makkal viduthalai mar15

இந்திய அரசின் பன்னிரெண்டாவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் ரூபாய் 1350 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டு தமிழகத்தின் தேனிக்கு அருகில் பொட்டிபுரத்தில் இந்தியன் நியூட்டிரினோ ஆய்வகம் அமைய உள்ளது. இதன் புவிஅமைவிடம் (GPS) 79 டிகிரி 172 5.323E 9 டிகிரி 562 46.203 N என்பதாக உள்ளது.

nuetrino land 404

இவ்வாய்விடம் தரையிலிருந்து பூமிக்குள் கீழே ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் அரை கிலோ மீட்டர் வரையிலுள்ள சுற்றுப்புறங்க்ளில் பரந்து விரிந்து அமைக்கப்பட இருக்கிறது. புவிக்குள் ஆய்வகத்தை உருவாக்க 800,000 டன் எடை கொண்ட பாறைகளைப் பெயர்த்தெடுக்க 1000 டன் அளவிற்கான ஜெலாட்டின் வெடி மருந்துகொண்டு 800 நாட்களில் வெடி வைத்து தகர்க்க இருக்கிறார்கள்.

இச்செயல்களை மேற்கொள்வதால் உருவாகும் பெரும் சத்தம், புழுதித் துகள் மூட்டங்கள், வெடி மருந்தின் வேதி நச்சுப் பொருட்கள், தகர்த்து குவிக்கப்பட உள்ள 800,000 டன் பாறைப் பொருட்கள் என்பனவற்றால் ஏற்பட இருக்கும் சுற்றுச் சூழல் சீர்கேடுகளால் தாவர, விலங்கு மற்றும் மனிதர்களுக்கு உருவாக இருக்கும் கேடுகள் கவனத்திற்குரியன.

மேற்குத் தொடர்ச்சி மலையின் இப்பகுதி நீராதாரம், சூழலியல் உணர்வு நுட்பம் மற்றும் நீரழுத்த நிலநடுக்கம் போன்றவற்றால் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருப்பதால் யுனெஸ்கோ இப்பகுதியில் தொழில் தொடங்க தடை செய்யப்பட்ட மண்டலமாகவும் அறிவித்து உள்ளது.

இந்தக் கட்டுரையின் நோக்கமான நியுட்ரினோ பற்றிய ஆய்வு முக்கியத்துவம் பெற்றிருப்பதற்குக் காரணமாக அமைந்தது 2012 இல் கண்டுபிடித்ததாக அறியப்பட்டுள்ள “ஹிக்ஸ் போசான்“ அல்லது “கடவுள் துகள்“ ஆகும். இந்தத் துகள் ஜெனிவாவில் செர்ன் (cern) ஆய்வுக் கூடத்தில் பெரும் ஹேட்ரான் மோது கலனில் (LHC) ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நுட்பமான துகள் பிரபஞ்சம் உருவான பெருவெடிப்பு நிகழ்சசியில் ஒரு நானோ வினாடி (ஒரு வினாடியில் நூறு கோடிப் பகுதியில் ஒரு பகுதி) இருந்து மறைவுற்றதாகவும் அத்துகளின் மறைவின்போது உருவான பேராற்றலே (10,000 கோடி எலக்ட்ரான் வோல்ட்) இப்போது நாமும், புவியும், சூரிய மண்டலமும், விண்மீன்கள் அண்டமும், பிரபஞ்சமும் என்பதாக வான்வெளி ஆராய்ச்சியாளர்களின் கொள்கை முடிவு. ஆகவே தான் ஹிக்ஸ் போசானும் அதனுடன் தொடர்புடைய நியுட்ரினோவும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. நியூட்ரினோ துகள்களை உருவாக்கும் தொழிற்சாலைகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சப்பான், சீனா என நீள்கிறது. நியூட்ரினோக்களைக் கண்டுபிடிக்க ஒரு சாதனம் 50 டன் எடை கொண்ட மின்காந்தத்தை உள்ளடக்கியதாக இருக்கிறது.

இவை ஒருபுறமிருக்க வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த பின்வரும் செய்தி கவனிக்கத்தக்கது. அதாவது இரண்டாவது உலகப்போரின் போது அறிவியல் மேதை அய்ன்ஸ்டீன் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டிற்கு எழுதிய கடிதமொன்றில் அவர்களுடைய ஆய்வான யுரேனியத்தில் அணு உட்கருத் தொடர்வினை நிகழ்த்த அபரிமிதமான சக்தி மற்றும் ரேடியம் பேற் புதுவகைப் பொருட்கள் தேவைப்படுகிறது. என குறிப்பிட்டிருந்தார். அய்ன்ஸ்டீன் குறிப்பிட்டிருந்த ஆய்வானது அவர்களை அணுகுண்டு தயாரிப்பதற்கு இட்டுச் சென்றதும் அவ்வாறு தயாரிக்கப்பட்ட அணுகுண்டு 2 ஆகஸ்டு 1939 அன்று சப்பானிலுள்ள ஹிரோசிமா, நாகசாகி நகரங்களில் வீசப்பட்டு பல்லாயிரக்கணக்கில் மக்கள் பலியானதும் அப்பாவி மக்கள் சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்டதும் அனைவரும் அறிந்ததே.

இதுபோல இப்போது மேற்கொண்டிருக்கும் ஆய்வில் புதுவகையான பெரும் அழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களைக் கண்டுபிடிக்கவேண்டுமென்பது உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவின் போர் வெறிக் கனவு. இதன் மூலம் அனைத்து உலக நாடுகளையும் தனது காலடியில் கொண்டுவர வேண்டும் என்பது அமெரிக்கப் பேராசை.

பேராசைக்குத் தீனி போடும் விதமாக குவாண்டம் சக்தி (வெற்றிடச் சிதைவு நிகழ்ச்சி) என்பதான மந்திர வித்தை மூலம் பிராந்தியங்களை நாசமாக்கி மரியமாக்கும் (கருந்துளை) தன்மை படைத்ததாக நியூட்ரினோ/போசான் குண்டுகள் விளங்கலாம் என துகள் இயற்பியல் வல்லுநர்களால் கொள்கை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது ஆதாரமாக உள்ளது.

இவ்வாறாக நியூட்ரினோ ஆய்வு முக்கியத்துவம் பெற்றிருக்க நமக்குள் எழும் பின்வரும் சிந்தனைகள்/ அய்யங்கள்/ கேள்விகளைக் காண்போம்.

இப்போது ரூபாய் 60,000 கோடி மதிப்பிடக்கூடிய ஜெனீவாவில் இயங்கும் செர்ன் ஆய்வுக் கூடத்திலுள்ள பெரும் போது கலனின் செயல்பாட்டை மதிப்பிடவும், சோதிக்கவும், கண்காணிக்கவும் தனித்தன்மை கொண்ட சுதந்திரமான ஆய்வுமுறை மற்றும் ஆய்வமைப்புகள் இல்லாத நிலை மற்றும் மோதுகலன் நிறுவப்பட்ட 1998 இலிருந்தே சீரான செயல்பாடு இல்லை எனக் கூறப்படும் நிலை.

பிரபஞ்சம் உருவாகக் காரணமாக இருந்த பெரு வெடிப்புக் கொள்கையே இப்போது கேள்விக்குள்ளாகியுள்ள நிலை.

இவ்வாறான மேற்கூறப்பட்ட நிலைகளில் நியூட்ரினோ ஆய்வு ஒரு வெத்து வேட்டு ஆய்வா (Hulla bahoo research)?

இந்த வெத்து வேட்டு ஆய்வை ஆரவாரத்துடன் அலங்காரப்படுத்தி அவ்வாராய்ச்சி முகமூடியின் மூலம் கூடங்குளம் போன்ற இந்தியா மற்றும் ஆதிக்க நாடுகளின் அணுஉலைக் கதிர்வீச்சுக் கழிவுகளைப் பூமிக்கடியில் புதைப்பதற்கான புதைக்கூடமா?

குவாண்டம் சக்தி கொள்கை மூலம் தயாரிக்கப்பட்ட நியூட்ரினோ குண்டுகளை உலக நாட்டாண்மைக்கார நாடான அமெரிக்கா தனக்குப் பணிய மறுக்கும் நாடுகளை குவாண்டம் யுத்தம் (Quantum wars) என்ற புதுவகை நாசகரமான யுத்தங்களை மேற்கொள்ள வழிவகை செய்ய அமெரிக்காவிற்கு உதவும் அடிவருடிகளின் சேவைக் கூடமா? என்பதாக இருக்க தமிழகத்தில் நெய்தல், நிலப்பகுதியை கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகளால் கதிரியக்க நாசப்பகுதியாகவும் மருதநிலப்பகுதி ( தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம்) மீத்தேன் திட்டம் மூலம் வறண்ட பாலைவனப் பகுதியாகவும், குறிஞ்சி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி நியூட்ரினோ ஆய்வு என்பதாக கதிரியக்க கழிவுப் புதைகூடமாகவும் ஆக்கி தமிழ் மண்ணும் மக்களும் சூறையாடப்பட்டு பஞ்சை பராரியாக்கி தமிழ் மக்களை அகதிகளாக்கி துரத்தி தமிழ்நாட்டுக்கு சமாதி கட்ட வேண்டும் என்பதற்கான இந்து இந்தி மயமாக்கும் கபடத்தனமான இந்திய அரசின் குள்ளநரித் தந்திரத்தில் விளைந்த தமிழ் மக்களுக்கான பலிபீடங்களுள் ஒன்றுதான் தேனி பகுதியில் அமைய இருக்கும் நியூட்ரினோ ஆய்வுக்கூடம்.

Pin It

நிலம் கையகப்படுத்துதல் சட்ட வரலாறு:

ஆங்கிலேயர்கள் 1894 ஆம் ஆண்டுக் கொண்டு வந்த நிலச்சட்டத்தைத் தான் இந்தியா 2007 வரை பயன்படுத்தி வந்தது. எப்பொழுதெல்லாம் நிலம் கையகப்படுத்துதலில் பிரச்சனை ஏற்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் அதற்குத் தேவையான சிறு மாற்றங்களை மட்டும் அந்தச் சட்டத்தில் செய்து வந்தது அரசு. தொண்ணூறுகள் வரை இதில் பெரிய அளவில் பிரச்சனையில்லை, ஏனென்றால் அரசு மட்டுமே பெரிய அளவில் நிறுவனங்களைக் கொண்டிருந்தது. அரசுக்கு மட்டுமே பெரிய அளவில் நிலத்தேவை இருந்தது. இந்தச் சட்டத்தின் மிகமுக்கியமான பிரச்சனை நிலத்திற்குண்டான மதிப்பை விட மிகக்குறைவான தொகை வழங்கப்பட்டது, நிலத்தை இழப்பவர்களுக்கு உரிய மறு வாழ்வு பற்றியோ, மீள் குடியமர்வு பற்றியோ இந்தச் சட்டம் பேசவேயில்லை என்பதே. அதனால் நிலங்களை மட்டுமே நம்பி வாழ்ந்த பழங்குடி, பட்டியலின மக்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து பிடுங்கி வெளியேற்றப்பட்டனர். உள்நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் மக்களில் இவர்களின் எண்ணிக்கையே அதிகம். சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் இம்மக்களின் குரல் ஆளும் அதிகார வர்க்கத்திற்கு எட்டவேயில்லை.

1990ஆம் ஆண்டு முதல் இந்தியா தனியார்மயத்தைக் கொள்கையாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்தத் தொடங்கியது. இதற்குப் பின்னர் தனியாரும் நிலம் கையகப்படுத்தலில் கலந்து கொண்டதாலும், அரசு அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்ததாலும் நிலங்களை வைத்திருந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதிகரித்தன. இப்பொழுது சமூகத்தின் நடுத்தர வர்க்கமும் பாதிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துதலினால் பல இடங்களில் மோதல்கள் வெடித்தன. நர்மதா அணைக்கு எதிரான போராட்டம், நந்திகிராம், சிங்கூர், கலிங்கநகர், நியாம்கிரி போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. இது போன்ற போராட்டங்களின் விளைவாக அன்றிருந்த காங்கிரசு தலைமையிலான அரசிற்குப் புதிய சட்டத்தை வடிவமைக்க வேண்டிய தேவையேற்பட்டது.

tribes 400இதற்காக 2007 ஆம் ஆண்டும், 2009ஆம் ஆண்டும் இரண்டு பாராளுமன்ற கூட்டுக்குழுவை உருவாக்கியது, இந்த இரண்டு குழுவிற்கும் தலைமை வகித்தது பா.ஜ.கவினரே – முதல் குழுவிற்குக் கல்யாண் சிங்கும், இரண்டாவது குழுவிற்குச் சுமித்ரா மகாஜனும் (இன்றைய பாராளுமன்ற சபாநாயகர்) தலைமை வகித்தனர். 2013 ஆம் ஆண்டு இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொழுது அதை ஆதரித்துப் பா.ஜ.க வாக்களித்தது. இந்தச் சட்டம் வெறும் நிலத்தைக் கையகப்படுத்துதல் என்பதை மட்டும் பார்க்காமல், நிலத்தை விற்றவருக்கான மறு வாழ்வு, மீள் குடியமர்வு, அந்த நிலத்தை நம்பி பணிபுரியும் தொழிலாளர்களுக்கான இழப்பீடு, நிலம் கையகப்படுத்துதலினால் ஏற்படும் சமூகப் பாதிப்பு என விரிவாகப் பேசியது, மேலும் நிலத்திற்கான தொகையும் முன்பு போல் இல்லாமல் கிராமப்புற பகுதிகளில் சந்தை மதிப்பை விட நான்கு மடங்காகவும், நகர்ப்புற பகுதிகளில் சந்தை மதிப்பை விட இரண்டு மடங்கும் தர வேண்டும் என நிர்ணயத்துள்ளது. அன்று இந்த சட்டத்தை வடிவமைத்தில் தலைமை தாங்கி, ஆதரவளித்த பா.ஜ.க இன்று ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் வேலையாக அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து நீர்த்துப் போகச் செய்துள்ளது. எப்படி இனி விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன்னால் காங்கிரசு தான் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது , அதனால் அவர்கள் புனிதர்கள் என்ற பிம்பம் இங்கு உருவாக்கப்படுகின்றது. காங்கிரசு தானாகவே இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வரவில்லை, பல மாநிலங்களில் நடந்த மக்கள் போராட்டம், அதில் பலியான மக்களும் தான் இந்தச் சட்டம் வருவதற்குக்காரணமானவர்களேயன்றி காங்கிரசல்ல.

புதிய நிலம் கையகப்படுத்துதல் சட்டமும் – அதன் மீது பா.ஜ.க கொண்டு வந்துள்ள திருத்தங்களும்…

2013ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் பெரும்பான்மைத் திட்டங்கள் வந்தன. ஆனால் இன்று பா.ஜ.க அரசு மேற்கொண்டுள்ள திருத்ததில் பின்வரும் திட்டங்களுக்கு “சமூகப் பாதிப்பு ஆய்வு, விசாரணை” (Social Impact Assesment, Investigation) , “உணவு பாதுகாப்பிற்கான சிறப்பு ஏற்பாடு”, “நில உரிமையாளர்களிடம் இருந்து ஒப்புதல் பெறுதல்” (Consent from Land Owners) போன்ற பிரிவுகளிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

அ) தேசத்தின் பாதுகாப்புத் தொடர்பான திட்டங்களுக்கு
ஆ) கிராமப்புற கட்டமைப்புத் தொடர்பான திட்டங்களுக்கு (மின்னுற்பத்தி திட்டங்களையும் சேர்த்து)
இ) கட்டுப்படியாகும் வீட்டுமனை திட்டங்கள், ஏழை மக்களுக்கான வீட்டுமனைத்திட்டங்களுக்கு
ஈ) தொழிற்பாதைகள் தொடர்பான திட்டங்களுக்கு (எ.கா – சென்னையிலிருந்து பெங்களூர் வரை ஒரு தொழிற்பாதையாகும்)
உ) கட்டுமானப்பணிகள் தொடர்பான திட்டங்களுக்கு, இதில் அரசு-தனியார் கூட்டுத்திட்டங்களும் அடக்கம்.

இந்தத் திட்டங்களின் படி வகைப்படித்தினால் இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் பணிகளில் குறைந்த பட்சம் 90 விழுக்காடு பணிகளை இந்த ஐந்து திட்டங்களில் ஒன்றாக வகைப்படுத்தமுடியும். இதன் மூலம் இந்த 90 விழுக்காடு திட்டங்களுக்கான நிலக்கையகப்படுத்துதல் சட்டத்தின் முக்கியமான பிரிவுகளிலிருந்து விலக்களிக்கப்படுகின்றது. இதில் கட்டுப்படியாகும் வீட்டுமனை திட்டங்கள் என்பது மிகவும் கேலிக்கூத்தான ஒரு வாக்கியம், இது முழுக்க, முழுக்க டி.எல்.எஃப் போன்ற பெரிய வீட்டு மனை கட்டும் நிறுவனங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் கோடிக்கணக்கில், இலட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்களுக்கு எல்லாமே கட்டுப்படியாகும் வீட்டு மனைகள் தான். இனி விலக்களிக்கப்படும் பிரிவுகளை விரிவாகப் பார்ப்போம்.

சமூகப் பாதிப்பு ஆய்வு, விசாரணை:

ஒரு திட்டத்திற்குத் தேவையான நிலத்தை ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து கையகப்படுத்தும் பொழுது அந்தப் பகுதியில் அதனால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய வேண்டும். பாதிப்புகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்தத் திட்டம் கைவிடப்பட வேண்டும், அல்லது சமூகப் பாதிப்புகளைக் குறைக்கும் வண்ணம் திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்தப் பிரிவு வந்ததற்கான காரணம் – மேற்கு வங்கத்தின் நந்திகிராமிலும், சிங்கூரிலும், ஒரிசாவின் நியாம்கிரியிலும் போராட்டங்கள் வெடித்ததற்கான அடிப்படை காரணம் அந்தப் பகுதி முழுக்க அந்த நிலத்தைச் சார்ந்தே வாழ்ந்து வந்தன, அந்த நிலம் பறிக்கப்படும் பொழுது தங்களது வாழ்வாதாரம் முழுக்கப் பாதிக்கப்பட்டதால் மக்கள் அரசை எதிர்த்து போராடினார்கள். பின்னர் இந்தத் திட்டங்கள் பின்வாங்கப்பட்டன.

இன்று பா.ஜ.க இந்தப் பிரிவை 90 விழுக்காடு திட்டங்களுக்கு இரத்து செய்வதன் மூலம் அதிகமான நந்திகிராம்களையும், சிங்கூர்களையும், நியாம்கிரிகளை உருவாக்க முனைப்புக் கொண்டு வருகின்றது. சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரசு, சட்டம், ஒழுங்கை சீரழித்து மக்களை வன்முறையை நோக்கி தள்ளுகின்றது.

உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சிறப்பு ஏற்பாடு:

உணவுக்காக இந்தியா பிற நாடுகளிடம் கையேந்தாமல் இருப்பதற்காக இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது. காரணம் இன்னும் பெரும்பான்மை மக்கள் சார்ந்திருக்கும் தொழிலாக விவசாயமே உள்ளது. இந்தப் பிரிவின் மூலம் விளை நிலங்களை வாங்குவதற்குத் தடையிருந்தது. இன்று திருத்ததின் மூலம் இந்தப் பிரிவு 90 விழுக்காட்டிற்கும் அதிகமான திட்டங்களுக்குச் செல்லாது என அரசு சொல்லுகின்றது, வெளிப்படையாக எல்லாத் திட்டங்களுக்கும் விளை நிலங்களை கையகப்படுத்தலாம் எனச் சொல்கின்றது. சுதேசி பேசும் பா.ஜ.க அரசின் உண்மை முகம் இது தான். ஏற்கனவே சில உணவு பொருட்களுக்காக நாம் பிற நாடுகளையே சார்ந்துள்ளோம், அதை அதிகப்படுத்தி முழுக்க முழுக்க உணவுக்காக இனி இந்தியா மற்ற நாடுகளையே சார்ந்து வாழும் ஒட்டுண்ணியாகப் போகின்றது. ஏற்கனவே நகரமயமாக்கலின் ஒரு பகுதியாக விளைநிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறிவருகின்றன. தமிழகத்திலும் சரி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் சரி விவசாய நிலப்பரப்பு முன்பை விட வெகுவாகக் குறைந்து வருகின்றது என்பதை இங்கே நினைவு கூற வேண்டும். இதுமட்டுமின்றி முன்னரே கூறியது போல இன்றும் அதிக விழுக்காடு மக்கள் விவசாயத்தையே தொழிலாகக் கொண்டுள்ளனர், விவசாய நிலங்களைப் பறிப்பதன் மூலம், சுயமாகத் தொழில் செய்துவருபவர்களை, பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களில் தினக்கூலியாக மாற்றுகின்றது. மக்களின் தற்சார்பை பறிக்கின்றது.

நில உரிமையாளர்களின் ஒப்புதல் பெறுதல்:

2013 ஆம் ஆண்டுச் சட்டம் சில திட்டங்களுக்கு 70 விழுக்காடு, சில திட்டங்களுக்கு 80 விழுக்காடு நில உரிமையாளர்களின் ஒப்புதல் கட்டாயம் வேண்டும் எனச் சொல்கின்றது, இன்று பா.ஜ.க அரசு மேற்கொண்டுள்ள திருத்தத்தின் மூலம் நில உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமலேயே நிலங்களை அவர்களிடமிருந்து வாங்க முடியும். மேலே கூறியுள்ள இரண்டு திருத்தங்களுடன் இதையும் சேர்த்து பார்த்தால், விவசாயிடமிருந்து நிலத்தை அவரது ஒப்புதல் இல்லாமலேயே அரசு பிடுங்கி தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்க முடியும். அரசுக்கு தன் குடிமகன்கள் முக்கியமில்லை தனியார் நிறுவனங்களின் நலனே முக்கியம் என முகத்தில் அறைந்து கூறுகின்றது. நில உரிமையாளருக்கு நிலத்தின் மீதுள்ள அடிப்படை உரிமையைப் பறித்து முதலாளிகளின் கையில் கொடுக்கின்றது.

farmer 372

நிலங்களைக் கையகப்படுத்துதல் மற்ற நாடுகளிலும் நடந்து கொண்டு தானே இருக்கின்றன, ஏன் இந்தியாவில் மட்டும் அதைச் செய்தால் பிரச்சனையாகப் பார்க்கின்றீர்கள் எனக் கேட்கும் வாசகர்களுக்கு – மற்ற நாடுகளில் குடிமகன்களுக்கு உரிய சமூகப் பாதுகாப்பு உண்டு, அரசே பல நாடுகளில் கல்வி, மருத்துவம் போன்றவற்றை இலவசமாகக் கொடுக்கின்றது, சில நாடுகளில் வேலை இல்லாதவர்களுக்கு அரசே மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்கி வருகின்றது. ஆனால் நம் நாட்டில் இன்று இருக்கும் கொஞ்ச நஞ்ச சமூகப் பாதுகாப்புகளும் பறிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அவனிடம் கடைசியாக இருக்கும் நிலத்தையும் பறிப்பதன் மூலம் மக்களை அரசு வெறும் கூலிகளாக மட்டுமே வாழுங்கள் எனச் சொல்லாமல் சொல்கின்றது.

மேலும் சில திருத்தங்கள்…

இதுமட்டுமின்றி மேலும் சில திருத்தங்களையும் புதிய சட்டம் மூலம் பா.ஜ.க அரசு செய்துள்ளது. முந்தைய சட்டத்தில் அரசு அதிகாரிகள் தவறிழைத்தால் அந்தத் துறையின் தலைமை நிர்வாகி தண்டிக்கப்படுவார் என இருந்தது இன்று அதை மாற்றி அரசு அதிகாரிகள் தவறிழைத்தால் அந்தந்த அரசின் – மத்திய,மாநில அரசுகளின் அனுமதியில்லாமல் வழக்கே பதியக்கூடாது எனச் சொல்கின்றது. தவறிழைக்கச் சொல்வதே அரசு தான் எனும் பொழுது, தவறிழைக்கும் அதிகாரியின் மீது வழக்குத் தொடுக்க அரசு அனுமதிக்கும் என எண்ணுவது “பாலுக்குப் பூனையைக் காவலாக நிறுத்துவதற்கு” ஒப்பானது.

முந்தைய சட்டத்தில் நிலம் கையகப்படுத்தி ஐந்து ஆண்டுகள் ஆகியும் எந்தப் பணியும் தொடங்காமல் இருந்தால் நிலம் அதன் உரிமையாளருக்கே திரும்பகொடுக்கப்பட வேண்டும் எனக்கூறுகின்றது, இதை அந்தத் திட்டக்காலம் முடியும் வரை என மாற்றியுள்ளது, ஏன் இப்படி மாற்றியுள்ளார்கள். சென்ற ஆண்டு நவம்பர் மாதம் பாரளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்காளரின் அறிக்கைப்படி “சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக” (SEZ) கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் 38 விழுக்காடு இன்னும் பயன்படுத்தப்படவேயில்லை என்கிறது. 2006 ஆண்டு அம்பானி நவி மும்பை சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காகக் கையகப்படுத்திய 1250 ஏக்கரையும் இன்னும் பயன்படுத்தாமல் அப்படியே வைத்துள்ளார், அதே போல அதானிக்கு சல்லிசான விலைக்கு வழங்கிய வனப்பகுதியும் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இப்படி நிலங்களை வாங்குவதன் மூலம் வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ளும் நிறுவனங்கள், அவற்றைப் பயன்படுத்தாமல் தங்களது விருப்பம் போலச் செயற்படவே இந்தத் திருத்ததை அரசு மேற்கொண்டுள்ளது.

முந்தைய சட்டத்தைத் திருத்தும் ஒவ்வொரு முறையும் அந்தத் திருத்தம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, வெற்றி பெற்ற பிறகே அமல்படுத்த வேண்டும் என்ற பகுதியை ஒட்டுமொத்தமாக இந்தத் திருத்ததில் நீக்கியுள்ளார்கள். இனி இங்குச் சர்வாதிகாரம் மட்டுமே சனநாயகமல்ல என மக்களுக்கு இதன் மூலம் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தெரிவிக்கின்றது.

தமிழகமும் – நிலம் கையகப்படுத்துதல் சட்டமும்

தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க இருக்கும் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனம், ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் போது தமிழக அரசு இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமலே நிலத்தைப் பறித்துத் தனியார் கையில் கொடுக்கும் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். அது மட்டுமின்றிக் கெயில் எரிவாயுக்குழாய் திட்டமும் விவசாயிகளின் நிலங்களின் ஊடே மீண்டும் வரக்கூடும். தொழில் வளர்ச்சியை அதிகப்படுத்த இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும், மற்ற மாநிலத்துடன் போட்டி போட்டு வருகின்றது, அதனால் வரும் தொழிற்சாலைகளுக்கு அனைத்து சலுகைகளையும் அவர்கள் அளிக்கின்றன, அப்படித் தமிழகத்திற்கு வரும் பெரும் திட்டங்களுக்கு அரசு நிலத்தைப் பறித்துத் தருவதற்கு இந்தச் சட்டம் அவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும், போராடும் மக்களைத் தாக்க காவல்துறை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் பயன்படுத்தப்படும்.

இந்த சட்டத்தைப் பற்றி சுருங்க கூறின் “தனியார் முதலாளிகள் தங்களுக்கு விருப்பமான நிலங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டு, தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளுதல்”. மோடி சொன்ன வளர்ச்சியும் , நல்ல காலமும் (அச்சே தீன்) முதலாளிகளுக்கு மட்டுமே என மோடியும், அவரது அரசும் திரும்ப, திரும்பக் கூறிவருகின்றது, நாம் தான் புரிந்து கொள்ள மறுக்கின்றோம்.

“பணக்காரர்கள் சட்டத்தை ஆளுகின்றனர்
சட்டம் ஏழைகளை ஆளுகின்றது”

- ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌

Pin It

கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி மோடி தனது நாடாளுமன்ற உரையில் கருப்புப்பணம், நிலம் கையப்படுத்தல் சட்டம், மதங்களுக்கிடையே நல்லிணக்கம் என பல்வேறு பிரச்சினைகளைப் பற்றிப் பேசினார். இதில் முதல் இரண்டு விஷயங்கள், பல்வேறு தரப்பினரால், வெவ்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருகின்றன‌. அவருடைய மதம் குறித்த கருத்துகள் மட்டும் பரவலாக விவாதிக்கப்படவில்லை. அல்லது நாட்டின் முதன்மையான சிக்கல்களின் பட்டியலுக்குள் கொண்டு வரப்படவில்லை.

modi 241"முதன்மை இந்தியா என்பதே எனது மதம். அரசியலைமைப்புச் சட்டமே எனது புனித நூல். அனைவருக்கும் நலன் என்பதே எனது வழிபாடு" என்று உணர்ச்சி மேலிட மோடி தனது நாடாளுமன்ற உரையில் தெரிவித்தார். "இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு" என்று பேசுவது வேறு. ‘இந்தியாவே எனது மதம்’ என்று அறிவிப்பது வேறு. முதலாவது கருத்து, மதச்சார்பற்ற ச‌னநாயகத்தை வலியுறுத்துகின்ற நவீன மதச்சார்பின்மை குறித்த முழுமையான சனநாயக கோட்பாடு. இரண்டாவது கருத்தான "இந்தியாவே எனது மதம்" என்று அறிவிப்பது மூலம், (இந்தியா =இந்து மதம்) இந்து மதமே எனது மதம் என்ற கொள்கையை மறைமுகமாக மோடி வந்தடைகிறார். அதாவது, மதம் அரசியலிலிருந்தும் அரசின் கட்டுப்பாட்டிலிருந்தும் தனியே பிரிக்கப்பட வேண்டும். மேலும் மதம் என்பது தனிநபரின் இறை வழிபாட்டுரிமையோடு தொடர்புடைய பிரச்சினையாகக் கருத வேண்டும் என்கிற மதச்சார்பின்மை குறித்த நவீன கருத்தாக்கத்தை முழுமையாக த‌ள்ளுப‌டி செய்கிறார் மோடி.

1939 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இன் முக்கிய‌ த‌லைவ‌ர்க‌ளில் ஒருவரான‌ எம்.எஸ். கோல்வால்க‌ர் எழுதிய‌ "நாம் அல்ல‌து வ‌ரைய‌றுக்கப்ப‌ட்ட‌ ந‌ம் தேச‌ம்" (We and Our nationhood defined) என்கிற‌ நூலில் ம‌த‌ம் அர‌சிய‌ல் குறித்த‌ த‌ன‌து க‌ருத்துக‌ளைப் பின்வ‌ருமாறு ப‌திவு செய்கிறார்.

"ம‌த‌ம் த‌னிப்ப‌ட்ட‌வ‌ரின் பிர‌ச்சினை என்று ஒப்புக் கொள்ள‌ வேண்டும் என்றும் அத‌ற்கு பொதுவாழ்விலும் அர‌சிய‌ல் வாழ்விலும் இட‌மில்லை என்றும் பொதுவான‌ போக்கு இருக்கிற‌து. இந்த‌ப் போக்கு ம‌த‌ம் குறித்த‌ த‌வ‌றான‌ த‌ப்பெண்ண‌த்தின் அடிப்ப‌டையில் அமைந்த‌தாகும். சொல்லிக் கொள்ள‌க் கூடிய‌ அள‌விற்கு ம‌த‌த்தைப் புரிந்து கொள்ளாத‌ ம‌க்க‌ளாலேயே இவ்வாறு கூற‌ப்படுகிற‌து ( 1939, ப‌க்க‌ம் 23 )" என்று வ‌ரைய‌றுக்கும் கோல்வால்க‌ர், அத்த‌கைய‌ உய‌ரிய‌ ம‌த‌மாக‌ இந்து ம‌த‌த்தையே நிறுவ‌ முய‌லுகிறார். "இத்த‌கைய‌ ம‌த‌த்தை இந்த‌ அளவிற்கு உய‌ர்ந்த‌ இட‌த்தை வேறெந்த‌ ம‌த‌மும் பெற‌ முடியாது. த‌னிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாலோ அல்ல‌து பொதுவாழ்விலோ புற‌க்க‌ணிக்க‌ முடியாத‌து. க‌ணிச‌மான‌ அள‌விற்கு அர‌சிய‌லிலும் அத‌ற்கு இட‌மிருக்க‌ வேண்டும். உண்மையில், ம‌த‌த்துட‌ன் ஒப்பிடுகையில் அர‌சிய‌லே ஒரு சிறிய‌ கார‌ணியாக‌ மாறி விடுகிற‌து. என‌வே அது ம‌த‌த்தின் க‌ட்ட‌ளைக் கிண‌ங்க‌ செய‌ல்ப‌ட‌க்கூடிய‌ ஒன்றாக‌வும் பின்ப‌ற்றப்ப‌ட வேண்டும் (1939, ப‌க்க‌ம் 23 )" இந்தப் பின்னணியிலிருந்தே மோடியின் கருத்துகளை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரசியலைப் பொருத்த‌வரை முழுமையான மதச்சார்பின்மை, சர்வ மதம் - மத நல்லிணக்கம் ஆகிய இரண்டு வேறுபட்ட கருத்தோட்டங்கள் இந்தியாவில் நிலவுகின்றன. 1931 ஆம் ஆண்டு கராச்சி நகரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரசு மாநாடு, ”விடுதலை பெற்ற இந்தியா என்பது மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாகத் திகழும்” என அறிவித்தது. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு எதிர் கருத்தாக இது முன் வைக்கப்பட்டாலும், "மதங்களுடைக்கிடையே நல்லிணக்கம்" என்ற கருத்தையே காங்கிரசு நடைமுறைப்படுத்தியது. ஜவகர்லால் நேரு தொடங்கி, சோனியா ராகுல் காந்தி வரை சர்வ மத வழிபாடுகளில் கலந்து கொள்வதும், தொப்பி அணிவதும், சாந்து பொட்டு வைத்துக் கொள்வதும் என அரசியலில் இருந்து மதம் தனியே இல்லை என்பதையே அவர்கள் பறைசாற்றி வந்துள்ளனர். அக்பர் உருவாக்கிய தீன் ஹிலாயி மதத்தைக் கூட இங்கு நினைவு கூற‌லாம். காந்தி வலியுறுத்திய "சகிப்புத் தன்மை" யையும் இவ்வாறாகவே புரிந்து கொள்ளலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், மதங்கள் அரசியலில் இருந்துதான் ஆக வேண்டும். வேண்டுமானால் சகிப்புத் தன்மையையும் நல்லிணக்கத்தையும் பேணிக் கொள்ளுங்கள் என்பது தான் இதன் உட்கருத்து. வெவ்வேறு நம்பிக்கைகளையும் கருத்தோட்டங்களையும் கொண்டிருக்கும் மதங்களுக்கிடையே ஒரு போதும் நல்லிணக்கம் சாத்தியமாக முடியாது. வெவ்வேறு மதங்களைப் பின்பற்றும் மக்களிடையே மட்டும் தான் நல்லிணக்கம் சாத்தியமாக முடியும்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் "நாட்டின் வளர்ச்சிக்கு இந்து முசுலிம் ஒற்றுமை" அவசியம் என இப்போது திருவாய் மலர்ந்திருக்கிறார். மோடி பதவியேற்ற ஒன்பது மாதங்களில், மதச்சிறுபான்மையினரின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை நடவடிக்கைகளைக் கொஞ்சம் கணக்கில் எடுத்துக் கொண்டாலே, அவர் பேசும் இந்து முசுலிம் ஒற்றுமையைக் கொண்டு வர எப்பாடு பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது புரியும். சாத்வி நிரஞ்சம் ஜோதி என்கிற பா.ஜ.க அமைச்சரான பெண் துறவி, “இசுலாமியர்கள் கிறித்தவர்கள் அனைவரும் தகாத முறையில் பிறந்தவர்கள்” என வெறுப்பை உமிழ்கிறார்.”இந்து ஆண்கள் இசுலாமிய பெண்களை வன்புணர வேண்டும்” என யோகி ஆதித்யநாத் சிங் என்ற மற்றொரு பா.ஜ.க உறுப்பினர் கருத்து தெரிவிக்கிறார். மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டிருக்கிறது. இசுலாமியர்களுக்கு தரப்பட்டு வந்த 5% இட ஒதுக்கீடு நீக்கப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் இசுலாமியர்கள், கிறித்துவர்கள் மீதான தாக்குதல்களும் வன்கலவரங்களும் அதிகமாகியிருக்கின்றன. நாட்டின் தலைநகரான தில்லியிலேயே தேவாலயங்கள் தீ வைத்துக் கொளுத்தப்படுகின்றன. மேற்கு வங்கத்தில் 71 வயது கிறித்துவ பெண்துறவி, இந்துத்துவ வெறியர்களால் பாலியல் வன்புணர்வுக்கு இரையாகிருக்கிறார்.

இப்படியான வன்கலவரங்கள், வெறுப்புப் பேச்சுகள் என அனைத்தையும்( 99% ) குறித்து எந்த கண்டனமும் தெரிவிக்காமல் நரேந்திர மோடி அமைதி காத்திருக்கிறார். "இஸ்லாமியர்கள், கிறுத்துவர்கள் தகாத முறையில் பிறந்தவர்கள்" என்ற கருத்தில் மட்டும், "சாத்வி கிராமப் பின்னணியிலிருந்து வந்ததால் அப்படி பேசி விட்டார். மன்னிப்பு கேட்டு விட்டார். விட்டு விடுங்கள்" என்று சட்டையில் விழுந்த காக்காய் எச்சத்தைக் கழுவுவதைப் போல தட்டி விட்டார். எந்த சம்பவத்தையும் கண்டிக்கவில்லை என்பதல்ல குற்றச்சாட்டு. இந்த வெறுப்புப் பேச்சுக்களின் அடியாழத்தில் இருக்கும் கருத்தியல் அனைத்தையும் மோடி ஏற்றுக் கொண்டே இருக்கிறார். ஆகவே மோடியின் ஆட்சியமைப்புக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் தடையாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு அபத்தமானது. மோடி என்பவர் ஆர்.எஸ்.எஸ் எனும் பயங்கரவாத அமைப்பு சாவி கொடுத்து இயக்கும் ஒரு பொம்மை. குழந்தைகள் பொம்மைகளை வைத்து விளையாடும். சாவி கொடுக்கும். தேவைப்பட்டால் தூக்கிப் போட்டு கூட உடைக்கும். ஆனால் தவறி கூட பொம்மையால் குழந்தைகளைக் கட்டுப்படுத்த முடியாது.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற சனநாயக சோசலிசக் குடியரசு என்று அரசமைப்பில் இருந்தாலும், இந்திய அரசின் மதச்சார்பின்மை வரலாறு முழுதும் கேள்விக்குட்பட்டே வந்திருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்ற சம்பவங்கள் அவ்வப்பொழுது இதை நமக்கு உணர்த்தியிருக்கின்றன. கடவுள் நம்பிக்கையோடு, இந்து மத பழக்க வழக்கங்களையே பேணி வந்த காந்தி, இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தினார் என்ற ஒரு காரணத்திற்காகவும் சுட்டுக் கொல்லப்பட்டார். ”காந்தியின் கொலை” என்பது சதி வலைப்பின்னல்களோடு கூடிய குழு நடவடிக்கை மட்டுமே. ஆனால் 1991 ஆம் ஆண்டு பாபர் மசுதி இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட நிகழ்வை அப்படியொரு குழு நடவடிக்கையாகப் பார்க்க முடியாது. இரண்டு லட்சம் சங்க பரிவாரங்கள் பங்கேற்ற வெகுமக்கள் நடவடிக்கை அது. ஆளும் அரசு, காவல்துறை, இராணுவம் என அரசு எந்திரத்தின் அனைத்து உறுப்புகளும் இச்செயலை வேடிக்கை பார்த்ததோடு, முழு ஒத்துழைப்பையும் அளித்தது.

மோடியின் தலைமையில் நடைபெற்ற 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட‌ முசுலிம்கள், பெண்கள் குழந்தைகளென பாராமல் கொடூரமாக கொல்லப்பட்டனர். பாபர் மசுதியை இடித்தது போல இதுவும் அப்படியான வெகுமக்கள் பங்கேற்ற ஒரு நிகழ்வு தான். முக ஒப்பனைகளோடும் வண்ணப் பூச்சுகளோடும் அதுவரை வேடமிட்டு வந்து இந்திய அரசின் போலி மதச்சார்பின்மைச் சாயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்கத் தொடங்கி விட்டிருந்தன. இப்போது ஒன்பது மாத கால மோடி ஆட்சியின் கீழ், இந்துத்துவ அரசியலை வெளிப்படையாக முன் வைக்கும் இந்திய அரசின் முழுப்பரிமாணத்தையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 67 ஆண்டுகள் இந்திய அரசின் முகம் பல குறுக்குவெட்டுகளில் புலப்பட்டாலும் இப்போது தெரிவதுதான் அதன் தெளிந்த வடிவம். இந்திய அரசியலில் மதச்சார்பின்மையை உயர்த்தி பிடிக்கும் நீரோட்டத்தின் உண்மையான வலிமை இனிமேல்தான் தெரியப் போகிறது. வாக்கு அரசியலுக்காக மட்டும் மதச்சார்பின்மை பேசி வருபவர்கள் இந்த சுற்றில் அத்தனை எளிதாக இந்துத்துவ ஆற்றல்களை எதிர்கொண்டு விட முடியாது. மதச் சார்பின்மையையும் மக்கள் சனநாயகத்தையும் அதன் உள்ளார்ந்த பொருளில் புரிந்து கொண்ட ஆற்றல்களால் தான் இந்த சூழலை எதிர்கொள்ள முடியும். மோடியின் முகமூடிகளைக் கிழித்தெறிய முடியும்.

Pin It