1. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அதிமுக ஆதரித்தது குறித்து கலைஞரும் ஜெயலலிதாவும் மாறி மாறி அறிக்கைப் போர் நடத்துவது பற்றி?

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுபடுவதற்காக நாடாளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அதிமுக ஆதரிப்பதாக ஊடகங்களும் கருணாநிதி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து சொல்லி வருகின்றனர். இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை வழக்கினுடைய மேல் முறையீட்டுத் தீர்ப்பைப் பொருத்துத்தான் நாம் உறுதிப்படுத்த முடியும். ஆனால், கொள்கை அளவிலே கூட அதிமுக இந்த சட்டத்தை ஆதரிப்பதில் எந்த வியப்பும் நமக்கு இல்லை. ஜெயலலிதாவை சாடி விட்டு அன்னா அசாரேவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் கருணாநிதிக்கும்கூட இந்த அவசர சட்டத்தில் கொள்கை அளவில் மாறுபாடு இருக்க வாய்ப்பில்லை. ஏனென்று சொன்னால், விவசாயிகளிடம் இருந்து நிலத்தைக் கையகப்படுத்தி பெருமுதலாளிகளுக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும் வழங்குவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டவர்கள்தான் இரு கழகத்தின் தலைவர்களும் அவர்தம் ஆட்சிகளும்.

நில வள வங்கியை உருவாக்கி நிறைய நிலங்களைக் கையகப்படுத்தி வைத்திருக்கின்றது தமிழக அரசு. விவசாயம் சாராத பயன்பாட்டிற்காகப் பல இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்களைத் ’தரிசு நிலம்’ என்ற பெயரில் மாற்றியவர்களும் இவர்களே. நந்திகிராம் போல நிலத்திற்கான போராட்டம் பெரிய அளவில் தமிழகத்தில் எழாததற்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நிலவள வங்கியில் வைத்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிப்பதுகூட ஒரு காரணம். 1,70,000 ஏக்கர் வளமான தஞ்சை நிலம் மீத்தேன் திட்டத்திற்கு ஒதுக்கும் போது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, ஐம்பதிற்கும் மேற்பட்ட அனல்மின் நிலையங்களுக்கும் சிறு துறைமுகங்களுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது இந்த இரு கட்சியின் தலைவர்களுமே. அதற்கு நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுத்தது இரு கட்சிகளின் உள்ளூர் குண்டர்களும் கொள்ளையர்களும்தான்.

உழுதவன் கணக்குப் பார்த்தா உலக்குகூட மிஞ்சாதுங்கிறது பழைய மொழி. இன்று அவன் கோவணத் துண்டு நிலத்தையும் உருவுறதுன்னு முடிவு செஞ்சுறுச்சு இந்த கொள்ளைக் கூட்டம். இதில் அறிக்கைப் போர் வேற.

2. பெங்களூரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி கொலை செய்யப்பட்டது எதை காட்டுகிறது?

சகாயம் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வருகிறது. வேளாண் துறை அதிகாரி முத்துக்குமாரசாமி அதிமுக அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தியால் மிரட்டப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்பட்டார். மணல் மாஃபியாக்கள் வருவாய் துறை அதிகாரிகள் பலரை லாரியால் ஏற்றி கொலை செய்துள்ளனர். சத்யேந்திர துபே என்ற நெடுஞ்சாலை துறை அதிகாரி பீகாரில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இவை அனைத்தும் சமீபகாலமாக அதிகார வர்க்கத்தில் நேர்மைக்குப் பெயர் போன அதிகாரிகள் எவ்வாறு கிரிமினல் மயமான அரசியல் மாஃபியாக்களால் நடத்தப் படுகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாகக் காட்டுகிறது. இது மட்டுமின்றி கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள், தமிழகத்தில் தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜன், கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பழனிச்சாமி, ஆற்று மணல் கொள்ளையன் ஆறுமுகச்சாமி போன்றோரெல்லாம் ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிழல் அரசாங்கத்தில் தலையிடுகின்ற யாவருமே கொல்லப்படுகின்றனர். இதில் அதிகாரிகளும் ஒருவகைப் பிரிவினர். நடுத்தர வர்க்க மனப்பான்மையோடு, தான் நல்லது செய்தால் நாட்டை மாற்றிவிட முடியும் என்று நம்புகின்ற இவர்களால் நாட்டின் உண்மையான அரசியல் பொருளாதாரம், நிர்வாகம் இந்த கொள்ளையர்களால்தான் நடத்தப்படுகிறது என்ற அரசியல் சூட்சமத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. உலகமயப் பொருளாதாரக் கொள்கையில் பயனடையும் பெரும்பிரிவினரின் மூலதனத் திரட்டலுக்கான அடிப்படையே நாட்டின் பொதுச் சொத்தையும் இயற்கை வளத்தையும் கொள்ளை அடிப்பதுதான். இதற்கு உடன்படிக்கையான ஓர் அரசியல்தான் கார்ப்பரேட் மயமான கிரிமினல் மயமான மாஃபியா அரசியல். இதை வழிநடத்துபவர்கள் மூன்று முக்கியப் பிரிவினர் - பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், ஊழல் ஆளும் வர்க்க அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம். இவர்களை எதிர்த்துப் போராடுவதன் ஊடாகத்தான் இது போன்ற கொலகளைத் தடுத்து நிறுத்த முடியும். நாட்டின் பொருளாதாரத்தையும் இந்த கிரிமினல் கூட்டத்திடம் இருந்து மீட்க முடியும்.

3. ”இந்தியாவின் மகள்” ஆவணப்படத்தைத் தடை செய்தது பற்றி?

நிர்பயாவின்(பயமற்றவள்) மீது ஆணாதிக்கத்தின் கோழைத்தனமான ஒரு கூட்டு வன்முறை, சிதைக்கப்பட்ட குற்றுயிரும் குலை உயிருமான அந்த உடலும் ஆன்மாவும் தட்டி எழுப்பிய ஆயிரக்கணக்கான மக்களின் கோப உணர்வு தில்லி அதிகார வர்க்கத்தின் மீது பெரும் புயலாய் வீசி சென்றது. அந்த வன்முறை சமூகத்தின் மீது உண்டாக்கிய அச்ச உணர்வு பற்றியோ சனநாயக உணர்வு கொண்ட மக்களின் கோபம் பற்றியோ அக்கறை கொள்ளாத அரசுகள் குறிப்பாக காவி கட்சி இந்தப் படத்தைத் தடை செய்வது குறித்து அவமான உணர்வோடு ஓர் அவசரத்தைக் காட்டியது. அந்த வன்முறை இச்சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டியதைவிட இக்குற்றவாளிகள் சொல்லுகின்ற குற்றத்திற்கான நியாயக் கூற்றுகள் இந்துச் சாதிய சமூகத்தின் அவமானகரமான ஆணாதிக்கத் தர்க்கத்தை நிர்வாணமாகத் திரையிட்டது, தாங்கள் பல சமயத்தில் நாடாளுமன்றத்திலும் அரசியல் கூட்டங்களிலும் பேசியதையே இக்குற்றவாளிகள் எளிமையான வார்த்தைகளில் கதையாக சொல்லியிருக்கிறார்களே என்று இந்துத்துவ சக்திகளைக் கலக்கம் அடையச் செய்தது.

இன்னொருபுறம், தில்லிப் போராட்டத்தில் பங்கேற்றவர்களும் சனநாயக சக்திகளும் ஆவணப் படத்தில் பேட்டி கொடுத்திருந்த கவிதா கிருஷ்ணன் போன்ற இடதுசாரித் தலைவர்களும் இப்படம் குறித்து தங்கள் விமர்சனங்களைப் பதிவு செய்துள்ளனர். மேற்கத்திய ஊடகங்கள் இது பற்றி பரபரப்பாக பேசினாலும் இந்த வன்முறைகளுக்கு பின்னணியில் உள்ள சாதி, மத, வர்க்க, உலகமயச் சிக்கல்கள் பற்றிய அவர்களுக்குப் போதிய புரிதல் இல்லை, திகார் சிறைக்குள் சென்று குற்றவாளியிடம் பேட்டி எடுக்க ஆவணப்படத்தின் இயக்குனர் லெஸ்லி உட்வினுக்கு எப்படி அனுமதி கிடைத்தது?, அடித்தட்டு மக்களுடைய சேரி வாழ்க்கையின் நெருக்கடிகளை இந்த பாலியல் வன்முறைக்கான காரணம் போல் காட்டுவது போன்ற சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். இவற்றின் நியாயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.

4. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு, அமைதி நிலை பெற,காப்பாற்றப்பட ஒரு பெரும் புரட்சி தேவை என திமுக தலைவர் கலைஞர் கூறியிருப்பது பற்றி?

அதிமுக அமைச்சர்களின் அதிகாரிகளின் மீதான அச்சுறுத்தல்கள் , கொலை , கொள்ளைப் பாலியல் வன்முறை போன்ற சம்பவங்களில் பதிவான குற்றங்களின் எண்ணிக்கையைக் காரணம் காட்டி வழக்கம் போல் சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் கிளப்பியிருக்கிறார் கருணாநிதி. உண்மைதான். ஆனால், இதை மாற்ற புரட்சி தேவை என்று அவர் கூறியிருப்பதைப் பார்த்தால் புரட்சி என்றால் ’புய்பம்’ என்று அவர் கருதுகிறாரோ என்று படுகிறது.

மத்திய பா.ச.க. அரசின் பாசிச ஆட்சியும் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு பல்லக்குத் தூக்கிக் கொண்டிருக்கும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு தரப்பும்தான் இன்று நிலவும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம். டாஸ்மாக், ஊழல், சாதி மத வெறிப் பாசிசம், உலகமயம் – இயற்கை வளக் கொள்ளை, மாநில உரிமைப் பறிப்பு என்ற தமிழகத்தைச் சூழ்ந்துள்ள ஐந்து தீமைகளுக்கும் இவ்விரண்டு கட்சிகளும் பொறுப்பாகும் இவ்விரண்டு தரப்பும் மக்கள் ஆதரவை இழந்து வரும் வேளையில் ’எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளியைக் கொண்டு தலை சொரிவது என்ற பழைய கதை உதவாது. உண்மையான புரட்சி என்பது தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் அப்புறப்படுத்துவதுதான் என்று மக்களிடம் நாம் கொண்டு சொல்ல வேண்டும்.

Pin It