ஏற்றத் தாழ்வையே குறிக்கோளாகக் கொண்ட சாதியச் சூழலில், சட்டத்தின் முன் மட்டுமாவது அனைவரும் சமம் என்பதுகூட, எழுத்தளவில்தான் உள்ளதே தவிர நடைமுறையில் இல்லை. அடக்குமுறைக்கு உள்ளாகும் தலித் மக்களைப் பாதுகாக்க சில சிறப்புச் சட்டங்கள் இருந்தாலும், சராசரி சட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்குக்கூட, தலித் மக்களை இச்சாதியச் சமூகம் அனுமதிப்பதில்லை. இந்நிலையில் நாகரிகமற்ற, மனிதாபிமானமற்ற வன்கொடுமைகளும் கொலைகளும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்போது, அது அதிகாரத்தில் இருக்கும் ஆதிக்க சாதியினரால், தலித் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டவை என்று தெரிந்தால், அந்த வழக்கும் விசாரணையும் மழுங்கடிக்கப்பட்டு, குற்றவாளிகள் தப்பவிடப்படுகிறார்கள்.

தேனி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 14 அன்று எழில் முதல்வன் என்ற கல்லூரி மாணவனும், கஸ்தூரி என்ற பி.எட்., பட்டதாரியும் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் – பாதிக்கப்பட்டவர்கள் தலித்துகள் என்றும், குற்றவாளிகள் – சாதி இந்துக்கள் என்றும் தெரிய வந்ததுமே இந்த மழுங்கடிப்பு வேலைகள் தொடங்கி விட்டன. மேலும், இந்த வழக்கில் பல அரசு அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளது என்பதால் "முடிந்தது கதை' என்ற அளவில்தான் விசாரணை நடைபெற்று வருகிறது. தீண்டாமைக் கொடுமைகளும், சாதியக் கொலைகளும் தேனி மாவட்டத்திற்கொன்றும் புதிதில்லை என்றாலும், பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராட – இதுவரை எந்த ஒரு முற்போக்கு அமைப்பும் முன்வரவில்லை என்பதுதான் கொடுமை.

கொலை செய்யப்பட்ட எழில்முதல்வன், அவர்கள் குடும்பத்திலேயே பட்டப்படிப்புவரை சென்ற முதல் நபர். கஸ்தூரியும் அவர்களது குடும்பத்தின் முதல் பட்டதாரி. ஈராயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டுக் கிடந்த தலித் மக்களின் உரிமையில், இந்தத் தலைமுறையின் சாதிவெறியும் மண்ணள்ளிப் போட்டுவிட்டது.

இப்படுகொலை தொடர்பாக, இக்கட்டுரையாளர் மற்றும் தோழர்கள் பா.சி. முத்துக்குமார், சிவமணி, நாசர்கான், தமிழ்மணி, ஜெயமணி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெற்றோர்களிடமும், ஊர் மக்களிடமும் கேட்டறிந்த தகவல்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் இங்கு எழுதப்படுகிறது.

தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்த எழில் முதல்வனும் கஸ்தூரியும் காணாமல் போனதிலிருந்து தொடங்குகிறது இந்த வழக்கு. 14.5.2011 அன்று காணாமல் போன இவர்களைப் பற்றி காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டது. நாட்கள் கடந்தும் எந்தத் தகவலும் இல்லாததால், பெற்றோர்கள் பயத்தில் ஆழ்ந்தனர்.

சுருளி செக் போஸ்ட் இல் 14 அன்று டோக்கன் போட்டு 4 நாட்களாக கேட்பாரற்றுக் கிடந்த எழில்முதல்வனின் மோட்டார் பைக்கை காவல் துறையினர் பெரிய புலன்விசாரணைக்குப் பிறகு, எழில்முதல்வனின் பைக்தான் என்று உறுதி செய்து, பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த எழில்முதல்வனின் பெற்றோரும் உறவினர்களும் சிலரும் பைக் நின்றிருந்த வனப்பகுதிக்குள் எழில் முதல்வனை தேட முயன்ற போது – வனக்காப்பாளர்கள் தடுத்து விட்டனர். எவ்வளவு கெஞ்சியும் வனப்பகுதிக்குள் அனுமதிக்காததை அடுத்து, வீடு திரும்பிய எழில்முதல்வனின் உறவினர்கள் அடுத்த நாள் ஊரைக்கூட்டி (கோட்டூர்) விசயத்தைச் சொல்ல, மறுநாள் அதாவது 19 அன்று ஊரே திரண்டு சுருளிக்குச் சென்று, எழில் முதல்வன் பைக் நின்றிருந்த வனப்பகுதிக்குள் தேடுவதென முடிவெடுத்தனர்.

அதே போல் முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் இரண்டு மற்றும் மூன்று சக்கர வண்டிகளில் சுருளிக்குச் சென்றுள்ளனர். அன்றும் அதிகாரிகள் மக்களை உள்ளே விட மறுத்துள்ளனர். "மீறி நுழைந்தால் காடுகளையும், காட்டு விலங்குகளையும் சேதப்படுத்துவதாக வழக்குப் போட்டு விடுவோம்' என்று மிரட்டியுள்ளனர். மக்கள் விடுவதாயில்லை.

முடிவோடுதான் வந்துள்ளனர் என்பதைத் தெரிந்து கொண்ட அதிகாரிகள், “அடர்ந்த வனப்பகுதியில் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், வனத் துறையினர் பொறுப்பில்லை'' என்று எழுதிக்கொடுப்பவர்கள் மட்டும் உள்ளே செல்லுங்கள் என்றும் பயமுறுத்திப் பார்த்துள்ளனர். காட்டை வெட்டி களனியாக்கி, கொத்துக்காட்டு வேளாண்மை செய்யும் மக்கள் அவர்கள் என்பது அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஊரே எழுதிக் கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்தது. குழுக்களாகப் பிரிந்து தேடிய மக்கள், பெரிதாக ஒன்றும் தேடிவிடவில்லை. அதற்குள் பார்த்துவிட்டனர் அந்தக் கொடுமையை.

100 அடி பள்ளம் ஒன்றில் எழில் முதல்வன் உடலும், ஒரு மேட்டுப் பகுதியில் கஸ்தூரியின் உடலும் அழுகிய நிலையில் கிடந்தது. கஸ்தூரியின் உடல் ஆடைகள் இல்லாமலும், கைகள் துண்டிக்கப்பட்டும், கால்களில் பல இடங்களில் வெட்டுக்காயங்களுடனும், உடல் முழுவதும் கடித்துக் குதறப்பட்ட நிலையில் கொடூரமõகக் கிடந்திருக்கிறது. இருவரின் முகங்களும் மண்ணில் வைத்து அழுத்திப் புதைத்து, குப்புறக் கிடத்தப்பட்டிருந்ததால், முகப்பகுதியில் எலும்பே மிஞ்சியிருந்தது. எழில் முதல்வனின் ஆடைகளை வைத்தும், கஸ்தூரியின் உடல் அருகில் கிடந்த அவரின் செருப்பை வைத்தும்தான் இருவரும் அடையாளம் காணப்பட்டனர். தகவல் கொடுத்து ஒன்றரை மணி நேரம் கழித்து சாவகாசமாக வந்த அதிகாரிகள், இருவரின் உடல்களையும் கைப்பற்றி, அதே இடத்தில் "போஸ்ட் மார்டம்' செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பத்திரிகைகள் எழுதத் தொடங்கிவிட்டன. பத்திரிகையில் வெளியான செய்தி, தென் மாவட்டங்களைப் பதற்றத்திற்கு உள்ளாக்கியது. “சுருளி வனப்பகுதியில் மாணவி கற்பழித்துக் கொலை, நிர்வாணமாக உடல் மீட்பு'' என்று செய்தித்தாள்களில் படித்திருக்கலாம். புகைப்படங்கள் வெளியிடப்படாத சலிப்பில் சிலர் வேறு செய்திகளுக்குக்கூட தாவியிருக்கலாம். எழுதிய பத்திரிகைகள் அனைத்தும் ஏதோ ஆள் நடமாட்டம் இல்லாத கண்காணாத காட்டுப்பகுதியில் இப்படுகொலை நடந்ததாகவே சித்தரித்தது.

உண்மையில் சுருளி என்பது தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பொதிகை மலையில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் ஒரு சுற்றுலாத் தலம். இங்குள்ள மூலிகை குணம் கொண்ட சுருளி அருவியில் குளிப்பதற்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பல சுற்றுலாப் பயணிகள் வந்துபோகும் வழக்கமான சுற்றுலாத்தலம்தான். சுற்றி இருக்கும் ஊர்களிலுள்ள காதல் இணைகளுக்கும் வார விடுமுறைகளில் இந்த சுருளிதான் புகலிடம் தரும் ஒரே இடம்.

அப்படி வரும் காதலர்களிடம் ஒரு கும்பல் பலகாலமாக, சகல பாதுகாப்புகளுடனும் தன் கைவரிசையைக் காட்டி வந்திருக்கிறது. காதலர்கள் மலைப்பகுதிக்குள் நுழையும் நேரம் பார்த்து, வனத்துறைக்குத் தகவல் கொடுப்பதுதான் அப்பகுதியில் உள்ள சில கடைக்காரர்களின் வியாபாரமே. தொடர்ந்து தனக்கு சரியான பங்கு தரும் குற்றவாளிக்குத் தகவல் கொடுத்து குற்றத்தை முடுக்கிவிடுவது, அப்பகுதி வனத்துறையினரின் "கடமை'. காதலர்கள் நெருக்கமாக இருக்கும் வேளையில் உள்ளே நுழையும் இந்த கும்பல், "போலிசுக்குத் தகவல் கொடுப்போம்' என்று மிரட்டி நகைகள் மற்றும் கைபேசிகளை பறித்துக் கொண்டு, சில நேரங்களில் பெண்களை பாலியல் வன்முறைக்கும் ஆளாக்கி விடுவர். பங்கு வாங்கிக்கொள்வதால் காவல் துறைக்கு இது பற்றி "எதுவுமே தெரியாது'. சிக்குபவர்களும் பெரும்பாலும் மாணவ – மாணவிகள் என்பதால், அச்சத்தில் வெளியில் சொல்வதில்லை. இதுநாள் வரை வெளியுலகத்துக்குத் தெரியவராத இந்தக் கொடூரங்கள், கஸ்தூரி – எழில் முதல்வன் கொலையில் தெரிய வந்துள்ளது.

சுருளியில்தான் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான புகழ் பெற்ற வேலப்பர் கோயிலும், முப்பத்து முக்கோடி தேவர்களும், சுமார் 48 ஆயிரம் ரிஷிகளும் தவம் செய்ததாக சொல்லப்படும் கைலாசநாதர் குகையும் உள்ளது (இந்த குகைக்குச் செல்லும் பாதையில்தான் கஸ்தூரியின் உடல் கிடந்தது). இங்கு கண்ணுக்குத் தெரியாத சித்தர்கள் வாழ்வதாகவும் நம்பப்படுகிறது! இந்த வனப்பகுதியில் காவியுடையுடன் பல பிடிபடாத சாமியார்கள் சுதந்திரமாகத் திரிவார்கள். அவர்கள் கண்ணுக்குத் தெரிவார்கள். அவர்களுக்கும் கண்ணுத் தெரியும். இந்தச் சாமியார்களுக்கு தெரியாமல் சுருளி வனப்பகுதியில் எதுவும் நடந்துவிட வாய்ப்பில்லை. எழில் முதல்வன் – கஸ்தூரி கொலை பற்றி இந்தச் சாமியார்களில் ஒருவரிடம் கேட்கும்போது, சில தீய சக்திகள் தான் இதற்குக் காரணம் என்று தன் கண்டுபிடிப்பைச் சொல்கிறார்.

இந்தக் கொலை தொடர்பாக கைதாகியுள்ள திவாகர் என்பவனும், தங்களிடம் பங்கு வாங்கும் குற்றவியல் காவல் துறை குழுவுக்கு கைபேசியில் தொடர்பு கொண்டு, இரண்டு பேரை கஞ்சா போதையில் கொலை செய்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறான். 2 லட்சம் கொடுத்தால் காப்பாற்றுவதாகக் கூறியுள்ளார் அந்தக் காவல் துறை அதிகாரி. திவாகரும் ஒப்புக் கொண்டதால், சம்பவ இடத்திற்கே வந்த காவல் துறை அதிகாரி, அடையாளம் தெரியாமல் உடல் அழுகும்வரை வனப்பகுதிக்குள் யாரும் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ளுமாறு வனக்காப்பாளர்களிடம் கூறிவிட்டுத்தான் அந்த இடத்தை விட்டே கிளம்பியுள்ளார். இந்த வனக்காப்பாளரின் விசுவாசம்தான் கோட்டூர் மக்களை வனப்பகுதிக்கு செல்லவிடாமல் தடுத்தது.

கொலையாளி திவாகர் கொடுத்த வாக்குமூலத்தைப் பார்த்தால், எழில்முதல்வன் – கஸ்தூரியுடன் இன்னொரு காதல் இணைகள் சென்றிருந்ததும், கொலையிலுள்ள சாதிய பின்னணியும் விளங்கும். கைது செய்யப்பட்ட கொலையாளி திவாகரின் வாக்குமூலம் இவ்வாறுள்ளது.

“நானும் என் கூட்டாளிகளும், மே 14ஆம் தேதி கஸ்தூரியின் தோழியும் அவளது காதலனும் சுருளி வனப்பகுதியில் தனியாக இருப்பதைப் பார்த்தோம். அவர்களை மிரட்டி நகை, செல்போன்களைப் பறித்துக் கொண்டோம். கஸ்தூரியின் தோழியை என் கூட்டாளிகள் குகைக்குள் தூக்கிச் சென்றனர். அங்கு அவள் என் காலில் விழுந்து அழுதாள். அவளைப் பார்கையில் என் தங்கைபோல் தெரிந்ததால், அவர்கள் இருவரையும் விட்டுவிட்டேன். கஸ்தூரியின் தோழி சொன்ன தகவல்படி, எழில் முதல்வன் – கஸ்தூரி இருவரையும் தேடினோம். அவர்கள் கொஞ்ச தூரம் தள்ளி தனியாக இருந்தார்கள். எழில் முதல்வனின் கழுத்தில் நான் அருவாளை வைத்தேன். அவன் “வேணாம்... வேணாம்...'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, என் கூட்டாளிகள் கஸ்தூரியைத் தூக்கிச் சென்றனர். இதைப்பார்த்த எழில் முதல்வன் என்னைத் தள்ளிவிட முயற்சி செய்தான். அருவாளை ஓங்கி அழுத்தியதால் கழுத்து அறுபட்டு, ரத்தம் குபு குபுவென கொட்டியது. கொஞ்ச நேரத்தில் உயிர் போயிடுச்சு. எழில் முதல்வன் இறந்து விட்டதை என் கூட்டாளிகளிடம் சொன்னேன். நாங்கள் பேசியதைப் புரிந்து கொண்ட கஸ்தூரி அலறினாள். “கத்தாதே...'' என்று என் கூட்டாளி அவள் காலில் வெட்டினான். நிலைகுலைந்து கீழே விழுந்தாள். நான் அவளின் கைகள் இரண்டையும் வெட்டித் துண்டித்துவிட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கஸ்தூரியைக் கற்பழித்தேன். அப்போது அவள் உயிர் பிரிந்தது.''

இதுவரை 22–க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்துள்ளதாகவும் திவாகர் தன் வாக்குமூலத்தில் கூறியுள்ளான். இது, சாதியத்தின் பின்னணியில் நடந்த கொடூரம் என்பதை மறைக்கத்தான், எழில்முதல்வன் – கஸ்தூரியுடன் சென்ற இன்னொரு இணையின் விவரங்களை காவல் துறை வெளியிடவில்லை. அவசியம் கருதி இங்கே வெளியிடுகிறேன். இதனால் யாருடைய மனதாவது புண்படுமானால் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.

எழில் முதல்வன் – கஸ்தூரியுடன் சென்ற அந்த இன்னொரு இணை, கடமலைக் குண்டு தேவர் சமூகத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் அவருடைய காதலி பாக்யலட்சுமி. அதே சாதியைச் சேர்ந்த கொலை யாளியின் உண்மையான பெயர் "கட்டத் தேவன்'. திவாகர் என்பதெல்லாம் சும்மா பேருக்கு. ராஜ்குமாரையும் அவரது காதலியையும் மிரட்டி விசாரிக்கும்போது, ராஜ்குமார் என்பவர் கடமலைக்குண்டைச் சேர்ந்த தன் சாதியைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிந்து கொண்டதால்தான் அவர்களை தப்பிக்க விட்டுள்ளான் கட்டத்தேவன். எப்படியோ கஞ்சா போதையிலும் சாதியப்பாசம் மட்டும் தெளிவாக இருந்ததால், அவர்கள் தப்பித்துவிட்டனர்.

ஆனால், இந்த சாதியப் பாசம் கஸ்தூரி – எழில்முதல்வன் பக்கம் திரும்பும்போது சாதிய வெறியாக மாறியிருக்கிறது. கஸ்தூரி – எழில் முதல்வன் தேனி, கோட்டூரைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களான பள்ளர் பிரிவைச் சேர்ந்தவர்கள். அதனால்தான் சாதாரணமாக நகை பறிக்கும் திருடன் (கட்டத் தேவன்). கஞ்சா போதையிலும் சாதி வெறிக்கு விசுவாசமாக, எழில் முதல்வனை கொலை செய்துவிட்டு, கஸ்தூரியை கைகளை வெட்டித் துண்டித்து, கெண்டைக்கால் மற்றும் முட்டிகளில் வெட்டிக் கொடூரமாகக் கொன்று, உடலில் பல இடங்களில் கடித்துக் குதறி கற்பழித்துள்ளான்.

இப்படி இந்த வழக்கு, ஆதிக்க சாதியினரால், தலித் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது என்பதைத் தெரிந்து கொண்ட காவல் துறை, கட்டத்தேவன் தங்கள் பிடியில் இருந்தும், மற்ற குற்றவாளிகளைப் பிடிப்பதில் மெத்தனம் காட்டுகிறது. ராஜ்குமாரும் அவரது காதலியும் சக நண்பர்கள் கட்டத்தேவனிடம் மாட்டிக் கொண்டுள்ளதை காவல் துறையிடம் ஏன் தெரிவிக்கவில்லை? ராஜ்குமாருடைய காதலியின் தந்தை ஒரு வனத்துறை அதிகாரி என்பதற்கும், கோட்டூர் மக்களை வனப்பகுதிக்குள் அனுமதிக்காததற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? காவல் துறை கைது செய்யச் செல்லும்முன், கட்டத்தேவன் பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகே கைதாகியுள்ளான். அவனுக்கு தகவல் சொன்னது யார்?

எழில்முதல்வன் – கஸ்தூரி உடல்கள் மக்களால்தான் மீட்கப்பட்டது என்பதற்கு ஒரு ஊரே சாட்சியாக இருக்கையில், தங்கராஜ் என்ற வனக்காப்பாளர் வழக்கமாக சுற்றிவரும் போது இரண்டு உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாகவும், சந்தேக மரணம் என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது ஏன்? இப்படி பல சந்தேகங்கள் இருக்கும் இந்த வழக்கில், காவல் துறையின் நடவடிக்கையில் நம்பிக்கையில்லை என்றும் வழக்கை சி.பி. சி.அய்.டி.க்கு மாற்றக்கோரியும், ஊர்மக்களும், பெற்றோர்களும் மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்துள்ளனர்.

ஆதிக்க சாதிக்கு ஆதரவாக இருக்கும் அதிகார வர்க்கத்தை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகக் களமிறங்க, ஒரு முற்போக்கு அமைப்புகூட முன்வரவில்லை. பொதுமக்கள் புழங்கும் ஒரு சுற்றுலாத் தலத்தில், 22க்கும் மேற்பட்ட பெண்களை வன்புணர்ச்சி செய்துவிட்டு, சர்வ சாதாரணமாக, காலை வெட்டினோம், கையை வெட்டினோம், கற்பழித்தோம் என்று வாக்குமூலம் கொடுத்தள்ள குற்றவாளிகளுக்கு எதிராக, நியாயமாக மனித சமுதாயமே கொதித்தெழுந்திருக்க வேண்டும். ஆனால், ஒன்றரை மாதமாகியும் எந்த ஓர் அரசியல் கட்சியோ, மனித உரிமை அமைப்போகூட வாய் திறக்கவில்லை. சாதியத்திடம் மனிதநேயமும் மண்டியிட்டே நிற்கிறது! 

Pin It