ஒரு யானைக்கு வயிறு பெருத்துக் கொண்டே போனது, அதைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குள் அவர்கள் புரிதலுக்கும் அறிவுக்கும் எட்டியவாறு கருத்தைக் காரசாரமாக பேசிக்கொண்டனர். எப்படியும் யானை குட்டிதான் போடும் என்றனர் சிலர். இல்லை இல்லை இந்த யானை முட்டை போட வாய்ப்பிருக்கின்றது என்றனர் மற்ற சிலர். இன்னும் சிலர் நன்கு புரிந்தும் புரியாமலும் வயது பெருத்து முக்கி முனகிக் கொண்டிருக்கும் யானையையும் வாதத்தில் ஈடுபட்டவர்களையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். கடைசியில் யானைக் குட்டியும் போடவில்லை முட்டையையும் போடவில்லை. வெறும் சாணியைத்தான் வெளியே தள்ளியது. வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை காங்கிரஸ் இந்தியாவுக்கு கொண்டுவரும் என்றனர்.

காங்கிரஸ் கட்சிக்காரர்களும் சோனியா மன்மோகன், சிதம்பரம் வகையறாக்களும் ‘இல்லை இல்லை உங்களால் முடியாது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் எல்லா இந்தியக் கருப்பு பணத்தையும் வெளிக்கொண்டு வந்து இந்தியாவை “வளர்ச்சி” பெற வைத்து வல்லரசாக்குவோம் என்றனர் பா.ச.க தரப்பும், மோடி வகையறாக்களும் இவர்கள் இரண்டு தரப்பையும் சாராத மக்களும் ஊடகத்தினரும் அரசியல் நோக்கங்களும் யானையைப் பார்த்தவர்களை போல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆக கடந்த கால ஆட்சியாளர்கள் உருப்படியாக எதையும் செய்யவில்லை என்பது இப்போது ஓரளவு தெரிந்துவிட்டது. கருப்பு பணத்தைக் கைப்பற்றுவதற்கு சட்டத்தில் வழியில்லையா? இருக்கின்றதா? என்பதைத் தாண்டி, 100 நாளில் பறிமுதல் செய்வேன் என்றார். உண்மையில் அது சாத்தியமா? கொஞ்சம் அரசியலாகவும் சட்ட வாய்ப்புகள் உள்ளதா? என்பதையும் பார்ப்போம். ஏனென்றால், இந்திய மக்களின் உழைப்பால் உருவான செல்வம் அது.

கருப்பு பணம் கசிந்து வளர்ந்த கதை:

1990களுக்கு முன்பு கருப்பு பணம் வைத்திருப் பவர்களின் பெயரும் ஒரு சில கோடிகளும் எப்போதாவது வெளி வந்தாலே பெரிய சர்ச்சை கிளம்பியது. 1985-ல் ராஜீவ் காந்தி தனது மகன் இராகுல் காந்தி பெயரிலும் (மைனர் அக்கவுண்ட்) சோனியா காந்தி பெயரிலும் 2.5 பில்லியன் தொகையை சுவிஸ் வங்கியில் டெபாஸிட் செய்துள்ளார் என்றும் அந்த தொகை போபர்ஸ் ஊழல் போன்ற பல்வேறு ஊழல் பணம்தான் என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சுப்ரமணிய சுவாமி 1991ல் தெரிவித்தார் இதற்கான ஆதாரத்தை அப்போதைய சோவியத் யூனியனின் உளவுத்துறையான ((KGP) கே.ஜி.பி குறிப்புகளை ஆதாரமாக வெளியிட்டார்.

அதே போல் மறைந்த எம்.ஜி.ஆர் சுவிஸ் வங்கியில் நிறைய தொகையை ரகசிய கணக்கில் வைத்துள்ளார் என்ற தகவலும் பெரிதாக வெடித்துக் கிளம்பியது. எம்.ஜி.ஆர் தந்த பெயரில் டெப்பாஸிட் செய்யாமல் அமைச்சரவை சகா பன்ருட்டி இராமச்சந்திரன் தனது பெயரில் போட்டுக் கொண்டார் என்றும், இது எம்.ஜி ஆருக்கு தெரிந்து மிரட்டிய பிறகு மாற்றிப் போடச் செய்தார் என்ற செய்திகள் 1990களுக்கு முன்பே வந்தன என்பதை நம்மில் பெரும்பாலும் மறந்து விட்டோம்.

1991-ல் நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராக மன்மோகன்சிங் பதவியேற்ற போது பல சர்ச்சை எழுந்தது. யார் இவர் எப்படி திடீர் என்று நிதி அமைச்சரானார், என்ன செய்யப் போகிறார் என அனைவரும் உற்று நோக்கினர். சிறந்த பொருளாதார நிபுணர். உலகளாவிய பல வங்கிகளில் வேலைபார்த்தவர். நமது ரிசர்வ் வங்கியில் சிறப்பாக பணியாற்றியவர் ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவர் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவார். வறுமையை ஒழிப்பார். ஏழ்மை குறைந்து இந்தியா கடன் அற்ற, உபரி நிறைந்த வளர்ந்த நாடாக மாறும் என்று காங்கிரஸ் கும்பலாலும் உலகமய ஆதரவாளர்களாலும் பீற்றிக் கொள்ளப்பட்டவர்.

1992-ல் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்த போது மன்மோகன் சொன்னது என்னவென்றால் அன்றைய நிலையில் இந்தியாவின் மொத்த வெளிக்கடன் 80,000 கோடி. பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்டு வந்தாலே இந்தியாவின் மொத்த கடனும் தீர்ந்து போகும் நரசிம்மராவ்- மன் மோகன் அரசு செய்ய வேண்டும் என்று அப்போது தினமணி நாளிதழ் ஒரு கட்டுரையை வெளியிட்டது. ஆனால் நடந்தது என்ன? மன்மோகன் நிதி அமைச்சராகவும் பல ஆண்டுகள் பிரதமராகவும் பதவியில் இருந்தார். கருப்பு பணம் வந்தபாடில்லை. அதற்கு மாறாக, 80,000 கோடியாக இருந்த கருப்பு பணத்தின் அளவு, 2012ல் 70 இலட்சம் கோடியாக அதிகரித்து என்பதுதான் உணமை 1991க்கு பிறகு தான் கருப்பு பணத்தின் பதுக்கல் பலமடங்கு அதிகரித்தது அது எப்படி? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த பணம் மொத்தத்தையும் பறிமுதல் செய்வோம் என்றனர் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அவர்களால் ஏன் முடியவில்லை?   

2012-ம் ஆண்டு வரையிலான கணக்கின்படி இந்தியாவில் 609 பேர் 10 மில்லியனுக்கு அதிகமான சொத்துக்களை வைத்துள்ளனர். இந்திய சனாதிபதியின் ஒரு நாள் செலவு 8 கோடி சனாதிபதி மாளிகையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு 350 பங்களா குடியிருப்புகள் உள்ளன. இந்திய நாடாளுமன்றம் இயங்க ஒரு நாளைக்கு 9 கோடி செலவாகிறது. பிரிட்டன் இந்தியாவில் 250 ஆண்டுகளில் 350 லட்சம் கோடியை திருடிச் சென்றுள்ளது. அதே காலத்தில் இந்தியப் பணக்காரர்கள் சுருட்டிய தொகை 330 கோடியாகும், சுவிஸ் வங்கியில் மட்டும் 70 இலட்சம் கோடி இந்திய பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 84000 பேர் சேர்த்துள்ளனர். இந்தியாவில் 450 பில்லியன் டாலர் நிலக்கரியும், 170 பில்லியன் டாலர் இரும்புத் தாதுவும் இருப்பில் உள்ளது. இதில் 1 இலட்சம் இடங்களில் சட்ட விரோதமாக சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

2003 முதல் 2010 ஆண்டு வரையிலான காலத்தில் மட்டும் 5635 ஐஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் உள்ளிட்ட இந்திய அதிகார வர்க்கத்தினர் அதற்கு வங்கிகள்: இல் 1500பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளனர். தனியார் தொழில் நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளனர்.

உலகின் பல்வேறு நாடுகளில் சுரண்டப்படும் கருப்பு பணமானது 11 நாடுகளில் உள்ள பன்னாட்டு வளங்களில் டெபாஸிட் செய்யப்படுகின்றன. இதற்கு 1 சதவீதம் மட்டுமே இந்த வங்கிகள் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட நாடுகளுக்கே மீண்டும் பன்னாட்டு வங்கிகளால் கடனாகக் கொடுக்கப்படுகின்றன என்பதுதான் கொடுமை. இந்தக் கடனை அடைக்க ஏற்கனவே கருப்புப் பணம் சுருட்டிய அரசியல்வாதிகள் அதிகாரிகள் முதலாளிகள் பங்கு சந்தை தரகர்கள் அனைவரும் கூட்டாக நடத்தும் அரசாங்கம் மூலம் மக்கள் மீது வரி மேல் வரியை விதித்து கல்வி சுகாதாரம் ரேசன் உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளையும் ரத்து செய்து அரசு கஜானாவை நிரப்புகின்றனர். அதில் அவர்கள் எடுத்தது போக கொஞ்சத்தை கடனை அடைப்பதாகக் கூறி கடன் கொடுத்த பன்னாட்டு வங்கிகளுக்கே தொடர்ந்து வட்டியை மட்டும் செலுத்துகின்றனர்.

பழைய கடன் முதிர்வுகாலம் வந்தவுடன் மீண்டும் பெரியத்தொகையைக் கடனாக வாங்குகின்றனர் இதற்கு முன்பை விட அதிக வரி வசூல் மானியம் மக்களிடமிருந்து பிக்பாக்கெட் பேர் வழியைப் போல் பிடுங்குகின்றது. வரி வருவாயும் அரசின் கடன் தொகையும் புதிய தொழில் வளர்ச்சியும் முன்பை விட கருப்புப் பணத்தைச் சுருட்ட வழியை அமைத்துக் கொடுக்கின்றன. அரசு கஜானா முன்பை விட மோசமாக கழுதைத் தேய்ந்து கட்டெறும்பாகிறது. போன கருப்பு பணம் அரசின் மூலம் கடனாகவும் தொழில் துறை பங்கு சந்தை ரியல் எஸ்டேட் சுற்றுலா போன்ற பெயரிலும் தொழில் என்ற பெயரிலும் வெள்ளையாக மாற்றப்படுகிறது. ஒரு பொருளாதார நிதி மூலதன் சுழற்சியாக மாற்றப்படுகிறது.

இந்திய நிலப்பரப்பில் யார் ஒருவர் அசையும் அல்லது அசையா சொத்தை விற்றாலும் வாங்கி னாலும் பத்திர பதிவு, கம்பெனி மாற்றம் உள்ளிட்ட வழிகளை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நடந்த விற்றல் - வாங்கலின் தரத்திற்கும் மதிப்பிற்கும் உகந்த வரியைச் செலுத்த வேண்டும். அதுபோல் உள்நாட்டு வெளிநாட்டு வணிகத்திற்கும் அதற்குரிய வணிக வரி விற்பனை வரி போன்றவற்றை செலுத்த வேண்டும் இதில் நடக்கும் மூலதன பரிவர்த்தனை, உறபத்தி போன்ற அனைத்தும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP)) சேர்க்கப்படும்.

இதிலிருந்து தான் நாட்டின் வளர்ச்சி கணக்கிடப்படும். இதன் மூலம் கிடைக்கும் வருவாயின் மூலம் மக்களிடம் பெறப்படும் நேரடி மற்றும் மறைமுக வரியின் மூலம் தான் அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி நிலை அறிக்கையைத் தயாரித்து வரவு- செலவுகளை கையாள்கிறது. கருப்பு பணம் என்பது என்ன என்பதுதான் முக்கியமான கேள்வி. இரண்டு உதாரணங்களை பார்ப்போம் ஹட்ச் (HUTCH)) என்ற செல்லிடப் பேசி நிறுவனம் தனது சொத்துகளையும் உரிமத்தையும் வோடபோன் (Vodafone) என்ற நிறுவனத்திற்கு விற்றது.

ஹட்சின் 67 சதவிகித சொத்தை வோடபோன் என்ற பன்னாட்டு நிறுவனம் 2007 ஆம் ஆண்டு வாங்கியது. இதன் சொத்து மதிப்பு 52300 கோடியாகும் இதற்கு மூலதன ஆதாய வரியாக 11000 கோடியைச் செலுத்துமாறு வோடபோன் நிறுவனத்திற்கு அரசு உத்தரவை அனுப்பியது உடனே வோடபோன் நிறுவனம் இந்திய அரசின் எல்லைக்கு வெளியில் நடந்த கம்பெனி விற்பனைக்காக இந்திய அரசுக்கு நாங்கள் வரி செலுத்த வேண்டியதில்லை என்றது வோட.போன் நிறுவனம்.இந்திய அரசு இந்தியாவில் உள்ள சொத்துக்களைத்தான் தாங்கள் வாங்கியுள்ளீர்கள் எனவே இந்திய அரசிற்கும் 11000 கோடி வரியைச் செலுத்த வேண்டும் என்று அரசு தரப்பும் வோடபோன் தரப்பும் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இங்குதான் பிரச்சனை அதாவது ஹட்ச் மற்றும் வோடபோன் இரண்டு நிறுவனங்களும் கேமேன் தீவில் பதிவு செய்யப்பட்ட பன்னாட்டு நிறுவனமாகும். மொரிசியஸ், கேமேன், சைப்ரஸ் பிரிட்டனின் வர்ஜின் தீவுகள் அனைத்தின் மக்கள் தொகையைக் கூட்டினாலும் கூட 1 கோடிக்கு மேல் போகாது. அதுபோல் எந்த தொழில் வளர்ச்சியும் இல்லாத வேளாண்மை பெரிதாக இல்லாத நாடுகள் ஆனால், செல்வ செழிப்பும் இயற்கை வளமும் மனித உழைப்பும் தன்னகத்தே செறிவாகக் கொண்டுள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த உப்புக்கும் சப்புக்கும் லாயக்கற்ற நாடுகள் மூலதன ஏற்று மதியாளர்களாக உள்ளனர்.

அது எப்படி? இந்த நாடுகளில் யார் வேண்டு மானாலும் கம்பெனிகளையும் தொழில் நிறுவனங் களையும் பதிவு செய்து கொள்ளலாம். இங்கிருந்து கொண்டு உலகின் எந்த நாட்டிலும் சொத்தை வாங்கலாம் விற்கலாம் நிதி முதலீடு செய்யலாம் அதற்காக் அந்த நாட்டிற்கு வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்தக் கருப்பு பண முதலாளிகளின் கூடாரமாகவும் அவர்களால் நடத்தப்படும் கம்பெனி களின் இருப்பிடமாகவும் இந்தத் தீவுகள் செயல் படுகின்றன.

ஆக, இந்தத் தீவுகளின் மூலமாக வரும் பணத்தைத் தான் நமது அந்நிய மூலதனம் அல்லது தொழில் மூல தனம் அல்லது வளர்ச்சிக்கான வரவு என்கிறது. அந்த நாடு களுடன் இந்த தீவுகளும் குட்டி நாடுகளும் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் (Double taxation avoidance treaty) போடப்பட்டுள்ளன. அதுபோல் கேமேன் தீவுக்கும் இந்தியாவிற்கும் ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது.

மேற்படி ஒப்பந்தத்தின்படி கேமேன் நாட்டில் நடந்த ஹட்ச் - வோடபோன் கம்பெனி விற்பனைக்காக இந்தியாவில் வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் கம்பெனி கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு இந்தியாவிற்கு வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை எங்கள் கம்பெனி கையகப்படுத்தும் நடவடிக்கை இந்தியாவிற்கு வெளியில் நடந்தது எனவே எங்களிடமிருந்து 11000 கோடி வரியைப் பெற இந்திய அரசிற்கு தார்மீக உரிமை இல்லை என்றது மும்பை உயர்நீதிமன்றத்தில் வோடபோன் நிறுவனம்.

ஆனால் மும்பை உயர்நீதிமன்றத்தில் நீங்கள் இந்திய எல்லைக்குள் உள்ள சொத்தைத் தான் 52,300 கோடி மதிப்பில் வாங்கியுள்ளீர்கள் எனவே அரசிற்கு உரிய வரியை கட்ட வேண்டும். என்று செப்-2010ல் தீர்ப்பு அளித்தது மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது வோடபோன் நிறுவனம்.

வோடபோன் கார்டில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிசேக்,மனு சிங்வி, அரிஸ்கால்வே போன்ற கார்பரேட் நிறுவனங்களின் பெரும் பட்டாளம் டெல்லியில் முகாமிட்டது. அரசு தரப்பு வோடபோன் தரப்பு வாதங்களுக்கு பிறகு சனவரி-20 2012 ல் தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகளை கொண்ட முழு அமர்வு மும்பை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதாக தீர்ப்பை அளித்தது!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.