பொலிவியாவில் லாபாஸில் அதிபர் தேர்தல் நடந்த ஞாயிற்றுக் கிழமையில் வெய்யில் கொளுத்தியது. எப்பொழுதும் தெருக்களை வலம் வரும் கார்களும் பேருந்துகளும் செல்வதற்கு அன்று தடை விதிக்கப்பட்டது. ஒருவரே பல இடங்களுக்கு சென்று வாக்களிப்பதைத் தடுப்பதற்கான ஏற்பாடு. இதனால் காற்று புகைமூட்டமின்றித் தெளிவாக இருந்தது. குழந்தைகள் தெருக்களின் திறந்த வெளிகளில் விளையாடினர். மிதிவண்டி ஓட்டுநர்கள் தெருக்களில் சுதந்திரமாக பயணித்தனர். தெருக்கள் குடும்பங்களின் சுற்றுலாத் தளமாகி, அவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் திளைத்தனர்.

CIDOB 600நடைபாதை வியாபாரிகள் மாட்டு இறைச்சியையும், கோழி இறைச்சியையும் விற்றனர். இந்தத் தேர்தல் நாள் லாபாஸிலுள்ள பெரும்பாலான மக்களுக்கு குடும்பத்துடன் கொண்டாடும் நாளுமாகும். இப்பொழுது நாம் அறிந்தபடி அன்று மக்கள் ஈவா மொராலேஸை 60 விழுக்காடு வாக்குகளுடன் மூன்றாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கச் சென்றனர்.

அன்று நாள் முழுவதும் லாபாஸினைச் சுற்றி நடந்து நகரின் குடியிருப்புகளிலுள்ள மத்திய தர உழைக்கும் வர்க்க வாக்காளர்களை நேரில் சந்தித்து, அவர்கள் ஓட்டளித்த விதத்தையும், அதற்கான காரணங்களையும் கேட்டறிந்தேன். நான் சந்தித்து உரையாடிய பெரும்பாலான மக்கள் மொராலேஸின் நிர்வாகம் குறித்தும், அவரின் சோசலிசத்திற்கான இயக்கம் குறித்தும் ((MAS - MOVEMENT TOWARDS SOCIALISM) மிகுந்த உற்சாகத்துடன் பதில் அளித்தனர். உதாரணமாக மரியா விஸ்காரா என்ற மொழி ஆசிரியர் பின் வருமாறு கூறினார்.

“ஈவா ஒரு அற்புதமான மனிதரென்று நான் நம்புவதால் நான் அவருக்கு வாக்களித்தேன். எங்கள் நாட்டின் வரலாற்றை நான் பலமுறைப் படித்திருக்கிறேன். அதனடிப்படையில் பொருளாதாரம், கல்வி,’வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அவர்தான் மிகச் சிறந்த அதிபர் என்று என்னால் அறிய முடிகிறது. ஈவாவிற்கு முன்னாளிருந்த ஆட்சியாளர்கள் அனைவரும் செய்தது: நாட்டை கொள்ளையடித்து தங்கள் நலன் களை காப்பாற்றிக் கொண்டது மட்டுமே. ஈவாவின் அரசு அப்படிப்பட்டதல்ல. இந்த அரசு மக்களுக் கானது; பாகு பாடின்றி அனைவரது நலனை யும் உள்ளடக்கிய நாட்டை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசு. இங்கு காலனியத்தின் கொடையாகிய இன வேற்றுமை மிகவும் அழமாக வேரூன்றி இருந்தது. இப்பொழுது நிலமைகள் மாறி யுள்ளன.”

மொராலேசும் அவரது கட்சி உறுப் பினர்களும் தேர்தலில் வெற்றிப் பெற்றதில் வியப்பில்லை. ஈவாவின் நிர்வாகம் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்து, சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள மக்களுக்கு அதிகாரம் அளித்தது; பள்ளிக் குழந்தைகள் தாய் மார்கள், மூத்த வயதினருக்கும் , புதிய கட்டமைப்பு வசதிகளுக்கும், பொதுப் பணித் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கியது. இத்தகைய திட்டங்களுக்கான நிதி தேசிய மயமாக்கப் பட்ட தொழிற்சாலைகளிலிருந்தும், வணிகத்துறை களிடமிருந்துமே பெறப்பட்டது.

இனவெறியும் ஒடுக்குமுறையும் கொண்ட வதுசாரி அரசுகள் கடந்த காலத்தில் கடைபிடித்த புதிய தாராளமயக் கொள்கையிலிருந்து விடுபட்ட அரசாக இருப்பதால், அதற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவளிக்கின்றனர். பொலிவியாவில் பழங்குடியின மக்களின், பெரும்பான்மை ஏழை மக்களின் பிரதிநிதியான மொராலேஸை பெரும்பாலான வாக்காளர்கள் தங்களுக்கான அதிபராகவே பார்க்கின்றனர். (புதிய தாராளமய அதிபரான கொன்சாலோ சான்செஸ்தெ லொசாதா வெறும் 22.5 விழுக்காடு வாக்குகள் பெற்றே 2002 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் வென்றார் என்பதை ஒப்பிடும் போது 60 விழுக்காடு வாக்குகள் பெற்ற மொராலேஸ் மக்களின் பேராதரவைப் பெற்றவர் என்பது விளங்கும்.)

இருப்பினும் தேர்தலின் போது MAS கட்சிக் குறித்த தீவிர விமர்சனங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. உதாரணமாக தேர்தலின் இறுதி மாதங்களில் அரசியல் வேட்பாளர்களின் பாலின ரீதியான பேச்சுகளுக்கும், பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கும் எதிராகத் தோன்றிய இயக்கங்கள் வழுவடைந்தன. நிலத்தடியில் உள்ள கனிம வளங்களையும், இயற்கை எரிவாயுவையும் தோண்டி எடுப்பதை ஆதாரமாகக் கொண்ட பொருளாதாரத்தையே MAS கட்சி வலியுறுத்தி வருவதை இடதுசாரிகள் தொடர்ந்து விமர்சிக்கின்றனர். அத்தகைய தொழிற்சாலைகள் அரசுக்கு போதிய நிதியை அளித்தாலும், அவை நிலத்தையும், நீரையும் மாசுபடுத்தியுள்ளன; பழங்குடியின சமூகத்தையும், கிராம மக்களையும் அவர்கள் வாழ்விடங்களிருந்து வெளியேற்றியுள்ளன.

கூடுதலாக மொராலேஸ் அரசு கனிமச் சுரங்கங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை குற்றவியல் நடவடிக்கையென சட்டம் இயற்றியுள்ளது. இச்சட்டம் உள்ளுர் விவசாய சமூகங்களின் தேவையைப் புறக்கணித்து, நீருக்கான அதிக உரிமைகளை சுரங்கத் தொழிற் சாலைகளுக்கே அளித்துள்ளது. விகிஷி கட்சி தன் அரசியல் மேலாண்மையை நிறுவுவதற்காக நாட்டிலுள்ள சமூக இயக்கங்களை பிளவுப் படுத்தியும், தனது கொள்கைக்கு ஏற்ப வளைத்தும், அவற்றின் சுதந்திரமான செயல்பாட்டில் தலையீடு செய்துள்ளது. MAS-ன் இத்தகைய செயல்பாடு குறித்து அடித்தட்டு சமூக செயல்பாட்டாளர்களிடம் விமர்சனம் எழுந்துள்ளது.

MAS-ன் எதிர்ப்பாளர்களிடமும் பலதரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஈவான் விய்யா புயர்த்தே என்கிற லாபாஸில் வசிக்கும் நடுத்தர வர்க்க வழக்குரைஞர்தான் ஈவாவின் அரசை எதிர்ப் பதற்கானக் காரணங்களை என்னிடம் கூறினார்:

‘‘ஈவாவின் அரசு பல நல்ல விஷயங்களை மட்டு மல்ல பல மோசமான செயல்களையும் செய்துள்ளது. உதாரணமாக லாபாஸில் வான்வழி மின்கம்பிவட மகிழுந்தை ( Aeriel Cable Car) அமைத்துள்ளதும், ஒரூரா நகரில் புதிய இருவழி நெடுஞ்சாலை அமைத்துள்ளதும் பாராட்டத் தகுந்தவை. ஆனால் தேசிய அளவிலும், பொதுவாகவும் அரசை எதிர்ப் போரை பழிவாங்கும் நடவடிக்கைகள் அதன் மோசமான செயல்பாட்டுக்கு உதாரணமாகும். அரசின் மற்றொரு மோசமான செயல்பாடு - நாட்டின் கிராமப்புற சமூக இயக்கங்களுக்கு ஆதரவளித்து, நகர்புறத்திலுள்ள நடுத்தர வரக்கத்தின் நலனில் போதிய கவனம் செலுத்தாதது. இந்த அரசு நடுத்தர வர்க்கத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை.”

MAS- மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு ஈவா என்ற தனி நபரைச் சார்ந்திருப்பது - இதனை அதிபரே வளர்க்கவும், பரப்பவும் செய்தார் - இயக்கத்தை படுகுழியில் தள்ளிவிடும். இந்த அவலநிலை குறித்து மொராலேஸே சிந்திக்கத் தொடங்கியுள்ளார். ஞாயிறு நடந்த தேர்தலுக்குப் பின் பிபிசி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு தொழிற்சங்கத் தலைவர் அவரிடம் கூறிய விமர்சனத்தைக் கூறினார் :

“ஈவா நீங்கள் மிகவும் மோசமானவர் ” என்று என்னிடம் கூறினார். நான் அவரிடம். “என்னை ஏன் மோசமானவர் என்று கூறுகின்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர் தந்த விளக்கம் : “ஏனென்றால் நீங்கள் விகிஷி- இயக்கத்தை அழித்து விட்டீர்கள். இங்கு மாசிஸ்டாசுகள் (Masistas) ஒருவரும் இல்லை. ஈவிஸ்டாசுகள் Evistas) மட்டுமே உள்ளனர்.” மொரலேஸ் தொடர்ந்து பிபிசிக்கு கூறியது:” ‘இந்நிலை என்னை கவலைக் கொள்ள வைத்துள்ளது. அமைப்பை ஒருவர்தான் தலைமை ஏற்று வழி நடத்த முடியும் என்பது தெளிவு.

ஆனால் எப்பொழுதும் எது குறித்தும் தனி நபர் சார்ந்தே சிந்திப்பது லத்தீன் அமெரிக்க முறையாக உள்ளது என்று நான் கருதுகிறேன். ஆனால் இதனை விரும்பவில்லை” இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்த அனைத்து இடங்களிலும்தான் மீண்டும் ஒருறை அதிபராக போட்டியிட போவதில்லை என்று கூறிவந்துள்ளார். ஞாயிற்றுக் கிழமையன்று நான் சந்தித்துப் பேசியவர்களில் பலருக்கும் ஈவாதான் அவர்களின் ஆதரவுக்கான மய்யமாக இருக்கிறார். லாபாஸின் உழைக்கும் மக்கள் வசிக்கும் பகுதியில் நான் சந்தித்த யுலாந்தா வாச்சாரி என்ற நடைபாதை வியாபாரி பின் வருமாறு விளக்கினார்.

“ஈவா அதிக வருடங்களுக்கு பதவியிலிருப்பார் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அவர் மக்களுக்கு அளப்பரிய உதவிகளைச் செய்துள்ளார். ஈவாவின் அரசாளும் முறையை ஆதரிக்கிறேன். அவர் இந்த நாட்டிற்காக ஏராளமான நன்மைகளைச் செய்துள்ளார். ஈவா சாதித்ததைப் போல எந்த ஒரு அதிபரும் இதுவரை சாதித்ததில்லை. அவர் எங்களின் அதிபராக இருக்கிறார். என்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் இப்பொழுது அதிகமான நெடுஞ்சாலைகள் உள்ளன. நாங்கள் லாபாஸில் வான் வழி கம்பி வட மகிழுந்தையும், பழங்குடியினருக்கான பல்கலைக் கழகங்களையும், பெற்றுள்ளோம். பெரும்பான்மையான ஏழை மக்கள் ஈவாவின் அரசுக்கு ஆதரவளிக்கின்றனர். பொலிவியாவின் ஏழை மக்களை தன் நெஞ்சில் நிறுத்திய ஒரே அதிபர் இவர்தான்.

மொராலேஸ் தனது வெற்றியை அறிவித்தவுடன் லாபாஸிலுள்ள பிளாசா முரில்லோ விழாக்கோலம் பூண்டுள்ளது. இரவு வெகுநேரம் வரையிலும் மக்கள் கிராமிய இசையில் மூழ்கியிருந்தனர். MAS -ன் நீலம், வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்கள் கொண்ட கொடி களுடன், பல்வேறு பழங்குடி மக்களின் பன்னிற நிறங்களைக் கொண்ட விபாலா கொடிகளும் இணைந்தே பறந்தன. பல்வேறு விவசாய அமைப்பைச் சேர்ந்தவர்களும், தொழிலாளர்களும் MAS -உடன் நெருக்கமாக இணைந்து செயல்படுகிற பழங்குடியின அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஈவாவின் வெற்றியைக் கொண்டாடக் குழுமியிருந்தனர்.

எல்லா அதிபர்களையும் போல, ஈவா மொரா லேஸும் எதிர்கொள்ள வேண்டிய முரண்பாடுகளும், சவால்களும் ஏராளம். மொராலேஸ் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள லாபாஸ் பகுதியில் புதிதாக அணு உலை கட்டுவதற்கானத் திட்டத்தை அறிவித்து பிரச்சனையைக் கிளப்பியுள்ளார். கருத்தடை இன்றளவும் பொலிவியாவில் சட்டவிரோதமானது. இந்த வருடம் சனவரியிலிருந்து செப்டம்பர் மாதம் வரையில் 157 பெண்கள் படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர். MASஅரசின் ஆதரவுடன் நாட்டின் கிழக்குப் பகுதிகளில் நிலத்தை நஞ்சாக்கும் சோயா பயிரிடுவது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் அரசின் திட்டங்களால் பயன் பெற வேண்டிய பழங்குடியின மக்களும், கிராம மக்களுமே சுரங்கத் தொழிற்சாலைகளால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நாடெங்கிலும் வெளியேற்றப்படுகிறார்கள்.

இருப்பினும் தேர்தல் நாளன்று கார்கள் இல்லாத சூரியன் சுட்டெரிக்கும் லாபாஸின் தெருக்களில் அரசின் மீது மக்கள் கொண்டுள்ள ஆர்வத்தை அனைவரும் உணர முடிந்தது. அரசின் மீதான விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், நான் உரையாடிய அரசின் ஆதரவாளர்கள் பலரும் புதிய தாராளமயக் கொள்ளையிலிருந்தும், சுரண்டலி லிருந்தும் நாட்டினை மீட்டெடுக்க அதிக காலம் பிடிக்கும் என்ற கருத்தினை வெளிப்படுத்தினர். இசை ஆசிரியரான ஹொர்ஹே கிஸ்பே பாஸ்தியாஸ் விளக்கியபடி, ‘‘இந்த அரசைத் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் இந்த மாற்றமும், இந்த நிகழ்முறையையும் சரியான முடிவுகளைத் தர அதிக காலம் தேவைப்படும் என் நம்புகிறேன்.”

பெஞ்சமின் டேங்கில் பத்தாண்டுகளுக்கு மேலாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் தங்கியிருந்து அந்நாடுகளின் அரசியல், பொருளாதார நிலமைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இவர் லத்தீன் அமெரிக்க நாடுகளில் நிகழும் சமகால சமூக அரசியல் போரட்டங்கள் குறித்து சிறந்த கட்டுரை களை வெளியிடும் (Upsidedown World) என்ற இணைய இதழின் ஆசிரியர். உலகமய, தாரள மயக் கொள்கைகளுக்கு எதிரான பொலிவிய மக்களின் போராட்டங்கள் குறித்து ‘Price of Fire’, ‘Dancing with Dynamite’’ முதலான நூல்களை எழுதியுள்ளார். இவரின் ‘Price of Fire என்ற நூல் ‘பொலிவியாவில் புரட்சி’ என்ற தலைப்பில் பேரா.நா. தர்மராஜன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் வெளியீடாக 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது.

Pin It