அவர் வழக்குரைஞருக்கு படித்துக் கொண்டிருப்பவர். தோழர் ஒருவர் நன்றாகப் படி இந்த வழக்கை உற்றுக் கவனி என்றார். அதற்கு அவள் நான் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது சண்முகநாதன் அண்ணனின் கனவு என்றார். கனவு நனவாக அவர் உழைப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இங்கே பட்டியலின மக்கள் கல்வி அறிவில் உயர்ந்தவர்கள். அதுமட்டுமல்ல ஒவ்வொரு வீட்டிலும் அரசாங்க ஊழியர்கள் இருக்கிறார்கள். ஆனால் பிற்பட்ட சுமன் குடும்பமோ கல்வி அறிவில்லாதவர்கள். இம்மக்களின் வளர்ச்சியை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தாழ்த்தப்பட்டவன் வருவாய் ஆய்வாளர் வேலை வரைக்கும் செய்கிறார்களே. நம்மை எப்படி மதிப்பார்கள். நம்மால் அவர்களை அதிகாரம் செய்ய இயலாதே. அவர்கள் கால் மேல் கால் போட்டு உட்காருவதும் கூட இவனுக்குக் குத்துகிறது.
செல்வி என்ற ஒரு அக்காவிடம் பேசிக்கொண்டிருந்தோம். நாளிதழ்களில் இருதரப்பினர் மோதல் என்று குறிப்பிடுகிறீர்கள் நாங்கள் எங்கு அவர்களை வெட்டிச் சாய்த்தோம்... அவர்கள்தானே எங்களை வாழைமரம் போல் வெட்டிப்போட்டுச் சென்றார்கள். முதல் மரியாதை தரவில்லை என்கிறார்கள். அதுவல்ல எங்கள் பிரச்சனை. சாதிதான் அனைத்திற்கும் காரணம். நாங்கள் முன்னேறி விடக்கூடாது என்ற எண்ணம்தான் என்றார்.
இறுதியாகச் சந்திரசேகர் வீட்டிற்குச் சென்றோம். இரண்டு குழந்தைகள். பெண் குழந்தைக்கு பேச இயலாது. நான்கு மணி நேரம் அங்கு இருந்தாலும் அவர்களோடு நான் கரைந்திருந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களின் நிலைமை இன்னும் கொடூரமானது. என்று தணியும் இந்தச் சா(தீ)யப் படுகொலைகள் என்றுதான் மனம் தவிக்கிறது. எல்லாவற்றையும் விட நாம் கவனிக்க வேண்டியது ஒன்றுள்ளது.
சாதிய அமைப்புகள் படுகொலைகள் செய்த பிற்பட்டவர்களுக்காகக் களம் இறங்கியுள்ளது. என் வழக்கிற்கு நிதி திரட்டியது போலவே இதற்கும் சில முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதில் முதலாவதாக பட்டியிலின மக்களைச் சமூக விரோத சக்திகளாகக் காட்ட முயற்சிக்கிறார்கள். அதற்கு ஒரு சான்றையாவது அவர்களால் காட்ட முடியுமா? அப்படிச் செய்தவர்கள் மீது காவல்துறையில் இதுவரை இவர்கள் முறையிட்டதில்லை. சட்டப்படியான எந்த நடவடிக்கைக்கும் போகவில்லை. இன்று சொல்கிறார்கள் பள்ளர்கள் எங்களை மிரட்டுகிறார்கள். தொடர்ந்து வம்பிழுக்கிறார்கள் என்று. எல்லாம் இருக்கட்டும் எதற்கென்றாலும் ஊர் புகுந்து கண்ணில்பட்டவர்களை எல்லாம் வெட்டிச் சாய்க்க உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது. சட்டம் அந்த அதிகாரத்தை உங்களுக்குத் தரவில்லை. ஆனால் உங்கள் சாதிக்கு இந்தச் சாதியச் சமூகம் பள்ளர்களை வெட்டிக் கொல்ல அதிகாரம் தந்திருக்கிறது. அந்த அதிகாரத்தை ஒட்ட நறுக்க வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விதான் முதன்மையானது.
அவர்களும் தமிழர்கள் இவர்களும் தமிழர்கள். தூத்துக்குடி, காவிரிக்காகத் தமிழர்கள் ஒற்றுமையோடு போராடும் போது இப்படி ஒன்று நடந்துவிட்டது என்று வருத்தப்படுகிறோம். உண்மையில் அந்த வருத்தம் உண்மையானால் இந்த நிகழ்வில் அந்தச் சாதி வெறியர்களைத் தண்டிக்க நாம் உறுதி ஏற்க வேண்டும். அப்படிப்பட்டச் சாதி வெறியர்கள் தமிழர் ஒற்றுமைக்குள் ஒளிந்துகொள்ள இடமளிக்க விட்டுவிடக் கூடாது. காவிரிக்காக, தூத்துக்குடிக்கான போராட்டத்தில் நிற்கிற நாம் இந்தப் போராட்டத்திலும் பட்டியிலின மக்களோடு இணைந்து நிற்க வேண்டும். சாதி ஒழிப்பு இலக்கில்லாதத் தமிழர்கள் ஒற்றுமை என்பது மீண்டும் நம்மைப் பார்ப்பனீயத்திற்கே அடிமையாக்கும்.
மெய்யான தமிழர் ஒற்றுமையைக் கட்டி எழுப்புவோம். அதற்கு இந்தச் சாதி வெறியர்களை சமரசமின்றி எதிர்த்து நிற்போம். தமிழன் என்றால் அந்தச் சொல்லுக்குரிய இலக்கணத்தில் சாதிக்கு இடமே இல்லை. சாதிக்கு எதிரான, சுரண்டலுக்கு எதிரான, இயற்கைச் சூறையாடலுக்கு எதிரான அணிதிரட்சிக்குத்தான் தமிழர்கள் என்ற அடையாளம் பொருந்தும். அந்த வகையில் சாதி ஒழிப்பில் ஊன்றி நின்றால்தான் நாம் தமிழர்கள் என்பதற்கு பொருளிருக்கும். அப்படி ஒரு தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்.