கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- வி.கீதா
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
‘நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே’ என்றும், ‘காக்கை, குருவி எங்கள் ஜாதி’ என்றும், கவிதை பாடி ஐந்தறிவு உயிரினங்களைச் சொந்தம் கொண்டாடினான் மகாகவி பாரதி. புத்தனும், காந்தியும், அகிம்சையை வாழ்க்கை முறையாக போதித்த நாடு இது. இவர்களின் வழியில் விலங்குகளின் நலனைப் பற்றிக் கொஞ்சம் சிந்திப்போம்.
நமது நாட்டில் விலங்குகள் நல இருவாரம் ஜனவரி 14-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. விலங்குகள் நலன் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவதும், அவற்றுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதும்தான் இதன் நோக்கமாகும்.
நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளின் மீது அக்கறை செலுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் .இந்த விலங்குகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்க்கைக்கு உதவி செய்கின்றன. சுற்றுச் சூழலைப் பாதுகாக்கின்றன. தாவரங்களுக்கு உறுதுணையாக உள்ளன.
இந்த வாயில்லா ஜீவன்களுக்கு நம்மால் நிச்சயம் உதவ முடியும், எப்படி? இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்டுள்ள இந்தக் குறிப்புகள் நாம் செய்ய வேண்டிய பணிகளை நினைவுபடுத்துகின்றன.
• உங்கள் பகுதியில் நோய் வாய்ப்பட்டிருக்கும் விலங்குகளை, விலங்குகள் நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம். ஆதரவற்ற தெரு நாய், பூனைகளைத் தத்தெடுத்து உங்கள் வீட்டில் வளர்ப்பதன் மூலம் ஒரு நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்தலாம் .
• ஆதரவற்ற விலங்குகளுக்கான ஒரு சிறு உறைவிடத்தை உருவாக்கி அவைகளுக்கான உணவளித்து கவனித்து வரலாம்.
• பறவைகளுக்கு உணவு, குடிநீர் அளிப்பதற்காக சிறு, சிறு மண்குவளைகளை உங்களின் வீட்டுக்கு அருகில் ஆங்காங்கே வையுங்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை அவர்கள் விரும்பும் போது உணவுத் தானியங்களையும், நீரையும் இந்த குவளையில் வைக்குமாறு கேட்டுக் கொள்ளுங்கள்,
• ஒரு விலங்கு சிரமப்படும் போது அதற்கு எப்படி உதவுவது என்று உங்கள் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு முதலுதவி வகுப்புகளை நடத்தலாம்.
• பறவைகளுக்குப் புகலிடமாக உள்ள வேப்பமரம் போன்ற பல்வேறு மரக்கன்றுகளை அதிக எண்ணிக்கையில் நட்டு வளர்க்கலாம்.
• பிளாஸ்டிக் கவர்களுக்கு எதிராக உங்கள் பகுதி மக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யுங்கள். பிளாஸ்டிக் பைகள் தெருக்களில் அலட்சியமாக எறியப்படுவதால் பசுக்களும், எருமைகளும் அவற்றைச் சாப்பிட்டு இறந்து போகின்றன. பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாகத் துணிப் பையைப் பயன்படுத்தச் சொல்லி மக்களிடமும், வியாபாரிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
• ஆதரவில்லாமல் தெருக்களில் சுற்றித் திரியும் பல குதிரைகளுக்கும், கழுதைகளுக்கும் மருத்துவ உதவி தேவைப்படுகிறது. இந்த விலங்குகளுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யலாம். இவைகளுக்கு உணவையும், மருந்தையும் தொடர்ந்து அளிக்கலாம் .
• பள்ளிகளில் விலங்குகளை அறுத்துக் கூறுகளாக்கி ஆராய்ச்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். .உயிருள்ள விலங்ககளுக்குப் பதிலாக கணினியில் தவளை, எலி, மண்புழு, கரப்பான்பூச்சி, புறா ஆகியவற்றின் ரத்த நாளங்கள், ஜீரண அமைப்பு, பிற உடல் பாகங்களை உருவாக்கி மாணவர்களுக்குக் கற்றுத் தரலாம் . பள்ளிகள் இது தொடர்பாக இந்திய விலங்குகள் நல வாரியத்தின் உதவியை நாடலாம் .
• சாலையோரங்களில் அடிபட்டும், நோயுற்றும் உள்ள விலங்குகளைக் காப்பதற்காகப், பல்வேறு இடங்களில் சிறு முதலுதவி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யலாம்.
• தெருவோர விலங்குகளுக்கு உங்களால் முடிந்த உணவளிக்கலாம். அருகில் உள்ள இறைச்சிக் கூடங்களுக்குச் சென்று, விலங்குகளை சித்தரவதை செய்யாமல் மனிதாபிமான முறையில் கொல்வது குறித்து அறிவுறுத்தலாம். இறைச்சிக் கூட விதிகள் பற்றிய விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்துங்கள்.
• மிக இளம் வயதில் குழந்தைகளை இறைச்சிக் கூடப்பணிகளில் ஈடுபடுத்துவதைத் தடுக்க வேண்டும்,
• பால் கறக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், மாடுகள், எருமைகளுக்கு ஆக்சிடாக்சின் ஊசி போடக்கூடாது. இது உணவு, மருந்து கலப்படத்தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்ட விரோதமான செயலாகும்,. இதனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
• தெரு நாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டம், ராபிஸ் நோய்த் தடுப்புத் திட்டம் ஆகியவற்றை உள்ளாட்சி அமைப்புகளின் உதவியுடன் உங்கள் பகுதிகளில் செயல்படுத்தலாம்,
நமது நாட்டின் பாரம்பரியத்தில், கலாச்சாரத்தில் அகிம்சைக்கு முக்கிய இடமுண்டு. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51 ஏ பிரிவில், வனங்கள், ஏரிகள், வன உயிரினங்கள் ஆகியவை உள்ளிட்ட இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதும், உயிருள்ள ஜீவன்களிடம் பரிவு காட்டுவதும் இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறப்பட்டுள்ளது.
விலங்குகளுக்கு எதிரான சித்தரவதைத் தடுப்புச் சட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்த மிகச் சில உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1890-ம் ஆண்டு இச்சட்டம் நமது நாட்டில் கொண்டு வரப்பட்டது. 1960-ல் இச்சட்டம் மாற்றப்பட்டு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. கொடுமைகள், சித்தரவதைகளில் இருந்து விலங்குகளைப் பாதுகாப்பதற்காகப் பல்வேறு விதிமுறைகள் இதில் படிப்படியாக சேர்க்கப்பட்டன.
மத்திய அரசு 1962-ம் ஆண்டில் இந்திய விலங்குகள் நல வாரியத்தை ஏற்படுத்தியது. இந்த வாரியம் 28 உறுப்பினர்களுடன், மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
விளையாட்டுகள், பொழுதுபோக்கு, விளம்பரப் படங்கள், திரைப்படங்கள், சர்க்கஸ் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் விலங்குகளைப் பாதுகாப்பதற்காகப் ‘பெர்ஃபார்மிங் அனிமல்ஸ் சட்டம் - 2001’-ஐ மத்திய அரசு கொண்டு வந்தது. பொழுதுபோக்கிற்காக விலங்குகளைப் பயன்படுத்துவதை இந்தச் சட்டம் நெறிப்படுத்துகிறது. பொழுதுபோக்கிற்குப் பயன்படுத்தப்படும் விலங்குகளை இச்சட்டத்தின் கீழ் இந்திய விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் .
கரடி, குரங்கு, புலி, சிங்கம், சிறுத்தை ஆகிய ஐந்து விலங்குகளையும் காட்சிப்பொருளாக எந்தப் பொழுதுபோக்கு ஊடகத்திலும், விளையாட்டிலும், செயல்முறையிலும் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. மாட்டு வண்டிப் பந்தயம், குதிரைப் பந்தயம், நாய்ச்சண்டை, சேவல் சண்டை, காளைகள் சண்டை, ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுக்களில் அப்பாவி விலங்குகள் கொடுமையான சித்தரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றன. இவற்றைக் காப்பதற்காக இந்திய விலங்குகள் நல வாரியம் சட்ட ரீதியாகப் போராடி வருகிறது.
நம்மைச் சுற்றியுள்ள வாயில்லா இந்த அப்பாவி ஜீவன்களிடம் சற்றே பரிவு காட்டுவோம். எதிர்க்க முடியாது என்ற ஒரே காரணத்தால் விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதும், சித்தரவதை செய்வதும் நியாயமற்றது.
நீங்கள் மனது வைத்தால் உங்களைச் சுற்றியுள்ள சிறு சிறு விலங்குகளைக் காப்பாற்றலாம். சுற்றுச் சூழல் சமநிலையைத் தக்க வைக்கலாம்.
(அறிவியல் ஒளி ஜனவரி 2012 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- அ.மு.அம்சா
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இயற்கையை நேசிப்பவர்கள் எல்லாம், இயற்கையை ஆழமாக புரிந்தவர்கள் அல்ல-இயற்கைவாதி.
அதிகாலை 5 மணிக்கு எழுந்து கோடநாடு மலை உச்சியில் இருந்து காட்டு வழியாக தெங்குமராடா செல்லும் நடை பயணத்தின் மகிழ்ச்சியில் அனைவரும் உற்சாகத்தோடு புறப்பட்டோம்.நீலகிரி மலை அடிவாரம் வந்தபோது உற்சாகம் அதிகமானது. நடை பயணத்திற்கான தேவையான பொருள்கள் மற்றும் மதிய உணவுக்கான தாயரிப்போடு தயாராக இருந்தோம்.
நாங்கள் காட்டுக்குள் செல்லும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்.யானை அல்லது விலங்குகளின் இருப்பிடத்தில் நாங்கள் நடந்து செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை ஆலோசனைகளை காட்டுயிர் ஆசிரியர் விளக்கி கூறினார்.
நாங்கள் செல்லும் காட்டுவழி நடை பயணத்தில் எந்த விலங்கை சந்திக்க போகிறோம் என்று மனதில் கற்பனையோடும்,ஆவலோடும் காட்டுயிர் ஆசிரியர் உடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது. அரவேணு வந்தவுடன், நாங்கள் செல்லும் பயணத்திற்கான அனுமதி கடிதத்துடன் நண்பர் பூபதி காத்திருந்தார். காலை 8.30 மணிக்கு கர்சன் எஸ்டேட் தாண்டி அய்யன் எஸ்டேட் பாதையின் தொடக்கத்தில் வண்டியை நிறுத்தி அனைவரும் இறங்கினோம். காட்டுயிர் ஆசிரியர் அனைவருக்கும் வாழ்த்து கூறி சில ஆலோசனைகளை வழங்கி, நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.காட்டுயிர் ஆசிரியரிடம் விடைப்பெற்று எங்கள் வழிகாட்டியை அழைத்து கொண்டு நடை பயணத்தை தொடங்கினோம்.
சுமார் 3 அல்லது 4 கிலோமீட்டர் நடந்து மலைகளை கடந்து காட்டுக்குள் சென்று அய்யன் எஸ்டேட் முடிவில் ஒரு காட்டு மரத்தின் அடியில் அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறினோம். சுமார் 6000 அடி உயரத்தில் சரிவை நோக்கி எங்கள் நடைபயணம் தொடர்ந்தது. திடீரென்று எங்களது வழிகாட்டி “எல்லோரும் நில்லுங்கள், யாரும் பேசாதீர்கள்”-என சைகையால் எச்சரித்தார்.அப்பொழுது காட்டு யானையின் சப்தம் நாங்கள் நடந்து செல்லும் பாதையின் வலது புறம் இருந்து கேட்டது. ஒரு நிமிடம் அமைதியாக நின்றோம். யானை கிளைகளை உடைக்கும் சப்தம் கேட்டது.10 அடி உயரத்திற்கு மரம்,செடி,புதர்களால் இரு புறமும் சூழப்பட்ட ஒற்றையடி பாதையில் எல்லோரும் அமைதியாக, வரிசையாக, ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்தோம். முன்னே செல்லும் வழிகாட்டி ஒரு திருப்பத்தில் திரும்பும் போது, சற்று நின்று,எதோ சொல்லி சப்தம் போட்டார். அவரது சொல் ஊர்ப்புறத்தில் நாயை விரட்டுவது போல் இருந்தது, கையில் வைத்திருக்கும் தடியை தரையில் ஓங்கி அடித்தவாறு வித விதமாக சப்தம் போட்டார்.
நண்பர்கள் அனைவரும் அமைதி, அனைவரின் முகத்திலும் அச்சம் கலந்த பதட்டத்துடன் மெல்ல வழிக்காட்டியின் பின் நடந்து சென்றனர். ஒரு வேளை நாங்கள் நடந்து செல்லும் ஒற்றையடி பாதையின் குறுக்கே யானை வந்து விட்டால்,மேல் நோக்கி ஓடுவதை தவிர வேறு வழியில்லை என்ற எண்ணம் எல்லாருடைய மனதிலும் தோன்றி அச்சத்தை உண்டாகியது. யாரும் ஒருவருக்கொருவர் இடைவெளி விடாமல் நடந்து செல்லுங்கள் என்றபடி நானும் அவர்களுடன் பின்தொடர்ந்து, வழிகாட்டியின் அருகில் சென்று “சப்தம் போட வேண்டாம், விரைவாக இந்த இடத்தை கடந்து விடலாம்” என கூறி நடையை விரைவுபடுதினோம். அந்த பதட்டம் சுமார் 30 நிமிடம் நீடித்தது.
ஒரு வழியாக குறுகிய,அடர்ந்த காட்டை கடந்து ஒரு திருப்பத்தில் மலை முகட்டில் திரும்பி, அல்லிமாயாறு பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதிக்கு வந்தோம்.மறுபக்கத்தில் பக்கவாட்டில் உயரமான மலை, அதன் நடுவில் பெரும் பிளவு, நாங்கள் பக்கவாட்டு மலையின் சரிவில் ஒற்றையடி பாதையில் நின்றவாறு, பிளவை பார்த்து வியந்து,ரசித்தபடி சிறிது நேரம் ஆசுவாசப்படுத்தி ஒய்வெடுத்தோம்.
கடந்து வந்த பாதையை பற்றியும் யானையை பற்றியும் பேச்சு எழுந்தது நண்பர் அபிசேக் யானையின் சத்தத்தை அருகில் கேட்டதாக கூறினார். பள்ளத்தாக்கின் ஒரு புறத்தில் இருந்து இதமாக காற்று வீசியது உடலுக்கு உற்சாகமாக இருந்தது.மலை சரிவில் நடை பயணம் தொடர்ந்தது. சுமார் ஒரு மணி நேரம் நடைப்பயணத்திற்கு பிறகு இன்னொரு மலையின் பள்ளத்தாக்கில் இறங்கினோம். அங்கே ஒரு சிற்றோடையில் அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறி பயணத்தை தொடர்ந்தவுடன், திடீரென்று எங்கள் முன்னால் இருந்த மலை சரிவின் பாதை துண்டிக்கப்பட்டு இருந்தது. வழிகாட்டி அங்கும் இங்கும் சுற்றிப்பார்த்தார். எந்த பக்கம் பார்த்தாலும் பெரிய பாறாங்கல் தான் தென்பட்டது.அதில் எட்டிப்பார்த்தால் பெரிய சரிவு தான் கண்களுக்கு தெரிந்தது. ஒருவழியாக ஒரு பாறையின் சரிவில் கைகளால் தவழ்ந்து,சறுக்கி கொண்டு அடுத்த பாறைக்கு சென்று விடலாம் எனக்கூறி அவர் முன்னே சறுக்கி செல்ல, யாருமே சறுக்கி செல்ல முடியாமல் தடுமாறினோம்.
வேறுவழியில்லாமல் வழிகாட்டி பாறையின் நடுவில் நின்று கொண்டு தன் தோல்துண்டை எடுத்து விரித்து, கயிறு போல் திரித்து அதை மேல் புறம் வீசி அதை பிடித்து கொண்டு ஒவ்வொருவராக பாறையின் கீழ் சறுக்கி கீழே இறங்கினோம்.எல்லோரும் கீழே இறங்குவதற்கு சுமார் ஒரு மணி நேரம் ஆயிற்று.வழிகாட்டியின் பக்கம் நகர்ந்து சென்று கீழ்நோக்கி பார்த்தால் சுமார் 1000 அடியில் பள்ளத்தாக்கு, தவறி விழுந்தால் அதோகதி தான் – அந்த இடத்தில் நண்பர்கள் கால்கள் நடுங்கியது. மனம் தளர்ந்து போனார்கள். ஒரு வழியாக அனைவரும் பாறையை கடந்து மறுபுறம் சென்றதும் சோதனை தொடர்ந்தது. கீழே இறங்கிய சரிவில் பாதை இல்லை, அனைவரும் தவழ்ந்து, தவழ்ந்து அந்த மலையை விட்டு இறங்கினோம். சரியான பாதைக்கு வந்த பின்னர் எல்லோரும் உற்சாகம் அடைந்தார்கள். கீழே இருந்து அந்த மலையை பார்த்தோம் பிரமிப்பாக இருந்தது.கடந்த முறை நீலகிரியில் பெய்த கன மழையால் நிலசரிவு ஏற்பட்டு இருக்கிறது என பிறகு அறிந்து கொண்டோம். ஒரு வழியாக துண்டிக்கப்பட்ட பாதையின் மறுமுனையை அடைய சுமார் இரண்டு மணி நேரம் ஆனது.
மீண்டும் மலை சரிவில் எங்கள் காட்டுவழி பயணம் தொடர்ந்தது. நண்பர் ஒருவருக்கு கால்வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டார், பிறகு அவருக்காக அனைவரும் மெல்ல நடக்க துவங்கினோம்.
அல்லிமாயாறு பள்ளத்தாக்கின் அடிவாரம் அடைவதற்கு சற்று மேலே ஒரு நீரோடையில் மதிய உணவை, மாலை நேரத்தில் சாப்பிட்டோம். நீரோடையில் அனைவரும் களைப்பு தீர குளித்து, உடலை உற்சாகப்படுத்தி கொண்டு, வெளிச்சம் மறைவதற்குள் அல்லிமாயாறு செல்ல வேண்டும்,என அனைவரும் அவசரமாக கிளம்பினோம்.நீரோடையை தாண்டி சிறிது தூரத்தில் வழி எங்கும் சில இடங்களில் சிறுத்தையின் எச்சங்களை பார்த்தோம். மாலை 6 மணிக்கு அல்லிமாயாறு வந்தடைதோம்.அனைவரும் சோர்வாக இருந்தனர்.
வழிகாட்டியை அழைத்து ஏதாவது வண்டி கிடைக்குமா? என விசாரிக்க சொன்னோம். ஊருக்குள் சுற்றி யாரிடமோ பேசி பால்வண்டி ‘வேனை’ கூட்டி வந்தார் வழிகாட்டி, களைப்பாக இருந்த நண்பர்கள் வேனுக்குள் வேகமாக ஏறினார்கள், அரை மணி நேரத்தில் தெங்குமராட தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தது வேன். எங்கள் நடை பயணம் முடிந்தது. ஓய்வெடுக்கும் விடுதியின் முன் அமர்ந்து நாங்கள் வந்த சுமார் 6000 அடி உயரமுள்ள மலையை நோக்கினோம். மலைப்பாகவும்,மகிழ்ச்சியாகவும் இருந்தது. 6000 அடி உயரத்தில் இருந்து இறங்கி வந்தது, மனதிற்கு மகிழ்ச்சியையும், புது நம்பிக்கையும்,எங்களுக்குள் ஏற்பட்டது. அதே சமயம் எந்த வன விலங்கும் எங்கள் கண்ணில் படாதது வருத்தத்தையும், வன விலங்குகள் அழிந்து வரும் ஆபத்தையும் எங்களுக்கு உணர்த்தியது.
புலி வாழும் காடு என்று புகழப்பட்ட,கூறப்பட்ட,இந்த காட்டினுள் புலி வாழ்வதற்கான எந்த தடயத்தையும்,அடையாளத்தையும் காண முடியவில்லை.மலை உச்சியில் தேயிலை தோட்டங்களால் சூழப் பட்டிருக்கிறது.மலை அடிவாரத்தில் அல்லிமாயாறு என்ற கிராமத்தால் விவசாய நிலங்களாக சூழப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து வரும் இரண்டு, மூன்று ஊராக, விவசாயத்தாலும்,மனிதர்களாலும் சுற்றி வளைக்கப் பட்டிருக்கிறது. வன விலங்குகள் வாழிடம் மக்கள் வாழிடமாக மாறி, மக்கள் பெருக்கமும், வாகனங்களின் எண்ணிக்கையும் காட்டுக்குள் அதிகமாகி இருக்கும் ஆபத்தையும் அறிந்து கொள்ள முடிந்தது.
மேலேயும், கீழேயும் மனிதர்கள் ஆக்கரமிப்பு செய்து, காட்டை கழுத்தை நெறிப்பது போல் நெறித்தால் வன செல்வங்களை எப்படி காக்க முடியும்? என்ற கேள்வி நியாயமானதாக இருந்தாலும், எதிர் கேள்விகளால் சிக்கல்கள் அதிகமாகி கொண்டே இருப்பதை நினைத்தால் வருத்தம் அதிகரிக்கின்றது.
இந்த நாடும், இந்த நாட்டு மக்களும்,இந்த காடும், இந்த காட்டு உயிரினங்களும் நன்றாய் வாழ முடியுமா? இயற்கையை ஆழமாக புரிந்தவர்கள் மட்டும் தான் காட்டையையும், இந்த நாட்டையையும் காப்பாற்ற முடியும். நம் சமூகத்தை நினைத்தோம், கனத்த இதயத்தோடு படுக்கைக்கு சென்றோம்.
- விவரங்கள்
- அ.மு.அம்சா
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
நாம் நலமுடன் வாழ இயற்கையான பல்லுயிர் வாழ்விடங்கள் தேவை.பல்வேறு வகையான தாவரங்கள், இயற்கையாக பூச்சிகள், பறவைகள், விலங்குகள், ஊர்வன போன்ற எண்ணற்ற உயிரினங்கள் வாழும் காடுகள் அழிக்கப்பட்டால் சுற்றுப்புறச் சூழல் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்பது கண்கூடு. நீலகிரி மாவட்டம் வளமான வாழ்விடங்களையும், தாவரங்களையும் இழந்து,அதன் பொலிவும், உயிர் சூழலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் இதன் எதிர் விளைவு இன்னும் கடுமையாக இருக்கும் என உயிரியல் மற்றும் சூழல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்நிலைக்கு முக்கிய காரணங்கள் மக்களின் வாணிபப் போக்கும், மூட நம்பிக்கைகளும், மக்கள் தொகை பெருக்கமும் தான். பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் பெருமளவில் காடுகளும் தாவரங்களும் அழிக்கப்பட்டு, இயற்கைக்கு புறம்பான தேயிலையை அதிகளவில் விளைவித்ததால் ஏற்பட்ட, ஏற்பட போகும் விளைவுகளை சிறிதும் எண்ணிப் பார்க்காமல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் (பொருளாதாரத்தில்) உயர்த்தியது என்ற காரணத்திற்காக இன்றைய காலம் வரைக்கும், இந்த பச்சைப் பாலைவனத்தை பாதுகாப்பு இயக்கம் கொண்டு காப்பாற்ற நினைப்பதும், அதற்காக வெவ்வேறு வகைகளில் விளக்கம் கொடுப்பதும் இயற்கை வாதிகளுக்கு பெரிய கவலையையும், வேதனையையும் உண்டாக்கியுள்ளது.
கோத்தகிரிக்கு அருகில் உள்ள அரவேணு 'அக்கால்' ஆறு, குஞ்சப்பனையில் உள்ள கோழிக்கரை ஆறு, இவற்றில் எல்லாம் இன்று நீர் ஓட்டம் குறைந்து கழிவு நீர் கலந்து, அகலம் குறைந்து பரிதாபமாகக் காட்சி அளிக்கிறது. அக்கால் ஆறு தொடக்கம் முதல் கடைசி வரையில் இருபுறமும் தேயிலைத் தோட்டமும், சாக்கடையும் தான் இருக்கின்றன. முன்பு அங்கு யானைகள், மான்கள், கரடிகள், நடமாட்டம் இருந்தது. இன்றைக்கு அந்த ஆற்றில் இருந்து சுமார் 10 கி.மீ.சுற்றளவிற்கு விலங்குகள் நடமாட்டம் அறவே இல்லாமல் போனது. ஒரு காலத்தில் அருமையான நாவல் மரங்கள், விக்கி மரங்கள்,ஆரஞ்சு, பேரி, பலா போன்ற பழ மரங்கள் , சுற்றிலும் காட்டு மரங்கள் அடர்ந்து இருந்த அளக்கரைப் பகுதி, இன்றைக்கு சுருங்கி எங்கு பார்த்தாலும் தேயிலை செடிகளுடன் ஆறு முற்றிலும் அழிந்து விட்ட நிலையை நாம் காண்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கம்பீரமாக இருந்த காத்தரின் அருவி, இன்று வற்றி சுருங்கி தேயிலை தோட்டங்களும் பெரிய, சிறிய விடுதிகளும், மலை மரங்கள் அழிக்கப்பட்டு அதன் சிறப்பையே இழந்து வாடிக் கொண்டிருக்கிறது.
நீலகிரி மலையின் பெரும்பாலான பகுதிகளில் இதே நிலை தொடர்கிறது. அதைப் பற்றி ஆழமான விஷயம் கொண்டோர் கூட அரசியல் அடிப்படையில் இன அடிப்படையில் இயங்குவதும், அடிப்படையான காரணத்தை விட்டு விட்டு, அமெரிக்கா கூறும் நவீன காரணங்களை, தொடர்பு சாதனங்கள் மூலம் அறிந்து கொண்டு, இங்குள்ள சூழலைப் பொருத்திப் பார்க்காமல், சுற்றுச் சூழல் என்ற பெயரில் இயக்கம் நடத்தியும், பேசியும், எழுதியும், வருவதைக் கண்டு சிந்தனையாளர்கள் திகைத்துப் போய் அமைதியாக வேதனைபடுகிறார்கள். எனவே காடுகள், காப்பாற்றப்பட ஒருங்கிணைப்பு குலைந்து போனது. இப்படிபட்ட நிலையில் நீலகிரியில் அதிகமாக மனிதத் தொல்லைகளுக்கு உள்ளாகும் காட்டு விலங்குகளில் யானையே முதலிடம் வகிக்கிறது என்று 'ஆசிய யானைகள் பாதுக்காப்பு அமைப்பு' தரும் செய்தி நம்மை மேலும் அதிர்சியடைய வைக்கிறது.
நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக இந்நிலை இருப்பினும் குறிப்பாக கூடலூர்,முதுமலை பகுதியில் யானை வழித்தடங்கள், விவசாயத்திற்காகவும், கால்நடை மேய்ச்சலுக்காகவும் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. கீழ்கோத்தகிரி, கூட்டாடா, குஞ்சப்பனைப் பகுதிகளில் அதிக தேயிலை சாகுபடிக்காக யானைக் காடுகள் மிக மோசமாக அழிக்கப்பட்டன. மேலும் யானைகள் தேயிலை மற்றும் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாகக் கூறி கொடூரமாக விரட்டப்படுகின்றன அல்லது மின் வேலி மூலம் தாக்கபடுகின்றன என்று மாயர் யானை வழித்தடப் பாதுகாப்புத் திட்டம் கூறுகிறது. ஆசியா யானைகளில் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட யானைகள் இந்தியாவில் உள்ளன. அவற்றில் 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி தென்னிந்தியாவில் மட்டும் 13,000 முதல் 14,000 வரை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் யானையின் வாழிடங்களாக 11 இடங்கள் அடையாளமிடப்பட்டுள்ளது. அதில் நீலகிரி உயரின மண்டலம் முக்கிய பகுதியாகும். நீலகிரி உயரின மண்டலத்தில் யானைகளின் நிலை எதிர்காலத்தில் மிக மோசமாகி விடும் என்று நம்பப்படுகிறது.
நீலகிரியின் நிலைத்த மேம்பாடு, தேயிலைத் தோட்டங்களை அழித்து விட்டு, பழ மரங்களையும், காய்கறிகளையும் பயிரிட்டு, காடுகளைப் பாதுகாக்க உதவுவதிலே அடங்கியுள்ளது. காடுகள் நீர் வளப் பாதுகாப்பிற்கும், செழிப்பான உயிர் சூழலுக்கும் உதவும் என்பது அறிஞர்கள் முடிவு. மாற்றிக் கொள்வது கடினமல்ல, மனது வைத்து இயற்கையைக் காப்போம், நீலகிரிக்கு ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்குவோம்.
(காட்டுயிர் இதழில் எழுதிய கட்டுரை)
- விவரங்கள்
- சு.பாரதிதாசன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
காட்டுக் கோழியைத் துரத்தி வந்த
பூனை திகைக்க
வழித்தடம் மறிபட்டு
யானை ஒதுங்க
வலசை கிளம்பிய
கதிர்க்குருவி தடுமாற
காட்டின் நெஞ்சைக் கீறிக்கீறி
எழுகிறது ஒரு தார்ச்சாலை...
- அவை நாயகன்
இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாலக்காடு ரயில் மார்க்கத்தில் யானைக் கூட்டம் ஒன்று அடிபட்டு தலை வேறு, முண்டம் வேறு, கால் வேறு எனக் கிடந்ததையும், கர்ப்பிணி யானையின் வயிற்றுக்குள் இருந்த குட்டியும் தூக்கி வீசப்பட்டு ரணமாய்க் கிடந்ததையும் நாளிதழ் செய்தியாகவும் டிவி செய்தியாகவும் பார்த்திருப்போம்.
இதுபோல சிறுத்தைப்புலி ஒன்று முதுமலை சாலையில் அடிபட்டு செத்துக் கிடந்ததும் நம் கவனத்துக்கு வந்திருக்கும். இவை எல்லாம் பெருங்கடலில் சிறு துளிதான்.
நெடுஞ்சாலையில் அடிபடும் மனிதர்களையே கண்டுகொள்ள முடியாத வகையில் சமூகச்சூழல் வாட்டிக் கொண்டிருக்கும்போது நகர நெடுஞ்சாலையில் நாயோ, பூனையோ அடிபட்டால் யார் கண்டுகொள்ளப் போகிறார்கள்? அதிலும் காட்டைப் பிளந்து செல்லும் சாலையில் அடிபடும் காட்டுயிர்களின் நிலையைப் பற்றி கேட்க வேண்டுமா என்ன? ஒவ்வொரு நாளும் கணக்கற்ற காட்டுயிர்கள் நம் கவனத்துக்கு வராமலேயே கணப்பொழுதும் செத்து மடிந்து கொண்டே இருக்கின்றன. கள்ள வேட்டைக்கு பலியாகும் காட்டுயிர்களைவிட வாகனங்களில் மோதி பலியாகும் காட்டுயிர்களின் எண்ணிக்கையே அதிகம். ஆனால் அந்தக் கணக்கு நம்மை எட்டுவதில்லை.
சாலைகள் நவீனமயமாகிவிட்டதால் மனிதர்கள் ஒட்டிச் செல்லும் வாகனங்கள் சாதாரணமாக 80 கி.மீ. வேகத்தில் கண்ணை கட்டிக்கொண்டு பறந்து செல்லுகின்றன. பெரும்பாலும் தரையோடு ஒட்டிச் செல்லும் காட்டுயிர்கள் ஓட்டுநர்களின் கண்களுக்கு சில நேரம் தெரிவதில்லை. ஆனால் அவற்றைப் பார்த்தபின்பும், இதுங்களுக்கெல்லாம் வண்டியை நிறுத்த வேண்டுமா என்ன? என்ற அலட்சியமும் அகங்காரமும்தான் வாகன ஓட்டிகளிடம் தலைதூக்குகின்றன. இதனால் அரிய வகை இரவாடி உயிர்களான மரநாய், முள்ளம்பன்றி, காட்டுப்பூனை, தேவாங்கு, மான், கரடி உள்ளிட்டவையும் சிறு ஊர்வன உயிர்களான அரணை, ஓணான், பாம்பு, தவளை போன்றவையும் சக்கரங்களில் நசுங்கி செத்துப் போகின்றன.
செத்து மடியும் காட்டுயிர்கள் மட்டுமின்றி, அடிபட்டு ஊனமாகும் உயிர்கள் பலப்பல. அவற்றின் நிலை இன்னும் மோசம். புண்ணில் சீழ் பிடித்தும் (காட்டில் மருத்துவர் கிடையாது), இரை தேடமுடியாமல் பசியால் வாடிவதங்கி குற்றுயிரும் குலைஉயிருமாய் கிடந்து சாகின்றன. சில வேளைகளில் குட்டியைக் காப்பாற்ற முயற்சித்து தாய் அடிபட்டு விடும். இதனால் பச்சிளம் குட்டிகள் ஊணுண்ணிகளுக்கு எளிதாக இரையாகி விடுகின்றன அல்லது தன் சூழலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மாண்டு போகின்றன. சில வேளைகளில் குட்டி அடிபட்டு, தாய் தப்பி விடக்கூடும். அந்தத் தாய் பரிதவிப்புடன் அந்த இடத்தையே முகர்ந்து பார்த்துக்கொண்டு சுற்றிச்சுற்றி வரும் அவலத்தை என்னவென்று சொல்வது. யானைகளிடம் இந்தச் செய்கையை பார்க்கலாம்.
இந்த ஜென்மங்களை எல்லாம் யார் சாலைக்கு வரச் சொன்னது? என்று நாம் கேட்கலாம். அது நமக்குத் தான் சாலை, நெடுஞ்சாலை, அதிவேக சாலை. அவற்றுக்கோ தங்கள் வாழிடத்தை இரண்டாகப் பிளந்து கூறுபோடும், துண்டு துண்டாக்கி வீசும் மிகப் பெரிய தலைவலிதான் சாலைகள்.
சமவெளியைப் போல நேராக இல்லாமல், மலைகளில் சுருள் சுருளாக சாலைகள் சுற்றிச்சுற்றி செல்வதைப் பார்த்திருப்போம். அதன் அழகைப் பற்றியும் வியந்திருப்போம். ஆனால் உண்மை நிலை என்ன? இந்தச் சாலைகள் காட்டின் பெரும்பகுதியை ஆக்ரமிப்பதோடு, காட்டுயிர்களின் வாழிடத்தையும் துண்டு துண்டாக்கி விடுகின்றன. சோலை மந்தி, கருமந்தி, அணில் போன்ற காட்டுயிர்கள் தரையில் இறங்காமல், மரத்துக்கு மரம் தாவியே வாழும் தன்மை கொண்டவை. காட்டின் குறுக்கே போடப்படும் இந்த அகலமான சாலைகளால், அவை மரத்துக்கு மரம் தாவ முடியாமல் கீழே இறங்க நேரிடுகிறது. அப்போது ஊனுண்ணிகளுக்கு எளிதாக இரையாகின்றன அல்லது வேட்டைக்காரரிடமோ, வாகனங்களில் அடிபட்டோ சாவைத் தழுவுகின்றன.
“வாழிடம் துண்டாடப்படுவதால் கருமந்தி போன்றவை ஒரு பகுதியிலேயே தங்கி விடுகின்றன. இதனால் ஒரே கூட்டத்துக்குள்ளேயே இனப்பெருக்கம் நடப்பதால், அவற்றின் மரபணு வளம் பாதிக்கப்படுகிறது” என்கிறார் காட்டுயிர் பாதுகாப்புக் கழகத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணன். தெளிவான பார்வை வேண்டி சாலையின் இரு மருங்கிலும் அடிக்கடி காட்டுப்பகுதிகளைச் சிதைத்து விடுகிறோம். இதனால் இயற்கையான, மண்ணின் மரபு சார்ந்த இயல்தாவரங்கள் துளிர்க்க விடாமல் தடுக்கப்படுவதால், அந்த இடங்களில் அந்நிய களைச்செடிகள் நாளடைவில் ஆக்ரமிக்கின்றன. பின்பு பல்கிப் பெருகி பல்லுயிர் பன்மயத்துக்கு பாதகம் செய்கின்றன.
காட்டுயிர்கள் இரை தேடியும், இரையுண்ணிகளிடம் இருந்து தப்பவும், இணை தேடியும், தண்ணீர் தேடியும், குளிர், வெயில், மழையில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் இடம்பெயர்கின்றன. அப்படிச் செல்லும்போது சுருள்சுருளான சாலைகளை அடிக்கடி எதிர்கொண்டு காட்டுயிர் சாலையைக் கடக்க நேரிடுகிறது. பொதுவாக ஊர்வன வகைகள் குளிர் ரத்தப் பிராணிகள். எனவே அவை, வெப்பத்திற்காக சாலைகளில் வந்து சிறிது நேரம் படுத்திருக்கும். இதனால் அதிகம் அடிபட வேண்டியிருக்கிறது.
மனிதத் தொந்தரவு கருதியே பெரும்பாலான விலங்குகள் தங்கள் நடமாட்டத்தை இரவுப் பொழுதுக்கு தகவமைத்துக் கொண்டுவிட்டன. ஆனாலும் இரவு நேரங்களில்கூட நாம் அவற்றை நிம்மதியாக விடுவதில்லை. காட்டுக்குள்ளே அதிக ஒலியுடன் பாட்டு கேட்டுக் கொண்டும், கை தட்டிக்கொண்டும் செல்வதும், தாறுமாறாக ஓடும் வாகனங்களில் இருந்து வரும் இரைச்சலும் புகையும் காட்டுயிர்களை எரிச்சல் படுத்துகின்றன. அத்துடன் வாகனங்கள் உமிழும் வெளிச்சமும் அவற்றின் கண்களை கூசச்செய்து நிலைகுலையச் செய்கிறது (இரவு நேரங்களில் வாகன ஒளி பாய்ச்சப்பட்டதால் திக்கு தெரியாமல் திண்டாடும் விலங்குகளின் நிலையை நகர்ப்புறங்களிலேயே தெளிவாகப் பார்க்கலாம்). இப்படி திக்கு முக்காடி எங்கு போவது எனத் தெரியாமல் எங்காவது முட்டி மோதி சாவைத் தழுவுகின்றன. “இத்தருணத்தைப் பயன்படுத்தி வேட்டையில் ஈடுபடுவோரும் உண்டு” என்கிறார் இயற்கை ஆர்வலர் மக்மோகன்.
‘‘சிறுபாம்புகள் இனப்பெருக்கத்துக்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்வது வழக்கம். அப்படிச் செல்லும்போது வழுவழுப்பான தார்ச் சாலையில் ஊர்ந்து செல்லமுடியாமல் சிரமப்படுகின்றன. அப்படியே ஊர்ந்து எதிர்ப்புறம் சென்றாலும், அங்கு விபத்து தடுப்புக்காக எழுப்பப்பட்டுள்ள உயரமான சுவர்களில் ஏறமுடியாமல் திரும்பி வந்து மீண்டும் முயற்சித்தபடியே இருக்கும் தருணத்தில் அவை சாவைத் தழுவுகின்றன. இதனால் அதன் இனப்பெருக்க சுழற்சி பாதிக்கப்படுவதுடன், அந்த பாம்பு இனங்கள் அழியும் தருவாயில் உள்ளன” எனக் கவலையுடன் குறிப்பிடுகிறார் சாலையில் அடிபடும் உயிரினங்கள் குறித்து மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆய்வு செய்து வரும் கழுதைப்புலி ஆய்வாளர் ஆறுமுகம்.
சாலையில் பயணம் செய்வோர் தூக்கி எறியும் உணவுகளாலும் காட்டுயிர்கள் அடிபட நேரிடுகிறது. பயணிகள் உண்ணும் உணவு மீதியை சாலையில் விட்டெறிவதால், அவற்றைத் தின்பதற்கு குரங்குகள் சாலையை நாடுகின்றன. அவற்றுக்கு நாம் உணவு அளிக்கிறோம் என்ற வீண் பெருமிதம் கொள்ளும் அதேநேரம், நாம் செய்வது அவற்றுக்கு தீங்கே ஏற்படுத்துகிறது. “நாம் அளிக்கும் உணவுக்காக அவற்றை கையேந்தி பிச்சை எடுக்க வைப்பதோடு, அந்த உணவை சாப்பிட்டால் ஒவ்வாமை, வயிற்று உபாதைகளாலும் அவை அவதியுறுகின்றன. கூடவே விபத்தும் நேரிடுகிறது” என்கிறார் காட்டுயிர் ஆர்வலர் கோவை சதாசிவம். இதில் ஊட்டி, கொடைக்கானல, வால்பாறை, ஏற்காடு போன்ற மலைப்பகுதியில் கோடை விழா என்ற பெயரில் நாம் நடத்தும் கூத்துக்களால் அவற்றின் வாழிடங்கள் துண்டாடப்பட்டு விடுகின்றன. தொடர்ந்து சாரைசாரையாகச் செல்லும் வாகனங்களால், அவை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல முடியாமல் திண்டாடுகின்றன. யானைகள் வழக்கமாக ஒவ்வொரு அசைவின் மூலமும் தனது கூட்டத்தாருடன் தொடர்பை ஏற்படுத்தியபடியே செல்லும் பண்பு கொண்டவை. காட்டைப் பிளக்கும் தார்ச்சாலைகளால் அவற்றின் தொடர்புச் சங்கிலி அறுத்தெறியப்படுகிறது. இதனால் வழிதப்பி மனிதக் குடியிருப்புக்குள் புகுந்து, மனிதனுக்கும் விலங்குகளுக்குமான பிணக்கும் அதிகமாகிறது.
புதிதாக போடப்பட்ட தேசிய நான்கு வழிப் பாதையால் ஒரு யானைக்கூட்டம் திசை மாறி சித்தூர் பகுதியில் தங்கிவிட்டதையும், அவற்றின் பாரம்பரிய வழித்தடத்துக்கு திரும்ப முடியாமல் மனிதக் குடியிருப்புக்குள் புகுந்து விட்டதையும் நாம் இணைத்து புரிந்துகொள்ள வேண்டும். ஊருக்குள் புகுந்துவிடும் யானைகளை, ஊடகங்களும் மக்களும் வில்லன்களாகச் சித்தரிக்கின்றனர், பெரும் கூப்பாடு போடுகின்றனர். ஏன் அவை ஊருக்குள் புக நேரிடுகிறது என்ற காரணத்தை நாம் எந்தக் காலத்திலும் யோசிப்பதில்லை. அவை காலங்காலமாக பயன்படுத்தி வந்த வழித்தடங்களை அழித்து சாலைகளாகவும், தோட்டங்களாகவும், வயல்களாகவும், வீடுகளாகவும் மாற்றிவிட்டோம். இப்போது, அவை ஊருக்குள் புகுந்து ‘அட்டகாசம்’ செய்வதாக குற்றஞ்சாட்டுகிறோம். நல்ல கூத்து.
மைசூரைச் சேர்ந்த இயற்கையாளர் ராஜ்குமார், சாலையில் அடிபடும் உயிரினங்கள் பற்றி பந்திபூர் காட்டுப் பகுதியில் களஆய்வு மேற்கொண்டபோது அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. ‘‘வெறும் 14 கி.மீ. காட்டுப் பகுதியில் கரடி, பன்றி, மான், காட்டு எருது போன்ற மூன்று பெரிய உயிரினங்களில் மாதத்துக்கு ஒன்று அடிபடுகின்றன. அடிபடும் ஊர்வனவற்றின் எண்ணிக்கையோ கணக்கில் அடங்காதது. இதற்காக காட்டுயிர்கள் அதிகம் வாழும் இடங்களை குறிப்பெடுத்து எச்சரிக்கைப் பலகை, ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு, வேகத் தடுப்பரண்கள் போன்றவற்றை ஏற்படுத்தினோம். இது ஓரளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியது. இறுதியில் நீதிமன்றத்தை அணுகி பந்திபூர் முதுமலை சாலையில் இரவு வாகனப் பயணத்தை தடை செய்ததால் காட்டுயிர்கள் ஒரளவு மூச்சு விடவாவது வழி பிறந்துள்ளது” என்கிறார் அவர். இந்த சாலையை இரவுகளில் மூடுவதற்கு ஊட்டி பகுதியில் உள்ள தமிழக வியாபாரிகள்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் கட்சி ஒன்றும் எதிர்ப்பு தெரிவித்தது. காடுகளுக்கு நடுவே ஓட்டுநர்கள், பயணிகள் இளைப்பாறுவதற்கென நிறுத்தப்படும் இடங்களில் முளைக்கும் திடீர் கடைகளாலும் காட்டுயிர்களுக்கு பெரும் தொந்தரவு ஏற்படுகிறது.சாலைகளுக்கு அருகிலிருந்துதான் பெரும்பாலும் காட்டுத் தீ பரவுகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்..
தற்போது சாலைகள் ‘நவீனமாக’ இருப்பதால் காட்டுக்குள்ளே பெரும்பாலான வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட வேகமாகவே பறந்து செல்கிறார்கள். யாரும் வேகக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதில்லை. இதைத் தடுக்க உடனடி அபராதம் விதிப்பதுதான் ஒரே வழி. அது மட்டுமில்லாமல் காட்டுப் பகுதியில் புதிதாக எந்த சாலைத் திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடாது. இருக்கும் சாலைகளை செப்பனிடக்கூடாது. அப்போதுதான் சக்கரங்களின் பிடியிலிருந்து காட்டுயிர்கள் தப்பமுடியும். மேலும் ஊர்வன வகைகள், ஊனுண்ணிகள் சாலையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் செல்வதற்குத் தோதாக ஆங்காங்கே இடைவெளி விட்டு தடுப்பு சுவர் கட்ட வேண்டும். அதேபோல் நீர்நிலைகளை ஊடறுத்துபோகும் சாலைகளில் தண்ணீர் இருபுறமும் ஏதுவாக செல்லும் வகையில் குழாய் பதிப்பதை கட்டாயமாக்க வேண்டும். கர்நாடக இயற்கையாளர்களின் பெருமுயற்சியாலும் ராஜ்குமார் போன்ற தன்னார்வலர்களாலும் முதுமலை, பந்திபூர் காட்டுப் பகுதியில் இரவு நேர வாகனப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. இதே போன்ற முன்னெடுப்புகளை தமிழகத்திலும் மேற்கொள்ள வேண்டும். சரணாலயங்கள் மட்டுமின்றி அனைத்து காட்டுப் பகுதிகளிலும், இரவு நேர வாகன போக்குவரத்தை முற்றாக தடை செய்தால்தான எஞ்சி இருக்கும் காட்டுயிர்களாவது தப்பிப் பிழைக்கும்.
உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிருக்கும் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது. மற்ற உயிர்கள் வாழ்வதற்கான உரிமையைப் பறிக்க நமக்கு அதிகாரம் கிடையாது. அதையும் மீறி காட்டுயிர்களை இப்படி கொடூரமாகக் கொல்வது, நமக்கு கூடுதலாக இருப்பதாகக் கூறிக்கொள்ளும் ஆறாவது அறிவைப் பற்றி கேள்வியை எழுப்புகிறது.
(பூவுலகு ஜூலை 2011 இதழில் வெளியானது)
- நான், நீ, நாம் - இது பாக்டீரியா மொழி
- காட்டுயிர்களும் மூடநம்பிக்கைகளும்
- கானமயில்
- மயில்களை கொல்ல வேண்டாம்
- இலவங்கப் பட்டை - சில தகவல்கள்
- மாயமாகும் மயில்களின் உலகம்
- வாரணம் ஆயிரம்; வழி செய்வோம்
- இயற்கை கொடுத்த வரம்
- கடல் எனும் விந்தை
- வாழ வழி விடுவோம் விலங்குகளுக்கும்
- பறவைகள் பற்களின்றி எப்படி உண்கின்றன?
- சிறுத்தை புலிகள் - சிக்கல் அவிழ்கிறது
- சிறுத்தையும் நாமும் - யாருக்கு யார் எதிரி?
- வாழ்வை இழக்கும் வெளவால்கள்
- காண்டாமிருகங்களின் தாயகங்கள்
- தேனீக்கள் வளர்ப்பில், தேன் உற்பத்தியில்... மர்மங்கள்
- முதலைக் கண்ணீர்
- கங்கை முதலைகள்
- இயற்கை வேளாண்மை - தேனீக்கள் வளர்ப்போம்
- புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..?