தேர்தலில் பிரதிபலித்த அமெரிக்க எதிர்ப்பு

அமெரிக்க போர்க்கப்பல்கள் ஜப்பானுக்கு வந்து போவதும், அவை ஜப்பானின் கடற்பகுதிகளில் முகாமடிப்பதும் அதிகரித்துள்ளது. அணு ஆயுதத்தால் பாதிக்கப்பட்ட ஒரே நாடு என்ற முறையில் உலகின் எந்த மூலையில் அணுஆயுத சோதனை நடத்தப் பட்டாலும் குரல் கொடுக்கும் ஜப்பானுக்குள், அணு ஆயுதங்கள் அடங்கிய கப்பல்களோடு அமெரிக்க வலம் வருகிறது. இதற்கெதிரான குரல்கள் உரக்கவே ஒலித்துக் கொண்டிருந்தாலும், வெறும் ஊர்வலங்களோடு முடிவடையதாகவே இருந்தன.

ஆனால் முதன்முறையாக தேர்தலில் அந்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகள் மூலம்  அமெரிக்க எதிர்ப்பைக் காட்டியுள்ளனர். ஜன.24 ஆம் தேதியன்று ஜப்பானின் நாகோ நகரின் மேயருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த நகரில் உள்ள ஹெனோகோவில் புதிதாக அமெரிக்க ராணுவத்தளம் வரப்போகிறது.  தேர்தலுக்கு முன்பிருந்தே இந்தத் தளம் வருவதை அனுமதிக்கக் கூடாது என்ற முழக்கம் ஒலிக்கத் துவங்கியது.

அதில் முன் நின்றவர் இனாமைன் சுசுமு. அவருடன் தோளோடு, தோள் சேர்ந்து நின்றது ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி. அந்தத் தளம் வருவதால் பொருளா தார ரீதியாக பலன் கிடைக்கும் என்ற எலும்புத் துண்டு போடும் பேச்சுகளுக்கு சுசுமு பதிலடி கொடுத்தார். ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தளங்களின் கதியை மக்கள் மத்தியில் அம்பலப் படுத்தினார். அமெரிக்க ராணுவத்தினரின் பாலியல் பலாத்காரங்களும், அவை ஜப்பானிய சட்டங்களுக்கு உட்படாமல் தப்பித்துக் கொள்வதும் மக்களிடம் கோபத்தையே ஏற்படுத்தியது.

நாகோ நகரின் ஹெனோகோவில் அமெரிக்கத் தளம் வர வேண்டும் என்ற முழக்கத்துடன் யோசிகாசு என்பவரை முன்னாள் ஆளும் கட்சியும், அமெரிக்க ஆதரவு கொமேய் கட்சியும் களமிறக்கின. ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவோடு தேர்தல் களத்தில் இறங்கிய சுசுமுவுக்கு ஜப்பான் ஜனநாயகக் கட்சி, சமூக ஜனநாயக் கட்சி மற்றும் சமூக மக்கள் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்தன.

முதன்முறையாக அமெரிக்க எதிர்ப்புக்குரல் எழுப்பிய வேட்பாளர் வெற்றிக்கனியைப் பறித்துள்ளார். ராணுவத்தளங்கள் அமைப்பதற்கு இட்டுசென்ற அமெரிக்கஜப்பானிய பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டதை ஜப்பானிய மக்கள் வித்தியாசமாகக் கொண்டாடியிருக் கிறார்கள், வாக்குச்சீட்டை சரியாகப் பயன்படுத்தியதன் மூலமாக.

செய்து காட்டிய சீனா

அந்நிய முதலீடு எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான முன்மாதிரியை சீனா காட்டியுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்கான தொழில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொடர்பான புள்ளிவிபரங்கள், எந்த நோக்கத் திற்காக அந்நிய முதலீடுகள் கொண்டு வரப்பட்டனவோ அதை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளன. அதிக மதிப்பிலான ஏற்றுமதி செய்யும் நாடு ஜெர்மனி என்றுதான் 2008 ஆம் ஆண்டுவரை இருந்தது.

அந்த ஆண்டில்தான் சீனா, ஜெர்மனியை முந்திச் சென்றது. நெருக்கடி துவங்குவதற்கு முன்பாகவே முதலிடத்திற்கு சீனா முன்னேறி விட்டது. இந்த முன்னேற்றத்திற்கும், சீனா விற்குள் வந்த அந்நிய முதலீட்டிற்கும் நெருக்கமான தொடர்பு இருந்துள்ளது.

சீனாவின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு, அந்நாட்டில் முதலீடு செய்துள்ள அந்நிய நிறுவனங்களின் முதலீடுகளைப் பெற்றுள்ள நிறுவனங்களால்தான் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்த நிறுவனங்களின் பங்கு 65 விழுக் காடாக இருந்தது. வரும் ஆண்டில் இது மேலும் அதிகரிக்கும் என்பதுதான் உதிரித்தகவல்.

தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றைக் குறிவைத்தே சீனா அந்நிய முதலீட்டை அணுகியது. வேலைவாய்ப்புகள் அதிகரித்தன. தொழில்நுட்பங்களுக்கு குறைவில்லாத நிலை ஏற்பட்டது. ஏற்றுமதிக்கான இலக்குகளையும் இந்த முதலீடுகளைப் பெற்ற நிறுவனங்கள் எட்டின.                   அதே வேளையில், இந்த நிறுவனங்கள் சீன மண்ணின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளார்கள். தொழிற் சங்கங்கள் இல்லாத நிறுவனங்களே இல்லை எனலாம். வாக்குகளை செலுத்தி தங்கள் தொழிற் சங்கங்களை தொழிலாளர்கள் தேர்வு செய்து கொள்கிறார்கள். இத்தகைய நிலையை உருவாக்க இந்தியா வெகு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

சாவேசுக்கு ஆதரவாக வாலிபர்கள்

வெனிசுலாவுக்கு எதிரான செய்திகள் மேற்கத்திய ஊடகங்கள் வாயிலாக ஏராளமாக வெளியிடப்படுகின்றன. அங்கு உணவுப்பொருட்கள், மின்சாரம், குடிநீர் போன்றவற்றிற்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அந்த செய்திகள் உள்ளன. இத்தகைய அம்சங்களை ஊடகங்கள் பூதாகரமாக சித்தரிக்க முயல்கின்றன. ஆனால் பிரச்சனைகள் இருப்பதை வெனிசுலா அரசும் மறுக்கவில்லை.

இவை உங்களுக்கும் கிடைக்க வேண்டும். கிடைக்கச் செய்வோம் என்று கூறும் அரசு உருவாகியுள்ளது என்பதுதான் இதற்குக் காரணம். சாவேஸ் தலைமையிலான அரசு வெனிசுலாவில் உருவாகும் வரை, வெறும் பத்து விழுக்காடு மக்கள் மட்டும்தான் இந்நாட்டு அரசின் பார்வையில் குடிமக்களாகத் தெரிந்தார்கள்.

தற்போதுதான் பெரும்பான்மையான மக்களின் பிரச்சனைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான பாதையில் அரசு நடைபோடுகிறது. கடந்த சில மாதங்களாகவே, வெனிசுலா அரசுக்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்பது போன்ற செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. அரசின் "தோல்வியால்" அவர்கள் ஆத்திரமடைந்ததாக அந்த செய்திகள் கூறின. ஆனால் அவர்களின் கருத்தை உடைக்கும் வகையில் புதிய வாலிபர் அமைப்பு ஒன்று வெனிசுலாவில் உருவாகியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து முற்போக்கு வாலிபர் அமைப்புகளையும் ஒன்று திரட்டியுள்ளார்கள். பிப்.2 அன்று உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு மேலும் சில சிறிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பிப்.12 அன்று இளைஞர் தினம் வெனிசுலாவில் கொண்டாடப்பட்டது. அந்த நாளில் லட்சக்கணக்கான வாலிபர்கள் இந்த புதிய அமைப்புக்கு ஆதரவாக தலைநகர் காரகாசின் வீதிகளில் திரண்டனர்.

அவர்கள் எழுப்பிய முழக்கங்களில் புரட்சி வெல்லும் என்பதே பிரதானமான ஒன்றாகும்.

-கணேஷ்

Pin It