சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரனின் 54வது நினைவு நாளில் இறுதி வணக்கம் செலுத்த வந்த ஜான் பாண்டியன் கைதையொட்டி கலவரம் வெடித்து துப்பாக்கி சூடுவரை போய்விட்டது. துப்பாக்கிச் சூடு இல்லாமலே காவல்துறை தவிர்த்திருக்க முடியும். ஜான் பாண்டியனும் கைது செய்யப்பட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. காவல்துறையின் மோசமான அணுகுமுறையால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 7 தலித் மக்கள் உயிர்ப் பலியாகியிருப்பது கடும் வேதனை தரும் செய்தியாகும். காவல்துறையின் இந்த துப்பாக்கிச் சூட்டை பெரியார் திராவிடர் கழகம் கண்டிக்கிறது.

அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களுக்கு  கழகம் ஆதரவு

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து களமிறங்கிப் போராடும் போராட்டக் குழுவினருக்கும், பொது மக்களுக்கும், பெரியார் திராவிடர் கழகம் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. அணுமின் திட்டங்களில் முன்னோடியாக இருந்த ஜெர்மன், ஜப்பான் நாடுகள், அணுமின் நிலையங்களின் ஆபத்துகளை உணர்ந்து மூடிவிட்டன. பிரான்சு நாட்டில் தென் பகுதியில் இருந்த ‘மார்கொலே’ என்ற அணுமின் ஆலை வெடித்து ஒருவர் மரணமடைந்த செய்தி ஏடுகளில் வெளிவந்துள்ளது. மக்கள் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்தை உருவாக்கக் கூடிய அணுமின் நிலையங்கள் இழுத்து மூடப்பட வேண்டும்.

நாத்திகர்களை அவமதிக்கும் அறநிலையத் துறை அமைச்சர்

‘இறைபண்பு - கொடை பண்பு கொண்டவர்களே அறங்காவலர் களாக நியமிக்கப்படுவார்கள்’ என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கூறியிருக்கிறார். கடவுள் மறுப்பாளர்களான நாத்திகர்களை இழிவுபடுத்தும் வகையில்,

“நாத்திகரான முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி வீட்டில் வேலை பார்க்கும் செவிலியர் லீலா குமாரிக்கு கோயில் பணியாளர் வீடு முறைகேடாக ஒதுக்கப்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே. பாலகிருட்டிணன் சட்டசபையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி செய்த சில நிர்வாக சீர்கேடுகளை சுட்டிக் காட்டினீர்கள். ஆனால் நாத்திகர்கள் என்றால், இவரைப் போன்றுதான் செயல்படுவார்கள்; இப்படித்தான் இருப்பார்கள் என்றும் கூறுவது சரியல்ல; கலைஞர் கருணாநிதியே நாத்திகரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே எங்களைப் போன்ற நாத்திகர்களைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.”

கே. பாலபாரதி (மார்ச்கிஸ்ட்) : தந்தை பெரியார் இன்று உயிரோடு இருந்திருந்தால் அறங்காவலர் குழுவில் சேர்த்துக் கொள்வீர்களா?

Pin It