கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

கலைஞர் 100 - வரலாற்றுப் பக்கங்களில் இருந்து (2)

18. 1952-இல் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஒருவருக்கொருவர் கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒரே பாணியில் போராட்டம் நடத்தினர். திருச்சி ரயில் நிலையத்தில் பெரியாரும் கலைஞரும் ஒன்றாக நின்று இந்தி எழுத்துக்களை கறுப்பு மை பூசி அழித்தனர்.

19. 1952-இல் கலைஞர் கதை, வசனம் எழுதி வெளியான பராசக்தி திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி அடைந்தது. சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம் அதுதான். கிட்டத்தட்ட 72 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இன்றளவிலும் பராசக்தி திரைப்படத்தின் வசனங்கள் பேசப்படுகின்றன.

karunanidhi 23920. 1953-இல் திமுக நடத்திய மும்முனைப் போராட்டம் கலைஞரின் அரசியல் வாழ்வில் மிக முக்கியமானது. ராஜாஜியின் குலக்கல்வி திட்ட எதிர்ப்பு, தமிழர்கள் பற்றிய நேருவின் கருத்துக்கு எதிர்ப்பு, டால்மியாபுரம் ரயில் நிலையத்தை கல்லக்குடி என பெயர் மாற்றுவது இப்போராட்டத்தின் நோக்கம். ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி’ என நாகூர் ஹனிபா குரலில் இப்போதும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது அந்த வரலாறு.

21. திரைப்படங்கள் மூலம் கிடைத்த வருவாயில் 1953-இல் சரபேஸ்வரர் என்பவரிடம் இருந்து கோபாலபுரம் வீட்டை வாங்கினார் கலைஞர். மார்ச் மாதமே இந்த வீட்டை கலைஞர் வாங்கிவிட்டாலும், ஜூன் மாதத்தில் சரபேஸ்வரரின் பேத்தி திருமணத்தை அதே வீட்டில் நடத்திக்கொள்ள அனுமதித்தார். கடைசிவரை அந்த வீட்டில்தான் இருந்தார். அவரது மனைவி தயாளு அம்மாள் இப்போதும் அந்த வீட்டில்தான் இருக்கிறார்.

22. 1954-இல் பரமக்குடியில் ஒரு கூட்டத்தை முடித்துவிட்டு, பின்னிரவில் அங்கிருந்து காரில் திருச்சி புறப்பட்டார் கலைஞர். ஓட்டுநர் சாலை வளைவை கவனிக்காமல் மைல்கல் மீது மோதிவிட்டார். அந்த விபத்தில் கலைஞரின் வலது கண் பாதிக்கப்பட்டது. பல மாதங்கள் வலியால் துடித்து, பல அறுவை சிகிச்சைகள் செய்ய நேர்ந்தது. அதற்குப் பிறகுதான் கருப்பு கண்ணாடி அணிய ஆரம்பித்தார்.

23. 1957-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்தான் முதன்முதலாக திமுக போட்டியிட்டது. கலைஞர் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டார். அண்ணா, அன்பழகன், கலைஞர் உட்பட 15 பேர் மட்டுமே முதல் தேர்தலில் வெற்றி பெற்றனர். அப்போது இருந்து மறையும் வரை போட்டியிட்ட எல்லா தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே பெற்றவர் கலைஞர்.

24. அடுத்து நடைபெற்ற மெட்ராஸ் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸைத் தோற்கடித்து தி.மு.க. வெற்றி பெற்றது. மெட்ராஸ் மாநகராட்சியின் தேர்தல் பொறுப்பை ஏற்று நுட்பமாக செயல்பட்டு வெற்றியைத் தேடிக் கொடுத்ததற்காக கலைஞருக்கு தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்தினார் அண்ணா.

25. 1962 தேர்தலில் திமுக 50 உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அண்ணா அந்தத் தேர்தலில் தோல்வியுற்று, பின்னர் மாநிலங்களவை உறுப்பினரானார். நெடுஞ்செழியன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும், கலைஞர் துணைத் தலைவராகவும் அமர்ந்தனர்.

26. பொருளாதார இன்னல்களை நீக்க இயலாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. எல்லா மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அண்ணாவும், கலைஞரும் 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை பெற்றார்கள். 2 நாட்கள் முன்பே அண்ணா விடுதலையானார். கலைஞரை சிறையில் இருந்து அவரே நேரடியாகச் சென்று வரவேற்றார். கலைஞரை பெரிய பதவியில் அமர்த்த அண்ணா தயாராகிவிட்டார் என்பதை அச்சம்பவம் உணர்த்தியது. தி.மு.க.வின் பொருளாளராக உயர்ந்தார் கலைஞர்.

27. திமுகவின் பொருளாளராக இருந்த கலைஞர் பெரும் முயற்சி எடுத்து நிதி திரட்டி சென்னை அண்ணா சாலையில் கட்சிக்காக ஒரு அலுவலகத்தை கட்டினார். ராயபுரத்தில் இருந்து திமுகவின் தலைமையகம் அண்ணாசாலைக்கு மாறியது. அதுதான் இன்றைய அன்பகம்.

28. இந்தியில்தான் கடிதப் பரிமாற்றம் இருக்க வேண்டுமென்ற இந்திரா காந்தி அரசின் முடிவுக்கு எதிராக 1967-ல் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடித்தது. 3800 மாணவர்கள் உட்பட 7,000 பேர் கைது செய்யப்பட்டனர். டி.ஐ.ஆர் என்ற அடக்குமுறைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கலைஞர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

29. 1967 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள 10 லட்சம் ரூபாய் நிதி திரட்ட திமுக முடிவெடுத்தது. அதற்கு திமுகவின் முப்பெரும் விழாவை சாதகமாகப் பயன்படுத்தி காகிதப்பூ என்ற நாடகத்தை எழுதினார் கலைஞர். மாநிலம் முழுவதும் நடந்த அந்த நாடகத்தில் கூடுதலாக 1 லட்சம் ரூபாய் சேர்த்து 11 லட்சம் ரூபாயாக வசூலானது. கேட்டதை விட கூடுதல் நிதியைக் கொடுத்ததால் அண்ணாவும் பெரிதும் பாராட்டினார்.

30. 1967 சட்டமன்றத் தேர்தலில் திமுக முதன்முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய கையோடு பெரியாரை சந்திக்க திருச்சி புறப்பட்டார் அண்ணா. அப்போது நெடுஞ்செழியன், அன்பில் தர்மலிங்கம் ஆகியோருடன் கலைஞரும் உடனிருந்தார். தனது அமைச்சரவையை பெரியாருக்கும் அவரின் புரட்சிகர சிந்தனைகளுக்கும் அர்ப்பணிக்கிறேன் என்றார் அண்ணா.

31. திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்த பின்னர் திமுகவினரும், திகவினரும் எலியும் பூனையுமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். தேர்தலில் கூட பெரியார் காமராசரைத் தான் ஆதரித்தார். ஆனால் வெற்றி பெற்ற கையோடு அண்ணா பெரியாரை சந்திக்கச் சென்றதால் மிகப்பெரிய உணர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த வரலாற்றை கலைஞர் பலமுறை நினைவுகூர்ந்திருக்கிறார். ஒருமுறை கூட உணர்ச்சிவயப்படாமல் அதனை சாதாரணமாக சொல்ல முடிந்ததே இல்லை.

32. ‘எனக்கு காமராசர் மீது மதிப்பு உண்டு, ஆனால் காங்கிரஸில் உள்ள மற்றவர்களுக்கு அது பொருந்தாது. ஆனால் திமுகவில் உள்ள எனது சகோதரர்கள் அனைவர் மீதும் எனக்கு மதிப்புண்டு’ என பெரியார் அப்போது அறிக்கை ஒன்றை வெளியிட, திமுகவிற்கும் திகவிற்கும் இடையில் நீடித்த 18 ஆண்டுகால மனஸ்தாபங்கள் முடிவுக்கு வந்தன.

33. முதல் அமைச்சரவையிலேயே பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் கலைஞர். அண்ணா, நெடுஞ்செழியனுக்கு அடுத்து 3-வது இடத்தில் அவர் இருந்தார்.

34. திமுக ஆட்சியமைத்த அடுத்த ஆண்டே அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட, கட்சியும் ஆட்சியும் நிலைகுலைந்தன. இரண்டையும் தாங்கிப் பிடிக்க வேண்டிய இடத்தில் நெடுஞ்செழியனை விட கலைஞரின் பங்களிப்புகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன.

35. பட்ட கையிலேயே படும் என்பதைப் போல அண்ணா உடல்நலம் குன்றியிருந்த வேளையில், 1968 டிசம்பர் 25-ம் தேதி கீழ்வெண்மணியில் 44 தலித்துகள் குடிசையோடு வைத்து கொளுத்தப்பட்ட கொடூரம் நடந்தது. வரலாற்றில் கரும்புள்ளியாக மாறிப்போன அச்சம்பவம் அன்றைய திமுக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அன்றைய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சத்தியவாணி முத்துவை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்றார் கலைஞர்.

36. 1969 பிப்ரவரி 3-ல் அண்ணா மறைந்தார். அரசமைப்பு விதிகளின்படி அன்றைய இரவே நெடுஞ்செழியன் இடைக்கால முதல்வராக்கப்பட்டார். அண்ணாவின் உடலை எரியூட்ட வேண்டுமென குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஆனால் அண்ணாவுக்கு ஒரு மதிப்புமிக்க நினைவிடத்தை அமைக்க வேண்டுமென குடும்பத்தினர், திமுகவினரை சம்மதிக்க வைத்து மெரினா கடற்கரையை தேர்ந்தெடுத்தார் கலைஞர்.

37. அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்த அகில இந்திய வானொலியில் 15 நிமிட கவிதை ஒன்றை வாசித்தார் கலைஞர். எதையும் தாங்கும் அண்ணாவின் இதயத்தை இரவலாகக் கேட்டு கவிதையை நிறைவு செய்தார். அந்த இரங்கற்பா இன்றளவிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

38. அண்ணா மறைவை அடுத்து கட்சிக்கும் ஆட்சிக்கும் நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டது. அந்த இடத்தைப் பிடிக்க நெடுஞ்செழியன் விரும்பினார். ஆனால் “கட்சிக்கு முடிவெடுக்கும் ஆற்றல் பெற்ற தலைவர் தேவை, இந்தச் சூழலில் கலைஞரை விட உறுதியோடு செயலாற்றக் கூடியவர் இல்லை” என்று கூறினார் பெரியார்.ஒடுக்கப்பட்ட சமூக பிண்ணனியில் இருந்துவந்த கலைஞர் - முதல்வராவது தனது கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்று பெருமைப்பட்டார் பெரியார். கலைஞருக்கு தனது சொந்த செலவில் சிலை வைக்க முன்வந்தார் பெரியார்.

39. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆதரவு எண்ணிக்கை தனக்கு சாதகமாக இல்லை என்பதை உணர்ந்த நெடுஞ்செழியன் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். கலைஞர் கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைவரானார்.

(தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்