மக்களில் 99% பேர் உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள தூய காற்றை இன்னும் சுவாசிக்க முடியவில்லை. ஐரோப்பாவில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் ஆண்டுதோறும் காற்று மாசால் 400,000 பேர் அகால மரணமடைகின்றனர். இங்கிலாந்தில் இந்த அளவு 29,000 மில்லியனுக்கும் 43,000 மில்லியனுக்கும் இடையில் உள்ளது.

“சரியான விவரங்கள் கிடைக்கப் பெறும்படி செய்தால் காற்று மாசு என்ற மிகப் பெரிய உலகப் பிரச்சனையை சமாளிக்க முடியும். பல உலக நகரங்கள் இப்போதும் அசுத்தமான காற்றால் அவதிப்படுகின்றன.” என்று ரீடிங் (Reading) பல்கலைக்கழக ஆய்வாளரும் இந்தக் கோடுகளை உருவாக்கியவருமான பேராசிரியர் எட் ஹாஃப்க்கின்ஸ் கூறுகிறார்.

ஆட்சியாளர்களுக்கு போதிய அரசியல் உறுதி இருந்தால் காற்று மாசு என்னும் மிகப் பெரிய உலகளாவிய பிரச்சனையைத் தீர்க்க முடியும்.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/article/2024/aug/23/can-climate-stripes-change-the-way-we-think-about-air-pollution?CMP=Share_AndroidApp_Other

சிதம்பரம் இரவிச்சந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.