ambedkar 237இந்து மதம் சதுர்வர்ண பேதத்தை அடிப்படையாகக் கொண்டது. தருமம் என்றால் சடங்கு, சம்பிரதாயங்களேத் தவிர அறநெறி என்பதே இந்து மதத்தில் கிடையாது. பிராமணன், சத்ரியன், வைசிகன், சூத்திரன் இந்த வர்ண பேதத்தை நிலைநிறுத்தத்தான் இந்துமதம் தோன்றியதோ என்னவோ! இந்துமதத்தில் நூற்றுக்கணக்கான கடவுளர்களும் அவர்களுக்கென்று தனிப்பட்ட வழிபாட்டு முறைகளும் உள்ளன.

பகவத்கீதை கூட மனுஸ்மிருதியைத்தான் முன் நிறுத்துகிறது. ஒருவன் மகராக பிறந்ததற்கு அவனது கர்மவினையை காரணம் காட்டுவது எவ்வளவு பெரிய கொடூரம். இன்று கூட கோயில் கருவறையில் பிராமணர்களைத் தவிர வேறு யாராவது நுழைய முடிகிறதா? இந்தியாவில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயன்ற ஆரியர்களை கடுமையாக எதிர்த்தவர்கள் நாகர்கள்.

நாகர்களைப் போல வேறெந்த இனமும் அவ்வளவு பெரிய இழப்பை சந்தித்தது கிடையாது. அதனால் தான் நாகர்களின் பூமியான நாக்பூரில் புத்த மதத்தை தழுவும் தீக்சா ஏற்பாடு செய்யப்பட்டது. அறநெறி இல்லாத எந்த மதத்திடமும் நீங்கள் புத்துயிர்ப்பைக் காண முடியாது.

வேதமரபிலிருந்து வந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் இந்து மதத்தில் சாதியம் வேரோடு சாய்க்க முடியாத விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. இந்து மதம் மானுட விடுதலையைப் பற்றி பேசவே இல்லை. சத்வம், ரஜஸ், தமஸ் இந்த மூன்று குணங்களும் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட நிரந்தர குணங்கள் என்று இந்து மதம் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

யாகங்களுகம், வேள்விகளும் வீடுபேற்றை பெற்றுத்தரும் என்றால் கருடபுராணம் எதற்கு சொல்லப்பட்டது. விடுதலைக்கு வழிகாட்ட வேண்டிய மதமே உன்னை சிறை வைக்கிறது. சுயமரியாதையை பறித்துக் கொள்ளும் எந்த மதமும் நிலைத்து நின்றதாக சரித்திரம் இல்லை.

அக்காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் இந்து தருமமென கருதப்படும் சடங்குகள், கிரியைகள் மற்றும் யாகங்கள் ஆகியவை மோட்ச சாதனங்களாக இருக்கின்றன என்பதில் கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருந்தனர். இந்து சமய சமூக அமைப்பின் லட்சியமே சதுர்வர்ண பிரிவுதான் என்றிருந்த காலகட்டம் அது.

சனாதனதர்மம் இந்து மதத்தவனிடம் கர்த்தா அல்லது கடவுள் என்று ஒருவர் இருக்கின்றார் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையை வளர்த்து விட்டிருந்தது. பகவத்கீதை கூட ஆத்மா உண்டென்றும் இறப்பிற்கு பிறகான வாழ்க்கை உண்டென்றும் பேசுகிறது. சூத்திரனாக பிறந்ததற்கு முற்பிறவியில் செய்த பாபமே காரணம் என்று இந்துமதம் பதில் தந்தது. பவுத்தம் மனம் இருப்பதால் தான் உலகம் விரிகிறது என்கிறது. மனம் தான் இவ்வுலகில் ஆணாகவும் பெண்ணாகவும் பிறப்பெடுக்கிறது.

மனிதர்களை பொம்மலாட்ட பொம்மைகளாக ஆட்டுவிப்பதும் மனம் தான். துன்பத்தில் ஊற்றுக்கண் மனம் தானென்று பவுத்தம் சொல்கிறது. பவுத்த தருமத்தின் ஒரே நோக்கம் எவ்வாறு உலகிலிருந்து துன்பத்தை ஒழிப்பது என்பதே. மேற்கிலும், கிழக்கிலும் தங்களை அவதாரங்கள் என்றும், இறைத்தூதர் என்றும் பிரகடனப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் புத்தர் மக்களின் துன்பத்திற்கு விடைகாண புறப்பட்டார். உலகில் பின்பற்றப்படும் எண்ணற்ற மதங்கள் கடவுளை முன்நிறுத்துகின்றன பவுத்தம் மட்டுமே சத்தியத்தை அடித்தளமாக கொண்டிருக்கிறது.

கடவுளை முன்நிறுத்தும் மதங்களின் அடிப்படை கொள்கை ஆட்டம் கண்டுவிட்டால் மதத்தின் அடித்தளமே சுக்குநூறாக சிதறிவிடும். சத்தியம் ஒன்றே தம்மம் இதை உணரத் தவறும் எந்த மதமும் சமயமே இல்லை. பவுத்தம் பிறரை துன்பப்படுத்தாதே, நீ துன்பப்படமாட்டாய் என்கிறது.

பிறரைக் கொல்லாதே, நீ கொல்லப்பட மாட்டாய் என்கிறது. பிறரது கொருட்களை திருடாதே உன் பொருள் களவாடப்படாது என்கிறது. உண்மையே பேசு , பிறர் உனக்கு முன் பொய்பேச தயங்குவார்கள் என்கிறது. காமவெறி கொள்ளாதே அது இனப்பெருக்கத்துக்காக இயற்கை நடத்தும் விளையாட்டு நீ அதில் சிக்கிக் கொள்ளாதே என்கிறது.

மது உன் அறிவைக் கொன்றுவிடும் எனவே போதை எனும் புதைகுழியில் விழுந்து விடாதே என பவுத்தம் உன்னை எச்சரிக்கிறது. இந்த பவுத்தக் கோட்பாடுகள் மனிதனை மனிதனாக்க புத்தரால் அளிக்கப்பட்டவை.

மேற்கண்ட கோட்பாடுகளை தரஅளவீடுகளாக பயன்படுத்தி உங்கள் செயல்களனைத்தையும் மதிப்பீடு செய்து கொள்ளும்படி போதிக்கிறது பவுத்தம். ஏனெனில் அறநெறிப்படி நடைமுறை வாழ்க்கையை வகுத்துக் கொள்கின்றோமா அல்லது தன்னைத் தானே புத்தர் என்று ஏமாற்றிக் கொள்கின்றோமா என்பதை இந்த அளவீடு காட்டிக் கொடுத்துவிடும்.

வீழ்ந்தவர்கள் எழுவதற்கு தாங்கள் வீழ்ந்துவிட்டோம் என முதலில் அவர்கள் உணர்தல் வேண்டும். சகுணத்துக்கும், நிர்குணத்துக்கும் தங்களை ஆட்படுத்திக் கொண்டுவிட்ட மக்களை பவுத்தத்தின் பக்கம் கொண்டுவர பவுத்தம் சத்திய மார்க்கமாக இருந்தாலொழிய முடியாது.

சத்தியத்தை நாடுபவர்கள் எந்த மதத்தில் இருந்தாலும் சரி தேனை நாடிவரும் வண்டுபோல பவுத்தத்தில் தன்னை கரைத்துக் கொள்வார்கள். பவுத்தம் உலகை மாற்றும் முன் உன்னை மாற்றிக் கொள் என்கிறது. நற்பலன்கள் வண்டிச் சக்கரம் போல் உன்னை பின்தொடரும். தீயபலன்கள் நிழல் போல உன்னைப் பின்தொடரும் என்கிறது.

உன்னையே நீ அறிய முற்பட்டால் இந்த உலகம் மாபெரும் சிறைக்கூடம் என்பதை உணர்ந்து கொள்வாய். இந்த இருட்சிறையிலிருந்து தப்பிக்க வழி தேடுவாய். அப்போது பவுத்தம் ஒரு விளக்காக வெளிச்சம் தரும். அடிமைப்பட்டிருக்கும் மனமே தப்பிப்பதற்கு வழிகாட்டும். விடுதலைக்கான பாதையில் உன்னை வழிநடத்தும்.

சத்தியத்தின் பாதையை தேர்ந்தெடுப்பவன் எவனோ அவன் தீமை செய்ய அஞ்சுவான். நீ கடைத்தேற வேண்டுமென்றால் நன்நடத்தை, நன்முயற்சி, நன்சிந்தனை, நற்பாதை வேண்டும். இதைத்தான் பவுத்தமும் வலியுறுத்துகிறது. கடவுளுக்காக மதமல்ல மக்களுக்காகத்தான் மதம்.

மனிதனின் துன்பத்தை உணர்தலே மதத்தின் உண்மையான அடிப்படையாக இருக்கவேண்டும். பவுத்தம் புத்தரின் விடுதலை திட்டம். கடவுளின் கட்டளைக்கு அடிபணியாத மதத்திட்டம். யாதும் துன்பமில்லை, யாதும் அபாயமில்லை, வா நான் வழிகாட்டுகிறேன் என்று யச்சனுக்கு சொன்னதைப் போலத்தான் நமக்கும் சொல்கிறார்.

பவுத்தம் கடவுள் கருத்திலிருந்து மனிதனுக்கு விடுதலை வாங்கித் தருகிறது. கடவுளின் மதம் இது என்ற பிரச்சாரத்தை ஏற்றுக் கொள்ளாதே பகுத்தறிந்து பார் என்கிறது. கடவுட் கொள்கையை ஏற்றுக் கொண்டாயானால் உண்மையானதை ஒருபோதும் கண்டடைய மாட்டாய் என்கிறது. மேலும் மேலும் சிக்கித் தவிப்பாயே ஒழிய கரைசேர மாட்டாய். கடவுள் பரிபூரணமானவர் என்றால் படைப்பு ஏன் பரிபூரணமில்லாமல் இருக்கிறது.

இந்தக் கேள்விக்கு எந்த மதமும் இதுவரை பதில் தந்ததில்லை. இயேசு நானே வழி என்றார் என்னையல்லாமல் யாரும் பிதாவை அடைய முடியாது என்றார். மனுசகுமாரனாக உலகிற்கு தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். நபிகளும் தானே இறுதித் தூதர் என்று தன்னை மையப்படுத்தினார்.

புத்தர் தான் அவதாரமென்றோ, தூதரென்றோ தன் கொள்கையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமென்றோ எத்தகைய நிபந்தனையையும் விதிக்கவில்லை. இறைத்தூதர் என்றால் மனிதர்களைவிடவும் அதிகாரம் மிக்கவர்கள் என அர்த்தம் ஆகிறது. ஒரு கொள்கை தன்னாலேயே நிலைபெற வேண்டுமேயன்றி மனிதனின் அதிகாரத்தால் அல்ல.

ஒரு கொள்கை மனித அதிகாரத்தை சார்ந்திருந்தால் அது கொள்கையே அல்ல. வானியல் ஆராய்ச்சியாளர்கள் இப்போது சொல்கிறார்கள் உலகை இயக்க விதி போதும் கடவுள் தேவையில்லை என்று. கடவுள் என்ற இடைச்சொருகலை இங்கு கொண்டுவந்தால் அது விதியின் மீதே கைவைத்து பார்ப்பதாகும். அப்படி விதியின் மீது கைவைத்து பார்க்க முடியுமென்றால் இந்த உலகம் கைவிடப்பட்ட உலகமாய் டைட்டானிக் கப்பலாய் என்றோ மூழ்கியிருக்கும்.

பவுத்தம் வெளிப்பாடான மதம் அல்ல. ஏனெனில் வெளிப்பாடான மதங்கள் அனைத்தும் உலகை கடவுள் படைத்தார் என்றும், காப்பவரும் அவரே என்றும் அவருக்கு தாங்கள் கீழ்ப்படியவேண்டும் என்றும் கூறுகின்றன. இங்கு கடவுள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதனுக்கு தன்னை வெளிப்படுத்தி அந்த இறைத்தூதர் மூலம் பிற மக்களிடம் அதை கொண்டு போய் சேர்க்க முடிகிறதென்றால் அதுவே வெளிப்பாடான மதம் என்று ஆகிறது. பவுத்தம் எந்த புத்தகத்தையும் வணங்கச் சொல்லவில்லை அறநெறியுடன் வாழச் சொல்கிறது.

பவுத்தம் துன்பத்திலிருந்து விடுதலை காணும் வழிகளைச் சொல்கிறது. ஆசை நம்மை பாவக்கிணற்றில் தள்ளிவிடும் தப்பிக்க ஒரு வழியும் இருக்காது. எனவே ஆசையால் எழும் ஆர்வத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். ஆசையை வென்றுவிட்டோமானால் நமக்கு நிப்பானம் கைகூடிவிடும். இந்துமத்தில் இருக்கும் வரை சதுர்வர்ண முறையிலிருந்து தப்பிக்கவே முடியாது. அது தான் மதம்.

பவுத்தத்தை தழுவியவர்களிடம் புத்தர் சொன்னார் நீங்கள் பிராமணராக இருக்கலாம் சூத்திரனாக இருக்கலாம் பவுத்தம் எனும் சமுத்திரத்தில் சங்கமமானவுடன் நான் கங்கை நான் காவிரி என்ற அடையாளத்தை துறந்துவிட வேண்டும். வீட்டிற்கு வெளியே காலணிகளை விடுவதுபோல. இங்கு எல்லாமே புத்தம் தான்.

அலைகளும் கடலோடு சேர்ந்தவை தான். அக்கரைக்கு அழைத்துச் செல்லாத ஓட்டைப் படகினை ஏன் தோளில் சுமக்க வேண்டும். ஆயிரக்கணக்கான கடவுளர்கள் இந்தியாவில் இருந்தும் வெளிநாட்டில் இந்தியாவின் முகமாக புத்தரே அறியப்படுகிறார். புத்தர் இந்தியாவில் அவதரித்தார் ஆனால் உலகிற்கே ஒளி கொடுக்கும் ஞான சூரியனாக விளங்கினார்.

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் எங்களை நடத்தினால் எங்கள் தாய்நாடு என்று பெருமிதத்துடன் மார்தட்டிக் கொள்ள முடியுமா எங்களால். வெள்ளாவி வைத்து வெளுத்தாலும் சாதிய அழுக்குகள் இந்துக்களிடமிருந்து ஒருபோதும் போகாது. தெய்வச்சிலையை வடிவமைத்த சிற்பிக்கு அந்தச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதும் அது அவனுக்கே கடவுளாகிவிடுகிறது.

சடங்குகளும், சம்பிரதாயங்களும், பரிகாரங்களும் இந்து மதத்தை சத்தியத்தை விட்டு வேறெங்கோ அழைத்துச் சென்றுவிட்டன. ஒரு மதத்திற்கு கொள்கைதான் அடிப்படையாக இருக்க வேண்டுமே தவிர மனிதர்கள் அல்ல. கொள்கை இல்லாத, தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து கொள்ளாத மதம் நிலைக்கவே நிலைக்காது. அம்பேத்கர் காந்தியிடம் சொன்னதை நான் இங்கு உரக்கச் சொல்கிறேன் - சுயஉதவி, சுயமரியாதையை நாங்கள் நம்புகிறோம். மகாத்மாக்களிடம் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

- ப.மதியழகன்

Pin It