இந்திய துணைக் கண்டத்தில் வாழும் ஒட்டு மொத்த மக்களில் எண்பத்தைந்து (85) விழுக்காடாக இருக்கிற பட்டியலின, பட்டியல் பழங்குடியின, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரம், வாழ்வுரிமை, மனித உரிமை வாய்ப்புகள் அனைத்தும் தொடர்ச்சியாக பதினைந்து விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ள ஆதிக்க, ஆளும் வர்க்கத்தால் மறுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய பெரும்பான்மை மக்களின் வாழ்வின் மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும், விடுதலைக்கும்தான் கௌதம புத்தர் தொடங்கி மகாத்மா ஜோதிபா பூலே, சாவித்திரிபாய் பூலே, சத்ரபதி சாகுமகராஜா, தந்தை பெரியார், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தனர். அதன் விளைவாகத்தான் சமூகத்தில் பல்வேறு மாற்றங்கள் உருவானது.

court scale brahmins

அதன் அடிப்படையில்தான் மேற்கண்ட பெரும்பான்மை மக்களின் வாழ்வுரிமைக்கான மேம்பாட்டு திட்டங்களும், சட்டங்களும் உருவாக்கப்பட்டன. அதனையொற்றியே இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சீரிய முயற்சியால் சமூக நீதிக்கான இடஒதுக்கீடு மற்றும் அது சார்ந்த கொள்கைகள் உறுதிப்படுத்தப்பட்டன. அதன்படிதான் பல வாய்ப்புகள் இன்று பெரும்பான்மை மக்களுக்கு வாய்த்தது. மேற்கண்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 12-ன் படி, அரசு என்கிற வரையறைக்குள் வரும் அத்துனை துறைகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கிட பிரிவுகள் 15(4) மற்றும் 16(4) ஆகியவற்றில் வகை செய்யப்பட்டுள்ளது. அரசு என்கிற பதத்தில் மூன்று முக்கிய துறைகள் வரையறுக்கப்படுகிறது.

அவை, 1. சட்டமியற்றும் துறை (சட்டமன்றம், நாடாளுமன்றம்), 2. நிர்வாகத் துறை, 3. நீதித்துறை. இவற்றில் நீதித்துறையைத் தவிர மேற்கண்ட இரண்டு துறைகளில் முழுமையாக இல்லையென்றாலும், ஓரளவாவது இடஒதுக்கீடு கொள்கை அமல்படுத்தப்படுகிறது. ஆனால், நீதித்துறையில் குறிப்பாக, உயர் நீதித்துறையில் (உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம்) முற்றிலும் சமூகநீதி மறுக்கப்பட்டு வருகிறது.

அதற்குக் காரணம் கேட்டால், நீதித் துறையில் இடஒதுக்கீடு அளிக்க சட்டத்தில் இடமில்லை என்று அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரான ஒரு விதண்டாவாதத்தை முன்வைக்கின்றனர். ஆனால், இந்தியாவில் உள்ள 24 உயர் நீதிமன்றங்களிலுள்ள 964 நீதிபதிகளில் SC/ST சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 17 பேர்தான். சுமார் 15 உயர் நீதிமன்றங்களில் SC/ST பிரிவைச் சார்ந்த ஒருவர் கூட நீதிபதியாக இல்லை. அதேபோல BC, MBC, சிறுபான்மையினர், பெண்கள் இவர்களின் எண்ணிக்கையும் வெறும் 100-க்கும் குறைவாகத்தான் உள்ளது. உச்சநீதிமன்றத்திலுள்ள 31 நீதிபதிகளில் 85 சதவீதத்திற்கும் மேல் பார்ப்பனர்களும், அவர்களுக்கு நிகரான முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும்தான் உள்ளனர். உச்ச நீதிமன்றம் தொடங்கிய காலம் தொடங்கி இன்று வரை நீதிபதிகளாக இருந்தவர்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 4 பேர் மட்டுமே. ஆனால் இன்று ஒருவர் கூட இல்லை. மீதமிருக்கிற அத்துனை இடங்களையும் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர்களுக்கு நிகரான முற்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள்தான் ஆக்கிரமித்துள்ளனர். அதிலும் நீதிபதியின் மகன், பேரன், நீதிபதியின் சாதியைச் சார்ந்த அவரது ஜூனியர் ஆகியோரையே தேர்ந்தெடுக்கும் வாரிசுரிமை நீடித்து வருகிறது. மேலும் நியமனம் வெளிப்படைதன்மையின்றி இரகசியமாக நடைபெறுகிறது. இவற்றையெல்லாம் கேள்வி கேட்டால் நீதிபதிகள் நியமனத்தில் தகுதி - திறமைதான் முக்கியம். ஆகவே, இடஒதுக்கீடு கொடுக்க முடியாது என்று சொல்கின்றனர். நாமும் அதைத்தான் சொல்கிறோம். SC/ST, MBC, BC, சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பிரிவுகளில் இன்று இலட்சகணக்கான திறமையான, தகுதி வாய்ந்த, நேர்மையான வழக்கறிஞர்கள் வந்துவிட்டனர். அவர்களை நியமிக்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.

நீதித் துறையில் இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டி இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு மத்திய சட்ட அமைச்சர்களாக இருந்த P. சிவசங்கர், B. சங்கரானந்த் மற்றும் H.R. பரத்வாஜ் ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர். மேலும் உயர் நீதித்துறையில் இடஒதுக்கீடு கொள்கையை உரிய வகையில் அமல்படுத்துவதற்கு ஆதரவாக மத்திய அரசால் அமைக்கப்பட்ட காரியமுண்ட கமிட்டி, சுதர்சன நாச்சியப்பன் கமிட்டி ஆகியவைத் தங்களது பரிந்துரைகளை வழங்கியிருக்கின்றன. மிக முக்கியமாக உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள பல்வேறு தீர்ப்புகளில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியைக் கடைபிடிக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இச்சூழலில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இப்பொழுது அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையான 60 நீதிபதிகள் பணியிடங்களில் 42 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 18 நீதிபதிகளுக்கானப் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. காலியாக உள்ள மேற்கண்ட பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கம், சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் கோரிக்கைகளையடுத்து 18 நீதிபதிகளையும் நியமிப்பதற்கான நடவடிக்கை உயர் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படுகிறது. 18 நீதிபதிகளையும் ஒரே பட்டியலாக தயாரித்து பரிந்துரைத்திட வேண்டும், அதில் உரிய முறையில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சார்பில் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தபோதும், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. சஞ்சய் கிஷன் கௌல் அவர்கள் அவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு, இரண்டு பட்டியலாக பரிந்துரைக்கத் திட்டமிட்டு முதல் 9 பேர் கொண்ட பட்டியலைப் பரிந்துரைத்திருக்கிறார். அந்த பட்டியலில் ஏற்கனவே அதிக எண்ணிக்கையில் நீதிபதிகளாக இருக்கின்ற முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களையே மீண்டும் பரிந்துரை செய்திருக்கிறார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 42 நீதிபதிகளில், 50 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் நான்கே நான்கு வகுப்பைச் சார்ந்த முற்பட்ட வகுப்பினர் உள்ளனர். ஆனால் 22 சதவீதமுள்ள SC/ST வகுப்பினர் வெறும் 3 பேர் மட்டுமே உள்ளனர் ( பதவி உயர்வு மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக வந்தவர்களை கணக்கில் கொள்ளக்கூடாது. மேலும் தற்போதுள்ள மூன்று பேரில் நீதிபதி தனபாலன் அவர்களுடைய பதவிக்காலம் ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது). அதேபோல பெரும்பான்மை சமூகங்களான மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் நிலையும் இவ்வாறுதான் உள்ளது. இசுலாமியர்களிலும், கிறிஸ்துவர்களிலும் ஒருவர் கூட இல்லை. பெண்களுக்கான பிரதிநிதிகள் குறைவாகவே உள்ளனர். ஆனால் 1% சதவீதம் மட்டுமே உள்ள பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 7 பேரும், பார்ப்பனருக்கு அடுத்த நிலையிலுள்ள, மிகவும் குறைவான சதவிகிதமுள்ள மிகவும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 6 பேர், 5 பேர் என்ற எண்ணிக்கையிலும் உள்ளனர். ஆனால், மீண்டும் மேற்கண்ட முற்பட்ட வகுப்பினருக்கே வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் நியமிக்கப்பட உள்ள 18 பேரில் 5 பார்ப்பனர்களை நியமிப்பதற்கான சீரிய முயற்சியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மேற்கொண்டுள்ளார். அவருக்கு மற்ற பார்ப்பன மற்றும் முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் துணையாக உள்ளனர். வேண்டுமென்றே தலித் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த நீதிபதிகளின் கருத்துகளை தலைமை நீதிபதி புறக்கணிக்கிறார்.

ஆகவே, உயர் நீதித்துறையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமூகநீதியைச் செயல்படுத்தக் கோரியும், நியமனத்தில் வெளிப்படைத் தன்மையை வலியுறுத்தியும், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தேர்வு செய்யப்படும் நீதிபதிகள் பட்டியலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் குறைவான பிரதிநிதித்துவம் உள்ள சமூகங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் உயர்நீதி மன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியைக் கோருவது தவறல்ல. அதுவே நம் நாட்டில் சனநாயகம் ஆகும்.

Pin It