சாதி அமைப்புதான் நாம் வைத்திருக்கும் மிகப் பெரிய இடஒதுக்கீடு. எல்லாமே முறையாக வரையறுக்கப்பட்டிருந்தது. ஒரு பிரிவினர்தான் ஆள வேண்டும்; ஒரு பிரிவினர்தான் அர்ச்சகராக வேண்டும்; ஒரு பிரிவினர் வியாபாரம் செய்ய வேண்டும்; மற்ற பிரிவினர் அடிமை வேலைகளைச் செய்ய வேண்டும். இதுதான் ஒட்டுமொத்த சமூக அமைப்பாக இருந்தது. ஒரு பார்ப்பனர், கடினமான உடலுழைப்புப் பணிகளில் ஈடுபட்டுத் தன்னுடைய வாழ்க்கையை நடத்த வேண்டியதில்லை. தற்பொழுது இந்த நிலைமைகளில் மாற்றங்கள் வரத் தொடங்கி இருந்தாலும், இதற்கு முன்பு அவ்வாறு இருந்ததில்லை. சாதி அமைப்பு முறை உச்சகட்டத்தில் நடைமுறையில் இருந்தபோது, யாருமே மற்றவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்ய முடியாது.

V.P.Singh
அதற்குப் பிறகு சாதிகளுக்கிடையே மேலும் உட்பிவுகள் ஏற்படுத்தப்பட்டன. நீங்கள் ஒரு நாவிதராக இருந்தால், நீங்கள் ஒரு நாவிதருக்குரிய வேலையைத்தான் செய்ய வேண்டும்; நீங்கள் பொற்கொல்லராக இருந்தால், பொற்கொல்லருக்குரிய வேலையைத்தான் செய்தாக வேண்டும். நீங்கள் ஒரு கிராமத்திற்குச் சென்று அங்குள்ளவர்களிடம் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யச் சொன்னால், "அது என்னுடைய வேலை அல்ல; அவரைச் செய்யச் சொல்லுங்கள்' என்று சொல்வார்கள். சாதி அடிப்படையில் அனைத்து வேலைகளும் பல்வேறு பிரிவினருக்கும் பிரித்தளிக்கப்பட்டன. இது, சமூகத்தில் சீர்கேடுகளை உருவாக்கியது. இந்து சமூகம் விலக்கி வைக்கப்பட்ட ஒரு சமூகமாக ஆகிவிட்டது. ஒன்றிணைந்த சமூகமே நாட்டைப் பலப்படுத்தும். ஆனால், நம் நாட்டின் நிலை வேறாக இருந்தது.

பல்வேறு நிலைப்பட்ட வெறுப்புகளின் அடிப்படையில் இந்தச் சமூகம் அமைந்திருந்தது. தலித் மக்கள் மிக அதிகளவுக்கு வெறுக்கப்பட்டார்கள்; மற்றவர்கள் சகித்துக் கொள்ளப்பட்டவர்களாக இருந்தார்கள். "தாகூர்'கள் மரியாதைக்குரியவர்களாகவும், பார்ப்பனர்கள் வணங்குதற்குரியவர்களாகவும் கருதப்பட்டனர். இதன் அடிப்படையில் மாபெரும் அநீதிகள் நடந்ததற்குப் பல்வேறு எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும். நம்மிடையே ஏராளமான "ஏகலைவன்'கள் உண்டு. இந்நிலையில்தான் தற்பொழுது திறமை என்றொரு கேள்வி எழுந்துள்ளது. ஆனால், நான் கேட்க விரும்பும் கேள்வி இதுதான்: 80 சதவிகித மக்களை சாதியின் பெயரால் சமூகத்தின் மய்ய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைத்திருப்பதைவிட, மிகப் பெரிய திறமைக்கெதிரான ஒரு செயல் இருக்க முடியுமா? இந்தியாவில் ஜவகர்லால் நேரு, இடஒதுக்கீட்டுக்கான அடிப்படையை நிறுவினார். அதன் பிறகு மொரார்ஜி தேசாய் வந்தார்; "ஜன்சங்' அவருடன் இருந்தது; வாஜ்பாயும், அத்வானியும் அவருடன் இருந்தனர். அவர்கள்தான் மண்டல் குழுவை நியமித்தனர். இறுதியில் ஒரு சுவர் உருவாக்கப்பட்டது. நான் மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதன் மூலம் அந்தச் சுவர்களின் மீது கூரையை அமைத்தேன். அதன்பிறகு, "நீ என்ன செய்திருக்கிறாய் தெரியுமா?' என்று எல்லோரும் என்னைப் பார்த்துக் கேட்டார்கள். ஆனால், அதற்குப் பிறகு வாஜ்பாய் இன்னொரு படி மேலே சென்று, மேலும் சில அறைகளைக் கட்டினார். தற்பொழுது அர்ஜுன் சிங் அதில் பொருட்களை இட்டு நிறைவு செய்து வருகிறார். இது நீண்ட கால நடைமுறையின் ஒரு பகுதியாகும்.

இத்தகைய நடைமுறையில் ஒவ்வொரு நிலையிலும் கடும் எதிர்ப்புகள் காணப்பட்டன. ஆனால், பணக்காரர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தரமான கல்வி குறித்து யாரும் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவிப்பது இல்லை. பணக்காரர்களுக்கு மட்டுமே தரமான கல்வியை ஒதுக்கீடு செய்வதன் மூலம் அவர்கள் நிரந்தரமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான உறுதியை நாம் அளிக்கிறோம். இத்தகையோர் அதிகாரத்திற்கு வந்தால், என்ன மாதிரியான திட்டங்களை உருவாக்குவார்கள் என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும். அய்.அய்.டி.யையும், அய்.அய்.எம். களையுமே எடுத்துக் கொள்ளுங்களேன். இந்நிறுவனங்களில் எல்லாம் யார் படிக்கிறார்கள்? மிக அதிகளவு கட்டணம் செலுத்தக்கூடிய பணக்கார வீட்டுக் குழந்தைகள்தான் இந்நிறுவனங்களில் படிக்கிறார்கள். இத்தகைய நடைமுறையில், திறமைக்குக் குந்தகம் ஏற்படுவதை எதை வைத்து ஈடுகட்ட முடியும்? திறமை பாழாகும் இத்தகைய இடஒதுக்கீடு குறித்து யாரும் பேசுவதில்லையே! இத்தகைய போக்கு, உயர் கல்வி நிறுவனங்களில் மட்டுமல்ல, ஆரம்பக் கல்வி நிலையிலிருந்தே தொடங்கி விடுகிறது. தரமான கல்வி அளிக்கும் பணக்காரப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும்போது, பெற்றோர்களிடம் நேர்காணல் நடத்தப்படுகிறது. அரசுப் பள்ளிகளின் நிலை ஒன்றும் ரகசியமானதல்ல. அரசின் கல்விக் கட்டுமானம் மிக மோசமான நிலையில் உள்ளது.

இங்கிலாந்தில் உள்ள இணக்கமான பள்ளிகளின் தத்துவம்தான் இதற்கான பதிலாக இருக்கும். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பணக்கார, ஏழை, வட்டார அளவிலான குழந்தைகள் ஒரே பள்ளியில் ஒரேவித கல்வி அளிக்கப்படுகிறது. இத்தகைய இணக்கமான பள்ளிகளைப் போன்று இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஒரேவித தரத்தையும், பாடத்திட்டத்தையும் பின்பற்ற வேண்டும். தேவை ஏற்பட்டால், அரசு மானியங்கள் வழங்க வேண்டும். இதை அரசு உறுதி செய்யும் நிலையில், தொடக்கப்பள்ளியிலிருந்தே கல்வியில் சீர்மை கடைப்பிடிக்கப்பட்டால், இட ஒதுக்கீட்டுக்கான தேவையே இருக்காது. ஆனால், இதற்கு மாறாக தொடக்க நிலையிலிருந்தே பணக்காரர்களுக்கான இடஒதுக்கீடுதான் நீடித்து வருகிறது. இதில் ஒரு ஏழையின் குழந்தை எப்படி போட்டிப்போட முடியும்?

நீங்கள் ஒரு குழந்தையின் தொடக்க நிலையிலிருந்தே அதை அநியாயமாகப் பின்தங்கி இருக்க வைத்துவிட்டு, அதற்குப்பிறகு திறமை குறித்து அக்குழந்தைக்கு எதிரான வாதத்தையும் முன்வைக்கின்றீர்கள். நம்முடைய தென்னிந்திய மாநிலங்களில் இடஒதுக்கீடு உள்ளது. இங்கு எந்தவிதத் தகுதியும் குறைந்துவிடவில்லையே! வளர்ச்சிக்கான திறமையை அனுமதிப்பதுதான் திறமைக்கு ஆதரவான முயற்சி. கடந்த காலங்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு, வாய்ப்புகளை வழங்குவதுதான் திறமைக்கு ஆதரவான செயல். இது திறமைக்கு எதிரானது அல்ல. தென் மாநிலங்களில், திறந்த போட்டியில் போட்டியிடும் ஒரு மாணவர் மருத்துவக் கல்லூரியில் 81 சதவிகிதம் பெற்றும், மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு மாணவர் 79 சதவிகிதம் பெற்றால், திறமை போய்விடும் என்ற கேள்வி எங்கே எழுகிறது? பிற்படுத்தப்பட்ட சாதியினரிடையே இடஒதுக்கீட்டுப் பிரிவினரிடையே தானே போட்டி ஏற்படும்.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன். உற்பத்தியை அதிகரிப்போம். இரட்டிப்பு வேளை பணி செய்வோம். உண்மையில், சிறுபான்மை நிறுவனங்களைப் போல, பிற்படுத்தப்பட்ட மக்களும் தங்களுடைய நிறுவனங்களைத் தொடங்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதிகளவில் நிறுவனங்கள் இருந்தால், இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் வரும் மாணவர்களிடம் தேர்ந்த மனித ஆற்றல் குறைவதற்கு வாய்ப்பு இருக்காது.

இடஒதுக்கீட்டினால் சாதி அடையாளங்கள் நிரந்தரமாக நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. மண்டல் குழு அறிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பை நான் நினைவு கூர்கிறேன். இத்தகைய தீர்ப்புகளை யாருமே படிப்பதில்லை. ஒருவர் பிறப்பின் அடிப்படையில் பாதிக்கப்பட்டால், அவருக்கான நிவாரணம் பிறப்பின் அடிப்படையில்தான் அமைய வேண்டும் என்று அத்தீர்ப்பு சொல்கிறது. இல்லை எனில், நீங்கள் பாதிக்கப்பட்டவர்களை எப்படி அடையாளம் காண்பீர்கள்? எனவே, இடஒதுக்கீடு என்பது உள்ளபடியே சாதியத்தை ஆதரிப்பதாக ஆகாது. ஏனெனில் நிவாரணம் அளிக்க, பாதிப்பு எந்த அடிப்படையில் நிகழ்ந்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.

Pro Reservation agitation
என்னைப் பொறுத்த அளவில், அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளவற்றை மட்டும்தான் நாம் நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் சிலருக்கு எதிர்வினையான அரசியல் விளைவுகள் ஏற்படும் எனில், அது இயல்பானது. நான் எல்லா இடங்களிலும் சொல்வது இதுதான். நீதி வழங்கப்பட வேண்டும். ஆனால், மக்கள் வாக்களிக்கச் செல்லும்பொழுது அவர்கள் விவசாயிகளை, தொழிலாளர்களை, கைவினைஞர்களை மறந்து விடுகிறார்கள். தங்கள் சாதிகளை மட்டுமே நனைவில் கொள்கிறார்கள். "நான் என்னுடைய ஜாதிக்கு மட்டும்தான் வாக்களிப்பேன் என்ற போக்கு, வளர்ச்சியின்மைக்கு வழிவகுத்துவிட்டது.

மண்டல் குழு பரிந்துரைகள் பொதுவாக சொல்லப்படுவது போல சாதியமயமானது அல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எடுத்துக்காட்டாக, உத்திரப்பிரதேசத்திலும், பீகாரிலும் "குர்மி' என்ற சாதி பிற்படுத்தப்பட்ட சாதியாகும்; ஆனால், மத்தியப் பிரதேசத்தில் அல்ல. வடமாநிலங்களில் "சத்யரின் முன்னேறிய பிரிவினர். ஆனால், குஜராத்தில் அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள். எனவே, மண்டல் குழு அறிக்கை, மேல் மற்றும் அடித்தட்டு சாதிகள் என்ற அடிப்படையில் மட்டுமே வகைப்படுத்தப்படவில்லை. பொருளாதார மற்றும் பிற அளவுகோல்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள், மண்டல் குழு அறிக்கையைப் படிக்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு குறிப்பிட்ட சமூகம் பிற்படுத்தப்பட்டுள்ளதா, இல்லையா என்று நிறுவுவதற்கு மண்டல் 36 அளவு கோல்களை வைத்துள்ளார். அதில் பொருளாதார அளவுகோலும் வைக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பம் எத்தகைய வீட்டில் வசிக்கிறது நல்ல வீடா, குடிசை வீடா; சுய வேலைவாய்ப்புகளை யார் உருவாக்குகிறார்கள் சந்தைக்கான பொருட்களை யார் உற்பத்தி செய்கிறார்கள்; கல்வித் தகுதி ஆகியவை குறித்தும் இதில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவு, ஒரு குறிப்பிட்ட சாதி நாட்டின் ஒரு பகுதியில் இடஒதுக்கீடு கோருபவையாகவும், அதே சாதிக்குப் பிற பகுதியில் இடஒதுக்கீடு தேவையற்றதாகவும் இருக்கிறது. காழ்ப்புணர்வினால் யாருமே மண்டல் குழு அறிக்கையைப் படிக்கத் தயாராக இல்லை. அவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கிறார்கள்.

இடஒதுக்கீடு என்பது அதிகாரப்படுத்துவது. மண்டல் குழு அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்குவதன் உண்மையான நோக்கம், வெறும் வேலைவாய்ப்புகளை அளிப்பது அல்ல. அதன் உண்மையான நோக்கம் ஆட்சி நிர்வாகத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களை பங்கேற்க வைப்பதும் அதிகாரம் அளிப்பதும்தான். அது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை நான் சமூகப் புரட்சி என்பேன். பஞ்சாயத்திலிருந்து நாடாளுமன்றம்வரை, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. ஆதிக்க சாதியினடமிருந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவு மக்களுக்கு, அமைதியான அதிகார மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவேதான், நான் இதை சமூகப் புரட்சி என்கிறேன். ஆதிக்க சாதியினர் இத்துணை நூற்றாண்டுகளாகச் செய்தது என்ன? 80 சதவிகித இந்தியாவை பின்தங்கிய நிலையில் வைத்திருக்கிறார்கள். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

தமிழில் : அமிழ்தினி
நன்றி : 'தெகல்கா'
Pin It