transgender_500

கறுப்பு மை குறிப்புகள் - 6

       வெள்ளை, கறுப்பை அழிக்க முனைகிறது. ஏற்றம், தாழ்வின் இருப்பை விரும்புகிறது. ஆண்டான், அடிமைத்தனத்தை நேசிக்கிறான். ஆண், பெண்ணை ஒடுக்குகிறான். மேல் ஜாதி, கீழ் ஜாதியை வெறுக்கிறது. பெரும்பான்மை, சிறுபான்மையை சிதைக்கிறது. எனினும், இவர்களெல்லோரும் ஒன்றிணைந்துவிட முடியும். ஆனால், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழ வழியுள்ள இந்த பூமியில் தன் நிழல்கூட தன்னை வெறுக்கும் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் எவரெனில், அவர்கள் மாற்றுப்பாலினர் (கூணூச்ணண்ஞ்ஞுணஞீஞுணூ) மட்டுமே! சாதி வக்கிரங்கள் நிறைந்ததொரு சமூகத்தில் அடிமைகளாகப் பிறந்து, அதன் ஒடுக்குமுறைகளை வென்றெடுக்கும் பகுத்தறிவும் துணிவும் பெற்றவர்களைக் கூட தடுமாறச் செய்யும் விஷயமாக இருக்கின்றன பாலின மாறுபாடுகள்.

ஆணாகவோ, பெண்ணாகவோ பிறந்துவிட்ட எவரும், மாற்றுப் பாலினரின் நிலையை, வாழ்வை, ஒருபோதும் நினைத்துப் பார்ப்பதில்லை. ஆதிக்க சாதி மனநிலை எப்படி ஒடுக்கப்பட்டோரை கொடுமைகளுக்கு ஆளாக்குகிறதோ, அதே போன்றதொரு அல்லது அதைவிடவும் வீரியமிக்க ஒடுக்குமுறைகளை, இச்சமூகத்தின் ஆண்களும் பெண்களும் மாற்றுப் பாலினரிடம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். பெற்றோர், சகோதரர், உறவுகளின் ஆதரவின்றி மாற்றுப் பாலினர் வீடுகளிலிருந்து விரட்டப்படுகின்றனர். பின்னர், அவர்களை இச்சமூகம் புறக்கணித்து சுரண்டுகிறது. மாற்றுப் பாலினர் குறித்த நமது அறியாமையே அவர்களுடைய துயரங்களுக்கான அடித்தளம்.

ஆண் உறுப்புகளோடு பிறந்து ஆணாகவே வளரும் ஒரு சிறுவனோ, பெண் உறுப்புகளோடு பிறந்து பெண்ணாகவே வளரும் ஒரு சிறுமியோ – பருவ வயதை எட்டுகையில் தன் புறத்தோற்றத்திற்கு எதிரான உணர்வுகளுக்கு (ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும்) ஆட்படும்போது, அதை இயல்பான விஷயமாக அங்கீகரிக்கும் மனப்பக்குவம் நம்மில் எவருக்குமே இல்லை. சிறுவனொருவன் பெண் உடைகளை அணிய விரும்பினாலோ, பெண்ணைப் போல உடல் மொழியை அமைத்துக் கொண்டாலோ பெருங்கோபம் கொண்டு எதிர்க்கத் தொடங்குகிறோம். அதை இழுக்காகவும் களங்கமாகவும் கருதி துன்புறுத்துகிறோம். ஆண் உடலுக்குள் பெண் உணர்வுகள் தழைத்தோங்கும்போது, அதை வெளிப்படுத்தவும் முடியாமல், மறைத்து வைக்கவும் வழியில்லாமல் தவிக்கும் நிலையை சிறு அளவில் கூட அங்கீகரிப்பதில்லை நாம். ஆணென்றால் உலகம் முழுமைக்கும் விதிக்கப்பட்ட அடையாளம் மிடுக்கும் கம்பீரமும்தான். மாற்றுப் பாலினராகப் பிறந்த சிறுவன் ஊற்றெடுக்கும் பெண்ணுணர்வுகளால் நளினமான நடை யாலும் மென் குரலாலும் அதை வெளிப்படுத்தும்போது, ஆண் அடையாளத்திற்கான இழுக்காகக் கருதப்படுகிறது. அவமானச் சின்னமாகக் கருதி, குடும்பங்கள் மாற்றுப் பாலினர் மீதான அதிகபட்ச வன்முறையை செலுத்தி தங்கள் எல்லையை விட்டு முடுக்குகின்றன.

பதின் பருவ வயதில் இயல்பாக உண்டாகும் குழப்பங்களுக்கிடையில், தான் யார் என்பதில் எழும் சந்தேகங்கள் வலுவடைந்து, சுயமறிய இயலாத நிலையில், உறவுகளின் கோபமும், சமூகத்தின் எள்ளலும் சேர்ந்து விரட்ட – மாற்றுப் பாலினர் எல்லோருமே ஒரு கட்டத்தில் வீட்டையும், ஊரையும் விட்டு ஓடி ஒளிய நேரிடுகிறது. இப்படிக் கிளம்பியவர்கள் ஓடிப் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கையும் அதன் உண்மைகளும் மூடி மறைக்கப்பட்டாலும், மிகுந்த வலியோடு வேறொரு ஊரில் எல்லா வகையிலும் சுரண்டப்பட்டு, துளி மரியாதையுமின்றி அங்கீகாரத்திற்கான தேடலுடன் அலைந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். வீட்டை விட்டு வெளியேறும் மாற்றுப் பாலினரின் ஒரே ஆறுதல், அவர்கள் தன்னைப் போன்றோரை எப்படியேனும் கண்டடைகின்றனர் என்பதே!

ஒடுக்கப்பட்டோர் ஓரினமாக ஒரே குழுவாகத் திரண்டு நிற்கும் போது, அங்கே உரிமைகளுக்கான கோரிக்கைகள் வலுவாக எழு வதற்கான சாத்தியங்கள் தோன்று வது இயல்பு! ஆனால், மேற்கத்திய நாடுகளைப் போல இங்குள்ள மாற்றுப் பாலினரிடம் அந்த சூழல் உருவாகவில்லை அல்லது மிகத் தாமதமாக, மிக பலவீனமாக இப்போதுதான் உருவாகியிருக்கிறது எனலாம். மனித சமூகத்தை ஆட்டிப் படைக்கும் எந்தவிதமான அடிமைத்தனத்திற்கும் மதங்களே அடித்தளமெனும் போது, மிக நிச்சயமாக இப்பின்னடைவிற்கான காரணமும் மதமாகவே இருக்க முடியுமெனத் தோன்றுகிறது. இந்நிலையில் ஆதிக்க அடிமைக் கருத்தியலையும், ஏற்றத்தாழ்வுக் கொள்கையையுமே கருவாகக் கொண்ட இந்து மதச் சூழலே – பாலினம் மற்றும் பாலியல் குறித்த நமது அறியாமைக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் அடிப்படை. உலகம் முழுவதிலுமே மொழி, இன, நிற, மத பேதங்களைக் கடந்து மாற்றுப் பாலினர் மீதான ஒடுக்குமுறை இருக்கிறது எனினும், அங்கெல்லாம் மனித உரிமைகள் பற்றிய புரிதல் வலுவடைந்துவிட்டது. இந்த நவீன காலத்தில், இங்குள்ள அளவிற்கு பாலினப் புரிதலில் மூடத்தனம் இருக்கவில்லை.

"ஆண் – பெண் என்ற நேரடியான இரு பாலினங்களே இயற்கையானவை. நடுவின் பாலினமோ (Intersex), ஓரின ஆர்வலர்களோ, (Homosexuals) மாற்றுப் பாலினரோ (Transgenders) இயற்கைக்கு மாறானவர்கள்' என்ற மூடக் கருத்தியல், உலகம் முழுமைக்குமான பொதுப் புத்தியாக இருக்கிறது. நாமெல்லோரும் நம்பிக் கொண்டிருப்பதைப் போல, உண்மையில் மாற்றுப் பாலினர் உடல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ எந்தப் பிறழ்வையும் கொண்டிருக்கவில்லை. பிறப்புக் குறைபாடு என்றுகூட இதைக் கருத முடியாது. ஆணையும் பெண்ணையும் போல மாற்றுப் பாலினரும் பாலினத்தில் ஒரு பிரிவு அவ்வளவே. ஆக, இயற்கையான இந்த விஷயத்தை இயற்கைக்கு எதிரானதாக மதங்கள் முன்னிறுத்தி அதன் மீது மூடக் கருத்தியல்களையும் கட்டமைத்தன. ஓர் உயிர், ஓர் உறவு என்றளவில் கூட ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு மாற்றுப் பாலினர் மீதான வெறுப்புணர்வு மனித மனங்களில் மண்டியதன் காரணம், மதங்கள் மீதிருக்கும் கண்மூடித்தனமான பற்றும் நம்பிக்கையுமே.

ஆண் – பெண் மீது ஈர்ப்பு கொள்வதும், ஆண் – ஆண் மீதும் பெண் பெண் மீதும் ஈர்ப்பு கொள்வதும், ஆண் தன்னைப் பெண்ணாக உணர்ந்து ஆணை விரும்புவதும், பெண் தன்னை ஆணாக உணர்ந்து பெண்ணை நேசிப்பதும் எல்லாமே இயற்கையான, இயல்பான விஷயங்கள்தான். மதங்கள் தோன்றுவதற்கு முன்னர் மனிதர்கள் தங்கள் விருப்பமான பாலியல் தேர்வுகளுடன் சுதந்திரமாகவே வாழ்ந்து வந்தனர். ஒழுக்க நெறிகள் என்ற பெயரில் மூடக் கருத்தியல்களை வரையறுத்த மதங்கள் உயிர்விருத்தியின் தேவையை முன்னிலைப்படுத்தி, ஆண் – பெண் என்ற இரு பாலினங்களையும் அவற்றுக்கிடையிலான உறவையும் மட்டுமே அங்கீகரிக்க – மாற்றுப் பாலினரும், ஓரினச் சேர்க்கையாளர்களும் இயற்கைக்கு மாறான, முறையற்ற பாலியல் இச்சைகளைக் கொண்டவர்களாக ஒதுக்கப்பட்டனர். ஆக, இன ரீதியாக, நிற, மொழி, சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களைப் போல, பாலியல் ரீதியாக ஒடுக்கப்படுவோரும் விடுபட வேண்டியது மதங்களிடமிருந்துதான்.

கிறித்துவம் இக்கருத்தியலை தீவிரமாகப் பரப்பி, மாற்றுப் பாலினரை வாழத் தகுதியற்றவர்களாகத் துன்புறுத்திய காலம் ஒன்று இருந்தது. உலகம் உருண்டை என்ற அறிவியல் உண்மையைச் சொன்னபோது, அது தட்டையென தட்டையாக வாதிட்ட கிறித்துவ மதகுருமார்கள் மாற்றுப் பாலினரை அழித்தொழிக்க விழைந்ததில் வியப்பொன்றுமில்லை.

தண்டனைக்குரியவர்களாக, ஆலயப் பணிகளுக்கு அனுமதிக்கப்படாதவர்களாக (புனிதத்தன்மைக் கெட்டுவிடுமென), பழகக்கூடாதவர்களாக, உரிமைகளற்றவர்களாக மாற்றுப் பாலினரை வதைத்தது கிறித்துவம். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, பெண்களையும் – தாழ்த்தப்பட்டவர்களாகவும் மரியாதை குன்றியவர்களாகவுமே நடத்தியது. சொத்துகளைப் போல ஆண்களின் மேற்பார்வையில் பெண்கள் பராமரிக்கப்பட்டனர். தந்தைவழி சமூகத்தை வலியுறுத்தி, ஆண் தலைமையை போற்றும் மதக் கோட்பாடுகளின் ஒழுக்கவிதிகள், மதத் தலைவர்களின் கைகளில் சாட்டையைப் போல சுழன்று கொண்டிருந்தன. இதனால் "புனித'ப் பணிகளுக்கு பெண்கள் அனுமதிக்கப்பட்டது கூட வெகு அண்மையில்தான். ஆனால், அறிவியல் வளர்ச்சியும், கால மாற்றமும், கல்வியும் பெண்ணுரிமை வாதங்களை முன்னெடுத்துச் செல்ல – சமமானவர்களாகவும், மரியாதைக்குரிய மனிதர்களாகவும் பெண்கள் தங்களை அடையாளங்கண்டு கொண்டனர். பாலினம் மற்றும் பாலி யல் குறித்த புரிதல் ஓங்கத் தொடங்கியது (எனினும், இன்றளவும் போப்பாண்டவராக ஒரு பெண் வர மதம் அனுமதிப்பதில்லை).

எந்த சமூகத்தில் பெண்ணினம் அடிமைப்பட்டு கிடக்கிறதோ, அங்கு மாற்றுப் பாலினரின் நிலையும் மிக மோசமாகவே இருக்க முடியும். ஏனெனில், பெண்களை இரண்டாந்தரக் குடிமக்களாகக் கருதுகையில், பெண்களைப் போல நடந்து கொள்ள முற்படும் ஆண்கள் மீதான மரியாதையும் கவுரவமும் முற்றிலுமாக அழிந்து போகிறது. இதனால் மூன்றாந்தரக் குடிமக்களாக மாற்றுப் பாலினர் தாழ்த்தப்படுகின்றனர். இயற்கைக்கு எதிரானவர்களாக, கடவுளால் படைக்கப்பட்டதொரு வெறுக்கத்தக்க அற்பப் பிறவியாகவே மாற்றுப் பாலினர் மீதான பிம்பத்தை மதங்கள் பரப்பின. கடவுளுக்கு எதிரானவர்கள், முறையற்ற பாலியல் இச்சைகளுடன் கடவுளை ஏமாற்றுவோர், மனித இனத்திற்கு அவமானத்தைக் கொண்டு வருவோர் என்றெல்லாம் மாற்றுப் பாலினர் மீது பழி விழுந்தது. இதனால் அவர்கள் சமூக வாழ்விலிருந்து துண்டிக்கப்பட்டு, முற்றிலுமாக முடக்கப்பட்டனர்.

மேற்கத்திய நாடுகளின் பாலியல் புரிதல் வளம்பெறத் தொடங்கியதும் மாற்றுப் பாலினருக்கான அங்கீகாரமும் துளிர்விடத் தொடங்கியது. மத ரீதியாக ஒடுக்கப்பட்டவை எல்லாம் அறிவியல் ரீதியாக அலசப்பட்டு உரிமைகளுக்காக முழங்கின. மாற்றுப் பாலினர் மட்டுமின்றி ஓரின ஆர்வலர்களும், நடுவின்பாலினரும் உள்ளடக்கிய பாலியல் மாறுபாடுகளைக் கொண்டோரெல்லாம் ஆணையும் பெண்ணையும் போன்றவர்களே என்ற புரிதல் உண்டானது. மாற்றுப் பாலினரில் இருந்து கலைஞர்களும், எழுத்தாளர்களும், அறிவியல் வல்லுநர்களும் ஏன் மதப் பணியாளர்களும் கூட வெளி வரத் தொடங்கினர்.

பெண்களுக்கெதிரான அடக்குமுறைகள் நிறைந்த இஸ்லாமிய நாடுகளில், மாற்றுப் பாலினராக முன்னிறுத்திக் கொள்வதும், அதற்கான அறுவை சிகிச்சை செய்து கொள்வதும், திருமணம் செய்வதும் தண்டனைக்குரிய குற்றமாகவே இருந்து வந்தது. ஆனால், இன்று மாற்றுப் பாலினருக்கான அங்கீகாரங்கள் துளிர்க்கத் தொடங்கியிருக்கின்றன. ஈரானில் தண்டனைச் சட்டப்படி ஓரினச் சேர்கையாளர்களும், மாற்றுப் பாலினரும் கடுமையான தண்டனைகளை எதிர்கொண்டனர். 1979 இல் உண்டான இஸ்லாம் மறுமலர்ச்சிக்குப் பின்னர் நிலைமை சீரடைந்து வருகிறது. ஈரானின் நீதித்துறையில் ஆதிக்கம் செலுத்தும் முஸ்லிம் மார்க்கத் தலைவர்கள், மாற்றுப் பாலினம் குறித்த புரிதலைக் கொண்டிருப்பதோடு அவர்களுக்கான அங்கீகாரத்திற்காகவும் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றன. எல்லாமே மார்க்கக் கோட்பாட்டின் படி இயங்கும் இஸ்லாமிய நாடான ஈரானில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவுகளை அரசே ஏற்கும் நிலை கூட உருவாகிவிட்டது. குவைத்திலும் கூட அறுவை சிகிச்சைக்கான அனுமதியை மருத்துவச் சான்றிதழ் ஆதாரத்தோடு வழங்க மார்க்கத் தலைவர்கள் முன் வந்திருக்கின்றனர். ஆனால், இந்த அங்கீகாரம் இஸ்லாம் வரையறுக்கும் எல்லைகளைத் தாண்டி விரிவடைவதில்லை.

மேற்கத்திய நாடுகளின் கிறித்துவப் பண்பாட்டில் இருந்ததைப் போல, பழங்கால இஸ்லாமிய சமூகத்தில் மாற்றுப் பாலினர் துன்புறுத்தப்படவில்லை. மூன்றாம் பாலினராக ஏற்கப்பட்டு கவுரவமாக வாழ்ந்ததாகக் குறிப்புகள் கூறுகின்றன. இதற்கு காரணம், ஆண் – பெண் என்ற இரு பாலினரையும் தவிர்த்து "முகனதீன்' என்று மாற்றுப் பாலினரை இஸ்லாம் அங்கீகரித்திருப்பதுதான். பெண்களுக்கான விதிகளைக் குறிப்பிடும்போது, அவசியமான உறுப்புகளைத் தவிர பிறவற்றை மறைக்க வேண்டுமென வலியுறுத்தும் இடத்தில் யார் யார் முன் பெண்கள் சுதந்திரமாக நடமாடலாம் என்று பட்டியலிடப்படுகிறது. இதில் "ஆண் தகுதிகளோ விருப்பங்களோ அற்ற ஆண்கள்' என்று குறிப்பிடப்படுகிறது.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் பல கட்டுப்பாடுகளை விதித்ததைப் போலவே குடும்ப வாழ்க்கை முகனத்துன்களுக்கு தடை செய்யப்பட்டது. இதனால், பாலியல் உணர்வுகளுக்கான வடிகால் இல்லை என்ற போதிலும் முகன்னதுன், இஸ்லாமிய சமூகத்தில் மரியாதைக்குரியப் பொறுப்புகளை வகித்திருக்கின்றனர். காலனிய ஆதிக்கம் தோன்றிய பிறகு தான் இந்த நிலை மாறியதாகக் குறிப்புகள் கூறுகின்றன. இறைத் தூதரின் வார்த்தைகளை முன்னிறுத்தி, இன்றைய மார்க்கத் தலைவர்கள் மாற்றுப் பாலினரின் உணர்வுகளாகப் புரிந்து கொள்ள விழைந்தாலும், இஸ்லாம் அனுமதிக்கும் எல்லைகளைக் கடந்து அந்நாடுகளில் மாற்றுப் பாலினர் தங்களின் அடையாளங்களையும் பாலியல் உரிமைகளையும் மீட்டெடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே!

ஆக, ஒடுக்கப்பட்ட எல்லோரையும் போலவே, மாற்றுப் பாலினரின் முதல் எதிரி மதங்களே. கிறித்துவ மற்றும் இஸ்லாமிய நாடுகளில் மாற்றுப் பாலினருக்கெதிரான ஒடுக்குமுறைகள் இருந்தாலும், உயிரியல் உண்மைகளை முன்வைத்து மதங்களிடமிருந்து தங்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் பகுத்தறிவும் புரிந்துணர்வும் அங்கு சாத்தியப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில், வேறெந்த அடிமைத்தனங்களைப் போலவே, வேறெந்த ஒடுக்குமுறைகளைப் போலவே மாற்றுப் பாலினரையும் மீளமுடியா மூடக் கருத்தியல்களால் பிணைத்து வைத்திருக்கிறது இந்து மதம்.

மதங்களிடமிருந்து தங்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்க கிறித்துவ மற்றும் இஸ்லாம் நாடுகளில் மாற்றுப் பாலினர் போராடி வருகையில், இந்திய மாற்றுப் பாலினர் தங்களின் ஒரே வடிகாலாக, அடைக்கலமாக இந்து மதத்திடம் தஞ்சமடைந்திருப்பது வேதனைக்குரியது. தம் உடல் குறித்த உயிரியல் உண்மைகளைப் புரிந்து கொள்வதைவிடவும், தங்களை கடவுளின் அவதாரமாக, கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக, கடவுளின் மனைவியராக முன்னிறுத்துவதன் மூலம் மாற்றுப் பாலினர் தங்கள் மீது படிந்த கறையை, வெறுப்புணர்வைக் கழுவிவிட முனைகின்றனர். இது, ஒருபோதும் சாத்தியப்படக் கூடியதல்ல.

இந்து மதம் பெண்களை "சக்தியின் வடிவம்' என்கிறது. முப்பெருந்தேவியராக வணங்குகிறது. எந்தளவிற்கு பெண்ணை புனித வடிவமாகப் போற்றுகிறதோ, நடைமுறையில் அந்தளவிற்கான இழிவுகளை பெண்கள் மீது திணித்து வைத்திருக்கிறது. பெண்கள் மீதான ஆகக் கொடுமையான வன்முறைகளெல்லாம் நிகழ்த்தப்படுவது குடும்பங்களில்தான். உரிமைகளென உச்சரிக்கக்கூட வாய்ப்பு மறுக்கப்பட்ட குடும்பக் கட்டமைப்பு, ஒரு பக்கம் பெண்களை வழிபட்டுக் கொண்டே காலடியில் கிடத்தி நசுக்குகிறது. பெண்கள் மீது துளி மரியாதையுமற்ற இந்து மதப் பண்பாட்டைக் கொண்டாடியபடியே மாற்றுப் பாலினர் தங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுவிட முடியும் என்று நம்பினால், அது வேடிக்கையானது. ஏனெனில், இந்து மதத்தில் இருந்து கொண்டே அம்மதம் அடிமையென ஒடுக்கியவர்கள் ஒருபோதும் விடுதலையை எய்த முடியாது.

transgender_370இந்த விஷயத்தில் தலித் மக்களுக்கு என்ன நிலையோ, பெண்களுக்கு என்ன கதியோ அதுதான் மாற்றுப் பாலினருக்கும்! "கணவனுக்கு அடிமையாக இருப்பதே பத்தினித்தனம்' என்று சொல்லும், சாதி என்ற வேலிக்குள் தாழ்த்தப்பட்டோர் முடக்கப்பட்டதை சனாதன தர்மமாகக் கொண்டாடும் இந்து மதத்திடமிருந்து எப்படி உரிமைகளைப் பெற முடியும்? மாற்றுப் பாலினருக்கும் இதுவே பொருந்தும். இந்து உளவியல் மண்டிப் போய் கிடக்கும் இந்தியக் குடும்பங்களில் பிறக்கும் மாற்றுப் பாலினருக்கு வீடென்பது பெருஞ்சிறை. தடுமாறும் உளவியலோடு அச்சிறையைவிட்டு வெளியேறும் தனி நபர்கள் தன்னைப் போன்றவர்களைக் கண்டடைந்து குழுவாக வாழத் தலைபடுகின்றனர். ஓரினமாகக் கூடும்போது தனிமையில் இருந்து விடுபடுவதுடன், தங்களுக்கேயான பண்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொள்கின்றனர்.

இந்த பண்பாடுகளும் பழக்க வழக்கங்களும் இந்(து)திய வாழ்வியலை மய்யப்படுத்துவதாகவே இருக்கின்றன. உண்மையில் இந்த வாழ்வியல், மாற்றுப் பாலினருக்கான மரியாதை மிக்க வாழ்வைப் பெற்றுத் தருகிறதா என்றால் இல்லை. வெவ்வேறு மதங்களிலிருந்தும் ஜாதிகளிலிருந்தும் தங்களை துண்டித்துக் கொண்டு ஓரிடத்தில் கலக்கும் மாற்றுப் பாலினர், தங்களை இந்துக்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் விபரீதம் தொடர்ந்து நடக்கிறது. பல முறை கூவாகம் விழாவிற்கு சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என்னுள் எழுந்த அல்லது என்னை வதைத்த பெருங்கேள்வி இதுதான் – மாற்றுப் பாலினர் எல்லோரும் ஏன் இந்துக்களாகின்றனர்? ஸ்டெல்லாவென்றும், பாத்திமாவென்றும் பெயரிட்டுக் கொள்வோர் கூட, கூத்தாண்டவரின் மனைவியாகி தாலியறுப்பது ஏன்?

இக்கேள்விதான் இக்கட்டுரைக்கான அடித்தளமாகியது. மாற்றுப் பாலினரின் துயரங்களும், வறுமையும், பாலியல் வாழ்வும், சமூக அங்கீகாரத்திற்கான கோரிக்கைகளுமே தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவர்களுக்கான பகுத்தறிவையும், இந்து மதத்தின் பிடியிலிருந்து விடுபட வேண்டியதன் அவசியத்தையும் எவருமே இதுவரை வலியுறுத்தாதது வேதனையளிக்கிறது. வெறும் உடலாக மட்டுமே பெண்கள் கருதப்பட்டு, கையாளப்பட்ட காலத்தில், பெரியாரின் இந்துமத எதிர்ப்பே பெண்ணுரிமைப் போராட்டங்களில் மறுமலர்ச்சியை உண்டாக்கியது. சேரிகளுக்குள் தீண்டத்தகாதவர்களாக முடங்கிக் கிடந்த தலித் மக்களுக்கு சுயமரியாதையை ஊட்டியது அம்பேத்கர் மற்றும் பெரியாரின் இந்து மத எதிர்ப்பு. இத்தகு வரலாற்றுத் திருப்புமுனைகளை மாற்றுப் பாலினர் தங்களுக்கான பாடமாக முன்னெடுத்தாக வேண்டும்.

வேறெங்கும் இல்லாத அளவிற்கு மும்பையில் மாற்றுப் பாலினர் தங்களுக்கான சுதந்திரத்தைக் கண்டடைகின்றனர். சிவப்பு விளக்குப் பகுதியும் கட்டற்ற பாலியல் சுதந்திரமுமே இதற்கான முக்கியக் காரணம் என்றாலும் வட மாநிலங்களில் மாற்றுப் பாலினர் தங்களின் அடையாளத்தை மீட்டெடுக்க, மத ரீதியான பல சடங்குகளில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலும் மாற்றுப் பாலினர் அழையா விருந்தாளிகளாகவே இப்படியான விழாக்களில் பங்கேற்கின்றனர். ஊரைவிட்டு ஓடி வரும் ஓர் ஆணையோ, பெண்ணையோ போல ஏதோவொரு வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற நிலை மாற்றுப் பாலினருக்கு இல்லை. அதனால் மத முகமூடிகளுக்குள் வலுக்கட்டாயமாகத் திணித்துக் கொண்டு, அதன் மூலம் வருவாயைப் பெற விழைகின்றனர். பாலியல் தொழிலோடு இதுவும் பிழைப்பிற்கான வழியாகிறது.

பிற மதங்கள் மாற்றுப் பாலினரை மனிதராகவே மதிக்காத நிலையில், இந்து மதம் தங்களை கடவுள் தகுதிக்கு உயர்த்தி வைத்திருப்பதாக மாற்றுப் பாலினர் நம்புவதற்கு வலுவான இரண்டுப் பின்னணிகள் இருக்கின்றன. இந்து மதப் புராணக் கதைகளை வரலாற்று நிகழ்வுகளாகவே பார்க்கும் அறியாமையின் தொடர்ச்சியாகவே, மாற்றுப் பாலினரும் தங்களை இந்து மதத்தோடு ஒன்றிணைத்துக் கொண்டது நடந்திருக்கிறது. கடவுளாகவே இருந்து ஆசிர்வதிப்பதற்கும், கடவுளின் மனைவியாக உருவகித்துக் கொண்டதற்கும் பின்னால் ராமாயண மற்றும் (மகா)பாரதக் கற்பிதங்கள் ஊறிக் கிடக்கின்றன.

அயோத்தியை விட்டு வனவாசம் கிளம்பிய ராமனுக்குப் பின்னால் திரண்டு வந்த மக்களை நோக்கி, என்னுடைய சாம்ராஜ்யத்திற்கு உட்பட்ட ஆண்களும் பெண்களும் அவரவர் இடத்திற்கு திரும்பிப் போங்கள் என ஆணை பிறப்பித்து, காட்டை வந்தடைந்த ராமன், 14 ஆண்டுகள் கழித்து திரும்பிச் சென்றபோது, மாற்றுப் பாலினர் (ஆணும் அல்ல பெண்ணும் அல்ல என்பதால்) மட்டும் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருப்பதைக் கண்டு நெகிழ்ந்து போய் – திருமணம், குழந்தை பிறப்பு போன்ற முக்கிய நிகழ்வுகளில் மாற்றுப் பாலினர் மக்களை ஆசிர்வதித்திருக்க அருள் பாலித்ததாகக் கூறுகிறது ராமாயணம்.

(மகா)பாரதக் கதைப்படி, பாரதப் போரின் முதல் நாள் களபலி கொடுக்க அர்ச்சுனனின் மகனான அரவாணைத் தேர்ந்தெடுக்கிறான் கிருஷ்ணன். அரவாணோ இறப்பதற்கு முன்பு தனது திருமண ஆசையை வெளிப்படுத்த, சாகப் போகிறவனைத் திருமணம் செய்ய எந்த பெண்ணும் முன்வராத நிலையில் (உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்ததால்), கிருஷ்ணனே மோகினியாக பெண் அவதார

மெடுத்து அரவாணை மணந்து, அன்றே விதவையாகிறான். தமிழக மாற்றுப் பாலினர் தங்களை அரவாணி என்று அழைத்துக் கொள்வதன் பின்னணி இதுதான். விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் கூவாகத்தில் ஆண்டுதோறும் நடக்கும் கூத்தாண்டவர் திருவிழாவிற்கு இந்தியா முழுவதிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மாற்றுப் பாலினர் பங்கேற்கின்றனர். கூத்தாண்டவராக இங்கு வணங்கப்படுவது அரவாண் என்பதால், 18 நாள் திருவிழாவில், கிருஷ்ணன் அரவாணை மணந்த புராணக் கதையை அப்படியே அரங்கேற்றுகின்றனர் மாற்றுப் பாலினர்.

தாலி கட்டித் திருமணம் செய்வது, கள பலிக்கு பின்னர் தாலியை அறுத்து, வெள்ளுடை உடுத்தி, வளையல்களை உடைத்து விதவையாவது என பெண்ணுக்கெதிரான அத்தனை மூடத்தனங்களையும் நிகழ்த்திவிட்டுக் கிளம்புகின்றனர். திருவிழா நடைபெறும் 18 நாட்களும் களைகட்டும் பாலியல் தொழில், மாற்றுப் பாலினரின் இருவேறு வாழ்சூழல் களுக்கான சான்று. சுயமரியாதை உணர்வும் பகுத்தறிவும் கொண்ட யாராலும் கூத்தாண்டவர் திருவிழாவில் ஒரு நல்ல விஷயத்தைக் கூட கண்டடைய முடியாது. கடவுளின் பெயரால் அங்கு நடந்தேறுவதெல்லாம் மூடத்தனங்களும் உரிமை மீறல்களுமே. பிற நேரங்களில் அருவெறுக்கத்தக்கவர்களாக மாற்றுப் பாலினரை நடத்தும் இச்சமூக ஆண்கள், பாலியல் தொழிலுக்கு மட்டும் ஆதரவு கொடுத்து வருவது, ஆதிக்க உளவியலின் அப்பட்டம்! கடவுளாக வணங்கப்படுவதும் அதன் பேராலேயே சுரண்டப்படுவதுமான இந்து மதத்தின் வஞ்சக சூழ்ச்சி, பெண்களைக் கடந்து மாற்றுப் பாலினரையும் சிறைப்படுத்தியிருக்கிறது.

ஆண் உடலுக்குள் புகுத்தப்பட்ட பெண்ணாக வாழும் மாற்றுப் பாலினர், ஆண் அடையாளங்களை அழிக்கவும் பெண்ணாகத் தன்னை முன்னிலைப்படுத்தவும் முனையும்போது, அவர்களை அறியா மலேயே ஏற்கனவே அடிமைப்படுத்தப்பட்ட இந்து பெண்களை முன்மாதிரியாகக் கொண்டு பிரதிபலிக்கத் தொடங்குகின்றனர். அதனால் மாற்றுப் பாலினரிடமும் ஆணுக்கு அடங்கியிருக்க வேண்டிய அடிமை உணர்வு தங்கிவிடுகிறது. கூத்தாண்டவர் கோயி லின் நிகழ்வுகள் அனைத்தும் இந்து உளவியல் அடிமைத்தனங்களின்றி வேறில்லை. ஆண்களுடன் இவர்களுக்கு உண்டாகும் நேர்மையான உறவுகளைகூட கள்ளத்தனமாக வைக்கப்பட வேண்டிய கட்டாயமாகி, அதிகபட்ச சுரண்டல்களை சந்திக்க நேரிடுகிறது. மாற்றுப் பாலினர் பெரும்பாலும் தங்களை உடல் ரீதியாக மட்டுமே முன்னிறுத்திக் கொள்வதாலும், அவர்களை இத்தளையிலிருந்து விடுவிக்கும் வழிமுறைகளை எவரும் கண்டறியாததாலும் வெறும் பாலியல் பிம்பமாக மட்டுமே இந்த சமூகத்தின் கண்களுக்கு அவர்கள் புலப்படுகின்றனர். மாற்றுப் பாலினருக்கான அமைப்புகள்கூட, ஆணுறையின் அவசியத்தையும், எய்ட்ஸ் விழிப்புணர்வையுமே முன்னிலைப்படுத்திப் பணியாற்றுகின்றனரே ஒழிய, அவர்களின் சமூக விடுதலையை வலியுறுத்தியதாகத் தெரியவில்லை.

சமூக விடுதலை என்று இங்கு நாம் சொல்ல வருவது, தலித்துகளும் பெண்களும் கோருவதைப் போன்றதொரு முற்றிலுமான அங்கீகாரத்தையும் உரிமைகளையும் உள்ளடக்கியது. பாலியல், பாலுணர்வு என்ற சிறைக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் மாற்றுப் பாலினர் பகுத்தறிவு, சுயமரியாதை என முழங்கத் தொடங்க வேண்டும். மதக் கற்பிதங்களைக் கடக்கும் போதுதான் அடிமைத்தனம் அங்கே கட்டவிழ்கிறது. அதனால் பெண்களைப் போல, தலித் மக்களைப் போல மாற்றுப் பாலினரும் இந்து மதத்தின் பிடியிலிருந்து தங்களை விடு வித்துக் கொண்டாக வேண்டும். ஒருவித புனித எல்லைக்குள் வந்துவிட்டதாக நம்பினாலும், விரும்பியபடி வாழ்வதற்கான கட்டற்ற சுதந்திரத்தை அது வழங்கினாலும் உண்மையில் மாற்றுப் பாலினரின் உலகத்தில் வறுமையும் பாலியல் சுரண்டல்களும், வன்முறையுமே எஞ்சி நிற்கின்றன.

தாலி என்பது அடிமைச் சின்னமெனில், அதை யார் அணிந்தாலும் அது அடிமைத்தனம்தான். அதை அறுத்து விதவையாக்குவது உரிமை மீறலெனில், அதை யார் நிகழ்த்தினாலும் உரிமை மீறலே. பாலியல் தொழில் உண்மையில் பாலியல் சுரண்டலெனில், யாருக்கு நிகழ்ந்தாலும் அது சுரண்டல்தான். தொடர்ச்சியான பெண்ணுரிமைப் போராட்டங்களின் பலனாக, பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் பயனாக கேள்விக்குள்ளாக்கப்பட்ட பெண்ணடிமைத்தனங்களை மீட்டுருவாக்கம் செய்யும் பணியை மாற்றுப் பாலினர் கைவிட்டாக வேண்டும். அவர்களின் விடுதலைக்கான அடித்தளமாகவும் அதுவே அமையும்.

அரவாணிகள், திருநங்கைகள் என்ற பெயர் சொல்லி மாற்றுப் பாலினர் தங்களை அழைக்கத் தொடங்கியது வெகு அண்மையில்தான். அதற்கு முன்பும் இப்போதும் பல கொச்சைப் பெயர்களால் அவர்கள் இழிவுபடுத்தப்படுகின்றனர். ஆக, மாற்றுப் பாலினர், தங்கள் பாலினத்திற்கான மதச்சாயமற்ற பெயரைக் கண்டறிவதிலிருந்து அவர்களின் பகுத்தறிவுப் பயணத்தைத் தொடங்கியாக வேண்டியிருக்கிறது. பாலினம் குறித்த சமூகப் புரிதல்களே பெண்ணடிமைத்தனத்தின் மீது விழுந்த முதல் அடி. பெண்ணுரிமைக்கான தேடல்களும் பெண்ணியத்திற்கான தேவைகளும் எழுந்தது இந்தப் புரிதலில் இருந்துதான். தான் அடிமையென்றும் ஆணுக்கு அடங்கியவள் என்றும் நம்பிக் கொண்டிருக்கும்வரைதான் – பெண் மீதான சுரண்டல்கள் தொடர்கின்றன. மாற்றுப் பாலினருக்கும் அதே நிலைதான். மதக் கற்பிதங்களையும் புராணக் கதைகளையும் நம்பி, இனியும் தம் மீதான உரிமை மீறல்களை மாற்றுப் பாலினர் அனுமதித்துக் கொண்டிருக்கக் கூடாது.

சாதி, மத, இன மற்றும் பாலின ரீதியாக ஒடுக்கப்படுவோர் யாராக இருந்தாலும் அவர்களின் முதல் தேவை மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடுவதுதான். பகுத்தறிவை எட்டும் சமூகம்தான் சுயமரியாதைக்கான தேவையை முழுமையாக உணர்ந்து நிலைநாட்ட முடியும். பாலியல் உரிமைகளைக் கடந்து, கல்வி வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் கோருவது, சமூக அங்கீகாரத்திற்கான போராட்டங்களை முடுக்குவதென திசை திரும்ப வேண்டும். இவை சாதாரணமாக நிகழ்ந்துவிடக் கூடியதல்ல. இந்து அடிமைக் கருத்தியல்களை உடைத்தெழுந்த பெண்ணியத்தின், தலித்தியத்தின் நெடிய வரலாற்றினை முன்மாதிரியாகக் கொண்டு மாற்றுப் பாலினர் தங்கள் போராட்டத்தைத் தொடங்குதல் அவசியம். இதில் பகுத்தறிவுச் சமூகம் புரிந்து கொள்ளவேண்டியது மாற்றுப் பாலினரின் விடுதலை, சமூக விடுதலையின் அங்கம் என்ற உண்மையை! ஏனெனில், அடிமைத்தனம் என்பது மதம் உருவாக்கிய சங்கிலி. அதன் எல்லா கண்ணிகளையும் உடைத்தால் மட்டுமே ஆதிக்கத்தின் ஆணி வேரை அறுக்க முடியும்.

Pin It