பொருளாதாரவியம் என்றால் பொருளாதாரத்தை முன்னிறுத்தி மற்ற அனைத்துக் காரணிகளையும் நிராகாரிப்பது என்று பொருள் என பொது அகராதிகள் குறிப்பிடுகின்றன. அவற்றைக் கொண்டு மார்க்சியர்கள் சொல்லும் பொருளாதாரவாதத்தின் பொருளைப் புரிந்து கொள்ள முடியாது.

பொருளாதாரவியம் என்பதற்கு பல்வேறு துறைசார் பொருள் இருந்தாலும் இடதுசாரி அரசியல் சொல்லகராதிப்படி நாம் அரசியல் நலன்களைப் பொருளாதார நலன்களைவிட கீழானதாக சிறுமைப்படுத்துவதை அல்லது புறந்தள்ளுவதைப் பொருளாதாரவியம் என்கிறோம். அது மட்டுமின்றி பொருளாதார நலன்களை அரசியல் நலன்களுக்கு இணையானதாக சமப்படுத்தினாலும் அதைப் பொருளாதாரவியம் என்கிறோம்.

பொருளாதாரப் போராட்டம்

lenin 250வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள பொருளாதார மேம்பாட்டுக்காக நடத்தப்படுவதை பொருளாதாரப் போராட்டம் என்கிறோம். கூலி, ஊதியஉயர்வு, ஊக்கத்தொகை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தப் போராட்டங்கள் பொருளாதாரப் போராட்டங்களே. இவை மக்களின் வாழ்நிலையிலிருந்து இயல்பாக மேலெழுந்து வரும் போராட்டங்கள். இது தவிர சலுகைகளுக்கான போராட்டங்கள் நூற்றுக்கணக்கானவை. இலவச மின்சாரம், இடஒதுக்கீடு, மற்றும் அரசிடம் கோரிப்பெறும் பல்வேறு சலுகைகள் இவையனைத்தும் இருக்கும் நிலையை சீர்திருத்தும் தன்மை கொண்ட போராட்டங்களாகும். எனவே பொருளாதாரப் போராட்டங்கள் உள்ளிட்டு இவையனைத்தையும் சீர்திருத்தப் போராட்டங்கள் என்கிறோம். இவை தொடர்ந்து பலதரப்பு மக்களிடமும் அனுதினமும் எழுந்து வருபவை. இவற்றைப் புரட்சியாளர்கள் என்போர் தவிர்க்கமுடியாமல் முன்னெடுத்துத் தீர்க்க வேண்டும். அதே நேரத்தில் அப்பிரச்சனை பற்றிய அரசியல் பார்வையை மக்களுக்கு அளிக்க வேண்டும். இது தன்னியல்பாக வரும் மக்கள் பிரச்சனைகளைக் கையாளும் ஒரு முறை. ஆனால் இது புரட்சிகர வழி அல்ல.

அரசியல் போராட்டம்

பொருளாதார நலன் மக்களின் வாழ்வை மேம்படுத்தக் கூடியது. தொடர்ந்து அதை மேம்படுத்துவதன் மூலம் மேம்பட்ட நன்மைகளை அடையலாம். ஆனால் எதுவரை அடையலாம்?

நல்ல சோறு உண்பதற்கு முன் அதை உண்ணும் சுதந்திரம் அவசியம். ஏன்? ஒரு நல்ல உணவை நாம் போராடிப் பெற்றிருக்கலாம். ஆனால் அது நமக்கான பங்கு எனும் உரிமை உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்; அதைக்காப்பதில் தான் அந்த உணவு நமக்கு உறுதிசெய்யப்படுகிறது. ஒரு நாய் தான் போராடிப் பிடித்த முயலை ஒரு புலியிடம் பறிகொடுக்கும் நிலை சமுதாய வாழ்வுக்கு சரிப்பட்டு வருமா? விலங்கு நிலை வாழ்க்கையை வென்று உணவு உரிமை, உயிர்வாழும் உரிமை, குடியிருப்பு உரிமை, பேச்சுரிமை, மொழியுரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் வைக்கும் உரிமை, ஓட்டுரிமை, சொத்துரிமை, சுதந்திர தேசத்திற்கான உரிமை என இந்த உரிமைகள்தான் ஒவ்வொரு தனிநபரின் வாழ்வின் சுதந்திரத்தை உறுதி செய்கின்றன. இந்த அரசியல் உரிமைகள் இல்லையேல் நாம் மன்னராட்சி காலத்தின் கொடுமைகளைத்தான் அனுபவித்து வரவேண்டியிருக்கும். நமக்கு முந்தைய தலைமுறைகளின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் போராட்ட வெற்றி தான் இவ்வுரிமைகள். இந்த உரிமைகள் பெறப்பட்ட ஒரு சமுதாய ஏற்பாடு இல்லாவிடில் எந்தவொரு நலனையும் ஒருவர் சுதந்திரமாக அனுபவிக்க முடியாது. இவற்றை முன்னிறுத்திப் போராடும் போராட்டங்களே அரசியல் போராட்டங்கள் எனப்படுகின்றன.

சனநாயகப் புரட்சி என்பதே நமது நாட்டிற்கான அடிப்படை இலட்சியம் என நாம் அறைகூவல் விடுக்கிறோம். சனநாயகம் என்பது மன்னர்களின் எதேச்சதிகாரத்தையும் வாரிசு ஆட்சியையும் காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைக்கும் போலி சனநாயகத்திற்கும் எதிரானது. மன்னன் என்றும் அரசன் என்றும் தனிப்பட்ட எந்த மனிதனுக்கும் எந்த குடும்பத்திற்கும் பட்டம் சூட்ட முடியாது: அப்படிப்பட்ட எவ்வகையான பிறப்புவழி உரிமையும் எவருக்கும் கிடையாது என்று பறைசாற்றுவதுதான் சனநாயகம். இதுதான் மனிதகுல வரலாற்றில் ‘வலுத்தது வாழும்’ என்ற விலங்கு விதியான பரிணாம விதிக்கு மனித சமுதாயத்தில் முதன் முதலில் முடிவுகட்டிய அரசியல் கோட்பாடாகும். ஒரு தேசத்தில் எந்த மதத்தை, இனத்தை, சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனைவருக்கும் அரசின் தலைவராகும் உரிமை உண்டு என்ற ஒரு முறையை சனநாயகத்திற்கான போராட்டமே உருவாக்கியது. நமது அரசியல் போராட்டங்கள் இதனை இலக்காகக் கொண்டதே. எனவே நமது அரசியல் போராட்ட இலட்சியம் சனநாயகப் புரட்சியே.

பொருளாதாரவாதிகள் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்திக்கொள்ள வருமாறு உழைக்கும் மனிதர்களைப் போராட அழைக்கிறார்கள். ஒரு ரூபாயை இரண்டாக்குகிறேன் என்றும் 8 சதவீதத்தை 10 சதவீதம் ஆக்குகிறேன் என்றும் உறுதி கொடுக்கின்றனர். அது மட்டுமில்லாமல் ஒரு ரூபாய்க்கு இரண்டு ரூபாய் வாங்கி வாங்கியே வாழ்க்கையில் புரட்சி என்ன பெற்றுத்தருமோ அதை அடைந்துவிடலாம் என்று உறுதிசொல்கிறார்கள். இந்தப் போராட்டங்களின் போக்கில் நாம் சமுதாயத்தில் ஒரு நீதியான பங்கீட்டை உத்தரவாதப்படுத்திவிட முடியும் என்றும் உரைக்கின்றனர்.

ஒருபுறம் அவர்கள் இரண்டு ரூபாய் வேண்டும் என்கின்றனர். மற்றொருபுறம் தொழிற்சங்க மேடைகளில் அரசியல் வேண்டாம் என்கின்றனர். மாணவர் களங்களில் அரசியல் பேசாதீர் என்கின்றனர். இந்த அரசியல் நீக்கத்திற்கு வால்பிடித்துச் செல்கையில் கடைசியில் அவர்கள் அனைவரின் அரசியல் அடையாளத்தையும் விட்டுவிட்டு வரும்படி வற்புறுத்துகிறார்கள்.

ஒவ்வொரு பொருளாதாரப் பிரச்சனையும் அரசு மற்றும் ஆள்வோரின் கொள்கைகளின் விளைபொருள் என்பதை நாம் அறிவோம். தமது சொந்த வாழ்வாதாரப் பிரச்சனைகளை மக்கள் இயல்பாகவே அறிந்து வைத்திருக்கின்றனர். சம்பள உயர்வுவேண்டும் என்றும் பணிப்பாதுகாப்பு வேண்டும் என்றும் போராடுவது வெகுஇயல்பே. ஆனால் அதில் உள்ள வர்க்கப் பிரிவினையையும்தாம் வர்க்கமாக ஒன்று திரளவேண்டிய அவசியத்தையும் அவர்கள் புறத்திலிருந்தே அறிய வேண்டியிருக்கிறது. வர்க்கம், சமுதாயம், அரசு குறித்த விஞ்ஞான சோசலிசக் கோட்பாடுகளின் அறிவை அவர்கள் பெற வேண்டியிருக்கிறது. ஒவ்வொருவரும் சிந்தனைரீதியாக வரம்பிடப்பட்ட தமது பணிச்சூழ்நிலையைத் தாண்டிய புறநிலைமைகளின் இயங்குவிதிகளை அறிய வேண்டியுள்ளது.

லெனின் சொன்னது போல ‘நீங்கள் ஒரு தொழிலாளியிடம் சென்று உங்களுக்கு நான் ஒரு ரூபிளுக்கு இரண்டு ரூபிள் வாங்கித்தருவேன் என்று சொன்னால் தொழிலாளி சொல்வார் - தோழரே, அதுதான் எனக்குத் தெரியுமே புரட்சியாளராகிய நீங்கள், வயிற்றுப்பாட்டிற்காக வாழ்க்கை முழுவதும் அல்லாடுகிற ஒரு நிலைமை ஏன் எனக்கு வந்தது.. இந்த நிலைமையிலிருந்து விடுபட நான் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லித்தாருங்கள் என்று தொழிலாளி சொல்வார்; ’எனவே அவர்கள் தன்னியல்பாகவே தமது வாழ்க்கை நிலைகளை மேம்படுத்த பல போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். ஆனால் அவை புறவயமான ஒரு அரசியல்பார்வை இல்லாதவரை மிகக்குறுகிய பார்வை கொண்டவையாகவே இருக்கும். பேருந்து கட்டண உயர்வுக்கு நடத்துனர் மீது கோபப்படுவதும் கொள்ளையடிக்கும் ஒரு கல்விநிறுவனத்திற்கு எதிராக அதன் ஆசிரியர்கள் மீது கோபப்படுவதும் சரியா? எலியின் கண்களில் சிங்கம் பூனையைவிட பலமானது அல்ல. உலகின் சட்டதிட்டங்களைப் பூனையே வரைந்தது என்பது போன்ற தாழ்ந்த சிந்தனைமுறைக்கு நாம் பலியாவோம்.

1899ல் பொருளாதாரவாதிகள் ரசியாவில் ஒருமுறை கூடி அரசியல் போராட்டங்களை தாராளவாதிகளிடம் விட்டு விட்டு பொருளாதாரப் போராட்டங்களில் கவனம் செலுத்துங்கள் என்று அறிக்கை வெளியிட்டனர். இதற்கெதிராக லெனின் தனது தொடா;போராட்டத்தை மேற்கொண்டு அந்தத் திரிப்பை எதிர்த்தார். இது அப்பட்டமான முதலாளித்துவ அரசியல் என்று அம்பலப்படுத்தினார். தொழிலாளர்களின் தன்னியல்பான போக்குக்கு தலைவணங்கி சோசலிச அறிவியலின் பங்கை மட்டந்தட்டும் செயலைச் செய்கிறார்கள். வர்க்கப்போராட்டத்தின் தேவையை மறுத்து அதிகாரமற்ற மந்தைகளாக தொழிலாளிவர்க்கம் நீடிக்க வழிசெய்கிறார்கள். முதலாளித்துவத்தின் அதிகார கைகளைப் பலப்படுத்துகிறார்கள் என்று அம்பலப்படுத்தினார்.

தன்னியல்பான போராட்டங்களுக்கு தலைமை கொடுப்பதன் வாயிலாகவே வர்க்க இயக்கத்தைக் கட்டியமைக்க முடியும் என்று சிந்திப்பதும் தன்னியல்பான போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி அரசியல் பார்வையை அளிப்பதன் மூலமாகவே புரட்சிகர அரசியல் திசைவழியில் சென்றுவிடமுடியும் என்று நம்புவதும் மிக தன்னியல்பான சிந்தனைமுறை என்கிறோம். இயக்கம் நடத்துவதைத் தவிர இலக்கு ஒன்றும் இல்லை என்ற தாழ்ந்த நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும். தறிகெட்டு ஓடுகிற மாட்டை அதன்போக்கில் துரத்திச்செல்கிற நிலை ஏற்படும். எனவே, நமது இலக்கை நோக்கி சாட்டை போட வேண்டும். அதற்கு நமக்கு ஒரு அரசியல் உத்தியும் அதைநோக்கிய திட்டமிட்ட பயணமும் வேண்டும். அதற்கு ஒத்திசைவாக பல்வேறு தரப்பு மக்களின் தன்னியல்பான பிரச்சனைகளை இணைக்கும் திறம் வேண்டும். அதற்கு அந்த தேசத்தின் முதன்மையான பிரச்சனை அடையாளம் காணப்பட்டு கோரிக்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

பொருளாதாரவாதம்:

அரசியல் பிரச்சனைகளை விட்டொழியுங்கள்: நமது சொந்தப் பிரச்சனையைப் பார்ப்போம் என்று சொல்வதும், அரசியல் போராட்டங்களுக்கும் பொருளாதாரப் போராட்டங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுப்போம் என்பதும் பொருளாதாரவாதமே.

தொழிற்சங்கங்கள் பொருளாதாரவியத்தில் ஊறிப்போன மட்டைகளாகக் கிடக்கின்றன. அவை தொழிலாளிகளை நமத்துப் போக வைக்கின்றன.

பொருளாதாரவிய போக்கில் உள்ள எளிதான வேலைநடை அரசியல் தீவிரத்தை ஒழிக்கிறது. தமது கோரிக்கைகளுக்காக எளிதாக திரளும் மக்களைக் கொண்டு கூட்டம் நடத்துவதும் எளிது. போராட்டம் நடத்துவதும் எளிது; அங்கு அரசியல் பேசிவிட்டு திருப்திப் பட்டுக் கொள்வதும் எளிது.

தன்னியல்புக்கு வால்பிடிக்கும் இப்போக்கு நம்மை அரசியல் திசைவழியின்றி சலுகைக்காகப் போராடும் சீர்திருத்தல்வாத அரசியலுக்குள் தள்ளுகிறது. புரட்சிகரப் போராட்டத்தை வெற்று முழக்கங்களாக்குகிறது. புரட்சிகர இயக்கத்தின் அலுவலகங்களை மனுப்போடும் மன்றம் ஆக்கிவிடுகிறது. ஆளும் வர்க்கத்தின் சட்ட வரம்பிற்குள், நிர்வாக வரம்பிற்குள் நமது ஒட்டுமொத்தச் செயல்பாட்டையும் கட்டுக்குள் கொண்டுவருகிறது. இறுதியில் புரட்சிகர இயக்கம் ஒரு சேவா சங்கமாக எஞ்சுகிறது.

அரசியல் உத்தியை வகுப்பதில் அரசியல் அதிகாரத்தைப் பறிக்கும் திசையை நோக்கி முன்னேற முடியும். புரட்சி என்பது எல்லாவிதத்திலும் அரசியல் அதிகாரத்தைக் குறிவைத்ததே. எனவே அரசியலை ஆணையில் வைப்போம்.

Pin It