“என் அன்னைக்கு மூச்சுத் திணறல்! உடனே உயிர்க்காற்றுச் செலுத்தியாக வேண்டும்’’ என்று மருத்துவரிடம் கெஞ்சுகிறேன்; மன்றாடுகிறேன்! ஆனால் மருத்துவர், என் உரையைக் காதில் வாங்கிக் கொள்ளாமலேயே, “அன்னையின் மூக்கு ‘சப்பை’யாக உள்ளது; உதடு தடிப்பாக உள்ளது; கை முடங்கி உள்ளது; இவற்றைச் சீர் செய்ய வேண்டும்’’ என்கிறார். என் அன்னை நிலை என்ன ஆகும்? என் உணர்வும் பின்விளைவும் என்ன என்ன ஆகும்?

இன்று இந்த நிலை மெய்யாக உண்டு என்றால் அது, தமிழ் மொழியை ஆட்சிமொழியாகவும், பயிற்று மொழி யாகவும் ஆக்குவதற்குரிய முயற்சியில் தமிழ்ப் பற்றாளர்களும், தமிழ் அறிஞர்களும் முழுமையாக ஈடுபடாமல், தமிழெழுத்துச் சீரமைப்புப் பற்றிப் பேசியும் எழுதியும் வருவதேயாம்!

மூச்சுக்காற்றுப் போன்றது தமிழ் மொழியை ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் ஆக்குவது, உடனடி யாகச் செய்ய வேண்டியது! இன்று செய்யத் தவறினால், என்றும் ஈடுசெய்ய முடியா இழப்பை ஆக்காமல் தீராதது.

“தமிழைத் தன் வேலியாகக் கொண்டது எதுவோ அதற்குப் பெயர் தமிழ்நாடு’’ என்பதைத், “தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம்’’ என்று கூறுகிறது பரிபாடல். தமிழை ஒழிய விட்டு விட்டு, அதன் எழுத்துச் சீரமைப்புப் பற்றிப் பேசுவதா உடனடித் தேவை?

‘எதிரதாக் காக்க’ வேண்டுவது எது? வந்த பின் ஆக்க வேண்டுவது எது? இவற்றை அறிந்து கொண்டு கடமை புரியவில்லை எனில், ‘அதிர வருவதோர் நோய்க்கு ஆட்பட்டே தீர வேண்டும்’ என்னும் பொய்யா மொழியை அறிந்தவர்கள்தாம், எழுத்துச் சீரமைப்பில் அக்கறை காட்டுபவர்கள்!

குட்டிக் குட்டித் தீவுகள்

இப்பொழுது உடனடித் தேவை, ஒரு சிறு பரப்புடைய - சுருங்கிப் போன - தமிழகத்தின் ஊடே ஊடே ஆங்கிலக் குட்டிக் குட்டித் தீவுகளைப் போட்டி போட்டுக் கொண்டு ஆக்கித் தமிழ் நிலத்தை இந்தியப் படத்தில் இல்லாமல் ஆக்குவதன்று; என்றுமுள தமிழகமாக நிலை பெறுத்தும் கடமையே!

கொலைக் கொடுமைக்குக் கூட எத்தகைய குறிபார்ப்பு - ஒருமித்த நோக்கு! அவ்வொருமித்த செயற் பாட்டை மொழிக்காவற்குச் செலவிட வேண்டும்தானே! கலைக்கடமைக்கு எவ்வளவு ஒருமிப்பு வேண்டும்!

கலைச்சொல் இல்லை, நூல் இல்லை, பயிற்றுவார் இல்லை, பொதுமக்கள், மாணவர் ஆர்வம் இல்லை, அரசுப் பொருள் நிலை இடந்தரவில்லை - இப்படிச் சொல்லியே ஏறத்தாழ எழுபது ஆண்டுகள் பாழாக்கப்பட்டுவிட்டன. இனி, எழுத்துச் சீரமைப்பு என்னும் புதுத்தடையால் எண்பது ஆண்டுகளை வீணடிப்பதா செய்யத்தக்க செம்பணி?

பிளவுபட்ட கூரை பிழைக்காது

எழுத்துச் சீரமைப்புப் பற்றிப் பேசுவார் நல்ல தமிழ்ப் பற்றாளரே; ஐயமில்லை. அவர்கள் ஆழங்கால் பட்ட தமிழறிஞர்களே; மாற்றுக் கருத்து இல்லை! அவர்கள் தேர்ந்து தெளிந்து காலமெல்லாம் கடமை புரிந்த துறை களில் எல்லாம் “பாரீர் பைந்தமிழை! எம் துறைப் பயிற்று மொழியும், எம் துறை ஆட்சி மொழியும் எம் தமிழே என ஆக்கிவிட்டோம்; இப்பொழுதும் அத்துறைக்கு வேண்டும் வள நூல்களைப் படைத்துப் பிற மொழியாளர் வியக்கவும், மொழிபெயர்ப்புச் செய்யவுமாம் பணியிலேயே ஆழ்ந்துள் ளோம்’’ என்னும் மொழி வீறு காட்டினால் அவர்களை அப்பரடிகள் போல, “யாம் வணங்கும் கடவுளாரே!’’ எனப் பாராட்டுவோம்! ஆனால், “பிளவுபட்ட கூரை பிழைக்காது’’ என்னும் ஆபிரகாம் லிங்கன் உரைக்குச் சான்றாக அல்லவோ செயல்கள் நிகழ்கின்றன!

தமிழ்நாட்டு அரசு பயிற்று மொழியாக அறிவியலைப் பொறியியலை ஆக்கினால், நடுவண் கல்விக்குழு ஏற்கவில்லை என்றால் துறைவல்ல இவ்வறிஞர்கள், அரசைத் தட்டி எழுப்பி, நடுவண் கல்விக் குழுவுக்குரிய தடையை அன்றோ தகர்த்துப் பயிற்று மொழியாக்கும் ஒருமுகச் செயற்பாடு செய்ய வேண்டும்! “அரசைக் கலைக்கக்கூடாது’’ என்பதற்கு எத்தனை முழக்கங்கள்? அவ்வாறு, “பயிற்று மொழி ஆவதைத் தடுக்கக் கூடாது’’ என ஒரு முழக்கம் இல்லாமை ஏன்?

8-2-1934இல் உசுமானியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நவாபு மாடியார் சங்கு பகதூர் நிகழ்த்திய பேருரையின் ஒரு பகுதி:

“எமது தாய் மொழியில் கல்வி வழங்குவம் எனப் பல்கலைக்கழகம் கூறிய பொழுது, பல்வகைத்தான எதிர்ப்புகள் இங்குத் தோன்றின. ‘சிசுக் கொலை’ புரிவோர் சிலர், கழகத்தின் கழுத்தை உடனே முரித்துவிட எண்ணினர். சிலர் சொல் வளம் நிரம்பாத இந்துத்தானி மொழி, புதுக் கருத்துகளைக் கூறமுடியாது தடுமாற்றமுறும் எனவும் அம்மொழியைக் கருவியாகக் கொண்டு கற்பிக்க முயலும் கலைக் கழகமும் உருப்படாது மாய்ந்தொழியும் எனவும் கூறினர். மற்றும் சிலர் ஆங்கில நாட்டிலுள்ள கலைக் கழகங்களின் நன்மதிப்பைப் பெற மாட்டாதென நினைத் தனர். யானோ, இக்கலைக் கழகத்தாரின் புதுக்கொள்கையில் முழு நம்பிக்கை வைத்தேன்.... பத்தாண்டுகள் ஆயின... கழகந்தோன்றிய காலத்தே பலர் உள்ளத்தும் விளைந்த ஐயப்பாடுகள் யாவும் அகன்று ஒழிந்தன. புதுக் கலைகள் எல்லாம் மிக எளிதில் தாய்மொழியில் கற்பிக்கப்படுகின்றன. இக்கழகத்தே தேர்ச்சி பெறுபவர் இந்தியாவிலும் இங்கிலாந் திலும் உள்ள கலைக் கழகங்களின் தேர்வுகட்கு எவ்வாற் றானும் தாழவில்லை என மதிக்கப்படுகின்றனர்’’ என்கிறார்.

அயல்மொழிகட்கு அடிமை

1934இல் சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நெல்லையில் நிகழ்ந்தது. அதன் தலைவர் தமிழவேள் உமாமகேசுவரனார். அவர் இச்செய்தியை எடுத்துக் காட்டியதுடன், “செயற்கரிய கருமமெனத் தமிழர் கருதும் செயல்களை உசுமானியப் பல்கலைக்கழகத்தினர் பத்தாண்டு களில் மிக எளிதில் இயற்றியதன் பொருட்டென்ன? உண்மையான மொழிப்பற்றும் தன்னம்பிக்கையும் எண்ணிய கருமத்தை எவ்வாற்றானும் இயற்றுவோம் என்னும் மனத்திண்மையும் அல்லவா! தமிழன்பர் என மகுடமிட்டுக் கொண்டவரிடத்து இத்தகைய பெற்றிமைகள் காணப்படு கின்றனவா? புதுக் கருத்துகளைப் பேசுதற்குச் சொல்லில்லை எனவும், எழுதுதற்கு எழுத்தில்லை எனவும் பழி தூற்றி அயல் மொழிகட்கு அடிமைகளாய் இருக்கின்றனர்’’ என்றார்.

ஒரு திருவிளையாடல் காலம் (64) ஆகியும், தமிழ் நிலை, அதே திருவிளையாடல் நிலையில்தான் உள்ளது.

இப்பொழுது உடனே தமிழுக்கு வேண்டுவது பயிற்று மொழி ஆவதும் ஆட்சி மொழி ஆவதுமே! சுவரை எழுப்பு வோம்! பின்னே தேவைப்படும் வண்ணமும் வனப்பும் தீட்டுவோம்!

“எழுத்துச் சீர்திருத்தம் புதியது இல்லை. பன்முறை எழுத்துச் சீர்திருத்தம் செய்யப்பட்டதே; அவ்வகையில் யாம் செய்யக் கருதும் வடிவமைப்புச் சீர்திருத்தம் வழிவழி வருவதே’’ என்று திருத்தியர் ஒரு கருத்தை முன் வைக்கின்றனர். இது மயக்கக் கருத்தாம்.

எவ்வொருவரும் எவ்வொரு வேளையிலும் இப்படி வரிந்து கட்டிக் கொண்டு - தருக்கம் செய்து கொண்டு - புற்றீசல் போலப் பொத்தகங்களை வெளியிட்டு அவரவர் நோக்குக்கெல்லாம் கோல விளையாட்டு விளையாடி எழுத்துச் சீர்மை செய்தது இதுவரை இல்லை. செய்ய முற்பட்டதும் இல்லை.

அச்சரங்கம் ஏறியது

அகரத்தை நெடிலாக்க ஆகாரத்தில் கீழ்ச்சுழி இட்டாற்போல, இகரத்தை ஈகாரமாக்க மேற்சுழி இடப் பட்டது. அதனை நிலைக்காலாக்கியவர் வீரமாமுனிவர். ஆனால், அவர் காலத்தெழுந்த ஏட்டெழுத்தில் பழைய வடிவமே அமைந்துள்ளது. அச்செழுத்தில் அமைக்கப்பட்ட மாற்றம், நாம் விரும்பினாலும் பழைய வடிவில் ஈகாரத்தை இன்று கொண்டு வர இயலாமை போல ஆயிற்று. 1835வரை கிறித்தவ வெளியீடு தவிரப் பிற வெளியீடுகள் அச்சுச் சட்டத் தால் தடுக்கப்பட்டிருந்தன. அத்தடைக்கு விலக்காகத் திருக்குறள் மூலம், நாலடியார் மூலம் என்பவை மட்டும் நீதிபோதனைக்காக வெளிப்பட்டன. ஆதலால் அச்சில் ஏறிய ஈகாரம் நிலைபெற்று விட்டது. ஊரைக் கூட்டாமலே, அறிவரங்கம் காணாமலே அச்சரங்கம் ஏறி நிலைபெற்றது.

ஏ, ஓ என்பவை நெடில். இவற்றின் கோடும் சுழியும் புதிதானவை. எ, ஒ என இருந்தவை, குறில் நெடில் விளக்கம் கருதி எகரத்தில் கீழ்க்கோடும், ஒகரத்தில் கீழ்ச் சுழியும் சேர்க்கப்பட்டன. பழைய எ, ஒ குறிலாக வைக்கப் பட்டன. அவற்றின் மேல் வைக்கப்பட்ட புள்ளிகள் நீக்கப் பட்டன. இவையெல்லாம் புதிய சீர்திருத்தம் என்றோ, பெரிய மாற்றம் என்றோ மக்களால் எண்ணப்படாமல் ஏற்கப்பட்டவை.

இனிப் பெரியார் சீர்திருத்தம் என்பது அவர் காலத்திற்கு முன்னரே வழக்கில் இருந்தவை. கல்வெட்டுச் சான்றுகள் உள்ளவை. நாஞ்சில் நாட்டுக் கல்வெட்டுகளால் கவிமணி தேசிக விநாயகர் எடுத்துக்காட்டியுள்ளவை.

க், ங், ச், ஞ், ட், த், ந், ப், ம், ய், ர், வ், ழ், ற் எனும் பதினான்கு மெய்களும் ஐகாரம் ஏறக் கை, ஙை, சை என்றாயின. ஐகார அடையாளமாக இரட்டைச்சுழி (¬) அமைக்கப்பட்டு வந்தன. அப்படியே ண, ல, ள, ன என்னும் நான்கு எழுத்துகளும் ‘¬’ என்னும் இரட்டைச் சுழிகளே பெற்றிருந்தன. இந்த நான்கு எழுத்துகளும் மற்றை எழுத்துகளின் வேறுபட்டவை. சுழிகளால் அமைந்தவை. ‘ண’ மூன்று சுழி. ‘ல’ ஒரு சுழி. ‘ள’ ஒரு சுழி. ‘ன’ இரண்டு சுழி. இச்சுழி எழுத்துகளோடு இரண்டு சுழித்துணை எழுத்து ஒட்டும்போது, மூன்று சுழி ஐந்து சுழியாகவும், இரண்டு சுழி நான்கு சுழியாகவும் ஒரு சுழி மூன்று சுழியாகவும் மாறிவிடும் அல்லவா! இச்சுழிகளுள் ஒவ்வொன்றைக் குறைக்கும் வகையால் மேலே துதிக்கையாக்கினர். ‘வ’ என்பது சுழியுடைய எழுத்தாக இருப்பினும் அதற்குத் துதிக்கை இட்டால் லகரத்தோடு மயக்கம் ஏற்படுத்தும் என எண்ணி மற்றைப் பதின்மூன்று எழுத்துகள் போல் வைத்துக் கொண்டனர். ‘ல’ என்பதற்குப் பின்னே வருவது ‘வ’ என்பதை எண்ணின் ‘ல’ மாற்றம் பெற்று ‘வ’ மாற்றம் பெறா உண்மை விளங்கும்.

பார்த்த பார்வையில் இவ்வடிவத் திருத்தம் வாய்ப்புக் கருதி மாற்றப்பட்டவை என்பதும்,அதனைப் பழைய வடிவில் ஆக்குவது நெறிப்பட்டதே என்பதும், புது மயக்கம் ஏற்படுத்தாது என்பதும் உண்மையால் ஏற்கப்பட்டது.

கா முதலிய நெடில்களின் கால்கள் ண, ற, ன என்பவற்றில் சுழியாக இருந்தன. அவற்றை மற்ற எழுத்து களின்படியே கால் இட்டு எழுதுதல் புதிதாகத் தோன்ற வில்லை. பெரிய சீர்திருத்தமாகவும் படாமல் இயல்பாக இருப்பவையாயின.

இடர்நிலை ஏற்படுத்தும்

இப்பொழுது எழுத்துச் சீர்திருத்திகள் செய்ய நினைப்பதோ உகர, ஊகார எழுத்துகள் இவை இரண்டு எழுத்துகள் எனினும் 36 எழுத்துகள் என்பதை எண்ணிக்கொள்ள வேண்டும். இவ்வளவு கூடுதலான எழுத்துகள் இதுகாறும் சீரமைக்கப்படவில்லை. சீரமைக்கப்பட்டவையும் இடையே மாற்றியவற்றைப் பழைய நிலையில் நிறுத்தப்பட்டவையே அன்றிப் புதிதாக்கப்பட்டவை இல்லை; மாற்றம் செய்யா மல் இருப்பினும் மாற்றம் செய்யினும் படிக்கவும் எழுதவும் புதிதாகத் தோன்றி மயக்கம் ஏற்படுத்தாதவை. ஆகலான் அத்திருத்தங்கள் இயல்பாக எடுத்துக் கொள்ளப்பட்டன. உகர, ஊகார மாற்றம் சிக்கலானது. ஒட்டு மொத்தமானது. கால், மேற்சுழி, கீழ்ச்சுழி, உ என நான்கு குறியீடுகள் அவ்வவ் வெழுத்துக்குத் தகக் கொண்டவை அவை. ஆகலின் இம்மாற்றம் இடர்மிகச் செய்வதாம். அச்சிட்ட நூல்களை யெல்லாம் புறந்தள்ளச் செய்வதாய், பழைய முறையில் கற்றுப் பழகிப் போனவர்களால் புது மொழி எனப் புறக்கணிக்கத் தக்கதாய் இடர்நிலைப் படுத்தும்.

அச்சிடப்பட்ட அரிய நூல்களில் ஆயிரக்கணக் கானவை மறுபதிப்புக் காணாமலே இருப்பவை. இனி, மீள்பதிப்பா பெறும்? அச்சிடப்பட்ட நூல்களை யெல்லாம் புத்துருவாக்க எழுத்துகளில் அச்சிட எத்தனை கோடி கோடி தேவைப்படும்? ஒரு நூலை வாங்கி வைப்பதே அரிதாக, அதே நூலைச் சீரமைப்பு எழுத்துக்காக வாங்கி வைத்தல் ஆர்வலர் அனைவர்க்கும் - அனைத்து நூல்களுக்கும் இயல்வதாகுமா?

முன்னை நிகழ்ந்த வடிவமைப்பு மீட்டமைப்புகள் தமிழ் எழுத்துகளின் அழகைச் சிதைத்தன அல்ல; புதிய மொழியெனத் தோன்றச் செய்தன அல்ல; ஆனால் சீரமைக்க விரும்பும் உகர ஊகார மாற்றமோ, வேற்று மொழியென நமக்கு நம் மொழியை ஆக்கி வைக்கும் வடிவினவாம். எழுத்தின் வடிவழகைக் கெடுப்பனவாம்.

சீர்கெடுத்தல் கடனாமோ?

இயற்கையிலே கருத்தாங்கி இயற்கையிலே வடி வெடுத்து இயற்கையில் ஒலித்து இயற்கையோடு இயற்கை யாய்ப் பொருளமைதி கொண்ட இயல்மொழியாம் தமிழ் மொழியின் இயற்கை வடிவைப் போற்றுதல் கட்டாயமாம்.

தொல்பொருள் துறைப்பணி என்ன? சிதைந்து பட்டவையும் மேலும் சிதைவுறாமல் பண்டை வடிவைக் காப்பது அல்லவோ! அவ்வாறாக இருப்பதை மதித்துப் போற்றும் நாம், சீரமைந்த வடிவைச் சீரமைப்புப் பெயரால் சீர்கெடுத்தல், வேண்டும் கடனாகுமோ? “சிதையா உன் சீரிளமை’’ எனத் தமிழைப் போற்றினாரே பேராசிரியர் சுந்தர னார். அவர் தந்த “நீராரும் கடலுடுத்த’’ பாடலைப்பாடி வாழ்த்திக் கொண்டே வரிவடிவ வனப்பைச் சிதைப்பதா செயத்தக்க செயல்?

உகர ஊகார வரிசை 36 எழுத்துகளையும் சீர்திருத்த நினைத்த வடிவில் சீர்திருத்தி எழுதிப் பார்க்கட்டும்; புதிய ‘வடதமிழ்’ எனப்பெயர் சூட்டத் தக்கதாகவே அமைதல் உறுதி.

“கணினி, ஒளியச்சு என்பவற்றில் பயன்படுத்தத் தமிழ் வரிவடிவு தடையாக உள்ளது; அதனைத் திருத்தியாக வேண்டும்’’ என்றவர் குரலும் முழக்கமும் இப்பொழுது மங்கி விட்டன! தமிழ் எழுத்தை எத்தகைய புத்தம் புதிய கருவிகளிலும் அமைக்க முடியும் என்பதை வெளிநாட்டுத் தமிழ்ப் பொறிஞர் மெய்ப்பித்து விட்டனர்! நம் நாட்டு அறிஞர்களும் ஒப்புகின்றனர். இனி, எழுதா எழுத்தாம் ஒலி வடிவு கொண்டே, வரிவடிவு படைக்கும் பொறிவரவு உளதாதலால், வடிவுச் சீரமைப்புப் பற்றிப் பேச வேண்டியதே இல்லையாய் அறிவியல் உலகம் காட்டுதற்கு முந்து நிற்கிறது. இப்பொழுது எண்ணத்தக்க தலையான செயல், மொழியாக்கம் கருதுவோர்க்கு ஒன்றே ஒன்றேயாம். எல்லா நிலைகளிலும் தமிழை நிலைப்படுத்துதலேயாம்.

உயிர் பிழைக்கவையுங்கள்

தமிழ், எல்லா நிலைகளிலும் பயிற்று மொழியாதல் வேண்டும். மழலையர் பள்ளியில் ஆங்கிலப்பாடம் என ஒன்று தவிர எஞ்சியவெல்லாம் தமிழ் வழியாகவே இயலல் வேண்டும்.

பல்கலைக்கழகப் பட்டம் தாங்கி எவராயினும் தமிழ் பயிலாமல் பட்டம் பெற இயலா நிலை இருத்தல் வேண்டும்.

தமிழக அரசு, அப்பெயர்க்கு உரிமை உடையது என்பதை மெய்யாக்குவது, தலைமைச் செயலகம் முதல் சிற்றூராட்சி வரை தமிழால் நடையிடச் செய்வதேயாம்.

மெய்யான குடியரசு என்பதை மெய்ப்பிக்க வல்லது தாய்மொழி அறிந்த நடுவரும், தாய்மொழி வழியே வாதிடும் (முறைகூறும்) வழக்குரைஞரும் அமைந்த முறைமன்றங் களாக இருத்தலேயாம்.

நடுவண் அரசுத் துறைகள் எவையெனினும் அவ்வம் மாநிலத்தில் அவ்வம்மாநில மொழியில் நடையிடவில்லை யேல் மாநிலங்களைக் கொத்தடிமையாக வைத்திருக்கும் கொடுமையதே ஆகும்.

கோயில்கள் தமிழனால் - தமிழனுக்கு ஆக்கப்பட்ட இறைநிலை. அங்கே தமிழன் உணரா - அறியா அயல்மொழி யில் செய்யும் வல்லாண்மை வழிபாடு அகலாத வரை இறைமையை மதியா இழிமைச் சான்றாகவே இருக்கும்.

இவற்றைப் பற்றி ஒருமித்த குரல் எழுப்பித் தமிழ்க் காவல் செய்ய வேண்டிய பொழுதில், வரிவடிவு பற்றிப் பேசித் திசை திருப்புவது தமிழ்நலம் பேணுவார் கடமை அன்றாம்.

முன்னே உயிர் பிழைக்க வையுங்கள்; குறை உண்டு எனின், பின்னே திருத்தலாம்.

குறளியம் வேல் 19 வெற்றி 06 & 07 (1/1/99 & 1/2/99)

Pin It