முதன்முறையாக மராட்டிய மாநிலத்தில் பதவியேற்றுள்ள பா.ச.க. அரசு மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்துள்ளது. முன்னரே அரியானா மாநிலத்தில் 2001ல் இறந்த பசு மாட்டின் தோலை 4 தலித்துகள் உரித்தார்கள் என்பதற்காக அவர்களை உயிரோடு கொளுத்தியது சங் பரிவார் கும்பல். அப்போது மனித உயிர்களைவிட மாடு முக்கியமா? என்று கேட்டதற்கு “ஆம், சந்தேகமே வேண்டாம். உண்மையான ஒரு இந்துவுக்கு மனிதனைவிட பசுதான் முக்கியம்...” என்று பதில் கூறினான் அரியானா மாநிலத்தின் முக்கிய சங் பரிவாரத் தலைவன்.

ஆனால், இவர்கள் அடுத்தடுத்து தனியார்வசம் ஒப்படைக்கத் துடிக்கும் காப்பீட்டுத்துறை, நிலக்கரி எரிபொருள் துறை, இராணுவ தளவாடத்துறை ஆகிய அனைத்தும் தனியார்வசம் போய்விட்டால் பாதிக்கப்படப்போவது யார்? தொழிலாளர்கள் நலச் சட்டங்களைத் திருத்தி தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பினால் அதில் பெரும்பான்மையினர் யாராக இருக்கப் போகிறார்கள்? சமையல் எரிவாயு, டீசல் போன்ற அன்றாட பொருட்களின் மானியத்தைக் குறைத்து விலையைக் கூட்டினால் அதனால் அதிகம் பாதிப்படையப் போவது யார்? விவசாயிகளுக்கு தரப்பட்டு வரும் அனைத்து மானியங்களையும் ரத்து செய்துவிட்டு விவசாயத்தையும், நிலத்தையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் தெருவில் நிற்கப் போவதில் பெரும்பாலோர் யார்? இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில் “இந்துக்கள்” தான். இந்துக்கள் என்று மோடி கும்பல் கூறுவது பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் இந்துக்களையோ, அன்றாடம் செத்துப் பிழைக்கும் மத்திய தர வர்க்க இந்துக்களையோ அல்ல. மாறாக இந்துக்களில் பெரும் பணக்காரர்களைத்தான் என்பது மேலும் மேலும் தெளிவாகிக் கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் தமிழக அரசின் நிலைமை மேலும் மேலும் பரிதாபமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஒரு பினாமி அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குழப்பத்தில் அ.தி.மு.க. மூழ்கியுள்ளது. அதே சமயத்தில் தி.மு.க.வும் கடும்தேக்கத்தில் உள்ளது. ஒரு பெரிய வெற்றிடம் தமிழகத்தில் உருவாகி இருக்கிறது. இந்த வெற்றிடத்தை இடதுசாரிகளும் சனநாயக சக்திகளும் தான் நிரப்பியிருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை சாதிய சக்திகளும் மதவாத சக்திகளும் தான் நிரப்பிக் கொண்டிருக்கின்றன. இடது சாரிகளும் சனநாயக சக்திகளும் தங்களது சிறுசிறு வேறுபாடுகளைக் களைந்து மக்களுக்காக ஒன்றுபட வேண்டிய தருணமிது. எந்தவொரு அரசியல் வெற்றியும் சரியான தருணத்தில் செயல்படுவதில்தான் உள்ளது.

Pin It