அ.பெ.கா நூலகம், புதுக்கோட்டை

கடந்த திங்கள்கிழமை 19-08-2018 அன்று தென்தமிழ் நாட்டில் உள்ள உசிலம்பட்டி என்ற ஊரில் வசித்து வந்த 28 வயது நிரம்பிய இராமுத்தாய் ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளுக்குத் தாயாக இருந்து வரும் பெண், நான்காவது குழந்தைக்கு ஏழு மாதம் கர்ப்பிணி. நான்காவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்துவிடக்கூடாது என்பதால் தவறான கருக்கலைப்புச் செய்ய உடன்பட்டு இறந்து விட்டாள். மருத்துவர்கள் கருக்கலைப்புச் செய்ய மறுத்துவிட்ட நிலையில் செவிலியர் ஒருவர் கருக்கலைப்புச் செய்த போது மரணமடைந்து விட்டார்.

இது எல்லா காட்சி ஊடகங்களிலும் செய்தியாக வந்து விட்டது. பிணக்கூராய்வில் கருக்கலைப்பு செய்யப்பட்ட சிசு ஆண் குழந்தை என்று உறுதியாகி உள்ளது. ஊடகத்தில் பேட்டி கொடுக்கின்ற பெரியவர் ஒருவர் கூறுகிறார் “ஸ்கேன் சென்டரில் ஆணா பெண்ணா என்று பார்த்துச் சொல்லும் டாக்டரை தூக்கில் போட வேண்டும்” என்று ஆதங்கப்பட்டார்.

girlkids 600தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஸ்கேன் சென்டரிலும், "இந்த சென்டரில் ஆண் பெண் பார்த்துச் சொல்லப்பட மாட்டாது. Pre-Natal Diagnostic Techniques Act  என்ற பாலினத்தைத் தேர்வு செய்வதைத் தடை செய்யும் சட்டம் 1994ம் ஆண்டு சட்டப்படி இது குற்றமாகும்" என்று எழுதப் பட்டிருக்கும்.

“தமிழகம் முழுவதும் குழு அமைத்து ஸ்கேன் சென்டர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கூறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்” (தீக்கதிர் 21-09-2018 பக்கம்-5 திருச்சி பதிப்பு).

இதற்கெல்லாம் காரணம் கர்பமாகியிருக்கும் பெண்ணின் குடும்பத்தார், அடுத்து பிறக்கப் போகும் குழந்தை பெண்ணாக இருந்துவிட்டால் என்ன செய்வது? எனவே கருவிலேயே அழித்துவிட வேண்டும் என்பதுதான் நோக்கம்.

பெண் சிசுக்கொலை என்பது இன்று நேற்றல்ல. இராஜாராம் மோகன்ராய் காலம் தொட்டு நடந்து வருகின்றது. இந்த பெண் சிசுக் கொலை என்பது கிருத்துவ மதத்திலும், இஸ்லாம் மதத்திலும் இன்றுவரை கிடையாது. இந்து மதத்தில் மட்டும் சாதி வித்தியாசம் பாராமல் நீக்கமற எல்லாச் சாதியிலும் நடந்து வருகிறது. பெண் சிசுக் கொலை கூடாது என்று அரசு விளம்பரம் செய்கிறது. மருத்துவர்களைக் கண்காணிக்கிறது. ஸ்கேன் சென்டர்களைக் கெடுபிடி செய்து கண்காணிக்கின்றார்கள்.

இவ்வளவு நடந்தும் பொதுமக்கள் இன்னும் பெண்ணாக இருந்தால் கருக்கலைப்புச் செய்துவிட வேண்டும் என்பதில் மிகவும் தீர்மானமாக இருக்கின்றார்கள். அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்குப் பயந்து ஏறத்தாழ 90 சதவீத மருத்துவர்கள் பாலினம் குறித்து பேசுவதில்லை. கருக்கலைப்புச் செய்யாதவர்கள் என்று ஊர்ஜிதமாகத் தெரிந்தும் கூட சொல்வது இன்று நடைமுறையில் இல்லை. ஏனென்றால் தெரிந்து கொண்டவர்கள் வாய் சும்மா இருப்பதில்லை. பெண் குழந்தை என்றால் வேண்டாம் என்ற முடிவுக்கு மருத்துவர்களோ, ஸ்கேன் சென்டர்களோ முடிவு செய்வதில்லை. பிறகு ஏன் அவர்களைத் தண்டிக்க வேண்டும்?

இங்கு நாம் சிந்திக்க வேண்டியது, ஆணா, பெண்ணா என்று கேட்பது குற்றமா? இல்லை, ஆணா பெண்ணா என்று சொல்வது குற்றமா? சொல்வதுதான் குற்றம் என்று அரசாங்கம் சொல்கிறது. அதன் விளைவுதான் நிறுவனங்களைக் குற்றவாளியாக்குவது! அரசாங்கத்தின் பார்வையில் கேட்பவர்கள் பக்கம் தவறு இல்லை. கருச்சிதைவு செய்ய அரசும், நிறுவனங்களும் ஒத்துழைப்பதில்லை. ஆனால் பெண்ணாகப் பிறந்து விட்டால் அதைக் கொல்வதற்கு மருத்துவர்கள் தேவையில்லை. பெற்றவர்களே கணக்கை நேர் செய்து விடுகிறார்கள்.

தங்களுக்குத் தெரிந்த ஏதோ ஒரு வழியில். அதைத் தடுக்க, தவிர்க்க உருவானதுதான் “தொட்டில் குழந்தை” திட்டம். உனக்குப் பாரம் என்று முடிவு செய்தால் தயவு செய்து உயிர்க் கொலை செய்துவிடாதே. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். சொல்லவும், மனமின்றி வளர்க்கவும் வழியின்றி தொட்டில் குழந்தைத் திட்டத்திற்கு போய்ச் சேருகிறது.

“இராமுத்தாய்” விவகாரத்திற்கு வருவோம். ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள், இதுவும் பெண்தான் என்று அவமதிக்கப்படுகின்றாள். இங்கு குழந்தை பெற்றுக் கொள்வது தாயும் தகப்பனும் செய்யும் முடிவல்ல. “நான்காவதும் பெண்ணாகப் போய்விட்டால்”? இராமுத்தாயின் மரணத்திற்குக் காரணமாக இருக்கும் ஒரே கேள்வி இதுதான். பெண் குழந்தை கருக்கலைப்பு, பெண்சிசுக் கொலை இவை அனைத்திற்கும் முன் உள்ள ஒரே கேள்வியும் இதுதான்!

“நான்காவதும் பெண் என்றால்”, உயிரைப் பணயம் வைத்து அந்தச் சிசுவை அழிக்க வேண்டிய நிலைக்கு அந்தத் தாய் வந்த காரணம் என்ன? வெறுமனே ஸ்கேன் சென்டர்காரனைப் பிடித்து உலுக்குவதை ஒரு செயல் திட்டமாக அரசு சொல்வதை விட்டு விட்டு நீண்ட தொலைநோக்காக வல்லுநர் குழுக்களை அமைத்துத் தீர்வு காணா விட்டால், இந்து மதத்தின் இந்த மூடப்பழக்கத்தை ஒழிக்கவே முடியாது.

பெண் சிசுக்கொலை குறித்து நமது கேள்விகள்

1) பெண் குழந்தை பிறந்து விட்டால் அந்தக் குடும்பம் தோஷமாகிவிடுமா?

2) பெண் குழந்தையாக இருந்தால் அந்தக் குழந்தையால் அந்த சம்மந்தப்பட்ட குடும்பம் அழிந்து போய்விடுமா?

3) பெண் குழந்தை என்றால் அறிவற்ற, பொறுப்பற்ற, சமூக இழிவைத்தேடித்தந்து விடுமா?

4) பிறந்து வளரும் போது இது பேயாக மாறிவிடுமோ இல்லை அவலட்சணமாகிவிடுமா?

5) அந்தக்குழந்தை ஒரு கட்டத்தில் தேசத்திற்கு அவமானத்தை உண்டாக்கிவிடுமா?

6) பெண் குழந்தையாகப்பிறந்து விட்டால் வீட்டில் இருப்பவர்களெல்லாம் செத்து விடுவார்களா?

7) பெண் குழந்தையாக இருந்தால் சமூகத்திலிருந்து அந்தக்குடும்பம் விலக்கிவைக்கப்பட்டுவிடுமா?

8) பெண் குழந்தையாக இருந்தால் ஊருக்கு அவமானமா?

9) பெண் குழந்தை வளர வளர ஊணமாகிவிடுமா?

10) பெண் குழந்தை வாழத் தகுதியற்றதா?

மேலே உள்ளவற்றைத்தவிர வேறு என்ன காரணம்? ஸ்கேன் சென்டர்களை நொங்கி எடுக்கின்ற அரசுகள் இந்த கேள்விகள் குறித்து விவாதித்தது உண்டா? இவை எதுவும் இல்லை என்றால் வேறு சமூகக் காரணம் என்ன?

சமூகக்காரணம் : பெற்றுக் கொள்ளும் தாய்க்கு -  அந்தக் குடும்பத்திற்கு

இதைத்தவிர அந்தப் பெண்ணின் உறவினர்க்கோ, சமூகத்திற்கோ சார்ந்துள்ள சாதி இனக்குழுவிற்கோ எந்தப் பிரச்சினையும் இல்லை.

இந்து தாயின் பிரச்சினை

ஆம்பளைப் பிள்ளை பெற்றுக் கொடுக்கும் தகுதியற்றவள், வக்கற்றவள், உபயோகமற்றவள், கொள்ளி வைக்க வாரிசு தரமுடியாதவள். ஏற்கனவே ஆண்வாரிசு இல்லாத வீட்டிலிருந்து கட்டிவந்தது தப்பு என இப்போதுதான் புரிகிறது. வேறு வழியில்லை. இவளை விரட்டிவிட்டுட்டு இன்னொரு கல்யாணம் செய்ய வேண்டியதுதான். இல்லையென்றால் இவள் இருக்கட்டும். ஆண் பிள்ளை பெற்றுக் கொள்ள இன்னொரு திருமணம் தான் தீர்வு.

குடும்பத்திற்கு தொல்லை

ஏற்கனவே மூன்று பெண் இதோடு நான்கு. நான்கு பேரையும் படிக்க வைக்கனும், நல்ல இடத்துல கல்யாணம் செய்து கொடுக்கனும். எவ்வளவு குறைந்தபட்சம் கணக்குப்பார்த்தாலும் நம்ம சாதியிலே ஒரு எலக்ட்ரீசியனுக்கு கட்டிக் கொடுத்தாலும் நான்கு பேருக்கும் குறைச்சலா 60 இலட்சம் தேவைப்படும். காதல் கல்யாணம் என்று பார்த்தால் இந்த அளவு செலவு வராது.

ஆனால் காதல் கல்யாணம் செய்ய பெத்தவங்க நாம ஒத்துக்கிட்டாலும் நம்ம சாதிக்காரன் விட மாட்டான். கேவலமாக காரித்துப்பவான். முதல் பிரச்சினையே ஆண் வாரிசு இல்லாத வீடுன்னு சொந்தக்காரனே பெண் எடுக்க மாட்டான். பொண்ணு சிவப்பா இருந்தாலும் கொஞ்சம் முன்னே பின்னே செய்ய ஒத்துக்கிறுவானுக.

நம்ம நெறமே கரிக்கட்டை மாதிரி. நம்ப புள்ளைகளைச் சொல்லவே வேணாம். புள்ளைங்க வளர்ந்த பிறகு வச்சுக்கிட்டு அவமானப்படுறதை விட சிசுவிலேயே கொன்று விட்டால் மனசு ஆறிப் போயிரும். ஏற்கனவே மூணு இருக்கு. இதுகளைக் கரை சேர்க்கிறதுக்கே வழியில்லை!

இந்தக் காரணங்களைத் தவிர வேறு என்ன காரணம் இவர்களை இந்த முடிவுக்கு கொண்டு செல்கிறது? சுகாதாரத்துறை அமைச்சருக்கும், இந்த மாநிலத்தை ஆளுகிற முதலமைச்சருக்கும், சமூக சிந்தனையாளருக்கும் இது தெரியாதா?

இந்து மதத்தின் உட்சபட்ச பீடம் என்று வர்ணிக்கப்படுகின்ற சங்கர மடத்திலிருந்து இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு? மருத்துவமனைகளையும், பாலினம் கண்டுபிடிக்கக்கூடிய ஆய்வு நிலையங்களையும் மிரட்டினால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என யார் எண்ணினாலும் “கல்யாண வீட்டில் சீப்பை ஒளித்து வைப்பது” என்பதற்கினையான முடிவு தான் அது.

இந்து மதச் சட்டங்களும், இது வகுத்து வைத்திருக்கின்ற வழிமுறைகளையும் தகர்க்காமல் அழுகிச் சீர் பிடித்து நாறும் தொழுநோய்க்கு, வெளிப்புறத்தில் வாசைன திரவம் தெளிப்பதற்குச் சமமானதுதான். பெண் சிசுக்கொலையைத் தடுக்க வேண்டுமென்றால் இந்துத் திருமண நடை முறைகளை மாற்றியமைக்க வேண்டும். வரதட்சனை வாங்குவது சட்டப்படி குற்றம் என்று பேப்பரில் உள்ள சட்டம் சமரசமின்றி நூறு சதவீதம் நடைமுறைப்படுத்த வேண்டும். வரதட்சணை போலவே சீதனம் கொடுப்பதும் வாங்குவதும் அனைத்துத் திருமணங்களிலும் தடை செய்யப்பட வேண்டும். திருமண நடைமுறைகள் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும். தீருமண செலவின கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். காவல் துறையில் இது தனி அமைப்பாக Wing இருக்க வேண்டும். ஆடம்பரத் திருமணங்கள் சட்டப்படி குற்றமாக்கப்பட வேண்டும்.

இந்தச் சட்டங்கள் மதவாதிகளின் மனதை எதுவும் செய்துவிட வாய்ப்பில்லை. எனவே அரசாங்கம் துணிவுடன் நடைமுறைப்படுத்த வேண்டும். இதுபோன்ற திருமண அவலங்கள்தான் பெண்சிசு கருக்கலைப்பு, பெண் சிசுக் கொலை என்ற நிலைக்குக் கொண்டுபோய் அப்பாவி மக்களைக் கிரிமினல் குற்றவாளியாக்குகிறது. ஆண், பெண் விகிதாசாரத்தில் தற்போது பெண்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து விட்டது. இந்த நிலை நீடித்தால் என்ன நடக்கும் என்பதை வல்லுநர்கள் கூடி முடிவு செய்ய வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்திய அகமண முறைத் திருமணம் தடை செய்யப்பட வேண்டும். காதல் மற்றும் சாதி மறுப்புத் திருமணங்களை அரசு சட்டமியற்றி ஊக்குவிக்க வேண்டும். இப்படி சாதி மறுப்புத்திருமணம் செய்து கொள்பவர்கள் அனை வருக்கும் கணவன் அல்லது மனைவிக்கு கல்விக் கேற்ற வகையில் திருமணமான மூன்று மாதங்களுக்குள் அரசு உத்தியோகம் உறுதி செய்யப்பட வேண்டும். 

இவ்வாறு திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் குழந்தைகளுக்கு சிறப்பு உபகாரச் சம்பளமும் உயர்கல்விக்கு இடஒதுக்கீடு - முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இரண்டு பெண் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு அரசு உத்தியோகங்களில் கூடுதல் ஆண்டுச்சம்பள உயர்வு (Increment) வழங்கி உற்சாகப் படுத்தப்பட வேண்டும்.

கிராமப்புறங்களில் இரண்டு பெண் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ஒரு இலட்சம் பணமும், இரண்டு ஏக்கர் நிலமும் வழங்கப்பட வேண்டும். கட்டாயமாக இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வது சட்டப்படி குற்றம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

சவூதி அரேபியாவில் கர்பமான 9 வது வாரத்திலேயே பெற்றோர்களிடம் வயிற்றில் வளர்வது, ஆணா பெண்ணா என்று கூறிவிட்டு மருத்துவப் பதிவேடுகளில் முதல் பக்கத்திலேயே எழுதிக் கொடுத்து விடுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இந்த செயல்திட்டம் நம் நாட்டிலும் வர வேண்டும்.

இதுபோன்ற ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்தாமல், வெறுமனே பயனற்ற சட்டங்களைக் கடுமையாக்குவதில் எக்காலத்திலும் பயன் தராது. அரசாங்கம் பெண் குழந்தையைப் பெற்றுக் கொள்பவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையைப் புகுத்த வேண்டும் இல்லையெனில் இன்று இராமுத்தாய் நாளை வேறு ஒரு தாய்...

“பெண் தெய்வங்களை வணங்கினால் போதாது

பெண் குழந்தைகளை வணங்க வேண்டும்

நாகரீக மனித இனத்தின் அடையாளம் பெண்கள்”

Pin It