கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி மோடி தனது நாடாளுமன்ற உரையில் கருப்புப்பணம், நிலம் கையப்படுத்தல் சட்டம், மதங்களுக்கிடையே நல்லிணக்கம் என பல்வேறு பிரச்சினைகளைப் பற்றிப் பேசினார். இதில் முதல் இரண்டு விஷயங்கள், பல்வேறு தரப்பினரால், வெவ்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருகின்றன‌. அவருடைய மதம் குறித்த கருத்துகள் மட்டும் பரவலாக விவாதிக்கப்படவில்லை. அல்லது நாட்டின் முதன்மையான சிக்கல்களின் பட்டியலுக்குள் கொண்டு வரப்படவில்லை.

modi 241"முதன்மை இந்தியா என்பதே எனது மதம். அரசியலைமைப்புச் சட்டமே எனது புனித நூல். அனைவருக்கும் நலன் என்பதே எனது வழிபாடு" என்று உணர்ச்சி மேலிட மோடி தனது நாடாளுமன்ற உரையில் தெரிவித்தார். "இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு" என்று பேசுவது வேறு. ‘இந்தியாவே எனது மதம்’ என்று அறிவிப்பது வேறு. முதலாவது கருத்து, மதச்சார்பற்ற ச‌னநாயகத்தை வலியுறுத்துகின்ற நவீன மதச்சார்பின்மை குறித்த முழுமையான சனநாயக கோட்பாடு. இரண்டாவது கருத்தான "இந்தியாவே எனது மதம்" என்று அறிவிப்பது மூலம், (இந்தியா =இந்து மதம்) இந்து மதமே எனது மதம் என்ற கொள்கையை மறைமுகமாக மோடி வந்தடைகிறார். அதாவது, மதம் அரசியலிலிருந்தும் அரசின் கட்டுப்பாட்டிலிருந்தும் தனியே பிரிக்கப்பட வேண்டும். மேலும் மதம் என்பது தனிநபரின் இறை வழிபாட்டுரிமையோடு தொடர்புடைய பிரச்சினையாகக் கருத வேண்டும் என்கிற மதச்சார்பின்மை குறித்த நவீன கருத்தாக்கத்தை முழுமையாக த‌ள்ளுப‌டி செய்கிறார் மோடி.

1939 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இன் முக்கிய‌ த‌லைவ‌ர்க‌ளில் ஒருவரான‌ எம்.எஸ். கோல்வால்க‌ர் எழுதிய‌ "நாம் அல்ல‌து வ‌ரைய‌றுக்கப்ப‌ட்ட‌ ந‌ம் தேச‌ம்" (We and Our nationhood defined) என்கிற‌ நூலில் ம‌த‌ம் அர‌சிய‌ல் குறித்த‌ த‌ன‌து க‌ருத்துக‌ளைப் பின்வ‌ருமாறு ப‌திவு செய்கிறார்.

"ம‌த‌ம் த‌னிப்ப‌ட்ட‌வ‌ரின் பிர‌ச்சினை என்று ஒப்புக் கொள்ள‌ வேண்டும் என்றும் அத‌ற்கு பொதுவாழ்விலும் அர‌சிய‌ல் வாழ்விலும் இட‌மில்லை என்றும் பொதுவான‌ போக்கு இருக்கிற‌து. இந்த‌ப் போக்கு ம‌த‌ம் குறித்த‌ த‌வ‌றான‌ த‌ப்பெண்ண‌த்தின் அடிப்ப‌டையில் அமைந்த‌தாகும். சொல்லிக் கொள்ள‌க் கூடிய‌ அள‌விற்கு ம‌த‌த்தைப் புரிந்து கொள்ளாத‌ ம‌க்க‌ளாலேயே இவ்வாறு கூற‌ப்படுகிற‌து ( 1939, ப‌க்க‌ம் 23 )" என்று வ‌ரைய‌றுக்கும் கோல்வால்க‌ர், அத்த‌கைய‌ உய‌ரிய‌ ம‌த‌மாக‌ இந்து ம‌த‌த்தையே நிறுவ‌ முய‌லுகிறார். "இத்த‌கைய‌ ம‌த‌த்தை இந்த‌ அளவிற்கு உய‌ர்ந்த‌ இட‌த்தை வேறெந்த‌ ம‌த‌மும் பெற‌ முடியாது. த‌னிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாலோ அல்ல‌து பொதுவாழ்விலோ புற‌க்க‌ணிக்க‌ முடியாத‌து. க‌ணிச‌மான‌ அள‌விற்கு அர‌சிய‌லிலும் அத‌ற்கு இட‌மிருக்க‌ வேண்டும். உண்மையில், ம‌த‌த்துட‌ன் ஒப்பிடுகையில் அர‌சிய‌லே ஒரு சிறிய‌ கார‌ணியாக‌ மாறி விடுகிற‌து. என‌வே அது ம‌த‌த்தின் க‌ட்ட‌ளைக் கிண‌ங்க‌ செய‌ல்ப‌ட‌க்கூடிய‌ ஒன்றாக‌வும் பின்ப‌ற்றப்ப‌ட வேண்டும் (1939, ப‌க்க‌ம் 23 )" இந்தப் பின்னணியிலிருந்தே மோடியின் கருத்துகளை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரசியலைப் பொருத்த‌வரை முழுமையான மதச்சார்பின்மை, சர்வ மதம் - மத நல்லிணக்கம் ஆகிய இரண்டு வேறுபட்ட கருத்தோட்டங்கள் இந்தியாவில் நிலவுகின்றன. 1931 ஆம் ஆண்டு கராச்சி நகரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரசு மாநாடு, ”விடுதலை பெற்ற இந்தியா என்பது மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாகத் திகழும்” என அறிவித்தது. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு எதிர் கருத்தாக இது முன் வைக்கப்பட்டாலும், "மதங்களுடைக்கிடையே நல்லிணக்கம்" என்ற கருத்தையே காங்கிரசு நடைமுறைப்படுத்தியது. ஜவகர்லால் நேரு தொடங்கி, சோனியா ராகுல் காந்தி வரை சர்வ மத வழிபாடுகளில் கலந்து கொள்வதும், தொப்பி அணிவதும், சாந்து பொட்டு வைத்துக் கொள்வதும் என அரசியலில் இருந்து மதம் தனியே இல்லை என்பதையே அவர்கள் பறைசாற்றி வந்துள்ளனர். அக்பர் உருவாக்கிய தீன் ஹிலாயி மதத்தைக் கூட இங்கு நினைவு கூற‌லாம். காந்தி வலியுறுத்திய "சகிப்புத் தன்மை" யையும் இவ்வாறாகவே புரிந்து கொள்ளலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், மதங்கள் அரசியலில் இருந்துதான் ஆக வேண்டும். வேண்டுமானால் சகிப்புத் தன்மையையும் நல்லிணக்கத்தையும் பேணிக் கொள்ளுங்கள் என்பது தான் இதன் உட்கருத்து. வெவ்வேறு நம்பிக்கைகளையும் கருத்தோட்டங்களையும் கொண்டிருக்கும் மதங்களுக்கிடையே ஒரு போதும் நல்லிணக்கம் சாத்தியமாக முடியாது. வெவ்வேறு மதங்களைப் பின்பற்றும் மக்களிடையே மட்டும் தான் நல்லிணக்கம் சாத்தியமாக முடியும்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் "நாட்டின் வளர்ச்சிக்கு இந்து முசுலிம் ஒற்றுமை" அவசியம் என இப்போது திருவாய் மலர்ந்திருக்கிறார். மோடி பதவியேற்ற ஒன்பது மாதங்களில், மதச்சிறுபான்மையினரின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை நடவடிக்கைகளைக் கொஞ்சம் கணக்கில் எடுத்துக் கொண்டாலே, அவர் பேசும் இந்து முசுலிம் ஒற்றுமையைக் கொண்டு வர எப்பாடு பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது புரியும். சாத்வி நிரஞ்சம் ஜோதி என்கிற பா.ஜ.க அமைச்சரான பெண் துறவி, “இசுலாமியர்கள் கிறித்தவர்கள் அனைவரும் தகாத முறையில் பிறந்தவர்கள்” என வெறுப்பை உமிழ்கிறார்.”இந்து ஆண்கள் இசுலாமிய பெண்களை வன்புணர வேண்டும்” என யோகி ஆதித்யநாத் சிங் என்ற மற்றொரு பா.ஜ.க உறுப்பினர் கருத்து தெரிவிக்கிறார். மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டிருக்கிறது. இசுலாமியர்களுக்கு தரப்பட்டு வந்த 5% இட ஒதுக்கீடு நீக்கப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் இசுலாமியர்கள், கிறித்துவர்கள் மீதான தாக்குதல்களும் வன்கலவரங்களும் அதிகமாகியிருக்கின்றன. நாட்டின் தலைநகரான தில்லியிலேயே தேவாலயங்கள் தீ வைத்துக் கொளுத்தப்படுகின்றன. மேற்கு வங்கத்தில் 71 வயது கிறித்துவ பெண்துறவி, இந்துத்துவ வெறியர்களால் பாலியல் வன்புணர்வுக்கு இரையாகிருக்கிறார்.

இப்படியான வன்கலவரங்கள், வெறுப்புப் பேச்சுகள் என அனைத்தையும்( 99% ) குறித்து எந்த கண்டனமும் தெரிவிக்காமல் நரேந்திர மோடி அமைதி காத்திருக்கிறார். "இஸ்லாமியர்கள், கிறுத்துவர்கள் தகாத முறையில் பிறந்தவர்கள்" என்ற கருத்தில் மட்டும், "சாத்வி கிராமப் பின்னணியிலிருந்து வந்ததால் அப்படி பேசி விட்டார். மன்னிப்பு கேட்டு விட்டார். விட்டு விடுங்கள்" என்று சட்டையில் விழுந்த காக்காய் எச்சத்தைக் கழுவுவதைப் போல தட்டி விட்டார். எந்த சம்பவத்தையும் கண்டிக்கவில்லை என்பதல்ல குற்றச்சாட்டு. இந்த வெறுப்புப் பேச்சுக்களின் அடியாழத்தில் இருக்கும் கருத்தியல் அனைத்தையும் மோடி ஏற்றுக் கொண்டே இருக்கிறார். ஆகவே மோடியின் ஆட்சியமைப்புக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் தடையாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு அபத்தமானது. மோடி என்பவர் ஆர்.எஸ்.எஸ் எனும் பயங்கரவாத அமைப்பு சாவி கொடுத்து இயக்கும் ஒரு பொம்மை. குழந்தைகள் பொம்மைகளை வைத்து விளையாடும். சாவி கொடுக்கும். தேவைப்பட்டால் தூக்கிப் போட்டு கூட உடைக்கும். ஆனால் தவறி கூட பொம்மையால் குழந்தைகளைக் கட்டுப்படுத்த முடியாது.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற சனநாயக சோசலிசக் குடியரசு என்று அரசமைப்பில் இருந்தாலும், இந்திய அரசின் மதச்சார்பின்மை வரலாறு முழுதும் கேள்விக்குட்பட்டே வந்திருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்ற சம்பவங்கள் அவ்வப்பொழுது இதை நமக்கு உணர்த்தியிருக்கின்றன. கடவுள் நம்பிக்கையோடு, இந்து மத பழக்க வழக்கங்களையே பேணி வந்த காந்தி, இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தினார் என்ற ஒரு காரணத்திற்காகவும் சுட்டுக் கொல்லப்பட்டார். ”காந்தியின் கொலை” என்பது சதி வலைப்பின்னல்களோடு கூடிய குழு நடவடிக்கை மட்டுமே. ஆனால் 1991 ஆம் ஆண்டு பாபர் மசுதி இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட நிகழ்வை அப்படியொரு குழு நடவடிக்கையாகப் பார்க்க முடியாது. இரண்டு லட்சம் சங்க பரிவாரங்கள் பங்கேற்ற வெகுமக்கள் நடவடிக்கை அது. ஆளும் அரசு, காவல்துறை, இராணுவம் என அரசு எந்திரத்தின் அனைத்து உறுப்புகளும் இச்செயலை வேடிக்கை பார்த்ததோடு, முழு ஒத்துழைப்பையும் அளித்தது.

மோடியின் தலைமையில் நடைபெற்ற 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட‌ முசுலிம்கள், பெண்கள் குழந்தைகளென பாராமல் கொடூரமாக கொல்லப்பட்டனர். பாபர் மசுதியை இடித்தது போல இதுவும் அப்படியான வெகுமக்கள் பங்கேற்ற ஒரு நிகழ்வு தான். முக ஒப்பனைகளோடும் வண்ணப் பூச்சுகளோடும் அதுவரை வேடமிட்டு வந்து இந்திய அரசின் போலி மதச்சார்பின்மைச் சாயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்கத் தொடங்கி விட்டிருந்தன. இப்போது ஒன்பது மாத கால மோடி ஆட்சியின் கீழ், இந்துத்துவ அரசியலை வெளிப்படையாக முன் வைக்கும் இந்திய அரசின் முழுப்பரிமாணத்தையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 67 ஆண்டுகள் இந்திய அரசின் முகம் பல குறுக்குவெட்டுகளில் புலப்பட்டாலும் இப்போது தெரிவதுதான் அதன் தெளிந்த வடிவம். இந்திய அரசியலில் மதச்சார்பின்மையை உயர்த்தி பிடிக்கும் நீரோட்டத்தின் உண்மையான வலிமை இனிமேல்தான் தெரியப் போகிறது. வாக்கு அரசியலுக்காக மட்டும் மதச்சார்பின்மை பேசி வருபவர்கள் இந்த சுற்றில் அத்தனை எளிதாக இந்துத்துவ ஆற்றல்களை எதிர்கொண்டு விட முடியாது. மதச் சார்பின்மையையும் மக்கள் சனநாயகத்தையும் அதன் உள்ளார்ந்த பொருளில் புரிந்து கொண்ட ஆற்றல்களால் தான் இந்த சூழலை எதிர்கொள்ள முடியும். மோடியின் முகமூடிகளைக் கிழித்தெறிய முடியும்.

Pin It