அண்மையில் சென்னை பெசன்ட் நகரில் இருக்கும் ஸ்பேசஸ் அரங்கில் "மொளகா பொடி' என்ற நாடகம், கட்டியக்காரி குழுவினரால் அரங்கேற்றப்பட்டது. தமிழ் நாடகக் களம் எப்படியிருக்கிறதென நமக்குத் தெரியும். கலைகள் அனைத்தையும் பார்ப்பனியத்திற்கு காவு கொடுத்துவிட்ட காலச் சூழலில், அவை சமூகத்தின் உண்மை முகத்தை பிரதிபலிப்பதில்லை. பாரம்பரியக் கலைகள் மட்டுமல்ல; அதன் நவீன வடிவங்களும் சாதியச் சமூகத்தின் இயல்பைக் காட்டிக் கொடுக்க தவறிப் போயின.

molakapodi_360சபாக்களில் பார்ப்பனர்களின் வெற்றுக் கடிகளாகவும், கொலைவெறி தொலைக்காட்சித் தொடர்களாகவும், திருவிழாக்களில் புராணக் கதைகளோடு வெளிப்படும் ஆபாசக் குப்பைகளாகவும் நாடகமெனும் நிகழ்த்துக் கலை – அதன் வீரியத்தை தொலைத்து பல காலமாயிற்று. கெட்டித்துக் கிடக்கும் இந்த அவலத்தை "மொளகாபொடி'யின் வீரியம் சற்றே அசைத்துப் பார்க்கிறது. சாதி ஆதிக்கத்தை நய்யாண்டி செய்து மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட "மொளகாபொடி', நாடகக் கலைக்கு புதிய உயிரோட்டத்தை அளிக்கிறது.

தம் வேரின் வரலாறு அறியாமலேயே, உரிமைகள் குறித்த கற்றறிதல்களற்ற எளிய மனிதர்களாக இருந்தபோதிலும் – ஏற்றத்தாழ்வுகளை அழிக்கும் பேராவலும் பெருவேகமும் கொண்டவர்களாய் – சண்டைக்கு நிற்கும் ஆண்களும் பெண்களும் சேரிக்குச் சேரி இருக்கத்தான் செய்கிறார்கள். இயக்கமோ, கட்சியோ, சின்னங்களோ, கொடிகளோ ஏதுமின்றி எளியவர்களாகவே பிறந்து எளியவர்களாகவே வாழ்ந்து முடிகிறவர்களின் அன்றாட வாழ்வியல் சவால்களைப் பற்றியதுதான் "மொளகாபொடி'.

1980களில் வெளிவந்த எழுத்தாளர் பாமாவின் சிறுகதைக்கு அப்படியே நாடக வடிவம் கொடுத்திருக்கும் இயக்குநர் சிறீஜித், நய்யாண்டியையே ஆதிக்கத்திற்கெதிரான ஆயுதமாகக் கையாண்டிருக்கும் கதையாசிரியரின் நோக்கம் சிதையாதவாறு இயக்கியிருப்பது சிறப்பு. சேரிக்குள்ளேயே இருந்து கொண்டு, அடிமைகளாக வாழ்க்கை நடத்தியபடியே, தன்னளவில் சின்னஞ்சிறிய எதிர்ப்புகள் மூலம், போகிற போக்கில் சாதியின் தலையில் ஓங்கி அடிக்கும் பெண்கள்தான் "மொளகாபொடி'யின் மய்யப் பாத்திரங்கள். அறுபது எழுபது ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரியாக, உழைப்பறியாத ஊதிப் பெருத்த, உடல் முழுவதும் மினுக்கும் நகைகளுடன் உலா வரும் ஆதிக்க சாதிப் பெண் கெங்கம்மாவிற்கும் – கூலிக்கு மாரடிக்கும் அன்றாடங்காய்ச்சியான தலித் பச்சையம்மாவிற்கும் இடையிலான வினைகளும் எதிர்வினைகளுமே மொத்த நாடகமும்.

கெங்கம்மாவின் புஞ்சைக் காட்டில் சும்மா வளர்ந்து கிடக்கும் புற்களை திருட்டுத் தனமாக மாட்டுத் தீவனத்திற்கு அறுப்பதில் தொடங்கி, அவளுக்கு பெருங்குடைச்சலாகவே இருக்கிறார் பச்சையம்மாள். ஆதிக்க சாதிப் பெண்ணோடு மோதுவதற்கு துடித்திருக்கும் பச்சையம்மாளின் கதாபாத்திரம் மூர்க்கம் வாய்ந்தது. நிலத்தில் உழைத்துப் பாடுபடுகிறவர்களுக்கு அதில் எந்தப் பயனும் இருப்பதில்லை என்ற ஆதங்கமே அவளை அடிப்படையில் கோபக்காரியாக மாற்றுகிறது. கெங்கம்மாவின் நிலத்தின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும்போது, எவ்வித தயக்கத்திற்கும் குற்றவுணர்விற்கும் அவள் ஆளாவதில்லை. கெங்கம்மாவின் கண்ணில் படாமல் எடுத்துச் செல்ல வேண்டுமே என்ற பதற்றம் மட்டுமே அவளிடம் இருக்கிறது. அப்படியே மாட்டிக் கொண்டாலும், சற்றும் கலங்காமல் சரிக்கு சரி சண்டையிடுகிறாள். தோட்டத்துப் புற்களை அறுத்தெடுத்து, கெங்கம்மாளையே தூக்கிவிடச் சொல்லும் இடம் அவளது துணிச்சலுக்கு ஆதாரம்.

தனக்கு சிறிதும் அடங்காத பச்சையம்மாளை பழி வாங்க எப்போதும் தயாராக இருக்கும் கெங்கம்மாள், வழக்கம் போலவே புல்லைத் திருடும் ஒரு நாளில், பச்சையம்மாளின் கண்களில் மிளகாய் பொடியை வீசுகிறாள். ஆத்திரமுற்று அவளை அடிக்கப் பாய்ந்தாலும், பின்னாளில் கெங்கம்மாளுக்கு "மொளகாபொடி' என பட்டப் பெயர் சூட்டி, சேரிப் பெண்களுடன் சேர்ந்து ஜாடை பேசி கிண்டல் செய்கிறாள். கெங்கம்மாளுக்கே சவால் விட்டு வெடிப்பும் துடிப்புமாக இருந்தாலும், கூலி வேலைக்குப் போனால்தான் அடுப்பெரியும் என்ற வறுமை நிலை பச்சையம்மாளையும் மற்ற பெண்களையும் – கெங்கம்மாளின் பருத்திக் காட்டில் பருத்திக் காய்களைத் திருட வைக்கிறது. இக்குற்றத்திற்காக போலிசை அழைத்து வந்து அத்தனை பேரையும் கைது செய்ய வைக்கிறாள் கெங்கம்மாள்.

பருத்திக் காட்டிலிருந்து காவல் நிலையத்திற்கு போலிஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் பெண்கள், சிறுநீர் கழிக்க வேண்டுமென கேட்டும் அந்த கோரிக்கை மறுக்கப்படுகிறது. வெகு நேரம் அடக்கி வைக்கும் பெண்கள், காவல் நிலையத்தில் காவலர்கள் முன்னிலையில் வரிசையாக நின்று சிறுநீர் கழித்து, தங்களின் எதிர்ப்பை நிறுவுகின்றனர். நாற்றமடிப்பதாக மூக்கை மூடிக் கொண்டு ஓடும் காவலர்களைப் பார்த்து, "இது யாருடைய நாற்றம்' என ஓங்கிய குரலில் கேள்வி எழுப்புவதோடு முடிகிறது நாடகம்.

ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாகவும் கச்சிதமாகவும் அமைக்கப்பட்டிருப்பதால், ஒரு மணி நேரம் போவதே தெரியவில்லை. நாடகத்தின் முதல் காட்சி தொடங்கி கடைசி வரையிலும் பார்வையாளர்களின் சிரிப்பொலியே கைத்தட்டல்களாக ஒலித்துக் கொண்டிருந்தது. நய்யாண்டியின் மூலம் சிரிக்க வைக்கும் கலை எல்லோருக்கும் கைவரப் பெறுவதில்லை. அதிலும் தீவிரமான சமூக அவலத்தை கருவாக வைத்துக் கொண்டு வாய்விட்டு சிரிக்கும்படி காட்சிகளை அமைப்பதென்பது, மிகப் பெரிய கலைஞர்களுக்கே சவாலானது. சார்லி சாப்ளினின் திரைப்படங்களில் இந்த சவாலை அவர் எளிதாகக் கடந்து வந்திருப்பதைப் பார்க்க முடியும். வாழ்க்கையை கிட்டக் காட்சியில் துயரமாக வும், தூரக் காட்சியில் நகைச்சுவையாகவும் கண்டறிந்தவர் சாப்ளின். அப்படியான பார்வை சமூக அவலங்களை கலைகளாக வடிக்கத் துணிகிறவர்களுக்கு அவசியமாகிறது.

"மொளகாபொடி'யைப் பொருத்தவரை, கதையாசிரியரே சாதி எனும் இழிவை தூரப் பார்வையிலிருந்து நகைச்சுவையாக அணுகி, முழுமையான நய்யாண்டிக்கான களத்தை அமைத்துக் கொடுத்துவிட்டதால், இயக்குநர் சிறீஜித்திற்கு அதற்கான நடிப்பை வாங்குவது மட்டுமே சிரமமாக இருந்திருக்கும். ஆனால், லிவிங் ஸ்மைல் வித்யாவின் நடிப்பாற்றலால் அந்த சிரமமும் இயக்குநருக்கு பாதியாகக் குறைந்திருக்கும். "மொளகாபொடி'யின் முழுமையான ஆளுமை அவர்தான். பச்சையம்மாளாக வித்யா வந்து நிற்கும் போதெல்லாம் அவ்விடம் நகைச்சுவையால் தீப்பற்றிக் கொள்கிறது. சேரிப்பெண்ணாக, அவரின் உடல்மொழியில் அத்தனை சுதந்திரம். சின்னஞ்சிறு அசைவுகளிலும் ஒற்றைப் பார்வையிலும் பச்சையம்மாள் கதாபாத்திரத்திற்கு 100 சதவிகிதம் நியாயம் செய்கிறார் வித்யா. பச்சையம்மாளின் பாத்திர உருவாக்கமும், வித்யாவின் நடிப்பாற்றலும் வீரியமிக்கதாக இருக்கும் போது, நாடகத்தின் பொழுது போக்கு அம்சத்திற்காகவோ, உற்சாக மிகுதிக்காகவோ சிலம்பக் கம்பை வைத்துக் கொண்டு அவர் ஆடும் நடனம் தேவையற்றது.

வித்யாவிற்கு ஈடுகொடுத்து நடித்திருக்கும் ரம்யா, கெங்கம்மாவாக உருட்டும் விழிகளுடனும், மூச்சிரைக்கும் பெருத்த உடலுடனும் வந்து நிற்கும் போது, அவரது தோற்றமே சாதியத்தின் குறியீடாக மாறி விடுகிறது. ஆனால், சேரிப் பெண்களுக்கும் இந்துப் பெண்களுக்குமான சண்டையின் அடிப்படைக் காரணம் – சாதி ரீதியான ஒடுக்கு முறையும் அத்துமீறலும்தான் என்பதை குறிக்கும் சொல்லாடல் எங்குமே இல்லை. இருதரப்பினரும் கடுமையான வார்த்தைகளால் திட்டிக் கொண்ட போதும், சாதி ரீதியான சொற்களை பயன்படுத்தாதது உண்மையை விட்டு விலகி நிற்பது போலாகிறது.

அது மட்டுமின்றி, இரு பிரிவினருக்கும் இடையில் முட்டி நிற்பது வர்க்க ரீதியான முரண் என்பதைப் போன்றதொரு உணர்வை யும் அது தோற்றுவிக்கிறது. சேரிவாசிகளுக்கும், இந்துக்களுக்குமான இடைவெளி சாதியால்தான் உருவாகிறதே ஒழிய, வர்க்க வேறுபாட்டால் அல்ல என்ற உண்மையை இது போன்ற ஆக்கங்கள் ஆணித்தரமாக நிறுவ வேண்டும். சிறுகதையிலேயே இந்த வார்த்தைகள் தவிர்க்கப்பட்டிருப்பது காரணத்தோடுதானா என்று தெரியவில்லை. வர்க்கப் பிரச்சனையைத்தான் அவர் சொல்ல வந்தாரெனில், அதற்கு சேரிப் பெண்கள் எதற்கு? வன்னியராகவோ, கள்ளராகவோ பச்சையம்மாள் இருந்துவிட்டுப் போயிருக்கலாம். நாடகமாக வடிவ மாற்றம் செய்யும்போது, கதாசிரியரோடு இணைந்து இயக்குநரேனும் இந்த இடரை சீர் செய்திருக்க வேண்டும்.

பச்சையம்மாள் மற்றும் கெங்கம்மாளோடு இணைந்து நடித்த எல்லோருமே முதன் முறையாக மேடையேறி நடித்திருக்கின்றனர். கொஞ்சமே வசனம் பேசி அவ்வப்போது வந்து போனாலும், நாடகத்தின் வெற்றிக்கு நிறைவான பங்கை அனைவருமே செலுத்தியிருக்கிறார்கள் என்பதில் அய்யமில்லை. "ஒரு பூங்கா, ஒரு போலிஸ்காரர், ஓர் அழகிய பெண் மூவரும் போதும்; நான் நகைச்சுவையை உருவாக்க' என்பார் சார்லி சாப்ளின். இந்த நாடகத்தில் வரும் காவலர்களைப் பார்க்கும்போது சாப்ளினின் கருத்து உண்மையாகிறது.

மேடைக் கலை ஆக்கமும் ஒளி வடிவமைப்பும் ஒன்றிற்கொன்று உறுதுணையாக இருந்து நாடகத்தின் நேர்த்திக்கு வலு சேர்த்திருக்கின்றன. கதாபாத்திரங்களையும் பொருட்களையும் மேடையில் இடமறிந்து சரியாக இருத்தி வைத்ததில், ஒவ்வொரு காட்சியும் புகைப்பட "ப்ரேமிற்கு' நிகரான கலைத்தன்மையை வெளிப்படுத்தியது. இசையைப் பொருத்தவரை, பறையை எங்கு பயன்படுத்தினாலும் அது அவரவரின் மன நிலைக்கேற்ற உணர்வைப் பொங்கச் செய்யும் எனும் போது, பச்சையம்மாளும் கெங்கம்மாளும் மல்லுக்கு நிற்கும் போதெல்லாம் அது எள்ளலையும் துள்ளலையும் உருவாக்குகிறது.

பாடல்களை எழுதிய கவிஞர் இன்குலாப் அவர்களின் பங்களிப்பு, கதையின் லகுவான போக்கிற்கும் வசனங்களின் தீவிரத் தன்மைக்கும் ஈடு கொடுத்திருக்கிறது. "இது யாருடைய நாற்றம்?' என்ற கேள்வி, சாதிய சமூகத்தின் ஒட்டுமொத்த பிம்பத்தையும் கட்டவிழ்க்கிறது.

இறுதியாக, கட்டியக்காரி நாடகக் குழுவினருக்கு...

கலை கலைக்காகவே என செயல்படுகிறவர்களுக்கு அது சென்று சேரும் இடம் குறித்து கவலைப்படத் தேவையிருக்காது. ஆனால் சமூகத்தைப் பிரதிபலிக்கவும், ஏற்றத் தாழ்வுகளை சீரமைக்கவும் விரும்பும் மக்கள் கலைக்கு அந்தக் கவலை அவசியமாகிறது. ஆதிக்கவாதத்திற்கான எதிர்ப்பை நிறுவும் ஓர் ஆக்கத்தை உருவாக்கும்போது, எங்கே யாருக்கு அதை நிகழ்த்துவது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். சாதி எதிர்ப்பு சிறுகதையை நாடகமாக்கி, ஒடுக்கப்பட்ட பிரிவினரையே அதில் நடிக்க வைத்து உருவாக்கப்பட்ட கலையும் அதற்கான உழைப்பும் – சாதிக்கு எதிரான கருவியாக களமறிந்து முன்னிறுத்தப்பட வேண்டுமே தவிர, பொழுதுபோக்கு வர்க்கத்தின் மாலை நேரத் தீனியாக வெறுமனே அது வீணடையக் கூடாது.

Pin It