‘சனாதன வாழ்வியல்’ எது என்று பதில் சொல்!
சனாதனம் என்ற முகமூடியில் பார்ப்பனியம் இப்போது பதுங்கி நிற்கிறது. சனாதனம் என்பது ஒரு வாழ்க்கை முறை, அது வர்ணாசிரமம் அல்ல என்று வாதிடுகிறார்கள். சனாதனவாதிகளுக்கு சில கேள்விகள்.
1. வர்ணாசிரமம் வேறு; சனாதனம் வேறு என்று கூறும் நீங்கள், வர்ணாசிரமத்தை எதிர்க்கிறோம் என்று கூறத் தயாரா?
2. சனாதனம் ஒரு வாழ்க்கை முறை என்று கூறுகிறார்கள், அந்த வாழ்க்கை முறை என்ன? அதன் பண்புகள் என்ன என்பதை விளக்குவார்களா?
3. வருணாசிரமம் அல்லாத சனாதன வாழ்க்கை முறை எப்போது எந்த காலத்தில் இங்கே நிலவியவது?
4. பால்ய விவாகம், சதி எனும் உடன்கட்டை ஏற்றும் கொடுமை தீண்டாமை, பிராமணன் வணக்கத்தக்கவன், சூத்திரன் பிராமணர்களின் வைப்பாட்டி மகன், கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டை அடித்து காவி வெள்ளை ஆடை அணிவித்து சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்தல், 10 வயது பிராமண சிறுவன் 70 வயது சூத்திர முதியவரை வாடா போடா என்று அழைத்து இழிவுபடுத்துதல், இப்படிப்பட்ட வாழ்க்கை முறையை சனாதன தர்ம வாழ்க்கை முறை என்கிறீர்களா அல்லது மறுக்கிறீர்களா?
5. சனாதன தர்மம் என்பது வர்ணாசிரம தர்மம் தான் என்றும், தீண்டாமை ஷேமகரமானது என்றும் இறந்து போன காஞ்சி சீனியர் சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறியதை ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா?
6. அவரே வர்ணாசிரம கடமைகளை ’பிராமணர்கள்’ கண்டிப்பாக பின்பற்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதற்கு சனாதன சபை என்று பெயர் சூட்டியதற்கு என்ன பதிலை கூறப் போகிறீர்கள்?
7. ‘பிராமணர்கள் கடல் தாண்டக் கூடாது’ என்ற கட்டுப்பாட்டை உடைத்து வெளிநாடுகளில் உயர்ந்த பதவிகளிலும், நீதிபதிகளாகவும் ஐடி நிறுவனங்களிலும் பணியாற்றுவது சனாதன தர்ம மீறலா? வர்ணாசிரமம் மீறலா? இதை சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை வைக்கும் நீங்கள் இந்த பிராமணர்களின் தலைக்கு என்ன விலை வைக்கப் போகிறீர்கள்?
8. இந்து மகாசபை தலைவர்களில் ஒருவரான பண்டித மதன் மோகன் மாளவியா என்ற ‘பிராமணன்’ லண்டன் வட்ட மேசை மாநாட்டுக்கு கடல் தாண்டி சென்றார். அதற்கு பரிகாரமாக ஒரு கூஜாவில் கங்கை நீரையும், காசியிலிருந்து மண்ணையும் எடுத்துக்கொண்டு லண்டனில் கடல் தாண்டிய பாவச் செயலுக்காக பூஜைகளை செய்தார். சனாதனம் நிரந்தரமானது என்றால் பரிகாரம் செய்து பாவத்தை போக்கிவிடலாமா? இது சனாதான வாழ்க்கை முறையா? வர்ணாசிரம வாழ்க்கை முறையா?
9. நீங்கள் பேசும் சனாதனம் தீண்டாமையை ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? சனாதன வாழ்க்கை முறையில் தீண்டாமை இல்லை என்று நிரூபிக்க உங்களிடம் ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?
10. தீண்டப்படாதார் கோயில் நுழைவு சட்டம் வந்த போது அதை எதிர்த்து லண்டன் பிரிவி கவுன்சில் வரை சென்று வழக்காடி தனக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றது சனாதன சங்கம். இதுதான் சனாதன வாழ்க்கை முறையா?
11. 1941 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி இந்து மகாசபை தலைவர் சாவர்க்கரை சனாதன தர்ம அமைப்பைச் சார்ந்தவர்கள் சந்தித்தார்கள், அப்போது தீண்டப்படாதார் கோயில் நுழைவு உரிமைக்கு சட்டம் கொண்டு வந்தால் அதை இந்து மகாசபை எதிர்க்கும் என்று கூறிய சாவர்க்கர், மற்றொரு முக்கிய கருத்தையும் கூறினார். இந்து சமூகம் முழுமைக்கும் சனாதான தர்மம் பொருந்தும் என்று இப்போது பாஜக கூறுவதைப் போல் அவர் ஏற்கவில்லை சனாதன தர்மம் என்பது ஒட்டுமொத்த இந்து சமூகத்திற்கும் பொதுவானது அல்ல என்று கூறினார். (ஆதாரம் ; சாவர்க்கர் உரைத் தொகுப்பான Whirlwind Proganda )
12. கோயில் நுழைவுக்கான உரிமைச் சட்டம் வந்தபோது காந்தி அதை ஆதரித்தார். இதை எதிர்த்து இந்து மகாசபை தலைவர் பார்ப்பனர் மதன் மோகன் மாளவியா 1933 ஜனவரி 23 காசியில் பார்ப்பனர்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார். போராட்டம் நடத்திய அந்த அமைப்புக்கு அவர் சூட்டிய பெயர் சனாதன மகா சபா. இதுதான் சனாதன வாழ்க்கை முறையா?
13. 1933 ஜனவரி 8ஆம் தேதி மாளவியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் சில நிபந்தனைகள் சூழ்நிலைகள் காரணமாக தீண்டப்படாதவர்கள் இருக்கின்றன. அவர்களின் பிறப்பு, செய்யும் தொழில் அடிப்படையில் தான் தீண்டாமை நிர்ணயிக்கப்படுகிறது என்று பச்சையாக ஆதரித்து கடிதம் எழுதினார். இது சனாதன வாழ்க்கை முறையா? வர்ணாசிரம வாழ்க்கை முறையா? இரண்டும் வெவ்வேறு என்று வாதிடுகிறவர்கள் இந்த தீண்டாமையை எதிர்த்ததாக வரலாறு உண்டா?
14. 1947 செப்டம்பர் 10ஆம் தேதி பம்பாய் மாகாண சட்ட சபையில் தீண்டப்படாதார் கோயில் நுழைவு சட்டம் வந்தபோது சட்டத்தை எதிர்த்து அன்றைய பம்பாய் மாகாண முதல்வர் பி.ஜி.கெர் என்பவரிடம் மனு கொடுக்க சென்றது ஒரு அமைப்பு, அந்த அமைப்பின் பெயர் ’சனாதன இந்து’ இதை சட்டமன்றத்தில் முதல்வரே அறிவித்து அந்த கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறினார். இதுதான் சனாதன வாழ்க்கை முறையா?
(தொடரும்)
- விடுதலை இராசேந்திரன்