guna book 400 copyதமிழீழ விடுதலைப் போராட்டகளத்தில் பங்கேற்ற ஒருவரின் வாழ்வியலை பதிவு செய்கிற நாவலாக அறிமுகமாகிறது நஞ்சுண்டகாடு. படிக்க ஆரம்பித்ததும் அடுத்த தளத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது. போராட்டக் களத்திற்காக தயார்படுத்தப்படும் ஆரம்பகட்ட போராளிக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் அவர் எழுதிய ஒரு நாட்குறிப்பாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்; அந்த அளவிற்கு மிகவும் நுணுக்கமாக பல விசயங்களை விவரிக்கிறார் நாவலாசிரியர் குணா கவியழகன்.

ஒவ்வொரு போராளியின் மனநிலையும், அவர்களது வர்க்கப் பிண்ணனியும், குடும்பச் சூழலையும் அவர்கள் இயக்கத்திற்கு வந்த நிலைப் பாட்டையும் விவரிக்கும்போது இது நாட்குறிப்பு மட்டுமல்ல ஒவ்வொரு சக போராளிகளையும் உளவியலாக புரிந்துகொண்ட மற்றொரு போராளியாகத்தான் நாம் நாவலாசிரியரை பார்க்க முடிகிறது.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க போராட்டக் களத்திற்கு அழைத்து வரப்படும் இளைஞர்கள் சந்திக்கும் சிறு சிறு பிரச்சனைகளான கழிவறை சரியில்லை, தூங்க நேரம் கிடைக்கவில்லை, போர்களத்திற்கு தயாராகும் ஆரம்பகட்ட போராளிகள் சிறு தவறு செய்தால் கூட அனுபவம் வாய்ந்த பொறுப் பாளர்கள் கடுமையாக தண்டனை தருகிறார்கள் என பல சிக்கல்களை ஆங்காங்கே விரிவாக சுட்டிக் காட்டப்படுகிறது. இவ்வாறு எல்லாம் நடந்ததா என யோசிக்க வைத்தாலும் போராட்டக் களத்திற்கு வந்தால் பஞ்சு மெத்தையா கிடைக்கும்? கல்லிலும் முள்ளிலும் படுத்துத்தான் ஆக வேண்டும் என்று நாமே நமது யோசனையை நிறுத்திக் கொள்வோம்.

ஒவ்வொரு போராளியாக குறிப்பிட்டு வரும் பொழுது தன்னுடன் நெருங்கி பழகிய ஒரு போராளியான சுகுமாரைப் பற்றியும் அவரின் குடும்பத்தினரான அக்காவின் நிலையை விவரித்து இருப்பதும் மிகவும் பரிதாபப்பட வைக்கிறது நாவல். இறுதியில் சுகுமார் கரும்புலியாகி போர்களத்தில் இறந்து போகிறார்.

விடுதலைப் புலிகள் என்றால் பிரபாகரன் என்கிற தலைவனைப் பற்றி கடைசி நிலையில் இருக்கும் போராளிக்கும் ஒரு பார்வை இருக்கும். எங்கேயாவது அண்ணனைப் பார்த்தேன், அவர் இப்படி நடந்துகொண்டார் என்று எதாவது பதிவு செய்திருப்பார் என அடுத்த அடுத்த பக்கத்தைப் புரட்டும்போது எதுவும் பெரியதாக இல்லை என்பது சற்றே ஏமாற்றத்திற்குரியதாகும்.

மற்றபடி ஈழத்து வட்டார வழக்கு மொழிநடை தமிழகத்து வாசிப்பாளனுக்கு புது அனுபவத்தை தரும். விடிவிற்கு முந்திய மரணங்கள், இன்னொரு போர் முகம், புதியதோர் உலகம், போன்ற ஈழத்து படைப்புகளுக்கு மத்தியில் நஞ்சுண்டகாடு நாவல் ஒரு முக்கிய படைப்பாகும்.

பொழுது போக்கிற்காக வாசிக்கும் வாசகர்கள் தயவு செய்து போய்விடுங்கள் என்கிறார் நாவலாசிரியர். ஏனெனில் கதையில் பொழுதா போகும். கிடையவே கிடையாது வலித்து வலித்து வாழ்ந்த மாந்தர்களின் கதை என விளக்கம் அளிக்கிறார். ஆனால் பொழுதுபோக்கிற்காக வாசிக்கும் வாசிப்பாளனும் கூட அரசியல் புரிதலுக்கு மாறவும், ஈழ போராளிகளின் வாழ்க்கையை தெரிந்துகொள்ளவும் அனைத்துத் தரப்பினரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல் நஞ்சுண்ட காடு.

Pin It