மஸ்ரத் ஆலம் காசுமீர் விடுதலைக்காக போராடிவரும் முஸ்லிம் லீக்கின் தலைவர்களில் ஒருவர், 2010 ஆம் ஆண்டு மக்களின் தன்னெழுச்சியான கல்லெறி போராட்டங்கள் நடைபெற்ற பொழுது, அதை தூண்டி விடுகின்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் "பொது பாதுகாப்புச் சட்டத்தின்" (Public Security Act) கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர், அதன் பின்னர் அதாவது அவர் சிறையில் இருந்து பொழுது அவர் மேல் இது வரை 14 முறை பல வழக்குகள் பதிவு செய்துள்ளது காசுமீர் அரசு. அதில் பல பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருகின்றன.

masrath aalam"பொது பாதுகாப்புச் சட்டம்" என்பது நம்மூர் "தடா", "பொடா" போன்ற அடக்குமுறைச் சட்டத்தின் வழிவந்த சட்டமாகும். இந்த சட்டத்தின்கீழ் குற்றம் சாட்ட எந்தவொரு ஆதாரமும் தேவையில்லை, ஒருவர் வெளியில் இருந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்பது போன்ற வெறும் அனுமானத்தின் அடிப்படையிலேயே கைது செய்ய முடியும். இப்படித் தான் மஸ்ரத் ஆலமும் கைது செய்யப்பட்டார். இப்படி கைது செய்யப்படுபவர்களை ஆறு மாத காலம் மட்டுமே சிறையில் வைத்திருக்க முடியும், மேலும் ஒருவர் மேல் இரண்டு முறை தான் இச்சட்டம் பிரயோகப்படுத்த முடியும். ஆனால் மஸ்ரத் ஆலம் மீது பலமுறை இந்த சட்டத்தைப் பயன்படுத்தி விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளது காசுமீர் அரசு.

2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று மூன்று பாகிசுதான் தீவிரவாதிகளைக் கொன்று விட்டதாக இராணுவம் கூறியது, பின்னர் நடந்த விசாரணையில் குப்வாரா மாவட்டத்தில் வாழ்ந்த காசுமீரி இளைஞர்களை ”வேலை தருகின்றோம்” என ஏமாற்றி அழைத்துச் சென்று சுட்டுக்கொல்வது தெரிய வந்தது, இதனையடுத்து இராணுவத்தைக் காசுமீரைவிட்டு வெளியேறிக்கோரி இளைஞர்கள் பெரும்போராட்டங்களை முன்னெடுத்தார்கள். இப்போராட்டங்களில் பங்கெடுக்கும் இளைஞர்களை இராணுவம் சுட்டுக்கொல்ல போராட்டம் பற்றி எரிந்தது. போராட்டத்திற்கு காரணமான போலி மோதல் கொலைகளையும், இராணுவத்தின் அத்துமீறல்களையும் தடுப்பதை விட்டு, போராடும் மக்களின் மீது அடக்குமுறையை ஏவியது அரசு. இராணுவம் சுட்டுக்கொன்றதில் 110 பொது மக்கள் கொல்லப்பட்டனர், இதில் பெரும்பாலும் சிறுவர்களும், இளைஞர்களுமாவர். தங்களது பதவி உயர்வுக்காக போலி மோதல்கள் மூலம் மக்களைக் கொல்வது என்பது காசுமீரில் உள்ள இராணுவமும், காவல்துறையும் அரங்கேற்றும் செயல் என்பது ஊரறிந்த உண்மை, இதற்கெதிரான மக்கள் போராட்டத்தை மஸ்ரத் ஆலம் போன்றோர் தூண்டுவிடுகின்றார்கள் என பொய்க் குற்றம் சாட்டி தான் அரசு சிறையில் அடைத்தது. இங்கு ஈழ ஆதரவு போராட்டங்கள் நடைபெறும் பொழுது ஈழ ஆதரவு தலைவர்களைச் சிறையில் அடைப்பது போன்று தான் இந்த நிகழ்வும்.

மஸ்ரத் ஆலம் தன் மீது குற்றம் சாட்டப்பட்ட அனைத்து வழக்குகளிலிருந்தும் நீதிமன்றத்திலிருந்து பிணை பெற்ற பின்னர்தான் விடுவிக்கப்பட்டாரே அன்றி, சட்டத்திற்கு புறம்பான வழிகளில் அல்ல. இந்த நேரத்தில் காசுமீர் அரசை 370ஆவது சட்ட பிரிவைப் பயன்படுத்தி கலைக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் தங்கள் பாசிச, சர்வாதிகார முகத்தை வெளிக்காட்டியுள்ளனர். மஸ்ரத் ஆலம் விடுவிக்கப்பட்டதை வைத்து ஆடிய நாடகத்தின் மூலம் அப்பொழுது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வந்த ’நிலம் கையகப்படுத்தல்’ மசோதாவை மறக்க வைத்தது பா.ச.க. காசுமீரில் தனது பலத்தை அதிகரித்துக் கொள்ள இதைப்பயன்படுத்தியது ஆளும் மக்கள் சனநாயகக் கட்சி.. மொத்தத்தில் மஸ்ரத் ஆலம் விடுதலை மூலம் மக்கள் சனநாயக கட்சியும் சரி, பா.ச.க.வும் சரி அவர்களது நலன்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள் என்பது உண்மை. அதே நேரத்தில் மஸ்ரத் ஆலம் சிறையில் இருந்து வெளியில் வந்தது காஷ்மீரிகளுக்கு சற்றே ஆறுதல் தருவதாகும். கூஜா தூக்கி அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் வர்க்கத்தின் அடிவருடியப் படி அடிமை கீதம் பாடினாலும் தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடெங்கும் உள்ள விடுதலை உணர்வு கொண்டோர் மஸ்ரத் ஆலமை உளப் பூர்வமாய் வரவேற்கிறார்கள்.

Pin It