kamala harris copyஅமெரிக்க அரசியலில் அதிபர் தேர்தல் என்பது அமெரிக்காவை கடந்து உலகமே உற்று நோக்கும் திருவிழா!! அதன் வேட்பாளர்களும் வெற்றியாளர்களும் உலகின் அதிகம் பேசப்படும் நபர்களுள் ஒருவராக ஆளாகிவிடுவார்கள். அந்த வரிசையில் தற்போது நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நிகழவிருப்பதால் அதன் வேட்பாளர்களின் அறிவிப்புகள் பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்திகளாக மாறியிருக்கின்றன.

மேலும் இந்தியாவிலும் உலக இந்துக்களாலும் கொண்டாடப்படும் தீபாவளி திருநாள் அமெரிக்க வெள்ளை மாளிகையிலும் அதன் அதிபரால் உவகையோடு கொண்டாடப்பட்டு வருகின்றது, அமெரிக்க மக்கள் தொகையில் 25 லட்சம் பேர்கள் இந்தியர்களாக அதில் பெரும்பான்மையாக பிராமண சமூகம் இருப்பதினால், இந்த வருட தீபாவளி திருநாள் அமெரிக்கர்களையும் - இந்தியர்களையும் ஒருசேர கொண்டாட்டத்தினால் ஸ்தம்பிக்கவைக்க போகின்றது எனலாம்.

உலகமெங்கும் பரந்து விரிந்த மனித சமூகத்திடம் அது நாகரீகமுள்ள சமூகமாக இருந்தாலும் சரி! நாகரீகமற்ற சமூகமாக இருப்பினும் சரி! அடக்குமுறை, அடாவடித்தன்மை என்பது தன்னைவிட பொருளாதாரத்திலும் - பிறப்பிலும் - தோற்றத்தின் அடிப்படையிலும் பிந்தங்கியவன் என ஒருசிலரைக் கட்டமைத்து அவர்களிடமிருந்து தனித்திருக்க வேண்டியும் அவர்களிடத்திலிருக்கும் அனைத்தையும் அபகரித்திட வேண்டியும், பல ஏற்றத் தாழ்வுகள் கடைபிடிக்கபடுகின்றது.

அதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல!! அங்கும் நிறத்தின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகள் கற்பிக்கபடவே செய்கின்றது அமெரிக்கா தான் வளம் கொழிக்க அடிமைகளாக இழுத்து வரப்பட்ட ஆப்ரிக்க கருப்பினத்தவரை கொடுமைப்படுத்தும் செயல் இன்றுவரை நிகழ்ந்துக் கொண்டுதான் வருகின்றது.

அமெரிக்காவை பொருத்தவரை மனிதாபிமானம், ஜனநாயகம், மனித உரிமைகள், பெண்ணுரிமை …. என என்னவெல்லாம் அகராதியில் இருக்கின்றதோ அதுவெல்லாம் அவர்கள் உலகை ஏமாற்றுவதற்காக போட்டுக் கொள்ளும் ஒர் மேலாடை, காட்சிகளும் – சூட்சமங்களும் மாறும் பொழுது போட்டிருக்கும் ஆடைகளையும் மாறும் அல்லது மாற்றிக் கொள்ளப்படும்.

தீவிர வலதுசாரித் தத்துவத்தை வெளிப்படையாக உயர்த்தி பிடித்துக் கொண்டு வலம்வரும் அநேகர்கள் தற்பொழுது பல நாடுகளில் உயரிய பதவிகளை ஆக்கிரமித்துக் கொண்டுவரும் வேளையில் ‘டொனால்ட் டிரம்ப்’ போன்றவர்களுக்கு இந்துத்துவா கொள்கையினை பின்பற்றும் மோடியும் அவர்தம் பரிவாரங்களும் ஆதரிக்காமல் இருந்தால்தான் பேரதிர்ச்சி!!.

அந்த அடிப்படையில்தான் ‘ஹவ்டி மோடி’ என்னும் பயணத்தில் பார்ப்பனர்களும் – மார்வாடிகளும் பெரும்பான்மையாக இருக்கும் அமெரிக்காவில் தனக்காக பிரச்சாரம் செய்யுமாறு டிரம்பும், உமக்கில்லாமல் வேறு யாருக்கு எனது பிரச்சாரம் என்று மோடியும் கடந்த 2019 செப்டம்பர் 22 ஆம் நாளில் அமெரிக்க ஹூஸ்டன் நகரிலும் அதன் நீட்சியாக “நமஸ்தே டிரம்ப்”என்னும் பெயரில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அகமதாபாத்திலும் மரபுகளை மீறி? அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் நிகழ்ந்தப்பட்டது.

அமெரிக்கர்களிடம் குறிப்பாக ஆப்ரிக்காவை பூர்வீகமாக கொண்ட கருப்பினத்தவர்கள் ‘ஜார்ஜ் பிளாய்டு’ சம்பவத்திற்கு பின் ஒர் மாற்று ஆட்சியினை எதிர்பார்த்திருக்கும் இவ்வேளையில் முன்னாள் அமெரிக்க துணை அதிபரான ‘ஜோபிடன்’ ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார், ஜோபிடனை ஆரம்பத்திலிருந்து எதிர்த்த ‘கமலா ஹாரீஸ்’ கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 நபர்களிலிருந்து ஒருவராக துணை அதிபர் தேர்தலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தாய்வழியால் (ஷியாமளா) இந்திய வம்சாவளி பிராமண வகுப்பையும், தந்தை வழியில் (டோனல்ட் ஹாரிஸ்) ஆப்ரிக்க கருப்பினத்தவராகவும், கணவர் வழியில் (டவ்க்லஸ் எம்ஹாப்) யூதராகவும் அதாவது பன்முகத்துடன் இருக்கும்? கமலா ஹாரிஸை போட்டியாளராக நிறுத்தினால் இம்மூன்று சமூகத்தவர்களின் ஒட்டுமொத்த ஓட்டினையும் மொத்தமாக அள்ளிவிடலாம் என்ற ஜோபிடனின் கணக்கு இதுநாள் வரை எதிரியாக உட்கட்சியில் பார்க்கப்பட்ட கமலா ஹாரிஸை வேட்பாளராக நிறுத்திட அவர்தம் மனம் ஏற்க வைத்திருக்கின்றது.

கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் எதாவது ஓர் அதிகாரமற்ற நபராக இந்நேரம் இருந்திருந்தால் நிச்சயமாக அக்கிரகார மேன்மக்கள்? அவரைக் கண்டு கொள்ளாமல்தான் கடந்து சென்றிருப்பார்கள். ஆனால் கமலா ஹாரிஸுக்கு தனது தாய்வழி பழைய மரபுகளின் மீதான பற்றும், இயல்பாகவே அவருக்குள் இருக்கும் மேலாதிக்க மனப்பான்மையும், போதாக் குறைக்கு அமெரிக்காவின் மிக உயர்ந்த ஒரு பதவியை அவர் அலங்கரிக்கும் வாய்ப்புக் கிடைத்ததால்தான் தமிழ்நாடு பிராமணர் சங்கம் முந்திக் கொண்டு வாழ்த்து தெரிவித்திருக்கின்றது, மேலும் பார்ப்பணீய ஆதரவு ஏடுகள் துவங்கி பிராமண அதிகார வர்க்கம் வரை இன்று கமலா ஹாரிஸைக் கொண்டாடுகின்றது.

கமலா ஹாரிஸ் – உயர்சாதி இந்துக்களும் தேவை

பிராமண சங்கத்தின் மாநிலத் தலைவர் ஹரிஹர முத்தய்யர் கூறும்போது தற்போது “அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக, கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு, ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என கடவுளை வணங்கி வாழ்த்துகிறோம்" என்று இருக்கின்றார்.

அமெரிக்காவிலும் தொடர்ந்து நடைபெறும் ஜாதி ரீதியான பாகுபாட்டின் நீட்சியாக ஒரு வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அந்த வழக்கின் குற்றவாளிகளான சுந்தர் ஐய்யர், மற்றும் ரமணா கொம்பெல்லா. இவர்களிருவரும் சேன் ஜோஸில் உள்ள சிஸ்கோ தலைமையகத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

அங்கு தங்களின் சாதிவெறியினை தலித் சமூகத்திற்கெதிராக வெளிப்படுத்துகையில் அது மிகப்பெரும் விவாத பொருளாகிறது.

இது சம்மந்தமாக கலிபோர்னியா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “குறிப்பிட்ட நிறுவனம் உயர் ஜாதியைச் சேர்ந்தவர்களின் குழுவில் இடம் பெற்றிருந்த தலித் ஊழியர் அவரது மதம், வம்சாவளி, தேசியம், தோற்றம், இனத்தின் அடிப்படையில் குறைவான அந்தஸ்தைப் பெற்றார், குறைந்த ஊதியத்தைப் பெற்றார், குறைவான வாய்ப்புகள் மற்றும் பிற தரமற்ற விதிமுறைகள் மற்றும் வேலைவாய்ப்பு நிலைமைகளைப் பெற்றார்.

தலித் ஊழியர் பணியிடத்திற்குள் ஒரு சாதி வரிசை முறையை ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்த்ததாகத்”தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிஸ்கோ நிறுவனத்தின் மீதும், சம்பந்தப்பட்ட சாதி வெறியர்கள் மீதும் இனம், நிறம், மதம், பாலினம், பிறந்த தேசம் ஆகியவற்றின் அடிப்படையில் பணிமனையில் பாகுபாடு காட்டுவதைத் தடுப்பதற்கான சட்டப் பிரிவு VII இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரில், சாதி பாகுபாடு சட்ட விரோதமானது அல்ல என்று சிஸ்கோ நிறுவனம் நினைத்துள்ளது என்றும், அதனால் தலித் ஊழியருக்கு அவர்கள் தொடர்ந்து தொல்லை தந்துள்ளனர் என்றும், தலித் ஊழியரைத் தனிமைப்படுத்தி, நல்ல வாய்ப்புகள் மற்றும் பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் குடிபுகும் இந்தியர்களில் 2003 ஆண்டு கணக்கின் படி 1.5 சதவீதம் மட்டுமே தலித்துகள் என்று பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள ”இந்தியாவின் மேம்பட்ட ஆய்வு மையம்” தெரிவித்துள்ளது. 90 சதவீதத்திற்கும் அதிகமாகக் குடியேறியவர்கள் உயர் அல்லது ஆதிக்க சாதி என்று தங்களை கருதிக் கொள்கின்றவர்கள்தான்.

இத்தனைக்கும் அமெரிக்காவில் இந்து மதம் ஒரு சிறுபான்மை மதம்தான். மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதம் மட்டுமே இந்துக்கள் ஆவர்கள். கருப்பினப் போராளியாக இன்று அமெரிக்க ஊடகங்களால் சித்தரிக்கப்படும் கமலா ஹாரிஸ் சாதி ரீதியாக தலித்துகள் அமெரிக்காவில் நடத்தப்படுவதற்கு எதிராக எப்போதுமே குரல் கொடுத்தது இல்லை, தன் தாயின் அக்கிரகாரப் பூர்வீகத்தை தனது பெருமைமிகு அடையாளமாகக் கருதுகின்றார் என்பதையும் சேர்த்து பார்த்தால் கமலா ஹாரிஸின் உண்மை முகத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

கமலா ஹாரிஸ் தான் சான் பிரான்சிஸ்கோவின் மாவட்ட அரசு தரப்பு வழக்குரைஞராக (2004-2011) பணிபுரிந்தபோதும், கலிபோர்னியாவில் அரசு தரப்பு தலைமை வழக்குரைஞராக(2011-2017) பணிபுரிந்தபோதும், தற்போது அமெரிக்க செனட்டராக 2017 இல் இருந்து தற்போது வரை பணியில் இருக்கும் போதும் காவல்துறையின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோருக்கு ஆதரவாகவும் ஒருபோதும் இருந்தது இல்லை, இன்னும் சொல்லபோனால் இராணுவ மேலாண்மையையும் அமெரிக்க போர் வெறியையும் ஆதரிப்பவராகவுமே இருந்துள்ளார்.

இனி கமலா ஹாரிஸ்

முதல் அமெரிக்க - ஆப்ரிக்க துணை ஜனாதிபதி, முதல் ஆசிய - அமெரிக்க துணை ஜனாதிபதி, முதல் பெண் துணை ஜனாதிபதி, முதல் கருப்பின துணை ஜனாதிபதி என்று எப்படி வேண்டுமானாலும் பட்டம் சூட்டி பெருமைப்பட்டுக் கொண்டாலும் இன்று அமெரிக்க மக்கள் சந்தித்து வரும் எந்தப் பிரச்சினைக்கும் அவரால் தீர்வு காண முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஏனென்றால் அமெரிக்க கார்ப்ரேட்கள், பன்னாட்டு நிறுவனங்கள், ஊடக முதலாளிகள் ஆகிய இவர்கள்தான் அமெரிக்க அதிபரையும் துணை அதிபரையும் தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இவர்கள் எவற்றிலும் கருப்பினத்தவர் தீர்மானிக்கும் நிலையில் எப்போதுமே இருந்தது இல்லை.

ஜார்ஜ் பிளாய்ட்டின் படுகொலை அமெரிக்க கருப்பின மக்களிடம் ஏற்படுத்தி இருக்கும் கடுமையான வெறுப்பும் கூட கமலா ஹாரிஸின் தேர்ந்தெடுப்புக்கு ஒரு காரணமாகும். வெள்ளை ஆதிக்க வெறியர்களின் கூடாரமாக திகழும் அமெரிக்க இரு பிரதான கட்சிகளும் (குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி) கருப்பினத்தவர்களை பிரதானபடுத்தியதே கிடையாது.

ஒபாமா கூட இவர்களின் கைப்பாவையாகதான் செயல்பட்டார், அதுபோன்றே கமலா ஹாரிஸும் இனி செயல்பட இருக்கிறார் அவ்வளவுதான்.

அமெரிக்க முதலாளிகளும் இரண்டு பிரிவுகளாகப் (வெள்ளயர்கள் - கருப்பினத்தவர்கள்) பிரிந்து பல மில்லியன் டாலரை நன்கொடையாகக் கொடுப்பார்கள். எப்படி அமெரிக்க முதலாளிகள் கருப்பினத்தைச் சேர்ந்த ஒபாமாவை தேர்தெடுத்ததற்குப் பின்னால் அவர்களின் பொருளாதார வர்த்தக நலன்கள் இருந்ததோ அதே போல கமலா ஹாரிசை தேர்ந்தெடுத்ததற்குப் பின்னாலும் அவர்களின் பொருளாதார வர்த்தக நலன்களே இருக்கப்போகின்றன.

ஆக கமலா ஹாரிஸ் கருப்பினத்தவர்களுக்கோ!, பிராமண உயர் குலத்தவர்களுக்கோ! அல்லது யூத இனத்தவர்களுக்கோ பிரதிநிதியாக இருக்கபோவது இல்லை மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாகவே இருக்கபோகிறார்.

- நவாஸ்

Pin It