தந்தைபெரியார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சி, சென்னைப் பல்கலைக் கழகத்தில் 31.3.2010 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரை வருமாறு:

பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்களுடைய பெயரால் இங்கே அமைக்கப்பட்டிருக்கிற அறக்கட்டளைச் சொற்பொழிவை நிகழ்த்துவதற்கு இந்த அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்ததற்காக என்னுடைய உளமார்ந்த நன்றியையும், மகிழ்ச்சியையும் முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறக்கட்டளை நிகழ்ச்சியினுடைய தலைவராக வீற்றிருக்கிற என்னுடைய அன்புக்குரிய திராவிடர் கழகத் தலைவர், “விடுதலை” ஏட்டினுடைய ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களே! சென்னைப் பல்கலைக் கழகத்தினுடைய மதிப்பிற்குரிய பதிவாளர் அவர்களே!

தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் அரசு அவர்களே! இங்கே கலந்து கொண்டிருக்கின்ற பேராசிரியப் பெருமக்களே! திராவிடர் கழக முன்னோடிகளாக இருக்கக்கூடிய என்னுடைய அருமை நண்பர்களே! மாணவிகளே! மாணவர்களே! தோழர்களே! தந்தை பெரியாருடைய பெயரால் இந்த அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதில் இரண்டாவது சொற்பொழிவாக நான் உரையாற்றுகிற ஒரு வாய்ப்பை வழங்கிய என்னுடைய அன்பிற்குரிய மானமிகு வீரமணி அவர்களுக்கும், அதே போல பேராசிரியர் அரசு அவர்களுக்கும் என்னுடைய உளமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியாரைப் பற்றிப் பேசுவதென்றால் வேறு ஏதாவது ஒரு தலைப்பாக இருந்தால் நான் மிக வேகமாகப் பேச முடியும். பெரியாரைப் பற்றிப் பேசுவதென்றால் சாதாரணமாகப் பல்வேறு எண்ண ஓட்டங்கள், குறுக்கிடுகிற காரணத்தால் ஒரு வகையில் நான் உணர்ச்சி வசப்பட்டுவிட்டதாகச் சொல்ல முடியாவிட்டாலும்கூட, என் உணர்ச்சி என்னைத் தடுத்துக் கொண்டிருக்கிறது.

நான் இந்த மேடையில் நிற்கிறேன் என்று சொன்னால் என்னைப் பற்றிப் பதிவாளர் பாராட்டிப் பேசியதோ, யாரோ ஒரு பதிவாளர், பேராசிரியர் அன்பழகனை இப்படிப் பாராட்டிப் பேசுகிறார் என்றால், இவ்வளவு பெரிய இடமோ வாய்ப்போ எனக்குக் கிடைத்தது என்று சொன்னால், வேறு எந்த வாய்ப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவ்வளவும் தந்தை பெரியாரால்தான் எனக்குக் கிடைத்த பேறு என்று கருதுகின்றவன். (கைதட்டல்).

பெரியாரை நான் உணர்ந்ததால்.... பெரியாரை நான் உணர்ந்ததால், அவரைப் பின்பற்றியதால், அவருடைய எண்ணம் என்னுடைய மனதிலேயும் பதிந்ததால், அந்த எண்ணம் என்னையும் உருவாக்கிய காரணத்தால் உங்கள் முன்னால் நிற்கின்றேன். தந்தை பெரியாருடைய எண்ணங்கள் தான் என்னை உருவாக்கியது; மேடையிலே ஏற்றியது; பாராட்டுகிற மனப்பான்மையைத் தந்தது. ஏதோ சமுதாயத்துக்கு நானும் தொண்டாற்றுவதாக மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றேன். நான் பெரியார் அவர்களை ஆறேழு வயதிலேயே பார்த்தவன்.

என் தாய்மாமன் மாயூரம் நடராசன் பார்த்தவன் என்றால் - புரிந்து கொண்டு பார்த்தவன்  என்று பொருள் அல்ல. வியப்பாகப் பார்த்துக்கொண்டிருக்கின்ற குழந்தை. என்னுடைய தாய்மாமன் யார் என்றால், என்னுடைய தந்தையின் அத்தை மகன் தான் மாயூரம் நடராசன், அவருடைய தந்தை சிதம்பர நாதன். நான் இவற்றை எல்லாம் பேசுவது-நினைவு வந்துவிட்டதால் தவிர்க்க முடியாமல் பேசுகிறேன். சிதம்பரநாதன் அவர்களே தமிழ்ப்பற்று உடையவர். மாயவரம் நடராசன் என்னுடைய தந்தையாரை விட ஓர் எட்டு வயது, பத்து வயது இளைஞர். என்னுடைய தந்தை யார் இருக்கும் பொழுது அவர்களும் உடன் இருப்பார்.

சிறுவனான நிலையில் பெரியாரைப் பார்த்தேன் அய்யா அவர்கள் சாப்பிடுகிற நேரத்திலே இருந்த பொழுது, தந்தை பெரியாரைப் பார்ப்பதற்கு என்னை அழைத்துக் கொண்டு சென்ற பொழுது, நான் என்னுடைய மாமா வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஒரு சிறுவனாக தந்தை பெரியாரைப் பார்த்தேன். அதற்குப் பிறகு மாயூரத்திலே கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறையிலே காவிரி ஆற்றிலே அய்ப்பசி மாதம் துலாக் கட்டம். அங்குவைதிக நிகழ்ச்சியாக பெரிய நிகழ்ச்சியாக நடைபெறும்.

சிறு மேஜை அரிக்கேன் விளக்கு அந்தக் காவிரி ஆற்றங்கரை மணலிலே தான் பெரியார் பேசுவார். ஒரு சிறு மேஜை இரண்டு அரிக்கேன் விளக்குகள் இருக்கும். பெட்ரோமேக்ஸ் விளக்கு அல்ல. அய்யா அவர்கள் பெரிய காவித்துப்பட்டா ஒன்றை மேலே போட்டுக் கொண்டு மேசையைப் பிடித்துக் கொண்டு பேசுவார். அவர் நிற்கக் கூடிய அளவுக்கு வல்லமை உள்ள காலம்; வலிமை குறையாத காலம். தெம்பாக நின்றுகொண்டு தன்னால் முடிந்த வரையில் உரத்துப் பேசுகிறார்.

அப்படிப் பேசுகிற பொழுது அவருடைய பேச்சைக் கேட்பதற்கு நூறு பேர் திரண்டிருப்பார்கள். வேறு ஆள்கள் இல்லை. என்னை அறியாமலே எனக்குத் தெரிந்தது. அதாவது 1933ஆம் ஆண்டாக இருக்க வேண்டும்.  எனக்குப் புரிந்தாலும்,  புரியாவிட்டாலும் பெரியாருடைய பேச்சைக் கேட்ட பொழுது என்னை அறியாமலேயே எனக்குத் தெரிந்தது - ஜாதி என்பதெல்லாம் தவறு என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது - உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பது தவறு என்பது. ஒரு சாதாரண ஆரம்பப்பள்ளிக் கூட ஆசிரியர் இடத்திலே மாணவன் பாடம் கேட்கக்கூடிய மனநிலை என்ன இருக்குமோ, அதைப் போல இருந்தது. அதற்குப் பின்னர் அய்யா அவர்களுடைய பேச்சை 12 வயதிலே, 14 வயதிலே கேட்டிருக்கிறேன். என்னால் புரிந்து கொண்டதாகச் சொல்ல முடியாது

ஆனால் அப்பொழுது கூட அவ்வளவு இணக்கமாக என்னால் புரிந்து கொண்டதாகச் சொல்ல முடியாது. 1938ஆம் ஆண்டு நான் பத்தாம் வகுப்புப் படிக்கின்ற பொழுதுதான், பெரியார் பேச்சை, அண்ணா பேச்சைக் கேட்டேன். அப்பொழுது தான் அவர்களுடைய பேச்சுகள் எனக்கு விளங்க ஆரம்பித்தன. அதற்கடுத்து இரண்டு ஆண்டுகளிலே நான் பல்கலைக் கழகத்திலே படிக்க வந்த காரணத்தால், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே படிப்பதற்காக என்னுடைய தந்தையார் ஊக்கம் தந்தார். காரணம், அவரே ஒரு சுயமரியாதைக்காரர். “குடிஅரசு” ஏட்டை ஒப்பிப்பேன்.

காங்கிரஸ் இயக்கத்திலே என்னுடைய தந்தையார் இருந்தார். அய்யா அவர்கள் காங்கிரசிலே இருந்து விலகி வந்த பொழுது விலகி வந்தவர், என்னுடைய தந்தையார். மணவழகர் என்பது தமிழ்ப் பெயர்; கலியாண சுந்தரம் என்பது பழைய பெயர். என்னுடைய தந்தையார் என்னை, என்னுடைய தம்பிகளைப் படிக்க வைக்க மாயவரத்திலிருந்து சிதம்பரத்திலே வந்து தங்கி, அதுதான் ஏற்ற இடம் என்று என்னுடைய தந்தையார் படிக்க வைத்தார். நான் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலே படித்த காரணத்தால் ‘குடிஅரசு’ ஏட்டில் நான் படித்ததை அப்படியே பல்கலைக்கழகத்திலே பேசுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. மாணவர்கள் கூட்டத்திலே இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஒரு வாய்ப்புக் கிடைக்கும் அங்கே பேசுவேன்.

அதற்குப் பிறகு வெளியிலே சென்று பேசுவேன். அப்படிப் பேசுகிறபொழுது, பேசப் பேச பேசத்தான் நான் உண்மையைப் புரிந்து கொண்டேன். படித்துப் படித்துப் புரிந்து கொண்டவர்கள் பல பேர். நான் பேசிப் பேசி புரிந்து கொண்டவன். என்ன காரணம் என்றால், படித்ததைச் சரியாக எண்ணிப் பார்க்கக் கூடிய வாய்ப்புகள் எனக்கிருப்பதில்லை. அப்படியே இப்பொழுதும் பேசிவிட்டால் அதைவிட அதிகமாக எங்கேயாவது ஓர் இடத்தில் நான் பேசுகிறபொழுது நான் படித்ததன் சாயலில் அய்யா அவர்களுடைய எண்ணங்கள், அண்ணா அவர்களுடைய எண்ணங்கள், தமிழகத்தினுடைய நிலை இவற்றைக் குறித்துப் பேசுகிற அந்தச் சூழல், பேசும் பொழுது எண்ணி, எண்ணி நான் வளர்ந்த காரணத்தால், நான் இப்பொழுதெல்லாம் பேசுவதற்கே அஞ்சுவதற்குக் காரணம் அப்படியே இப்பொழுதும் பேசி விட்டால் என்ன செய்வது? (சிரிப்பு). அப்பொழுது எண்ணங்களைப் பரிமாறிக்கொள்கிறவன். இப்பொழுது எண்ணங்களுக்குப் பொறுப்புள்ளவன். (கைதட்டல்).

அப்பொழுது எண்ணங்களைப் பரிமாறுகிற பொழுது, ஏற்றுக்கொள்கிறவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும்; மறுக்கிறவர்கள் மறுக்கட்டும். அது உண்மையாக இருந்தால் ஏற்கட்டும்; அது தவறாக இருந்தால் மறுக்கட்டும் என்ற அந்த அடிப்படையில் பேசிக்கொண்டிருக்க முடியும். என்னை நீங்கள் மதிக்கின்ற காரணத்தால்... இப்பொழுது என்னை நீங்களெல்லாம் மதிக்கிற காரணத்தால், மதிக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்கின்ற காரணத்தால், ஒரு பல்கலைக் கழக மண்டபத்திலே பேசக்கூடிய நிலை ஏற்பட்ட காரணத்தால், சிந்திக்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு நான் ஆளாகியிருக்கின்றேன். சிந்தித்துப் பேச வேண்டிய ஒரு நிலை.

பெரியாரால் மகத்தான மாற்றம்

குறிப்பாக, தந்தை பெரியார் அவர்களால் ஏற்பட்ட மகத்தான மாற்றம் சாதாரண மானதல்ல. மிகப்பெரிய மாற்றம் (கைதட்டல்). அது வேண்டுமானால் நம்முடைய கண்ணுக்குத் தெரியாது. வரையறுத்துக் காட்ட முடியாது. ஆனால் அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் எவ்வளவு பெரிய மாற்றம் என்று சொன்னால், ஒரு நான்காவது வகுப்பிலே படிக்கக்கூடிய ஒரு மாணவன் பட்டதாரியாக ஆகிய பொழுது எவ்வளவு பெரிய மாற்றமோ அதைப் போன்றதொரு பெரிய மாற்றம் தமிழ்நாட்டிலே ஏற்பட்டிருக்கின்றது.

மயிலாடுதுறையில் இரண்டு தெருக்கள் அதை உணர மாட்டார்கள் மக்கள். மயிலாடுதுறையிலே அங்கே இருக்கிற முக்கியமான தெருக்கள் - மகாதேவதெரு, பட்டமங்கலம் தெரு. இவைகளில் பெரும்பாலும் பிராமண மக்கள் தான் இருப்பார்கள். வழக்கறிஞர்களாக, என்னுடைய ஆசிரியர்களாக, மருத்துவராக இருப்பார்கள். இவர்களைப் பார்ப்பதற்கு கிராமங்களிலேயிருந்து சாதாரண மக்கள் வருவார்கள். ‘சாமி வீட்டிற்குப் போகிறேன்’ என்று தான் சொல்லுவார்கள். அய்யர் வீடு என்று சொல்ல மாட்டார்கள்.

எந்த சாமி வீட்டிற்குப் போகிறாய் என்ற கேட்டால், சொல்லுவார்கள் - டாக்டர் சாமி வீட்டிற்குப் போகிறேன்; வக்கீல் சாமி வீட்டிற்கு போகிறேன் என்று சொல்லுவார்கள். அவ்வளவு அந்த அழுத்தமும் அந்த வைதிகச் செல்வாக்கும், பிராமணிய மகிமையும்,  நம்முடைய உள்ளத்திலே அவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தன. குறிப்பாகச் சொன்னால் அய்யா அவர்களை ஈ.வெ.ராமசாமிப் பெரியார் என்று சொல்லுகிற காலத்திலே கூட, அந்தப் பெருமக்கள் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் என்று சொல்ல மாட்டார்கள்.

‘நாயக்கர் என்ன கருத்தய்யா, சொல்லியிருக்கிறார்? ‘நாயக்கர்’ என்பதை வலியுறுத்திச் சொல்லுவார்கள். நாயக்கர் பத்திரிகையை வாங்கிப் படித்துவிட்டீர்களா? இதை வலியுறுத்தி வலியுறுத்திச் சொல்லுவார்கள். நாயக்கர், முதலியார், நாயுடு நாயக்கர், முதலியார், நாயுடு என்று சொன்னால் மரியாதை என்று நினைத்த அது ஒரு காலம் உண்டு. பெரியாரும், வரதராஜுலு நாயுடு அவர்களும், திரு.வி.க. அவர்களும் அப்படி மதிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால், அதே சொல்லை இழிமக்கள் என்று தங்களைச் சொல்லக்கூடிய காலமும் வந்தது.

அப்படி எல்லாம் இருந்த நிலை இன்றைக்கு மாறி, அப்படிப் பளிச்சென்று யாரும் இன்றைக்குச் சொல்லத் துணிய முடியாத அளவிற்குச் சமுதாயத்திலே எண்ண ஓட்டம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ் மக்கள் இன்றைக்கு உயர்ந்திருக்கிறார்கள். ஒரு வகையில் சொல்லப் போனால் தமிழன் கூனிக் குறுகி, உணர்விழந்து, தமிழன் என்று தன்னை எண்ண முடியாத அளவிற்கு இருந்த நிலை மாறி, இன்று ஏதோ தமிழன் என்பதைப் புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு அவர்கள் நிமிர்ந்து நிற்கவில்லை என்று சொல்ல முடியாவிட்டாலும் - புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு ஓர் இழிவு மனப்பான்மையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளக் கூடிய அளவிற்குதான் பிறவியிலேயே ஏதோ தாழ்ந்து விட்டதாக எண்ணிய, மனப்பான்மையை மாற்றிக் கொள்ளக் கூடிய அளவிற்குத் தமிழ்நாடு மக்கள் இன்றைக்கு உயர்ந்திருக்கின்றார்கள்.

எவ்வளவோ கஷ்டங்கள் இருக்கலாம், நெருக்கடிகள் இருக்கலாம், துன்பங்கள் இருக்கலாம், தொல்லைகள் இருக்கலாம்; அரசியலில் தோல்விகள் இருக்கலாம். ஆனால் தமிழன் உயர்ந்து கொண்டிருக்கிறான் இந்த உயர்வுக்குக் காரணம் தந்தை பெரியார் (கைதட்டல்). பெரியாரை எதிர்த்துப் பேசியிருக்கலாம். பெரியாரை எதிர்த்துக் கூடப் சியிருக்கலாம். கண்டித்திருக்கலாம். அரசியலில் நிற்க வேண்டிய இடம் மாறுபட்டிக்கலாம். ஆனால் அந்தப் பெரியார் இல்லாவிட்டால், இந்த அமைச்சரவை வந்திருக்காது. அதைத்தான் அண்ணா அவர்கள் சொன்னார்கள். இந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று சொன்னார். (கைதட்டல்).

ஆக அண்ணா சொன்ன அடிப்படை - தமிழர்கள் என்றால் அய்யா-இல்லை என்றால், யாரும் இல்லை என்று பொருள் (கைதட்டல்) என்று சொன்னார். தந்தை பெரியார் அவர்கள் ஊட்டிய அந்த சுயமரியாதை உணர்வு “நீ யாருக்கும் தாழ்ந்தவன் அல்ல; நீ அடிமை அல்ல; உன்னை விட உயர்ந்தவன் என்று சொல்லுவதற்குக் கூடத் தகுதி கிடையாது; பிறவியினாலே உன்னை விட உயர்ந்தவன் எவனும் இல்லை;  எவராக இருந்தாலும் அவர் மனிதர் தான்” என்று சொன்ன பொழுது, தாழ்த்தப்பட்ட மனிதனாக இருந்தாலும் அவனுடைய மனதிலும் ஒரு தெம்பு ஏற்பட்டது.

தாழ்த்தப்பட்ட மனிதனுக்காக - ஆதித்திராவிடர் சமுதாயத்திற்காகப் பாடுபட்ட தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள். அவர் சமுதாயத்திற்கே பல நன்மைகளைச் செய்திருந்தாலும் கூட மற்ற சமுதாயத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிற அந்தப் பெரிய பணியைச் செய்தவர் தந்தை பெரியார் அவர்கள் (கைதட்டல்). பெரியார் இல்லை என்றால் அறிஞர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் தொடர்பு ஏற்படக்கூடிய வாய்ப்பே இருந்திருக்காது.

மற்றவர்கள் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தியவர்

தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தப் பல வழிகாட்டுதல்களைச் செய்திருந்தாலும் கூட, மற்ற சமுதாயத்தினரின் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிற அந்தப் பெரிய பணியை நிறைவேற்றுகிறவர் தந்தை பெரியார் அவர்கள். தாழ்த்தப்பட்டவரை மட்டும் ஓர் இயக்கமாக உருவாக்கி வளர்க்க வாய்ப்புகள் குறைவாகத்தான் இருந்தன. அதற்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்கக் கூடிய பணியை எல்லோருடைய மனதிலும் இந்த எண்ணம் ஏற்படுவதற்கு தந்தை பெரியார் காரணமாக இருந்தார்.

தமிழ்மொழி தப்பிப் பிழைத்தது

தமிழ்நாட்டில் நீண்ட நெடுங்காலமாகத் தமிழ் ஆட்சிமொழியாக இருந்தது. தமிழ்நாட்டில் தமிழன் என்ற நினைவோடு ஆட்சி நடத்துகிற வாய்ப்பு கலைஞர் ஆட்சிக்கு உண்டு. தெலுங்கு பேசுகிறவர்கள் இருக்கலாம். கன்னடம் பேசுகிறவர்கள்  இருக்கலாம். மராட்டியம் பேசுகிறவர்களாக இருக்கலாம். ஆனாலும் தமிழ்மொழி தமிழ் மக்கள் ஒரு பாரம்பரியமுள்ள மொழியைத் தாய்மொழியாகப் பெற்றிருக்கின்ற காரணத்தால் தமிழ்மொழி தப்பிப் பிழைத்துவிட்டது.

அண்மைக் காலத்திலே கூட மொழி அடிப்படையிலே ஆய்வு நடத்திய டாக்டர் கால்டுவெல் என்கிற பாதிரியார் திருநெல்வேலியிலே, உடன்குடியிலே வந்து 40, 50 ஆண்டு காலம் தங்கியிருந்தார். வடமொழி தயவில்லாமல் 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்த மொழிகளை எல்லாம் படித்து தமிழ் இலக்கியத்தை ஓரளவுக்குக் கற்று, வடமொழி ஏடுகளையும், ஓரளவுக்குப் பயின்று, ஒப்பியல் மொழி நூல் ஒன்றை வரைந்தார்கள்.  1858ஆம் ஆண்டு ஒப்பியல் மொழி நூல் சென்னைப் பல்கலைக் கழகத்தாலே முதன் முதலாக வெளியிடப்பட்டது.

அந்த ஒப்பியல் மொழி நூல் வரைந்தபொழுது தமிழ்மொழி வடமொழியின் சாயலில் பிறந்து வளர்ந்த மொழி அல்ல என்பதை நிலைநாட்டினார். ஏனென்றால் அது வரையில் இந்தியாவில் இருந்த எல்லா மொழிகளும் வடமொழியில் இருந்து பிறந்தவை; வடமொழி தயவில்லாமல் எந்த மொழியும் வளர முடியாது. தமிழாக இருந்தாலும்,வேறு எந்த மொழியாக இருந்தாலும் வடமொழியின் துணையின்றி, சொற்கள் கலப்பின்றி, வளரமுடியாது.

தமிழகத்தில் வடமொழி இல்லை

தொடக்க காலத்தில் அந்த நிலை இல்லை. தொடக்க காலத்தில் வடமொழியே தமிழகத்தில் வழக்கில் இல்லை. அதற்குப் பின்னாலே ஏறத்தாழ கி.பி. நான்காவது, அய்ந்தாவது நூற்றாண்டில் தொடங்கித்தான் வேகமாக வளர்ச்சி அடைந்தது. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பல்லவர் ஆட்சிக் காலத்திலே தொடங்கி களப்பிரர் ஆட்சிக் காலத்திலே ஏற்பட்டதாகச் சில சான்றுகள் இருக்கின்றன. ஆக இடைக்காலத்திலே அது வளர்ந்து 13, 14ஆம் நூற்றாண்டிலே சமஸ்கிருதம்தான் உண்மையான மொழி. தமிழ் என்பது பேச்சு வழக்கிலே இருக்கின்ற ஒருகொச்சை மொழி, ஆக தமிழுக்கு ஒரு மரியாதை இல்லாத நிலை. தமிழுக்கு மரியாதை ஏற்படுத்துவதற்காக வடமொழி கலந்து எழுதுகின்ற ஒரு வழக்கநிலை. மணிப் பிரவாள நடை அப்படி எல்லாம் இருந்தது.

தமிழ்க் குடும்பம் சமற்கிருதக் குடும்பம்

சமற்கிருதம் இல்லாமல் தமிழ் இயங்க முடியாது என்கிற நிலை. தமிழ்மொழி வடமொழியின் துணையின்றி இயங்கக்கூடிய மொழி; அந்த தமிழ் மொழி வடமொழியோடு தொடர்புடைய மொழி என்று சொல்லுகின்ற நிலை கிடையாது. சமஸ்கிருதம் ஒரு குடும்பம். தமிழ் ஒரு குடும்பம். தமிழ், குடும்பம் என்பது தமிழ்மொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு இன்னும் பத்து, 12 மொழி எழுத்து வழக்கில் இல்லாமல், பேச்சு வழக்கில் வடபுலத்திலே வழங்குகிற மொழிகள் இவைகள் எல்லாம் சேர்ந்து ஒரு மொழிக்குடும்பம்.

திராவிட மொழிக்குடும்பம்

திராவிட மொழிக்குடும்பம் என்று அவர் தான் அறிவித்தார். இங்கிலாந்து நாட்டுப் பல்கலைக் கழகத்திலே கூட அவரைப் பாராட்டினார்கள். அங்கேயும் ஒரு டாக்டர் பட்டம் வழங்கினார்கள். அவருடைய நூல் வந்ததற்குப் பின்னாலே, ஒரு 30 ஆண்டுக் காலத்திலே தமிழறிஞர்களிடத்திலே பல பேருக்கு அந்த உணர்வு ஏற்பட்டது. இல்லையானால் எவ்வளவு தான் சிறந்த மொழி என்று தமிழைப் போற்றிப் பாராட்டினாலும் தமிழ் தனித்தன்மையுடையது. எங்கள் மொழி தனிக்குடும்பம் என்று வாதாடுவதற்கு அவர்களுக்கு வழி இல்லை. கார்த்திகேயனார் என்பவர் தமிழ்மொழி வரலாறு எழுதினார்.

நம்முடைய சிறப்புகளை எல்லாம் எழுதி, தனித்தன்மையுடைதாகக் கூறினார். ஆனால், அந்த வாதம் வெற்றி பெறக் கூடிய அளவுக்கு அவரால் எடுத்துக் காட்டி வெற்றி பெற முடியவில்லை. அதை கால்டுவெல் எழுதினார். அதற்குப் பின்னர், பரிதிமாற் கலைஞர், மனோன்மணியம் சுந்தரனார் அவர்களுடைய பாடலை தமிழ் வாழ்த்துப் பாடக்கூடிய அளவிற்கு தமிழினுடைய தனித்தன்மை விளங்கியது. எடுத்துக்காட்டுவதற்கு, தமிழ்நாட்டிலே வரலாற்று ஆசிரியர்களுடைய கடமையாக ஆயிற்று. தமிழன் என்று சொல்லுகிற பொழுது, என்னதான் இருந்தாலும் ஆந்திரத்திலே உள்ள தமிழனாக இருந்தவன், தெலுங்கனாக ஆகிவிட்டவனை கைவிட்டது போல் ஆகிறது. கன்னடத்திலே உள்ளவர்கள் கூட, 1200 ஆண்டுகளுக்கு முன்னால் பேசிய மொழி தமிழ்தான், பழைய கன்னட மொழி இப்பொழுதும் அங்கு சிலரால் பேசப்படுகிறது. அந்தக் கிராமத்து மக்கள் பேசுகிற பழைய சொற்றொடரிலே தமிழ் அதிகம்.

புது கன்னடத்திலே தமிழ்ச்சொற்கள் குறைவு. இதை ஓரளவுக்குத்தான் நான் சொல்ல முடியும். ‘திராவிடம்’ என்று டாக்டர் கால்டுவெல் வழங்கியதுதான் தமிழுக்கு மிகப்பெரிய அரணாக அமைந்தது. எங்களுடைய தமிழ் மொழி, வேறு எந்த மொழிக்கும் தாழ்ந்த மொழி அல்ல. தனித்து எழுதுகின்ற ஆற்றல் பெற்ற மொழி. மணிப்பிரவாள நடை தமிழை வளரவைக்காது; தமிழை வீழ்த்தும்; ஆக வடமொழி கலந்து எழுதக்கூடாது என்று மறைமலைஅடிகள் தொடங்கிய தனித்தமிழ் இயக்கம். இப்படி மொழி இயக்கம் ஒரு பக்கம் வளர்ந்தாலும், இன்னொரு பக்கம் நாங்கள் எல்லாம் திராவிடன் என்ற உணர்வு பெறுவதற்குக் காரணமாக இருந்தது. தமிழன் என்று நான் சொல்லுகிறபொழுது கூட, தமிழ் மொழியைப் பேசுகிறவனை மட்டும்தான் குறிப்பிடும்.

ஆரியத்தோடு ஒட்டாது

நான்  திராவிடன் என்று சொல்லுகிற பொழுது, நான் ஆரியத்தோடு ஒட்டாது, இன்னொரு இனத்தைச் சேர்ந்தவன் என்று பிரித்துக் காட்டுகிற அந்த ஆற்றல் தமிழ்மொழிக்கு உண்டு. இங்கிலாந்து நாட்டுக்காரன் வந்து கூட இங்கு தமிழ் பேசலாம். டாக்டர் கால்டுவெல் கூட தமிழில் ஓரளவுக்கு எழுதக்கூடியவர். வீரமாமுனிவர் என்ற மற்றொரு பாதிரியார் - கான்ஸ்டான்டி நோபிள்காரர் அவர் தமிழிலேயே ஒரு நூல் இயற்றியிருக்கிறார். டாக்டர் ஜி.யு.போப் சைவ சித்தாந்தத்தை பற்றிப் பாராட்டிச் சொன்னவர். அவர் எழுதுகிற பொழுது சொல்லுகிறார், “தமிழ்நாட்டில், திருக்குறள், நாலடியார்” போன்ற அறநூல்களைப் பெற்றிருக்கிற பொழுது, உயர்ந்த அறநெறிக் கருத்துகளைப் பெற்றிருக்கிற பொழுது, நீதி நெறிக்கருத்துகளைப் பெற்றிக்கிற பொழுது, அவர்கள் வேறு எந்த மொழி, பேசுகிறவர்களையும் விடத் தாழ்ந்தவர்கள் என்று எண்ணி தலைகுனியத்தேவையில்லை. யாருக்கும் குனியத் தேவையில்லை” என்று ஜி.யு.போப் அவர்கள் சொன்னார்கள்.

திராவிடன் என்று சொன்னால் ஒரு செல்வாக்கு எனவே, அந்த அடிப்படையில் திராவிடன் என்று சொல்லுகிறபொழுது நம்முடைய தகுதி உயருகிறது. நம்மை வீழ்த்துவதற்கான முயற்சிகள் உடைபடுகின்றன. அந்த வகையிலே தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் திராவிடன் என்று சொல்லுவதற்கு ஒரு செல்வாக்கு ஏற்படுத்தியது. அறிஞர் அண்ணா அவர்கள் திராவிடன் என்று சொல்லுவதற்கான காரணங்களைப் பல கட்டுரைகளில் எழுதினார். ஆனால், அய்யா முன்னிலையில் இருந்து அது நடைபெற்ற காரணத்தால்தான், நீதிக்கட்சி திராவிடர் கழகம் என்று அழைத்தபொழுதுதான் தமிழ்நாட்டில் நாமெல்லாம் திராவிடர் என்று சொல்லக்கூடிய ஒரு நல்ல சூழ்நிலை ஏற்பட்டது.

இல்லையானால், ஏதோ ஒரு கருத்து, பரிதிமாற் கலைஞருடைய நூல் - தமிழ்மொழி வரலாறு எவ்வளவு சிறந்த கருத்துகளைக் கொண்டதாக இருந்தாலும் சாதாரண மக்கள் எப்படி அறியப் போகிறார்கள்?

பெரியார் இல்லையென்றால்...

பெரியார் இல்லையானால் அறிஞர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் தொடர்பு ஏற்படக் கூட வாய்ப்பு ஏற்பட்டிருக்காது. இன்னும் சொல்லப்போனால் அண்ணா அவர்கள் சொல்லுவார்கள், புலவர்கள் எல்லாம் உப்பரிகையிலே உலவிக் கொண்டிருப்பதைப் போல சிறந்த நூல்களை அவர்கள் வேண்டுமானால் படித்துக் கொண்டிருக்கலாம். நீங்கள் திராவிடன் என்றால் அந்தக் காலத்திலே பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தை மக்களிடத்திலே கொண்டு சென்றபொழுது தொடக்கத்திலே எங்களைக் கூடக் கேட்பார்கள். நான் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவனாக இருந்த பொழுது கேட்பார்கள். அடுத்து பச்சையப்பன் கல்லூரிக்கு வந்தேன். என்ன நீங்கள் எல்லாம் திராவிடன் - திராவிடன் என்றால் ஆதிதிராவிடனா? என்று கேட்பார்கள். திராவிடன் என்று சொன்னாலே ஆதித்திராவிடனோடு இணைத்துச் சொல்லுவார்கள்.

நான், அப்பொழுது ஒரு பதில் கூட சொல்லி யிருக்கின்றேன். ‘ஆதித்திராவிடன் என்றால் இந்த நாட்டுக்கே சொந்தக்காரன் என்று அர்த்தம். மற்றவர்கள் எல்லாம் கொஞ்சம் சந்தேகம்தான்” என்று சொல்லி யிருக்கிறேன். “ஆதி திராவிடன் தான் இந்த நாட்டுக்கே முழு உரிமை உடையவன். மற்றவரெல்லாம் அதற்கு அடுத்த உரிமை உடையவர்கள்” என்று சொல்லியிருக்கின்றேன். ஆகவே, அப்படிப்பட்ட நிலையில் இந்தச் சொல் நம்மைக் காப்பாற்றுகிறது. அடுத்து, பகுத்தறிவு இயக்கத்தினுடைய பிரச்சாரம் நடைபெற்ற முறை இருக்கிறதே, அது சாதாரண மக்களிடத்திலே பகுத்தறிவுக் கருத்துகளை மேல் நாட்டினரைப் போலக் கொண்டு சென்றிருக்கிறது. மிகப்பெரிய அறிவாளிகள், அறிவாளிகள் கூட்டத்திலே தான் பேசுவார்கள்.

பகுத்தறிவு இயக்கத்தைப்  பாமர மக்களிடம் கொண்டு சென்றார்

ஆனால், இங்கே அய்யா அவர்கள் பகுத்தறிவு இயக்கத்தைப் பாமர மக்களிடத்திலே கொண்டு சென்றார்கள். (கைதட்டல்). அந்தப் பாமர மக்களிடத்திலே கொண்டு சென்றது இரண்டு அடிப்படையில் - ஒன்று, பகுத்தறிவு இயக்கம் பாமரர்களுக்குத்தான் தேவை. மிக அடிப்படையான தேவை. இரண்டாவது, பாமரர்கள் விழிப்படைந்து விடுவார்களேயானால், அவர்கள் எண்ணியதைப் பெற்றுவிடலாம். படித்தவர்கள் தங்களுடைய தகுதியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தங்களைவிட அதிகம் படித்தவர்கள் பின்னாலே போனால் தங்களுக்குத் தான் பெருமை. சேரிப்பகுதி மக்களிடம் பழக மாட்டார்கள்

பெரிய பண்டிதர்கள் பின்னாலே சாதாரணப் பண்டிதர்கள் போவார்கள். அதாவது உலகத்தின் இயற்கை - சாதாரணப் பாமர மக்களைத் திரும்பிப் பார்ப்பதில்லை. அதற்கு என்ன காரணம்? பழக்கம், முதல் காரணம். இரண்டாவது, நம்முடைய மரியாதை எங்கே குறைந்து விடுமோ என்று கருதுவார்கள். சேரிப் பகுதியிலே இருக்கிற மக்களிடத்திலே மற்றவர்கள் பழக மாட்டார்கள். அவர்கள் வேண்டுமானால் மற்றவர்களிடத்திலே பழகுவார்களே தவிர, சேரிக்குள்ளே மற்றவர்கள் போக மாட்டார்கள். என்ன காரணம்?

அங்கே போய் விட்டால் நாம் அவரோடு சேர்ந்து விட்டோம் என்று சொல்லுவார்கள். அதாவது, மனப்பான்மை. பயன்படாத அந்த உணர்வு இருக்கிறதே, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தங்களுக்குக் கீழே உள்ளவர்களிடம் பழகாமல் இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால், முஸ்லிம் வீட்டாரிடம் இந்துக்கள் தண்ணீர் குடிக்க மாட்டார்கள், ஒரு காலத்தில் - இப்பொழுது அல்ல. கோமுட்டிச்செட்டியார் திண்ணையில்தான் சாப்பிடுவார் என்னுடைய தந்தையாரின் நண்பர் ஒருவர் கோமுட்டிச் செட்டியார். அவர் நல்ல மனிதர். அவர் எங்கள் வீட்டிற்கு வருவார், கிராமத்தில். அவர் வந்தால் எங்கள் வீட்டுத் திண்ணையில் தான் உட்கார்ந்திருப்பார். வீட்டிற்குள் வர மாட்டார். தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தால் அந்த சொம்பை வாங்கி, அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு, அவர் போய் கிணற்றிலிருந்து நீரை எடுத்து அந்த தண்ணீரைத்தான் குடிப்பார்.

அவரும் சைவர்; நாங்களும் சைவர்; அவரைச் சாப்பிடச் சொன்னால் சாப்பிடமாட்டார். என்ன சொல்லுவார் “அரிசியைக் கொடுத்து விடுங்கள். நானே பொங்கிக்கொள்கிறேன்”  என்று சொல்லுவார். அரிசி, பருப்பைக் கொடுத்தால், அதை வைத்துத் திண்ணையிலே பொங்கி அதைத்தான் சாப்பிடுவார். கோமுட்டிச் செட்டியாரே அந்த மாதிரி. அப்படி இருந்தால் தான், அவருடைய மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று நினைத்த காலம் ஒன்று இருந்தது. இப்பொழுது கோமுட்டிச் செட்டியார்கள் நூற்றுக்கு அய்ம்பது பேர் சுயமரியாதைக்காரர்களாகவே ஆகியிருக்கிறார்கள்.

ஆனால், ஒரு 80 ஆண்டுகளுக்கு முன்னாலே அப்படிப்பட்ட நிலை இருந்தது. ஆக அப்படிப்பட்ட சூழ்நிலையிலே சாதாரண மக்களிடத்திலே போய் சுயமரியாதை இயக்கத்தை - பகுத்தறிவுக் கொள்கையை இன்னும் பரப்பியவர் - சொல்லப்போனால் “ஜாதி இல்லை என்று சொன்னவர்” தந்தை பெரியார் தான். எந்த மனிதனும், இன்னொரு மனிதனை ஒப்பிட்டுப் பார்க்கிற பொழுது இவர் உயர்ந்தவர், அவர் தாழ்ந்தவர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

வெள்ளை நிறத்தவரை விட.....

இன்னும் சொல்லப்போனால் வெள்ளை நிறத்தவர்களை விடக் கறுப்பு நிறத்தவர்கள் தான் பெரிய அறிவாளியாக இருக்கின்றார்கள். பெரிய இசைவாணர், மிகப்பெரிய கலைஞர், மிகப்பெரிய மருத்துவர் எல்லாத்துறைகளிலும் இருக்கிறார்கள். ஆகவே, எந்த மனிதனும் பார்வையினாலே அறிவிலே உயர்ந்தவன் அல்ல. தகுதியிலே குறைந்தவன் அல்லன். மதிக்கப்படக் கூடாதவன்  அல்லன். ஆனால், இந்த நாட்டைப் பொறுத்த வரையில்  தவறான ஓர் எண்ணம். நான் கருக்கமாகத் தான் முடிக்க வேண்டும்.நான் பேசிக்கொண்டே போனால் பயன் குறைந்து விடுமோ என்று கருதுகின்றேன்.

ராஜகுரு, புரோகிதர்களுக்குச் செல்வாக்கு

நம்முடைய நாட்டிலே இறை வழிபாட்டை மய்யமாக வைத்து ஒரு மத ஆதிக்கத்தைக் கொண்டு வருவதற்காக ராஜகுருக்களுக்குக் கிடைத்த செல்வாக்கு, புரோகிதர்களுக்குக் கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு புரோகித ஆதிக்க மதத்தை உருவாக்கினார்கள். அதைத்தான் “இந்து இம்பீரியலிசம்”, என்று சொல்லுவார்கள். அதாவது இந்து மதம் என்கிற பெயராலே பிராமணர்கள் முழு ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு முறையைத் துவக்கினார்கள். நாடு முழுவதும் புரோகிதர்கள் பரவினார்கள். ஏனென்றால், மெல்ல, மெல்லப் புரோகிதர்கள் நாடு முழுக்கப் பரவினார்கள். அந்தக் காலத்தில் புரோகிதர் என்ற பெயர் இருந்ததோ இல்லையோ, இன்னும் சொல்லப் போனால் அய்யா அவர்கள் சொன்ன கருத்துப்படி பிராமணப் புரோகிதர்கள் என்பவர்கள் பிராமணர்களுக்கும், சத்திரியர்களுக்கும் மட்டும் தான் திருமணம் செய்து வைப்பார்கள்.

சூத்திரர்கள் வீட்டுத் திருமணத்திற்கு பிராமணர்கள் வரமாட்டார்கள். வர மறுப்பார்கள். முதலியாராக இருந்தாலும் சரி, செட்டியாராக இருந்தாலும் சரி, சூத்திரர்களுடைய வீட்டிற்கு வரமாட்டர்கள். திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் திருமலை நாயக்கர் மன்னர் காலத்திலேதான், வடநாட்டு பிராமணர்கள் தென்னாட்டிற்கு அதிகமாகக் குடியேறினார்கள் - ஆந்திரப் பகுதியிலேயிருந்து, அப்படிக் குடியேறிவர்களுக்குக் கோயிலில் அர்ச்சகர் வேலை கிடைக்கவில்லை. அவ்வளவு பேர் வந்தார்கள். அவர்கள் என்ன செய்வது என்று பார்த்தார்கள். திருமலை நாயக்கர் மன்னர் முன்னிலையில் ஒரு மாநாடு கூட்டிக் கலந்து பேசி, இனிவடமாநில பிராமணர்கள் பிராமண, சத்திரிய வைசிய அல்லாத சூத்திரர்கள் வீட்டுத் திருமணங்களை எல்லாம் நடத்தி வைக்கப் போகலாம்.

மணமகனுக்கு பூணூல் போட்டு அப்படிப் போகிற பொழுது, அங்கே மணமகனுக்கு ஒரு பூணூல் போட்டு, உயர்ஜாதியாக்கித் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும். திரும்பி வருகிற பொழுது அந்தப் பூணூலை வாங்கி ஒரு கிணற்றிலேயோ அல்லது ஒரு நீர் நிலையிலேயோ போட்டு விட்டுத் திரும்பி வரவேண்டும். அதன் பிறகு அந்த பிராமணர் குளித்துவிட்டு, தீட்டுக் கழித்து விட்டு, வீட்டுக்குள்ளே போக வேண்டும்.

வடமா பிராமணர்கள்

இது வடமா பிராமணர்கள் தவத்தால் அன்றைக்கு ஏற்றுக்கொண்ட தியாகம் (சிரிப்பு-தைகட்டல்). அப்படி அந்த முறை வந்த காரணத்தாலே, என்ன வாய்ப்பு ஏற்பட்டது என்று கேட்டால் கொஞ்சம் வசதியானவர்கள். பிராமணர்களை அழைப்பது என்று முடிவெடுத்தார்கள்.

முக்குலத்தோர் சமுதாயத்தில்

சிவகங்கை வட்டாரத்திலே உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தினர், பிராமணர்களை வைத்துத் திருமணம் நடத்துகிறார்கள். அவர்கள் மத்தியிலேயே, நூற்றுக்கணக்கான சடங்குகள் வைத்திருக்கிறார்கள். அது ஒரிஜினல் மூடநம்பிக்கை (சிரிப்பு). அதே மாதிரி வேறு பல சமுதாயத்திலே அவர்களுடைய சமூகத்தினரை வைத்துக் கொண்டே திருமணத்தை நடத்துகிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த பிராமணர்களை அழைப்பதில்லை. வள்ளுவர், பண்டாரம் என்று அவர்கள் வேறு தனியாக வைத்திருக்கிறார்கள். ஆனால் கோவில்களுக்கு, மேல்தட்டு மக்களிடத்திலே செல்வாக்கு ஏற்பட்டது.

ராஜகுருக்களுக்கு ஏற்பட்ட  செல்வாக்கு

மன்னர்களிடத்திலே ராஜகுருக்களுக்கு ஏற்பட்ட செல்வாக்கு, மற்றவர்களுக்கு ஏற்பட்ட செல்வாக்கு, அதன் விளைவாக அந்தப் புரோகிதர்கள் சொல்லுவது தான் மதம்; வேறொன்று மில்லை. சிவனை வழிபடலாம். அது ஒரு தனி மதமாகக் கூட அண்மைக் காலத்திலே ஏற்பட்டது. ஒரு ஆயிரம் ஆண்டு காலமாகத்தான் அது தனியாக வெளியே தெரிய ஆரம்பித்தது. கோவில்களுக்குப் போவான். இருப்பதைக் கும்பிட்டுவிட்டு வருவான். எதைக் கும்பிடுவான் என்று அவனுக்கே தெரியாது. இப்பொழுது கூட, எத்தனையோ கோயில்களில் என்னென்ன சாமிகள் இருக்கின்றன என்று யாருக்குத் தெரியும்? இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமான சிலை.

மதம் என்பது

ஆக மதம் என்பது கோயில்களுக்குச் செல்வாக்கு ஏற்பட உருவாக்கப்பட்டது. இன்றைக்கு இந்து மதம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இது புரோகித மதம் - பிராமண மதம். பிராமணன் மற்றவர்களை ஆள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட மதம். பிராமணர்கள் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மதம்.

ஆங்கிலேயருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியா

விலே உள்ள மக்களை அடையாளம் காட்டுவதற்கு முஸ்லிம், கிறிஸ்துவர், பார்சி, ஜெயின், புத்திஸ்ட், சீக்கியர் என்று சொல்லுவதைப்போல - இந்து என்று மிச்சமிருக்கிற அனைவரையும் அழைக்கின்ற பழக்கமுண்டு. அந்த இந்து என்கிற பெயருக்கே கூட, ஏறத்தாழ அதில் பார்சி அடக்கப்பட்டார்கள். ஜெயின் மதத்தைச் சார்ந்தவர்கள் ஆட்பட்டிருக்கிறார்கள். நல்ல வேளை அவர்கள் ஒவ்வொருவராக, நாங்கள் இந்து என்று சொன்னால், எங்களை அடையாளம் காட்ட முடியாது. நாங்கள் தனியாக இருக்கிறோம் என்று அண்மைக் காலத்திலே தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

‘சிந்திஸ்’ என்று சொன்னார்கள். ஆனால், “இந்து” என்கிற பெயர் ஆரம்பத்தில் வருகிறபொழுது, சிந்து நதிக்கரையிலே வாழ்கிறவர்களை, பார்சிகாரர்கள் குறிப்பிட்டு எழுதுகிறபொழுது அவர்கள் “சிந்திஸ்” என்று எழுதியது - பிறகு இந்து என்று மாறியது. அப்புறம் வடபுலத்திலே இருக்கிறவர்கள் தான் - இந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். கடைசியாக வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு வந்ததற்குப் பின்னாலே, எல்லோரையும் இந்துக்கள் என்று அழைத்தான். இந்துக்கள் என்ற பெயர் அப்பொழுதுதான் நமக்கு ஒருகேடுபாடு ஏற்பட்டது. இந்து என்று அழைப்பதால் தான் அதை காஞ்சி சங்கராச்சாரியார் எழுதுகிற பொழுது கூட “நல்ல வேளை வெள்ளைக்காரன் வந்து இந்து என்று நம்மை அழைத்ததனாலே தான், நாம் தப்பினோம். இல்லையானால் ஒரே மதமாக நம்மைச் சொல்ல, வழி ஏற்பட்டிருக்காது”

“இந்து என்று எல்லோரையும் அழைப்பதால் தான், ஜெகத்குருவாக இருக்கிறோம்” என்று அவரே சொல்லக்கூடிய அளவுக்கு, வரலாறு இருக்கிறது.  தந்தை பெரியார் அவர்களுடைய தந்தையார் வியாபாரி. நல்ல இலாபம் வரக்கூடிய தொழில். அதிலே, அந்தத் தொழிலிலே பெரியாருக்கு ஓர் ஈடுபாடு. தெளிவான ஓர் அறிவு ஓட்டம் ஆனால், எப்படியிருந்தாலும் அவர் ஒரு சுயசிந்தனையாளர். ரொம்பத்திட்ட வட்டமான தெளிவான ஓர் அறிவு ஓட்டம். அவர் எதைச் சொன்னாலும் சொல்லுகிற பொழுதே சிந்திக்கிற ஆற்றல் பிறவியிலேயே அவரிடத்திலே இருந்தது. அவர் ஒன்றும் படித்துப் பார்த்துப் பகுத்தறிவுவாதியாக ஆகவில்லை.

எதைச்சொன்னாலும் சிந்திக்கிற பழக்கம் ஆனால் பகுத்தறிவு வாதியாக வளர்ந்தார். எதைச் சொன்னாலும் அதைப் பற்றிச் சிந்திக்கிற ஒரு பழக்கம் அவரிடமிருந்தது. யோசிக்க வேண்டும். யோசிப்பது என்று சொன்னால் மறந்து விட்டு யோசிக்கிற கதை அல்ல. இதை ஏன் செய்யணும்? அந்தக்  கேள்வி அவரிடத்திலே பிறந்த காரணத்தால், தானாகவே ஒரு வளர்ச்சி உண்டாகக் கூடிய ஓர் அடிப்படை அவருக்கு ஏற்பட்டது. ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்டார். ஏன்? எதற்கு? எப்படி? என்று ஒரு கேள்வி பிறந்துவிடுமேயானால், அவர்களுடைய அறிவிலே ஒரு வளர்ச்சி ஏற்படும். பெரியார் அவர்கள் இளமையிலேயே இயல்பாகவே அந்த உணர்வைப் பெற்றார். எதை எதையோ போட்டி போட்டுக்கொண்டு செய்யக் கூடாததை எல்லாம் செய்து பார்ப்பார். நான் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டாலும் மன்னித்துக்கொள்ள வேண்டும்.

நான் மாணவனாக இருக்கின்ற பொழுது எனது தகப்பனார் சைக்கிளில் என்னை முன்னாலே உட்கார வைத்து அழைத்துப் போனார். இரவு 8 மணிக்கு சைக்கிளில் விளக்கை கொளுத்தி வைத்து, உட்கார வைத்து என்னை அழைத்துக் கொண்டு செல்லுகிற பொழுது, விளக்கு சுடும் என்று சொல்லுவார். நான் என்ன என்று ஒரு முறை கேட்டிருக்கிறேன். என் விரல் கொப்பளித்து விட்டது. என்னுடைய விரலை எடுத்து இழுத்து அந்த விளக்கிலே வைத்தார். என்னுடைய விரல் கொப்பளித்துப் போய்விட்டது. அவருக்குத் தோன்றிய உணர்வு எனக்குத் தோன்றியது கிடையாது. இந்தச் சூடு பட்டு கை பழுத்துப் போய்விட்டால் அவன் தெரிந்து கொள்வான் என்று நினைத்தார்.

ஆக, அது மாதிரி பெரியாருடைய மனப்பான்மை எதையும் அதனுடைய ஆழமான அடிப்படை என்னவோ - சிந்தித்துப் பார்க்கிற ஒரு பக்குவத்தைப் பெற்றிருந்தார். அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஒரு கடைக்காரர் சின்ன மண்டிக் கடை. அதை தட்டி போட்டு மூடி வைத்துவிட்டு செல்லக்கூடிய கடை. தட்டியைத் தட்டிவிட்டார். அந்தக் கடையில் உட்கார்ந்து, கடை வியாபாரி வியாபாரம் செய்து கொண்டிருப்பார். பெரியார் இளைஞர். அப்பொழுது 12 வயது 15 வயதிற்குள்தான் இருக்கும். அவர் என்ன செய்தார். அந்தத் தட்டியை மெதுவாகத் தட்டி, விட்டார். தட்டி அந்தக் கடைக்காரர் தலையில் விழுந்து அடிபட்டது. “என்னடா, தட்டியைத் தட்டி விட்டாயே என்று அந்த கடைக்காரர் அலறிய பொழுது” - ‘எல்லாம் உன் தலைவிதி’ என்று சொன்னார். இயற்கையாக ஏற்படக்கூடிய ஓர் அறிவு.

தண்ணீர் குடிக்காதே! தீட்டு... அதே மாதிரி இந்த இடத்தில், தண்ணீர் குடிக்காதே தீட்டுப் பட்டுவிட்டது என்று சொன்னால், அங்கே போய் தண்ணீர் குடித்துவிட்டு, ஒன்றும் இல்லையே அம்மா! தீட்டுப் பட்டுவிட்டது என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு பக்குவம் அவருக்கு அப்படி பிடிவாதமாக இருக்கக்கூடியவர். யாரிடம் பழகக்கூடாது என்று சொல்கிறோமோ, அவர்களிடம் பழகக்கூடியவர். இன்னும் சொல்லப்போனால் நல்ல நடத்தை இல்லாதவர்களிடத்திலே கூட, அவர் பழகியிருக்கலாம். அதனால் அவர் கெட்டுப் போகவில்லை. அந்தப் பழக்கத்தினால் உள்ள விளைவுகளை இவர் உணர்ந்தவராக இருந்திருக்கிறார். பெரியார் சீட்டாடுகிற இடத்திலே இருந்திருக்கிறார். வேறு விதமான மது சாப்பிடுகிற இடத்திலே அவர் இருந்திருக்கிறார். ஆனால், அவர் கெட்டது கிடையாது.

இன்னும் சொல்லப்போனால் அவர் அறிவு நம்பாததை எதையும் அவர் நம்பமாட்டார். என் அறிவுக்கு சரியாகப்படவில்லை. சாமி கும்பிடமாட்டார். சாமி கும்பிடு என்று சொன்னால் சாமி எங்கேயிருக்கிறது? எனக்குத் தெரியவில்லையே. ஆகவே நான் நம்பவில்லை என்று சொன்னார். தன் அறிவில் நம்பிக்கை வைத்திருந்தார். தன்னுடைய அறிவிலே ஒரு நம்பிக்கை வைத்திருந்தார். அது பெரிய வளர்ச்சி-சுயவளர்ச்சி.  பேரறிஞர் அண்ணா நீரோடு போய் கரையேறுவார்; தந்தை பெரியார் எதிர்நீச்சல் அடித்துக் கரையேறுவார்.

வைக்கத்தில் போராட்டம்

பெரியாரின் சிந்தனை வளர்ச்சி என்பது சுயவளர்ச்சி. பெரியார் தேசிய காங்கிரசில் ஈடுபட்ட பொழுது, நாட்டுக்கே விடுதலை என்று நினைத்தார். பாரதியார் பாடியதுபோல, பார்ப்பனருக்கும், புலையருக்கும், எல்லோருக்கும் விடுதலை என்று எண்ணிக்கொண்டு அந்த இயக்கத்திலே ஈடுபட்டு, வைக்கத்திலே போய் ஒரு பெரிய போராட்டத்திலே ஈடுபட்டுச் சிறையிலேயே இருந்து, அதன் பிறகு போராட்டம் வெற்றி பெற்று, அங்கே உள்ள தீண்டப்படாத மக்களுக்கு அங்கே உள்ள கோவிலைச் சுற்றியுள்ள தெருவிலே நடக்கிற உரிமை மறுக்கப்பட்ட பொழுது, பெரியார் போராடினார். அப்பொழுது அங்கே உள்ள காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் எல்லாம் பெரியார் ஈ.வெ.ராமசாமி வந்ததனாலே தான் எங்களுடைய போராட்டம் வெற்றி பெற்றது என்று சொல்லக்கூடிய அளவுக்கு, ஜார்ஜ் ஜோசப் என்று ஒரு தலைவர் இருந்தார். அவர் பாராட்டக் கூடிய அளவுக்கு ஒரு பெரிய வெற்றியைப் பெற்றார் பெரியார். தனது தென்னை மரங்களை வெட்டினார்

மது விலக்குக் கொள்கையை ஆதரித்து அதற்காகப் பெரியார் அவர்கள் தனது சொந்த தென்னை மரங்களை எல்லாம் வெட்டினார். இழப்பு ஏற்படுவதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. அதற்குப் பிறகு கதர்த் தொழிலைப் பரப்பினார்.

காங்கிரஸ் கட்சியிலே இருந்து வெளியேறுகிறார்

காங்கிரஸ் கட்சியினாலே வரக்கூடிய விடுதலை வரும் என்ற நம்பிக்கையிலே இருந்தபொழுது, அதே காங்கிரஸ் கட்சி அவ்வளவு பெரிய விடுதலைக்குப் போராடக்கூடிய கட்சி. தமிழ்நாட்டிலே அன்றைக்கு இருந்த சென்னை மாகாணத்திலே பிராமணியத்தின் தலைமையில்தான் அந்தக் கட்சி இருக்கிறது என்று கருதி, ஒரு முறைக்கு இருமுறை திரும்பப் திரும்பப் பார்த்து அதை மாற்றுவதற்கு முயற்சித்து, சிந்தித்து நூற்றுக்கு அய்ம்பது இடமாவது - பாதி இடமாவது பர்ப்பனரல்லாதாருக்கு உத்தியோகத்தில், ஆட்சியில்  இடம் வேண்டுமென்று கேட்டு, 1922, 1923, 1924 மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தீர்மானம் கொடுத்து, திரு.வி.க உள்பட அந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டார். பின்னர் மறுத்தார். கடைசியாக 1925ஆம் ஆண்டு காஞ்சிபுரத்திலே காங்கிரஸ் கட்சியை விட்டுப் பெரியார் வெளியேறி விட்டார். அப்பொழுது அவருடைய மனதிலே ஆழமாகப் பட்ட கருத்து என்ன? காங்கிரசிலேயிருந்து வெளியேறியது மிகச் சாதாரணம்.  வைதிகத்திலிருந்து வெளியேறினார்.

வைதிகத்தை எதிர்ப்பதற்கு அதுதான் தொடக்க விழா. வைதிகப் பிடிப்பு காங்கிரசிற்கு இருக்கிறது. கோவிலுக்குப் போகிறவர்கள் அவர்கள்தான். மக்களின் மனப்பான்மையிலும் இருந்தது. அந்த மனப்பான்மையை வீழ்த்த வேண்டும் என்பதால்தான் தமிழன் தலைநிமிர முடியும் என்ற எண்ணம் இருந்தது. காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் பெரியார் மனதிலே பதிந்தது. அதற்குப் பின்னர் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். ஞானியார் அடிகளாரை வைத்துத்தான் “குடிஅரசு” தொடங்கப்பட்டது.

பச்சை அட்டை “குடிஅரசு”

இன்னும் சொல்லப்போனால், அந்த நாட்களிலே “குடிஅரசு” வருமேயானால் பச்சை அட்டை குடிஅரசு என்று தான் அதற்குப் பெயர். “நவசக்தி” வேறு ஒரு காக்கி கலரில் இருந்தது. அந்த பச்சை அட்டை “குடிஅரசு” ஏட்டைத் தோழர்கள் தீவிரமாக விரும்பிப் படிப்பார்கள். பெரியார் அவர்களுக்கு இப்படிப்பட்ட கருத்துகளைச் சொல்லுவதில் ஒரு பெரிய மகிழ்ச்சி. அவர் உடல் நலம் கெட்டிருந்தால் கூட, இதைப் பேசினால், அவருடைய உடம்பு தெம்பானதற்குக் காரணம் மகிழ்ச்சி - அதாவது பகுத்தறிவு வாதம் பேசுவதிலே ஒரு மகிழ்ச்சி.

பெரியாருக்கு ஒரு மகிழ்ச்சி

பார்ப்பனியத்தைக் கண்டிப்பதிலே ஒரு மகிழ்ச்சி, ஜாதியை ஒழிப்பதிலே ஒரு மகிழ்ச்சி, தீண்டாமையை ஒழிப்பதிலே ஒரு மகிழ்ச்சி. இதை அவர் ‘எஞ்சாய்’ பண்ணினார். இதைப் பேசுவதற்காக அவரே பணம் கொடுத்துப் பேசுகிற அளவுக்குத் தயாரானார். (சிரிப்பு). அவர் சொன்ன ஒரு வார்த்தை நான் எனக்காக சிந்திக்கிறேன். நானே அச்சடித்து நானே படிப்பேன். நான் எனக்காகப் பேசுகிறேன். நான் எனக்காகப் பேசுவதை நீ உனக்காகக் கேள். சரி என்று பட்டால் ஒத்துக் கொள். இல்லாவிட்டால் விட்டு விடு. அதே மாதிரி பத்திரிகை ஏராளமாக விற்பனையாகாமல் இருந்தபொழுது, “குடிஅரசு” ஏட்டிற்காக நானே கட்டுரைகளை எழுதுவேன். நானே அதை அச்சுக்கோத்து அச்சடிக்கச் செய்வேன். நானே மடிப்பேன்; பிறகு நானே அதை பிரித்துப் படிப்பேன். அப்படிப்  பிரித்துப் படித்துவிட்டுத் திரும்ப நானே படித்துக் கொள்வேன். யார் வாங்கினாலும், வாங்காவிட்டாலும் “குடிஅரசை” எனக்காக அச்சடித்துப் படிப்பேன் என்று சொன்னார்.  அப்படியானால் அவருடைய அடிப்படை உரிமை என்ன?

வெற்றி, தோல்வி பற்றிக் கவலைப்படமாட்டார். வெற்றி தோல்வி என்பதை எல்லாம் பார்க்க மாட்டார். எவ்வளவு பேர் வருகிறார்கள், எவ்வளவு பேர் சேருகிறார்கள் என்று அந்தக் கணக்கைப் போட்டு அவர் பார்க்க மாட்டார். பகுத்தறிவைப் பேசுவது, அதைப் பரப்புவது அவருக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி; பெரிய இன்பம். இன்னும் சொல்லப்போனால் அவர் 95 வயது வரை ஆரோக்கியமாக இருந்தார் என்றால், பகுத்தறிவைப் பேசியதால் தான் ஆரோக்கியமாக இருந்தார். (கைதட்டல்). அதாவது, ஆநவேயட சுநடநைக என்று சொல்லுவார்கள். சிந்தித்துப் பார்க்கிறவர்களுக்கு இன்னின்ன அநீதி என்று சொல்லுகிறபொழுது, அநீதியை எதிர்ப்பதற்கு நான் இதைப் பேசினேன். பேசுவதிலேயே ஒரு சந்தோஷம்.

யாராவது தொழில் சரியில்லை என்று சொல்லி வீட்டிற்குப் போனால், மனைவியிடம் சண்டைபோடுவான். மனைவியிடம் ஏன் சண்டை போடுகிறான் என்றால், அவனுடைய மனநிலை சரியில்லை. அவனுடைய மனது, கோப தாபத்தில் இருப்பதால் மனைவியிடம் கூட ஒத்துப் போக முடியாமல் சண்டை போடுவான். ஒன்றும் புரியாமல் பேசிக்கொண்டிருப்பான். மனசாட்சி எதுவோ... அது மாதிரி  மனம் பல பேரை பாதிக்கும். பெரியாருடைய மனசாட்சி எதுவோ, அதன்படி தான் பேசுவார். அதனால்தான் அவரால் மெல்ல, மெல்ல, வெற்றி பெற முடிந்தது. அந்த வெற்றி கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் கூட, வர வர அவருடைய கருத்துகள் வலுப்பெற்றுக் கொண்டே வந்தன.  வளர்ச்சி அடைந்தது. இன்னும் ஒருபடி மேலே, போய்ச் சொன்னால் இயக்கத்தைச் கட்டிக்காப்பாற்றினார்

“ஒர் இயக்கம் என்ற முறையில் சுயமரியாதை இயக்கத்தை அவர் கட்டிக் காப்பாற்றினார். எதையும் எல்லோரும் சேர்ந்து  தீர்மானிப்பது என்பது கூட இருக்காது. அவரே தான் தீர்மானிப்பார். அவர் சொன்னதைத்தான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.” டபிள்யூ, பி.ஏ. சவுந்திர பாண்டியன் கூட அதில் கொஞ்சம் மாறுபாடு கொண்டவராக இருநதார் என்பதெல்லாம் உண்மைதான்.

பெரியாருடைய இயற்கை

உண்மைதான் என்றால் இது அவருடைய இயற்கை. பெரியாருடைய இயற்கையை நாம் என்ன செய்ய முடியும்? நான் தீர்மானித்துச் செய்வது தான் சரி. மற்றவர்கள் சொல்லுவதைக் கேட்க வேண்டும். சேர்க்க வேண்டும் என்பது அவசியமில்லை. அதுதான் அவருடைய கொள்கைக்குப் பாதுகாப்பு என்று கருதினார். அவர் எதைத் தன்னுடைய கொள்கை என்று நினைத்தாரோ அதற்கு, அதுதான் பாதுகாப்பு”.

பெரியாருக்கும் - அண்ணாவுக்கும்

அண்ணாவுக்கும், அய்யாவுக்கும் உள்ள ஒரே ஒரு வேறுபாடு என்னவென்று கேட்டால், அண்ணா அவர்கள் கூட, அவர் நினைப்பதைக் கூட நிறைவேற்றுவார். ஆனால் அவர் நினைத்தது தான் என்று சொல்லிக் கொண்டிருக்கமாட்டார். எல்லோரும் சொல்வதையும் கேட்டுவிட்டு, அவர் நினைப்பதையும் சொல்லி, மற்றவர்கள் எல்லோரையும் ஒத்துக் கொள்ள வைத்துவிடுவார். ஒத்துக்கொண்டதற்குப் பின்னாலே, ஜனநாயக ரீதியாக அவர் அதை நிறைவேற்றுவார். ஜனநாயக ரீதியாக சில இடங்களில் விட்டுக்கூடக் கொடுப்பார்.

தன் லட்சியத்தில் உறுதி

ஆனால், அய்யா அவர்கள் எப்பொழுதும் தவறிப்போனதில்லை. தன்னுடையச்  இலட்சியத்தில் உறுதியாக இருப்பார். அந்த முடிவினாலேதான் மணியம்மையார் அவர்களுடைய திருமணத்தின் பெயராலே வெளியே வந்தபொழுது, “என்னுடைய இலட்சியத்தை நிறைவேற்ற நான் ஒரு வழிதேடிக் கொள்கிறேன் என்று சொன்னார். இன்னும் சொல்லப்போனால்  பெரியாருக்கு வயது ஆக ஆக தனக்குப் பின்னால் இந்தக் கொள்கை காப்பாற்றப்பட வேண்டுமானால் இப்படிப்பட்ட ஒரு முறை இருக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்த்தார். (கைதட்டல்). அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அது இயற்கை. (கைதட்டல்).

பெரியாரைவிட உலகில் ஒரு தலைவர் கிடையாது.

நாம் சொல்லவேண்டியதைச் சொல்லுவோம் என்ற மனப்பக்குவம் இருந்த காரணத்தால், ஓர் உறுதி இருந்த காரணத்தால் அவர் துணிந்து தன் வழியிலேயே சென்றார். இப்பொழுது கூட நான் சொல்லிக்கொள்கின்றேன். பெரியார் ஒரு தனி மனிதர். பெரியாரை விட பெரிய தலைவர் உலகத்திலே வேறு யாரும் கிடையாது. (பலத்த கைதட்டல்). மற்றவர்கள் எல்லாம் நான்கு பேரோடு சேர்ந்து என்ன செய்வது அதற்கு ஒரு நியாயம் இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. இதற்கு ஒரு நியாயம் இருக்கிறது.

பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் நம்பிக்கை எதிர்ப்பு, மத எதிர்ப்பு இவ்வளவையும் பேசிக்கொண்டிருக்கிற ஒரு தலைவருக்கு ஓர் ஆழமான கருத்து ஊன்றியிருக்குமானால் அந்தக்கருத்துக்குத் தான் அவர் முக்கியத்துவம் தருவார். அந்தக் கருத்துதான் அவரை ஆளும்; அந்தக் கருத்து அவரை ஆண்டு கொண்டிருக்கிறது. வீரமணி அவர்கள் பேசுகிறபொழுது எனவே, அவர் அப்படி ஆற்றுகிற தொண்டின் காரணமாகத்தான் நம்முடைய  ஆசிரியர் வீரமணி அவர்கள் பேசுகிறபொழுது கூட தமிழ்நாட்டிலே இவ்வளவு பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.

நம்மை உருவாக்கியவர் பெரியார்

இங்கே இருக்கிற மாற்றங்கள், அரசாங்க சாதனைகள் என்று சொல்லுவதை விட இவ்வளவு பெரிய கூட்டம் சென்னைப் பல்கலைக் கழகத்திலே பெரியாரைப் பற்றி, வீரமணி தலைமையிலே அன்பழகன் பேசுகிறேன் அதற்கு இவ்வளவு படித்தவர்கள் வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், நம்மை உருவாக்கியவர் பெரியார், அதனால் இங்கே வந்திருக்கிறீர்கள். தந்தை பெரியாராலே ஏற்பட்ட உணர்வுதான் இவ்வளவு பேரை ஒன்று சேர்த்திருக்கிறது. இப்படிப்பட்ட இடத்திலே உட்கார வைத்திருக்கிறது. இதே பல்கலைக்கழகததிலே தமிழுக்கு இடம் இல்லை என்று பேராசிரியர்கள் போராடிக் கொண்டிருந்த காலமெல்லாம் உண்டு.

சமற்கிருதம் படித்தால் தான் சமற்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவப்படிப்புப் படிக்க முடியும் என்று ஒரு காலம் இருந்தது.  தமிழ் தெரிய வேண்டும் என்கிற அவசியமே இல்லை. எவ்வளவு பெரிய மாற்றங்கள் வந்திருக்கிறதென்றால், ஆச்சரியம். ஆனால், இப்பொழுதும் அதைத் தமிழன் உணராமல் இருக்கிறானே, அது அதைவிடக் கொடுமை (கைதட்டல்). வந்த மாற்றங்கள் பல. சமூகநீதிக் கொள்கை ஒன்றை எடுத்துக் கொண்டால், சர்.பிட்டி.தியாக ராயரிலிருந்து தொடங்கி, டி.எம்.நாயர் வாதாடி, டாக்டர் நடேசனார் ஆதரித்து, அன்றைக்கு இருந்த சட்டமன்றத்திலே அதற்காகவே பல கேள்விகளைப் பல தலைவர்கள் கேட்டுத் தொடர்ந்து குரல் கொடுத்தனர்.

முத்தையா முதலியார், ‘கம்யூனல் ஜீ.ஓ’வை முதன் முதலாக வெளியிட்டு அப்புறமும் அதற்கு எவ்வளவோ குறைபாடுகள் ஏற்பட்டன. கம்யூனல் ஜீ.ஓ. பெருமை பெரியாரையே சாரும். 1951இல் அரசியல் சாசனப்படி நீக்கி வைக்கப்பட்டு, கம்யூனல் ஜி.ஓ.செல்லாது என்று அறிவிக்கப்பட்டு, அதற்குப் பிறகு பெரியார் போராடி, அண்ணா போராடி அன்றைக்கு காமராஜர் முதலமைச்சராக இருந்தார். பிரதமர் நேரு அவர்களைப் பார்த்து கம்யூனல் ஜி.ஓவைப் பற்றி எடுத்துச்சொல்லி, அதன் பின்னர் அரசியல் சட்டம் முதன் முதல் திருத்தப்பட்டது என்று சொன்னால், அது தந்தை பெரியார் அவர்களையே சாரும்.

ஒரு பெரிய மரத்தை ரம்பத்தால் அறுக்கும் பொழுது விரல் சிக்கிக் கொண்டால் எப்படியோ, அப்படி அந்த கம்யூனல் ஜி.ஓவை பெரியார் மீட்டெடுத்தார். திராவிடர் இயக்கத்தினர் நடத்திய போராட்டம்; அதற்கு ஆதரவாக சில காங்கிரஸ் தலைவர்கள் இருந்தார்கள் என்பது  உண்மை. இன்றைக்கு அந்த இடஒதுக்கீட்டினால் எல்லா இடங்களிலும் இடஒதுக்கீடு கிடைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. அடித்தட்டு மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மையின மக்கள், எல்லோரும் எல்லா இடத்திலும் இருக்கக் கூடிய ஒரு பெரிய மாற்றம் வந்திருக்கிறதே இது என்ன சாதாரணமா?

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அன்றிருந்த நிலை

நான், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபொழுது அங்கு இருந்த பார்ப்பனரல்லாத மாணவர்களின் எண்ணிக்கை மொத்தம் நூறு பேர் தான். 300 பேர் பிராமண மாணவர்கள் இருந்தால், 100 பேர் பார்ப்பனரல்லாத மாணவர்கள் இருந்தனர். இன்றைக்கு எத்தனை ஆயிரம் மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே, சென்னைப் பல்கலைக் கழகத்திலே படிக்கிறார்கள், நம்மவர்கள். பல்கலைக் கழகங்களே அதிகமாகியிருக்கின்றன. பிராமண ஆதிக்கம் எண்ணங்களில் இன்னும் மாறுபடவில்லை. நம்முடைய எண்ணங்களிலும் இருக்கிறது. நம்முடைய மனப்பான்மையிலும் இருக்கிறது.

திராவிடனாக நம்மை உயர்த்தினார்

ஆகவே, பெரியார் அவர்கள் தமிழனைக் கண்டுபிடித்தார். அவனைத் திராவிடனாக உயர்த்தினார். சமூக நீதியை நிலைநாட்டினார். அரசியலிலே பெரிய மாற்றம் வருவதற்குப் பெரிய அடிப்படையை வகுத்துக் கொடுத்தார். அவர் ஆளுங்கட்சியாக இருந்தாலும், அவர் ஆதரிப்பது அவருடைய ஒரே நோக்கம் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பார்ப்பனரல்லாதார் சமுதாயத்திற்கு நன்மை செய்வது (கைதட்டல்). பார்ப்பனருடைய ஆதிக்கத்தை ஒழிப்பது, குலக்கல்வித்திட்டத்தைத் தடுப்பதற்குத்தான் காமராஜரை ஆதரித்தார் பெரியார். காமராஜரை ஆதரித்தார்; அண்ணாவை எதிர்த்தார். திமுக-வை எதிர்த்தார். ஆனால், அவரைப் பொறுத்தவரையில் அவர் எண்ணுவதே அவருடைய இனநல எண்ணத்திற்காக

யார் சொன்னாலும் சரி

அன்பழகன் சொன்னாலும் சரி, கருணாநிதி சொன்னாலும் சரி, எது நியாயம் என்று அவருக்குப் படுகிறதோ அதைத்தான் செய்வார். தன்னைச் சார்ந்த மக்களுக்கு, தமிழனுக்கு, தாழ்த்தப்பட்டவனுக்கு, ஒடுக்கப்பட்டவனுக்கு எந்த ஆட்சி இருந்தால் நன்மையோ, அதற்காக அவர்களை ஆதரிப்பார். அவருடைய மனப்பான்மைப்படி எது நியாயமோ, எது உண்மையோ அவற்றை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுவார். அவர் எதைப்பற்றியும் கவலைப் படமாட்டார். அந்த தைரியம் அவருக்கு இருந்தது. யார் என்ன சொன்னாலும் எனக்கென்ன கவலை என்று சொல்லவில்லையே தவிர, அந்த மனப்பான்மை அவருக்கு இருந்து.

அண்ணா, நீரோடு போவார்; பெரியார் எதிர்நீச்சல் அடிப்பார்

எதிர் நீச்சலில் இருக்கின்ற ஒருவருக்கு யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தால்தான் எதிர்நீச்சல் போட முடியும். அண்ணா வெள்ளத்தோடு போய் கரையேறுகிறார். பெரியார் வெள்ளத்தை எதிர்த்து நீந்தி, முடிந்தால் கரையேறுகிறவர் (கைதட்டல்). ஒவ்வொருவருடைய மனப்பான்மை ஒரு மாதிரி. நான் என்னைப் பொறுத்தவரை பேசினால், நான் எவ்வளவு மாறுபட்டும் பேசுவேன். ஆனால் பழகும் பொழுது என்னால்  மாறுபட்டுப் பழக முடியாது. எனக்கிருக்கின்ற பழக்கம். வேறு சிலர் இருக்கிறார்கள். பழகும் பொழுது தான் மாறுபடுவார்கள். பேசும் பொழுது மாறுபட மாட்டார்கள் ஆக அது உலகத்தின் இயற்கை.

ஒவ்வொருவரின் மனம் ஒவ்வொரு மாதிரி

ஒவ்வொருவருடைய மனமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆக, தந்தை பெரியாரைப் பற்றி நான் முழு அளவுக்கு நியாயம் செய்து பேசிவிட்டதாக நான் கருதவில்லை. எனக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை. சரியில்லை என்றால் கொஞ்சம் மூச்சு இறைப்பும், இன்னொரு பக்கம் கொஞ்சம் நாள்களுக்கு முன்னாலே பயணம் போய்விட்டு வந்ததினாலே நீர் கோப்பும் இருக்கின்ற காரணத்தினால் நான் வழக்கம்போல் பேசுகிற நிலை இல்லை.

பெரியாருக்கு நான் செலுத்துகின்ற கடமை

தந்தை பெரியாருக்கு நான், செலுத்த வேண்டிய முழுக் கடமையை நான் செலுத்தியதாகக் கருதவில்லை. இருந்தாலும் பெரியாரை நினைத்துப் பார்க்கிற அரிய வாய்ப்பு நல்ல வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, வாழ்க பெரியார் புகழ் என்று வாழ்ததி,  என்னுடைய உரையை நான் நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு நிதியமைச்சர் க.அன்பழகன் உரையாற்றினார்.

நன்றி : “விடுதலை”

Pin It