நிலம் கையகப்படுத்துதல் சட்ட வரலாறு:

ஆங்கிலேயர்கள் 1894 ஆம் ஆண்டுக் கொண்டு வந்த நிலச்சட்டத்தைத் தான் இந்தியா 2007 வரை பயன்படுத்தி வந்தது. எப்பொழுதெல்லாம் நிலம் கையகப்படுத்துதலில் பிரச்சனை ஏற்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் அதற்குத் தேவையான சிறு மாற்றங்களை மட்டும் அந்தச் சட்டத்தில் செய்து வந்தது அரசு. தொண்ணூறுகள் வரை இதில் பெரிய அளவில் பிரச்சனையில்லை, ஏனென்றால் அரசு மட்டுமே பெரிய அளவில் நிறுவனங்களைக் கொண்டிருந்தது. அரசுக்கு மட்டுமே பெரிய அளவில் நிலத்தேவை இருந்தது. இந்தச் சட்டத்தின் மிகமுக்கியமான பிரச்சனை நிலத்திற்குண்டான மதிப்பை விட மிகக்குறைவான தொகை வழங்கப்பட்டது, நிலத்தை இழப்பவர்களுக்கு உரிய மறு வாழ்வு பற்றியோ, மீள் குடியமர்வு பற்றியோ இந்தச் சட்டம் பேசவேயில்லை என்பதே. அதனால் நிலங்களை மட்டுமே நம்பி வாழ்ந்த பழங்குடி, பட்டியலின மக்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து பிடுங்கி வெளியேற்றப்பட்டனர். உள்நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் மக்களில் இவர்களின் எண்ணிக்கையே அதிகம். சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் இம்மக்களின் குரல் ஆளும் அதிகார வர்க்கத்திற்கு எட்டவேயில்லை.

1990ஆம் ஆண்டு முதல் இந்தியா தனியார்மயத்தைக் கொள்கையாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்தத் தொடங்கியது. இதற்குப் பின்னர் தனியாரும் நிலம் கையகப்படுத்தலில் கலந்து கொண்டதாலும், அரசு அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்ததாலும் நிலங்களை வைத்திருந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதிகரித்தன. இப்பொழுது சமூகத்தின் நடுத்தர வர்க்கமும் பாதிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துதலினால் பல இடங்களில் மோதல்கள் வெடித்தன. நர்மதா அணைக்கு எதிரான போராட்டம், நந்திகிராம், சிங்கூர், கலிங்கநகர், நியாம்கிரி போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. இது போன்ற போராட்டங்களின் விளைவாக அன்றிருந்த காங்கிரசு தலைமையிலான அரசிற்குப் புதிய சட்டத்தை வடிவமைக்க வேண்டிய தேவையேற்பட்டது.

tribes 400இதற்காக 2007 ஆம் ஆண்டும், 2009ஆம் ஆண்டும் இரண்டு பாராளுமன்ற கூட்டுக்குழுவை உருவாக்கியது, இந்த இரண்டு குழுவிற்கும் தலைமை வகித்தது பா.ஜ.கவினரே – முதல் குழுவிற்குக் கல்யாண் சிங்கும், இரண்டாவது குழுவிற்குச் சுமித்ரா மகாஜனும் (இன்றைய பாராளுமன்ற சபாநாயகர்) தலைமை வகித்தனர். 2013 ஆம் ஆண்டு இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொழுது அதை ஆதரித்துப் பா.ஜ.க வாக்களித்தது. இந்தச் சட்டம் வெறும் நிலத்தைக் கையகப்படுத்துதல் என்பதை மட்டும் பார்க்காமல், நிலத்தை விற்றவருக்கான மறு வாழ்வு, மீள் குடியமர்வு, அந்த நிலத்தை நம்பி பணிபுரியும் தொழிலாளர்களுக்கான இழப்பீடு, நிலம் கையகப்படுத்துதலினால் ஏற்படும் சமூகப் பாதிப்பு என விரிவாகப் பேசியது, மேலும் நிலத்திற்கான தொகையும் முன்பு போல் இல்லாமல் கிராமப்புற பகுதிகளில் சந்தை மதிப்பை விட நான்கு மடங்காகவும், நகர்ப்புற பகுதிகளில் சந்தை மதிப்பை விட இரண்டு மடங்கும் தர வேண்டும் என நிர்ணயத்துள்ளது. அன்று இந்த சட்டத்தை வடிவமைத்தில் தலைமை தாங்கி, ஆதரவளித்த பா.ஜ.க இன்று ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் வேலையாக அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து நீர்த்துப் போகச் செய்துள்ளது. எப்படி இனி விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன்னால் காங்கிரசு தான் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது , அதனால் அவர்கள் புனிதர்கள் என்ற பிம்பம் இங்கு உருவாக்கப்படுகின்றது. காங்கிரசு தானாகவே இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வரவில்லை, பல மாநிலங்களில் நடந்த மக்கள் போராட்டம், அதில் பலியான மக்களும் தான் இந்தச் சட்டம் வருவதற்குக்காரணமானவர்களேயன்றி காங்கிரசல்ல.

புதிய நிலம் கையகப்படுத்துதல் சட்டமும் – அதன் மீது பா.ஜ.க கொண்டு வந்துள்ள திருத்தங்களும்…

2013ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் பெரும்பான்மைத் திட்டங்கள் வந்தன. ஆனால் இன்று பா.ஜ.க அரசு மேற்கொண்டுள்ள திருத்ததில் பின்வரும் திட்டங்களுக்கு “சமூகப் பாதிப்பு ஆய்வு, விசாரணை” (Social Impact Assesment, Investigation) , “உணவு பாதுகாப்பிற்கான சிறப்பு ஏற்பாடு”, “நில உரிமையாளர்களிடம் இருந்து ஒப்புதல் பெறுதல்” (Consent from Land Owners) போன்ற பிரிவுகளிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

அ) தேசத்தின் பாதுகாப்புத் தொடர்பான திட்டங்களுக்கு
ஆ) கிராமப்புற கட்டமைப்புத் தொடர்பான திட்டங்களுக்கு (மின்னுற்பத்தி திட்டங்களையும் சேர்த்து)
இ) கட்டுப்படியாகும் வீட்டுமனை திட்டங்கள், ஏழை மக்களுக்கான வீட்டுமனைத்திட்டங்களுக்கு
ஈ) தொழிற்பாதைகள் தொடர்பான திட்டங்களுக்கு (எ.கா – சென்னையிலிருந்து பெங்களூர் வரை ஒரு தொழிற்பாதையாகும்)
உ) கட்டுமானப்பணிகள் தொடர்பான திட்டங்களுக்கு, இதில் அரசு-தனியார் கூட்டுத்திட்டங்களும் அடக்கம்.

இந்தத் திட்டங்களின் படி வகைப்படித்தினால் இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் பணிகளில் குறைந்த பட்சம் 90 விழுக்காடு பணிகளை இந்த ஐந்து திட்டங்களில் ஒன்றாக வகைப்படுத்தமுடியும். இதன் மூலம் இந்த 90 விழுக்காடு திட்டங்களுக்கான நிலக்கையகப்படுத்துதல் சட்டத்தின் முக்கியமான பிரிவுகளிலிருந்து விலக்களிக்கப்படுகின்றது. இதில் கட்டுப்படியாகும் வீட்டுமனை திட்டங்கள் என்பது மிகவும் கேலிக்கூத்தான ஒரு வாக்கியம், இது முழுக்க, முழுக்க டி.எல்.எஃப் போன்ற பெரிய வீட்டு மனை கட்டும் நிறுவனங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் கோடிக்கணக்கில், இலட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்களுக்கு எல்லாமே கட்டுப்படியாகும் வீட்டு மனைகள் தான். இனி விலக்களிக்கப்படும் பிரிவுகளை விரிவாகப் பார்ப்போம்.

சமூகப் பாதிப்பு ஆய்வு, விசாரணை:

ஒரு திட்டத்திற்குத் தேவையான நிலத்தை ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து கையகப்படுத்தும் பொழுது அந்தப் பகுதியில் அதனால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய வேண்டும். பாதிப்புகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்தத் திட்டம் கைவிடப்பட வேண்டும், அல்லது சமூகப் பாதிப்புகளைக் குறைக்கும் வண்ணம் திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்தப் பிரிவு வந்ததற்கான காரணம் – மேற்கு வங்கத்தின் நந்திகிராமிலும், சிங்கூரிலும், ஒரிசாவின் நியாம்கிரியிலும் போராட்டங்கள் வெடித்ததற்கான அடிப்படை காரணம் அந்தப் பகுதி முழுக்க அந்த நிலத்தைச் சார்ந்தே வாழ்ந்து வந்தன, அந்த நிலம் பறிக்கப்படும் பொழுது தங்களது வாழ்வாதாரம் முழுக்கப் பாதிக்கப்பட்டதால் மக்கள் அரசை எதிர்த்து போராடினார்கள். பின்னர் இந்தத் திட்டங்கள் பின்வாங்கப்பட்டன.

இன்று பா.ஜ.க இந்தப் பிரிவை 90 விழுக்காடு திட்டங்களுக்கு இரத்து செய்வதன் மூலம் அதிகமான நந்திகிராம்களையும், சிங்கூர்களையும், நியாம்கிரிகளை உருவாக்க முனைப்புக் கொண்டு வருகின்றது. சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரசு, சட்டம், ஒழுங்கை சீரழித்து மக்களை வன்முறையை நோக்கி தள்ளுகின்றது.

உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சிறப்பு ஏற்பாடு:

உணவுக்காக இந்தியா பிற நாடுகளிடம் கையேந்தாமல் இருப்பதற்காக இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது. காரணம் இன்னும் பெரும்பான்மை மக்கள் சார்ந்திருக்கும் தொழிலாக விவசாயமே உள்ளது. இந்தப் பிரிவின் மூலம் விளை நிலங்களை வாங்குவதற்குத் தடையிருந்தது. இன்று திருத்ததின் மூலம் இந்தப் பிரிவு 90 விழுக்காட்டிற்கும் அதிகமான திட்டங்களுக்குச் செல்லாது என அரசு சொல்லுகின்றது, வெளிப்படையாக எல்லாத் திட்டங்களுக்கும் விளை நிலங்களை கையகப்படுத்தலாம் எனச் சொல்கின்றது. சுதேசி பேசும் பா.ஜ.க அரசின் உண்மை முகம் இது தான். ஏற்கனவே சில உணவு பொருட்களுக்காக நாம் பிற நாடுகளையே சார்ந்துள்ளோம், அதை அதிகப்படுத்தி முழுக்க முழுக்க உணவுக்காக இனி இந்தியா மற்ற நாடுகளையே சார்ந்து வாழும் ஒட்டுண்ணியாகப் போகின்றது. ஏற்கனவே நகரமயமாக்கலின் ஒரு பகுதியாக விளைநிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறிவருகின்றன. தமிழகத்திலும் சரி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் சரி விவசாய நிலப்பரப்பு முன்பை விட வெகுவாகக் குறைந்து வருகின்றது என்பதை இங்கே நினைவு கூற வேண்டும். இதுமட்டுமின்றி முன்னரே கூறியது போல இன்றும் அதிக விழுக்காடு மக்கள் விவசாயத்தையே தொழிலாகக் கொண்டுள்ளனர், விவசாய நிலங்களைப் பறிப்பதன் மூலம், சுயமாகத் தொழில் செய்துவருபவர்களை, பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களில் தினக்கூலியாக மாற்றுகின்றது. மக்களின் தற்சார்பை பறிக்கின்றது.

நில உரிமையாளர்களின் ஒப்புதல் பெறுதல்:

2013 ஆம் ஆண்டுச் சட்டம் சில திட்டங்களுக்கு 70 விழுக்காடு, சில திட்டங்களுக்கு 80 விழுக்காடு நில உரிமையாளர்களின் ஒப்புதல் கட்டாயம் வேண்டும் எனச் சொல்கின்றது, இன்று பா.ஜ.க அரசு மேற்கொண்டுள்ள திருத்தத்தின் மூலம் நில உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமலேயே நிலங்களை அவர்களிடமிருந்து வாங்க முடியும். மேலே கூறியுள்ள இரண்டு திருத்தங்களுடன் இதையும் சேர்த்து பார்த்தால், விவசாயிடமிருந்து நிலத்தை அவரது ஒப்புதல் இல்லாமலேயே அரசு பிடுங்கி தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்க முடியும். அரசுக்கு தன் குடிமகன்கள் முக்கியமில்லை தனியார் நிறுவனங்களின் நலனே முக்கியம் என முகத்தில் அறைந்து கூறுகின்றது. நில உரிமையாளருக்கு நிலத்தின் மீதுள்ள அடிப்படை உரிமையைப் பறித்து முதலாளிகளின் கையில் கொடுக்கின்றது.

farmer 372

நிலங்களைக் கையகப்படுத்துதல் மற்ற நாடுகளிலும் நடந்து கொண்டு தானே இருக்கின்றன, ஏன் இந்தியாவில் மட்டும் அதைச் செய்தால் பிரச்சனையாகப் பார்க்கின்றீர்கள் எனக் கேட்கும் வாசகர்களுக்கு – மற்ற நாடுகளில் குடிமகன்களுக்கு உரிய சமூகப் பாதுகாப்பு உண்டு, அரசே பல நாடுகளில் கல்வி, மருத்துவம் போன்றவற்றை இலவசமாகக் கொடுக்கின்றது, சில நாடுகளில் வேலை இல்லாதவர்களுக்கு அரசே மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்கி வருகின்றது. ஆனால் நம் நாட்டில் இன்று இருக்கும் கொஞ்ச நஞ்ச சமூகப் பாதுகாப்புகளும் பறிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அவனிடம் கடைசியாக இருக்கும் நிலத்தையும் பறிப்பதன் மூலம் மக்களை அரசு வெறும் கூலிகளாக மட்டுமே வாழுங்கள் எனச் சொல்லாமல் சொல்கின்றது.

மேலும் சில திருத்தங்கள்…

இதுமட்டுமின்றி மேலும் சில திருத்தங்களையும் புதிய சட்டம் மூலம் பா.ஜ.க அரசு செய்துள்ளது. முந்தைய சட்டத்தில் அரசு அதிகாரிகள் தவறிழைத்தால் அந்தத் துறையின் தலைமை நிர்வாகி தண்டிக்கப்படுவார் என இருந்தது இன்று அதை மாற்றி அரசு அதிகாரிகள் தவறிழைத்தால் அந்தந்த அரசின் – மத்திய,மாநில அரசுகளின் அனுமதியில்லாமல் வழக்கே பதியக்கூடாது எனச் சொல்கின்றது. தவறிழைக்கச் சொல்வதே அரசு தான் எனும் பொழுது, தவறிழைக்கும் அதிகாரியின் மீது வழக்குத் தொடுக்க அரசு அனுமதிக்கும் என எண்ணுவது “பாலுக்குப் பூனையைக் காவலாக நிறுத்துவதற்கு” ஒப்பானது.

முந்தைய சட்டத்தில் நிலம் கையகப்படுத்தி ஐந்து ஆண்டுகள் ஆகியும் எந்தப் பணியும் தொடங்காமல் இருந்தால் நிலம் அதன் உரிமையாளருக்கே திரும்பகொடுக்கப்பட வேண்டும் எனக்கூறுகின்றது, இதை அந்தத் திட்டக்காலம் முடியும் வரை என மாற்றியுள்ளது, ஏன் இப்படி மாற்றியுள்ளார்கள். சென்ற ஆண்டு நவம்பர் மாதம் பாரளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்காளரின் அறிக்கைப்படி “சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக” (SEZ) கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் 38 விழுக்காடு இன்னும் பயன்படுத்தப்படவேயில்லை என்கிறது. 2006 ஆண்டு அம்பானி நவி மும்பை சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காகக் கையகப்படுத்திய 1250 ஏக்கரையும் இன்னும் பயன்படுத்தாமல் அப்படியே வைத்துள்ளார், அதே போல அதானிக்கு சல்லிசான விலைக்கு வழங்கிய வனப்பகுதியும் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இப்படி நிலங்களை வாங்குவதன் மூலம் வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ளும் நிறுவனங்கள், அவற்றைப் பயன்படுத்தாமல் தங்களது விருப்பம் போலச் செயற்படவே இந்தத் திருத்ததை அரசு மேற்கொண்டுள்ளது.

முந்தைய சட்டத்தைத் திருத்தும் ஒவ்வொரு முறையும் அந்தத் திருத்தம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, வெற்றி பெற்ற பிறகே அமல்படுத்த வேண்டும் என்ற பகுதியை ஒட்டுமொத்தமாக இந்தத் திருத்ததில் நீக்கியுள்ளார்கள். இனி இங்குச் சர்வாதிகாரம் மட்டுமே சனநாயகமல்ல என மக்களுக்கு இதன் மூலம் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தெரிவிக்கின்றது.

தமிழகமும் – நிலம் கையகப்படுத்துதல் சட்டமும்

தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க இருக்கும் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனம், ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் போது தமிழக அரசு இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமலே நிலத்தைப் பறித்துத் தனியார் கையில் கொடுக்கும் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். அது மட்டுமின்றிக் கெயில் எரிவாயுக்குழாய் திட்டமும் விவசாயிகளின் நிலங்களின் ஊடே மீண்டும் வரக்கூடும். தொழில் வளர்ச்சியை அதிகப்படுத்த இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும், மற்ற மாநிலத்துடன் போட்டி போட்டு வருகின்றது, அதனால் வரும் தொழிற்சாலைகளுக்கு அனைத்து சலுகைகளையும் அவர்கள் அளிக்கின்றன, அப்படித் தமிழகத்திற்கு வரும் பெரும் திட்டங்களுக்கு அரசு நிலத்தைப் பறித்துத் தருவதற்கு இந்தச் சட்டம் அவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும், போராடும் மக்களைத் தாக்க காவல்துறை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் பயன்படுத்தப்படும்.

இந்த சட்டத்தைப் பற்றி சுருங்க கூறின் “தனியார் முதலாளிகள் தங்களுக்கு விருப்பமான நிலங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டு, தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளுதல்”. மோடி சொன்ன வளர்ச்சியும் , நல்ல காலமும் (அச்சே தீன்) முதலாளிகளுக்கு மட்டுமே என மோடியும், அவரது அரசும் திரும்ப, திரும்பக் கூறிவருகின்றது, நாம் தான் புரிந்து கொள்ள மறுக்கின்றோம்.

“பணக்காரர்கள் சட்டத்தை ஆளுகின்றனர்
சட்டம் ஏழைகளை ஆளுகின்றது”

- ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌

Pin It