இரண்டு போராளிகளை சந்திப்போம், வாருங்கள்!
பிரேசில் பிலேம் (Belém ) நகரில் காலநிலை மாற்றத்தைத் தடுக்க உலக நாடுகள் (காப்30) ஒன்று கூடி பேசி வருகின்றன. இந்நிலையில் மாநாட்டிற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான சாமான்ய மக்களில் இருவரின் சூழல் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்புள்ள வாழ்வு நம்மை அசர வைக்கிறது. அவர்கள் கூறும் கருத்துகளை அறிந்தால் புவி வெப்ப உயர்வில் இருந்து பூமி தப்பிப் பிழைக்கும், நலம் பெறும் என்ற நம்பிக்கை நமக்கும் ஏற்படும்.
காப் மாநாடுகளை விமரிசனம் செய்வது சுலபம். ஆனால் அந்தக் கூட்டங்களில் உள்ள ஓர் அதிசய அம்சத்தை நாம் அங்கீகரிப்பது இல்லை. பூமியின் பெரும்பாலான நாடுகளில் இருந்தும் மனிதநேயம் மிகுந்த சாதாரண மக்கள் இத்தகைய கூட்டங்களுக்கு வருகை தருகின்றனர். அவர்களின் முக்கிய குறிக்கோள் காலநிலை கெடுதிகளில் இருந்து பூமியைக் காப்பது என்பது மட்டுமே. அவர்களில் பலரும் அறிவாளிகள், காலநிலைக்கு எதிராக அர்ப்பணிப்புடன் போராடுபவர்கள். இவர்கள் போன்றோரை அதிகமாக சந்தித்தால் வெப்பமயமாவதில் இருந்து புவியை நம்மால் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை நமக்குள் ஏற்படும்.
பனாமாவில் இருந்து தீப்பொறி கக்கும் செயல்களுடன் அந்த மங்கலான மாநாட்டுக் கூடத்தை தன் கூர்மையான பார்வையால் பிரகாசிக்கச் செய்த மாண்டரி கோமெஸ் (Monterrey-Gómez ) மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் போராளி ஆயிஷா சிடிகா (Ayisha Siddiqa ) ஆகியோரே பிலேம் மாநாட்டிற்கு வந்த அந்த இருவர்.
கோமெஸ் கூறும் உண்மைகள்
ஐ நா காலநிலை மாநாடுகளின் பசுமைக் குடில் வாயு உமிழ்வை நிலைப்படுத்துவது என்ற குறிக்கோளில் இருந்து நாம் தோல்வியடைகிறோம். ஆனால் கடந்த 33 ஆண்டுகளாக உமிழ்வை வெட்டிக் குறைப்பதற்குப் பதில் அதை இரு மடங்கிற்கும் மேல் அதிகமாக்கியுள்ளோம். உயிர்ப் பன்மயத் தன்மையைப் பராமரித்து மேம்படுத்துவதற்குப் பதில் வாழும் எல்லா உயிரினங்களையும் கொல்கிறோம். இது குறித்து இனி அதிக அறிக்கைகள், உரையாடல்கள், வட்டமேசைகள் தேவையில்லை, செயல்களே தேவை. புதைபடிவ எரிபொருட்கள் புவியை வெப்பமாக்குகின்றன. இதைக் குறைக்க ஒரே வழி அவற்றை ஒழிப்பது மட்டுமே என்று கூறும் அறிவியல் தெளிவாக இருக்கிறது.
காலநிலை, உயிர் பன்மயத் தன்மை, கடல், பிளாஸ்டிக் மாசு இவை எல்லாம் ஒரே பிரச்சனைகளே. இவை எல்லாம் முதலாளித்துவ பொருளாதாரம் பெற்ற குழந்தைகள். அது தடுத்து நிறுத்த இயலாத உற்பத்தியை நோக்கிச் செல்கிறது. அதன் பாதையில் உள்ள எல்லாவற்றையும் மாசுபடுத்தி மனிதனையே இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது. நம்மைக் கொல்வதற்கு நாமே குற்றவாளிகளுக்கு காசு கொடுக்கிறோம். புதைபடிவ எரிபொருட்களுக்கு மான்ய உதவிகளை வழங்குகிறோம்.
அதன் தயாரிப்புகள் அனைத்தும் நம்மை நிதானமாகவோ வேகமாகவோ கொல்கிறது என்று தெரிந்தே இவ்வாறு செய்கிறோம். காலநிலை மாநாடுகள் உறுதியான நடவடிக்கைகளுடன் முடிய வேண்டும். பெட்ரோல் உற்பத்தி நாடுகளின் முட்டுக்கட்டைகளால் காலநிலை மாநாடுகளில் புதைபடிவ எரிபொருட்கள் என்ற சொல்லை சேர்த்துக் கொள்ள நமக்கு 28 ஆண்டுகளாகி விட்டன. காடுகளை காப்பாற்ற முடியவில்லை என்றால் எதற்காக நாம் வாழ்கிறோம்?
மிகச் சிறந்த பேச்சாளரான கோமெஸின் கருத்துகள் இவை.
ஆயிஷா என்ற அதிசயப் பெண்மணி
26 வயதான பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் சட்டம் பயிலும் மாணவர். ஐநா பொதுச் செயலாளருக்கு ஆலோசகர். பன்னாட்டு ஆற்றல் முகமையின் கமிஷனர். வருங்காலத் தலைமுறைகளின் தீர்ப்பாயம் என்ற அமைப்பின் தோற்றுநர்.
சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புகள் நிலையான காலநிலை ஒரு மனித உரிமை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன. சூழல் பாதிப்புகளால் அதிகம் பாதிக்கப்பட இருப்பவர்கள் பூமியில் இன்னும் பிறக்காதவர்களே. அதனால் அவர்களின் உரிமைகள் எவ்வாறு காக்கப்படும்? இது பற்றி பன்னாட்டு அரசுகள் சிறிதேனும் கற்பனை செய்து பார்க்க வேண்டும். வருங்காலத் தலைமுறைகளின் உரிமைகள் பற்றி பேசத் தொடங்க வேண்டும். அமேசான், நியூசிலாந்தில் உள்ள இனயட்டரோவா (in Aotearoa) ஆகிய இடங்களில் ஆறுகளுக்கு தனிமனித உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதனால் இவை நீதிக்காகப் போராட நீதிமன்றத்தில் போய் நிற்க முடியும்.
இவை ஆயிஷாவின் கருத்துகள். ஆயிஷா ஆரோக்கியமான சூழல், மனித உரிமைகளில் காலநிலை மாற்றம் எவ்வாறு பறித்துச் செல்கிறது என்பதைப் பற்றிய விவரங்களை உலகம் முழுவதும் இருந்து சேகரித்து வருகிறார். இந்த கருத்துகள் வருங்காலத் தலைமுறைகளுக்கான உரிமைகள் குறித்த பன்னாட்டு அறிக்கையாக தயாரிக்கப்படும். புதைபடிவ எரிபொருட்களில் இருந்து விடுதலை பெற்ற உலகமாக வருங்கால தலைமுறைகளின் உலகம் இருக்க வேண்டும்.
சட்டப்பூர்வமான உரிமைகள் பெற்ற ஒரு இடமாக பூமி மாறும்போது கார்ப்பரேட்டுகளின் பிடியில் இருந்து உலகம் விடுபடும். பாகிஸ்தானில் வாழும் ஆதிவாசி மக்கள் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தால் இப்போது உள்ளதைவிட அதிக துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆயிஷாவின் இந்த கருத்துகள் மனிதனாக இருக்கும் எவர் ஒருவரையும் சிந்திக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கூறியது போல “பிரபஞ்சத்தின் நீண்ட வில் நீதியை நோக்கி வளையும்”. இந்த நம்பிக்கை இந்த இரு இளைஞர்களால் நமக்கு வலுப்படுகிறது!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்